திங்கள், 23 டிசம்பர், 2013

ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் ஒழுக்கி விடும் துணிகள் தருவதோ 36 லட்சம்......


எப்படி இருந்த நான் கீழே பாருங்கள் இப்படி  ஆயிட்டேன்!!!!

15 வருடங்களுக்கு முன்பு வரை பம்பை நதியில் குளித்துத் தங்கள் பாவங்களை கழுவும் பக்தர்கள்தான் இருந்தார்கள். தாங்கள் உடுத்தியிருக்கும் துணிகளில் அந்த பாபங்கள் ஒட்டிக் கொண்டு தங்களைத் தொடரும் என்ற எண்ணம் உண்டாதாலோ என்னவோ,
1990 க்குப் பிறகு தாங்கள் உடுத்தி இருக்கும் துணிகளை ஒழித்து விடும் வழக்கம் ஐயப்ப பக்தர்களிடையே அதிகமாகி விட்டது. இது பம்பா நதி நீரை மாசு படுத்தி, குளிக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு அரிப்பும், அதனால் உண்டாகும் தடிப்பும் ஏற்படத் தொடங்கியது.  எனவே தேவசம் போர்ட் துணிகளை நீக்க முடிவெடுத்து நீக்கி பம்பா நதியைச் சுத்தப்படுத்தியது.
நீக்கப்பட்ட்த் துணிகளில், நல்லவைகளை விற்ற, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நல்ல ஒரு தொகை கிடைக்க, அடுத்த வருடமே அவர் ரூ. 11,000 க்கு, துணிகளை பம்பா நதியில் இருந்து எடுக்க டெண்டர் எடுத்து விட்டார்.

என்னை வைத்தும் வியாபாரம் நடக்கிறது!! கேடுகெட்ட விந்தையான உலகம்!!


      ஒவ்வொரு வருடமும் ஏலத் தொகை கூடிக் கூடி வந்தது. போன வருடம் அது 30 லட்சம் ரூபாயானது.  இவ்வருடமோ அது 36 லட்சமாகி இருக்கிறது. இப்படி செய்பவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் ஆந்திர மாநிலத்தையும், இரண்டாம் இடம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்காம். போகிறப் போக்கைப் பார்த்தால் பாபம் செய்தவர்களின் துணிகளை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து, பம்பா நதியில் போடவும் வாய்ப்புண்டு.  தேவசம் வருமானம் கூட்ட இப்படி விடப்படும் துணிகளுக்கு டிக்கெட் வைக்கலாம். நல்ல நேரங்களில் நதியில் விட்டால் நல்ல பலன் உறுதி என்று யாரேனும் சொல்லக் கேட்டால், பின் பம்பா நதியில் நல்ல நேரத்தில் ஒழிக்கி விட நீண்ட க்யூ.  இப்படி அந்தத் துணிக் கதை, ஒழிகிக் கொண்டே இருக்கத்தான் செய்யும்.  நம் நாட்டில் இப்படித்தான் எப்போதும் இறை உணர்வும் மூட நம்பிக்கைகளும் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு இடுவது போல் சம்பந்தப் படுத்தப்படும்.  படித்தவர்களும் பாமரர்களும் கண்முடித்தனமாக இதைப் பின்பற்றத்தான் செய்வார்கள்.  இதை விட, சபரி மலைக்கு வரும் முன், இப்படிச் செய்பவர்கள், ஒரு ஜோடி ஆடைகளை ஏழைகளுக்குக் கொடுத்து, பின்னர் ஐயப்பனை தரிசிப்பது இதை விடச் சிறந்தது.  அன்ன தானம் ஐயப்ப பக்தர்களால் மிகச் சிறப்பாகச் செய்யப்படுவது போல் ஆடை தானம் செய்யப்பட்டால், கலியுக வரதனின் அருள் நிச்சயம்!! 

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

அரட்டை அகம் 5 எங்கள் கதை...இது உங்களின் கதை.....தமிழில் எழுதல் எங்கள் வேலை!!.....


நாரதர்: சம்போ ! மாஹா தேவ! சம்போ மஹா தேவ!!

மஹாதேவர்: என்ன நாரதரே! அதிசயமாக என் பெயரைச் சொல்லி இந்தப் பக்கம்?!! வழக்கமாக தாங்கள் வைகுண்டத்தில் தங்கள் நாராயணனிடம் தானே போவீர்கள்! அதுவும் இது மார்கழி மாதம் விஷ்ணு லோகத்தில் திருப்பாவை ஓதிக் கொண்டு இருப்பீர்கள் என்று நினைத்தேன்!!! என்ன விஷயம்? ஏதோ இருக்கிறது!

நா: ஐயோ! அதை ஏன் கேட்கின்றீர்கள்! பூலோகத்தில் துளசிதரன் என்று ஒருவர் உங்கள் தீவிர பக்தன், ரசிகன், உங்கள் பெயரில் ஒரு வலைப்பூவே தொடங்கி அவரும் அவர் தோழியுமாக ஏதோ எழுதி வருகின்றார்கள்!  உங்கள் லோகத்திற்கு நான் விசிட் செய்ய வில்லை என்றால் அவர் தில்லைஅகத்துக்குள் நான் என்டெர் செய்ய அனுமதி கிடையாது! அது சரி மார்கழி மாதத்தில் உங்களையும் தானே திருவெம்பாவை சொல்லிப் பாடுகின்றார்கள். அது மட்டுமா, எப்போதும் சைவர்கள் தேவாரமும், திருவாசகமும் பாடிக்கொண்டுதானே இருக்கின்றார்கள் அப்புறம் என்ன?

மஹா: என்ன செய்ய உங்கள் பூலோகாத்தில் எங்கள் இருவரையும் வடதுருவம், தென் துருவமாக ஆக்கித்தானேப் பார்க்கின்றார்கள்! உங்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போல, பின்னர், கமல் ரஜனி போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்....சரி அதை விடுங்கள்! உங்கள் பூலோகப் பட்டை, நாமப் பிரச்சினை இங்கு வேண்டாம்! அது சரி! என் பெயரில் வலைப்பூவா? வலை தெரியும், பூ தெரியும்.  காதுல பூ என்பது போல ஏதாவது...... அது என்ன வலைப்பூ.... அதுவும் என் பெயரில்?

