ஞாயிறு, 27 அக்டோபர், 2013

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்கப்பா

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்கப்பா
       

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல ஒரு சம்பவம்க.  திருவனந்தபுரத்துல உள்ள ஒரு IAS அதிகாரிக்கு நடந்திருக்குது.  பெண்கள் மட்டும்தான் கழுத்துல செயின் போடலாம்னு ஏதாவது சட்டம் இருக்காங்க? இல்லைல? அரசு ஊழியர்கள் உடம்புல இத்தனை பவுன் தான் போடலாம்னு, சர்வீஸ் ரூலும் கிடையாதுதானே? பிறகு என்னங்க?  ஒரு IAS அதிகாரி சின்னதா 11 பவுன் செயின் கழுத்துல போட்டா என்னங்க?  பார்க்கிறவங்க சின்னதாவோ, பெரிசாவோ ஏக்கப் பெருமூச்சு விடலாம்...... வருத்தப்படலாம்.......வருத்தமோ, வயிற்றெரிச்சலோபடுறவங்களோட சேர்ந்துகிட்டு அவருக்குத் தெரியாம...அவர் காதுல கூட விழாம.........கொடுமைய பாருங்க.........“11 பவுன் செயின், அதுவும் ஒரு ஆம்பிள கழுத்துல”னு சொல்லி வருத்தத்தையும், வயிற்றெரிச்சலையும் கொஞ்சம் குறைச்சுக்கலாம்....போனா போகுது....ஆனா ஏதோ ஒரு திருட்டு ராஸ்கல் அத அபேஸ் பண்ணிட்டு, 2 லட்சத்துக்கு மேல விலை மதிப்புள்ள அந்தச் செயின திருடிட்டு போன பிறகும் கூட, “இவரு இப்படி ஒரு செயின கழுத்துல போட்டது சரியா? இப்படிப்பட்ட நகை ஆசை ஒரு IAS அதிகாரிக்கு பொருந்துமா, வேணுமா? ....அவரு சின்னதா ஒரு 3 பவுன் செயின் போட்டிருக்கலாமே”னு போஸ்ட் மேல போஸ்ட்....கமெண்டுக்கு மேல கமெண்ட்ஸா, ஃபேஸ் புக், ட்விட்டர், ப்ளாகுனு (?!) எல்லாத்துலயும் எழுதி, பாவம் அந்த மனிதரை சித்திரவதை செய்வது நியாயமா? இந்த மனுஷனோட வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுரதுல உங்களுக்கெல்லாம் என்ன அப்படி ஒரு சந்தோஷம்?  (அப்பாடா!....இப்பதான் மனசுக்கு சந்தோஷமா இருக்குதுங்க....நல்லபடியா போஸ்ட் பண்ணியாச்சு.....இனி நிம்மதியா மத்த வேலைகளை பாக்கலாம்!?)


திருடாதே பாப்பா (தம்பி) திருடாதே/ஹாட்ஸ் ஆஃப் டு (குருவாயூர்) போலீஸ்

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே – பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை (பெற்றோர்) வளர்ப்பதிலே
-கவிஞர் புலமை பித்தன். படம்: நீதிக்குத் தலை வணங்கு

