சனி, 15 மார்ச், 2014

இதயத்தைக் (தன் ஒரே) கொடுத்த வள்ளல்!...........

வழக்கமாக வரும் குறுஞ்செய்திகள், மின் அஞ்சல், ஏன் காலை வணக்கம் கூட இன்று வரவில்லை என் தோழியிடமிருந்து! ஏன், என்னாயிற்று என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது! ஏனென்றால், தோழி அப்படிப்பட்ட நபர் அல்ல!  எனக்கு சுடச் சுடச் செய்திகள், பதிவுகளுக்கு என்ன பின்னூட்டம் வந்திருக்கிறது, யார், யார் புது இடுகைகள் போட்டிருக்கிறார்கள், நாங்கள் என்ன பின்னூட்டம் தர வேண்டும் என்று பல செய்திகள் தரவில்லை என்றால் அவருக்குத் தலை அந்தச் சூட்டிலேயே வெடித்துவிடும்!  எனவே, நான் அவரை அழைத்தேன்!

“என்னாச்சு?  இன்று இப்படி ஒரு மௌனம்?”


“அதை ஏன் கேட்கிறாய! நேற்று நாம் போட்ட பதிவு யாரை பாதித்திருக்கிறதோ இல்லையோ நம் மதுரைத் தமிழனைப் பாதித்திருக்கிறது! இன்று அதிகாலை வழக்கம் போல், என்ன பின்னூட்டங்கள் வந்திருக்கிறது என்று பார்க்க நம் வலைப்பூவைத் திறந்தால், ஒரே உப்பு!! என்ன இது என்று பார்த்தால், நம் மதுரைத் தமிழன் நேற்று முழுவதும் வடித்த ரத்தக் கண்ணீர்...ஸாரி உப்புக் கண்ணீர் காய்ந்து போயிருந்தது! கூடவே ஒரு செய்தியும்! இதைப் படி


“லேகா தன்னிடம் இருந்த 2 கிட்னியில் ஒன்றைத்தான் கொடுத்து இருக்கிறார் ஆனால் நானோ என்னிடம் இருந்த ஒரு இதயத்தை என் மனைவிக்கு கொடுத்துவிட்டேன். அதை வாங்கி வைத்து கொண்டு என் மனைவி என்னை நோக்கி நீ இதயமே இல்லாத அரக்கன் என்று சொல்லி அடிக்கிறாங்க இதுக்கு நீங்கள்தான் நியாம் சொல்லி பதிவு போட வேண்டும்”

காரணம் புரிந்தது! எனக்கும் தோழியின் வருத்தம் தொற்றிக் கொண்டு விட்டது! தோழியும், நானும்,  இவ்வளவு தூரம் நம்மை நம்பி, நம் மதுரைத் தமிழன் நியாயம் கேட்கும் போது நாம் பஞ்சாயத்து பண்ணாமல் இருக்க முடியுமா? என்று பேசி, அவரைக் காப்பாற்றக் களத்தில் இறங்க முடிவு செய்து யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அலைபேசி அழைத்தது!  பார்த்தால் நம் மதுரைத் தமிழனின் அன்பு, காதல் மனைவி!


“ஹலோ! இன்று, அவர் உங்களிடம் வந்து விட்டாரா?  ஐயோ!  அதை ஏன் கேட்கின்றீர்கள்!  அவரோடு ஒரே ரோதனையாகி விட்டது! இத்தனை நாள் பொதுவாகத், தன் வலைப்பூவில் எல்லோரிடமும் புலம்பி வந்தவர் சமீப காலமாக, ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால், ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி இப்படி ஏதாவது புலம்பி, லொள்ளு பண்ணி என்னை மாட்டி விடுவது வழக்கமாகி விட்டது! வழக்கமாக அவரது சகோதரிகள் உஷா, ராஜி இவர்களிடம் புலம்புவார்!  சமீபத்தில் வெங்கட் அண்ணனின் வீட்டுக் கதவையும் தட்டியதாக அறிந்தேன்! இதோ இப்போது உங்கள் வீடு!  அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பி வையுங்கள்!”

     “சகோதரி! அனுப்பி வைக்கிறோம்!  ஆனால், தவறாக நினைக்காதீர்கள்! பூரிக்கட்டையைத் தூக்க மாட்டேன் என்று எங்களுக்குச் சத்தியம் செய்யுங்கள்! பாவம் அவர்! உங்களிடம் அவரது இதயத்தையும் தந்து விட்டு, “இதயமில்லா அரக்கன்” என்று உங்களிடம் அடியும் வாங்கினால்....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!”



     “என்னது?!  பூரிக்கட்டையைத் தூக்கக் கூடாதா? அவர் அடிக்கின்ற லொள்ளைத் தாங்குவது நான்! நான் எப்படி என்னைத் தற்காத்துக் கொள்வதாம்?  அவரிடம் ஒரு கேள்வி கேளுங்கள்!  என்னிடம் இதயத்தைக் கொடுத்து விட்டதாகச் சொல்லும் அவர், இதயம் இல்லாமல் எப்படி வாழ்கிறாராம்?  இதயம் இல்லாததால் தானே அவர் இப்படி என்னை மாட்டி விட்டு ஒவ்வொருவரிடமும் புலம்புகிறார்! அப்படியென்றால், அவர் இதயம் இல்லாத அரக்கன் தானே!  சரி சரி.......நேரமாகிறது! எனக்குப் பயங்கரமாகப் பசிக்கிறது! சாப்பாடு செய்ய வேண்டும்! அவரைச் சீக்கிரம் அனுப்பி வையுங்கள்! ஹலோ! அவர்தான் வந்து சமைக்கணும் அதான்......”


நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம்! சகோதரி கண்டிப்பாகப் பூரிக்கட்டையுடன் தான் காத்திருப்பார்! அதுவும் சரிதான்!  ஒருவேளை மதுரைத்தமிழனுக்குப் பூரிக்கட்டை அடி தினமும் பழகிப் போய்விட்டதால், அவரது மனைவி அதைத் தூக்கவில்லை என்றால் ஆள்மாறாட்டம் வந்து விடுமோ?. “என் செல்லமே, இன்று பூரிக்கட்டையைத் தூக்கவில்லையே! இன்று ஏதாவது ஸ்பெஷல் நாளா, நான் என் இதயத்தைத் தந்த நாளா? இல்லை தர்மத்தின் தலைவன் ரஜனி மாதிரி மறந்து போய் வேறு வீட்டுக்குள் வந்து விட்டேனா?” என்று கேட்கப் போய்,  

“ஓ அப்படி வேறு ஒன்று நடக்கிறதா” என்று பூரிக்கட்டை அடி வாங்கியதும்,

“இது அப்படி இல்லை, அந்த அர்த்தம் இல்லை, என் செல்லம், வழக்கமா யார்கிட்டயாவது போய் புலம்புவேன் இல்லையா.....அதுதான்.. ஐயோ!  என் செல்லமே! உன்னைத் தவிர வேறு யாரிடம் பூரிக்கட்டை அடி வாங்குவேன்! அடி வாங்கினாலும் உன் கையால் தானே வாங்குவேன்! அதில்தான் சுகமே! அதற்குத்தானே என் இதயத்தையே உனக்குத் தந்து விட்டேன்!. அது மட்டுமா? உன் இதயத்தைச் சுமந்து கொண்டு, உனக்காக சமைத்து, வீடு சுத்தம் செய்து, நீ களைப்புடன் வரும் போது சுடச் சுடசக் காபி கலந்து கொடுத்து, துணிகள் துவைத்து, இப்படி உனக்காக உழைத்து, உன்னை எப்படித் தாங்குகின்றேன்!  அதைக் கொஞ்சம் யோசித்துப் பார்!”” என்று சொல்லி அதற்கும் சேர்த்து அவர் வாங்கிய அடிகள் எங்கள் நினைவுக்கு வந்ததால் ஒரே யோசனை.

“துளசி...நிறுத்து!....நிறுத்து..!......இங்க ஒரு யோசனை தோணுது...நம் மதுரைத் தமிழனைக் கூப்பிடு அதற்குள் உன்னிடம், அந்த யோசனையைச் சொல்லுகின்றேன்!.......” என்று தோழி சொன்னதும் நாங்கள் அதை ஆலோசித்தோம்!


“மதுரைத் தமிழா...பயப்படாதீர்கள் ....உங்கள் மனைவி உங்களைத் தேடி, எங்களைக் கூப்பிட்டார்!  நீங்கள் இப்போது கண்டிப்பாக அங்கு சென்றே ஆகவேண்டுமாம்!  சமைக்கும் நேரமாம்! அவர்கள் பூரிக்கட்டையுடன் தான் காத்திருக்கிறார்கள்!  ஆனால், பயப்படாதீர்கள்!  இப்படிச் சொல்லுங்கள்! “என் கண்மணி! நான் என் இதயத்தை உனக்குத் தந்தது போல, நீ எனக்கு உன் இதயத்தைத் தந்ததுனால் தானே நான் உயிர் வாழ்கின்றேன்! நீ என் இதயத்தை எப்படிப் பத்திரமாகப் பாதுகாக்கின்றாய்!  என்பதை நினைக்கும் போது உன் அன்பை நினைத்துப் “பூரி”த்துப் போனேன்! அது போல நானும் உன் இதயத்தைப் பாதுகாக்க வேண்டும் இல்லையா?  நீ இப்படி என்னைப் பூரிக்கட்டையால் அடித்தால், அது, நீயே உன்னை அடித்துக் கொள்வது போல ஆகின்றதே!  என்னுள் இருக்கும் உன் இதயம் ரத்தக் கண்ணீர் வடிப்பதை என்னால் தாங்க முடியுமா சொல்?  யோசித்துப் பார்!”

     “இப்படிச் சொன்னீர்கள் என்றால் உங்கள் அன்பு மனைவி கண்டிப்பாகப் பூரிக்கட்டையைத் தூக்கி எறிந்து விட்டு உங்களைக் கட்டிக் கொண்டு விடுவார், பாருங்களேன், All the Best!”  என்று சொல்லி அவரைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தோம்! ஏதோ எங்களால் இயன்ற ஒரு உதவி! கூடவே இதையும் சொன்னோம்! “அதுவும் வேலை செய்யவில்லை என்றால், நாங்கள், இந்த வலைப்பூவில் உள்ள உங்கள் அன்பர்கள் எல்லோரும் எங்கள் இதயங்களை உங்களுக்குத் தரக் காத்திருக்கிறோம்!” என்று!

மதுரைத் தமிழா, “நமது பெரியவர் திரு. இராய செல்லப்பா, நியூ ஜெர்ஸி வருவதாக இருக்கிறாராம். அப்போது அவர் உங்கள் மனைவியிடம் பேசி சமாதானப் படுத்துவதாகச் சொல்லியிருக்கிறார்! எனவே பயப்படாமல் செல்லுங்கள்!”

     மதுரைத் தமிழன் வீட்டிற்குள் நுழையும்போதே, நாங்கள் கொடுத்த யோசனையான டயலாக்கைச் சொல்லிச் சென்றதால், மனைவி மனம் இளகித் தூரத் தூக்கி எறிந்த பூரிக் கட்டை மதுரைத் தமிழனைத் தாக்கியதாகக் கேள்வி!

     என்றாலும் பார்ப்போம், எங்கள் யோசனை அவருக்கு உதவியதா என்று! தகவல் வராமலா போய்விடும்?! காத்திருப்போம்!

பின் குறிப்பு:  மதுரைத் தமிழனுக்குப் பூரிக்கட்டை அடி வாங்கமல் இருக்க முடியாது என்று தெரிகின்றது! நாளே டல்லாகி விடும் போல! அது போல அவரது மனைவிக்கும் அதைத் தூக்காவில்லை என்றால் அந்த நாளே டல்லாகி, அதிர்ஷ்டம் இல்லாத நாளாகி விடும் போலும்!  என்ன ஒற்றுமை பாருங்கள்! MADE FOR EACH OTHER COUPLE!!!!!!!!!!!!!!!!!!!!!????????????????????



வெள்ளி, 14 மார்ச், 2014

லேகா நம்பூதிரி, நீங்கள் தேவதையாகி விட்டீர்கள்.......நன்றி!.....நன்றி!......