நா: அதுவா வலைப்பூ என்றால் இணயதளத்தில்.....ம்ம்ம்ம்ம் (இவருக்கு எப்படிச் சொல்லிச் தொலைக்க?! எதையாவது சொல்லி அந்த நக்கீரன் மாதிரி மாட்டிக்கக் கூடாது) வாசிக்கும் ஒரு தம்மாத்துண்டு இதழ் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்!  அதில் அவரவர் என்ன வேண்டுமானாலும் தங்களுக்குத் தோன்றியதை எழுதுவார்கள்! யாருடைய தலையும் உருளும்! உங்கள் அதான்பா “கடவுள்” தலையிலிருந்து, உலக அரசியல தலைவர்கள் எல்லார் தலையையும், நடப்புகள் எல்லாத்தையும் உருட்டுவார்கள். கிழிப்பார்கள்! நக்கலடிப்பார்கள்! எல்லாமும்தான்! நீங்க எப்போ பூலோகத்துல இருந்தீங்க...லெமூரியாவா அப்படி இப்படினு எல்லாம் ஆராய்ஞ்சாங்க.......சார்வாங்கன் அப்படினு ஒருத்தர் இருக்காரு இன்னும் நான் அவர் வலைக்குள்ளப் போகல......அவரு வந்து நல்ல argument பாயிண்டு எல்லாம் வைச்சுட்டுப் போவாரு....ஆது சரி உங்கள் கழுத்தில் உள்ள “கருடா சௌக்கியமா’ னு கேக்குமே அதக் காணூமே?

மஹா: அதைத்தான் நானும் ஒரு 4,5 நாட்களாகத் தேடிக் கொண்டு இருக்கிறேன்! எனக்கென்னமோ அது பூலோகத்திற்கு போயிருக்குமோ என்ற சந்தேகம்!

நா: ஓ!! அதுதான் விஷயமா.....நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் பாம்பு “மலரின் நினைவுகள்” மலர்வண்ணன் அலுவலகத்தில் இருந்ததுதான் என்று நினைக்கிறேன். அவர் வீடியோ கூட போட்டுருக்காரு.  அதப் பார்த்து உங்க பாம்பானு பாருங்க!! அவரு அதப் பிடிக்க வனத்துறையக் கான்டாக்ட் பண்ணி அப்புறம் பாம்பு பிடிக்கறவரைத் தொடர்பு கொண்டு..... ஆனா அந்தப் பாம்பாட்டி இவர நல்லா ஆட்டி வைச்சுருக்காரு.  பாம்பு இப்ப எலிவளைக்குள்ள.  அப்பப்பத் தலைய நீட்டி பாக்குதாம். தலைய நீட்டும் போது பாம்பாட்டிய கால் பண்ணனுமாம்! அது மட்டும் இல்ல அவர போயி வெத்தல பாக்கு வைச்சு கூட்டிட்டு வேற வரணுமாம்....அவரு கூட்டிட்டு வர வரைக்கும் இந்தப் பாம்பு அப்படியே வெளிய தலைய நீட்டிட்டு பராக்கு பார்த்துட்டு இருக்குமாம்......நல்ல தமாஷ்!

மஹ: பாவம் மலர் வண்ணன், பாம்பு பிடிக்கின்றவரை ஏன் தொடர்பு கொண்டார் அவர்? என்னைக் கூப்பிட்டிருந்தால் போதுமே!  நான் போய் பிடித்துக் கொண்டு வந்திருப்பேனே!
 
நா: சொல்லறேன் அவர்கிட்ட!  இதுக்குத்தான் நான் போனதடவையே சொன்னேன்! ஒரு நல்ல லாப்டாப் வைசுக்கங்கனு! பூலோகத்த தொடர்பு கொள்ளறது ரொம்ப ஈசி! டெக்னிகல் ஹெல்புக்கு, DDனு பேரு! அவரைக் கான்டாக்ட் பண்ணலாம்!

மஹா: DD!? இந்த விஜய் டி.வி ல கூட வருவாங்களே? அழகாக! திவிய தர்ஷினினு...அவர்களா....அப்படியே என்னை ஒரு பேட்டி எடுக்கச் சொல்லுங்கள்!..நம் டைரக்க்டர் அதுதான் நம் பாம்பு ஒரு படம் எடுக்கப் போகிறார்......?

நா: (என்ன இவரு பயங்கரமா இங்க இருந்துகிட்டு டி.வி.லாம் கூட பார்த்து ஜொள்ளு விடுவாரு போல...சொல்லுவமா அதே சானல்ல உங்களப் பத்தி கூட சீரியல் எல்லாம் வருதுனு.....) ஐயோ! மஹாதேவா! நான் சொல்லுவது அவர் அல்ல! இவரு திண்டுக்கல் தனபாலன்! நல்ல மனுஷர் சுருக்கமாக DD  னு அழைக்கிறாங்க!!தங்கமான குணசீலன்! உடனே ஹெல்ப் பண்ணுவாரு!  நீங்களூம் உங்கப் பங்குக்கு மக்களக் கிழிக்கலாம்!

மஹா: அப்படியென்றால் அவரை உடனே தொடர்பு கொண்டால் ஆயிற்று! சரி வேறு யார் யார்?

நா: (இன்னும் கம்ப்யூட்டரே வாங்கல....) மதுரைத் தமிழன்னு ஒருத்தர் இருக்காரு! அவரு அமெரிக்காவுல இருந்து விடுற ரவுசு இருக்கே!...தாங்க முடியல...அவரு என்னிக்கு அவரு வொய்ஃப் கிட்ட கல்தா வாங்கப் போறாருனு தெரில!!

மஹா: என்ன நாரதா இது என்னென்னமோ வார்த்தைகள் பேசுகிறீர்! தேவலோக பாஷை மறந்து விட்டதா?! அது என்ன ரவுசு..... ...கல்தா...
.
நா: அதுவா அவரு மனைவியை வைத்து அடிக்கும் லூட்டி...பூரிக்கட்டையால் அடி வாங்குவாராம். வாங்கினாலும் அவருடைய லூட்டியை விட மாட்டாராம்.... தாங்கல...அதான் அவரு மனைவி அவர என்னைக்குத் தொரத்த போறாங்கனு.......ரொம்ப சூப்பரான நகைச்சுவை! அரசியல் எழுதினாலும் சூப்பர்தான்! கலாய்ச்சு தள்ளுறாரு! அப்புறம் என் தமிழ் சென்னைக்குப் போனதுல அங்க முட்டா நைனானு ஒருத்தர் அவர்கிட்ட பேசினதுல வந்த எஃபெக்ட். தப்பா எடை போட்டுறாதீங்க. அவுரு சென்னைத் தமிழ்ல பிஸ்தா.  செந்தமிழலயும் வூடு கட்டி அடிப்பாரு. தலையில்லா முண்டம்னு ஒண்ணு படா ஷோக்கா எய்துராரு... பேருதான் அப்படி...முட்டா நைனாலாம் இல்ல..படா நைனா
கவியாழி கண்ணதாசன்னு......கவிதைல பின்னுராரு...ரொம்ப ஆழமானக், கருத்துள்ள கவிதைகளா இருக்கும். மேலும்,  அழகா எழுதற அதுவும் கவிதை பாடறவங்க இருக்காங்க பெண்கள்...நல்லா பதிவு எழுதற பெண்கள் இருக்காங்கா......நான் அவர்கள் பக்கம் போகல..ஹி...ஹி....நிஜம்மா தேவா.....மத்தவங்க வலைக்குள்ள போனபோது தெரிஞ்சுகிட்டேன்...அடுத்த வாட்டி அவங்கள கண்டுக்குவோம்....

