முதல் தடவையாக, யாரோ ஒரு நல்லவர், ஆண்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஆண்களைப் பற்றி நல்ல விஷயங்களை எழுதி உள்ளார்! அந்த நல்லவர் எங்கிருந்தாலும், எந்த நாட்டவரானாலும், வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்! இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நாடு, மொழி, மதம், இனம், கலாச்சாரம் மாறினாலும், ஆண் வர்கத்திற்கு உலகம் முழுவதும் ஒரே குரல்தான் என்பது!
ஆண் என்பவன் யார்? 
ஆண் என்பவன், சிறு வயதிலிருந்தே விட்டுக்
கொடுத்து சமரசம் செய்யத் தொடங்கும், ஆண்டவனால் படைக்கப்பட்ட மிகவும் அழகான ஒரு
படைப்பு!
அவன் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்ஸ், தின்
பண்டங்கள் இன்ன பிற சாமான்களை விட்டுக் கொடுக்கின்றான்.
தனது கனவுகளை, தன் பெற்றோர்களின் முகத்தில்
அரும்பும் புன்னகைக்காக, அவர்களுக்காக விட்டுக் கொடுக்கின்றான்.
தான் காதலிக்கும் பெண்ணிற்காக, தனது பாக்கெட்
மணியின் பெரும் பகுதியை பரிசுகள் வாங்கச் செலவு செய்கின்றான், அவள் முகத்தில்
புன்னகையைக் காண வேண்டி.
தனது மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும், தன் இளம் வயதை எந்த வித வருத்தமும், புகார்களும் சொல்லாமல், இரவு பகலாகக் கடுமையாக உழைத்து தியாகம் செய்கின்றான்.
வங்கியில் கடன் வாங்கி, தனது வாழ் நாள்
முழுவதும் அதை அடைப்பதில் செலவிட்டு, அவர்களது எதிர்காலத்தைச் செழிப்பாக வைக்கத்
தியாகம் செய்கின்றான்.
அவன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், தன் அம்மா,
மனைவி, முதலாளி வசைபாடும் கடும் சொற்களுக்கு ஆளாகி, சகித்துக் கொள்கின்றான்.
மற்றவர்களுக்காக, அவர்களது சந்தோஷத்திற்காக,
சமரசம் செய்து, விட்டுக் கொடுத்து, சகித்து வாழ்வதிலேயெ அவன் வாழ் நாள் முடிந்து
விடுகின்றது.
அவன் வெளியில் போனால், அவன் அசட்டையாக
இருக்கின்றான், அக்கறையில்லாதவன் என்ற பெயர்.
அவன் வீட்டிற்குள்ளேயே இருந்தால், அவனுக்குச் சோம்பேறி
என்ற பெயர்.
குழந்தைகளைக் கோபித்துக் கொண்டால் அவன் ஒரு
மிருகம், அரக்கன் என்ற பெயர்.
குழந்தைகளைக் கோபித்துக் கொள்ளவில்லை என்றால்,
அவனுக்குப் பொறுப்பற்றவன் என்ற பெயர்.
மனைவியை வேலைக்குப் போக வேண்டாம் என்று
சொன்னால், அவன் மனைவியை அடிமையாக எண்ணுகின்றான் என்ற சொல்லுக்கு ஆளாகின்றான்.
மனைவி வேலைக்குச் செல்வதைத் தடுக்கவில்லை
என்றால், அவன் அவளது வருமானத்தில் வாழ்கின்றான் என்ற சொல்லுக்கு ஆளாகின்றான்.
தன் தாயின் சொல் கேட்டால், “அம்மா பிள்ளை” என்ற பெயர்.
மனைவியின் சொல் கேட்டால், “மனைவிக்கு அடிமை” என்ற பெயர்.
தயவு செய்து உங்கள் வாழ்வில் வரும், இருக்கும்
ஒவ்வொரு ஆணிற்கும் மதிப்பு கொடுங்கள். இல்லையென்றால், உங்களுக்காக அவன் செய்யும்
அவனது தியாகங்கள் உங்களுக்குத் தெரியாமல் போகக் கூடும்.
ஒவ்வொரு ஆணின் முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை
அரும்புமே! அதற்காகவாவது, இது எல்லா
ஆண்களுக்கும் அனுப்பப்பட வேண்டிய ஒரு செய்தி.