இன்று (13.03.2014), உலக சிறுநீரகத் தினம். சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், அதை பழுதடையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தும் நாள்.  சிறுநீரக பாதிப்பால் இறக்க நேரிடும் எத்தனையோ பேருக்கு, குறிப்பாக இளம் வயதினருக்கு, இறைவன் தந்த ஆரோக்கியமுள்ள இரண்டு சிறுநீரகத்தில் ஒன்றைத் தானம் செய்வதால் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரையேனும் உயிர் பிழைக்க வைக்க முடியும்! என்ற உண்மையை உலகெங்கும் பரப்ப வேண்டும் எனும் நன் நோக்கமும் கூட, உகலகெங்கும் கொண்டாடப்படும் இவ்வுலக சிறுநீரக நாளுக்கு உண்டு! இன் நன் நாளில், லேகா நம்பூதிரி (31) எனும், ஆலப்புழா, மாவேலிக்கரையில் வாடகை வீட்டில் வாழும், இரண்டு குழந்தைகளின் தாய்க்கு நாம் எல்லாம் நன்றி சொல்லவும், அவருக்கு எல்லா நன்மைகளும் பயக்க, இறைவனை வேண்டி வழி படவும் கடமைப் பட்டிருக்கிறோம்!


     2010ல் வெளிவந்த மம்மூட்டி நடித்த “லௌடு ஸ்பீக்கர்” (Loud Speaker) எனும் திரைப்படம் பார்த்த பின், திரையரங்கை விட்டு வெளியே வந்த லேகா நம்பூதிரியை, அத்திரைப்படத்தில் வந்த காட்சிகளும், மம்மூட்டியின் நடிப்பும், வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும்!  சில நாட்களுக்கு முன் நிலம்பூரில் நடந்த ஒரு கொலைக்குத் தூண்டுதலான “திரிஷ்யம்” எனும் படத்தைப் பற்றி நான் ஒரு இடுகையில் குறிப்பிட்டிருந்தது உங்கள் நினைவுக்கு வரலாம்!  என்ன செய்ய!  அருகருகே வளரும் மாமரத்தில் மாங்கனியும், வேப்ப மரத்தில் வேப்பங்காயும் தானே உண்டாகும்!


 நல்லவர்கள் திரைப்படத்திலுள்ள நன்மையை உட்கொள்ளும் போது, தீயவர்கள் அதிலுள்ள தீமையை உட்கொள்ளுவது இயல்புதானே! அப்படி, நல்ல மனம் படைத்த லேகா நம்பூதிரியின் மனதில் அப்படம், சிறுநீரகத் தானத்தின் அவசியத்தையும், அதனால் தானம் செய்பவர்க்கு உடல் நலம் ஒருவிதத்திலும் பாதிக்கப்படாது என்பதையும், உயிர் வாழ இரண்டில் ஒரு சிறுநீரகமே போதும் என்பதையும் உணர்த்தியிருக்க வேண்டும்.  அதனால், சிறுநீரகத் தானம் செய்து ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதையும், சிந்தனையையும், முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியிருந்திருக்கிறது!


மறுநாளே செய்தித் தாளில் பட்டாம்பி, விளையூரைச் சேர்ந்த வைலச்சேரியில் ஷாஃபி நபாஸ்(33) எனும், லேகாவின் அதே ரத்த குரூப்பைச் சேர்ந்த ஒருவருக்கு, சிறுநீரகம் தேவை என்ற விளம்பரத்தைக் கண்டதும், இறைவன், தான் எடுத்த முடிவை ஆமோதித்து, தான் உதவ வேண்டிய ஒரு மனிதரைத், தன் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவருக்கு உதவத் தயாராகி இருந்திருக்கிறார்.  நபாஸுக்கு சிச்சையளிக்கும் பெரிந்தல்மன்னாவிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்ற அவர், நபாஸ், நபாஸின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மருத்துவர்களையும் கண்டு, தான் நபாஸுக்கு தன் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்யத் தயார், என்ற விவரத்தைச் சொல்லியிருக்கிறார். 


மருத்துவர்கள் சிறுநீரக தானம் செய்வதால் பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சைனைகளை எல்லாம் விவரித்திருக்கிறார்கள்.  அவையெல்லாம், ஒரு உயிரைக் காக்க துணிந்து இறங்கிய லேகாவை, அவர் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க்ச் செய்யவில்லை! மட்டுமல்ல, பரிசோதனைக்குப் பின் நபாஸின் அப்போதைய உடல் ஆரோக்கிய நிலை சிறுநீரக மாற்றத்திற்கு சாதகம் அல்ல என்றும், நபாஸின் ஆரோக்கியம் திருப்திகரமான பின் தான், சிறுநீரக மாற்றம் நடத்த முடியும் என்றும், அதற்கு ஒருவேளை லேகா ஓரிரு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்ல, லேகா தான் அதுவரைக் காத்திருக்கத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார். 


இதனிடையில், இவ்விவரமறிந்த எத்தனையோ பேர் லேகா நம்பூதிரியை அணுகி, சிறு நீரகம் தேவைப்படும் மற்றவர்களுக்கு சிறு நீரகத்தானம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார்கள்.  அதில் ஒருவர், 15 லட்சம் ரூபாய் சிறு நீரகத் தானத்திற்குத் தரத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.  அதைக் கேட்டும் கூட, லேகாவின் மனம் மாறவில்லை!  லேகா வறுமையில் வாடுபவர்தான். தன் இரு ஆண் குழந்தைகலையும் வறுமை காரணமாக அனாதைகள் இல்லத்தில் சேர்த்து கல்வி பயிலச் செய்யும் அவருக்கு, 15 லட்சம் ரூபாய் எவ்வளவோ அவசியாமான ஒன்றுதான்!  இருப்பினும், தன்னை நம்பி, எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருக்கும் நபாஸை, அவர் ஏமாற்றத் தயாராக இல்லை! பணத்திற்காக நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஏன் பிறந்த நாட்டிற்கே கூட துரோகம் செய்யத் தயங்காத எத்தனையோ மனிதர்கள் வாழும் இதேநாட்டில் தான் இப்படி ஒரு தேவதை! நினைக்கையில், மனதில் உண்டாகும் மகிழ்சியையும், பூரிப்பையும் விளக்க வார்த்தைகள் இல்லை!


