ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

யாம் பெற்ற இன்பம் பெறுக எம் வலை அன்பர்கள்!

       மகிழ் நிறை வலைத்தளப் பதிவர் சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் அவருக்கு நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களால் கொடுத்துப் பகிரப்பட்ட வெர்சடைல் விருதை எங்களுக்கும் பகிர்ந்து எங்களை 10 நண்பர்களுக்கு பகிரச் சொல்லி ஒரு இக்கட்டானச் சூழலில் சுழல வைத்துள்ளார்.  இக்கட்டானச் சூழல் என்று ஏன் சொல்லுகின்றோம், என்றால் வலைத்தளத்தில் எங்களை விட மிக அழகாக, அறிவுடனும், செறிவுடனும், நல்ல தமிழிலும் புகுந்து விளையாடும் பதிவர்கள் பலர் இருக்க எங்களை அவர் தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல, யாரைத் தேர்ந்தெடுக்க என்ற ஒரு இக்கட்டானச் சூழல்.  பிடித்த வலைத்தளங்கள் பல.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையுடன் எழுதுகின்றார்கள். சிலர் எல்லா துறையிலும் மிக அழகாக எழுதுகின்றார்கள்.  யாருக்கு விருது கொடுப்பது?  எல்லோருக்குமே கொடுத்து விட்லாமே சகோதரி!  எல்லோருமே நண்பர்கள்!  நல்ல பதிவர்கள். இங்கு நாங்கள் கொடுத்திருப்பவர்கள் மட்டுமல்ல இந்த விருதுக்கு உகந்தவர்கள் .  எங்களைப் பொருத்தவரை வலைப் பதிவர்கள் அனைவருமே இந்த விருதுக்கு உகந்தவர்களே. ஏனென்றால் நாங்கள் வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம், 4 மாதங்களே கடந்த நிலையில், எல்லா வலைத்தளத்திற்கும் செல்வதுண்டு. எங்களுக்கென்று குறிப்பிட்ட வலைத்தளங்கள் என்று இல்லை. எங்களுக்கு அறிமுகங்கள் கிடைக்கக் கிடைக்க நாங்கள் வலைததளங்களுக்குச் செல்வதுண்டு. நாங்கள் எங்கள் சிரம் தாழ்த்தி, மிக்க மகிழ்வுடன் இந்த விருதினை பகிர்ந்து கொள்கின்றோம்.  எல்லா வலைப்பதிவர்களுடனும்.  ஏற்கனவே கரந்தையாரும், சகோதரி மைதிலியும் ஒரு சில வலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டார்கள். எனவே இங்கு....


VERSATILE BLOGGER



தலை நகர் தலைவர் திரு வெங்கட் நாகராஜ் 
http://venkatnagaraj.blogspot.com/

வலையுலக வாத்தியார் திரு பாலகணேஷ்
http://minnalvarigal.blogspot.com/

வாத்தியாரை மட்டும் சொன்னால் போதாது எனவே அவரது மாணவர்கள் ஆகிய  சீனு, கோவை ஆவி, ஸ்கூல்பையன், ரூபக் ராம், குடந்தையூர் சரவணன், கரைசேரா அலைகள் அரசன் அவர்களுக்கும்.

சகோதரி அருணா செல்வம் ஏற்கனவே இவர்களுக்கும் பகிரப்பட்டுள்ளது

http://arouna-selvame.blogspot.com/

மாயவரத்தான் எம்ஜிஆர்

http://mayavarathanmgr.blogspot.in/

வலைச் சித்தர், பிஸி தேனீ, எல்லோருக்கும் உதவிக் கரம் நீட்டும் திரு திண்டுக்கல் தனபாலன்  நண்பருக்கும் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது...

http://dindiguldhanabalan.blogspot.com/

சகோதரி ராஜேஸ்வரி
http://jaghamani.blogspot.com/

80 வயதுநெருங்கிக் கொண்டிருந்தாலும் ஸிக்சர் அடிக்கும் சுப்புத்தாத்தா

http://subbuthatha.blogspot.in/

அழகியத் தமிழில் கவிதை எழுதி எல்லொரையும் கட்டிப் போடும் இரு சகோதரிகள்

அம்பாள் அடியாள் ரூபிகா அவர்களுக்கும்  ஏற்கனவே கிடைத்துவிட்டது .


இனியா அவர்கள்
http://kaviyakavi.blogspot.in/


எங்கள் ப்ளாக்....இதில் 

ஆ 'சிரி' யர்கள்:

http://engalblog.blogspot.in/

புலவர் ராமானுசம் 

http://www.pulavarkural.info/

திரு. ஜி என் பாலசுப்பிரமணியம் அவர்கள்

http://gmbat1649.blogspot.in/

சகோதரி இளைய நிலா

http://ilayanila16.blogspot.in/

விமர்சனத்திற்கு பரிசு வழங்கி எல்லோரையும் ஊக்கப்படுத்தும் திரு வைகோபாலக் கிருஷ்ணன் 

 http://gopu1949.blogspot.in/

திரு ராயச் செல்லப்பா 

http://chellappatamildiary.blogspot.in/

இன்னும் பலர் இருந்தாலும் மற்றவர்களுக்கும் பகிர வாய்ப்புத் தரவேண்டி இங்கு பகிர வில்லை.  

சகோதரி மைதிலிக்கு மிக்க மிக்க நன்றி.