23-10-2013 அன்று, குருவாயூர் பகுதியில் உள்ள கோவில்களில் ஒரு வாரமாக போலீஸுக்கு சவாலாக இருந்த உண்டியல் திருடும் குற்றவாளிகள் பிடிபட்டனர். குற்றவாளிகள் யாரென்று அறிந்தால் அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் இல்லையேல் இதெல்லாம் இப்ப சகஜமப்பா என்றும் இருக்கலாம். 
ஆனால், ஆசிரியனாக இருக்கும் எனக்கு அது அதிர்ச்சி. குற்றவாளிகள், 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். ஐந்து பேர் அடங்கிய குழு.  பகலில் கோயிலுக்குச் சென்று, உண்டியல்களைப் பார்த்து வைப்பது, இரவில் சென்று, திருட்டுக் கலையில் கைதேர்ந்தவர்களுக்குக் கூட ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்திலான திருட்டு நடத்துவது.  கையிலுள்ள பணம் தீரும் வரை, அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் வாங்குவது. பெரும்பாலும் புதிய மொபைல்கள் வாங்குவதுதான். வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் ஒரு நண்பன் தந்தது என்று சொல்வார்கள். பிடிபட்டவர்களை விசாரித்தப் போது, அவர்களில் அப்பா இல்லை, அப்பா வெளியூரில் வேலை செய்பவர், அப்பா இந்தியக் ‘குடி’ மகன், அப்பா ஓடிப்போனவர்,. இப்படிப் பல குடும்பச் சூழலில் இருக்கும் பையன்கள்.  பிடிபட்டதும், அவர்களின் பெற்றோர் வரவேண்டிய காவல் நிலையத்திற்கு வந்தவர்கள் 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்தத் தாய்கள் மட்டுமே. அவர்களெல்லாம் தங்கள் குழந்தைகள் செய்த குற்றத்தையும் அதன் காரணத்தையும் அறிந்தவுடன் மனம் தளர்ந்து, மிகவும் கூனிக் குறுகி அழுத நிலை மிகவும் வருத்தத்திற்குறியது.  அப்படி என்னய்யா காரணம் என்று கேட்கிறீர்களா?  எல்லாம் இந்த மொபைல் ஃபோன்தாங்க.  நவீன புது மாடல் மொபைல் ஃபோன் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்தத் திருட்டு.


நான் காரணங்களை ஆராயத் தொடங்கினேன். எனது மாணவர்களும் கூட அதி நவீன மொபைல் ஃபோன்கள் உபயோகிப்பதைப் பார்க்கிறேன்.  பருவ வயதில் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் கவனிக்கத் தவறுவதை இதற்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம்.  பெரும்பான்மையானப் பெற்றோர்களில், இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் இது போன்றவை நடந்தாலும், மற்றச் சூழலிலும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.  தந்தை வெளியூரிலுள்ள சூழலில், தாயின் கவனிப்பில் வளரும் பிள்ளைகளின் மாற்றங்கள், நடவடிக்கைகள் சில சமயம் தாயின் கண்ணில் படாமல் போவதற்கு வாய்ப்புண்டு.  மட்டுமல்ல பிள்ளைகளும் தாய்/பெற்றோர்கள் நம்பும்படியான பல பொய்களைச் தாங்கள் செய்த குற்றத்தை மறைக்க சொல்வதுண்டு.  தாய் தன் மகனை நம்பத்தானே செய்வாள். ஏன் தகப்பனும்தான். “பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்றுதானே பழமொழி!

.  பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் இடைவெளி,  பருவ வயதில் ஏற்படும் புதிய நட்புகள், நண்பர்கள் உபயோகிக்கும்  அதிநவீன மொபைல் ஃபோன்களால் ஏற்படும் ஈர்ப்பு, ஊடகங்களின் வாயிலாக காண நேரும், ஈர்க்கும் விளம்பரங்கள், நன்றும், தீதும் ஆராயத் தெரியாத, பெற்றோர்களின் பொருளாதார நிலைமையை எண்ணிப் பார்கத் தோன்றாத முதிர்ச்சியின்மை, ஆடம்பர வாழ்கையின் மேல் ஏற்படும் மோகம் போன்றவையும் இங்கே காரணங்களாக அமையலாம்.  எதுவாக இருந்தாலும் இதில் பெற்றோரின் பங்குதான் அதிகம் எனலாம். அவர்கள் கவனிக்கத் தவறுவதால் தான் இவற்றில் பலதும் நிகழக் காரணம்.

