வெள்ளி, 10 ஏப்ரல், 2015

டூப் போடாத ஹீரோ - Alastair Atchison


இந்தக் காணொளி யூட்யூபிலிருந்து. இதுதான் அந்த ஹீரோவின் நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம்.  40 நிமிடங்கள் பாருகங்கள் பொறுமையாக.  வியந்து போவோம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 5390 (Callsign Speedbird 5390) இந்தப் பயணிகள் விமானம் பிரிட்டிஷ் ஏர்வேஸால், இங்கிலாந்திலுள்ள பிர்மிங்காம் விமான நிலயத்திற்கும், ஸ்பெயினிலுள்ள மலாகாவிற்கும் இடையில் பறக்கவிடப்பட்ட ஒன்று.  1990 ஆம் வருடம் ஜுன் 10 ஆம் தேதி இந்த விமானம் வழக்கம் போல, 11,050 மணி நேரம் பறந்த அனுபவம் பெற்றிருந்த, 42 வயதான டிம் லாங்காஸ்டெரை முதன்மை பைலட்டாகவும் (Tim Lancaster), 7,500 மணி நேரம் பறந்த அனுபவம் பெற்றிருந்த, 39 வயதான அலாஸ்டெய்ர் அட்கிசனை (Alas Atchison)  துணை பைலட்டாகக் கொண்டு பறக்கத் தயாராகி காலை 07.20 மணிக்கு (அந்த ஊர் நேரம்) பறக்கத் தொடங்கியது. 81 பயணிகள் பயணித்தனர். 4 பேர் கொண்ட கேபின் குழு, 2 பேர் ஃபளைட் க்ரூ. துணை பைலெட்டான அட்கிசன் வழக்கமான டேக் ஆஃபைக் கவனித்துக் கொண்டு பின்னர் விமானம் ஏறுவதில் நிலையான பிறகு அதன் கவனிப்பை பைலட்டான ;லாங்கேஸ்டரிடம் ஒப்படைத்தார். இருவரும் சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.  பைலட் தனது மடியோடு இணைக்கப்பட்ட பெல்டையும் தளர்த்திக் கொண்டார்.

     7.33 மணிக்கு கேபின் குழுவினர் பயணிகளுக்கு காலை உணவை வழங்க ஆரம்தித்தனர். அப்போது விமானம் ஆக்ஸ்ஃபோர்ட், டிட்காட் மேலாக 17,300 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பலத்த பேரிடி ஓசையுடன் விமானத்தின் கட்டுமானச்சட்டம் (fuselage) உறையும் நீராவித் துளிகளால்(condensation) நிரப்பப்பட்டது. கேப்டன் இருக்கும் காக்பிட்டின் இடது புற முன் கண்ணாடி விமானச் சட்டத்திலிருந்து இளகி பிரிக்கப்பட்டு, உள்ளே மோதிய காற்றின் அழுத்தத்தால், கேப்டன் அவரது இருக்கையிலிருந்து பெயர்க்கப்பட்டு, தலை வெளியிலும், அவரது மூட்டு பாகம் விமானத்தின் கட்டுப்பாடுத் தளத்தோடு பிணைக்கப்பட்டது. இதனால் அவரது உடலின் மேல் பாகம் முழுவதும் விமானத்தின் வெளியிலும் இடுப்பின் கீழ் பாகம் மட்டும் உள்ளேயுமாக. விமானத் தளத்தின் கதவு பறந்து ரேடியோ மற்றும் விமான வழி இயக்கலுக்கான இணைப்புகளையும் தாக்கியது. அதனால் த்ராட்டில் கன்ட்ரோல் இழந்து, விமானம் கீழ் நோக்கி வேகமாகப் பயணிக்கவும், பயணிகள் கேபினில் இருந்த காகிதங்கள் எல்லாம் காக்பிட்டை நோக்கிப் பறக்கவும் செய்தது. விமானத்தளத்திலிருந்த நைஜெல் ஓக்டென் (Nigel Ogden) எனும் விமானப் பணியாளர் கேப்டனின் பெல்டைப் பிடித்துக் கொண்டார்.  சூசன் ப்ரைஸ் மற்றும் மற்றொரு விமானப் பணியாளர் இருவரும் பயணிகளுக்குத் தெம்பூட்டி, அவர்களது பொருட்களை எடுத்துக் கொடுத்து, அவசரகால நிலைமையைச் சமாளிக்கத் தயார்படுத்தினர்.  வெளியில் காற்று 345 மைல் வேகத்தில் விமானத்தை நோக்கி அடித்ததால் இழுக்கப்பட்ட கேப்டன் லான்காஸ்டெர் அடிக்கப்பட்டு, உறைந்து நினைவிழக்கத் தொடங்கினார்.

