புதன், 11 மார்ச், 2015

ஆலிஃப் – அறிவின் முதலெழுத்து – திரைவிமர்சனம்



    

    நாயக, நாயகிகளுக்காக எடுக்கப்படும் திரைப்படங்களும், வியாபார நோக்குடன் பணத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்களும், திரைப்பட விருது பெறும் நோக்குடன் எடுக்கப்படும் திரைப்படங்களும், வாரம் தோறும் வந்து போகும் போது இடையில் அத்தி பூத்தாற் போல் எப்போதாவதுதான் சமூகத்தின் பிரச்சினைகளை, முக்கியமாக பேசினால் பிரச்சினை வருமோ எனப் பலரும் தயங்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களும் வருகின்றன. டைரக்டர் கமலின் “செல்லுலாய்ட்”டுக்குப் பிறகு வெளிவந்த, அப்படிப்பட்டத் திரைப்படம் தான் “ஆலிஃப் – அறிவின் முதலெழுத்து.


      நபிகள் நாயகம் தான் அதிகமாக வெறுக்கும் ஒன்றாகக் கூறிய “தலாக்” சொல்லி விவாகரத்து செய்வதும், அதன் பின் விளைவுகளும் எப்படி ஒரு குடும்பத்தைப் பாதிக்கின்றது என்பதுதான் ஆலிஃப்.  ஆலிஃப் எனும் சிறுவன் தன் அக்கா, தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டியுடன் வறுமையிலும், இடையிடையே கிடைக்கப் பெறும் சிறிய மகிழ்ச்சி தரும் சம்பவங்களுடன் வாழ்கிறான்.  ஆஸ்மா நோயால் அவதிப்படும் தாயை, தன் தந்தை விவாகரத்து செய்ததும் தளர்ந்து போகிறான்.  அவனது கொள்ளுத் தாத்தா மனித நேயம் மிக்க ஒரு மத பண்டிதர் மட்டுமல்ல, மதத்தின் பெயரால் நடத்தப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணமுடையவராக வாழ்ந்தவர்.  எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட அவரது இழப்பு அக்குடும்பத்தை தளர்த்தி விடுகிறது.  ஆலிஃபின் பாட்டி பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தின் பசியைப் போக்குகிறார்.  இதனிடையில் தான் விவாகரத்து.

 Image result for alif malayalam movie

      விவாகரத்திற்குப் பின் ஒரு நாள், ஒரு மத பண்டிதரின் சொற்பொழிவைக் கேட்கச் சென்ற ஆலிஃபின் தாய், ஆண்கள் அவர்களது அதிகமான ஆசையைத் தீர்க்க ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை மணம் முடிக்கலாம் என்றதும், பெண்களும் அப்படிச் செய்யக் கூடாதா? எனக் கேட்க, மதம் பண்டிதருடன் வாக்குவாதம் செய்ய வேண்டி வருகிறது.  அது போன்ற சில விஷயங்கள் ஆண்களால் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டவை.  அவை புனித குரானில் சொல்லப்பட்டவை அல்ல என்று ஆலிஃபின் தாய் சொன்னதும், பண்டிதரும், பள்ளிவாசல் நிர்வாகக் குழுவினரும் அவரை வெளியேற்றி, அதன் பின் அக்குடும்பத்தை தள்ளி வைத்து, கடைகளிலிருந்து பலசரக்குப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் செய்து விடுகிறார்கள்.

Image result for alif malayalam movie

இதனிடையே பக்கத்து வீட்டில் நடந்த ஒரு நிக்காஹிற்கு அவர்களை மட்டும் அழைக்காமலிருக்க கொள்ளுப் பாட்டி, “கல்யாண வீட்டில் மட்டன் பிரியாணியாகத்தான் இருக்கும்” என்றதும், ஆலிஃப் யாருக்கும் தெரியாமல் அங்கு சென்று பிரியாணி வாங்கி சாப்பிடாமல், அதைக் கொள்ளுப்பாட்டிக்குக் கொண்டுவந்து கொடுக்கும் இடம் மனதைத் தொடுகிறது.  வரும் வழியில் ஏதோ முள் காலில் குத்தியது என்று சொல்லி ஆலிஃப் மயங்கி விழுகிறான்.  காலில் பாம்பு கடித்த வடுவைக் கண்டதும் அவனது பாட்டி, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரழக்கின்றான்.  அவனது உடலை அடக்கம் செய்ய பள்ளி வாசல் நிர்வாகக் குழுவினர் முன் வராமல் இருந்ததால், ஆலிஃபின் பாட்டி, அவனை வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் குழி தோண்டி மத ஆசாரப்படி அடக்குகிறார்.  எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில் பதிவை புதிப்பிக்காதவர்களுக்கு மீண்டும் புதிப்பிக்க வாய்ப்பு வர, ஆலிஃபின் தாய் பதிவைப் புதுப்பித்துத் தன் நிலையைச் சொல்ல, அவர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்.  தன் சூழலை நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவினரிடம் சொல்ல, அவருக்கு வேலை கிடைக்கிறது.  அது பெரும்பாலும் நிரந்தரமான வேலையாக மாற வாய்ப்புள்ளதால், அவர்களது குடும்பம் பட்டினியிலிருந்து மீள்கிறது.