இந்தச் செய்தியை படித்த போது,  எனக்கு, என் நண்பர் ஒருவரது குடும்பத்தில்  நடந்த  நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.  நண்பரின் மனைவியும் குழந்தைகளும் ஒரு இடத்திலும், நண்பர் வேறு ஒரு இடத்திலும் வேலை நிமித்தம் இருக்கின்றனர். மனைவி பள்ளி ஆசிரியை.  மனைவியின் பள்ளியிலேயே குழந்தைகளும் படிக்கின்றனர்.   மனைவி குழந்தைகளைப் பள்ளிக்குக் காரில் அழத்துச் செல்வார். இவர்களுடன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் வருவதுண்டு.  பள்ளியில்  பேருந்து கட்டணம், மற்ற பல நிகழ்சிகளுக்காக  சேகரிக்கபடும் பணம் இவரது மனைவி சேகரித்து தன் கைவசம் வைப்பது வழக்கம்.   அப்படி, தன்னிடம் வரும் பணத்தை அவர் தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வருவது வழக்கம்.  ஒரு தினம் அப்படி அவர் கொண்டுவரும் போது சிறிய தொகை குறைந்தது தெரியவில்லை.  ஆனால்  மறு நாள் ரூ.2000 குறைந்தது தெரிய வந்தது.  எங்காவது கை மாறி வைத்திருக்கலாம் என்று நினைத்தார்.  இரண்டு தினம் கழித்து ரூ. 3,500 காணாமல் போனது.  பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு காணவில்லை. அதிர்ச்சி.  ரூ.2000 காணாமல் போன பிறகு அவர் மிகவும் கவனமாகத்தான் கையிலுள்ள பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்.  இருந்தாலும் பணம் காணாமல் போனது அவருக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தந்தது. அடுத்தா நாளே, மறுபடியும் ரூ.2000 காணாமல் போனது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் தான் காணாமல் போயிருக்கிறது என்று தெரிய வந்ததும் தன்னுடன் வரும் மற்ற குழந்தைகள் மீது சந்தேகம் வரவே  தன் குழந்தைகளுடன்  அதைப் பற்றிப் பேசினார்.  எனது நண்பரின் மூத்த மகன் 9 ஆம் வகுப்பிலும்,  கூட வரும் பெண் குழந்தைகள்  இரண்டு பேர் 10 ஆம் வகுப்பிலும் படிப்பவர்கள்.  அந்தப் பெண்களில் ஒரு பெண் கைப்பையை தனது மடியில் வைத்திருந்து அப்புறப்படுத்தியதை தான் பார்த்ததாகவும் ஒருவேளை அவள் எடுத்திருக்கலாம் என்றும் மகன் கூறினான்.  இவர் அந்தப் பெண்ணைப் பற்றி சக ஆசிரியைகளிடம் விசாரித்தார்.  அவர்களின் கருத்துப் படி அந்தப் பெண் குழந்தைக்கு ‘ரூ 6000, ரூ 7000 க்கு என்ன அவசியம்.  எடுத்திருக்க வாய்ப்பில்லை’ என்றனர்.  இவர்களது மகனின் கையில் ஒரு நவீன மொபைல்.  தனது நண்பன் தந்ததாகக்  கூறியுள்ளான்.  என் நண்பருக்கு விஷயம் சொல்லப்பட்டது.  அவர் உடன் தன் மகனை சந்தேகம் எழாதவாறு விசாரித்தார்.  தான் ஒரு புது மொபைல் வாங்கித் தருவதாகவும் அவன் அந்த மொபைல அவன் நண்பனிடம் கொடுத்துவிடவேண்டும் என்றும் சொன்னார்.  மகன் பேசியதிலிருந்து அவருக்கு சின்ன சந்தேகம் வந்தது.  அவன்  தனது குற்றத்தை மறைக்க நிறைய அடுக்கடுக்காகப் பொய்கள் சொல்லுவது போல் அவருக்குத் தோன்றியது. அவன் பலமுறை அவரிடம் தனக்கு ஒரு மொபைல் வேண்டுமென்று சொன்னபோதெல்லாம், தான் மொபைல் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லியதால் அவன் இப்படி நடந்து கொண்டுவிட்டானோ என்று வருந்தினார்.  அவரது மகன்தான் பணம் காணாமல் போனதற்குக் காரணம் என்று தெரிந்ததும் மனம் மிகவும் தளர்ந்து துடித்து விட்டார்.  அவர் மனம் துடித்ததைப் பற்றி  இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.