இராய செல்லப்பானு ஒரு பெரியவர் தமிழ்ல வலைப்பூவுல கொடி கட்டிப் பறக்கறாரு!!. அப்புசி தொபுசினு எல்லாம் கலந்து கட்டி சூப்பரா எழுதுராரு. இப்ப கலைமகள்ல சாந்தி நிலவ வேண்டும் அப்படினு கதை எழுதி பரிசு வாங்கி இருக்காரு.. இதையும் கவியாழிதான் எழுதி இருந்தாரு. பொங்கல் போட்டிக்கு நடுவராகவும் இருக்கப் போகிறார்! திரு செல்லப்பாவை வாழ்த்துங்கள் மஹாதேவா!!

மஹா: இராய செல்லப்பாவிற்கு எப்போதுமே எமது வாழ்த்துக்கள் உண்டு!

நா: அப்புறம், ரூபன் அப்படின்னு ஒரு இளவல். சிறியவர் ஆனாலும் எல்லா பதிவர்களையும் ஊக்குவிப்பவர். புது விஷயமாக பாடலுடன் கதை சொன்னவர். உங்கள் அருமை மகன் முருகன் படம்தான் அவரது ஒரு வலைப்பூவில். பெரிய போட்டிகள் எல்லாம் நடத்துபவர். இப்போதும் பதிவர் பாண்டியனுடன் பொங்கல் போட்டிகள் நடத்துகிறார். திரு பாண்டியன் பல நல்ல கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகள் தரும் தமிழ் ஆசிரியர். பதிவர் ரமணி அவர்களும் இந்தப் போட்டியில் நடுவர். இவரது வலைப்பூ பெயரே அருமை! தீதும் நன்றும் பிறர் தர வாரா! நல்ல உள்ளம் கொண்ட அற்புதமான கவிஞர்! பதிவர்களுக்கு ஊக்கம் தருபவர்.!!! விவரணம் நீலவண்ணன் சமூக, அரசியல் கட்டுரைகளை அலசி ஆராய்ந்து பிட்டு பிட்டு வைப்பவர்!! உங்கள் இருவர் பெயரால் சமூகத்தில் உள்ள, நடக்கும் மூட நம்பிக்கைகளைச் சாடுபவர். அதிகார வர்கத்தையும் சாடுபவர்! கரந்தை ஜெயக்குமார் கணித ஆசிரியராக இருந்தாலும் தமிழில் அசத்துகிறார். இன்று, தான் ஆசிரியர் என்பதை நிரூபித்து மலாலா என்ற ஆஃப்கானில் கல்விக்குப் போராடும் பெண்ணைப் பற்றி விளக்கமான தகவல் கொடுத்திருக்கிறார். அடுத்து கும்மாச்சி கலக்கல் காக்டெய்ல் அப்படின்னு கலக்கி கடைசில ஒரு ஸூப்பர் ஃபிகர் படம் போட்டு எல்லாரையும் ஜொள்ள வைப்பவர்! அந்தச் ஜொள்ளுக்காக நான் போவதுண்டு!  ஜோக்காளி வித விதமான ஜோக்குகளை அள்ளித் தெளித்து ஜோக்குவிப்பவர்!! படா தமாசு டைம்லி விட் பேர்வழி!! கூலிங்க் க்ளாஸ் போட்டு அசத்தலான ஃபோட்டோ! அந்தக் கூலிங் க்ளாஸ் ரகசியம் என்னனு தெரில!! காமக் கிழத்தன்- பேர் வித்தியாசம்தான்! அருமையான பதிவர்! எழுத்தாளார். பெரியாரின் கருத்துக்கள் சொல்லும் விதத்தில் கட்டுரைகள் எழுதுபவர். கடவுளைக் குறித்துக் அதான் உங்களப் பத்தி நீங்க இருக்கீங்களா இல்லியானு.......கேள்வி எழுப்புபவர்! கம்ப்யூட்டர் வந்த்தும் கொஞ்சம் எட்டிப் பாருங்க அவரை!......பதிவர் பரிதிமுத்துராசன் நல்ல நல்ல அனுபவக் கட்டுரைகளையும், கருத்துள்ளப் பதிவுகளையும் தருபவர்.  பதிவர் வெங்கட்நாகராஜ் நல்ல அற்புதமான பதிவர். போட்டிகளூம் நடத்தி தமிழ் வளர்ப்பவர். இப்படிப் பல நிறைய தமிழ் பதிவர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இணையத்தில் உலாவருகிறார்கள். உங்கள் அருமை மைந்தன் தமிழ் கடவுள் முருகன் கிட்டச் சொல்லுங்க...நிறைய தமிழ் ஆர்வலர்கள் இருக்காங்கனு....சந்தோஷப் படுவாரு....

மஹா: அது சரி நீங்கள் சென்ற முறை இங்கு வந்த போது நக்கீரர் என்று சொன்னது போல் நினைவு! எமது நக்கீரரா? அவர் எப்படி இங்கே!!?

நா: அவரைப் ப்ற்றிச் சொல்வதற்கு முன், இப்போது பூலோகத்தில் அமளிப்படும் தேவயானி பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

மஹா: தேவயானி? ஓ!! மார்கழி மாதம் கோலங்களுக்குப் பேர்போன மாதம், தமிழ் நாட்டில். அதனால் “கோலங்கள்” ஃபேமஸ் தேவயானி?

நா: (நாசமாப் போச்சு! வெளங்கிச்சு இந்தாளு இங்கருந்து ஒரு தமிழ் சீரியல் கூட விட்டு வைக்கறது இல்ல போல! நியூஸே பாக்க மாட்டாரு போல) மஹாதேவா! அவரல்ல! இது வேறு! ********************* இதுதான் நடந்தது!