     துணை பைலட் அட்கிசன் அவசரகால விமான இறக்கத்தை மேற்கொண்டார்.  தற்காலிகமாக இயங்காமல் போன ஆட்டோ பைலட்டை மீண்டும் இயக்கத் தொடங்கி அவசரகால இடர்பாட்டிற்கான ஒலியை ஒலிபரப்பினார்.  விமானத் தளத்தினுள் காறுமிக வேகமாக அடித்ததால், அவரால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறையுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை.  அவர்கள் சொல்லுவது இவருக்குக் கேட்கவில்லை. இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸிற்கு இந்த அவசரகால இடர்பாடு தகவல் கிடைக்காமல் செயல்பாடுகள் எல்லாமே தாமதமாகியது.

    கேப்டனைப் பிடித்துக் கொண்டிருந்த ஓட்கெனும் குளிர்ந்து மூச்சுவாங்கத் தொடங்கினார். அதனால் மற்ற இரு பணியாட்கள் அவரை விடுவித்து அவர்கள் கேப்டனைப் பிடித்துக் கொண்டனர். அப்படிப்ப் பிடித்துக் கொண்டிருந்தாலும் கேப்டன் இன்னும் வெளியே இழுக்கப்பட்டிருந்தார். உள்ளே  இருந்தவர்களால் மற்றக் கண்ணாடி வழியே அவரது உடலையும் முகத்தையும் பார்க்க முடிந்த்து. அவரது கண்கள் திறந்தே இருந்தன இமைக்கவில்லை.  அவர் இறந்தே போனார் என்று முடிவு செய்துவிட்டனர்.  அட்கிசன் அவர்களை கேப்டனைப் பிடித்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார், அவர் இறந்து விட்டார் என்று யூகித்தாலும்.  ஏனென்றால் பிடியை நழுவ விட்டால் அவரது உடல் இடப்புறம் உள்ள இஞ்சின் மேல் வந்து விழுந்து தீப் பற்றி இன்னும் அதிகப் பிரச்சினைகளைக் கொடுக்கலாம்.  பயணிகளை மிகவும் பாதுகாப்பாக காப்பாற்றும் ஒரு மனப் பிரயாசத்தில் அட்கிசன் இருந்தார். 

     அட்கிசனுக்குத் தெரிந்த விமான நிலையத்தில் விமானத்தை இறக்க விழைந்தார். இடையில் அவருக்குக் கன்ட்ரோல் அறையின் தொடர்பு கிடைத்திட சௌதாம்டன் விமான நிலையத்தில் விமானத்தை இறக்குமாறு அனுமதி கிடைத்திட விமானப் பணியாளர்கள் கேப்டனின் முட்டியை விமானத்தளத்தின் கன்ட்ரோல் பேனலிலிருந்து விடுவித்தனர். ஆனால், பிடியை விடவில்லை.  7.55 ற்கு விமானம் தரையிறங்கியது. கேப்டன் பொதுமருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.  அவருக்கு  சில எலும்பு முறிவுகளும், குளிர் உறைதலால் ஏற்பட்ட மன அழுத்தம் இவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 5 மாத்த்திற்கும் குறைவான கால அவகாசத்தில் மீண்டும் விமானம் ஓட்ட்த் தொடங்கினார்.  நைகெல் ஓட்கென் தோள்பட்டை விலகலிலும், முகம் உறைந்து அதனால் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பும் சரியானது.  பயணிகள் எந்தவித சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக உயிர் தப்பினர். இந்த மாதிரியான உயிர் போகும் இக்கட்டான சூழலிலும், மனம் தளராமல், சமயோஜித அறிவால் பல உடனடித் தீர்வுகளை எடுத்தும், பணியாட்களுக்கு ஆணையிட்டும் அனைவரின் உயிரையும் காப்பாற்றிய அட்கிசனுக்கு 1992ல் ஹீரோ என்று கொண்டாடப்பட்டு போலாரிஸ் அவார்ட் கொடுக்கபட்டுக் கௌரவிக்கப்பட்டார்.  அதிலிருந்த பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

     இந்த விமான விபத்திற்குக் காரணம், விமானம் பழுது பார்க்கப்பட்டு, பராமரிப்பு செய்யப்பட்ட போது கண்ணாடிகள் தகுந்த ஸ்க்ரூவினால் பொருத்தப்படாத்தே என்று கண்டு பிடிக்கப்பட்டது.