     கடந்த 2013 நவம்பர் மாதத்தில், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஷாஃபி நபாஸுக்கு தன் இரு சிறு நீரகங்களில் ஒன்றைத் தானம் செய்து, நபாஸுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்! அவருக்காக வெரும் பிரார்த்தனை மட்டும் போதாது!  நல்ல மனம் படைத்தவர்கள் லேகா நம்பூதிரிக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ, அந்தந்த வகையில் எல்லாம் உதவி, அவரது தியாகத்திற்கு மரியாதை செய்ய வேண்டும்!


ஞாயிறு, 9 மார்ச், 2014

ஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ நாட்டைக் காக்க தேர்தல் களத்தில் குதித்து விட்டார்கள்!!....பரபரப்பான செய்தி! - 2

கவிதையாலேயே ஆட்சியைப் பிடிப்போம் என்று சூளுரைத்து கிளம்பிவிட்டார்கள் 5 பேர். கூடியிருந்தால் கோடி நன்மை! புலவர் ராமானுசம் ஐயா, http://www.pulavarkural.info, திரு. ரமணி, http://yaathoramani.blogspot.in திரு. கவியாழி கண்ணதாசன், http://kaviyazhi.blogspot.com  பரிதி முத்துராசன், http://kavithaivaanam.blogspot.in அம்பாள் அடியாள். http://rupika-rupika.blogspot.com   “ஐயோ!  அடியாள் கட்சியா?  என்று பயந்து விடாதீர்கள்!  அவர் “அடியாள்” அல்ல. “அம்பாள் அடியாள்”! பக்திப் பரவசமாகவும், நல்ல கருத்துக்கள் உடைய கவிதைகளும் எழுதி  உங்கள் எல்லோரையும் கவர்ந்து எங்கள் கட்சிக்கு ஆட்களும், ஆதரவும் தேடுபவர். எங்களுக்கு ஓட்டுப் போடத் தூண்டுபவர்! அவர்கள் கவியை நீங்கள் வாசித்தால் மயங்கி விடுவீர்கள்”! என்ற முன்னுரையுடன் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் அனுபவ முதியவர் புலவர்!

“நாங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தை எங்கள் “தமிழ்கட்சி”யின் வழியாக கவிதைகளால் எல்லோரையும் பரவசமூட்டும் இளைஞர்கள்! நன்றும் தீதும் பிறர் தர வாரா, நாம் என்ன செய்தாலும் அதற்கு நாம் தான் காரணம் என்ற உயரிய எண்ணம் படைத்த திரு ரமணியும், சுவைபட, விழிப்புணர்வுக் கருத்துக்களையும் ஊடுறவச் செய்து, சேர்த்து கவி பாடும் கவியாழியும், கவி பாடினாலும், பல அரசியல் விஷயங்களும், சினிமாவும் பேசி, ஓட்டுப் பெட்டி போட்டு ஓட்டு வாங்கும் பரிதி முத்துராசனும் இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை!?

எங்கள் கவிதைகள் உங்கள் நாடி நரம்புகளை எல்லாம் முறுக்கேற்றி, அன்று பாரதி, பாரதிதாசன் ஆகியோர் இந்திய விடுதலைக்குப் போராடியது போல் நாங்களும், கொட்டு முரசே, சங்கே முழங்கு என்று எங்கள் சங்கநாதத்தைப் பரப்பி தேசப்பற்றையும், தமிழ் பற்றையும் ஊட்டுகின்றோம்! நீங்கள் புதுக்கவிதைக்குத் தாவினாலும், மரபுக் கவிதைகளை மறந்திட மாட்டீர் என்று நம்புகின்றோம்! நாங்கள் பாவலர்கள்!  தருமியின் வழி ஆதலால், இலவசமாக எதுவும் தருவதற்கில்லை! உண்மையான தமிழர்களாகிய, இந்தியர்களாகிய நீங்கள் கண்டிப்பாக எங்களுக்கு ஓட்டளிப்பீர் என்ற நம்பிக்கையில் இத்தோடு நிறுத்திக் கொள்கின்றோம்! இல்லையென்றால், எங்களுக்குப் பழக்கமில்லாத வார்த்தையாகிய “மொக்கை” என்று சொல்லிவிடுவீர்களோ என்றுதான்.”  மறந்துவிடாதீர்கள், எங்கள் சின்னம் “எழுதுகோல்”!

முட்டா நைனா! http://muttanina.blogspot.com மக்களே! முட்டா நைனா என்றவுடன் முட்டாள் என்று நினைத்து விடாதீர்கள்! “செம டேலண்டுபா! நல்ல ஷோக்கா பேசுவாரு! எய்துவாரு”! ஒரே ஒரு கேள்வி கேட்டு தற்போது ஊரையே, சுவற்றில் முட்டிக் கொண்டு, தலை முடியைப் பிய்த்துக் கொள்ளவும், சுவற்றைப் பிராண்டவும் வைத்துக் கொண்டிருப்பவர்!

“மக்களே என் பெயர் பார்த்து ஏதோ என்று நினைத்து விடாதீர்கள்!  நான் சமூகத்தில் மிகவும் நலிந்துள்ள மக்களை அணுகி அவர்களது கண்ணோட்டத்தில் இந்த சமுதாயத்தைப் பார்ப்பதாலும் அவர்களுடன் ஒன்றி வாழ்வதாலும் இந்தப் பெயர்! அந்த மக்களுக்காகப் பாடுபடத்தான் நான், ரம்ணா படத்தில் நம் கேப்டன் மறைந்திருந்து செயல்கள் செய்வது போல், ஆனால் அவரைப் போல் அல்லாமல், புள்ளிவிவரம் பேசாமல், நான் செயலில் காட்ட விழைகின்றேன்! நான் கேள்வி கேட்பேன்! ஆனால் உங்களுக்கு பதில் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்துக் கொண்டே போவேன். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு நிலம் தாண்டி, இருக்கும் ஒரு குகைக்குள், வலது பக்கத்தில் இருக்கும் கதவைத் திறந்து, அதனுள் இருக்கும் நிலவறையைத் திறந்து, அந்த இருட்டுக்குள் பயணித்து, தட்டுத் தடுமாறி, துழாவி அங்கு சுவரில் இருக்கும் ஒரு சின்னப் பொந்தை ஆராய்ந்தால் என் கட்சிக் கொள்கை, என் நோக்கம் எல்லாம் தெரியும்!