Image result for alif malayalam movie

ஆலிஃபின் அக்காவை பள்ளியில் சேர்த்து மீண்டும் படிக்கவைக்க ஆலிஃபின் தாய் முடிவு செய்கிறார்.  இதனிடையே வேறு மணம் புரிந்த அவரது கணவன், அம் மனைவியை “தலாக்” சொல்லி விவாகரத்து செய்து, மீண்டும் ஆலிஃபின் தாயை மணக்க முன்வர, ஆலிஃபின் தாய், “உங்கள் விருப்பம் போல் தோன்றும் போது மணம் முடிக்கவும், வேண்டாத போது விவாகரத்து செய்யவும் பெண்கள் என்ன ஆடு மாடுகளா? பெண்களான எங்களுக்கும் உள்ளமும் உணர்வும் உண்டு.  இப்பொதுதான் நான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி இருக்கிறேன்.  எனக்கு இனி உங்களை ஒரு போதும் வேண்டாம்.” என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பி சுதந்திரமாக வாழத் தொடங்குகிறார்.



எழுதி இயக்கி இருப்பவர் என். கே. முகம்மது கோயா.  தயாரித்தவர் பிஜு.  ரமேஷ் நாராயாணனின் இசை கேட்கும்படியாக உள்ளது.  எம் டி ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் அருமை.  ஆலிஃபின் தாயாக வரும் லெனா நன்றாக நடித்திருக்கிறார். அவரது தாயாக வரும் ஜீனத்துக்கு கிடைத்த நல்ல ஒரு கதாப்பாத்திரம். இதை மிகவும் பக்குவமாகக் கையாண்டு கைதட்டல் வாங்குகிறார் ஜீனத்து.  பழங்கால நாடக நடிகையான நிலம்பூர் ஆயிஷாவின் நடிப்பும் அருமை.  அவரது கணவனாக வரும் நெடுமுடி வேணு மத தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இஸ்லாமிய மத பண்டிதரான சேகன்னூர் மௌலவியை நம் நினைவுக்குக் கொண்டு வருகிறார். மத மதில்களுக்குள் நின்று கொண்டே இது போன்ற சீர்திருத்தங்கள் தேவை என வாதிடும் இது போன்ற திரைப்படங்களை, முகம்மது கோயா போன்ற இயக்குனர்கள் எடுத்து சமூகம் வித்தியாசமாக விமர்சன புத்தியுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். அப்போதுதான் கலையும், எழுத்தும் சமூக சீர்திருத்தத்திற்கு இன்றியமையாதவை என்பதை நிலை நாட்ட முடியும்.

படங்கள் - கூகுள்

வெள்ளி, 6 மார்ச், 2015

ஆவியுடன் நாங்கள் – “காதல் போயின் காதல்” அனுபவம்

     

ஆவியும் காமேரா அஸ்வினும்


    நண்பர் ஆவியுடனான எங்கள் பந்தம் பதிவர் குடந்தை ஆர்.வி சரவணன் அவர்களின் புத்தகம் “இளமை எழுதும் கவிதை நீ” வெளியீட்டின் போது ஓரிரு வார்த்தைகளில் ஆரம்பித்தது. பின்னர் ஆவி அவர்களின் “ஆவிப்பா” புத்தக வெளியீட்டின் போது அது சற்று விரிவடைந்து, வலைத்தளத்தில் இடும் கருத்துக்கள் மூலம் இன்னும் விரிவடைந்து, பின்னர் துளசியின் பரோட்டா கார்த்திக்கில் அவரைப் பங்கெடுக்கச் செய்ய எங்கள் நட்பு விரிவடைந்தது. அப்போது சரவணன் அவர்கள் எங்களுக்கு நெருங்கிய நண்பராக இருந்ததால், அவரது முதல் குறும்படமான “சில நொடி சினேகம்” படத்தில் ஆவி கதாநாயகனாக அறிமுகம் ஆன போது, அதில் துளசியும், கீதாவும் பங்கெடுக்க, துளசியும், ஆவியும் கோயம்புத்தூரிலிருந்து ஒரே ரயிலில் பயணிக்க, அன்று ஆவியும், துளசியும் இரவு தூக்கத்தைத் தியாகம் செய்து, சினிமா பற்றி நெடு நேரம் பேசிக்கொண்டுவர, அப்போது ஆவி, ஆவியுடனான நட்பு இன்னும் நெருக்கமானது எனலாம்.  ஆவி, கீதாவை, கீதா சேச்சி என்று அழைக்கும் அளவு!

        அதன் பின்னர் ஆவி தனது முதல் குறும்படத்திற்காக, இரு கதைகளை அனுப்ப, அதில்  “காதல் போயின் காதல்” கதையை எங்கள் குழு பரிந்துரைக்க, காதல் போயின் காதல் முடிவானது.  கதையைக் குறித்து எங்களுடன் கருத்து பகிர்ந்துக் கொண்டு, அதனது கதையை எங்களை வாசிக்கச் சொல்லி, திரைக்கதை அனுப்ப, அதைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களின் வழியாக எங்கள் நட்பு வளர்ந்து நெருங்கியது.  ஆவி முதலில் எழுதிய திரைக்கதையில் அதன் நாயகி எதிர்மறை கோணத்தில் காட்டப்பட்டுள்ளது என்றும், அதன் முடிவு அவ்வளவு சரியாக இல்லை என்றும் துளசி நினைக்க, பின்னர் பலரும் அதே கருத்தைத் தெரிவிக்க, ஆவி சற்றே கதையை மாற்றி நாயகி ஒரு நல்ல நேர்மறை கதாபாத்திரமாக வடிவமைத்தார்.  கீதாவிற்கு அதில் உடன்பாடில்லை என்றாலும், பெரும்பான்மையோர் அளிக்கும் ஓட்டுதானே செல்லுபடியாகும்!