    இங்கு பகிர்ந்திருக்கும் காணொளி நேஷனல் கியோக்ராஃபிக் தயாரிக்கும் மேடே ஏர்க்ராஷ் இன்வெஸ்டிகேஷன் என்று, நிஜமாக நடந்த விபத்துகளின்  அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடர்களின் ஒன்றான ஆவணப் படம்.
என் மகன் இன்று காலையில் (9 ஆம் தேதி) சென்னை வந்து சேர்ந்தான்.  அவன் ஃபிலடெல்ஃபியாவிLIRUNTHU 7 ஆம் தேதி இரவு 10 மணிக்கு (அமெரிக்க நேரம்) லண்டனுக்கு விமானம் ஏறினான்.  அப்போது அங்கு நல்ல மழை பெய்து கொண்டிருந்ததாம்.  பறக்கத் தொடங்கி 2 மணி நேரத்தில் விமானம் மிகவும் அதிகமாகத் தடதட என்று ஆடியதாம்.  அரை மணி நேரம்.  அப்போது கேப்டன் பேசினார். “நான் உங்கள் கேப்டன் அலாட்ஸ்டெய்ர் அட்கிசன் பேசுகின்றேன். நாம் ஒரு ஸ்டார்மின் நடுவில் இருக்கின்றோம்.  அதனால், ரஃப் ரைட் இன்னும் ஒரு 45 நிமிடம் இருக்கும். என் ஜன்னலில் மழை அடித்துக் கொண்டிருக்கின்றது. என்னால் முடிந்த அளவு அதை அப்புறப்படுத்துகின்றேன். (பயணிகள் சிரித்தார்களாம் ) இன்னும் சிறிது நேரத்தில் நிலைமை சரியாகிவிடும்.  கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டதும்,

     “அட! அட்கிசன்! இவர் தானே நம்மை விமானத்தினுள் நுழையும் போது க்ரீட் செய்து வரவேற்றார். நம்ம ஹீரோ! அப்போ 1990 ஹீரோவையா நான் பார்த்தேன்? அவரா இந்த விமானத்தின் கேப்டன்!  ஆஹா! அப்ப ஹீரோவே ஓட்டும் போது என்ன கவலை! நிம்மதியா தூங்கலாம். இறங்கும் முன் அவரிடம் இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும்” என்று நினைத்தவாறே உறங்கினானாம்.  பெருமையாக உணர்ந்ததாகச் சொன்னான். ஆனால், அவர் இந்த நிகழ்விற்குப் பின் மீண்டும் அந்த நிகழ்வை நினைவு கொள்ள விரும்பவில்லை என்று பேட்டி கூடக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னதால் அந்தக் காணொளியில் அவர் இருக்க மாட்டார். அதுவும் நினைவுக்கு வர, இறங்கும் முன் அவரிடம் பேச நினைத்ததைப் பேசாமல் கை கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, வாஹ்த்திவிட்டு வந்துவிட்டேன் என்றான். 

“ஹீரோவே ஓட்டறாரு.அப்புறம் என்ன கவலை என்று நிம்மதியாகத் தூங்கி வந்தேன் மா.”

மகன் அந்த ஹீரோவைப் பார்த்தேன் என்று சொல்லி இந்தச் சம்பவத்தை என்னுடன் பகிர்ந்து காணொளியைக் காட்டியதால் உங்களுடனும் பகிரலாமே என்ற எண்ணத்தில்தான் இந்தப் பதிவு!

கீதா



சனி, 4 ஏப்ரல், 2015

தேக்குமர அருங்காட்சியகம் – நிலம்பூர் – கேரளா

       தேக்குமரம் – தாவர அறிவியல் பெயர் – டெக்டோனா க்ராண்டிஸ் (Tectona grandis L.f. ) – வெர்பனெசிய (Verbanaceae)  குடும்பத்தைச் சார்ந்தது. உலகிலேயே, வெப்பமண்டலக் காடுகளில், இயற்கையாகவே வளரும், மகுடம் சூட்டும் பெருமைக்குரிய மரங்களின் இனவகையில், தேக்கு மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.

      நம் நாட்டிலும், மையன்மார், தாய்லாந்து, லாவோஸ், போன்ற நாடுகளிலும் இயற்கையாகவே காணப்படுகின்றன. நம் நாட்டில் முக்கியமாகக் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மத்யப்ரதேசம், மஹாராஷ்ட்ரா, ஆந்திரப்ரதேசம் (ஆந்திராவிலா? தெலுங்கானாவிலா?) குஜராத், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தரப்ரதேசத்தின் சில பகுதிகளில் (இதுவும் தெரியவில்லை பிரிக்கப்பட்டுள்ளதால்) ஒரிசா போன்ற மாநிலங்களில் இயற்கையாகவும் அந்தமான் மற்றும் சில வட இந்திய மாநிலங்களில் நட்டும் வளர்க்கப்படுகின்றது. 