அவர் உடன் தன் ஆஃபீஸிற்கு லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.  அவனை, மிகவும் அன்பாக, அவன் மனம் நோகாதபடி, அன்புடன் அவனை எப்படித் திருத்துவது என்பதை யோசித்து அவரும் அவரது மனைவியும் மகனை  ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்று அவனை அடிக்காமல், கடும் சொற்கள் உபயோகிக்காமல்  அன்புடன் பேசி அவன் தான் காரணம் என்பதை அவன் வாயிலிருந்து  அறிந்தார்கள்.  மிகவும் உடைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். எனது நண்பர் தன் கையோடு கொண்டுவந்திருந்த புது மொபைலை மகனுக்குக் கொடுத்தார். 
அவனுக்கு மிகுந்த குற்ற உணர்வு உண்டாயிற்று.  அவன் தான் இனி  இப்படிச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தான்.  நண்பர் அவனை அந்தக் குற்ற உணர்விலிருந்து வெளியே கொண்டுவர இதமாகப் பேசி, எல்லோருமே சிறு வயதில்,  அறியா வயதில் இது போன்ற தவறுகளைச் செய்ய நேரலாம்.  ஆனால் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று அன்புடன் பேசிய போது அவனுக்கு சமீப காலத்தில் கிடைக்கப்பெற்ற புதிய நண்பர்களின் சகவாசம் தெரியவந்தது.  நண்பர் அவனிடம் ஒரு நண்பனைப் போல பேசி அந்த சகவாசம் நல்லதல்ல என்று புரிய வைத்து அவனை மெதுவாக அதிலிருந்து மீட்டு வந்துவிட்டார்.  இப்போது அவன் அந்த நண்பர்களிடமிருந்து விலகி தனது தவறை உணர்ந்து நல்லவிதமாக மாறி விட்டான்.  நண்பர் மற்ற குழந்தைகளையும் அழைத்து நடந்த சம்பவங்களைப் பற்றி பேசி அவர்களும் இது போல் செய்யக் கூடாது என்றும், அவர்களது தேவை எதுவாக இருந்தாலும் தங்களிடம் கேட்க வேண்டும் என்றும் அன்புடன் சொல்லி, அவர்களது அண்ணனைப் பற்றி ஒருபோதும் தவறாகவோ, கேலி செய்தோ பேசக் கூடாது என்றும் சொல்லி அறிவுறுத்தினார். செய்த தவறை உணர்ந்த ஒருவரை அதன் பிறகும் அவரை அவர் செய்த தவறைப் பற்றி பேசி அவர் மனதைப் புண் படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார். அப்படி அந்தக் குழந்தைகள் எல்லோரும் நல்ல குழந்தைகள் ஆனார்கள்.


முதலில் நடந்த, செய்தித் தாளில் வெளியான சம்பவத்தில், போலீசாரின் நடவடிக்கையும் என் ந்ண்பர் செய்ததுபோல மிகவும் பக்குவமான, இதமான ஒரு நடவடிக்கைதான் என்பது இங்கு நம் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்சியைத் தருகின்ற ஒன்றுதான். குற்றம் செய்த மாணவர்களை குற்றப் படுத்தாமல், குற்றவாளிகளைப்போல் கருதிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல், அவர்களது பெற்றோர்களை அழைத்துப் பேசி, அந்த மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பாமல், 
அவர்களுக்கு நல்ல விதமாக, மன ஆலோசகரைக் கொண்டு கவுன்சலிங்க் கொடுத்து, கருத்துரை வழங்கி, பின்னர்  பழையபடி அவர்கள் படித்த அதே பள்ளியிலேயே படிப்பைத் தொடர வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  சமூகம் இந்த மாணவர்களை புறம்தள்ளாமல்,
அவர்களும் தங்களது தவறைத் திருத்தி மறு வாழ்வு வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை, போலீசாரின்  இந்த முடிவு தெரியப்படுத்துகிறது.  மிக மிக வரவேற்கப்படவேண்டிய ஒரு நல்ல முடிவு. போலீசாரைப் பற்றி பல தவறானக் கருத்துகளையும், நையாண்டியையும், நகைச்சுவகளையும் நாம் அள்ளித் தெளித்து உலா வரச் செய்யும் இந்நேரத்தில், இப்படிப்பட்ட நல்ல மனம் உள்ள போலீசாரும் இருக்கின்றனர் என்பதை, நாம் இச் சம்பவத்திலிருந்து அறிய முடிகிறது. மனதுக்கு இதமாக இருக்கிறது. போலீசாருக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.  ஹாட்ஸ் ஆஃப்  டு  குருவாயூர் போலீஸ்.!!

சனி, 26 அக்டோபர், 2013

ஆறறிவு?? படைத்த நாம் திருந்தப் போவது எப்போது??