நாங்கள் இருவர், எங்கள் தளத்தில் எழுதுகின்றோம். துளசிதரன், பாலக்காட்டில் ஆங்கில ஆசிரியர்

தோழி கீதா.  எங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேறு ஒன்றும் இல்லை. இன்னும் பலருடன் எங்கள் விருதைப் பகிர்ந்துகொள்ள ஆசை.  எனினும் மற்றவர்களும் பகிர்ந்துகொள்ள வேண்டுமே என்பதால் இதை இங்கு முடிக்க வேண்டிய நிலை.  என்றாலும் மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்வது இந்த விருது வலைப் பதிவர்கள் அனைவருக்கும் நாங்கள் பகிர நினைக்கின்றோம்.  எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! 

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?


கேரளத்தில், சாதி, மத, இனம் பாராது ஒட்டு மொத்த கேரளாவே கொண்டாடும் ஓணப் பண்டிகை இதோ இந்த வருடமும் வந்து முடிந்து விட்டது. கேரளத்தின் மெகா நட்சத்திரமாகிய மம்முக்காவையும், லாலேட்டனையும், இப்போது அங்கு உச்சியில் டாப் கியரில் இருக்கும் நட்சத்திரம்  முதல் புதிதாக அரும்பியுள்ள நட்சத்திரங்கள் வரை எல்லா நட்சத்திரங்களையும் மலயாளத் தொலைக்காட்சிச் சானல்கள் எல்லாம் போட்டி போட்டுத் தோன்ற வைத்து கேரள மக்களுக்கு ‘ஓணாம்ஷதங்கள் பறையவைச்சு, பறைன்ஞ்ஞு’ கொண்டாடியாயிற்று. ஓணப் பண்டிகையின் வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பொத்தாம் பொதுவாக சொல்லப்படும் கதையிலிருந்து சிறிது மாறு பட்டதாக, சென்ற வருடம் ஓணப் பண்டிகை அன்று முதன் முதலாக தமிழில் வெளியான ‘தி இந்து’ தமிழ் நாளிதழில், இந்தப் புராணத்தின், ஓணப் பண்டிகையின் கதா நாயகனான மகாபலி சக்கரவர்த்தியின் கதை வந்தது. இப் புராணத்தின் கதாநாயகன் மகாபலிச் சக்கரவர்த்திதான், மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லப்படும் வாமனன் அல்ல, என்றுதான் தோன்றுகின்றது.  இந்தக் கதையைப் படித்தால் தெரியும் நான் சொல்ல வருவது என்னவென்று.

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இருந்து - நன்றி “தி இந்து” தமிழ் நாளிதழ் - புராண காலத்தில் மகாபலி என்ற மன்னன் கேரளாவை ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்கள் ஒரு குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். மகாபலியின் புகழால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று இந்திரன் அஞ்சினான். அவன் மகாவிஷ்ணுவிடம் வேண்ட அவரும் மகாபலியை தான் அழிப்பதாக உறுதிகொடுத்தார். இதன்படி வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, மகாபலியிடம் தனக்கு மூன்று அடி நிலம் தானமாக வழங்குமாறு கேட்டார். வள்ளலான மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க ஒப்புக் கொண்டார். போக்குவரத்தைப் பெற்றுக் கொண்டதும் மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபமெடுத்த மகாவிஷ்ணு முதல் அடியாக பூமியையும், இரண்டாவது அடியாக வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று அவர் கேட்க, தன் தலையின் மீது அளந்துகொள்ளுமாறு மகாபலி கூறினார்.  இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணுவும் மகாபலியின் தலை மீது கால்வைத்து அவரை பூமிக்குள் தாழ்த்தினார்.  மகாபலி நல்லவர் என்பதால் அவருக்கு வேண்டிய வரத்தைக் கேட்குமாறு மகாவிஷ்ணு கூறினார்.  அதற்கு மகாபலி, “நான் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கேரளாவைச் சுற்றிப்பார்க்க வருவேன்.  அப்போது என் மக்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க வேண்டும்.” என்று மகாவிஷ்ணுவை வேண்டினார்.  மகாபலி அப்படி வருவதாக கருதப்படும் 10 நாட்களில் அவரை வரவேற்க மக்கள் உற்சாகமாக ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பண்டிகையில் முக்கியமான நாளாக திருவோண நட்சத்திரம் வரும் நாள் கொண்டாடப்படுகிறது. சரி இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கிறீர்களா?  இதோ வருகிறேன் விஷயத்திற்கு..


இதே கதையைத்தான் தனது, பார்வையில், தான் வாசித்ததின், அறிந்ததின், கேட்டதின், ஆராய்ந்ததின் அடிப்படையில், அந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டுத், தனது கற்பனையையும் இழைத்து, ‘மஹாமுடி த க்ரேட் (Mahamudi The Great) என்ற பெயரில், எளிமையான ஆங்கிலத்தில் தானே எழுதி, தயாரித்து, இயக்கி, குழந்தைகளுக்கான குறும்படமாகவும், புத்தகமாகவும் 4 வருடங்களுக்கு முன்பு வெளியிட்டவர் எனது நண்பர் திரு.துளசிதரன். எனது நண்பரின் பார்வை என்னை மிகவும் யோசிக்க வைத்தது.  நிறைய கேள்விகள் என் மனதில் தோன்றியது.


