வியாழன், 23 அக்டோபர், 2014

அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்........அபஸ்வரமாகியதே! - 2

(பாட்டியிடம் தைரியமாகப் பேசும் ஒரே நபர் நான், அவர்கள் முன்னால் சென்று “எனக்குப் பாட்டுக் கற்க வேண்டும். அதுவும் திரு. சேஷகோபாலனிடம்” என்றேன். பாட்டியின் பதில் என்னவாக இருந்திருக்கும்?.....தொடரும்.....
 அபஸ்வரமாகிப் போன எனது அபூர்வ ராகம்)  தொடர்ச்சி


"என்ன?  அடேங்கப்பா ஆசையைப் பாரு!  சேஷகோபாலனாமே! நல்ல ஆசை! அதுவும் ஞானசூன்யமான உனக்கு! முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டானாம்! நல்லா கோட்டை  கட்டற" என்று உங்களுக்குத் தோன்றியதா?!  உங்களுக்குத் தோன்றியதோ இல்லையோ ஆனால் அப்படித்தான், என்னைச் சுற்றியுள்ளவர்கள் சொன்னார்கள் அன்று! ஆனால் பாட்டியோ....

“பாட்டு ஒண்ணும் சோறு போடாது!  ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கற வழியப் பாரு! வேலை இல்லைனா வரதட்சணை நிறைய கொடுத்துக் கல்யாணம் பண்ணனும்! அதுக்கெல்லாம் வழி இல்ல. இந்த வீட்டுல இனிமே யாராவது பாட்டு, கூத்துனு வந்தேள்னா...நடக்கறதே வேற.  பாட்டு, கூத்துனு சொல்லறவா வீட்டை விட்டு வெளிலதான் போணும்”

பாட்டி, மாமாக்களில் மூன்றாவது மாமாவைத் தவிர மற்றவர்கள், என் அம்மா இவர்களுக்குச் சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டார்கள்! சங்கீதம் எல்லாம் வெறும் வெத்து வேட்டு!  வேலைக்காகாது என்ற எண்ணம்!


இப்போது, “பாட்டு சோறு போடாது” என்று அன்று மொழியப்பட்ட அந்த வார்த்தைகளை நினைக்கும் போது, இப்போது ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் தான் நினைவிற்கு வருகின்றது! அற்றைத் திங்களில் பிறந்த நான் இற்றைத் திங்களில் பிறந்திருக்க மாட்டேனோ என்று தோன்றியது உண்டு! சுதாரகுநாதன், நித்யஸ்ரீ, அனுராதா ஸ்ரீராம் ஏன் இப்போது வந்த மதுமிதாவிற்கும் பாட்டுதான் சோறு போடுகின்றது! என் பாட்டுக் கனவுகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு சிறைக் கைதியானது!  ஆனால், யாருக்குமே தெரியாமல் எனக்குச் சங்கீதம் கற்றுக் கொடுத்தவர்கள், யாருக்குமே கிடைத்தற்கரிய பெரிய பெரிய இசையுலக ஜாம்பவான்கள்! டி.கே.ஜெ. (டி.கே.ஜெயராமன்), டி.கே.பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, எம் எல் வசந்தகுமாரி, மகாரஜபுரம் சந்தானம், மதுரை மணி ஐயர், சேஷகோபாலன், வயலின் மேதைகள், எம் எஸ் கோபாலகிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், வீணை சிட்டிபாபு, பாலசந்தர், போன்றோர், மற்றும் பலர்.  நன்றி எனது மூன்றாவது மாமாவிற்கு. இந்த நன்றி அவர் காதில் விழுமோ தெரியவில்லை!  அவர் இருக்கும் உலகம் சுஜாதா சொல்லியது போல் நித்ய அகண்டநாம சங்கீர்த்தனம் பாடும் உலகம்! அவர் வாங்கி வைத்தக் காசெட்டுகளை அவருக்குத் தெரியாமல், மற்றவர்களுக்கும் தெரியாமல், போட்டுக் கேட்டுக் கற்றதுதான்.  ஏகலைவனுக்குத் துரோணாச்சாரியார் மட்டும்தான் குரு என்றால், இந்த ஏகலைவிக்கு நேரில் தெரியாத சங்கீத துரோணாச்சாரியார்கள் பலர்!

எனக்கு விவரமறிந்து எனது முதல் குரு என்றால் எனது மூன்றாவது மாமாவின் மனைவி லக்ஷ்மி மாமி. மாமா திருவனந்தபுரத்தில் கணித ஆசிரியராக வேலை செய்துவந்தார்.  மாமி பள்ளியில் பாட்டு டீச்சர்.  திருவனந்தபுரத்தில் ம்யூசிக் அகடமியில் 7 வருடங்கள் பாட்டு பயின்றவர். துணைப்பாடமாக வீணை பயின்றவர்.  இவரது காலத்தில்தான் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்கள் அந்த அகடாமியின் முதல்வராக இருந்தவர். கேரளத் திரையுலகில் இசையமைப்பாளராகக் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி ராதாகிருஷ்ணன் அவர்கள் மாமியின் கூடப் பயின்றவர். ஏசுதாஸ் அவர்கள் ஜூனியர் இன்னும் பல அன்றைய விஐபிக்கள்! மாமியின் கனவும் கூண்டுக் கிளியானது எங்கள் வீட்டிற்கு மருமகள் ஆனதால்.