ஆறறிவு?? படைத்த நாம் திருந்தப் போவது எப்போது??


உடலுக்குக் கேடு ஏற்படுத்தும் மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா டப்பாக்கள் கொடுங்கையூர், பெருங்குடி கிடங்குகளில் மண்ணில் புதைத்து அழிகப்பட்டன..’அடக்கம்’ செய்யும்........ – செய்தி

ரொம்ப சந்தோஷமான செய்திதாங்க.  எப்பங்க ‘குடி’ திரவங்களுக்கு சமாதி கட்டப்போறாங்க? அந்த இனிய நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியக் குடிமகன்......ஐய்யோ தப்பா எடுத்துக்காதீங்க......’குடி’ மகன் இல்லீங்க.......குடிமகன்தாங்க.....ஏன்னா இந்தக் கேடுகெட்ட குடியினால எத்தனையோ குடும்பங்கள் சீரழியுதுங்க...குற்றங்கள் நடக்குதுங்க....அப்புறம் இந்தக் காதல் தோல்வினு நிறையபேரு தேவதாஸ் தாடியோட கையில பாட்டிலோட அலையறாங்க...இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராதானு ஒரு ஏக்கம் தாங்க.....சமாதி கட்டினதுக்கப்புறம் அது ‘ஆவி’யா வந்திடாம இருக்கணுங்க....

-------------------------------------------------------------------------
பசுமை வழியில் வாழ வேண்டும்- ஆளுநர் ரோசய்யா அறிவுரை

பசுமைக் கட்டிடசர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி 2013-ல் அவர் பேசியது........சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.(?).....நாம் அனைவரும் இயற்கையுடன் இணைந்து பசுமை வழியில் வாழக் கற்றுக் கொள்வதன் மூலம் நம்மால் நம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும்”

கேக்க நல்லாத்தான் இருக்குது.......ஆனா, இயற்கையுடன் அப்படினா என்னாது? எங்க இயற்கை இருக்குது?  தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு நகரத்துலயும், மாநகரத்துலயும், எத்தன காருங்க, ரெண்டு சக்கர வண்டிங்க ஓடுது புகய கக்கிக்கிட்டு.....கொஞ்சம் உங்க வீட்டு மொட்டை மாடில ஏறி பாருங்க சுத்தி.....பச்சையா ஏதாவது தெரியுதா? ஒரே கட்டடக் காடுதானே தெரியுது....இருக்கற ஒண்ணு ரெண்டு பச்சையையும் அழிச்சுட்டு எப்படா ப்ளாட்டு போட்டு கட்டடமா மாத்தலாம்னு நிறைய கூட்டமே அலையுது......

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

இப்படி பைத்தியக்காரக் கவிஞன் பாரதினு ஒருத்தன் பாடிட்டு போயிட்டான்.  அவன ரசிச்சு, அவன மாதிரியே கனவு கண்டு நானும் ஒரு காணி நிலம் வேணும்னு நாயா பேயா அலயறேன். ம்ம்ம்ம் எங்க?.....ஏழுதலை முறை விலை வேற...பெருமூச்சுதான் தென்றல்....தென்னை மரம்?  ஹாங்......இப்போதைக்குத் தென்னை மரம்னா என்ன அப்படினு   அடுத்த சந்ததயினர்க்குச் சொல்றதுக்கு    இருக்கு  ஆனா    எதிர்காலத்துல.????..... கேணி?  அப்படின்னா?  பூதம் வராம இருந்தா சரி.....மாளிகை?  ஒரு குச்சு வீடு கிடைச்சாலே பெரிய விஷயம்....குயில்?  கூகிள் ல குயில்னு போட்டுத் தேடுங்க...படம் வரும் அதுதான் குயில்.....நிலா....ஹா இப்போதைக்கு அது ஒண்ணுதான்...அதுல கூட நம்ம மக்கள் ப்ளாட் போட்டு கட்டிடம் கட்டி அந்த ஒளியை மறைக்காம இருந்தா சரி......

