திங்கள், 8 ஜூன், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 3

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

=========================================================================

பீமநகரி - 1

எங்கள் கிராமத்தின் ஜடாயுபுரம் ஆற்றங்கரைப் பகுதி வடக்கு/வடமேற்குப் பகுதியில் என்றால் பீமநகரி எனும் சின்ன கிராமம் (இப்போது பெரிதாகிவிட்டது) எங்கள் கிராமத்தின் வடகிழக்குப் பகுதியில். இரண்டிற்கும் நடுவில் வயல்கள், தோப்புகள், தேரேகால் வாய்க்கால், வீரநாராயணமங்கலம் - நாஞ்சில்நாடன் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர் - செல்லும்  சாலை. பீமநகரி நோக்கி, இயற்கைக் காட்சிகளைப் பார்த்தபடியே நடப்போம் வாங்க...வீட்டிலிருந்து கிளம்பியாச்சு. 

அப்படிச் செல்லும் சாலையின் இடப்புறம் ஜடாயுபுரம் ஆற்றங்கரைப் பகுதி படங்களில், பீமநகரி இரண்டிற்கும் நடுவில் செல்லும் சாலை வழியாக பீமநகரிக்கு நடை.... 
அப்படி நடக்கையில் சமீபகாலமாக இருக்கும் இந்த பண்ணையைப் பார்க்க நேர்ந்தது. 
வலப்புறம் தேரேகால் வாய்க்கால். படத்தில் தெரியும் பாலம் வழி பீமநகரி கிராமத்திற்குச் செல்ல வேண்டும். 
தேரேகால் வாய்க்காலில் இருந்து இப்படி இடப்புறம் ஜடாயுபுரம் நோக்கி அங்கு வயல்களுக்குப் பாசனத்திற்காக அப்பப்ப திறந்துவிடப்படும் சின்ன வாய்க்கால்
இதோ பாலம் அருகில் வந்தாச்சு....இருங்க அதுக்கு முன்னாடி....
பாலம் வழி திரும்பாம நேரே போனா, வீரநாராயணமங்கலம் கிராமம்...நம்ம நாஞ்சில் நாடன் அவர்களின் ஊர் அப்படிப் போற சாலையின் இடப்புறம் இப்படித் தென்னந்தோப்புகள். வலப்புறம் தேரேகால் வாய்க்கால்...
ஆனால் நாம இப்ப....இந்தப் பாலத்துல திரும்பியாச்சு பீமநகரி போவதற்கு...
இந்த வாய்க்கால் பீமநகரி போகும் சாலையின் வலப்புறம்....இந்த வயல்களுக்கு நீர்ப்பாசனத்துக்கு...
சாலையை உங்களுக்குக் காட்டவே இல்லையே இதோ இது வழிதான்...இடப்புறம் இருக்கும் கட்டிடங்கள் விவசாயத் துறைக்கான   ARS எனப்படும் விவசாய ஆராய்ச்சி மையங்கள்.  இதுக்கான விவசாய பண்ணைப் பயிற்ச்சி மையம் எங்கள் ஊர்ப்பக்கம். 
விதை சுத்திகரிப்பு மையம்
விதை சுத்திகரிப்பு மையத்தின் எதிர்ப்புறம், நாம நடக்கும் போது இந்த வாய்க்கால்...முதல்ல பார்த்ததுதான் நம்ம கூட வந்துட்டே இருக்கும்...
அதோ வலப்புறம் தெரிகிறதா ஒரு கட்டிடம்  அதன் படம் கீழ வரும்...அதுக்கு இடையில் 
நமக்காக வயலில் உழைக்கும் உழைப்பாளிகளையும் பார்த்து நன்றி சொல்லிவிட்டு......இதோ மேலே சொன்ன கட்டிடம் என்னன்னு பார்ப்போம் கீழே
வேளாண்மைத் துறை உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், மண் பரிசோதனை நிலையம். இந்த ஆராய்ச்சி மையங்களில்தான் நான் அப்ப அங்கு இருந்த போது TPS 1, 2, 3 வகை நெல் வகைகள் அதிக மகசூல் தரும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. பாருங்க நம்ம ஊரின் பெருமைகளை! 
பார்த்தீங்கல்ல, சுற்றிலும் இவ்வளவு வயல்களும் தோப்புகளும் இருக்கையில் அந்த ஆராய்ச்சி மையம் இங்கு அவசியம் தானே? என்ன சொல்றீங்க?  சின்ன வயதில் என் மனதில் அந்த மையங்கள் விதைத்த விதை, விவசாய பட்டப்படிப்பு படிக்கணும் என்ற ஆசை. ஆனால் விதை வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது! 
அதோ தெரிகிறதா ஊர்? அதுதாங்க பீமநகரி கிராமம்...இங்க சுத்தி இயற்கையைப் பார்த்துக் கொண்டே ஆசுவாசப்படுத்திக்குவோம்.  அப்புறம் ஊருக்குள்ளாற போவோம்... 