 அப்போதுதானே நீங்கள் அதை யோசிப்பதிலேயே நேரத்தைக் கழித்து விடுவீர்கள்!  நான் என்ன செய்கின்றேன் என்று கேள்வி கேட்க மாட்டீர்கள்! ஸ்பா....இப்பவே மூச்சு முட்டுதே என்று வடிவேல் ஸ்டைலில் உட்கார்ந்து விடாதீர்கள்!  எனக்கு ஓட்டுப் போட்டு விட்டு உட்காருங்கள்! அப்புறம் ஓட்டுப் பெட்டி காணாமல் போய்விடப் போகிறது! என் கட்சி “ரகசியச் சோற்றுக் கட்சி”. சின்னம் “மூளை”

“வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்னப் பாக்காம போறியே ஓட்டுக் குத்த” என்ற குரல் கேட்க, திரும்பினால், நமது திரு. இராய செல்லப்பா, http://chellappatamildiary.blogspot.com  பொதுவாக இமயம் என்றால் எல்லோருக்கும் இமய மலைதான் நினைவுக்கு வரும்!  ஆனால், இங்கு இமயம் என்றால், அது இமயத்தலைவன் இவரைத்தான் குறிக்கும்! http://imayathalaivan.blogspot.in  அருமையான எழுத்தாளர்.  இலைமறைகாயாக ஹாஸ்யம் இழைந்தோடும் இவரது எழுத்துக்களில்! தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் என்ற சிறு கதைத் தொகுப்பை வெளியிட்டவர்! பாண்டிச்சேரி அன்னை பக்தன்!

“மக்களே! தமிழ் அன்னை என்னைத் தாலாட்டுகிறாள்! எனவே, தமிழ் மக்களாகிய உங்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகின்றேன்! எல்லோரும் தமிழை வளர்க்க உதவுங்கள்!  நான் ஆட்சி அமைத்தால் தமிழ் வளர மிகவும் பாடுபடுவேன்!  குறிப்பாக எல்லோரும் தமிழைப் பிழை இல்லாமல் எழுத வைப்பேன்!. பல நல்ல புத்தகங்கள் வர வேண்டும், அதை நீங்களும், திருட்டு சிடி வாங்கிப் பார்ப்பது போல், இலவசமாகப் புத்தகம் படிக்காமல்,  காசு கொடுத்து வாங்கி எழுத்தாளர்க்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைப்பவன்!  நீங்கள் இப்படி வாசித்து, எழுத ஆரம்பித்து விட்டால், அரசியல் குட்டையைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?!  நாடே அமைதியாகி விடும்!  “சாந்தி நிலவ வேண்டும்”என்பதை நினைவில் கொண்டு என் சின்னமாகிய “புத்தகத்திற்கு”  வாக்களித்து என் கட்சி “எழுத்தாளர் கட்சி”யை வெற்றி பெறச் செய்யுங்கள்!  கூடவே உங்கள் எல்லோருக்கும், நல்ல தோட்டத்தில் விளைந்த, சுவை உள்ள வெள்ளரிக்காய்கள் இலவசமாக வழங்கப்படும்!

     ஜோதிஜி திருப்பூர் http://deviyar-illam.blogspot.in எங்களைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர்!  மிகச் சிறந்த மனிதர் என்பதை அவர் எழுத்துக்கள் கூறி விடும்! ‘டாலர் நகரம்’, ‘ஈழம்:வந்தார்கள் வென்றார்கள்’, ‘தமிழர் தேசம்’ என்ற அருமையான படைப்புகளுக்குச் சொந்தக்கார்ர்! இதோ அவரது வார்த்தைகளிலேயே......

“மக்களே! எந்த நிலையில் இருந்தாலும் நல்லவிதமாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் ஏராளமான பிரச்சனைகள் இங்கே உண்டு. தினந்தோறும் எண்ணிக்கையில் அடக்க முடியாத கூட்டம் வந்து போய்க் கொண்டே இருப்பதால் உங்களை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகளை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பலசமயம் எதிர் விளைவுகளை உருவாக்கலாம். போட்டி, பொறாமை, வன்மம், குரோதம், எரிச்சல் என்று ஏதோ ஒன்று உங்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கும். அனைத்தையும் கடந்து வந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.  இணையம் என்பது "திறந்த வெளி மைதானம்" என்பது தான் சரியாக இருக்கும். நீங்கள் எங்கு நின்றாலும் ஏதோவொரு வழியில் தெரிவீர்கள். ரகசியங்கள் எதையும் காக்கமுடியாத பெருவெளி. பெரும்புள்ளியாக, சிறுபுள்ளியாக அல்லது கரும்புள்ளியாக. ஏதோவொன்றாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடியும்.  எனவே, நல்ல வகையில், திறம்பட பயன்படுத்தி பயன் அடையுங்கள்! உங்கள் எல்லோருக்கும் இணையம் மூலம் இலவசக் கல்வி கிடைக்கச் செய்வேன்! என் படைப்புகள் இலவசமாக இணையம் மூலம் கிடைக்கும்! உங்கள் ஓட்டையும் இணையம் மூலமே என் சின்னம் “வாள்”க்கு அளித்து விடுங்கள்! என் கட்சி “தமிழர் இணையக் கட்சி”

சுப்புத்தாத்தா, http://subbuthatha.blogspot.in.  இவரைத் தாத்தா என்று நினைத்து விடாதீர்கள்! மார்கண்டேயர்! மனுஷர், “வாடா மாப்பிள்ள வாழைபழத் தோப்புல வாலிபால் ஆடலாமா” என்று கேட்கும் அளவு நகைச்சுவை வாலிபர்! கணவன்மார்களுக்கு மனைவிகளை எப்படி சமாளிப்பது என்று பாடம் எடுப்பவர்! நல்ல அனுபவம் உள்ளவர்! எனவே, இவருக்கு ஆண்கள் ஓட்டு நிச்சயம்! 