தேக்கு மரத் தோட்ட வரலாற்றில், பல மைல்கல் அளவிலான விரிவாக்கங்கள், வளர்ச்சித்திட்டங்கள் கேரளத்தில்தான் எடுக்கப்பட்டது. 1840 களில், உலகிலேயே முதல் தேக்குமரத் தோட்டம்   கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில், நிலம்பூரில் தான் வளர்க்கப்பட்டது. இயற்கையாக வளரும் காடுகளில் அழியத் தொடங்கிய வேளையில், இப்படி உருவானத் தோட்டம்தான், நிரந்தரமாக, நிலையாகத் தேக்குமரங்கள் வளர்வதற்கு உதவியிருக்கின்றது.  நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களிலும் தேவையை ஈடுகட்டுவதற்கும், வளர்ப்பதற்கும் வழி வகுத்திருக்கின்றது.


1995, மே மாதம், கேரள வன ஆராய்சிக் கல்வியகம், கேரள வனத்துறையுடன் இணைந்து தேக்குமரத்திற்கான அருங்காட்சியகம் ஒன்றை, நிலம்பூரில் வடிவமைத்தது. நிலம்பூரில் தான் 160 வருடங்களுக்கு முன்னர் தேக்குமரத் தோட்டத்திற்கான  வளர்ச்சித் திட்டங்கள் ஆரம்பித்தன. இந்த அருங்காட்சியகம் தான் உலகிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று.  இந்த அருங்காட்சியகம் தேக்குமரத்தின் வரலாறு, பயிரிடும் முறை, அதைப் பாதுகாக்கும் முறை, அதன் உபயோகங்கள், சமுதாயத்தில் அதன் பொருளாதரத்தில் பங்கு போன்ற பல தகவல்களைத் தருகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நூலகமும் இருக்கின்றது.

சமீபத்தில் நான் நண்பர் துளசியின் வீட்டிற்குச் சென்றிருந்த போது (அவ்வப்போது சென்று வருவதுண்டு) இந்தத் தேக்குமர அருங்காட்சியகத்திற்குச் சென்றோம்.

வாங்க வாங்க எங்களைப் பார்க்க

முகப்பில், 55 வருட பழைமையான முதிர்ந்த தேக்குமரத்தின் வேர்கள் நம்மை வரவேற்கும் வகையில் மிக அழகாக வைக்கப்பட்டிருக்கின்றது. மிக  நுணுக்கமாகச் செதுக்கப்பட்டத் தேக்குமரக் கதவுகளின் வழியாக உள்ளே நுழையும் போது,  மிகப் பழைய, இயற்கையாக வளரக்கூடிய “கன்னிமாரா” எனும் தேக்குமரத்தின் ஓவியம் நம்மை வரவேற்கின்றது.  இந்த வகை, பரம்பிக்குளம் வன சரணாலயத்தின் கேரளத்துப் பகுதியில் உள்ள தேக்குமரத் தோட்டத்தைச் சேர்ந்தது

தரை தளம், முதல் தளம் என்று இரு தளங்களிலும் பல காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

தேக்கில் செய்யப்பட்டப் பாரம்பரிய தானியம் சேமிக்க வைக்கும் பெட்டி வரவேற்பரையில் வைக்கப்பட்டிருப்பது எல்லோர் கண்ணையும் கவர்கின்றது. நான் எடுத்த புகைப்படம் ஷெரிக்கும் வந்நில்லா. அதனால், இங்கு தரவில்லை.

மலயட்டூர் - என் அடி பாகம் பாருங்க எம்புட்டுக் குண்டுல!

அப்படியே நடந்து செல்லும் போது, மலயட்டூர் வனப்பிரிவினில் வளரும், நிஜமான மிகப் பெரிய தேக்குமரத்தின் அடிபாகம் வைக்கப்பட்டிருக்கின்றது.

மற்றுமொரு, மிகப்பெரிய தேக்குமரமான “கொனோலிஸ் ப்ளாட்” ன்(Conolly’s Plot) ஓவியம் உள்ளது. 


கன்னிமாரா தேக்கின் படமும், உரு-கப்பல்

தேக்குமரத்தில் செய்யப்பட்டச் சிறிய வடிவிலான பாய்மரக் கப்பல் “உரு”(Uru)  "மாதிரி" ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. கன்னிமாரா தேக்குமரத்தின் ஓவியத்தின் புகைப்படம் இங்கு தந்துள்ளேன்.

116 வயதான 4 மரக்கட்டைகள்-ம் வயசாச்சுப்பா


நிலம்பூர் வனப் பிரிவில் உள்ள “Kanakuthu”  வன பீட்டில் இருந்து எடுக்கப்பட்ட, 116 வருட வயதான தேக்குமரக் கட்டைகள் 4, 1860 களில் தேக்குமர வளர்ப்பு முறைகள் பற்றி, சுவரில் வரையப்பட்ட சித்திரங்களின் பின்னணியில் வைக்கப்பட்டிருக்கின்றன.