நண்பர் ஆவியும், துளசியும் பாலக்காட்டில்

        திரைக்கதையை எழுதி முடித்து எங்கள் குழுவினருக்கு அதை அனுப்பி எங்கள் கருத்துக்களைக் கேட்ட சமயம், கீதா கோயம்புத்தூருக்குப் பயணம் மேற்கொள்ள, ஆவியும், கீதாவும் துளசியைப் பாலக்காட்டில் சந்தித்துக் கதையை விவாதம் செய்ய, துளசி கதையை ஷாட் பை ஷாட் வாசித்து அதற்கான காமெரா கோணம், எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுத்தால் நன்றாக இருக்கும் என்றும், கதாபாத்திரங்களைப் பற்றியும், விபத்துக் காட்சி எப்படிப் படமாக்கப்பட வேண்டும் என்றும் பல விஷயங்களைப் பகிர்ந்தார்.  அந்த அனுபவம் மிகவும் இனிமையான ஒரு அனுபவம்.

        அடுத்து அந்தத் திரைக்கதையின் முதல் கதைக் களம் மாற்ற வேண்டியதாகிப் போனது, அங்கு படம் பிடிக்க மிகவும் அதிகமான ரேட் கேட்கப்பட்டதால்.  பின்னர் ஒரு பூங்கா என்று முடிவு செய்யப்பட்டது.  திரைக்கதையும் மெருகேற்றப்பட்டுக் கொண்டே இருந்தது.  ஆவி, அதற்காக மிகவும் உழைத்தார் எனலாம்.  திரைக்கதை எழுதும் ஃபார்மாட் முதல் கூகுளில் தேடி எடுத்து அதில்தான் அவர் எழுதினார்.  இப்படியாகக் கதை மெருகேற்றப்பட்டு, கதாநாயகன், நம் ஷைனிங்க் ஸ்டார் சீனு, கதையில் வரும் குட்டிப்பையன், பதிவர் கார்த்திக் சரவணன் அவர்களின் மகன் ரக்ஷித், நாயகனுக்கும், நாயகிக்கும் நல்ல பரிச்சயமான ஒரு காஃபி விற்கும் மனிதராகத் துளசி, கார் டிரைவராக குடந்தை ஆர் வி சரவணன், நாயகனின் நண்பர்கள், இப்படி எல்லோரும் முடிவாக்கப்பட்ட நிலையில் கதைக்கு மிகவும் தேவையான நாயகி கிடைப்பதில் மிகவும் சிரமம் இருந்தது.  அதுவும் ஒரு சிறு பையனின் தாயாக நடிக்க வேண்டும் என்றதும் மிகவும் யோசித்தார்கள், பின்வாங்கினார்கள். நாயகி இல்லாமல், நிழலை வைத்தே படம் எடுத்துவிடலாம், அல்லது காமெரா, நாயகியைக் காண்பிக்காமல் கூடப் படம் எடுத்தால் என்ன என்றெல்லாம் ஆவியும், கீதாவும் விவாதித்தாலும், கதாநாயகி கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் தோன்றியது. இறுதியில் மதுவந்தி முடிவானார்.  அதே போன்றுதான் காமெரா விற்கும் முதலில் சரியாக அமையாமல், பின்னர் மதுவந்தியின் நண்பர் அஸ்வின் எங்கள் குழுவிற்குப் பிடித்து விட அவர் முடிவானார்.

        படப்பிடிப்புத் தேதியை ஆவி முன்னரே முடிவு செய்துவிட்டார். எங்களை மிகவும் கவர்ந்த விஷயங்கள். எல்லாமே அவர் மிகவும் அழகாகத் திட்டமிட்டே செய்தார் என்றால் அது மிகையாகாது.  கதாநாயகி கிடைக்காத போது கூட, ஆவி, டென்ஷனை வெளியில் காட்டாமல், மிகவும் அமைதியாக அதை எப்படி சமாளிக்கலாம் என்று வித்தியாசமாக யோசித்தார். தொடர்பு கொள்வதிலும், ஒருங்கிணைப்பிலும் அவரது திறமை பளிச். பலரது கருத்துக்களைக் கேட்டாலும், தேவைப்பட்ட கருத்துக்களையும், யோசனைகளையும், திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு அணுகியும், அதே சமயம் சில இடங்களில் தனது முடிவில் உறுதியாக இருந்ததும் எங்களை மிகவும் கவர்ந்தது.
 
        படப்பிடிப்புத் தொடங்கும் முன், இரு முறை ஒத்திகைப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதையும் நடத்தினார்.  ஒத்திகை அனுபவம் மிக மிக ஒரு ரசனையான அனுபவம். பதிவர் அரசனும் எங்களுடன் இருந்து ஒத்திகை பார்க்கும் போது அவர் பல நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வீசி அந்த இடத்தையே மிகவும் கலகலப்பாக வைத்திருந்தார். படப்பிடிப்பு நாள் நெருங்கிட, துளசியும் அவரது மனைவியும் முதல் நாளே கீதாவின் வீட்டிற்கு வந்து தங்கினர்.  படம் முடிந்த உடன், துளசியாலும், மதுவந்தியினாலும் மீண்டும் டப்பிங்கிற்கு வர முடியாத காரணத்தினால், கீதாவின் வீடு டப்பிங்க் தியேட்டர் ஆனது.



        எடிட்டிங்கிற்கும் ஆவியின் நண்பர் திரு முல்லை வேந்தன் என்பவர் முடிவாக, கீதாவுக்கு அந்த அனுபவமும் கிடைத்தது, ஆவியால்.  ஆவியின் இந்தப் படத்தின் மூலம் கீதா நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது என்பதால் ஆவிக்கு கீதாவின் இதயம் கனிந்த நன்றிகள் பல!  அதற்கு முடிவில்லை.  இறுதியில் ஆவிக்கு இதில் பாடலும் வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற, திரு முல்லை வேந்தன் அவர்களின் நண்பர் திரு ரவி என்பவர் முடிவானார்.  அவரும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்.  கீதாவுக்கு அவருடைய அறிமுகமும் கிடைத்தது என்றால் அதற்கும் ஆவிதான் காரணம்.
    