“மக்களே! எனக்கு வயதாகி விட்டது என்று நினைத்து விட வேண்டாம்!  உங்களைப் பரவசப்படுத்தும் அளவு நகைச்சுவைகளை அள்ளித் தெளித்து எனக்கு ஓட்டு போட வைத்து மற்ற கட்சிகள் பக்கம் அண்ட விட மாட்டேன்!  வேண்டும் என்றால் எந்தெந்த நாட்டு அரசியல் தலைவர்கள் நம்ம ஊர் தலைவர் “சுவாமி” மாதிரி கோமாளிகளாக இருக்கின்றார்கள் என்பதை ஆய்ந்து வீடியோ பதிவுடன் தருகின்றேன்! அதைப் பார்த்தால், உங்களுக்கே தெரியும் இங்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று! ஆம்! எனக்குத்தான்! உங்கள் குழந்தைகளைத் தூங்க வைக்க வேண்டுமா கவலைப் படாதீர்கள்!  யாமிருக்க பயமென்? எனக்கு நல்ல அனுபவம் உண்டு!  வருகிறேன் உங்களுக்கு உதவ! ஆனால், நீங்கள் தூங்கிவிடக் கூடாது! 

புலியை முறம் கொண்டு விரட்டிய மனைவிமார்கள் இருக்க நாம் பூனையாகத்தான் இருக்க வேண்டுமோ என்று நினைக்க வேண்டாம் ஆண்களே!  பாக்கியம் ராமசாமியின் சீதாப் பாட்டி போன்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசும் மனைவிகள் இருந்தாலும், நாமும் கராத்தே பயிற்சி எடுத்துக் கொள்வோம்!  வெத்து வேட்டாக இருக்க வேண்டாமே என்றுதான்! இப்படி, பல ஆலோசனகளை இலவசமாக வழங்குவேன்! ஓட்டுப் போடுங்கள்! வேட்டு வைத்து விடாதீர்கள்! என் மனைவியிடம் மாட்டிக் கொள்வேன்! எனவே நம் கட்சி “டைகர் கட்சி” சின்னம் “புலிதான்” – ‘ஐயோ!  புலி என்றாலே பயமா இருக்கு! அரசியலில்! எங்கின்றீர்களா?!! அப்பா, இது அந்தப் புலி அல்லப்பா! வீரம் காண்பிக்கும் பூனைப் புலிதான்!”

கோவை ஆவி, http://www.kovaiaavee.com படம் பற்றிய பதிவுகள் அதிகம் போட்டாலும், கதைகளும், விமர்சனங்களும், எழுதிக் கலக்குபவர்! சமீபத்தில் ஆவிப்பா எழுதி காதலர்களை உணர்ச்சிவசப்பட வைத்தவர்! திரைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் இருக்கும் குடந்தையூர் சரவணனுடன் கூட்டணி அமைக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவரை, வாத்தியார், http://minnalvarigal.blogspot.com. ஸ்கூல்பையன், http://schoolpaiyan2012.blogspot.com. அரசன், http://karaiseraaalai.blogspot.in, சீனு, http://www.seenuguru.com. ரூபக்  http://www.rubakram.com போன்றோருடன் நட்புவட்டத்தில் பார்த்ததால் அவரைப் பிரிக்கவில்லை! அவர்கள் எல்லோரும் கூட்டணிக் கட்சி!  இவர்களது கட்சி “தோழர்கள் கட்சி”.  சின்னம் “நூலகம்”.  இவர்கள், அடிக்கடி சந்திக்கும் இடம் பீச் என்று தெரிகிறது!  பீச்சுக்கு, எதுக்குச் செல்கின்றார்கள் என்று கேள்வி எல்லாம் கேட்காதீர்கள்! பீச்சுக்கு எதுக்குச் செல்வார்கள்?!!!! இலக்கியம் என்று சொல்லிக் கொள்கின்றார்கள்!  விட்டு விடுவோம்!

     இவர்களின் தலைவர் “வாத்தியார்” என்பதால் சிறிதாக எம்.ஜி.ஆரின் படமும் அங்கங்கே காணப்படலாம்! ஆனால் இந்த வாத்தியார் அந்த வாத்தியார் அல்ல! இவர் திரு. பாலகணேஷ்!

     “நாங்கள் சிரிக்கவும் வைப்போம்! சிந்திக்கவும் வைப்போம்! திடங்கொண்டு போராடும் சீனுவும் இருப்பதால் எங்களால் போராட முடியும்! நாங்கள் புத்தகங்களைக் கூறு போட்டு அலசி விமர்சிப்பது போல்!  ஊழல்களையும் அலசித், துவைப்போம்! எல்லோரும் நிறைய வாசிக்க வேண்டும்! எனவே எங்கள் வாசகர் கூடத்திற்கு http://vasagarkoodam.blogspot.com  வந்து வாசித்து  அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்! மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா “நடிகை/நடிகரின் முகவரியை மூளையில் சேமித்து வைப்பதற்குப் பதில் அந்த இடத்தில் நல்ல விஷயங்களைச் சேமிக்கலாம்” என்று சொன்னதையே நாங்களும் முன் மொழிகின்றோம்! படித்தவர்கள் வந்தால் நாடு உருப்படும்! தலை முடி கொட்டி வழுக்கை விழுதால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! எங்கள் குழு பெரிது என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை பகிர்ந்து கொள்வோம்! நாங்கள் ஊருராய் சுற்றிக் கொண்டே இருப்போம்! அப்பதானே உங்கள எல்லாம் வந்து பார்க்க முடியும்!!

உதாரணமாக ஆவி http://www.kovaiaavee.com (இங்கே பாருங்கள் நாங்கள் இதை எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அவர் பெயருக்கு ஏற்ற ஒரு பதிவு “அமானுஷ்யம்” னு போட்டிருக்கிறார். சைக்கோனு அருமையான படம் அல்ஃப்ரெட் ஹிச்சாக் அதுவும் போட்டுருக்காரு) உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் வந்து நாட்டு நடப்புகளையும், சினிமாக்களையும் கண்டு வந்து ரிப்போர்ட் தருவார்!  ஸ்கூல் பையன், பிள்ளைகள் எல்லோரும் ஒழுங்காக பள்ளி செல்கிறார்களா என்று பார்த்துக் கொள்வார்! பெற்றோருக்குக் கவலை இல்லை! ஒருவர் இந்த மண்ணின் வேர்கள், அதாவது நம் கலாச்சாரம் எல்லாம் பசுமை மாறாமல் இருக்கின்றதா, என்று பார்த்துக் கொள்வார்! எங்களைக் கரை சேரா அலைகள் என்று எண்ணிவிட வேண்டாம்!  கரை சேரா அலைகள் என்றால் தீயவற்றின் கரைகளைத் தொட மாட்டோம் என்பதுதான் அர்த்தம்! உங்கள் எல்லோருக்கும் மொறு மொறு மிக்சர் இலவசமாக அளிக்கப்படும்! கலர் பென்சில்களும் இலவசமாக அளிக்கப்படும்! ரூபக்ராமைச் சாப்பாட்டு ராமன் என்ரு நினைத்துவிட வேண்டாம்! கனவுகளோடு இருப்பவர்! http://www.rubakram.com எங்கள் கனவுகள் மெய்ப்படவேண்டும்! அதை எங்கள் வலைப்பூக்களில் தெரிந்து கொள்ளலாம்! எனவே உங்கள் எல்லோரையும் எங்கள் கட்சிக்கு உத்தரவின்றி உள்ளே வரவும், ஓட்டு போட்டு ஜெயிக்கவும் வைக்க வேண்டுகின்றோம்!”