மஹா: ஓ!! இப்படி எல்லாம் கூட நடக்கின்றதா!! தேவலோகத்து அரசியல் போலத்தானா அங்கும்!!! சரி! அவருக்கும் நக்கீரருக்கும் என்ன சம்பந்தம்?

நா: அது ஒன்றும் இல்லை. நேற்று பின்னூட்டத்தில் துளசிதரன் “சட்டத்தில் ரோல்மாடல் யாரேனும் இருக்கிறார்களா? இந்தியாவில்?” என்று கேட்டிருந்தார்.  அதற்கு நக்கீரர் அதாவது நம்பள்கி நக்கீரர் (நந) “தேவயானி” என்று பதில்  கொடுத்தார்!

மஹா: அந்த நக்கீரரைக் கூப்பிடும்!.............நக்கீரா! உமது பதிலில் பெயர் குற்றம், செயல் குற்றம், பொருள் குற்றம் இருக்கிறது!

நந: இல்லவே இல்லை! எனது பதில்தான் சரி! அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை! நாரதரே இத அவர்கிட்ட சொல்லும்! நான் கோழி புராணம் நாளைக்கு போடனூம் பிஸியா இருக்கேன்.....Dont’ disturb me!!!  அப்புறம் உங்க தேவலோகம் ஊழல் நாளைக்கு நாறிடும்!!! 

மஹா: அது எப்படி நக்கீரரே! தேவயானியை சட்டத்தின் ரோல்மாடல் என்று சொல்ல முடியும்? அதுவும் இல்லாமல் என்னிடம் போட்டி போடுகிறீர்!!!  நாரதரே! இது என்ன இவர் இப்படிச் சொல்கிறார்!

நா: அவர் அப்படித்தான்! அவர் பதில் நக்கல் பதில் தேவா! அவர் இந்தியாவைக் கிண்டலடிக்கிறார்! தேவயானியையும்! நக்கல்ஸ், கிண்டல்ஸ், உருட்டல்ஸ், கிழித்தல்ஸ் எல்லாம் செய்வார்!  உமக்கு அது புரியாது! இவர் உமது நக்கீரர் அல்லர்! நீங்கள் நெற்றிக் கண்ணத் தொறந்ததும் எறிவதற்கு....உங்கள் பப்பு இவரிடம் வேகாது!!!  நாளை கோழி புராணம் எழுதப் போகும் நக்கீரர்!

மஹா: ஆஹா!! அருமை! என்னைப் பற்றி பெரியபுராணாம் பாடியவர் சேக்கிழார்! இப்போது எமது அருமை மைந்தன் சேவற் கொடியோனைப் பற்றி எழுதப் போகிறாரா!!

நா: (நாசமாப் போச்சு! கிழிஞ்சுது) இவருக்கு இத எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறது!! பெண்கள் ....கிளு..கிளுனு சொன்னா வெளங்குமா??!! ம்ம்ம்) தேவா! அது சேவல்! இவர் எழுதுவது கோழி!! அதாவது.......பெண்கள் புராணம் .....கொஞ்சம் அஜால்ஸ், குஜால்ஸ் எல்லாமும் இருக்கும்!!!! உமக்குப் புரியாவிட்டால் கண்டுக்காம போகணும்! கேள்வி எல்லாம் கேக்கப்படாது! அப்புறம் வடிவேலு அழுறா மாதிரி நீங்களும் அழ வேண்டிருக்கும்!!!

மஹா: என்ன!? பெண்கள் மேட்டர் தானே! அப்போதே அந்த நக்கீரர் பெண்கள் கூந்தல் நறுமணம் பற்றி விவாதித்து என்னைத் திருவிளையாடல் செய்ய வைத்தவர்தானே! இது எல்லாம் ஜுஜூபி!! இந்த நந கோழி புராணம் எழுதட்டும். நானும் தெரிந்து கொள்கிறேன்! அப்போதுதான் என்னால் இந்த நக்கீரருடன் விவாதிக்க முடியும்!  வாசிக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லும்.
 
அது சரி! நாரதா நீரும் உமது பங்கிற்கு ஒரு வலைப்பூ உமது ஃபேவரிட் பரந்தாமன் பெயரில் ஆரம்பிக்கலாமே! கலகம் செய்து குட்டையைக் குழப்பலாமே! குழப்பும் போது உமது தமிழைத் திருத்திக் கொள்ளும்! முருகனுக்குக் கோபம் அந்து விடும்!

நா: (ஆஹா! இவரு விடமாட்டாரு போல) ...தேவா..!!முதல்ல நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிங்க உங்களுக்கும் இந்தத் தமிழ் புரிஞ்சுரும்.....தேவா ஏற்கனவே இந்தியா கலகத்தால குட்டையா.... குழம்பித்தான் கிடக்கு.  இதுல நான் வேற கலகம் செய்து குழப்பணுமா!? வெளங்கினாப்புலதான்! அந்தக் குட்டை நமக்கு வேண்டாம்பா வுடு ஜூட்! எஸ்கேப்!!





சனி, 21 டிசம்பர், 2013

ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதுதான் நீதி வழுவா நெறி முறையோ?


கடந்த சில நாட்களாக, இந்திய துணை தூதர் கைதைப் பற்றிய விவகாரத்தில், அமெரிக்கப் போலீசாரின் நடவடிக்கையைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கண்டித்து கர்ஜனை செய்யும் நம்மவர்கள், இங்கு சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில்,, போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சட்டையைப் பிடித்த ஒருவரை, போலீசார் பரலோகத்துக்கே அனுப்பிய சம்பவத்தைப் பற்றியும் நம் அரசோ, காவல் துறையோ சிந்திக்குமா? 





விஷயம் மிகவும் வருத்தமான ஒன்று. சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கைது செய்யப்பட்ட 29 வயது நபர் (25 என்றும் 29 என்றும் சொல்லப்படுகிறது.  எத்தனை வயதாக இருந்தால் என்ன) போலீஸ் கஸ்டடியில் இறந்து விட்டார். 

நடந்த சம்பவம் இதுதான். அந்த நபர் காய்கறி விற்பவர். சென்ற ஞாயிறு (15-12-2013) அன்று பொது இடத்தில் தொந்தரவு செய்ததாக, அந்தப் பகுதியில் ரோந்து வந்த சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும், அந்த நபரைக் கேள்வி கேட்கப்போக, போலீசுக்கும், அவருக்கும் இடையே நடந்த வாக்கு வாதத்தில், போலீசார் அவரை அடித்து, அற்ப காரணங்கள் சொல்லி போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் சிறைக்குக் கொண்டு சென்றிருந்திருக்கின்றனர். 