ஒவ்வொரு பெண்ணும் அவனது மதிப்பை உணர்வதற்காகவாவது இந்தச் செய்தி அவர்களைச்
சென்றடைய வேண்டும்!
ஆண்கள் தின
வாழ்த்துக்கள்!!!! ! (Which never comes!)
மன்னாரு கொஞ்ச நாளைக்கு
முன்னாடி திண்ணைல உக்காந்து பொலம்பிக்கிட்டு இருந்தாருல்ல.....அப்ப அவருக்கு அவரோட
அலை பேசில, அதான் இப்ப வாட்ஸ் அப் நு ஒண்ணு ரொம்ப பிரபலமா இருக்குல்ல அதுல இந்த
செய்திய அவரு நண்பர் அனுப்பிருந்தாரு......மன்னாருக்கு முகம் முழுக்க ஒரே
சந்தோஷம்..... அவ்வளவு நேரம் தெரு விளக்கு மாறி இருந்த அவரோட முகம் இத வாசிச்ச
உடனே நல்ல ட்யூப் லைட் மாதிரி பிரகாசமாயிடுச்சு! உடனே இத “சோ ச்வீட்” வந்த உடனே காட்டணும்னு
நினைச்சு, மனைவி வந்துக் கதவத் திறந்த உடனே உள்ள பாஞ்சு போயி “பாரு உனக்குதான் என் அருமை பெருமை
தெரில.....ஊருல இருக்கற எவனுக்கோ தெரிஞ்சு அனுப்பிருக்கான் பாரு......இப்பவாவது இத
படிச்சாவது தெரிஞ்சு புரிஞ்சுக்க...” அப்படின்னு அலை
பேசிய அவங்க முகத்துக்கு நேர நீட்டாத குறைதான்....
ஆமாங்க..ரொம்ப
சரிதாங்க! நீங்க எந்தக் குறையோ குத்தமோ சொல்லாம எவ்வளவு தியாகம் செஞ்சுருக்கீங்க! உங்கள
நான் நல்ல புரிஞ்சுருக்கேங்க. அதனாலதாங்க,
நீங்க குறையே சொல்ல மாட்டீங்கனுதான், உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கக்
கூடாதுன்னு, வரும் போதே இட்லி மாவு வாங்கிட்டு வந்துட்டேங்க. நீங்க ரொம்ப நல்லா காரச் சட்னி செய்வீங்கல்ல!
ஸோ இட்லி செஞ்சு, அந்தச் சட்னி அரைச்சுருங்க. இப்ப எனக்கு டிவில முக்கியமான ஒரு
சீரியல் பாக்கணும்...” என்று சொல்லி டிவியை ஆன் செய்யவும், டோக்கொமோ விளம்பரம்
ஓடிக் கொண்டிருந்தது.
அந்தப் பெண் தன்
கணவன் மேல் உள்ளக் கோபத்தை வெளிக்காட்டுவது போல், கணவனின் ஷர்டுகளைக் கிழித்து
நாய்க்குட்டிக்குச் சட்டை தைத்துப் போடுவதைப் போல....அதைக் கண்டு மன்னாரின் மனைவி,
“ஹா சூப்பரு” என்று சொல்லி ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்க.....மன்னாரு அந்த
விளம்பரத்தைப் பார்த்ததும். மனைவி சிரித்ததும்...அதில் ஏதோ வில்லங்கம் இருக்குமோ
என்று நினைத்துத் தனது ரூமிற்கு ஓடிச் சென்று தனது ஷர்ட்டுகளை எல்லாம் எடுத்துப்
பத்திரப்படுத்திவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தார், அன்றைய இரவுப் பொழுது
புவ்வா செய்ய!
நுழைந்தவருக்கு அப்போதுதான், "ஒவ்வொரு வருஷமும் அகில உலக ஆண்கள்
தினம்னு நவம்பர் 19 ஆம் தேதி கொண்டாடுறாங்க.
ஆனா ஏன் ஆண்களைப் பத்தி அவ்வளவு எழுதின அந்த ஆளு இதக் குறிப்பிடாம, வராத
ஆண்கள் தினம் அப்படினு கொடுத்திருக்காரு? ஒரு வேள பெண்கள் தினம் மார்ச் 8 உலகம்
முழுசும் ரொம்ப விமரிசையா கொண்டாடி மேடை போட்டு பேசற மாதிரி ஆண்கள் தினம்
கொண்டாடப்படறது இல்லைன்றதுனால இருக்குமோ?