எங்கள் கிராமத்திலிருந்து 1.5 கிமீ. நடந்தே செல்லும் பகுதி.  ஆனால் நடக்கும் போது தூரம் தெரியவே தெரியாது.

வெள்ளம் வந்த போது என்னவோ பெரிய ஊடக நிரூபர் போன்று இந்தக் கிராமம் வரை சென்று மேலே உள்ள பகுதிகள் எல்லாம் வளைச்சு வளைச்சு காணொளிகள் எடுத்துப் பகிர்ந்திருந்தேன்! உங்களுக்கு நினைவு இருக்கலாம்.. இல்லைனாலும்!!!! No Problem!

வெள்ளம் வடிந்த பின் தினமும் நடைப் பயிற்சி சென்ற போது,  பீமநகரி பகுதிக்கும் சென்று அப்படியே ஒரு சுற்று சுற்றி வரும் சாலையில் வந்தால் எங்கள் கிராமத்திற்குள் வந்துவிடலாம்.  அருகில் இருக்கும் பகுதிகள் எல்லாமே அடுத்தடுத்து என்பதால் நடந்தே சுற்றிச் சுற்றி வந்துவிடலாம். அப்படிச் சென்று எடுத்த படங்கள்தான் இவை. 

இன்னும் தொடரும் எங்கள் ஊர்ப்பகுதி அழகைக் காட்டினால்தானே, நான் எப்படியான இயற்கை சூழ் பகுதியில் பிறந்து வளர்ந்திருக்கிறேன்,  இயற்கை ஆர்வம், புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் வந்தது...நான் சொல்வதெல்லாம், "ஆமால்ல....இம்புட்டு அழகா! உண்மை உண்மை உண்மை" அப்படினு சொல்வீங்கல்ல!!! எவ்வளவு அழகுல்ல எங்க ஊர்ப்பகுதி!


-------கீதா

36 கருத்துகள்:

  1. புகைப்படங்களால் ஆன பதிவா? நாஞ்சில் நாடன் இப்போது அங்கே இருக்கிறாரா? இல்லை சென்னை அல்லது வேறு நகரங்களில் இருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் பற்றிக் கொஞ்சம் சொல்லிருக்கிறேன் கீழே பார்த்திருப்பீங்க. இன்னும் அடுத்த பகுதியில் வரும், ஸ்ரீராம்.

      அடுத்த பகுதி அடுத்த வாரம் தான் வரும்...நீங்களும் பிஸி...நெல்லையும் பிஸி, கோமதிக்கா பிஸி....வெங்கட்ஜி பிஸி...எல்லோரும் பிஸி! நானும் பிஸி!!! என்று சொல்லிட்டா போச்சு!!!! ஹாஹாஹா

      கீதா

      கீதா

      நீக்கு
    2. நாஞ்சில் நாடன் அவர்கள் மும்பையில் பல ஆண்டுகள் வேலை நிமித்தமாக இருந்த பிறது இப்ப கோயம்புத்தூரில் வசிப்பதாக அவர் பதிவுகள் ஒன்றில் பார்த்த நினைவு, ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. பிசி...... பல சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது. இருக்கும் நேரத்தில் முடிந்தவரை எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருக்கிறதே.... ஆனாலும் இந்த மாதிரி பதிவுகளைப் படிக்கவும் ரசிக்கவும் நிச்சயம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

      நீக்கு
    4. ஆமாம் வெங்கட்ஜி...பல வேலைகல் இருக்கும் நேரத்தில் முக்கியத்துவம் கொடுக்கணுமே நம்ம வேலைகளுக்கு.

      //ஆனாலும் இந்த மாதிரி பதிவுகளைப் படிக்கவும் ரசிக்கவும் நிச்சயம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.//

      மிக்க நன்றி வெங்கட்ஜி.