ம்ம்ம் இதுல பசுமையோடு இணைந்து பசுமை வழியில் வாழக் கற்றுக் கொள்தல் என்பது ஏட்டளவிலும், உதட்டளவிலும்தான் போய்க் கொண்டிருக்கிறது.  இன்னும் இன்னும்  நாம் பொருள் சார்ந்த உலகை நோக்கித்தான் பயணிக்கிறோம்.  ஆக்சிஜன் ஸ்வாசித்தல் மையங்கள் கூட உருவாகிவிட்டதாகவும் செய்தி. தன் குழியைத் தானே பறித்துக் கொள்ளும் அவல நிலை.  நாம் திருந்தப் போவது இல்லை.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

இந்து தமிழ் நாளிதழிலிருந்து........இந்து டாக்கீஸ்...

இந்து தமிழ் நாளிதழிலிருந்து........இந்து டாக்கீஸ்

தமிழ் ஸ்டுடியோ, தமிழில் குறும்பட முயற்சிகளைச் செறிவாக்கும் நோக்கில் குறும்படத் திரையிடல் மூலம் 2008ல் தன் பணியைத் தொடங்கியது. சென்னை திரைப்படக் கல்லூரி மாணவரான அருண் இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர்.

சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்கள் பலருக்கும் தமிழ் ஸ்டுடியோ பயிற்சி அளித்து வருகிறது. எடிட்டிங், இயக்கம், ஒளிப்பதிவு போன்ற துறைகளில் குறுகிய காலப் பயிற்சிகளை அளித்துவருகிறார்கள். சென்னை மட்டும்மல்லாது, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் பயிற்சிப் பட்டரைகள் நடத்தி வருகிறார்கள். சினிமா என்பது தொழில் நுட்பத்திற்குள் நின்று விடக்கூடாது என்பதற்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களளுடனான உரையால்களைப் பயிற்சியின் ஒரு அம்சமாகச் சேர்த்துள்ளார்கள்.  ஆர்வமுள்ளோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்குடன் இதை இங்கு பதிவு செய்துள்ளோம்.  இதன் இணயதள முகவரி இதோ கீழே

http://www.thamizhstudio.com/

வியாழன், 24 அக்டோபர், 2013



இன்று (24-10-2013) ஹிந்து தமிழ் நாளிதழில், ஊர்வலம் பகுதியில் வெளியான படம் இது.  ஆஹா, ஏதோ பசுமைப் புரட்சியா?! னு நான் ஏமாந்து நினைச்சது போல நீங்களும் ஏமாந்துடாதீங்க.  அதுல இருக்கற நியூஸ படிசப்புறம்தான் தெரிஞ்சுச்சு 'அடப்பாவிங்களானு'.
"எப்பவுமே, பொதுக்கூட்டம், பாதுகாப்புனு வெயில்லயும், மழைலயும் இருக்க வேண்டிய நிலை காவலர்களுக்கு.  ஆனா இந்தப் பெண் காவலர் பசுமையான இந்த சூழலில் நிற்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்தான்.  நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள்" -செய்தி

எல்லாம் சரிதான்....இப்ப தெரியுதா நான்  அடப்பாவிங்களானு சொன்னது ஏன்னு..பசுமையான சூழலாம்...பின்ன என்னங்க, விலைவாசி எகிறி போயி, ஒரு வாழைக்காயும்,  ஒரு வாழைப்பழமும் கூட 10ரூபாய், 12 ரூபாய்னு விக்கிற இந்த நிலமைல, ஒருவேள சாப்பாட்டுக்கே வழி இல்லாம ஒரு பக்கம் சனங்க வயித்தயும் வாயையும் கட்டிகிட்டு கிடக்க....இப்படி இத்தனை வாழைத்தார் கட்டி வீணடிக்காங்களேனு....இப்படிக் கூடவா?!  முக்கியமான நபர்கள்?......யார் வீட்டுக்குப் போச்சோ?! யார் யார் வீட்டுல அடுத்த நாள் வாழைக்காய வைச்சே ஓட்டினாய்ங்களோ?! என்னக் கொடுமை சார் இது......

உங்க ஊர்ல இப்ப வாழைக்கா, பழம் என்ன விலைங்க.? அதாங்க எல்லாம் அங்க வரவேற்கப் போயிடுச்சே ..அதான்......