      மிக மிக நல்ல மன்னராக மக்களால் கொண்டாடப்பட்ட மகாபலியை எதற்காக மகாவிஷ்ணு அழிக்க வேண்டும்? இந்திரன் பொறாமைப்பட்டான் என்பதாலா? இந்திரன் பொறாமைப்பட்டால் அது அவன் தவறல்லவா? அவன் விஷ்ணுவிடம் முறையிட்டால் விஷ்ணு அவனைத்தானே திருத்த வேண்டும்? பொறாமைப்பட்ட இந்திரனை விட மிகச் சிறந்த மகாபலி மன்னன் மோசமானவன் என்றா இந்தப் புராணம் சொல்லவருகிறது? அப்படியென்றால் மிக அடிப்படையான வாழ்வியல் தத்துவத்தையே இப்புராணக்கதை அடித்து நொறுக்கிவிடுகிறதே! புராணங்கள் மக்களுக்கு நல்லதைத் தானே போதிப்பதாகச் சொல்லப்படுகிறது?

சரி, அடுத்ததாகப் புராணங்களில், விஷ்ணு காக்கும் கடவுளாகத் தானே சித்தரிக்கப்பட்டுள்ளார்?  கடவுள், அதுவும் காக்கும் கடவுள் என்பவர் நீதி, நியாயம், தர்மம், நேர்மை ஆகியவற்றைக் காப்பவர் என்று தானே அர்த்தம்?  அப்படி இருக்கும் போது காக்கும் கடவுள் ஏன் அழித்தல் தொழிலை மேற்கொண்டார்?  தேவர்களின் தலைவனாகிய இந்திரனைக் காக்க என்று அர்த்தம் கொள்ள வேண்டுமா?  அப்படி எடுத்துக் கொண்டாலும் காக்கும் கடவுள் அநீதிக்குத் துணை போவதாகத்தானே அர்த்தம், அதாவது இந்திரனின் பொறாமைக்கு! எல்லோரும் ஒரே இனம், ஒரே சாதி, ஒரே கடவுள் என்று மக்களை வாழச்செய்து, அமைதி தவழும் நாடாக, மலநாட்டை ஆண்டுவந்த மஹாபலிச் சக்கரவர்த்தி அசுரனா? மக்களைக் காப்பவர்தானே கடவுள்? அப்படிக் காக்கும் கடவுள் என்றால் விஷ்ணு சிறந்த மன்னனாக, மக்களின் தெய்வமாகத் திகழ்ந்த மகாபலியைப் போற்றி அவருக்குச் சிறந்த வரங்களை அருளி இன்னும் நீடூழிவாழ ஆசிர்வதித்திருக்க வேண்டும் இல்லையா?  ஆகவே என் நண்பர் அவர் தனது புத்தகத்தில் எழுதி இருப்பது போன்று, மகாபலி சிவ பக்தன் ஆதலால், தத்துவ வேறுபாடுகள் எழுந்த சமயத்தில்,  இடைச் செறுகலாகத், தங்களுக்குச் சாதகமாக ஒரு சிலர் இந்தப் புராணக்கதையின் உண்மையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியிருக்கக் கூடுமோ?  இல்லை என்றால் அவர் கூறுவது போல திராவிடர்களினூடே ஆரியரின் நுழைவை சுட்டிக் காட்டுகிறதோ? 

      இப்படியாகச் சொல்லப்படும் இந்தப் புராணக்கதை இப்போதுள்ள அரசியலுக்கும் பொருந்துவது போல் உள்ளது! நல்ல ஆட்சியாளரோ, மக்கள் விரும்பும் ஒரு நல்ல தலைவரோ இருந்தால், அவரைப் பொறாமை மிக்க அரசியல்வாதிகள் தன் அடியாட்களின் மூலம், இப்போது வழக்கில் உள்ள தமிழ் வார்த்தைப்படி, போட்டுத் தள்ளுவது தானே வழக்கமாக இருக்கின்றது? இல்லையென்றால் அவரை ஆட்சி அமைக்கவிடாமல் கவுக்கத்தானே செய்கிறார்கள்?  அப்படிப்பட்ட நல்ல அரசியல் தலைவர் யாராவது இருக்கிறார்களா என்ன என்று நீங்கள் யோசித்து விடை தெரியாமல் விழிப்பதும் தெரிகிறது!  அதுவும் சரிதான். 

அப்படியென்றால் விஷ்ணு இந்திரனின் அடியாளா? அவருக்கும் இப்போதுள்ள அடியாட்களுக்கும் என்ன வித்தியாசம்? இக்காலக்கட்டத்து அடியாட்களும், அவர்களது தலைவரும் நல்லவர்களா?  அவதாரங்களா? காக்கும் கடவுள் விஷ்ணு, மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும் இல்லையா?  விஷ்ணு, அதுவும் வேறு ஒரு வேடம் பூண்டு மகாபலியை ஏமாற்றுவது போலத்தானே இருக்கிறது?  அதை அவதாரம் என்று எப்படிக் கூறமுடியும்?  ஒரு புராணக் கதை மக்களுக்கு நல்லது அல்லவா எடுத்துரைக்க வேண்டும்? இடைச்செறுகல்ளா? இந்தக் கதை கூறும் நீதி யாது?  அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லுகிறீர்களா.  அதுவும் சரிதான்.