      கீதா

      நீக்கு
  2. ஜடாயுபுரம்னா?  ஜடாயு சிறகு அறுபட்டு விழுந்த இடமா?  முன்னரே சொல்லி இருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் ஸ்ரீராம். ஆமாம் இதற்கு முந்தைய பகுதி அதுதான். 2 பகுதி வந்தன.

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  3. பண்ணையைப் பார்க்க நேர்ந்தது சரி, அதை நேருக்கு நேர் நின்று ஒரு படம் எடுத்திருந்தால்தானே படிக்க முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த புகைப்படத்தைதான் நான் தேடிக் கொண்டே இருந்தேன் என் தொகுப்பில். எப்படி மிஸ் ஆனது என்று தெரியலை. அதுவும் அங்கிருந்தவர், நான் நேரே நின்று எடுத்த போது ஃபோட்டோ எல்லாம் பிடிக்கக் கூடாதுன்னு வேற சொல்லிட்டிருந்தார்!!!! கேட்டுக்கு அப்பால நின்றிருந்தவர். அதனால சைட்ல ஒரு க்ளிக்.....ஒரு வேளை என்னைப் பார்த்தா அவருக்கு ஏதோ தப்பா தோணிச்சு போல!!! நான் சொன்னதைக் கூடக் காதுல வாங்கிக்கலை. நின்று கொண்டிருந்த போது அவர் வைத்திருந்த நாயை பெரிய அல்சேஷன்...அதைப் பிடித்துக் கொண்டு வந்தார். ஓ! என்னை மிரட்டுறார் போல!!

      இதை அப்படத்தின் கீழே குறிப்பிட்டிருந்தேன். அது சேவ் ஆகலைன்றதையே இப்பதான் கவனிக்கிறேன், ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. இந்த வழி, இந்தவழி என்று சொல்லிக் கொண்டே வருகிறீர்கள்  வழியோ, சாலையோ கண்ணில் தெரியவில்லையே என்று முதஜாளிலிருந்தே இருந்த என் எண்ணத்திற்கு பின்னர் ஒரு புகைப்படத்தில் இதோ இதுதான் அது என்று காட்டி இருக்கிறீர்கள்!  அதற்கு முன்னாலேயே பாலம் திரும்பியதும் வழி அங்கும் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அதேதான் எனக்கும் தோன்றி, டக்குனு நினைவாக சாலைகள் எடுத்த படத்தை அடுத்தடுத்து எடுதிருந்ததால் தொகுப்பாக இருந்ததா எடுத்துப் போட்டுவிட்டேன்! நீங்களும் கவனிச்சிட்டீங்க!!! ஆமாம் பாலம் திரும்பியதும் அந்த வழி...நான் எங்கள் வீட்டிலிருந்து போகும் சாலை படம் எடுத்திருந்தேன் அதை வெள்ளம் வந்த போது பகுதியில் சேர்த்துவிட்டதால் இப்ப இல்லை.

      அடுத்த பதிவில் அல்லது இப்பகுதி முடியும் போது தொகுப்புக் காணொளி வரும். அதில் தொடக்கத்தில் சாலை தெரியும்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. தேரேகால் வாய்க்கால்..  என்ன பெயர் அது!  அதற்கு முன்னாடி என்று தென்னந்தோப்பை காட்டும்போது கொஞ்சம் சாலை தெரிகிறது.  தென்னந்தோப்பு அழகு.  இதெல்லாம் நகரங்களில் காணக்கிடைக்காத காட்சிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வாய்க்கால் தேரேகால்புதூர் எனும் பகுதி குளத்தில் போய்க் கலப்பதால் அப்பெயர். இதை அப்ப வெள்ளம் வந்த சமயத்தில் இந்த தேரேகால் வாய்க்கால் பத்திதான் நிறைய சொல்லி படங்களும் காணொளிகளும் அது கலக்கும் இடமும் கூட போட்டிருந்தேன்.

      ஆமாம் ஸ்ரீராம் நகரங்களில் கிடைக்காத காட்சி.

      இடப்புறம் முழுவதும் தென்ந்தோப்புகள் அதுவும் வீரநாராயணமங்கலம் தாண்டினா தாழக்குடின்னு ஊர்...நான் அங்க போக முடியலை. அந்தச் சாலைவ் எள்ளத்தில் பிளவு பட்டு, நான் புறப்படும் வரை சரியாகலை. ஸோ போக முடியலை இல்லைனா அப்பகுதியும் கவர் செய்திருப்பேன்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. இந்தத் தாழக்குடிப் பகுதியில் உள்ள பாலம்...தேர்கேகால் வாய்க்கால், எங்கள் ஊர் வண்ணான்குடி எல்லாம் நாஞ்சில்நாடன் அவர்கதைகளில் இடம் பெற்றிருக்கும் பகுதிகள்.