பாட்டி கோயிலுக்குச் செல்லும் சமயம்தான் மாமியின் சாதகம் வீட்டின் பூஜை அறையின் முன். மாமி கோயிலில் ஸ்வாமி சன்னிதியில் பாடி யாராவது வீட்டிற்கு வருபவர் மாமியைப் புகழ்ந்தால், பாட்டியிடமிருந்து வேறு வகையான ஸ்வரங்கள் வருமாதலால் அதற்கும் அவ்வப்போது பூட்டு போடப்படும்.  நான் பள்ளி மாணவியாக இருந்த போது மாமியிடம் கற்றுக் கொள்ளவில்லை. மாமி மாதத்தில் ஒரு முறைதான் அதுவும் சனி ஞாயிறில்தான் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வந்ததால். இப்படி வார விடுமுறை, கோடை விருமுறைகளில் வரும் போது, மாமி பாடினால் ராகம் கண்டுபிடித்து ஆலாபனை செய்வதுண்டு.  அப்போது மாமி சொல்லுவார்,

“கீதா உனக்கு அபார சங்கீத ஞானம்டி. நீ வேற ஆத்துல பொறந்திருக்கணும்டி....பகவான் ஏனோ உன்னை இந்த ஆத்துல பொறக்க வைச்சுட்டார். என்னையும் இந்த ஆத்துல வாக்கப்பட வைச்சுட்டார்” என்று ஆதங்கப் படுவார்.  அவர் மேடை ஏறியிருந்தால் இன்று சங்கீத உலகில் அருணாசாயிராம் போன்று (லேட் என்ட்ரி) கொடி கட்டிப் பறந்திருப்பார். மாமிக்கும் கனமான குரல்!  ஒலிபெருக்கி வேண்டவே வேண்டாம்.

எனது பாடாந்திரம் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் போதுதான் ஆரம்பித்தது.  அதுவும் பாட்டி வீட்டில் இல்லாத நேரம் பார்த்துதான்.  மாமி என்னை அடிப்படை ஸ்வர வரிசகளை மனம் செய்து, பயிற்சி செய்யச் சொல்லுவார்.  ஆனால், ஏனோ என்னைத் தாட்டு வரிசை மட்டும் போட்டு வாங்கியது! மனனம் செய்யவும், பயிற்சி செய்யவும் பிடிவாதம் பிடித்தது! நானும் நைசாக அதை விட்டுவிட்டு மாமியிடம் சின்ன சின்ன பாட்டுகள் கற்றுத் தரும்படி சொல்லுவேன். சின்ன வயதில் கொலுவில் பாடிச் சுண்டல் வாங்கிப் பழக்கம் ஆனதாலோ என்னவோ!  மாமியும் என் குரங்காட்டி வித்தைக்கு ஆடுவார்!  சரி என்று பாட்டு சொல்லித் தருவார். ஆனால், அதிலும் எனக்குக் கொஞ்சம் கஷ்டம்.



அவர் பாடுவதைக் கேட்டு மனதில் ரெக்கார்ட் செய்து நிறுத்தி, அதைத் திரும்பவும் நான் மனதில் அவர் பாடுவதைப் போல ஓடவிட்டு, நான் அசை போட்டுவிட்டு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரைத் திரும்பவும் பாடச் சொல்லிக் கற்பேனே தவிர, அவர் பாடப் பாட நான் அதைத் திரும்பப் பாடிக் கற்றது இல்லை!  ஏனோ எனக்கு அதுவும் வரவில்லை! காசெட் கேட்டு, கேட்டுக் கற்றது பழக்கமானதினாலோ என்னவோ, இந்த மாதிரியானக் கற்றல் வரவில்லை!  காசெட்டைப் போட்டுப் போட்டுத் தேய்ந்து போன ரெக்கார்ட் ஆக்கிக் கற்கலாம் ஆனால் மாமியின் தொண்டையை அப்படி வருத்த முடியுமா?! ஆனால் மாமியின் தொண்டையையும் அப்படித் தேய்ந்த ரெக்கார்டாக ஆக்கியது உண்டு!  எனது தொண்டையும் ஆனது உண்டு!  ஒரு சங்கதி சரியாக வரும் வரை! ஞான சூன்யம் என்று என்னையயே நான் திட்டிக் கொண்டு என் தலையில் குட்டிக் கொண்டதும் உண்டு!  நான் சொல்லிக் கொண்டது எனக்குச் சங்கதி வருவதற்குத் தாமதம் ஆகும் போது! தொண்டையை ஒழுங்காகக் காப்பாற்றி, பல தியாகங்கள் செய்தால் தானே! ஆனால், என்னை சங்கீதம் அறிந்த உறவினர்கள் பலர் “ஞான சூன்யம்” என்று சொல்லிப் பாட்டுக் கற்றுத் தர தயங்கினர்! என்னை ஏன் ஞான சூன்யம்? நாளை தொடரும்! 

படங்கள்:  நன்றி கூகுள்!

செவ்வாய், 21 அக்டோபர், 2014

அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்........அபஸ்வரமாகியதே!