போலீஸ் ஸ்டேஷனிலேயெ முடிந்திருக்க வேண்டிய பிரச்சினையைப் புழல் சிறைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன குற்றம்தான் செய்தாரோ?! புதிர்தான்! அந்த சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் அவரைக் கொஞ்சம் நன்றாகவே ‘கவனித்திருந்திருக்கின்றனர்’.

புதன் கிழமை(18-12-2013) அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வர, cardiac arrest ல் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ஆஸ்பத்திரியில் சொல்லிவிட்டனர். அவருக்கு ஏற்கனவே ஒரு சில உடல் உபாதைகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதி மக்களும், அவர் குடும்பத்தாரும், – ஏறத்தாழ ஒரு 300 பேர் - அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டம் செய்தனர். பின்னர், வேன்களில் வந்து போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலும் செய்தனர். இறந்தவருக்குத் திருமணம் ஆகி 1 வருடமே ஆகிறது என்றும், அவருக்கு, ஒரு கைக்குழநதை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அன்று மாலை, அவரது குடும்பத்தாரும், அப்பகுதி மக்களும்,  போலீஸ் மீது நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனறும், இறந்தவரின் மனைவிக்கு வேலை வாய்ப்புத் தரவேண்டும் என்றும் ரோடை ப்ளாக் செய்து போராடினர். மறு நாள், அதாவது வியாழக் கிழமை அப்பகுதியில் கடை அடைப்பு நடத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏதோ சில லட்சங்கள் தந்துவிடுவதாகவும், இந்தக் கேஸை இப்படியே விட்டு விட வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வியாழன் மாலை வரை பிணத்தை சம்பந்தப்பட்டோர் வாங்கவில்லை. நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று சொல்லி. நேற்று (20-12-2013) வெள்ளியும் கடை அடைப்புதான். நேற்று பிரேத பரிசோதனை. வணிகர் சங்கத் தலைவரும், அந்த இரு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த இரு போலீசாரும் தற்போது அப்பகுதி ஸ்டேஷனிலிருந்து மாற்றப்பட்டு விட்டனர். இப்போது, இந்த வழக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.


இது போன்று நம்மூரில் போலீஸ் கஸ்டடியில் உயிர் போவது என்பது சகஜமாக நடக்கும் ஒன்றுதான். போன உயிர் போனதுதான். ஒரு சாதாரணக் குடிமகனுக்கு, அவர் தவறு சிறிய குற்றமாக இருந்தாலும் பெரிய குற்றமாக இருந்தாலும் அவரை கஸ்டடியில் எடுத்து குற்றத்திற்கேற்ற தண்டனைதான் கொடுக்கப்படவேண்டும்.  ஆனால், கைது செய்து, அடித்து இப்போது பரலோகத்திற்கே அனுப்பி விட்டனர்! நம் போலீசார்! நம் நாட்டில், எப்போதுமே சட்டமும் சரி, காவல் துறையும் சரி, ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவித்தான் நீதித் தராசை தூக்குகின்றன.  இல்லையேல்,  நீதித் தாய் கண்ணைக் கட்டியிருப்பது போல தங்கள் கண்ணையும் கட்டிக் கொள்கின்றன. நீதிக்கு முன் பணக்கார வர்கமும், பாமர வர்கமும் ஒன்றுதானே? தேவயானி போன்ற மேலதட்டு வர்கத்திற்கும், அதிகார வர்கத்திற்கும் நம் நாட்டில் தீவிரமாகக் கொடுக்கப்படும் ஆதரவு, சங்கீதா மற்றும் இது போன்ற பாமர மக்களுக்கு இல்லாதது மிகவும் வேதனைக்குறிய ஒன்று. நம் நாட்டில் தான் இது போன்ற இரு வகையான நீதிகள், சட்டங்கள்! பணமிருந்தாலும், அதிகாரமிருந்தாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு! சாதாரண மனிதனை நன்றாக "கவனிக்க"த் தெரியும். அதிகார, மேல்தட்டு வர்கத்தை அவர்கள் என்ன தவறு செய்தாலும் சமுதாயத்தில் சுதந்திரமாக நடமாட விடவும் தெரியும்!!  அவமானம்! நம் நாட்டில், நீதித் தேவதையின் தராசு சமமாக நிற்பதில்லை, பதிவர் திரு ரமணி அவர்கள் தன் பதிவாகிய “அனுமார் வாலில்” சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய.......செல்வமும் செல்வாக்கும் நீதியை முடிவு செய்ய என்று குறிப்பிட்டுள்ளதைப் போல!! இந்த நிகழ்வுகளை எல்லாம் உற்று நோக்கும் போது, நம் நாடு சோஷியலிச ஜனநாயக நாடா இல்லை bourgeoisie நாடா என்ற சந்தேகம் வருகிறது.  முதலாளித்துவ/மேலை நாடுகளில் கூட, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், சாதாரணக் குடிமகனுக்கும் ஒரே சட்டம்தான்.! ஆனால், இங்கு சோஷியலிச ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில், அதிகாரத்திலும் செல்வாக்கிலும் உள்ளவர்களுக்கும், சாதாரண குடிமகனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாக உள்ளது. இதுதான் நம் போலீஸ்!  நம் நாட்டுச் சட்டம்!! அப்படி இல்லை என்றாலும், சுயநலவாதிகள் சிலரது குறுக்கீட்டால் இப்படியெல்லாம் சட்டமே திருத்தப்பட்டு நடக்கிறதோ? அந்த சிலருக்காக ஏன் மற்றவர்கள் மௌனம் சாதிக்கின்றார்கள் என்பதுதான் விளங்கவில்லை?! அவர்களுக்குச் சட்டம் பெரிதா இல்லை அவர்களுடன் பணியாற்றுவோரின் நலன் பெரிதா? இது மாற வேண்டும்.  இது போன்ற இடைவெளிகள் இல்லாமல் எல்லோரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும்!! நடக்குமா? இனியொரு விதிசெய்யப்படுமா? எந்த நாளும் காக்கப்படுமா? காத்திருப்போம் கண்கள் இரண்டும் நோகும் வரை?!!





வியாழன், 19 டிசம்பர், 2013

அருகதை உள்ளவருக்கு அத்தி பூத்தாற் போல் கிடைத்த தேசிய சாகித்திய அக்காடமி விருது!!