      கீதா

      நீக்கு
  6. வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் என்பது சுவாரஸ்யம்.   வயல்களும், மரங்களும், நீரும்..  இனிமையான சூழல். 

    அவர்கள் வெயிலுக்குதானே குடை பிடித்து நடக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். கோடைகாலத்தில் இவ்வளவு இருக்காது என்றாலும் தண்ணீர் வற்றியதில்லை. ஓட்டம் குறைவாக இருக்கும் அவ்வளவுதான்.

      ரொம்பவே அதுவும் பின்னில் மலைகளும் என்று அவ்வளவு அழகாக இருக்கும் ஸ்ரீராம். கோடையில் கூட!

      அவர்கள் வெயிலுக்குதானே குடை பிடித்து நடக்கிறார்கள்?//

      ஹாஹாஹா.. குடை போல இருக்கு இல்லையா நாற்றுக் கட்டு!

      வெயில் அடிக்கலை ஸ்ரீராம் அப்ப முந்தையதினம் தானே வெள்ளம் வந்து ஓய்ந்திருந்தது. மழைக்கான அறிகுறிகள்தான் அதிகம். நான் நடந்த போதே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அங்கு ஒதுங்க கூட இடமில்லை. அந்த இடம் பின்னால் வரும்.

      கீதா

      நீக்கு
  7. ஆமாம், இந்த மாதிரி இடத்தில வசித்து விட்டு நகரத்தின் பரபரப்பில் இருக்கும்போது மனம் கொஞ்சம் வாடிபோகும்தான்.  ஏங்கிப்போகும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அதுவும் திருவனந்தபுரத்தில் இருந்தவரை தெரியவில்லை. காரணம் அங்கும் இப்படித்தானே இருக்கும். அப்பலாம் நாங்க இருந்த பகுதியில் தென்னந்தோப்புகளும் நீர் நிலைகளும் இருந்தன இப்ப ஒவ்வொரு தோப்பும் குடியிருப்புகளாக மாறிவிட்டன நாங்க இருந்த பகுதியிலேயே...

      சென்னை வந்த பிறகுதான் ரொம்ப என்னடா இது என்று தோன்றியது. ரொம்ப ஏங்கத் தொடங்கினேன்.

      இப்போது இங்கும் அப்படித்தான் என்றாலும் கொஞ்சம் மரங்கள் இருப்பதும் அருகில் ஏரிக்கரை இருப்பதும் ஆசுவாசம்.

      கீதா

      நீக்கு
  8. வெள்ள சமயத்தில் நீங்கள் அங்கு சுற்றித் திரிந்து எடுத்துக் போட்ட புகைப்படங்கள் நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. இயற்கைக் காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் படமெடுத்தாலும் திகட்டாது.

    நாம நகரத்துல உழலுகிறோம் அல்லவா? கிராமத்துக் காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நெல்லை. நேரில் பார்க்கும் போது அந்த இடத்தில் நின்று பரந்துபட்ட வயல்வெளிகளையும் பின்ன்ல் தென்னந்தோப்பு மலைகள் என்று பார்க்கும் போது மனம் மெய்மறந்து நின்றுவிடும். அதும் அங்கு அடிக்கும் காற்று இருக்கே!!! அங்கிருந்தவரை தினமும் சுற்றிவிடுவேன். ஜடாயுபுரம் இந்த பீமநகரிப் பகுதி எல்லாம்...நடைப்பயிற்சி ப்ளஸ் மனப் பயிற்சி!

      நன்றி நெல்லை.

      கீதா

      படம் பிடிச்சு வைச்சுட்டா நாம எப்ப வேணா பார்த்துக்கலாம்

      நீக்கு
  10. வெள்ளத்தின்போது நீங்க போட்ட படங்களுக்கும் இப்போ உள்ளவைகளுக்கும் நிறைய வித்தியாசம்.

    கிராமத்துக்கு உங்களுடன் நடந்துவந்த உணர்வு

    என்ன ஒண்ணு... இரண்டு பக்கமும் வயல்கள் தென்னந்தோப்பு, நீர்நிலை. எந்தக் கடைகளும் இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெள்ளம் வடிந்ததும் சென்று எடுத்த புகைப்படங்கள்.