தகவல்கள் அறிந்து கொள்ள தொடுதிரை வைக்கப்பட்டுள்ளது.  அதில் தேக்குமர வரலாறு முதல் தேக்குமரத்தைப் பற்றியத் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

Teak poles of different sizes and qualities obtained during thinning of teak plantation
எம்புட்டு அழகா இருக்கோம்ல

தேக்குமரங்கள் முதலில் மிகவும் நெருக்கமாக, 2 மீட்டர் இடைவெளியில் வளர்க்கப்படுகின்றன.  பின்னர் வளர்ந்து வரும் சமயம், அவை நெருக்கமாக வளர நேரிடுவதால், இடையில் இடைவெளி விடுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்கள் அகற்றப்படும்.  இதற்குப் பெயர் “Thinning”.  இப்படி, தின்னிங்க் செய்யப்படுவதால், வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு தரத்திலும் விளைகின்றது. கேரளத்தில், 50, 60 வருட சுழற்சி முறை பருவத்தில், 5,10,15,20,30,40, மற்றும் 50வது வருடங்களில், “தின்னிங்க்” செய்யப்படுகின்றது.  தேக்குமரத்தின் அடிப்பகுதியிலிருந்து 3 மீட்டருக்கு மேலாக, உள்ள அடிமரப் பட்டையின் சுற்றளவு, நீளம், தரம் இவற்றின் அடிப்படையில்  “போல்ஸ் (Poles)” வகைப்படுத்தப்படுகின்றது. 


கோட்டயத்திலுள்ள, நகரம்பாறா வனப்பகுதியிலிருந்துக் கொண்டுவரப்பட்ட, 490 வருட வயதான தேக்குமரத்தின் பெரிய மரத்தண்டின் அடிப்பகுதி-அடிக்கட்டை பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளது.

முதல் தளத்தில், தேக்குமரத்தின் விஞ்ஞான பூர்வமானத் தகவல்கள் தரும் வகையிலானப் படங்கள், பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

விதையிலிருந்து, பூக்கும் பருவம், மீண்டும் துளிர்க்கும் பருவம் வரையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. விதைகளின் தரம், நன்றாக வளர்வதற்குத் தேவையானத் தகவல்கள், திசுக் கல்சர், முதலான தகவல்கள் அடங்கியப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.











    உலகின் பல பாகங்களிலிருந்தும் வெவ்வேறு வயதைக் காட்டும் தேக்குமர மாதிரிகளும்  வைக்கப்பட்டுள்ளன.







மரத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளால் ஏற்படும் மாற்றங்களை, சில மாதிரிகளும், புகைப்படங்களும் வைத்துக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

300 வகைக்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள், பிற பூச்சி வகையினங்கள் காட்சியகப்படுத்தப்படுள்ளன. தேக்குமரத்தினோடுத் தொடர்புள்ள தாவர வகைகள், விலங்குகள் போன்றவை, அதை அடுத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பருவத்திலும், அதாவது பூக்கும், காய்க்கும், இலைகள் உதிரும் பருவங்களில், காலங்களில், ஏற்படும் தேக்கு மரங்களின் உணர்வுகளை படங்களின் மூலம் காட்சிப்படுத்தி உள்ளனர்.  












வாங்க வந்து உக்காந்து ஊஞ்சல் ஆடுங்க 

தேக்கு மரத்தில் செய்யப்பட்ட பாரம்பரிய வீட்டுச் சாமான்கள், அறுவடைக்காக உபயோகிக்கும் கருவிகள், முதலானவை வைக்கப்பட்டுள்ளன.  இப்படிப்  தேக்கு மரத்தினைப் பற்றிய பல தகவல்களும், படங்களாகவும், பொருட்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.







இந்த வளாகத்தினுள், வடிவமைக்கப்பட்ட குளம், சிறிய ஓடை, செயற்கை அருவியிலிருந்து ஆரம்பித்து செல்லும் நடைபாதை, கண்ணைக் கவரும் தோட்டங்களின் வழியாகச் செல்கின்றது. 


















அதன் வழி நடந்தால், கேரளாவில் காணப்படும் அரிய வகை மருத்துவ குணமுள்ள செடிகள், பல வகையான மலர்கள், மரங்கள், செடிகள், கொடிகள், கள்ளி சப்பாத்திச் செடிவகைகள், நீரில் வளரும் செடிகள், பெரணிச் செடிவகைகள், மிகவும் கண்ணைக்கவரும் வகையிலான ஆர்க்கிட்ஸ் வகைப் பூக்கள், செடிகள், வண்ணத்துப் பூச்சித் தோட்டம் என்று பார்த்துக் கொண்டே 800 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அழகிய பூங்காவைச் சுற்றி வரலாம்.  இந்த இயற்கைப் பூங்காவில், 58 வகை பறவை இனங்கள், கேரளத்தைச் சேர்ந்தவையும், வெளியிலிருந்து வருவனவையும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  மட்டுமல்ல, 136 மர வகைகள் இங்கு உண்டு. பல அழிந்து வரும் மர இனங்கள் இங்கு காணப்படுகின்றன.