பொதுவாகவே, தசாவதாரக் கதைகளிலும், பெரும்பாலானப் புராணக் கதைகளிலும் வரும் அசுரன்கள் சிவ பக்தர்களாகவும் அவர்களை விஷ்ணு அழிப்பது போலவும் தான் சித்தரிக்கப்பட்டுள்ளது! இராவணனும் சிவ பக்தனே!.  அப்படியென்றால் சிவபக்தர்கள் மோசமானவர்களா? இது முரண்பாடல்லவா? இதைக் கூர்ந்து நோக்கினால், இந்தியாவிலிருந்த திராவிடர்களை, அதாவது சிவனை வழிபட்டவர்களை, ஆரியர்கள் அதாவது விஷ்ணுவைத் தெய்வமாக வழிபட்டவர்கள் புறந்தள்ளி மேலோங்கியது போல் அல்லவா தெரிகின்றது! 

      இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில்? பல புராணக் கதைகளை வாசிக்கும் போது எழுந்த கேள்விகள் தான் இங்கு சொல்லப்பட்டுள்ளன. அல்லாமல் எந்த ஒரு மதப் பிரிவையும் உயர்வாகவோ தாழ்வாகவோ கருத்தில் கொண்டு அல்ல என்பதை இங்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.  இதை வாசிப்பவர்கள் யாராவது இதற்கு பதில் கூறினால் மிகுந்த மகிழ்சியுடன் வரவேற்கபடுவர். மறு கேள்விகள் கேட்டாலும் சரி, அதற்கு எனது அருமை நண்பர் விடை பகர்வார். 

திங்கள், 8 செப்டம்பர், 2014

“ஃபரா பேக்கர்! அன்று நான், இன்று நீ” – ஆன்ஃபிராங்க்

நாசி காம்ப்

                ஹிட்லரின் நாசி படையினர் கொன்று குவித்த லட்சக்கணக்கான யூதச் சகோதர, சகோதரிகளை நினைத்து வருந்தி எழுதப்படும் கட்டுரைகளையும், எடுக்கப்படும் படங்களையும் வாசிக்கவோ, காணவோ நேர்ந்தால் நம் எல்லோரது மனமும் இப்போதும் வருந்தத்தான் செய்கிறது.  அநீதிகள் எப்போதும் எதிர்க்கப்பட வேண்டியவையே.  அவ் எதிர்ப்புகள், அவ் அநீதியை ஒழிக்கும் அளவிற்கு திறனுடையதல்லாமற் போனாலும், அவை, அநீதி இழைப்பவர்கள் எதிர்க்கபடவேண்டியவர்கள் என்றும், அநீதி இழைக்கப்படுபவர்கள் காக்கப்பட வேண்டியவர்கள் என்றும் நம்மை உணரச் செய்பவை.  அப்படி அநீதி இழைக்கப்பட்டு எல்லோரது ஆதரவையும் பெற்றவர்களே அநீதி இழைக்கும் போது நாம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போகிறோம்.  அது போலத்தான், காசாவில் நடந்து வரும் போராட்டமும், கொலைகளும்.  ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், அதில் பெரும்பான்மையானோர் பெண்களும், குழந்தைகளும், கொல்லப்படுவதைப் பார்க்கும் போது, ஹிட்லரின் நாசிப்படை யூதர்களுக்கு எதிராகச் செய்த அதே கொடுமையை, பாபத்தை இப்போது யூதர்களான இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனியர்களுக்கு எதிராகச் செய்கிறதே என்ற வருத்தம் வருகிறது.  இதைத்தான் “History repeats” என்று சொல்லுகின்றார்களோ?!

Annelies "Anne" Marie Frank  12 June 1929 – early March 1945) was a diarist and writer. She was one of the most discussed Jewishvictims of the Holocaust. Her wartime diary The Diary of a Young Girl has been the basis for several plays and films. 
The Diary of a Young Girl is a book of the writings from the Dutch language diary kept by Anne Frank while she was in hiding for two years with her family during the Nazi occupation of the Netherlands. 

      75 ஆண்டுகளுக்கு முன், ஜெர்மனியில் மரணத்திலிருந்துத் தப்ப முடியாமல் தவிக்கும் தன் இனத்தவரான யூத மக்களின் துயரைத் தன் டயரியில் எழுதி வைத்த ஆன்ஃபிராங்கின் டயரிக் குறிப்புகளை இவ்வுலகு அறிந்தது அச்சிறுமியின் மரணத்திற்குப் பிறகுதான். 

Farah Baker, A Gaza Teenager, Becomes Social Media Phenomenon By Tweeting About War
While Israel and Hamas take a step back from the weeks-long violence in Gaza, which has claimed more than a thousand lives, a Palestinian teenager has risen to prominence on Twitter for capturing the turmoil and fear around her Gaza neighborhood through her posts, which went viral last week.
“I am trying to tell the world about what I feel and what is happening where I live,” Baker told Reuters at her Gaza home. According to her, she has been “trying to make other people feel as if they are experiencing it, too.” In a recent interview with NBC News, Baker talked about her experience after she survived one of the heaviest nights of Israeli airstrikes.