தோழர்கள் மதுவும், விசு (visuawesome)  அவர்களும் அவ்வப்போது இனிமையான ஆங்கிலப்பாடல்களைப் பகிர்வதும்,  மது அவர்கள் ஒரு சில பதிவுகள் முன்பு சிறு வயதிலேயே ராகங்களைக் கண்டுபிடிக்கும் அறிவு ஜீவியான ஒரு சிறு குழந்தையின் காணொளியைப் பதிவிடவும், வெங்கட் ஜி பகிரும் அழகான பாடல்களாலும் எனக்குக் கொஞ்சம் சங்கீத ஜுரம் பற்றிக் கொண்டதென்னவோ உண்மை! நண்பர் ஸ்ரீராம், திங்களன்று, சென்னை சபாக்களில்  கச்சேரி பற்றியும், காண்டீன் சாப்பாடு பற்றியும் எழுதியதும், சென்னை டிசம்பர் சங்கீத சீசன் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையிலும் எனக்குத் தொற்றிய சாதாரண சங்கீத ஜுரம் வைரல் சங்கீத ஜுரமாக மாறி இதோ, காலை, மாலை வேளைகளில் அதிகரித்து, வீடே அல்லோகலப்படுகின்றது, எனது 5 கட்டைக் குரலாலும், ச்ருதிப் பெட்டியாலும்!  என்ன வருத்தம் என்றால் 51/2 க் கட்டைக் குரல் இப்போது சாதகம் இல்லாததால் 5 கட்டையாகிவிட்டதே என்று! பின்னே, தொடர்ந்து வந்த அசுர சாதகம் பல வருடங்களுக்கு முன்பு நின்று போக, இப்போதெல்லாம், வருஷத்துக்கு ஒரு முறை தான், அதுவும் இந்த டிசம்பர் சீசன் வரும் போதுதான் இந்த ஜுரம் வருவதால், வயதும் ஏறி வருவதால் கட்டைக் குரலாகத்தானே மாறும்! வீட்டில் யாரும் இல்லாத போதுதான் இந்த ஜுரம் வரும்! வீட்டில் கணவரோ, எனது தந்தையோ இருந்தால் என் குரல் ஆமை/நத்தை ஓட்டினுள் சுருங்குவது போல் உள்ளே போய்விடும்!  கணவர் சங்கீதம் என்றால், அல்காரிதம் பற்றிப் பேசுவார்! வெள்ளைக் கொடிதான்!  “எல்லோரும் இன்புற்றிருக்கவே அல்லாமல்......”

அப்படி யாரும் வீட்டில் இல்லாத போது, எனது இந்த சாதகக் குரல் கீழ் ஃப்ளாட்டுகளில் தேனாய் ஒலித்தது போலும்!

“எந்தா கீதே! இ வருஷம் டிசம்பரில் கீதே எவ்விடெங்கிலும் கச்சேரி செய்யாம் போகுனுண்டோ”

என்று கீழ் வீட்டு ஆண்டியும், வயனாட்டுப் பெண்ணும், மேல் வீட்டு ப்ரபையும் கேட்டார்களே ஒரு கேள்வி! என் மானம் என் பாட்டைப் போல பறந்தது!  பரவாயில்லை அதாவது! எனது நாகர்கோவில் தோழி என்னைக் கூப்பிட்ட போது, நான் சஹானாவை சுவரபேதம் செய்யாமல்??!! ஆலாபனை செய்து கொண்டே ஹலோ கூடச் சொல்லாமல், ஏதோ சங்கீதத் தாரகை போன்று, அத்தனை அசுர சாதகமாகப் பாடிக் கொண்டே எடுத்ததும்,

“ஹை!  அக்கா!  சஹானா? சூப்பர்!  கச்சேரி பண்ணப் போறீங்களா என்ன?” என்றதும் எனக்கு ஒரு புறம் சந்தோஷம்.  பின்னே நான் பாடியதைச் சரியாகச் சொல்லிவிட்டாளே! “யார் மனசுல யாரு” என்பதைப் போல் நான் சஹானா என்று நினைத்துப் பாடியது அவள் மனதிலும் சஹானா என்று தோன்றியதே! மறுபுறம், எல்லோரும் நான் வாய் திறந்தாலே கச்சேரியா என்று கேட்கிறார்களே என்ற வருத்தம்! ஏன் வருத்தம்?  எனது சங்கீத ஆசை நிறைவேறாமல் போனதற்கு!  அந்தத் தோழி என்னை அழைத்ததற்குக் காரணம், அவள் சுசீந்தரம் கோயிலில் ஒரு மணி நேரக் கச்சேரி செய்வதற்கு, என்னென்னன பாட்டுகள் தேர்வு செய்யலாம் என்றும், ராகங்கள், மெயின் பாட்டு, துக்கடா என்று ஒரு லிஸ்ட் கேட்டுத்தான்!

