ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், போர்னோ மாநிலத்திலுள்ள, சிபோக் நகர, அரசு ரெசிடென்ஷியல் பொதுப் பள்ளியிலிருந்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவில் 200 க்கும் மேலான மாணவிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர். எல்லா மாணவியரும் 12-15 வயதிற்கு இடையே உள்ளவர்கள். இவர்களுடன் 5 ஆசிரியைகளும் கடத்தப்பட்டனர். இவர்களைக் கடத்திச் செல்ல இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயுதமேந்திய 200 பேர் வந்திருந்தனர்.
முகமது யூசுஃப்
அவர்கள், வட
நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தில், 2002ல், முகம்மது யூசுஃப் என்பவரால்
உருவாக்கப்பட்ட “போக்கோ ஹராம்” எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். 500
க்கும் மேலான மொழிகள் பேசும், 350க்கும் மேற்பட்ட இனத்தவர்கள் வாழும்
நைஜீரியாவிலுள்ள, “ஃபௌசா” எனும் மொழியில் “மேல் நாட்டு கல்வி கற்பது பாவம்” என்பதுதான் “போக்கோ ஹராம்” என்பதன் அர்த்தமாம். ஏறத்தாழ 17 கோடி பேர் வாழும் நைஜீரியாவின் வட
பகுதியில் முஸ்லிம்களும், தென் பகுதியில் கிறித்தவர்களும் அதிகமாக வாழ்கின்றார்கள்.
அபுபகர் ஷெக்காவு
நைஜீரியாவில் “சரியத்”தைப் பின்பற்றி ஒரு தனி இஸ்லாமிய நாட்டை
உருவாக்குவதுதான், “போக்கோ ஹராம்” எனும் இவ்வியக்கதிற்கு உயிர் கொடுத்த முகம்மது யூசுஃபின் நோக்கம். யூசுஃபிற்குப் பின் 2009-ல் இவ்வியக்கத்தின்
தலைமை பொறுப்பேற்ற “அபுபகர் ஷெக்காவு” இதுவரை ஏறத்தாழ 5000 பேரைக் கொன்று குவித்திருக்கிறார். மேல்நாட்டு கல்விக் கூடங்களில் பணிபுரிந்த
170க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் ஷெக்காவை எதிர்த்த இஸ்லாமியர்களும் அடக்கம். ஏப்ரல் 14 ம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மாணவியர்களில்
ஏறத்தாழ 50 பேர் எப்படியோ உயிர் தப்பி தங்கள் வீட்டை அடைந்திருக்கின்றார்கள். மீதமுள்ள,
கடத்திச் செல்லப்பட்ட 276 மாணவியர்களைப் பற்றி இது வரை ஒரு விவரமும் இல்லை.
“ஷெக்காவு” இதற்கிடையே வெளியிட்ட ஒரு வீடியோவில் கடத்தப்பட்டவர்களில்
136 மாணவிகள் பர்தா அணிந்து குரான் வாசிப்பதைக் காண்பித்திருக்கிறார். கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையானோர்
கிறித்தவ மதத்தவர்கள். அவர்களை மதம்
மாற்றியதாகவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள “போக்கோ ஹராம்” இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுவிக்காவிட்டால்,
மாணவியர்கள் அனைவரையும் அடிமைகளாக்கி விற்று விடுவேன் என்றும் எச்சரிக்கை
விடுத்திருக்கிறார், ஷெக்காவு.