ஆனால், இப்போது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள, குண்டுவீச்சைப் பற்றி எழுதுவது மட்டுமல்ல அவற்றையெல்லாம் படம் பிடித்து “ட்விட்டரில்”, அவற்றை, உலகிலுள்ள மக்கள் அனைவரும் கண்டு அதற்கு எதிராகக் குரல் கொடுக்க அவற்றிற்கான லிங்க் கொடுப்பதோ, ஃபரா பேக்கர் எனும் 16 வயதுச் சிறுமி.  அன்று ஆன்ஃப்ராங்க், இன்று ஃபரா பேக்கர்.  “இன்று இரவு நான் இறக்க நேரலாம்.  எனக்கு என் கண்ணீரை அடக்க முடியவில்லை” எனும் வரிகள் “ட்விட்டரில்”  வாசித்த மனிதாபிமானமுள்ள மனிதர்கள் தங்கள் கண்களிலிருந்து வழியும் நீரை அடக்க முடியாமல் வருந்தியிருப்பார்கள்.  


    காசா நகரில் அல்ஷிபா மருத்துவ மனைக்கு அருகில் தங்கியிருக்கும் ஃபரா பேக்கரின் தந்தை அம்மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறார். வருடங்களுக்குப் பிறகு வெளியான அநீதியை அன்றும் அடக்க முடியவில்லை. தற்போது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியால் உடனுக்குடன் அறிந்தாலும், அநீதியை இன்றும் அடக்க முடியவில்லை. அநீதியும், அக்கிரமமும் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருக்கிறது.  இதற்கு ஒரு முடிவு வேண்டும்.  அது இலங்கையில், இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தும், உலகெங்கிலுமுள்ள நாடுகளுக்கு அகதிகளாகப் போக வைத்தும், எஞ்சியோரை எப்படியெல்லாம் வருத்த முடியுமோ அப்படி வருந்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு சமாதான நடவைக்கை போல் அல்லாமல், ஒரு நல்ல சமாதான உடன்படிக்கையாக இருக்க வேண்டும்.  எல்லா உலக நாடுகளும் ஒன்றுகூடி, ஈடுபட்டு, அதற்குத் தீர்வு காணத் தயாராகவும் வேண்டும். அப்படி எடுக்கப்பட்டால் ஃபரா பேக்கர் போன்ற வருங்காலச் சிற்பிகாளான, எத்தனையோ இளம் வயதினரையும், குழந்தைகளையும் காப்பாற்றி ஒரு நல்ல நாடும், சமுதாயமும் உருவாக வழி வகுக்கப்படலாம்.  அப்படிப்பட்ட ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.    

படங்கள், காணொளி : இணையம், யூட்யூப்









வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நல்லாசிரியர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....!!!


இன்றுஆசிரியர் தினம். கடந்த 25 வருடங்களாக ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியும் எனக்கு 1986 ஆம் ஆண்டு ஒரு தனியார் வங்கியிலும், 1987 ஆம் ஆண்டு புனலூர் தென்மலை அருகே உள்ள ஹாரிசன் மலையாளம் கம்பெனியின் இஃப்ஃபீல்ட் எஸ்டேட்டிலும் பணி புரிந்த போதுதான் ஆசிரியப் பணிதான் எனக்கு மிகவும் ஏற்றது என்பது எனக்குப் புரிந்தது.  இதனிடையே, தனியார் வங்கி வேலையை இழக்க நேர்ந்த போது எர்ணாகுளத்தில் உள்ள சயின்ஸ் அக்காடமியில் சில மாதங்கள் ஆங்கிலம் கற்பித்த போது கிடைக்கபெற்ற இனிய அனுபவம் தான் எனக்கு அதைப் புரிய வைத்தது.
 
கல்லூரி மாணவனாக இருந்த போதே சாசரின் காண்டர்பரி டேல்ஸ் முதல் (chaucer’s canderbury tales) ராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) ஸ்டாப்பிங்க் பை வுட்ஸ் ஆன் அ ஸ்னோயி ஈவினிங்க் (Stopping by Woods on a snowy evening) வரையும், டானியல் டீஃபொ (Daniel Defoe)  வின் ராபின்ஸன் க்ருசோ, (Robinson Crusoe) முதல் எர்ன்ஸ்ட் ஹெம்மிங்க்ஸின் (Ernest Hemingway) ஓல்ட் மேன் அட்ன் த் சீ (Old man and the sea) வரையுள்ள இலக்கியப் படைப்புகளைப் படித்துத் தேர்வெழுதி முதுகலைப் பட்டம் வாங்கியது எனக்கு கரும்பு தின்னக் கூலிவாங்கியது போலத்தான் அனுபவப்பட்டது.  அவர்களது எழுத்துக்கள், எண்ணங்கள், கருத்துக்கள் வழியாக அவர்கள் மனதுக்குள் நுழைந்து அவர்கள் கண்டதை எல்லாம் கண்டு, உணர்ந்ததை எல்லாம் உணர்ந்து அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களுடன் பயணித்தபின், மீண்டும் நம் உலகிற்கு வருவதும், பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றை எல்லாம் அசை போட்டு இன்புறுவது என்பதும் இனிமையான தருணங்கள்தான்.  (இதையெல்லாம் வாசிக்கும் போது என்னைப் பற்றித் தவறான எண்ணம் வேண்டாம். கல்லூரி மாணவர்கள் செய்யக் கூடிய சேட்டைகளை எல்லாம் செய்து, ரிலீசான படங்களை எல்லாம் பார்த்து, இறையருளால் எப்படியோ அரியர்ஸ் இல்லாமல் 55% மதிப்பெண்களுடன்  நாகர்கோயில் இந்துக் கல்லூரியை விட்டு வெளிவந்த ஒரு சராசரி மாணவன் அவ்வளவே!) 