காலு வேதனிக்குனுண்டோ? டயர்டாயோ? சிறிய உணவகம் இருக்கின்றது. சாயாவோ? காபியோ? அங்கு கிடைக்கின்றது. 

மிக நல்ல ஒரு அனுபவம்! பல தகவல்கள் கிட்டி. நீங்களும் போய்க் காணாம். விலாசம் வேண்டே?! இந்தா இவிட உண்டு. திங்களாயிச்சா அவதியானு கேட்டோ.  ஓ!  சாரி! கேரள மண்ணில் காட்சியகத்தைச் சுத்தி வந்ததில் மலையாளம் தொற்றிக் கொண்டுவிட்டது.  அம்மொழியும் தெரியும் என்பதால்.

KERALA FOREST RESEARCH INSTITUTE
SUB CENTRE
CHANDAKUNNU, NILAMBUR
www,kfri.org
TIMING : 10.00 am to 5.00pm
( Monday Holiday )
கீதா


செவ்வாய், 31 மார்ச், 2015

ஆல் த பெஸ்ட்!! ALL THE BEST!!!

Image result for SUCCESS AND FAILURE IN LIFE

சில நாட்களுக்கு முன் நான் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது என் அலை பேசி கூவியது. தோழி பத்மா.  நேற்றுதானே பேசினோம் என்று நினைத்தவாறே,

“ஹலோ பத்மா வெரி குட் மார்னிங்க்”

“..........(சிறிது நேர அமைதி) ஓ!  கீது! நீயா? ஸாரிப்பா...”

“ஹேய்! என்னாச்சு? என் நம்பர கால் பண்ணிட்டு “கீது நீயான்னா? என்னாச்சுப்பா, உனக்கு?”

“இல்ல கீது, என் சொந்தக்காரப் பொண்ணு பேரும் கீதா தான். அவ இப்ப +2.  ஸோ அவளுக்கு எக்ஸாம் தொடங்கப் போறதுல்ல, “ஆல் தெ பெஸ்ட்” சொல்லலாம்னு பேர போட்டா அது உன் நம்பருக்கு கால் வந்துருச்சு...”

“பரவாயில்லை எனக்கும் அந்த “ஆல் தெ பெஸ்ட்” பொருந்தும்.  சொன்னா தப்பில்லை.”

“விளையாடறியா கீது?!  நீ என்ன பரீட்சை எழுதப்போற?”

“என்னப்பா பரீட்சை எழுதினாத்தான் “ஆல் தெ பெஸ்ட்” சொல்லுவியா?  நான் தினமுமே பரீட்சை எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன்.  வாழ்க்கைப் பாடம் படிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன்.  வயசு 50 ஆனாலும், மரணம் வரை இந்த வாழ்க்கைப் பாடம் தொடருமே!  இதுதான் கஷ்டமான பாடம்பா....”

“ஆமாம் ல.....அப்ப .என்னையும் அந்த லிஸ்டுல சேத்துக்க! அப்ப, “ஸேம் டு யூ” னு சொல்லு”

“ஹஹஹ்ஹஹ...சரி, நீ என்ன பண்ணற, அந்த கீதா பொண்ணுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லு.  சரிதான்.  ஆனா அதை விட முக்கியம் அந்தப் பொண்ணு வாழ்க்கைப் பாடத்தக் கத்துக்கிட்டு, அதைக் கடந்து வரதுதான் ரொம்ப முக்கியம். அந்த பொண்ணு மட்டும் இல்ல, இப்ப இருக்கற தலைமுறைக்கு...வாழ்க்கைப் பாடம் ரொம்பவே முக்கியம். அந்தப் பொண்ணுக்குத் தமிழ் தெரியுமா?  தமிழ் தெரிஞ்சா, இல்லல்ல அதை விட அந்தப் பொண்ணோட அப்பா, அம்மாக்குத் தமிழ் தெரியுமானா, அவங்கள் எங்க ப்ளாகர் ஃப்ரென்ட் “முத்து நிலவன் ஐயா” அவரோட புத்தகம் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே” http://valarumkavithai.blogspot.com/2014/06/blog-post_16.html படிக்கச் சொல்லு.  புரிஞ்சுக்க “வாசிக்க” இல்ல “படிக்க” சொல்லு.