     நீங்கள் எல்லோரும் எங்கேயோ இருந்து கொண்டு கட்சி அமைத்து பேசும் போது நான் இந்தியாவின் தலைநகரில் இருந்து கொண்டு தில்லிக்கு ராஜாவாக.... என்று சொல்லி வந்தார் திரு வெங்கட்நாகராஜ்!

     “மக்களே! “Don’t talk philosophy to a Beggar” என்று ஆங்கிலத்தில் உள்ளதற்கு மாறாக நம் திருவள்ளுவர் “செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்று சொன்னாலும், உங்கள் செவிக்கும், கண்ணிற்கும் பல நல்ல வீடியோக்களைத் தரும் முன், நல்ல பதிவுகள் இட்டு சிந்திக்க வைக்கும் முன், ஆன்மீக உலா அழைத்துச் செல்லும் முன்  உங்களுக்கு எல்லாம் மிகவும் சத்துள்ள் உணவான ஃப்ரூட் சாலட் இலவசமாகத் தருகிறேன்! அதில் கண்டிப்பாக நெல்லிக்காய் இருக்கும்! “மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்” என்பதாலும், நம் ஔவைப் பாட்டியும், நெல்லிக்கனி இளமையாக வைக்க உதவும் என்று அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்தது போல உங்கள் எல்லோரையும் இளமையாக வைத்திருக்கத்தான் நெல்லிக்கனி! 

அப்படித் தந்தால் தான் நான் சொல்பவற்றை உங்கள் மனதில் பதியவைக்க முடியும் என்ற நம்பிக்கையில்! இளமையாக இருந்தால்தான் கடினமாக உழைக்க் முடியும் என்பதாலும்தான்! வெளியூர் சென்று உழைப்பதற்கு பதில், நம் ஊரில் உழைத்து நம் நாட்டை மேம்படுத்துங்கள்!  என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைத்து, நான் தலைநகர் தில்லியில் இருப்பதால், வெகு எளிதாக, இந்தியா கேட் வழியாக பார்லிமென்டில் நுழைய முடியும், செங்கோட்டையையும் (திருநெல்வேலி அருகில் உள்ள செங்கோட்டை அல்ல) அடைய முடியும்! என்பதால் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்! எனது கட்சி “வந்தேமாதரம் கட்சி”.  சின்னம் “ஃப்ரூட்சாலட்”!”

     தளிர் சுரேஷ் http://thalirssb.blogspot.com. இவரது டெக்னிக் அருமை! பாப்பா கதைகள் பல எழுதி பாப்பாக்களை எல்லாம் ஈர்த்துவிட்டால், அவர்களால், வயது காரணமாக ஓட்டுப் போட முடியாவிட்டாலும், அவர்கள் தங்கள் பெற்றோரிடமும், பெரியவர்களிடமும், “சுரேஷ் மாமாக்கு ஓட்டு போடுங்க” அப்படினு ஓட்டு சேகரிப்பாங்கனு நம்பிக்கையில் இருக்கிறார்! 

“மக்களே! குழந்தைச் செல்வங்கள் தான் இந் நாட்டின் நாளையச் சிற்பிகள்! எனவே அவர்களை என் எண்ணங்களாலும், எழுத்தோவியங்களாலும் செதுக்கி பண்படுத்த நினைக்கின்றேன்! அதனால் தான், அவர்கள் க்ற்றுக் கொள்ள வேண்டியும், அவர்களுக்கும் தமிழ் மீது ஆர்வம் வரவேண்டும் என்றும்,  தமிழ் மீதுள்ள பற்று காரணமாக தமிழ் இலக்கணம் கூட கற்பித்துத் தருகின்றேன்! இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதைக் கற்கலாம்!  என் கட்சி “பாப்பாக் கட்சி”  சின்னம் “குச்சிமிட்டாய்”. மறக்காமல் நாளைய சிற்பிகளின் நல்வாழ்வுக்காக எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வையுங்கள்!

குடந்தையூரார் (சரவணன்) http://kudanthaiyur.blogspot.in  சினிமா ஆர்வம் உள்ளவர்! சமூகத்திற்கும் நல்லது செய்ய விழைபவர்! கட்சி “சமூகச் சீர்திருத்தசினிமா கட்சி”. சின்னம் “படச்சுருள்”.  இனிமையானவர்!

     “எங்களைச் சினிமாக்காரர்கள் என்று நினைத்து விடாதீர்கள்!  இன்று சினிமா இல்லாத அரசியல் இல்லை! அரசியல் இல்லாத சினிமா இல்லை!  உங்களுக்கு இலவசமாகச் சினிமா காட்டுவோம்! கேளிக்கை வரி இருக்காது! மக்களில் பலர் படிப்பறிவு இல்லாமல் இருப்பதால், அவர்களையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நாங்கள் படங்கள் மூலமாகவே எங்கள் ஆட்சியை நடத்துவோம்! எல்லாமே விஷுவல்ஸ்தான்! மக்களே!  உங்களுக்கு டென்ஷன் என்பதே இருக்காது! எனவே எங்கள் கட்சிக்கு ஓட்டளியுங்கள்! படம் காட்டுகிறோம்!”