இருக்கலாம்." என்று தோன்ற இந்தத் தேதிய, செய்திய அவரு ஃப்ரென்ட்ஸ் எல்லாருக்கும்
சொல்லிறணும் அப்படினு இதத் தட்டிவிட்டாரு.
முதலில்
ரஷ்யாவில்தான் 1960 லிருந்து பல ஆண்கள் தனியாக, பெண்கள் தினம் மார்ச் 8
கொண்டாடப்படுவது போல ஆண்கள் தினம் ஃபெப்ருவரி 23 கொண்டாட வேண்டும் என்று கிளர்ச்சி
செய்து வந்தனர். இந்தத் தேதி ரஷ்ய
நாடுகளால் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஒரு சில
ரஷ்ய யூனியனில் இருந்த நாடுகள் நவம்பர் 19 ஆம் தேதியை உலக ஆண்கள் தினமாக அனுசரிக்க
ஆரம்பித்தன.
அதன் பிறகு 1968ல்
அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோன் பி. ஹாரிஸ் என்பவர் சலினா எனும் பத்திரிகையின் தலையங்கத்தில்
“சோவியத் யூனியன் தொடங்கிய அந்த முறையில் சமநிலை இல்லை. ஆண்கள், அரசும், பெண்களும் ஆண்களைச் செய்யச்
சொல்லுவதை எல்லாம் ஆண்கள் செய்து கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களை
கௌரவிக்கும் விதமாகப் எண்கள் தினத்திற்கு ஒத்த ஒரு தினம் இல்லை. பெண்கள் தினத்திற்கு எதிராக இல்லை. ஆனால், அதே சமயம் ஆண்களுக்கும் சம உரிமை
கொடுக்க வேண்டும்.” இப்படி 1990
களிலிருந்து அமெரிக்க மாகாணங்களும், உலகில் உள்ள பல நாடுகளும் நவம்பர் 19ஆம்
தேதியை ஆண்கள் தினமாக அறிவித்துக் கொண்டாடத் தொடங்கின.
இந்தியாவில், 2007
ல் இந்திய ஆண்கள் உரிமை அமைப்பு, நவம்பர் 19ஆம் தேதியை ஏற்று, 2008 ஆம் ஆண்டு
கொண்டாடத் துவங்கி வருடம் தோறும் கொண்டாட முடிவு செய்தது.
“In 2009, India received
the first corporate sponsorship of the International Men's Day with menswear
brand Allen Solly deciding to create promotional offers on IMD, and HBOdeciding to screen
male-positive movies in its "Men are Back" series on 19 November.”
ஆண்கள் தினம் பற்றி முழுத்
தகவல் அறிய விக்கி தளத்தைச் சொடுக்கினால் அறியலாம். http://en.wikipedia.org/wiki/International_Men's_Day
நாம்
பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்
வேளையில் இதோ பாருங்கள் உலக ஆண்கள் தின வலைத்தளம் ஆண்களையும், ஆண் குழந்தைகளையும்
பாதுகாப்பது பற்றிச் சென்ற வருடம் சொல்லி உள்ளது!
http://www.internationalmensday.com
Our theme in 2013 Keeping Men and Boys Safe.
மன்னாருக்கு இந்தத் தகவல்களை எல்லாம் மகிழ்சியுடன்
அனுப்பிட்டுருக்கும் போது, ஸோ ஸ்வீட்டின் குரல் “என்னங்க இட்லி ரெடியாங்க? இட்லியும், சட்னியும் செய்ய இவ்வளவு நேரமா? பசிக்குதுங்க. இதான் ஆம்பிள்ளைங்களுக்கும்,
பொம்பிள்ளைங்களுக்கும் உள்ள வித்தியாசம்.”
மன்னாரு அரக்க பரக்க கிச்சன பார்த்து ஓடினாரு. அங்க இட்லி பாத்திரத்தில தண்ணியே இல்ல.....இட்லி? ஹாஹாஹா அப்படியே மாவா இருந்துச்சு!
படங்கள்: இணையம்
படங்கள்: இணையம்

