இப்படித்தான், என் சங்கீத அனுபவம், இலங்கை, கொழும்புவில் இருந்த போது, என்னை வளர்த்த என் பாட்டி (அப்பாவின் அம்மா) அத்தைகளின் மூலம் தொடங்கியது மிகச் சிறு வயதில்! பயிற்சி என்றால் பயிற்சி எல்லாம் இல்லை! வெறும் கேள்வி ஞானம்தான்.  அவர்கள் எல்லோரும் அங்கு கொலு சீசனில் பாட்டுப் பாடிச் சுண்டல் பெற வேண்டி சாதகம் செய்த போது, காதால் கேட்டு நான் கற்றுக் கொண்ட முதல் பாடல், சாரமதி ராகத்தில் அமைந்த “அருள வேண்டும் தாயே”!  சிறு வயதிலேயே, அதாவது 4 வயதிலேயே இந்தப் பாடலைப் பாடியதால் எனக்கு கை நிறைய சுண்டலும், மடி நிறைய சாக்கலேட்டுகளும், பரிசுகளும் கிடைத்ததால், தேய்ந்த ரெக்கார்ட் போல் இந்தப் பாடல் மட்டுமே எல்லா இடங்களிலும்! 3 ஆம் வகுப்பு  வரை கொழும்பு வாழ்க்கை.  1 ஆம் வகுப்பு படித்த போது, அங்கு வானொலியில் மிகவும் பிரபலமாக இருந்த, திரு. மயில்வாகனன் மற்றும் மறைந்த திருமதி ராஜேஸ்வரி சண்முகம், அவர்களின் முன்னிலையில், அவர்கள் மடியில் அமர்ந்து, கதை சொல்லிப், பாட்டுப் பாடி வானொலியில் பதிவானது இன்னும் மறக்க முடியாத அனுபவம்.

கொழும்புவிலிருந்து நாகர்கோவிலுக்குப் புலம் பெயர, எனது 4 ஆம் வகுப்பு அங்கு தொடங்கியது! புஷ்பமடம் எனும் வீட்டில் வாசம். (சேட்டைக்கார அண்ணா, இந்த புஷ்பமடம் உங்களுக்குத் தெரியுமா? 70களில், நீங்கள் இருந்த வடிவீஸ்வரத்தின் முன் பகுதி, இடர்தீர்த்தப் பெருமாள் கோயில் பக்கம்!) அப்போது எனக்குப் பாட்டு நன்றாக வருகின்றது என்ற ஒரு கற்பனையான எண்ணத்தில் எனது பாட்டியும், அம்மாவும் பாட்டுக் கற்பிக்க, தண்டபாணி வாத்தியாரை ஏற்பாடு செய்ய, தினமும் மாலையில் அவர் சரியான நேரத்திற்குத் திண்ணையில் ஹார்மோனியப் பெட்டியுடன் ஆஜர்!  ஆனால், சிஷ்யை? குருதட்சிணை கொடுத்து ஸ...ப...ஸ பாடியதோடு சரி! பாட்டியும், அம்மாவும் வீட்டைச் சுற்றி ஓடுவார்கள் என்னைத் தேடி! நானோ விடு ஜீட்! ஹைட் அண்ட் சீக் தான்! பாவம்! தண்டபாணி வாத்தியார் தண்டமாக இல்லாமல், சங்கீதத்திற்கேத் தண்டம் சமர்ப்பிக்கும் வகையில், மிகவும் நேர்மையாக நோட்டில் ஸரளி வரிசையிலிருந்து, கீர்த்தனம் வரை எழுதி, கீர்த்தனம் வரை வந்ததாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவர்தான் பாடிக் கொண்டிருப்பார். சரச சாம தானா....என்று!  நானோ இந்த சரச சாம தான பேத தண்டத்திற்கு மசிபவளாக இல்லாமல், காதில் வாங்கியதோடு சரி!  ஆனால், வாத்தியாருக்கு நல்ல சாதகம், பயிற்சி எனலாம்! என்னால்! 

பின்னர் ஏனோ என் அம்மாவிற்கு, என் அப்பாவின் அம்மாவின் இந்தப் பாட்டு, நடனக் கலைகள்  எனக்குக் கற்பித்து வளர்ப்பது பிடிக்காமல், அவரது அம்மாவின் வளர்ப்பில், அவரது சகோதரர்களின் குழந்தைகள் படிப்பு மட்டுமே போதிக்கப்பட்டு வளர்க்கப்படுவதுதான் சரி என்று தீர்மானித்து என்னை அந்த மிலிட்டரி வாழ்க்கைக்கு மாற்றிச் சென்றார்.  7 ஆம் வகுப்பிலிருந்து நாகர்கோவிலிலேயே அம்மாவின் அம்மா வீட்டில், கிராம வாழ்க்கை! கிராம வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் மிலிட்டரி வாழ்க்கைதான் பிடிக்கவில்லை! நான் சங்கீதம் கற்கவில்லையே தவிர என் காதுகளில் அது விழுந்து கொண்டுதான் இருந்தது.  கோயில் கச்சேரிகள், வானொலி என்று! பாட்டிக்கும், மாமாக்களுக்கும், அம்மாவிற்கும் தெரியாமல் என் அப்பா வானொலியில் சங்கீதம் கேட்டதாலும்! அப்பாவுக்கு அபார ஞானம் உண்டு!  ஆலாபனை செய்யும் அளவு! ஆனால், பயிற்சி கிடையாது!

இப்படியாகப் போன எனது வாழ்வில் 9 ஆம் வகுப்பு வந்த போது, கோயில் திருவிழாவில், திரு சேஷ கோபாலன் அவர்கள் சங்கீத உலகில் வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயத்தில், அவரது கச்சேரி! எங்களுக்குத் தூரத்துச் சொந்தம் என்றும் சொல்லுவதுண்டு. எங்கள் ஊர் கோயிலில் தான் அவரது முதல் பொதுக் கச்சேரி என்றும் சொன்னார்கள். ஆனால், அது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை! திரு. சந்திரசேகரன் அவர்களும், அவரது மகள் பாரதியும் வயலின். அவர்கள் இருவரும் தனியாக வயலின் கச்சேரி செய்தார்கள் மற்றொரு நாள். இவர்கள் எல்லோருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு! எனவே, நான் கச்சேரிக்கு ஆஜர்! அவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் ஆதலால்!