வாழ்த்துக்கள்! திரு.உசைன் ரண்டத்தானி,


வாழ்த்துக்கள்! திரு.உசைன் ரண்டத்தானி, 







வாழ்த்துக்கள்! திரு.உசைன் ரண்டத்தானி, 

     வாழ்த்துக்கள்! நீங்கள் எழுதியிருந்த “ஸ்வாமி விவேகானந்தன்டெ இஸ்லாம் காழ்ச்சப்பாடு” என்ற கட்டுரைக்கு. (தேசாபிமானி, 16-10-2013).

  வெவ்வேறு சமயத்தில், வெவ்வேறு இடங்களில் ஸ்வாமி விவேகானந்தர் ஆற்றிய உரைகளை உங்கள் கட்டுரையின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்டிருந்ததிலிருந்து, அவர் இஸ்லாமிய மதத்தை எப்படிக் கருதினார், நோக்கினார் என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. அவர் அத்வைத தத்துவத்தை நம்பியதால் அவரால் மற்ற மதங்களை வெறுத்திருக்க இயலாது. எப்போதும், எல்லாரையும் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை சகோதர, சகோதரிகளாகவே பாவித்தார். கேரளாவில் இருந்த, மன்னிக்க முடியாத, நியாயமற்ற, தீண்டாமைக்கும், சாதிப் பிரிவு, வேறுபாட்டிற்கும், அவர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். அவருக்கும் கூட கொடுங்கல்லூர் கோவிலில் ஒரு கசப்பான அனுபவம் நேர்ந்தது. அவர் பிராமணர் அல்லர் என்ற ஒரே காரணத்தினாலேயே அந்தக் கோவிலுக்குள் அவர் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு மிகவும் ஏமாற்றம் அளித்த ஒரு சம்பவம் இது. கோவிலுக்கு எல்லோரும் வரவேண்டும் என்ற அழைப்பை முன்னிலைப்படுத்தாமல், ஜாதி அடிப்படையில் கோவிலுக்கு வருவோரை வெளியேற்றும் பழக்கம் கேரளாவில் இருந்ததால்தான், பலர் இஸ்லாமிய மதத்தையும், கிறித்தவ மதத்தையும் தழுவுவதற்கு, அது ஒரு காரணமாக அமைந்தது.  ஆனால், அவர் அதை விரோதித்து புத்திமதி கூறவில்லை.  அதனல்தான் அவர் கேரளாவை, மதவெறி பிடித்த, பித்துப்பிடித்த ஒரு இடம் என்று முடிவு செய்தார். அதன் பிறகு அவர் இந்த, ஜாதி, மத, இன வேறுபாட்டையும், தீண்டாமையையும் ஒழிக்க அத்வைத சித்தாந்த்த்தைப் பரவச் செய்தார். அதனால், இந்தியராகிய நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரை எல்லோரும் அங்கீகரித்து, நல்ல விதத்தில் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  இதே போன்று, விவேகானந்தரைப் பற்றி மற்ற மதங்களைச் சேர்ந்த அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளும் அவரைப் புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

Congrats!  Mr. Hussain Randathani,
          
    Congrats! For the article “Swami Vivekanandande Islam kaazhchappaadu” (Desabhimani, dated, 16-10-2013).
          
       Your article that consist the portion of Swami Vivekananda speech delivered at different times in different places clearly depicts how he considered Islam and other religions.  Since, he believed in Advaitha philosophy, he couldn’t hate other religions.  He could consider all people invariably whatever religion they might belong to, as brothers and sisters.  But he was dead against untouchability and caste segregation that unpardonably and unjustifiably existed in Kerala.  He too had a bitter experience when he visited Kodungallur temple.  He was denied to enter the temple, since he was not a Brahmin.  He was greatly disappointed.  Instead of inviting people to temple driving them away from the temple was a practice followed in Kerala which was the reason behind the mass conversion of people in Kerala into Christianity and Islam.  He never dissuaded them from doing so.  That was why he declared that Kerala was a lunatic asylum of religious fanatic and he also began to propagate the Advaitha philosophy to get cured of this untouchability, social injustice, caste and religious segregation thereafter.  Such a great personality he is!  So, he should be recognized and understood properly by all Indians, whatever religions they may belong to.  I hope similar articles of the scholars from other religions will be very helpful to understand the great Saint.