“கதையில்லாத்தவண்ட கதா” (கதையில்லாதவனின் கதை) எனும் சுய சரிதத்திற்கு அதில் கதை இருந்ததால் மட்டும், பணமோ அரசியல் செல்வாக்கோ, அதிக சாமர்த்தியமோ (பழைய டூரிங் டாக்கீஸ்களில் முண்டியடித்து சின்ன ஓட்டையில் கையை நுழைத்து டிக்கெட் எடுப்பது போல்) இல்லாத கவிஞரும் எழுத்தாளருமான, எர்ணாகுளம் பரவூர் காரரும், மும்பையில் இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்து ஓய்வு பெற்ற M.N. பாலூருக்கு (பாலூர் மாதவன் நம்பூதிரி) தேசிய சாகித்திய அக்காடமி விருது கிடைத்திருக்கிறது. 22 மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளுக்கு, நேற்று (18.12.2013) சாகித்திய அக்காடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, தனக்கும் விருது கிடைத்ததை அறிந்த அவர், “விருது கிடைத்ததில் சந்தோஷம்தான்.  இது போன்ற விருதுகள் பணமும், செல்வாக்கும் உள்ளவர்களுக்குத்தான் சாதாரணமாகக் கிடைப்பது வழக்கம்.  இங்கு, இது ஒன்றும் இல்லாத எனக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.” என்றார்.  இதை வாசிக்கும் நமக்கு விளங்கியதோ ஒருவேளை அத்தி பூத்தாற் போல் சில நேரங்களில், சில நடுவர்கள் வரும் போது, உரியவர்களுக்கு இது போன்ற விருதுகள் கிடைக்கலாம்.. இல்லையேல் பணமும், அரசியல் செல்வாக்கும் உள்ள பலர் முயலும் போது, ஒருவருக்குக் கொடுத்தால், மற்றவர்கள் விரோதத்திற்கு பாத்திரம் ஆக வேண்டி இருக்கும் என்பதால், முண்டியடித்தவர்களின் படைப்புகளை எல்லாம் மூலையில் தள்ளி மூலையிலிருந்த, 1983 ல் அவர் எழுதிய “கலிகாலம்” எனும் புத்தகத்திற்கு கேரள சாசித்திய அக்காடமி அவார்ட் கிடைக்கப்பெற்ற, “கதையில்லாத்தவண்ட” கதா தேர்ந்தெடுக்கப்பட்டதா தெரியவில்லை. எப்படியோ “கதையில்லாத்தவண்ட கதை”க்கு பின்னால் எனென்ன கதைகள் பின்னப்பட்டாலும், “கதையில்லாத்தவண்ட கதை”யில் சாகித்திய அக்கடமி விருது பெறும் அளவுக்கு உள்ள கதை இருந்திருக்கத்தான் வேண்டும்.


புதன், 18 டிசம்பர், 2013

பொறுத்தது போதும் பொங்கி எழு, என எழ வைத்த சம்பவம்...... The last straw that broke the camel’ back,



தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டு விலங்கு அணியப்பட்டு அதுவும் தன் குழந்தையை டே கேரில் விட்டு வரும் போது, போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் செல்லில் அடைக்கப்பட்டு, பரிசோதனை எனும் பெயரில் ஆடைகள் அவிழ்கப்பட்டு, DNA டெஸ்டுக்கும் உட்படுத்தப்பட்டு...... இப்படிப்பட்டச் சட்டங்கள் அமெரிக்காவுக்கு இன்றியமையாததாக இருக்கலாம்தான்.  இவை எல்லாம்தான் ஒருவேளை அமெரிக்காவை அமெரிக்காவாக ஆக்கி இருக்கலாம்தான். என்றாலும், இந்திய அமெரிக்க நட்புறவிற்காக அமெரிக்காவில் இயங்கி வரும் இந்திய தூதரகத்தில் பொறுப்புள்ள பதவியில் சேவை செய்யும், இந்தியாவில் மிக உயர்ந்த தகுதிச் சான்றிதழான IFS பெற்ற, அதுவும், ஒரு பெண்ணிடம், தனி மனித சுதந்திரத்திற்கு வேறு எந்த நாட்டையும் விட முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கா இப்படி நடந்து கொண்டது அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியர்களான நமக்கு, இலை மறை காயாக அரசியல் வாதிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இரண்டு தரப்பட்ட சட்டங்கள் உள்ளது போல், அங்கும் சிறப்புச் சலுகை வேண்டும் என்பதல்ல எங்கள் வாதம். இதற்கு முன், முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.அப்துல்கலாம் அவர்களுக்கும், டிஃப்ன்ஸ் மினிஸ்டர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்க்கும், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களுக்கும் இது போல் ஏற்பட்ட அவமானங்களுக்குப் பழிவாங்கும் நோக்கமும் எங்களுக்கு இல்லை.  அமெரிக்க சட்ட்த்திற்கு விரோதமாகத், தன்னுடைய வீட்டு வேலைக்கு உதவும் சங்கீதா ரிச்சர்டுக்கு விசாவில் குறிப்பிட்டுள்ளதை விட குறைவான ஊதியம் கொடுத்து வந்த தேவயானி செய்தது அவ்வளவு பெரிய குற்றமல்ல என்றோ கைது செய்வதோ, விசாரணை செய்யவோ கூடாது என்பதும் அல்ல எங்கள் வாதம். (இது போன்ற பதவி வகிப்பவர்கள் சட்டத்தை மீறாமல் இருப்பது மிக மிக அவசியம்தான்.  தாங்கள் செய்யும் சிறிய ஒரு பிழை கூட மிகப் பெரிய பிரச்சினைகளுக்குக் காரணம் ஆகலாம் என்ற எண்ணம் வேண்டும்). இதற்கு முன்பும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த, இது போன்ற வேதனைக்குறிய சம்பவங்களை மனதில் கொண்டு குறைந்த படசம், அவர், தான் இந்திய தூதரகத்தில் துணை தூதர் என்று சொன்ன போதாவது அவருக்கு எதிரே நடவடிக்கை எடுத்த போது இந்திய நாட்டிற்கும் அரசிற்கும் வேதனைப்பட வாய்ப்பில்லாத விதத்தில் அவர் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்பதே நம் கருத்து. தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படவேண்டியதுதான்.  ஆனால் தண்டிக்கப் படுபவ்ர்களுக்கும் இதைக் காண்பவர்களுக்கும் தண்டனை கொஞ்சம் கூடிவிட்டதோ என்று தோன்றினால், அங்கு நீதியல்ல அநீதி நடந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். 

செவ்வாய், 17 டிசம்பர், 2013

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? உங்கள் அங்கத்திலே.........