நைஜீரீயா மக்கள் அனைவரும், இனம், மதம், மொழி பாராமல் கடத்தப்பட்ட
பரிதாபத்திற்குரிய மாணவிகள் பாதுகாபாகத் திரும்பிவர வேண்டி பிரார்த்தனையிலும், போராட்டத்திலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் வேதனைக்குரிய விஷயம்
என்னவென்றால், மாணவியர்கள் “போக்கோஹராம்” இயக்கத்தால் கடத்தப்படவிருக்கின்றார்கள் என்ற விவரம், கடத்தப்படுவதற்கு
5 மணி நேரத்திற்கு முன்பே, தலைநகரான, ‘மைத்துகுரி’யிலுள்ள ராணுவத் தலைமையகத்திற்குத் தெரிய வந்ததாம். அப்படி இருந்தும், தேவையான பாதுகாப்பு
நடவடிக்கையை அரசும், ராணுவமும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. மட்டுமல்ல, இதே பள்ளியில், கடந்த மார்ச் 29 ம்
தேதி, 29 மாணவ, மாணவியர்களைப் “போக்கோ ஹராம்” இயக்கத்தினர் கொன்றிருக்கிறார்கள். இப்படிப்பட்டச் சூழலில், பள்ளிக்குத் தேவையான
பாதுகாப்பு கொடுக்காமலும், “போக்கோஹராம்” இயக்கத்துடன் இராணுவம் நேரடி மோதல் நடத்தாமலும் இருப்பது,
நைஜீரிய மக்களிடையே பலவித சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜனாதிபதி குட்லக் ஜொனாதன்
ஏர்மார்ஷல், அலெக்ஸ் பேடாஹ்
நைஜீரியாவின் ஜனாதிபதியான குட்லக் ஜொனாதனும், இராணுவத் தலைவர்,
ஏர்மார்ஷல், அலெக்ஸ் பேடாஹ்னும், மாணவியர்களைச் சிறை வைத்திருக்கும் இடத்தை அறிந்த
பின்னும், “போக்கோ ஹராம்” இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் போராடி, அவர்களை மீட்க மாட்டோம் என்று
பிடிவாதம் பிடிக்கிறார்கள். இதற்கிடையே 50 மாணவியர்களுக்கு, 100
சிறைப்படுத்தப்பட்ட இயக்கத்தினரை விடுவித்தல் என்று முடிவு செய்து, அவர்களை
விடுவிக்கத் தயாரான அரசு, ஏனோ திடீரென அதிலிருந்து பின் வாங்கிவிட்டது. எனவே, கடத்தப்பட்ட 276 மாணவியர் கதி என்னாகும்
என்ற ஆதங்கம் நைஜீரியாவிலுள்ள மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நல்ல இதயம்
படைத்தவர்களின் மனதை வேதனைப்படுத்துகிறது.
இதற்கு எதிராக, ஃபிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்
நடவடிக்கைகளில் இறங்கிய செய்தி கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. எப்படியோ, மாணவிகள் காப்பாற்றப்பட்டால் போதும்.
உலகிலுள்ள எல்லா மதங்களிலிருந்தும், மிகவும் எளிமையான, மனித
நன்மைக்கும், இறையருளை எளிதாகப் பெறுவதற்கும் தேவையானவற்றை எல்லாம் உட்படுத்தி, நபிகள்
நாயகத்தால் உருவாக்கப்பட்ட, மனிதநேயம், சமத்துவம், தியாக மனப்பான்மை போன்ற
குணங்கள் எல்லாவற்றிற்கும் வழிவகை செய்யும், மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே
பிரார்த்தனை ஒன்றைத் தவிர புரோகிதர்களின் மந்திர தந்திரங்கள் அவசியமில்லை எனும்
உண்மையை நிலை நாட்டிய இஸ்லாம் மதம், வேத நூலான குரானில் 176 வாகியங்களில்
பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பைப் பற்றி விவரிக்கும் இஸ்லாம் மதம்,
பெண்களுக்குக் கல்வி கற்கத் தடை விதிக்கிறது என்பதை மனம் ஏனோ ஏற்க
மறுக்கிறது.
மலேசியாவில்
Pictures courtesy : google
உலகெங்கிலுமுள்ள 60க்கும்
மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில், துருக்கி, மலேஷியா போன்ற நாடுகள், முன்னேற்றத்திற்குத்
தேவையான மாற்றங்களை, மதத்திற்குக் களங்கம் ஏற்படாத விதத்தில் புகுத்தி முன்னேறிக்
கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மேன்மையான மதத்திற்குக்
களங்கம் ஏற்படாதா? உலகெங்கிலுமுள்ள அம்மதத்தின்
தலைவர்களுக்கு, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும்,
அவசியமும் மிகவும் தேவை அல்லவா?.