கச்சேரி செய்பவர் எங்களுக்குச் சொந்தம், எங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறார் என்று அங்கு வந்தவர்களிடம் எல்லாம் பெருமை பீற்றிக் கொண்டே, மணலில் கீச்சு, கீச்சுத் தாம்பாளம் விளையாடிக் கொண்டு கச்சேரி கேட்கவும், முதன் முதலாக என்னுள் மறைந்து, உறைந்து இருந்த அந்த சங்கீத உணர்வை, சேஷுவின் குரலும், அவரது அபார சங்கீத ஞானமும், ஸ்வரக் கோர்வைகளும், சந்திரசேகர் அவர்களின் உற்சாகமான வயலின் வாசிப்பும், அவர் இடையிடையே மிகவும் ரசித்து, லயித்துச் சொல்லும் சபாஷ் போன்றவையும், உருக்கி மேலெழச் செய்தது!  அன்றுதான் முதன் முதலாக நான் மிகவும் வருந்தியது! எனது அப்பாவின் அம்மா, அத்தைகள், தண்டபாணி வாத்தியார் ஆகியோர் எனக்குக் கற்பிக்க எடுத்துக் கொண்ட அந்த முயற்சியை நான் வீணாக்கி விட்டேனே/னோ என்று! கிராமத்திற்கே கமாண்டர், இந்திராகாந்தியாக இருந்த என் பாட்டியிடம் பேசுவதற்கே எல்லோரும், வீட்டில் உள்ளவர் உட்பட அஞ்சிய போது, பாட்டியிடம் தைரியமாகப் பேசும் ஒரே நபர் நான், அவர்கள் முன்னால் சென்று “எனக்குப் பாட்டுக் கற்க வேண்டும். அதுவும் திரு. சேஷகோபாலனிடம்” என்றேன். பாட்டியின் பதில் என்னவாக இருந்திருக்கும்?...

.நாளை .தொடரும்....... அபஸ்வரமாகிப் போன எனது அபூர்வ ராகம்!!

-கீதா 

படங்கள் - நன்றி கூகுள்.

அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

-துளசிதரன்-கீதா

வியாழன், 16 அக்டோபர், 2014

எங்களுக்கும் காலம் வந்தது......காலம் வந்ததும் வாழ்வும் வந்தது!!

       
பால் கறந்து விற்பதற்காக கழுதைகளுடன் திருச்சி தெருக்களில் சுற்றும் நாடோடிக் கூட்டம்


    “பொதி சுமக்கும் கழுதை”, “அறிவு கெட்டக் கழுதை”, “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?”, “கழுதை கெட்டால் குட்டிச் சுவரு”  என்றெல்லாம் கழுதைகளை ஏளனமாகப் பேசி, ஒரு காலத்தில் எள்ளி நகையாடிய பலரும், இப்போது, ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில், நெல்லை, திருச்சி, கடலூர், விருத்தாச்சலம், போன்ற இடங்களிலும், ஏன் சென்னையிலும் கூட கழுதையின் பால் வேண்டி அலைகின்றார்களாம். கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் கழுதைப்பால் வேண்டி அதிகாலை 5 மணிக்கு 100/200 ருபாய் (ஒரு லிட்டர் ரூ 200, ரூ 300, 100மில்லி பால் ரூ 20) பணத்தையும், பாத்திரத்தையும் கையில் பிடித்துக் கொண்டு கழுதையின் வரவுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றார்களாம்.  காலை, மாலை இரு வேளைகளிலும் கிராக்கியாம்!


   என் சிறு வயதில், கிராமத்தில், துணி மூட்டைகளைச் சுமந்து செல்லும் கழுதைகளைக் கண்டிருக்கின்றேன். பள்ளிக்குச் செல்லும் போதும், திரும்ப வரும்போதும் காது செவிடாகும் விதம் கத்தும் (முன் அல்லது பின் கால்கள் கட்டப்பட்ட) கழுதைகளைக் கண்டிருக்கின்றேன்.  மாடுகளுக்கு அருகே சென்றால் கொம்பால் குத்தும் என்பதால், மாடுகளைக் கண்டால் தூர விலகுவேன். அது போல கழுதைகளுக்கு அருகே சென்றால் பின் கால்களால் உதைக்கும் என்று சொல்லிக் கேட்டதால், கழுதைகளின் பக்கமே சென்றதில்லை.