சமீபத்தில் கேள்விப்பட்ட 4 மரணங்கள், அதுவும் தற்கொலைகள் சற்று வியப்பைத் தந்தது. செய்தித் தாளில் வராத தற்கொலைகள். நான்குமே பெண்கள். படித்தவர்கள், நல்ல வேலையில் இருந்தவர்கள். சொல்லப்பட்டக் காரணம் இந்த நூற்றாண்டிற்கு, அதுவும் சமீபத்திய சமூகம் போகும் போக்கிற்கு சற்றும் ஒவ்வாத காரணமாக எனக்குப் பட்டது.  காரணம் கறுப்பு நிறமும், சற்று குறைவான அழகும், மாற்றுத் திறனாளிகளாக இருந்ததுனாலும், அதனால் திருமணம் தடை பட்டதும் தான். இதற்காகத் தற்கொலையா?  நம் சமூகம் இன்னும் மாறவில்லையா? என்னை யோசிக்க வைத்தது. இந்த அழகு இந்த சமூகத்தை என்ன பாடு படுத்துகிறது? சற்று கூடுதலோ என்று! இப்போதெல்லாம் இந்த அழகு என்பது மிகவும் இன்றியமையாதது என்பது போல் ஆகிவிட்டதோ? இல்லையென்றால், தெருவிற்கு தெரு, ஏன் கிராமங்களிலும் கூட அழகு நிலையங்களும், ஏகப்பட்ட அழகு சாதன விற்பனைக் கம்பெனிகளும் போட்டிபோட்டுக் கொண்டு உலகம் முழுவதுமே சிகப்பழகு க்ரீம்களையும், தலைச் சாயங்களையும் விற்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்குப் படு குஷிதான்!




இதற்கும் மேலாக பலர் (பண வசதி உள்ளவர்கள்) இறைவன்/இயற்கை தந்த அழகில் மனத்திருப்தியும் அமைதியும் அடையாமல், தங்கள் மனதில் ஒரு பிம்பம் வடித்து, அறுவை சிகிச்சை செய்து தங்கள் உடலில் அழகுத் திருத்தங்களைச் செய்து கொள்கிறார்கள்! உதாரணமாக உடல் எடை குறைப்பிற்கும், உடலில் உள்ள அதீத சதையைக் குறைப்பதற்கும், மூக்கை அழகு படுத்துவதற்கும், முகத்தை அழகுபடுத்துவதற்கும், முடியை வழுக்கைத் தலையில் நட்டு(!!) வளர்ப்பதற்கும், பல் வரிசைகளை அழகு படுத்துவதற்கும், பணத்தை வாரி இரைத்து, சமயத்தையும் செலவிட்டு, அழகைக் கூட்டி வயதைக் குறைத்து சமூகத்தில் உலா வருகிறார்கள்.



அழகு என்பது என்ன? நிறம் என்பது என்ன? உடலில் ஊனம் இருந்தால் தான் என்ன? எல்லா அழகுச் சாதனங்களின், குறிப்பாக அழகு க்ரீம் விளம்பரங்களிலும் சொல்லப்படும் “சிவப்பழகு” தான் அழகா? நம் உடலில் உள்ள தோல் நிறமிகள் (skin pigmentation) நம் தோலினுள் ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துபவை. அவை ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஏற்படும் நிற மாறுபாடுகளை 10% கட்டுப்படுத்தும் வேலையையும், 90% பயோ கெமிக்கலினால் ஏற்படும் மாறுதல்களையும் கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நிறம் போற்றப்படுகிறது. ஒரு சில நாடுகளில் தோல் நிறத்தின் தன்மையை அதற்கென்று உள்ள சில வார்த்தைகள், பாலின் நிறம் என்பது தொடங்கி ப்ரௌன் என்பது வரை மிக மிக ஆவேசமாகப் பேசப்படுகிறது.



நம் இந்தியாவில் வெளிர் நிறம் மிகக் கவர்ச்சிகரமானதாகவும், அதே சமயம் அடர்ந்த நிறம் தாழ்தப்பட்ட சாதியாகவும் கருதப்படுவதால், வெள்ளை நிறமாக்கும் க்ரீம்கள் என்று அழகு சாதனங்களுக்கு வியாபார ரீதியாக நல்ல சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. மட்டுமல்ல அழகான, வெளிர் நிறம் உடையவர்கள் உயர் சாதி எனவும் கருதப்படுகிறது.  என்னதான் நாம் அழகுச் சாதனங்களை உபயோகித்து நம்மை அலங்கரித்துக் கொண்டாலும், இறைவன் தந்த நம் உண்மையான சொரூபம் சொரூபம் தானே! அது மாறவா போகிறது? இல்லை நாம் யார் என்ற நமது உண்மையான அகத்தோற்றத்தையும், உள்ளத்தையும் அது காண்பிக்கப் போகிறதா?
ஒரு குழந்தை பிறந்ததுமே பொதுவாக நாம் கேட்கும் கேள்வி அது என்ன நிறம், அழகாக இருக்கிறதா, யாரைப்போல இருக்கிறது என்றும்தான். குழந்தை எப்படி இருந்தால் என்ன?  குழந்தை என்பது பூ போன்ற மென்மையான அழகுத் தளிர்தானே. பிறப்பிலிருந்தே இந்தப் பிரச்சினைகள் ஆரம்பிக்கத் தொடங்குகிறது. அழகு என்பது பெரும்பாலும் புற அழகைத்தான் நம் சமூகம் பேசுகிறது. அகத்தின் அழகை உற்று நோக்கினால் அது பல சமயங்களில் முகத்தின் அழகை விட பன் மடங்கு அழகாகத் தெரியும்!  அழகு என்பது தன்னம்பிக்கை தருவதுதான்.  என்றாலும், அதுவும் நம் மனதில்தான் இருக்கிறது.