கணக்கும், கடிதமெழுதும் வங்கிப் பணியிலும், தொழிலாளர்களைக் கண்காணிக்கும் எஸ்டேட் பணியிலும் கிடைத்த ஊதியம் உயர்வானதுதான் என்றாலும், கதைகளும்,  கவிதைகளும், கட்டுரைகளும், இலக்கணமும் கற்பிப்பதில் கிடைக்கும் குறைந்த ஊதியம் கரும்பு தின்னக் கிடைக்கும் கூலியே, என்பதை உணர்ந்த நான், அப்போதே ஆங்கில ஆசிரியனாக வேண்டும் எனத் தீர்மானித்தேன்.  அதன் பின் 1994 வரை எர்ணாகுளத்திலுள்ள அவர் கல்லூரிலும், நிலம்பூரிலுள்ள க்ளாசிக் கல்லூரியிலும், கரும்பு தின்று கூலி பெற்று வாழ்ந்தேன்.  கரும்பு தின்று அவ்வப்போது உதியம் பெற்று வாழ்ந்தால் போதாதே, வாழ்வின் பின் பாதியில் ஓய்வு தேவைப்படும் போது ஓய்வூதியம் வேண்டுமே.  எனவே, 1995 முதல் இதோ இப்போது பணி புரியும், உயர் மேல்னிலைப் பள்ளியில் கரும்பு தின்று கூலி பெறுகின்றேன். கல்லூரிகளில் கடித்துத் தின்னக் கிடைக்கும் செங்கரும்பு (இலக்கியம் கற்பித்தல்) இல்லை எனினும் இதுவும் கரும்புதான், இனிமைதான். 

இந்த இனிய வாழ்க்கைக்கு, வழிகாட்டித் தந்த என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஆசிரியரைப் பற்றிச் சொல்லத்தான் நான் உங்கள் பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் இவ்வளவு நேரம் சுற்றி வளைத்துப்  பேசினேன்.  நான் 1976 ஆம் ஆண்டு போடிநாயக்கனூரில்  1976 ஆம் ஆண்டு ZKM  ஹை ஸ்கூலில் 9 ஆம் வகுப்பு படித்த போது எனக்குக் ஆங்கிலமும் கணக்கும் கற்பித்த திரு வீரய்யா வாத்தியார்தான் அந்த அற்புத ஆசிரியர். கணக்கு ஆசிரியரான அவர் ஆங்கில அறிவுக்கு அடிப்படைத் தேவையான டென்ஸசை  (Tenses) ஒரு பட்டியல் போட்டு தமிழ் மொழி பெயர்ப்புடன் ஃபார்முலா சகிதம் கற்பித்து, என் மனதில் பசுமரத்தில் பதிந்த ஆணி போல் பதித்து, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெறும்வரை உதவியது. ஆங்கில வாக்கியங்களை பிழையின்றி எழுத அப்பட்டியல் இன்றியமையாதது என்பதை உணர்ந்த அவர், கையில் பிரம்புடன் அப்பட்டியலை நாங்கள் எண் சுவடியை மனதில் பதிப்பது போல் பதிக்கச் செய்ய அவர் எடுத்த முயற்சி பாராட்டிற்குரியது.
 
இப்பொதும், ஆங்கில மொழி கற்க, ஆங்கில இலக்கணம் தேவையில்லை, சிறு குழந்தை தாய் மொழி கற்பது போல கேட்டும் பேசியும்தான் கற்க வேண்டும் எனும் கொள்கையை எல்லோரும் பின்பற்றும் இந்த நாட்களிலும், வீரய்யா சார் கற்பித்த அந்தப் பட்டியலை விரிவாக்கி அதனுடன் கேள்விகளாக்கப்பட்ட நேர்மறை மற்றும், எதிர்மறை வாக்கியங்கள், செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களையும் உட்படுத்தி, நான் என் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றேன்.  ஆசிரியர்களாகப் பணியாற்றும் என் மாணவர்களில் சிலர் அதை அவர்கள் மாணவர்களுக்கும் கற்பிப்பதாகச் சொன்ன போது நான் மதிப்பிற்குரிய வீரய்யா சாருக்கு நான் எனது மனதில் நன்றி சொன்னேன். இறையருளால், முதுகலைப் பட்டத்திற்காக நாகர்கோவிலில் இருந்த பொது ஒருமுறை வீரய்யா சாரை காண நேர்ந்த்து.  அவரது இளைய சகோதரன் என்னுடன் அதே வகுப்பில் அன்று (1976) படித்திருந்ததால் வீரய்யா சார் என்னை சிரமமின்றி நினைவு கூர்ந்தார்.  அவர் கற்பித்த ஆங்கில அறிவு வளர்க்கத் தேவையான அந்தப் பட்டியல்தான் என்னை ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பயிலச் செய்தது என்றதும், என்னைத் தோளில் தட்டிப் பாராட்டினார். நானும் என் உளமார்ந்த நன்றியை அவருக்குச் சொன்னேன்.  அது மறக்கமுடியாத மகிழ்சிகரமான ஒரு நிகழ்ச்சி அன்றும் இன்றும்.  இந்த ஆசிரியர் தினத்தில் எல்லாம் வல்ல இறைவனிடம் திரு வீரய்யா ஆசிரியர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உடல் நலத்தையும் எல்லா நன்மைகளையும் தர வேண்டுகின்றேன்.  அவர் இப்போதும் நலமுடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன்)