ஆனால், கழுதைகளைக் காணும் போது ஏதோ ஒரு அருவறுப்பு.  அதன் முகத்தைப் பார்த்தால் எப்போதும் ஒரு சோக மயம். (இந்த இடுகையை நான் கீதாவிடம் டிக்டேட் செய்யும் போது, இப்படி நான் கழுதையைப் பற்றிச் சொன்னவுடன் கீதாவுக்கு வந்ததே கோபம். நான், “கீழே வரும் வரிகளைப் பார்த்துவிட்டுச் சொல்” என்பதைக் காதில் வாங்காமலேயே என்னுடன் மோதாத குறைதான்.....அதெப்படி கழுதையை இழிவாகச் சொல்லுவாய் என்று!....கீதாவின் மகன் ஆதித்யா கேட்டிருந்தால் கண்டிப்பாகச் சண்டைக்கே வந்திருப்பான். கீதாவும், 'ஆதித்யாவிடம் போட்டுக் கொடுக்கின்றேன்' என்ற வசனம் வேறு! கீதாவிடமிருந்து சூடான பதில் உறுதி!  ஆதியும் அங்கு, அங்கிள் ஓவரா போறீங்க என்று சொல்லக்கூடும்!)  மற்ற மிருகங்களைப் போல் சுறு சுறுப்பு இல்லாத ஒரு மிருகம் கழுதை என்பதால்தானோ என்னவோ, ஆசிரியர்களும், படிக்காத, சுறுசுறுப்பு இல்லாத மாணவர்களைக் கழுதை என்று சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்கள் போல் தெரிகின்றது. ஆனால், உண்மையில் கழுதைகள் மிகவும் புத்திசாலியானவை, மட்டுமல்ல கழுதைக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம். கழுதை பிடிவாதம் மிக்கவை.  அதை எளிதாகப் பயமுறுத்த முடியாது. எச்சரிக்கை உணர்வுமிக்கவை என்பதுதான் உண்மை!  ஒரு முறை சபரிமலை சென்றபோதுதான், கழுதைகளின் உழைப்பு எத்தனைப் பாராட்டிற்குரியது என்பதை உணர்ந்தேன். (ஹப்பாடா, கீதாவுக்கு இதைக் கேட்டதும் மகிழ்ச்சி! ஆதித்யாவும் இதை வாசிக்கும் போது மிகவும் மகிழ்வான்!).

பம்பையிலிருந்து எல்லாப் பொருட்களையும் சில வருடங்களுக்கு முன்பு வரை சபரி மலைக்கு சுமந்து சென்றவைகள் கழுதைகள் தான்.  ஆனால், யாருமே கழுதைகளின் உழைப்பைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், “மாடாய் உழைக்கிறான்” என்பவர்கள், “நீயெல்லாம் கழுதை மாதிரி பொதி சுமக்கத்தான் லாயக்கு” என்று, ஈவு இரக்கமின்றியும், சிந்திக்காமலும் சொல்கின்றார்கள்.  இருப்பினும், சிலர் கழுதைகளின் இந்தத் துயரத்தை புரிந்து கொண்டதால்தானோ என்னவோ கழுதைகளுக்காக வாதிட்டு, சபரி மலை ஏறும் கழுதைகளை அந்தக் கடினமான பணியில் இருந்துக் காப்பாற்றி இருக்கின்றார்கள். இப்போது கழுதைகளுக்குப் பதிலாக சபரி மலைக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல, ட்ராக்டர்கள் உபயோகிக்கப்படுகின்றன. 


அப்படி வேலை வாய்ப்பு இழந்த கழுதைகளில் பெண் கழுதைகளுக்கு நல்ல காலம் பிறந்திருக்கின்றது. மருத்துவ குணம் உள்ள கழுதைப் பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நல்லது என்ற உண்மை திடீரென எல்லோருக்கும் தெரிய வந்தது தான் காரணம். உலகப் பேரழகி  ஆன கிளியோபாட்ரா கழுதைப் பாலில்தான் குளிப்பாராம்.  கழுதைப் பால் சொறி, சிரங்கு, பொடுகு, தேமல், இருமல், சளி, மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு வியாதிகள் வராமல் தடுக்கும் என்றும், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வயிறு மந்தம், சூடு, ஜுரம், சளி, இருமல், ஆஸ்துமா போன்ற வியாதிகள் கழுதைப் பாலால் குணமாகும். பிறந்த குழந்தைக்கு ஒரு பாலாடை கழுதைப் பால் கொடுத்தால் அதன் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்று சொல்லப்படுவதாலும், நம்பப்படுவதாலும் அது பிரபலமாகியுள்ளது.



கழுதைப்பால் கறந்தவுடன் ஒரு நிமிடத்திற்குள் குடித்துவிட வேண்டுமாம்.  அதனால்தானோ என்னவோ,  கழுதைப் பால் என்று சொல்லி ஏதேனும் பாலைக் குடிக்க விரும்பாத, ஏமாறத் தயாராக இல்லாதவர்கள் அதிகாலை 5 மணிக்குக் கையில் பணம் மற்றும் பாத்திரத்துடன், தன் கண் முன்னால் கழுதையைக் கொண்டுவந்து நிறுத்திப் பால் கறந்து தரும் கழுதை உரிமைக்காரர்களுக்காகக் காத்திருக்கின்றார்கள். இப்படிக் கழுதைகளுக்கு நல்ல காலம் பிறந்ததை நினைக்கையில் “Every Dog has its day”  என்பதற்குப் பதிலாக “Every donkey has its day- JENNEY/JENNET NOT JACK”  என்று சொல்ல வேண்டும் என்பது போல் தோன்றுகிறது. எனவே, இனி கழுதையை இழிவு செய்யும் கண்மூடித்தனத்தை ஒழிப்போம்!

நன்றி : படங்கள் - தி ஹிண்டு, தினகரன், கூகுள்

திங்கள், 13 அக்டோபர், 2014

சரி (சிரி)தாயணத்தின் இனிய மாலைப் பொழுது!!