 ‘
        ஆவி மிகவும் தேர்ந்த பாடலாசிரியர் என்றும் சொல்லலாம்.  அருமையான வரிகள். அதற்கு அந்தப் பல்லவிக்கு மெட்டு அமைத்தவரும் ஆவியே.  அதை ஆவி பாடிக்காட்ட, அதை கீதா உள்வாங்கிப் பாட, இசையமைப்பாளர் திரு ரவி அவர்கள் அதற்கு மெருகேற்றி இசை அமைக்க...ஆவி கீதாவைப் படத்தில் பாட வைக்க, கீதாவுக்கு மிகவும் சந்தோஷம்.  அதற்கு சில நாட்களுக்கு முன் தான் துளசி தனது படத்திற்கு வேண்டி லிங்காஷ்டகம் கேட்க அதை, கீதாவும், ஆவியும் பாடி பதிவு செய்தனர். அதுவே கீதாவுக்கு முதல் அனுபவம்.  இரண்டாவதாக ஒரு படத்தில் பின்னணி இசை பாடுவது போல, ஆவியின் படத்தில் பாடியது கீதாவுக்குப் புது அனுபவம்தான்.  ஆவி, கீதாவிற்கு இத்தகைய ஒரு நல்ல அனுபவத்தையும், வாய்ப்பையும் அளித்த ஆவிக்குக் கீதாவின் கோடானு கோடி நன்றிகள்.  எத்தனை நன்றிகள் உரைத்தாலும், எத்தனை முறை அதைச் சொன்னாலும் அதற்கு முடிவில்லை. தீராது!

        ஆவியுடனான அவரது படத்தில் ஏற்பட்ட எங்கள் அனுபவம் மிக மிக இனிமையானது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போதும், ஆவி பாடல் எழுதி, மெட்டும் அமைக்க அதை சற்று மெருகேற்றி கீதா பாட, இப்படியாக ஒரு சுகராக அனுபவம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆவி, மிக அருமையானப் பாடல் வரிகள் எழுதி, முறையாகப் பாட்டு கற்றுக் கொள்ளாமலேயே அதற்கு மெட்டு அமைப்பது மிக ஆச்சரியமான ஒரு விஷயம்.  ஆவியை,  டி ஆர் போன்று ஆவி, என்றுதான் நாங்கள் சொல்லுவோம்.

        இப்படியான ஒரு நட்பும், அனுபவம் எங்களுக்கு அவருடன் ஏற்பட்டு பல விஷயங்கள் நாங்கள் கற்றுக் கொள்ள இந்த அனுபவங்கள் உதவியது என்றால் அது மிகையாகாது.




        ஆவி, உங்கள் முதல் குறும்படமே, சிறப்பாக வந்தமைக்கு (சில குறைபாடுகள் நாம் அறிந்தவையே என்றாலும், தவிர்க்க முடியாத  காரணங்களால் அவற்றைக் களைய முடியாமல் அமைந்தாலும், )  எங்கள் இதயம் கனிந்த, மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!  தாங்கள் மேலும் மேலும் சிறந்த படங்கள் அளிக்க எங்கள் வாழ்த்துக்கள்! உங்களுடன் எங்களுக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவத்திற்கும், நட்பிற்கும், புதிய நல்ல அறிமுகங்களுக்கும், நீங்கள் எங்களுக்கு அளித்த வாய்ப்பிற்கும், மனமார்ந்த நன்றிகள் பல எங்கள் இதயத்திலிருந்து! மிக்க மிக்க நன்றி ஆவி! 



செவ்வாய், 3 மார்ச், 2015

ஆபத்துக்குப் பாவம் இல்லைதான் என்றாலும், இது தவறு....


 கோபி, ஒடிஸா மாநிலத்தில் ஜெகத்சிங்க்பூர் அருகே, பிஜாங்கிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிபவர்.  5 மருத்துவர்கள் பணி புரிய வேண்டிய அங்கு, 3 மருத்துவர்கள் மட்டும் உள்ளதால், மருத்துவமனையில் மருத்துவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டுதான் மருத்துவம் பார்க்கிறார்கள். இருந்தாலும், கடந்த வாரம் பௌலாங்க் எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிதா என்பவர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்ற போது அவருக்கு மருத்துவ உதவி வழங்க அச்சமயம் அங்கு மருத்துவர் இல்லை. ஆனால், திறமை வாய்ந்த ஒரு செவிலித்தாய், அச்சமயம் அங்கு இருந்ததாலும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லாததாலும் பிரச்சினை இல்லாமல் அமிதாவின் பிரசவம் நடந்தது. 


ஆனால் அதன் பின் ஏற்பட்ட, ரத்தப் போக்கு, தனியே தையல் போடக் கூடிய தைரியத்தை அவரிடமிருந்து அபகரித்தே விட்டது.  செய்வது அறியாது திகைத்து நின்ற அவருக்குத் தைரியம் சொன்ன கோபி, அத்துடன் இல்லாமல் அவருடன் சேர்ந்து தைத்து (அவரே தனியாகத் தையல் போட்டதாகவும் சொல்லப்படுகிறது!) எப்படியோ ரத்தப் போக்கை நிறுத்தி, அவரின் உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கிறார். ஆபத்தைத் தவிர்த்து, அமிதாவின் உயிரைக் காப்பாற்றிய கோபியை அப்போது எல்லோரும் பாராட்டினாலும், துப்புரவுத் தொழிலாளியின் இச் செயலுக்கு எதிராக அமிதாவின் வீட்டார்களே மறு நாள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்து விட்டார்கள். அதன்பின், அமிதாவைப் பரிசோதித்த மருத்துவர் கொடுக்கப்பட்ட சிகிச்சையும், இடப்பட்டத் தையலும் சரியாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி அமிதாவின் உறவினர்களிடம் பயப்பட ஒன்றுமில்லை என்று தைரியம் அளித்திருக்கிறார். 

இறையருளால் கிருமித் தொற்று எதுவும் அமிதாவுக்கு ஏற்படாமல் இருந்தால் சரி. தனக்கு எதிரான நடவடிக்கைக்குப் பயந்து கோபியும், செவிலித்தாய் தான் தையலிட்டார் என்றும், தான் அவருக்கு உதவி மட்டுமே செய்தேன் என்றும் சொல்லி இருக்கிறார். எனவே கோபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லைதான்.  ஆனாலும், இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க ஒடிசா மாநில மருத்துவத் துறை தேவையான மருத்துவர்களை அச் சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பி மீண்டும், கோபி இது போல் ஆபத்துக்காத்தானாக மாறி ஒரு பிரசவம் பார்க்கவோ, தையலிடவோ, அறுவைச் சிகிச்சை செய்யவோ வேண்டிய சூழல்கள் ஏற்படாமல் தவிர்ப்பார்கள் என்று நம்புவோம். இது போன்று எத்தனை கிராமங்களோ?! இந்தியா வல்லரசு நாடாகிவிடும்?!

பின் குறிப்பு:  அடுத்த பதிவு ஆவியின் குறும்படத்தில் எங்களின் அனுபவம்.  இன்னும் எழுதி முடிக்காத காரணத்தால் அடுத்த பதிவு.

படங்கள் : இணையம்.

சனி, 28 பிப்ரவரி, 2015

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!, இவ் எழுத்தாளர்களுக்கு!!!.....



Avijit Roy.jpg

அவிஜித் ராய்                            அவரது  மனைவி ரஃபீதா அஹமது பன்னா

இரத்தத்தில் குளித்து, தரையில் விழுந்து கிடக்கும் அவிஜித் ராய், உடலெங்கும் சிதறிய இரத்தத்துடன், உதவிக்காகக் கெஞ்சும் அவரது மனைவி “ரஃபீதா அஹமது பன்னா” – இதைக் கண்டு பதறிப் போகும் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் எண்ணம், “இறைவன் பெயரால் நடத்தப்படும் இது போன்ற கொலைகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒன்று இறைவனைப் பற்றியோ, மதங்களைப் பற்றியோ பேசாமலோ, எழுதாமலோ இருக்க வேண்டும்.  இல்லையேல், அப்படிப் பேசவோ எழுதவோ வேண்டியச் சூழல் வந்தால், பிரச்சினைகள் வராதவிதத்தில் கவனமாகக் கையாண்டு பேசியும், எழுதியும், அவர்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,” என்பதாகத்தான் இருக்கும்.

      பங்களாதேஷில் பிறந்து, அமெரிக்காவின் குடியுரிமையுடன் அங்கு வாழ்ந்து வரும் அவர் பங்களாதேஷில், ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்கெடுக்க வந்த போதுதான் இப்படிக் கொல்லப்பட்டிருக்கிறார்.  புத்தகங்களிலும், பதிவுகளிலும் வந்த அவரது கருத்துக்கள், மதத் தீவிரவாதிகளின் எதிர்ப்பை மட்டுமல்ல, அவர்களது கொலை மிரட்டலையும் தேடித் தந்திருக்கிறது.  அதைப் பொருட்படுத்தாமல், தன் சொந்த நாட்டிற்கு வந்ததால் தான் அவருக்கு இந்தக் கதி.  இதை எல்லாம் காணும் எழுத்தாளர்கள், மேற் சொன்ன படிச் சிந்தித்துத் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கும் அபிஜித்ராய்க்கு ஏற்பட்டது போன்று ஏற்படலாம் எனும் மிரட்டலும் இச்சம்பவத்திற்குப் பின்னணியில் உண்டுதான். ஆனால், எழுத்தாளர்களைக் கொன்றாலும் அவர்களது எழுத்துக்கள் சாகாமல் உயிர் வாழும் என்பதுதானே உண்மை!

Image result for taslima nasreenImage result for humayun azad
 தஸ்லிமா நஸரீன்     ஹுமாயூன்  ஆசாத்  
                                