“நிச்சயமா...ஓகேப்பா..அப்புறம் கூப்பிடறேன்.”

      உரையாடல் முடிந்தது.  ஆனால், என் சிந்தனைகள் தொடர்ந்தன.  இந்தப் ப்ளஸ் 2 தேர்வுதான் நம் வாழ்க்கையையே முடிவு செய்வது போல், பல மாணவச் செல்வங்களும், பெற்றோர்களும் முடிவுக்கு வருகின்றனர்.  

    +2 என்பது மிகவும் முக்கியம் தான். ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, போன்ற பலவற்றை நிர்ணயிக்க. ஏன் அதன் முடிவுகள் நம் வாழ்க்கையை, எதிர்காலத்தையே கூட மாற்றி அமைக்கலாம். என்றாலும் அதுவே முடிவல்ல. தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, குறைவான மதிப்பெண்கள் என்றால் தான் விரும்பியத் துறை அல்லது தேவையானத் துறை கிடைக்காமல் போவதனால்  ஏற்படும் விரக்தி என்று. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எண்ணங்களை மனதில் வாங்காமல், தாங்கள் நினைக்கும் துறையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்துதல் என்று ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் மன உளைச்சல் ஒரு தொடர்கதையாகி வருகின்றது. 

      மகனுக்கு அவன் நினைத்தது தற்போது நடக்கவில்லை. நான் அவனுக்குச் சில நட்புடனான அறிவுரைகள் சொல்லி, மனதை சமநிலையில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். 

      “அம்மா, டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” இதை நீதான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றாய். னௌ ஐ யாம் அ பெக்கர்” (Don’t talk philosophy to a beggar.  Now I am a beggar)

      “ஆம்! பசியோடு இருக்கும் ஒருவரிடம்  தத்துவம், அறிவுரைகள் பேசிக் கொண்டிருந்தால், அவரது அறிவிற்கு எட்டாதுதான். (பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்த பின்னும் கூட, சில ஆசிரியர்கள் பாடம்/அறிவுரை நடத்திக் கொண்டே போவார்கள், மாணவச் செல்வங்களின் பொறுமையை சோதிக்கும் அளவு. இந்த இடத்தில் வள்ளுவனார்???!!!) அது பல நாட்கள் பட்டினியாக இருப்பவர்க்குத்தான். நீ இப்போது பெக்கர் அல்ல.  உன் அறிவு மழுங்கிவிட்டதா? இல்லையே.  முயற்சி செய். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றாயோ அதற்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள். அடித்தளம் உறுதியாக இருந்தால், அதனை மேலே உயர்த்துவது எளிது.  நிச்சயமாக நீ விரும்புவது கிடைக்கும். மனதை சமநிலையில் வைத்து யோசித்துப் பார்.  தீர்வுகள் பளிச்சிடும். வாழ்க்கையைக் கடக்க பொறுமை தேவை.  உனக்கு அது நிறையவே இருக்கின்றதே.  இழந்திடாதே”

      நம் வாழ்க்கை கல்வி சார்ந்ததென்றாலும், தொழில் சார்ந்ததானாலும், தனிப்பட்ட வாழ்க்கையானாலும் எல்லாம் கலந்தது தானே வாழ்க்கைப் பாடம்! கொடுக்கப்பட்ட ஆறறிவிற்கு நியாயம் கற்பிக்கும் வகையில், நம்மை முதலில் ஒரு நல்ல மனிதனாக, மனித நேயம் மிக்க மனிதனாக, நல்ல விதத்திலான ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கிக் கொள்ளுவதும், அடுத்தத் தலைமுறையினருக்கும் அதைக் கற்பித்து வழி நடத்துவதும்தானே நமது தலையாய கடமை!