 நான் இருக்கிறேன் அம்மா









சரி(சிரி)தாயணத்தின் இனிய மாலைப் பொழுதில், நான் இருக்கிறேன் அம்மா என்று சொல்லும், வலையுலகில் வாத்தியார் என அழைக்கப்படும் திரு பாலகணேஷ், அவர்களின், இந்த வயதிலும் அவரைச் சிறு பையனாகக் காணும் அவரது அன்பான, அம்மாவின் ஆசியுடன், நூல்கள் வெளியீட்டு விழா - 12.10.2014, இன்று, டிஸ்கவரி புக் பேலஸையே சிரித்திரபுரமாக மாற்றி, மிகவும் இனிதாக நடைபெற்றது. இந்தப் பதிவு வெளியிடும் நேரம் இரவு 12 ஐத் தாண்டி, திங்கள் – 13-10-2014 பிறந்து விடுவதால் நேற்று என்று கொள்ளவும்.

சரிதாயணம் இரு பாகங்களாகவும், அதில் ஒன்று இரு நூல்களாக-முன்பக்கம் சரிதாயணம் கதைகள் -அட்டைப்படமும், பின்புறம் நான் இருக்கிறேன் அம்மா - சிறு கதைகள்.  இதை முன்புறமாகவும் கொள்ளலாம்.  அதுதான் இதன் சிறப்பு.  

விழாவில் வாத்தியார் திரு பாலகணேஷ் அவர்கள் எல்லோரையும் வரவேற்க, திடங்கொண்டு போராடு வலைத்தள பதிவர் சீனு வழக்கம் போல் தனது இனிய மொழியில் தொகுத்து வழங்கினார்.
சீனு


பயணம் வலைத்தளப் பதிவர் திரு கோவை ஆவி வரவேற்புரை வழங்கி, விழாவை வாழ்த்தித் தொடங்கி வைத்தார்.

சேட்டைக்காரன்
சேட்டைக்காரன் அவர்களுக்கு முங்கில் காற்று டி.என் முரளிதரன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்குதல்

புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்தி சிறப்புரை ஆற்றியவர், வலையுலகில் நகைச்சுவைப் படைப்புகளுக்குப் பிரபலமான, மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தின் ஆசிரியருமான, வாத்தியாரின் உற்ற நண்பரும்/குருவமான, அவர் வலைத்தளம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவருமான,  சேட்டைக்காரன் அவர்கள் (எங்கள் ஊர் நாகர்கோவில்காரர் என்பதில் மிகவும் பெருமை). “நாம் எல்லோரும் அரசியல்வாதிகளைக் கலாய்க்கிறோம் ஆனால் அவர்கள் நம்மைத்தான் காமெடி பீஸாக்குகிறார்கள்.  மனைவிமார்களைக் கலாய்த்தால் நாம் தான் அங்கு காமெடி பீஸாகின்றோம்” என்று தனக்கே உரித்தான பாணியில் சிரிப்பு வெடிகளை உதிர்த்தார்.

சேட்டைக்காரன் அவர்கள் புத்தகத்தை வெளியிட அதைப் பெற்றுக் கொண்டவர் எழுத்தாளர் திரு முகில் அவர்கள்.  ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராக இருந்தவர். அகம், புறம், அந்தப்புரம் எனும் சரித்திரத் தொடரை அவர் குமுதத்தில் எழுத, அது 185 வாரம் தொடர உதவியாக இருந்தது நகைச்சுவை என்று சொன்னார். 


எழுத்தாளர் முகில்
முகில் அவர்களுக்கு  திரு கேஆர்பி செந்தில் அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்


ஆதிரா முல்லை அவர்களுக்கு சமீரா பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினார்
ஆதிராமுல்லை (முனைவர்.ப.பானுமதி), உதவிப் பேராசிரியர், வள்ளியம்மாள் கல்லூரி, சென்னை, தனக்கு இலக்கியம்தான் பேசவரும் என்றாலும் இங்கு இலக்கியம் பேசப்போவதில்லை என்றும் தனக்கு நகைச் சுவை பேச வராது என்று சொன்னாலும் அழகிய நகைச்சுவைக் கதை ஒன்றைச் சொல்லி, மிகவும் சுவைபட, வாழ்த்திப் பேசினார். முக்கியமாக, வாத்தியார் இனியும் எழுதப் போகும் எல்லா புத்தகங்களுக்கும் தனது அணிந்துரைதான் இருக்க வேண்டும் என்ற விருப்பமான, வேண்டுகோளை முன்வைத்தார்.


திருமதி கமலம் சங்கர்

திருமதி கமலம் சங்கர், தேர்வுநிலை விரிவுரையாளர், பணி ஓய்வு பெற்றவர், தமிழ்த்துறை, மதுரைக் கல்லூரி – இவர், திரு பாலகணேஷ் அவர்களின் சித்தியுமாவார்.  (அவரது கணவர் வாத்தியாரின் தந்தையின் சகோதரர்).  அவர் மிகவும் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் சொல்லிய  ஒரு விஷயத்தை இங்குச் சொல்லியே ஆக வேண்டும்.  வாத்தியார் சிறு பையானாக இருந்த போது, சுருக்கமாக ஒரு மூன்று பக்கத் தொகுப்புரையைத் தமிழில் எந்த வித எழுத்துப்பிழையோ, இலக்கணப் பிழையோ இல்லாமல் எழுதியிருந்தாராம். அப்போ கேட்கணுமா?!!! வாத்தியார் இன்று பலருக்கும் வாத்தியாராகவும், பதிவுகளும், புத்தகங்களும் எழுதுவதற்கான அடிப்படை அன்றே தொடங்கியிருக்கின்றது என்பது தெரிகின்றது அல்லவா?!! வாத்தியாரைப் பற்றி இன்னும் பெருமைகள் பேசப்பட்டன. அது அப்புறம். (ஆஹா அப்போ இந்தப் பதிவு எழுத்துப் பிழை இல்லாமல் இருக்க வேண்டுமே)

திருமதி கமலம் சங்கர் அவர்களைக் கௌரவிக்க, என் பெயர் திடீரென்று அழைக்கப்பட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  என்றாலும் கணேஷ் அண்ணாவின் வார்த்தைகளை மறுக்க முடியுமா?!!