இந்த ஆசிரியர் தினத்தில் எனக்கும் ஆசிரியன் என்ற நிலையில் மன நிறைவு தந்த ஒரு சம்பவம் ஏற்பட்டது.  கடந்த 27.8.2014 அன்று வொக்கேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூலான எங்கள் பள்ளிக்கு ஹையர் செகண்டரியும், தொடங்க அனுமதி கிடைத்ததால், ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.  நானும் தேர்ந்தெடுக்கும் அக்குழுவில் ஒருவனாக ஆங்கில ஆசிரியர்களை மாணவர்களுக்கு மாதிரி வகுப்பு எடுக்கச் செய்து, மதிப்பீடு செய்து கொண்டிருந்தேன்.  வகுப்பு முடித்தபின் ஒரு ஆசிரியை என்னிடம் வந்து “சார் என்னைத் தெரிகிறதா?  நான்தான் பபிதா.  2004 பாச்.  ஆங்கில இலக்கியம் தேர்ந்தெத்து ஆங்கில ஆசிரியை ஆக வேண்டும் ஆர்வம் உங்கள் வகுப்பில் அமர்ந்த்தால் தான் கிடைத்தது. என்று சொல்லி என்னையும் அன்று வீரய்யா சாருக்கு என்னால் ஏற்பட்ட மகிழ்ச்சியை உணரச் செய்த சம்பவம்தான் அது.  இது எனக்கு இவ்வருட ஆசிரியர் தினத்தில் கிடைத்த ஆசிரிய விருது தான்.  வேறு என்ன சொல்வது!

வாசித்த உங்கள் மனதிலும் ஒரு ஆசிரியர் பளிச்சிடுகின்றார் இல்லையா?  அவரைப் பற்றி பின்னூட்டத்தில் எழுதுங்களேன்.  அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல் நலத்திற்கும், நன்மைக்கும், நாம் அனைவரும் வேண்டிக் கொள்வோம், இவ்வாசிரியர் தினத்தில். அப்படி நம் நினைவுகளில் நிறைந்து நிற்கும் நல் ஆசிரியர்களை நாம் இவ் ஆசிரியர் தினத்தில் நினைவு கூர்வோம்.  மட்டுமல்ல,

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு

என்பதுதானே வள்ளுவன் வாக்கும். இவ்வாசிரியர் தினத்தில் செய்நன்றி மறவா மாணவ மாணவிகளாக (வயதான) நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கப் பெற்ற நல் ஆசிரியர்களைப் போற்றி புகழ்ந்து புண்ணியம் சேர்ப்போம்.
 
பிகு ப்பிதாவுக்கு நான் வகுப்பெடுக்க நான் கொடுத்த தலைப்பு “Where there is a will there is a way”

இப்போது பபிதா எங்கள் பள்ளியில் ஆங்கில ஆசிரியை.

இதோ,
தோழி கீதாவும், அவரது வழிகாட்டியான ஆசிரியைகளைப் பற்றிச் சொல்கின்றார்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

      எண்ணும், எழுத்தும் உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர். நான் இவ்விரு கலைகள் கற்றச் சிறப்புடையவளா,  ஏட்டுக் கல்வியை சீரிய வகையில் கற்றவளா என்றால் ஐயமே! ஆயின், இவ்விரண்டுக் கண்களையும் கற்றுத் தந்த ஆசிரியர்களை நான் பெரும்பாலும் தினமுமே நினைவு கூர்வேன்.  ஏனென்றால் அவர்கள் ஏட்டுக் கல்வியை மட்டும் எனக்குக் கற்பித்தாரில்லை.  வாழ்க்கையை எதிர்கொண்டு வாழும் வாழ்வியலையும் கூடவே கற்றுக் கொடுத்தார்கள். எனக்கு அமைந்த ஆசிரியர்கள் போல் வேறு யாருக்கேனும் அமைந்திருப்பார்களா என்ற கேள்வி எனக்குள் அவ்வப்போது எழுந்து என்னைச் சற்றுப் பெருமிதம் கொள்ளச் செய்யும். எல்லோருக்கும் ஒரிரு ஆசிரியர்கள் இருக்கலாம்.  ஆனால் எனக்கோ என் ஆசிரியர்கள் அனைவருமே அப்படி இருந்தது என் அதிர்ஷ்டம் தான் என்பேன். அவர்கள் எல்லோரையும் குறிப்பிட இந்தப் பதிவு போதாது.  எனவே, ஒரு சிலரை மட்டும் இங்குக் குறிப்பிடுகின்றேன்.

      வள்ளியூரில், இரண்டு வருட வாழ்க்கையில், அரசு ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு (தமிழ் வழிக் கல்வி) படிக்கும் போது எனக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் திரு திரவியம்.  எனது ஆங்கில மொழி ஆர்வத்தையும், தமிழிலும் அதே போன்று ஆர்வம் உடைவளாக இருந்ததையும் கூர்ந்து கவனித்து என்னை இலக்கியம் படிக்க ஆர்வத்தைத் தூண்டியவர். விதை ஊன்றப்பட்டது. (கணக்கைப் பற்றிக் கேட்கக் கூடாது! ஆச்ரியைகள் மிகவும் நல்லவர்கள் ஆனால் எனக்கு பேஸ்மென்ட் வீக்குங்கோ). 

      6 ஆம் வகுப்பு பாத்திமா கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில். அங்கும் தமிழ் வழிக் கல்வி. முதல் நாள், முதல் வகுப்பு. உயரம்குறைவான, சற்று குண்டான, நல்ல நிறத்துடன் சிறிய கொண்டையுடன், பெரும்பாலும் நீலக் கலர் புடவையில் (அதுதான் என் மனதில் இன்றும் பளிச்) ஒருவர் ஆங்கிலத்தில் பேசிய படியே வகுப்பில் நுழைந்தார்.  அவர்தான் ஆங்கில ஆசிரியை என்பது புரிந்தது.  லீலாவதி என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். தமிழில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.  என்னுடன் வகுப்பில் அமர்ந்திருந்தவர்கள் பெரும்பான்மையோர், அதே பள்ளியில் படித்தவர்கள்.  ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினார்கள். ஆசிரியை, வகுப்பெடுத்தார்.  அசந்து விட்டேன். ஆங்கில அடிப்படை இலக்கணம் - தன்னிலை, முன்னிலை, படர்க்கை, வினைச்சொற்கள் எல்லாம் எப்படிக் கற்றால் எளிது என்பதற்கு ஒரு அட்டவணை இட்டுக் கற்பித்தார். ஆங்கிலம் சரளமாகப் பேசியவர்களுக்குக் கூட இலக்கணம் தெரிந்திருக்கவில்லை. எனக்கும் தன்னம்பிக்கை வந்தது.  என் மகனுக்கும், லீலாவதி ஆசிரியையின் வழிமுறையில்தான் கற்பித்தேன்.

ஆங்கிலப் பாடங்களைக் கூட செயல்பாட்டு வழி முறையிலும், எடுத்துக்காட்டு, பயிற்சி முறைகளுடனும் தான் கற்பித்தார். ஒரு சிறு உதாரணம்.  அதே பள்ளியில் 1, 2 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி முடிந்த பிறகு Mary had a little lamp ரைம்ஸ் சொல்லித் தருவதற்கு என்னையும், என் வகுப்பில் நன்றாகப் படிக்கும் புனிதா எனும் என் தோழியையும் அழைத்துச் சென்று புனிதா மேரியாகவும், நான் ஆட்டுக் குட்டியாகவும் நடிக்கச் செய்து விளக்குவார்.  அப்படித்தான் எங்களுக்கும் வகுப்பு.  பள்ளியில் நடத்தப்படும் ஆங்கில நாடகங்களில் எனக்கு முக்கியப் பங்கு இருக்கும்..ஆங்கில உச்சரிப்பிற்காக.  அதே போன்று தமிழ் உச்சரிப்பிற்காகவும் நாடகளில், பேச்சுப் போட்டு என்று பங்கேற்கச் செய்வார். அப்படியாக எனது கலையார்வமும் பெருக்கெடுத்து வளரக் காரணமாகவும் இருந்தார் என்றால் அது மிகையாகாது.  எனது ஆங்கில ஆர்வத்தை மிகவும் ஊக்கப்படுத்தி, கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்க அறிவுரை சொன்னார்.

      ஏழாம் வகுப்பிலிருந்து நாகர்கோவில், புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பு.  தமிழ் வழிக் கல்வி.  அங்கும் எல்லா கலைகளிலும், கட்டுரை, கவிதைப் பேச்சுப் போட்டிகளில் எனது பங்கு இருக்கும்.  அங்குதான், வளரும் பருவத்தில் எனக்கு வாழ்வியல் கற்றுக் கொடுத்து என்னை மேம்படுத்திய ஆசிரியைகள், மேரிலீலா, ஸ்டெல்லா மேரி எனது காட்மதர்கள் என்று சொல்லும் அளவு, எனது வாழ்வைச் செம்மைப்படுத்தியவர்கள். கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவு எடுக்கலாம் என்றும், அதனூடே தமிழ் இலக்கியமும் கற்கலாம் என்றும், எனது விருப்பமாகிய ஆசிரியைப் பணியியை எடுத்துக் கொள்ளலாம் என்ற எனது கனவு தகர்ந்தது எனது வீட்டாரால். இன்றும் நினைப்பதுண்டு, வீட்டில் உள்ளோரை எதிர்த்து, ஆங்கில இலக்கியம்/தமிழ் இலக்கியம் படித்திருக்கலாமோ என்றும், ஆசிரியைப் பணிக்கு முயன்றிருக்கலாமோ என்றும். 

      கல்லூரிக் காலத்தில், உஷா வர்கீஸ், நாகம்மாள் எனும் பேராசிரியைகள் எனது காட்மதர்கள். என்னை வளர்த்து, என்னை ஆளாக்கி, நல்ல எண்ணங்களை என் மனதில் விதைத்து, என்னை ஆளாக்கிய என் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, எனது வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளயும் சமர்ப்பிக்கின்றேன்.


பதிவர்களில் பெரும்பான்மையானோர் ஆசிரியப் பெருமக்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது எங்களுக்கு!  எல்லா ஆசிரியப் பதிவர்களுக்கும், இந்த ஆசிரியர் தினத்தில் தங்களது ஆசிரியப் பணி செவ்வனே வளர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!  ஒரு ஆசிரியர் தான் ஒரு சிறந்த சமுதாயம் வளர்வதற்குக் காரணமாக அமைகின்றார்! 

Teaching Profession is a Noble Profession! வாழ்க ஆசிரிய சமுதாயம்!