எல்லா மதங்களும் – மதங்கள் என்றால் மதங்களைக் கையாளும்
ஆண்கள் – பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் ஏனோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை”.....என்று சொல்லும் இந்து மதம் கூட, பெண் மணமாகும்
வரை தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்தும், மணமான பின் கணவனுக்கு பணிவிடை
செய்தும், அதன் பின் மரணம் வரை குழந்தைகளுக்கு பணிவிடை செய்தும் வாழ வேண்டும்
என்று கட்டாயப்படுத்துகின்றது. ஏராளமான
மனைவியருடன் வாழ்ந்த தசரதரையும், அர்சுனனையும், கிருஷ்ணரையும் போற்றிப் பாடும் நம்
புராணங்களும், சில காலம் சிறைவைக்கப்பட்ட சீதையின் கற்பைச் சந்தேகித்து, நிறைமாத
கர்பிணியான அவர் கானகத்திற்கு அனுப்பப்பட்டதை ஆமோதிக்கத்தானே செய்கின்றன! இப்படி, எக்காலத்திலும் ஆணுக்கொரு நீதி,
பெண்ணுக்கொரு நீதிதான் உலகெங்கிலும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
இப்போது பெண்கள் சம உரிமை பெற்று சாதனை புரிந்து வாழும்
மேலை நாடுகளில் கூட, கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்குச் சம
உரிமை வழங்கப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேய்ன் ஆஸ்டின்
(Jane Austen) எனும் முதல் நாவலாசிரியை, நீண்டகாலம், தான் ஒரு பெண் என்பதை
மறைத்து வைத்துத்தான் தன் புதினங்களை (Pride and Prejudice) எழுதிவந்தார். மறைந்த விண்வெளி
வீராங்கனை கல்பனா சாவ்லா, பெண்களுக்குச் சுதந்திரம்
வழங்கும் அமெரிக்கா சென்றுதான் தன் லட்சியத்தை நிறைவேற்றினார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில், ஆண்கள் மட்டும்
பயின்றுவந்த ஏரோனாட்டிக்கல் பொறியியல் துறையில் சேர அவர் நீண்ட போராட்டமே நடத்த
வேண்டியிருந்தது.
எனவே, பெண்களுக்குக் கல்வி அறிவு பெற தடைவிதிக்கும் இது
போன்ற செயல்கள் எங்கு நடந்தாலும், எதன் பெயரால் யார் செய்தாலும் அது
கண்டனத்திற்குரியதே. அதை, சாதி, மதம்,
இனம், மொழி, நிறம் என்று வேற்றுமை பாராமல் எல்லோரும் ஒருங்கிணைந்து எதிர்த்துக் குரல்
கொடுத்து ஆவன செய்தால் கண்டிப்பாக மாற்றம் வரும். பெண்கள் சம உரிமை பெற உதவ
வேண்டும்! மட்டுமல்ல, கடத்தப்பட்ட மாணவியரைத் தீவிரவாதிகளிடமிருந்துக்
காப்பாற்றினால் மட்டும் போதாது, அவர்களிடமிருந்து இஸ்லாம் மதத்தையும் மாசுபடாமல்
காப்பாற்ற வேண்டும்! இந்து மதமும், கிறித்தவ மதமும் புரோகித வர்க்கத்தால்
பலவீனப்படுத்தப்பட்டது போல், “போக்கோ ஹராம்” போன்ற தீவிரவாத இயக்கத்தால், உலகிலுள்ள மற்ற மதங்களைப்
போல் அதிக காலம் உயிர் வாழ வேண்டிய இஸ்லாம் மதம் பலவீனம் அடைந்துவிடக் கூடாது. பெர்ட்ரன்ட் ரஸ்ஸலின் கருத்துப்படி மதங்களின்
ஆயுள் கூடிப்போனால், 5000 வருடங்கள் என்பதை இங்கு நினைவு கூறுவோம்!





















.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)

.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)