சிரிப்பானந்தா
சிரிப்பானந்தா அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்குபவர், வெளிவர இருக்கும் திரைப்படம் தொட்டால் தொடரும் திரைப்படத்தின் இயக்குனரும், பிரபல பதிவருமான திரு கேபிள் சங்கர்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “சிரிப்பானந்தா” அவர்கள் நகைச்சுவையுடனும், சுவைபடவும் வாழ்த்திப் பேசினார். இவர் அம்பத்தூர் பகுதியில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று நகைச்சுவை அரங்கம் நடத்தி வருகின்றாராம். இவர் பேசும் போது, ஒரு புத்தகத்தில் இரு கதைப் பிரிவுகள் இருப்பதைச் சொல்லி, முன்பக்கம் பக்கம் கணவனும், பின் பக்கம் மனைவியும் ஒரே சமயத்தில் வாசிக்கலாம்....ஆனால் மனைவி தலை கீழாக நின்று வாசிக்க வேண்டும் என்று சொல்ல......மனைவி நேராகவும்....கணவன் தலைகீழாகவும் வாசிக்கலாமோ என்றும் தோன்றியது........இறுதியில் கல்யாண சமையல் சாதம் பாடலைப் பாடச் சொல்லி “ஹ்ஹ்ஹ்ஹ்ஹ” என்று கை கொட்டிச் சிரிக்கச் சொல்லி முடித்துக் கொண்டார்.


காவேரிமைந்தன் அவர்கள் வாத்தியாருக்குப் பொன்னாடை போர்த்துகிறார்

பின்னர் காவேரி மைந்தன், தமிழ் சங்கத்தின் சார்பில் வாழ்த்திப் பேசினார்.  இவர் கவிஞர் கண்ணதாசனின் தாசன்.  அழகாகப் பேசினார்.

பப்ளிஷர் திரு பிரகாஷ் அவர்களை வாத்தியார் நினைவுப் பரிசு அளித்துக் கௌரவித்தல்

வலைப்பதிவர் ஸ்கூல் பையன் வாழ்த்திப் பேசுகிறார்

மூங்கில்காற்று வலைப்பதிவர் திரு டி.என் முரளிதரன் அவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்

வலைப்பதிவர் மெட்ராஸ் பவன் திரு சிவக்குமார் அவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்

சமீரா வாழ்த்திப் பேசுகிறார்
திரு கேஆர்பி செந்தில் அவர்கள் வாழ்த்திப் பேசுகின்றார்
டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்களுக்கு சேம்புலியான் வலைத்தளப் பதிவர் திரு ரூபக் ராம் அவர்கள் நினைவுப் பரிசு அளிக்கின்றார்



திரு. பாலகணேஷ் அவர்கள் இறுதியில் நன்றியுரை வழங்க, விழா மிகவும் இனிதே நிறைவுற்றது.  மட்டுமல்ல இது ஒரு இனிய, பதிவர்கள், நண்பர்கள் சந்திப்பாகவும் மிகவும் மகிழ்ச்சியான மாலைப் பொழுதாக, இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.  மிக்க நன்றி பாலகணேஷ் அண்ணா!
  
 தம்பிகள்/நண்பர்கள் சீனு, ஆவி, ஸ்பை “மேடம் நீங்க வாழ்த்தி பேசியிருக்கலாமே” என்றார்கள்.  “இல்லை அதை விட வலைத்தளத்தில் பேசுகின்றேன்” என்று சொன்னதற்கு, மூவரும், “அப்ப கொஞ்சம் கட்/எடிட் பண்ணிக் கொடுங்க சின்னதா......பெரிசா கொடுத்தா இரண்டு பதிவா போடுங்க” என்று சொல்ல சீனுவும் அப்படித்தானே என்று நாங்கள் காலாய்த்துக் கொண்டோம்.  தம்பிகளே மிகச் சிறிதாகக் கொடுத்துள்ளேன்????!!.  ஃபோட்டோக்கள் இடுகையை பெரிதாக்கியதற்கு நான் பொறுப்பல்ல தம்பிகளா!!!! 

இன்னும் பல பேச விருப்பம்.  நடந்ததைப் பற்றி.  இடுகை பெரிதாகிவிடுமே என்பதால் இங்கு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

திரு பாலகணேஷ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!  இன்னும் பல புத்தகங்களை (அடுத்து சரித்திரத் தொடர் எழுத இருக்கின்றார்.  அதுவும் புத்தகமாக வெளிவர வேண்டும்) அவர் வெளியிட வேண்டும் என்றும் அதைக் காண, வாசிக்க நாங்கள் எல்லோரும் மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, அன்பார்ந்த வலைப்பதிவர்கள் எல்லோர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் அண்ணா!

வாழ்த்துக்கள்!  பாராட்டுக்கள்!

-கீதா