      பெற்றோர்களும், பெரியவர்களும், தங்கள் குழந்தைகளைத் தங்களது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவும், வாழ்க்கையை எதிர்கொள்ளவும், அந்தத் திறனை வளர்க்கவும் கற்றுக் கொடுத்திடல் வேண்டும். வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் அறிவையும், எண்ணங்களையும் சொல்லிக் கொடுத்திடல் வேண்டும். ஒரு சிலவற்றைக் கற்றுக் கொடுத்திடலாம்.  சிலவற்றை பெற்றோர்களும், பெரியவர்களும் மாதிரிகளாக இருந்து வழி நடத்த வேண்டி வரும்.  சிலவற்றைப் போதிக்க வேண்டிவரும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் தான் அமைந்துள்ளது நமது பாடத் திட்டங்கள். குழந்தைகளைப் பாட புத்தகப் புழுக்களாகவும், ஆமையும், முயலும் கதையில் வருவது போன்ற ஓட்டப்பந்தயம் போன்றும், வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் ஒன்றாக மட்டுமே அமைந்துள்ளது. சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு உதவுவதாக இல்லை. வாழ்க்கைப் பாடம் என்பது எளிதல்ல. பல சிக்கல்கள் நிறைந்தது.  முள்ளினால் ஆன பாதைகளும் வழியில் உண்டு.  அவற்றை எப்படிக் கடந்திட வேண்டும் என்பதுதான் கற்க வேண்டிய ஒன்று. அனுபவப் பாடம் மிகவும் இன்றியமையாதது. வெற்றி, தோல்விகளுக்கு நாம் அளவிற்கு மீறிய  முக்கியத்துவம் கொடுத்தால், அவை பொறாமை, ஆணவம், கர்வம், கோபம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற, ஒரு மனிதனின் நல்ல ஆளுமையை வளரவிடாமல் தடுக்கும் குணங்களுக்கு வழி வகுக்கும்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று பலரும் சொல்லுவதைக் கேட்டிருப்போம்.  வாழ்க்கையில் எதை ஜெயிக்க வேண்டும்? யாருடன் போட்டி போடுகின்றோம்? படிப்பு என்றால் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண், அவளை/அவனை விட அதிக மதிப்பெண் என்று போட்டியாகச் சொல்லலாம்.  பந்தயம் என்றாலும் ஜெயித்தல் என்பது பற்றிப் பேசலாம்.  அலுவலகம் என்றாலும் கூட ஜெயித்தல் என்பது பதவி உயர்வு என்பதன் அடிப்படையில் பேசலாம்.  ஆனால், வாழ்க்கையில்/ தனிப்பட்ட வாழ்க்கையில், எதை?  யரை ஜெயிப்பதற்காக, இல்லை தோற்கடிப்பதற்காக வாழ்கின்றோம்? நம் பெற்றொருடன்? கணவன், மனைவிக்குள் போட்டி? இல்லை குழந்தைகளுடன் போட்டியா? வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லையே! ஒப்பிட்டுப் பார்த்து வாழ்தல், ஒருவரின் வாழ்க்கையோடு மற்றொருவரின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து வாழ்தல் என்பது மிகவும் கீழ்தரமான ஒன்று. அதை ஒரு அளவு கோலாக வைத்து வாழ்தல் மிகவும் அறிவிலித்தனமான செயல். எது அளவு கோல்? அதற்கு ஒரு எல்லை இருக்கின்றதா?

கல்வியானாலும், அலுவலகமானாலும், தொழிலானாலும், நாம் மற்றவரை விட உயர்ந்து முன்னே சென்றால், அதனை வெற்றி என்று சொல்லுகின்றோம்.  எதை வைத்து அளக்கின்றோம்? சரி, அந்த வெற்றி நிலையானதா?  எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? நிரந்தரமாக? இல்லை.  இல்லவே இல்லை.  ஒன்றில் வெற்றி என்று சொல்லப்படலாம்.  வேறொன்றில் அது தோல்வியைத் தழுவலாம். அதாவது சமுதாயத்தின் பார்வையில், அளவு கோலில். வெற்றி என்று சொல்லி பெறுபவர்கள் எல்லோருமே, என்றுமே முதல் நிலையில் இருப்பதில்லை. சறுக்கல்களும் நேரிடுவதுண்டு. எத்தனை பேர் இதனால் மன அழுத்தம் என்பதற்கு ஆளாகி, மன நிலை பிறழ்ந்து  போகின்றனர்!

வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கும். இவை நமது தலையில் ஏறாமல் கவனமாக இருத்தல் வேண்டும். எனவே நாம் நமது மன நிலையை சம நிலையில் வைத்துக் கொண்டு, நமது வாழ்க்கைக்கான இலட்சியங்கள், கொள்கைகள், என்று நாமே வரையறுத்துக் கொண்டு, அதை நோக்கிப் பயணிக்கும் சமயம், அன்புடனும், மனித்ததுடனும், நேர்மையுடனும் பயணித்து, மனம் தளராமல், சோர்வடையாமல் எதிர்வரும் இடர்களை, முட்டுக்கட்டைகளைத் தைரியமாக எதிர்கொண்டு, தகர்த்து வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு, எந்தச் சூழலிலும் நீந்தி, அனுபவித்து, மகிழ்வுடன் வாழக் கற்போம், அடுத்தத் தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுப்போம்! வாழ்க்கை வாழ்வதற்கே! ஆல் த பெஸ்ட்! மாணவச் செல்வங்களே!  செல்வங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் தான்!! ஆம்! வாழ்க்கைப் பாடங்களைக் கற்று வாழத்தான்!

Image result for SUCCESS AND FAILURE IN LIFE
- கீதா

படங்கள் : courtesy -  google images