காமக் கிழத்தன் http://kaamakkizaththan.blogspot.in.  பேர்தான் அப்படியே தவிர மனிதர் மிக நல்ல கருத்துக்களைச் சொல்பவர்!  கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்! ஆனாலும், மனித நேயம் மிக்க நல்ல மனிதர்!  மிக நல்ல கதைகள் தருபவர். அறிவியலில் நாட்டம் கொண்டு ஆராய்பவர்! அறிவியல் மூலம் கடவுள் பற்றி கேள்வி கேட்பவர்! நல்ல எழுத்தர்! அவர், அடிக்கடி பிரயாணத்தில் இருப்பவர்!  அவரது கட்சி “மனிதநேயக் கட்சி”. சின்னம் “டார்வின்/முட்டை” (முட்டையிலிருந்து கோழிக் குஞ்சு வந்ததா?  கோழியிலிருந்து முட்டை வந்ததா? இது உங்களுக்கான கேள்வி!)

“கடவுள் என்பவர் கேள்விக்குறியே! அவர் இருக்கிறாரா என்று கேட்டால் இல்ல என்பேன் நான்! மூட நம்பிக்கைஅகளை அறவே ஒழிக்கப் பாடுபடுவேன், பெரியார் வழியில்!  பல இது போன்ற விஷ(ய)ங்கள் தான் உங்களை எல்லோரையும் குழப்பி விடுகின்றது!  மக்களே! அறிவியலை ஆராயுங்கள்!  தெளிவான சிந்தனைகளுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!  உங்கள் இறை நம்பிக்கையை நான் சாட வில்லை! கடவுள் இல்லை என்றுதான் சொல்லுகின்றேன்! கடவுள் என்பதை விட சக மனிதரை மதிக்கவும், அன்பு செய்யவும் கற்றுக் கொள்ளுங்கள்! உயிருடன் இருக்கும் போது மனிதனை நேசிக்காமல், இறந்த பிறகு சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை! பரஸ்பர மனித நேயமே எனது கொள்கை! இதை நீங்கள் கடைபிடித்தால், சாதி, மத வேறுபாடுகள், சண்டைகள் இருக்காது!  நாடு அமைதியாக இருக்கும்! சிந்தியுங்கள்!  எனக்கு ஓட்டளியுங்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்!”

கும்மாச்சி! http://www.kummacchionline.com இவர் எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்! ஆனால் இவரது ஸ்பெஷல் “ஃபிகர்” போட்டு மக்களைத் தன்பக்கம் இழுப்பது!

 “மக்களே!  நான் உங்களுக்கு பல நல்ல விஷயங்கள் செய்ய உள்ளேன்!  என்ன எனக்கு கொஞ்சம் நேரம் போதவில்லை!  பல ஊர்கள் சுற்றிக் கொண்டிருப்பதால்!  எல்லாம் உங்களுக்காகத்தான்! நம்புங்கள்! உங்களுக்கு இலவசம் “காக்டெயில்” அதுதான் என் சின்னமும் கூட! என் கட்சி “கலர் கட்சி”  நான் என்ன பேசினாலும் கண்டிப்பாக்க் கடைசியில் நல்ல ஃபிகர் படம் உண்டு! எனவே எல்லோரும் எனக்கு ஆதரவு அளித்து ஓட்டுப் போடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்!

இன்னும் பலர் இருக்கின்றார்கள்! எங்கள் ஏரியா பெரிதாகிக் கொண்டே போகின்றது! அறிவிப்பு இடுகையும் பெரிதாகி விட்டது! அதனால், நாங்கள் இன்னும் சில ஏரியாக்கட்சிகளைப் பற்றி பகிர முடியவில்லை!

    இதற்கே மக்கள் குழம்பிப் போய் இருக்கின்றார்கள்!  நாட்டில், எந்தக் கட்சி நல்ல கட்சி என்று ஆராய்வது மிகக் கடினம் என்பதால்! (அதாவது எந்த சாக்கடை நல்ல சாக்கடை) எந்தக் கட்சிக்கு ஓட்டு என்ற குழப்பம்!  இங்கோ, எல்லா கட்சிகளுமே நல்ல கட்சிகள், வேட்பாளர்களும் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்களே!!!! எந்தக் கட்சிக்கு ஓட்டு என்ற குழப்பம்!  எங்களுக்கு வந்த செய்தி என்னவென்றால், மக்கள் எல்லோருக்குமே ஓட்டுப் போடத் தீர்மானித்துள்ளதாக!  எல்லோருமே மனிதாபிமானம் மிக்கவர்களாகவும், நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பதால், எல்லொருமே ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஒரே கட்சியாக இருந்துவிடுவார்கள்! அதனால் எல்லோருக்குமே ஓட்டு! என்று!

கீதா! அங்கிருந்து ரெண்டு சகோதரிகளின் குரல் கேட்கிறதே! அங்க பாரு, சகோதரிகள் ராஜியும், உஷாவும் தான்....

     “பெண்கள் சிலர், எங்க அன்ணன் மதுரைத் தமிழன் கட்சியில இருக்கிறாதா கேள்விப்பட்டோம்! அது வேறு யாரும் இல்ல உங்க கீதாதான்....  அவங்களும் லொள்ளாமே!!!...அண்ணனோட கட்சியாமே! ரொம்ப லொள்ளு பண்றாங்களாமே! அதான், இவ்வளவு தைரியமா இங்க கலாய்சிருக்கீங்களா?!!!  இதோ! வர்ரோம்....உங்க ரெண்டு பேரையும் என்ன செய்யறோம் பாருங்க.....த்தா....கட்டையை எடுங்கப்பா.... .இவ்வளவு நேரம் எங்களப் பத்தி அலசின உங்கள யாரு அலசுரது?  இதோ வர்ரோம்!!!!! 

ஆஹா! கீதா!... குரல் கேட்டுச்சுல......நான் எவ்வளவோ சொன்னேன்....நீ கேக்காம அத இத சொல்லி இப்ப என்னையும் மாட்டி விட்டுட்ட.....ஐயோ!  ஸார்.....அண்ணே!....ஐயா!......நான் வெளியூர்............எனக்கு ஒண்ணும் தெரியாது!!?? ஐயோ!  யாரும் கேக்கற மாதிரி இல்லையே!!!. அவங்க எல்லாம் துரத்தி நம்மள அடிக்க வரதுக்குள்ள ஓடிக்கோ!.....ஓடு....ஓடு.... 

துளசி!..... ஓடிக்கோ! விடு ஜூட்! எஸ்கேப்!.....