      எதுக்குக் கடைகள் அங்கு? நெல்லை? கடைகள் இருந்தால் குப்பைகள் சேரும்....அது அந்தக் கிராமிய இயற்கை அழகைக் கெடுத்துவிடும். ஆனா இனி வந்தாலும் வந்துவிடலாம். நல்லகாலம் அதுக்கு முன்ன படம் பிடிச்சு வைச்சுட்டேன்! 1 மணி நேர நடைக்குள் எதுக்குக் கடைகள். ரெண்டாவது இயற்கையைப் பார்த்துக் கொண்டே நடக்கும் போது வேறு எந்த வயிற்றுச் சிந்தனையோ எதுவும் இருக்காது நெல்லை.

      கீதா

      நீக்கு
  11. கரெக்டா நாலு அடிக்கு சாலை பிளவுபட்டிருக்கிறதே..

    வெள்ளம் வந்தபோது அந்தப் பகுதி சிதைந்துவிட்டதா? மற்றபடி சாலை சூப்பராக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெள்ளம் வந்தப்ப அப்படி ஆகிவிட்டது. இன்னொரு படம் அப்ப போட்டிருப்பேன்...இந்த வீரநாராயணமங்கலம் ரோடு பீமநகரி க்குத் திரும்பும் பாலம் தாண்டி நேரே போனா சற்று தூரத்தில் ரோடு செம பிளவு அதனால் அதைத் தாண்டிய பகுதிகளைக் கவர் செய்ய முடியலை.

      மற்றபடி சாலை ரொம்ப நல்லாருக்கும் நெல்லை.

      கீதா

      நீக்கு
  12. ஐ.ஆர் வகை நெல்லைக் கண்டுபிடித்தது பிலிப்பைன்ஸில்.

    நம்ம ஊரிலும் நெல் விதைகள் ரகங்கள் கண்டுபிடிக்கறாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நம்ம ஊரிலும் கண்டு பிடிக்கறாங்களே! TPM தெரியாம போட்டுவிட்டேன் வீட்டுல அப்படிச் சொல்லிச் சொல்லிப் பழகிவிட்டதால்.... அது TPS 1, 2, 3, இப்ப 5 வரை வந்திருக்கு. TPS 1 சிவப்பு குண்டு அரிசி...ரெட் போல்ட் னு சொல்வதுண்டு...2 வந்து வெள்ளை குண்டு. வெள்ளை போல்டுனு

      இந்த ரெண்டும் நான் அங்க இருந்தப்ப முக்காமைல் அதாவது தேசிய நெடுஞ்சாலைலருந்துப் தேரேகால்புதூர் பஸ் ஸ்டாப்லருந்து ஊருக்குள்ள நடக்கும் போது இடப்பக்கம் முழுவதும் வயல் வயல் வயல்தான், அந்த வயல்ல நாற்று வளர்ந்து வரப்ப அங்கு என்ன நெல் போடப்பட்டு விளையுதுன்னு ஒரு போர்டு குத்தி வைச்சிருப்பாங்க அதுல இந்த இரு பெயர்களும் ஒவ்வொரு வயலிலும் இருக்கும். 5 வருடம் முன்ன 2021 ல் போயிருந்தப்ப....இந்த இடங்கள் எல்லாம் வீடுகள். மனம் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டது. நடுவில் நாலுவழிச் சாலை வேறு...

      கீதா

      நீக்கு
  13. தேரேகால் - இது என்ன பெயர்?

    தேரிப்பகுதின்னா செம்மண் பகுதி அல்லது விளைநிலம் அதிகமில்லாத பகுதி.

    ஒண்ணேகால் மாதிரி இது என்ன தேரேகால்?

    அது சரி..இந்த ஜிகே கேப்சர்ஸ் - இது எந்தக் கம்பெனி விளம்பரம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேரேகால் என்பது ஓடும் வாய்க்கால் குளம், பகுதிக்கான பெயர்.

      தேர் ப்ளஸ் கால் தேரேகால்னு ஹிஹிஹி...இந்த நீர்ப்பகுதியை ஒட்டிய புதுசா வளர்ந்த கிராமம் அப்போது என்பதால் தேரேகால்புதூர் என்று இப்பகுதியை அதாவது ஊர்ப்பகுதியானது. நாங்க இருந்தப்பவே...