பெண்கள் எதற்காக தாங்கள் அழகில்லை என்றோ, தங்களுக்கு உடலில் ஊனம் உள்ளது என்றோ, திருமணம் தடைபடுகிறது என்றோ வருந்த வேண்டும்? பொதுவாக, பெண்கள் சிறு வயதிலிருந்தே திருமணம் என்ற ஒரு பந்தத்தை முன்னிறுத்தித்தான் வளர்க்கப்படுகிறார்கள். திருமணம் என்பது உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவசியமான ஒன்றுதான். என்றாலும் அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படும் போது அந்தப் பெண்களுக்குத் திருமணம் தடை படும் சூழல் ஏற்பட்டால் மனம் தளர்ந்து தற்கொலை முடிவைத் தேடவைத்து விடுகிறது. முதிர்கன்னிகளும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் ஒரு பெண் அழகாக இருந்து மணம் ஆன பின் ஒரு விபத்தில் அழகை இழந்தாலோ, உடல் ஊனமுற்றாலோ என்ன செய்ய முடியும்? அது போல் திருமணமே வேண்டாம் என்று தீர்மானித்து வாழும் அழகான பெண்கள் இல்லையா?
நம்பள்கி தன்னுடைய அழகான ஆசிரியை ஆன ஒரு “Dr.சிகப்பழகியைப்” பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும்.  நடிகை சோபனாவை எடுத்துக் கொள்ளுங்கள்.  அழகுள்ள அவர் கல்யாணமே செய்து கொள்ளாமல், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, தனது நடனக் கலைக்காக அர்பணித்து மனம்கிழ்வுடன் வாழ்கிறார். எனவே அழகில்லை என்றோ, மாற்றுத்திறன் படைத்தவர்களாக பிறந்து விட்டோமே என்றோ திருமணம் ஆகவில்லையே என்றோ நினைத்து வருந்தி தற்கொலை முயற்சி வேண்டாம். நமக்கு நம் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஏற்ற வழியை கண்டுபிடித்து, அது சமூக சேவையாக இருக்கலாம், கலைத்திறன் அல்லது எழுத்தாற்றலை வெளிப்படுட்த்துவதாக இருக்கலாம் இல்லையேல் இறை உணர்வுடன் வாழும் வாழ்கையாகவும் இருக்கலாம். இவற்றில் நம் முழு கவனத்தையும் செலுத்தி பெண்கள் தங்களிடம் உள்ள திறமைகளை முன்னிறுத்தி அதில் முன்னேறி, தன்னம்பிக்கையையும், தங்கள் ஆளுமைத் திறனையும் வளர்த்துக் கொள்வதுடன், கம்பீரமானத் தோற்றமும் மரியாதையும் தரக்கூடிய உடை அணிந்து, உடல் மொழிகளையும் மற்றவர்கள், குறிப்பாக ஆண்கள், மதித்து மரியாதை கொடுக்கும்படியாக அமைத்துக் கொண்டால், அதுவே அவர்களுக்கு மிக மிக கம்பீரமான, மரியாதையான அழகைச் சேர்த்து விடும். அந்த குண அழகுடன் கிடைத்தற்கரிய இவ் வாழ்வை நமக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக்கி வாழப் பழகிக் கொண்டால் வாழும் நாளெல்லாம் இன்ப மயமே.


இங்கு நான் நேரில் கண்ட ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எனது உற்ற நண்பர் துளசிதரனின் அக்கா ஒரு மாற்றுத் திறனாளி. (காதும் கேட்காது, வாய் பேச்சும் இல்லை. அதாவது அவரது பேச்சு அவருடன் நெருங்கிப் பழகியவருக்கு மட்டுமே புரியும். தனி அகராதி. எனக்கும் பழக்கமாகி விட்டது. எனது நண்பரின் குடும்பத்தில் நானும் ஒருவர்)



பல வருடங்களுக்கு முன்பு அவருடையத் திருமணவயதில் அவருக்குப் பார்க்கப்பட்ட ஆண்கள் எதிர்பார்த்ததோ வேறு. மாற்றுத்திறனாளியாக இருந்ததால் இரண்டாம் தாரமாகக் கேட்டு வந்திருக்கிறார்கள். அன்று அவர் எடுத்த முடிவு தைரியாமான முடிவு. திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து தன் பெற்றோருடனும், அவர்களது மறைவிற்குப் பின் தன் சகோதரனாகிய என் நண்பருடனும் மகிழ்சியாக அதே வீட்டில் எல்லோரையும் அன்புடன் கவனித்துக் கொண்டு, அம்மாவுக்கு நிகராகத் தன் ஆளுமைத் திறானால் வீட்டை நிர்வகித்துக் கொண்டு கம்பீரமாக இருந்து வருகிறார். என் நண்பர் அவரைத் தன் தாய் போலவும், அவருக்கு யாருமில்லையே என்ற மனக் குறை வரக்கூடாது என்பதற்காக தன் 3 குழந்தைகளில் ஒரு குழந்தையை தனது அக்காவிற்கும் கொடுத்து, (எல்லோரும் ஒரே வீட்டில்தான் தான் வாழ்கிறார்கள். அது வேறு!) அவர் குழந்தைகளும், மனைவியும் அவரிடம் அன்புடனும் இருந்து வருகின்றனர். அக்காவிற்குப் பாராட்டுக்கள்!! இது போன்று பல பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 
பெண்களுக்கு மட்டுமல்ல இங்கே சொல்லப்படும் பிரச்சினைகள்.  ஆண்களுக்கும் இந்த சமூகத்தில் உண்டுதான். ஆனால் ஆண்கள் அதனை  வேறு விதமாகக் கையாண்டு விடுவதால் பெரிதாகக் கருதப்படுவதில்லை.
ஒரு சில சந்தர்ப்பச் சூழலில் தங்கள் அழகையும், தங்கள் மாற்றுத் திறனையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைக் குறைவாக எண்ணிக் கொள்ளலாம். எல்லோருமே இந்த உலகில் அழகானவர்கள்தான். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தனித் தன்மையுடன், அழகானவர்தான். நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடல் ஊனம் உங்கள் மீது, மற்றவர்களுக்குப் பச்சாதாபமோ இரக்கமோ ஏற்படுத்தக் கூடாது, உங்களையும் இந்த சமூகம் மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? ரொம்ப எளிது.  சுய கௌரவத்தையும், சுய மரியாதையையும் விட்டுக் கொடுக்காமல், தன்னம்பிக்கையுடன், உங்கள் திறமையைக் கண்டறிந்து அதை மேம்படுத்தி உங்களைத் தனித்தன்மை உடையவராக்கிக் கொண்டு ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கும் மேலாக உங்கள் முகத்தில் எப்பொழுதுமே புன்னகையை வரவழைத்துக் கொள்ளுங்கள். தன்னலமற்ற, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களைச் சுற்றி ஒரு பாஸிட்டிவ் சக்தியைப் பரப்பி பிரகாசமான ஒளிக் கதிர்களைப் படரவிடும். நீங்கள் உங்களிடம் குறைபாடுகள் என்று நினைக்கும் அனைத்துமே பின்புறம் தள்ளப்பட்டுவிடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!! வெற்றி உங்களுக்கே!!!
Beauty lies in the eyes of the beholder . காண்பவரின் கண்களில் தான் அழகு இருக்கிறது. அவர் உங்கள் முக அழகை விட குண அழகைத்தான் ரசிப்பார்.  ஏனெனில் அவருக்குத் தெரியும் Beauty is skin deep என்று.
                                                   _ கீதா