சுதந்திரமாக எழுதுபவர்களுக்கு, பங்களாதேஷ் வாழத் தகுந்த நாடல்ல என்று தஸ்லிமா நஸ்ரின் உட்பட பல எழுத்தாளர்களும் கூறியிருக்கிறார்கள்.  “முக்தோமன” எனும் வலைத்தளத்தை நடத்தும் அவிஜித், “பிஸ்வாசர் வைரஸ்” (மத நம்பிக்கையின் வைரஸ்) “சூன்யோ பேகே”, “மஹா பிஸ்வா” (சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை நோக்கி) எனும் புத்தகங்களை எழுதி எல்லோரது பாராட்டையும் பெற்றவர்.  ரகமாரி.காம் எனும் இணையதள புத்தகக் கடையிலிருந்து, மத தீவிரவாதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அவரது இவ்விரு புத்தகங்களும் கடந்த வருடம் நீக்கப்பட்டது. கொலை மிரட்டல் இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் அவிஜித் தன் மனைவியுடன் இப்புத்தகக் கண்காட்சிக்கு வந்தது எல்லோருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இது போல் ஒரு புத்தக்க் கண்காட்சியின் போதுதான் பங்களாதேஷின் பிரபல எழுத்தாளர் “ஹுமாயூன் ஆசாதும் தாக்கப்பட்டு உயிரழந்தார். இப்படி எழுத்துச் சுதந்திரம், மதத் தீவிரவாதத்தால் விழுங்கப்படும் நிலை பங்களாதேஷ் போன்ற சில நாடுகளில் இக்காலகட்டத்திலும் ஒழியாமல், காட்டுத் தீ போல் உலகெங்கிலும் பரவிக் கொண்டிருப்பதை நினைக்கையில், எதிர்காலத்தில் எழுத்துலகத்தை இருள் கவ்வி விடுமோ என்ற பயம் வளர்கின்றது. அன்பையும், கருணையையும், பக்தியையும் வளர்க்க வேண்டிய மதம் இப்படி வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்து, கொலைகளில் சிக்கி உயிரழக்கும் இந் நிலை மாற எல்லாம் வல்ல இறைவன் தான் ஒரு வழி காண்பிக்க வேண்டும். 

படங்கள்:நன்றி: கூகுள்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

Kadhal Poyin Kadhal - Short Film By Kovai Aavee and his Team



இப்படத்தினுடனான எங்கள் இனிய அனுபவம் அடுத்த பதிவில்.  இப்படத்தின் இயக்குனர், நண்பர் கோவை ஆவிக்கு எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள் பல, எங்களையும் இதில் பங்கெடுக்க வைத்ததற்கு! 

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

திருநங்கைகள்- இவர்களும் நம்மிடையே வாழ வேண்டியவர்களே!

     

நான் இது வரை மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்தின் போதும் சரி, பிற சமயங்களிலும் சரி, திருநங்கைகளைக் கண்டதுண்டு.  அவர்கள் கைதட்டிப் பணம் பெறுவதையும், அப்படிக் கிடைக்கவில்லை என்றால் ஏசுவதும், பணம் பெறும் வரை நின்று கொண்டு இருப்பதும், ஆண்களின் மீது இடித்தும், வசைபாடியும் பெறுவதைக் கண்டதுண்டு.  இதற்குப் பயந்தே பல ஆண்கள் அவர்கள் வரும் போதே பணத்துடன் தயாராக இருந்துக் கொடுத்துவிட்டுத் தப்பிப்பதையும் பார்த்திருக்கின்றேன். நானும் கொடுத்ததுண்டு.  மனம் யோசித்தது உண்டு இவர்களின் பிழைப்பு ஏன் இப்படியாகிப் போனது என்றும் பல சமயங்களில் இவர்களுக்காக இரக்கப்பட்டதுமுண்டு. எல்லோருமே இவர்களைக் கேலி செய்தோ, இல்லை வசை பாடியோதான் பார்த்திருக்கின்றேன்.  இல்லையேல் இவர்களை ஒரு காட்சிப் பொருள் போல் வேடிக்கைப் பார்ப்பதும் உண்டு.  ஒரு வேளை இவர்களது உடல் மொழியும், நடை உடை பாவனையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.  ஆனால், ஏனோ, எனக்கு இவர்களின் மீது ஒரு தனி கழிவிரக்கம் உண்டு.

      இதுவரை தூர நின்று பார்த்திருந்த திருநங்கைகளிடமிருந்து சற்று வித்தியாசமான பாவனைகளுடன் இருந்த திருநங்கைகளை, எனது இப்போதைய பயணத்தின் போது, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், சென்னை வரவேண்டி ரயிலுக்காகக் காத்திருந்த சமயத்தில், காண நேர்ந்தது.  தாங்களுண்டு, தங்கள் வேலை உண்டு என இவர்கள் இருந்தாலும், அங்கிருந்தோர் எல்லோருமே இவர்களையே உற்று நோக்கிக் கொண்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாலும், எனது பார்வையும், மன நிலையும் அவர்களை அணுகலாமா, எப்படி அணுகுவது என்ற ஒரு சிந்தனையுடன் இருந்ததை அந்த 3 திருநங்கைகளில் ஒருவர் உணர்ந்திருக்க வேண்டும்.  எனது பார்வையும் ஒரு நட்பினை உணர்த்தியதோ என்னவோ, அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவலித்தார்.  அதைப் பார்த்ததும், இதுதான் தருணம் என நான் அவர்களை சமீபத்து உரையாடத் தொடங்கினேன். இதுவே சற்று வித்தியாசமான சூழல் போலும். அங்கிருந்தோர் இப்போது என்னையும் வினோதமாக வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

      திருநங்கைகள் என்று சொல்லப்பட்டாலும், அந்தத் “திரு” என்ற சொல்லுக்கான, ஒரு அர்த்தமாகிய, இந்த சமூகத்தில், உலகில் வாழ வேண்டிய அந்தஸ்து என்பது அவர்களிடம் எந்த வடிவிலும் இல்லை. ஆனால், திரு என்ற சொல்லின் பிரிதொரு அர்த்தம் அவர்களின் முகத்தில் மிகுதியாகவே இருப்பதாகப்பட்டது.  ஆம்!  அவர்கள் அழகாக இருந்தார்கள். இல்லை ஒரு வேளை எனது கண்களுக்கு அப்படித் தோன்றியதாகவும் இருக்கலாம். உரையாடியதில் அவர்கள் மிகவும் நல்ல மனது படைத்தவர்களாகத் தெரிந்தார்கள்.  படித்தவர்கள். அவர்களது உடலமைப்பு, அவர்களை ஆண்கள் என்று பறையடித்தாலும், தங்களைப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்திருந்தார்கள். மிகவும் தன்மையாகப் பேசினார்கள். நல்ல பண்புகளும், இந்த சமூகம் தங்களைப் புறக்கணித்தாலும், சமூகம் பற்றிய நல்ல சிந்தனைகளும், சாதாரண மக்களின் இன்னல்களையும் உணர்ந்தவர்களாகவே தெரிந்தார்கள்.  சமூக அவலங்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். எனது நேரிடையான கேள்விகளுக்குக் கூட எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், கோபப்படாமல், மிகவும் நேர்த்தியாகப் பேசினார்கள்.

      பங்களூரைச் சேர்ந்தவர்கள்.  பிறப்பால் ஆண்களாக இருந்தாலும், சிறுவயது முதலேயே, பெண்களாக வாழவேண்டும் என்ற மனநிலையுடன், தங்களைப் பெண்களாக உருவகப்படுத்திக் கொண்டு வாழ விழைந்ததாகச் சொன்னார்கள்.  மூவரின் குடும்பங்களும் பொருளாதார அடிப்படையில் மிகவும் உயர்ந்தவர்கள். இந்த மூவரில், 12 வருடங்களாக ஒரு திருநங்கையாக வாழ்ந்து வருபவரின் பெற்றோர் இட்ட பெயர் க்ளைஜர், தற்போதைய பெயர் அமீஷா. 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றவர், வீட்டிலிருந்து துரத்தப்பட்டதால் கல்வியைத் தொடரமுடியவில்லை. 8 வருடங்களாக  இன்நிலையில் வாழ்பவர் ராகுல் எனப்படும் ரம்யா.  வீட்டின் ஆதரவு இல்லாதவர்.  பெற்றோரும், சகோதரரும் மிகவும் நல்ல பதவியில் இருப்பவர்கள். பி.காம் படித்திருப்பவர். மிக நன்றாக, தூய்மையான ஆங்கிலத்தில் உரையாடுகிறார். தனது படிப்பிற்கான செலவை தானே ஈட்டிப் படித்தவர். இங்கு “ஈட்டி” எனப்படுவது நிஜத்தில் ஈட்டிதான்.  பணம் ஈட்டப்பட்ட முறை. படிப்பிற்குப் பிறகு, பங்களூரில் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில், ஹெச் ஆராக வேலை செய்திருக்கிறார் ஒரு வருடம். பின்னர் அலுவலகத்தில் சில சலுகைகள் இவருக்கு வழங்கப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட இவர் புறம் தள்ளப்பட்டிருக்கின்றார். தற்போது பெரும்பான்மையான திருநங்கைகள் போல வாழ்க்கை. மூன்றாமவர் பெயர் பரத்.  தற்போது பூமிகா. 5 வருடங்களாக இந்த வாழ்க்கை. படித்திருப்பது +2.  என்னுடன் முழுமையாக உரையாடிவர் ரம்யா.

      படிக்கும் காலத்தில் நடந்த சிலவற்றைச் சொல்லுவதற்கில்லை.  அதை எழுதினால் சில பிரச்சினைகள் வரக்கூடும்.  மதிப்பெண்கள் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு சில தகாத உறவுகள் போன்ற இன்னல்கள் இருந்திருக்கின்றது.  

    இவர்களுக்கு குரு ஒருவர் இருப்பாராம். அவர் இவர்களுக்காக, ஒருவருக்கு 2 லட்சம் செலவழிப்பாராம். இவர்கள் அவருக்கு அதை 4 லட்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம். இவர்கள் மிகவும் அழகாக வேண்டும் என்பதற்காக, 41 நாட்கள் யாரையும் காணாமல், ஒவ்வொரு நாளும் ஒரு திருநங்கை இவர்களுக்கு முதலில் மஞ்சள் அரைத்து உடம்பு முழுவதும் பூசுவார்களாம். பின்னர், 10, 15 அடி தூரத்தில் நின்று கொண்டு, கொதிக்கக் கொதிக்கத் தண்ணீரை இவர்கள் மீது வீசிக் கொட்டுவார்களாம், பிறப்பு உறுப்புகள் உட்பட. இவர்கள் அலறுவார்களாம். அதன் பின் படுக்க வைத்து தூய்மையான சந்தனம் இழைத்து அதை உடம்பு முழுவதும் பூசுவார்களாம்.  வேப்பிலையால் உடம்பு முழுவதும் வருடுவார்களாம்.  இப்படி 41 நாட்கள் செய்த பிறகு உடம்பிலுள்ள முடிகள் எல்லாம் போய்விடுமாம்.  41 நாட்கள் முடியும் அன்று, இவர்களை பாலூற்றிக் குளிக்க வைப்பார்களாம். இதற்குப் பெயர் ஜல்சா. 

    அன்று வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு அலங்காரம் செய்வது போல் இவர்களுக்கும், அணிகலன்கள், மெட்டி, கொலுசு அணிவித்து, இவர்களுக்குச் சேவை செய்த திருநங்கைகளுக்கு தங்கத்தில் சிறியதாக ஏதாவது பரிசு அளிப்பாராம் குரு.  அதைப் போல் அந்த சேவை செய்த திருநங்கைகள் இவர்களுக்குப் பரிசு அளிப்பார்களாம். பின்னர் அன்று செருப்பு தைப்பவர் ஒருவரை அழைத்து வந்து இவர்களுடன் முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடக்குமாம்.  இதற்கு என்றே செருப்பு தைப்பவர்கள் குழு இருக்கின்றதாம்.  வருபவர் இவர்களுக்கு தாலி கட்டி விட்டு அன்று ஒரு இரவு தங்கிவிட்டுச் சென்றுவிடுவாராம்.  பின்னர் இவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாராம்.  ஆனால் அவரது செருப்பு மட்டும் நினைவாக இவர்களோடு விட்டுச் செல்வாராம்.  இதற்குப் பெயர் தந்தா என்பதாம். இன் நிகழ்வுகளுடன் இவர்களுக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகள் நடத்துவதற்கும் சேர்த்து குரு 2 லட்சம் செலவழிப்பாராம்.  இவர்கள் அவர்க்கு அதை 4 லட்சமாகத் திருப்பித் தரவேண்டுமாம். இன் நிகழ்வுக்குப் பின்னர் அவர்கள் ஒவ்வொரு ஆணுடனும் இரவுகள் கழித்து பணம் சம்பாதிக்கலாமாம். மனதளவில் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். தங்களை பெற்றோரும், இந்த சமூகமும் ஒதுக்குகின்றதே என்ற ஒரு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள்.

      இவர்களிடம் நான் கேட்ட கேள்வி, ஏன் இப்படிப்பட்ட ஒரு அவல நிலை? எதற்காக இப்படி வாழ வேண்டும்?  இப்படித்தான் வாழ வேண்டுமா?  ஏன் உங்களுக்கு இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவந்து, உங்கள் படிப்பை உபயோகப்படுத்தி உங்கள் காலில் நிற்க முயற்சிக்கலாமே. 

“எங்களுக்கும் ஆசை இருக்கின்றதுதான் மேடம்.  சொல்லப் போனால், நான் நன்றாக ஆங்கில வகுப்புகள் எடுப்பேன்.  நடன வகுப்புகள் எடுப்போம்.  ஆனால், எங்களை யாரும் சேர்த்துக் கொள்வதில்லை. எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.  நாங்கள் எதிர்ப்பார்ப்பது எங்களிடமும் அன்பு செலுத்தும் ஆண் துணை கிடைப்பாரா என்றுதான்” என்றார்.  தற்போது அவர்களை பங்களூரில், செல்வந்தர் ஒருவர் – ஷிவானி – அவரும் இவர்களைப் போன்றவர்தானாம்.  ஆனால், ஆணுடைதான் அணிந்திருப்பாராம் - இவர்களைத் தத்தெடுத்து, கவனித்துக் கொள்கின்றாராம்.  ஆனால், இவர்கள் பிச்சை எடுத்துத்தான் பணம் ஈட்டுகின்றனராம். “மேடம் நீங்கள் இதை எழுதுவதினால், எங்களுக்கு யாராவது ஏதாவது வேலை கொடுப்பார்களா?  எங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமா?” என்று கேட்டார். 

      “நான் வேலை வாங்கித் தரமுடியும் என்று என்னால் எந்த உறுதியும் கொடுக்க முடியாது.  ஏனென்றால், நான் அந்த அளவிலான நிலையில் இல்லை. ஏதோ எழுதுபவள். இதையும் எழுதுகின்றேன்.  யாராவது இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு வேலை தர முன்வந்தால், நான் மிகவும் மகிழ்வேன்” என்றேன். அவர்களின் விருப்பம் நிறைவேறினால் மிகவும் நன்று.

      நான் அவர்களிடம் சொன்னது இதுதான். “நீங்கள் பெண்களாக பாவித்து நடந்து கொள்வதிலோ, உடை அணிவதிலோ தவறு இல்லை. ஆனால், அதையும், இன்னும், மிகவும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அளவு அணிந்து கொண்டு, பிறர் உங்களைப் பார்த்தால் உயர்வாக நினைக்கும் அளவு உங்களை மாற்றிக் கொண்டு, உங்கள் திறமையை வெளிக் கொண்டுவந்து உங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? அப்படிச் செய்து பாருங்கள், உங்கள் வேலை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும். முயன்றுதான் பாருங்களேன்.  இப்படிக்கு ரோஸ் எனும் நிகழ்ச்சியை நடத்திய ரோஸ், மிகப் புகழ் வாய்ந்த நடனமணியான நர்த்தகியைப் போல ஒரு உயர்வான வாழ்க்கையைத் தேடிக் கொள்ளலாமே.”

      “கண்டிப்பாக மேடம், நீங்கள் சொல்லுவது போல முயற்சிக்கின்றோம். நீங்கள் இப்படி, எங்களையும் மதித்து, அன்புடனும், அக்கறையுடனும் பேசுவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்களுடன் தொடர்பில் இருங்கள்.  அவ்வப்போது இது போன்று எங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லுங்கள் மேடம்”  என்று சொல்லித் தனது அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

      இவர்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தினரே! இவர்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டும். வாழ உரிமை உள்ளவர்களே! நாம் இவர்களைப் புறக்கணிக்காமல், இவர்களையும் ஏற்றுக் கொண்டு, இவர்களை ஆதரிக்கும் விதத்தில், அவர்களது திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அளித்து ஒரு சமூக அந்தஸ்து அளிக்கலாமே. அரசும் சில நல்ல திட்டங்கள் வகுத்திருக்கின்றதுதான்.  ஆனால், அதிகம் பேசபடுவதில்லை. மறுவாழ்வு கொடுக்கும் விதத்தில், மனதளவில் பயிற்சி கொடுத்து, தாழ்வு மனப்பான்மையை அகற்றி வேலை, கல்வி, வேலை வாய்ப்புகளும் கொடுத்து, தன்னம்பிக்கையும், தன் காலில் நிற்கும் அளவிற்கான வாழ்வியல் சூழலை உருவாக்கி அவர்களையும் நம்மிடையே வாழ வழிவகுக்கலாமே. 

-கீதா