      அது சரி..இந்த ஜிகே கேப்சர்ஸ் - இது எந்தக் கம்பெனி விளம்பரம்?//

      ஹாஹாஹா ....சொந்தக் கம்பெனி விளம்பரம்தான்!!!!! சில படங்களில் பெரிதாகிவிட்டது ஃபான்ட்!

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  14. //வெள்ளம் வந்த போது என்னவோ பெரிய ஊடக நிரூபர் போன்று இந்தக் கிராமம் வரை சென்று மேலே உள்ள பகுதிகள் எல்லாம் வளைச்சு வளைச்சு காணொளிகள் எடுத்துப் பகிர்ந்திருந்தேன்! உங்களுக்கு நினைவு இருக்கலாம்//

    //தேரேகால் வாய்க்காலில் இருந்து இப்படி இடப்புறம் ஜடாயுபுரம் நோக்கி அங்கு வயல்களுக்குப் பாசனத்திற்காக அப்பப்ப திறந்துவிடப்படும் சின்ன வாய்க்கால்//


    படங்களை பார்த்ததும் நினைவுக்கு வந்து விட்டது.

    நாற்றுக்களை தலை சுமையாக எடுத்து செல்லும் படங்கள் அருமை. நீங்கள் சொல்வது போல அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதிக்கா...உங்க பிஸி நேரத்திற்கிடையிலும் இங்க வந்து எட்டிப் பார்த்திருக்கீங்களே அதுக்கு மிக்க நன்றி அக்கா.

      உங்கள் உடல் நலம், விருந்தினர், நல்ல நிகழ்வு உங்கள் மகிழ்ச்சி அதுதான் முக்கியத்துவம் அக்கா. பதிவுகள் எல்லாம் மெதுவா ஆற அமர பார்த்துக்கலாம்.

      //நாற்றுக்களை தலை சுமையாக எடுத்து செல்லும் படங்கள் அருமை. நீங்கள் சொல்வது போல அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.//

      ஆமாக்கா. உங்களுக்கும் அந்த வெள்ளம் படங்கள் காணொளிகள் நினைவிருப்பது மிக்க மகிழ்ச்சி

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  15. ​தேர்ந்தெடுத்த படங்கள அழகு. மூன்று பேர் வரப்பில் நடக்கும் படம் டாப். இரண்டாம் இடம் நடுவிலே கொஞ்சம் ரோடை காணோம் படத்திற்கு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாம் இடம் நடுவிலே கொஞ்சம் ரோடை காணோம் படத்திற்கு.//

      ஹாஹாஹா...அப்ப வெள்ளம் வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டது!

      //தேர்ந்தெடுத்த படங்கள அழகு. மூன்று பேர் வரப்பில் நடக்கும் படம் டாப்.//

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  16. அழகான ஊர்... படங்கள் வழி பார்க்கும்போதே ஊரின் அழகு தெரிகிறது. இப்படியான ஒரு கிராமத்தில் இருக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி. எங்க ஊர் ரொம்ப அழகு...நாஞ்சில் நாட்டு வளம்.

      ஜி, நானும் ஆசைப்பட்டதுண்டு இப்படியான கிராமத்தில் இருக்க வேண்டும் என்று. ஆனால் பாருங்க எங்க ஊரும் ரொம்ப மாறி வருகிறது. வயல்கள் பலவும் கட்டிடங்களாகிவிட்டன.., தோப்புகள் எல்லாம் கொஞம் கொஞ்சமாக வீடுகளாக மாறிவருகின்றன ஜி.

      அதனால்தான் நான் சின்ன வயசுல வளர்ந்தப்ப கல்லூரி முடிக்கும் வரை, ஏன் அதன் பின்னும் கூட என் மகனுக்கு கால்நடைமருத்துவகார வர வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த ஊர்....அப்ப இருந்த ஊராக இப்ப இல்லை. எனவெ இன்னும் மாரிவிடுமே! என்று புகைப்பட்னகள் எவ்வளவு எடுக்க முடியுமோ காணொளிகள் எவ்வளவு எடுக்க முடியுமோ எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

      ஊரில் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை அத்தனை சாமான்களும் நாகர்கோவிலில் கிடைக்கின்றன. சுற்றி வர பல கிராமங்கள், ஊர்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்...ஆனால் காட்சிகள் மாறிவருகின்றனவே!

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு