வியாழன், 30 ஏப்ரல், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 2

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜடாயுபுரம் - 2

ஜடாயுபுரம் என்பது தனி ஊரோ அல்லது குடியிருப்புகள் உள்ள பகுதியோ அல்ல. இது நம்ம கிராமத்தின் ஆற்றங்கரைப் பகுதி. முந்தைய பதிவில் போகும் வழியிலுள்ள வயல்கள் தென்னந்தோப்புகள், பழையாறு படங்கள் பகிர்ந்திருந்தேன். ஜடாயுபுரீஸ்வரர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறம் இப்பகுதியில்...

ஜடாயுபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில், அதற்கு முன்னதாகவே இடப்புறம், நாங்கள் இருந்த போது சின்னதாகக் களையற்று அடையாளமே இல்லாமல் எப்போதும் மூடியிருந்த மடம், இப்போது  இப்படி கிருஷ்ண சைதன்யமடம் என்ற பெயரில். நான் அங்கிருந்த போது அறிந்திராத ஒரு தகவலை அறிந்தேன், ராஜியின் தளத்தில்!  

மடத்திற்கு அடுத்தாற்போல் மிகவும் பழமையான சிறிய அழகான சிவன் கோயில். இறைவன் ஜடாயுபுரீஸ்வரர். அம்பாள் சிவகாமி. முன்பு பழமையுடன் இருந்த கோயில் இப்போது இப்படிச் செப்பனிடப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு....ஆனால் உள்ளே இறைவன் இறைவி இருக்கும் மண்டபம் கருவறை அதே பழமையுடன். இது கோயிலின் தெற்கு வழி நுழைவு வாயில் படிகளில் ஏறினால் நேரெதிரே அம்பாள். அதுதான் மெயின் மண்டபம் சிறியதாக. அங்குதான் கோயிலின் மூலவர் ஜடாயுபுரீஸ்வரர். இறைவனையும் அம்பாளையும் நான் படம் எடுக்கவில்லை. 
இதெல்லாம் புதுசா இருக்குதுங்க!
இதெல்லாம் புதுசு! உள்திருச்சுற்றில் சன்னதிகள்

வெகு சிறுவயதில் இராமாயணம் கேட்டு, அப்ப இங்கு தான் ஜடாயு இருந்ததா என்று கேட்டதற்கு, பெரிதாக எந்தப் புராணக் கதையும் சொல்லப்படவில்லை. ஜடாயுவின் இறக்கைகள் இராவணனால் வெட்டப்பட்ட போது இங்கு வீழ்ந்தது அதனால் ஜடாயுபுரம் என்று சொல்லப்பட்டது என்று பள்ளிக்குச் செல்லும் வயதில் அறிந்தேன். அதனால், கோயிலின் இறைவன் பெயர் ஜடாயுபுரீஸ்வரர்.

மற்றபடி பெரிய கதைகள் எதுவும் கேட்டதில்லை. அப்படி இருந்திருந்தால், பள்ளித் தலைமையாசிரியராக இருந்த என் மாமா எங்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லியிருந்திருப்பார். நான் இருந்தவரை அங்கு இல்லாதவை, கேள்விப்படாதவை எல்லாம் இப்ப பார்க்கும் போதும் கேட்கும் போதும் வியப்பாக இருக்கிறது. 

2013ல் காணாமல் போன கனவுகள் ராஜியும், 2018ல் அனுவும் எங்கள் ஊருக்குச் சென்று வந்து திருவாழ்மார்பர் கோயில் மற்றும் ஜடாயுபுரம் கோயில் பற்றிய பதிவு போட்டிருக்கிறார்கள். ஜடாயுபுரம் பற்றிய விஷயங்களை வாசித்த போது ஊரில் இருந்தவரை யாரும் சொல்லிக் கேட்காதவை இப்ப எப்படி இப்படிக் கதைகள் என்று வியப்பு எனக்கு. அங்கு சென்றிருந்த போது அவங்களுக்குச் சொல்லப்பட்டதை அவங்க எழுதியிருக்காங்க.

அனுவும் சொல்லியிருந்தார், ராஜியின் பதிவைச் சொல்லி. ஜடாயுபுரம் பற்றி ராஜியின் பதிவில். 

//ஜடாயுவிற்கு மோட்சம் கிடைத்ததாகவும், இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு என்னன்னா இராமபிரான் ஜடாயுவிற்கு மோட்ஷம் வேண்டி பிரதிஷ்டை செய்து வழி பட்ட இடம் இது என்பதால், இங்கு, பித்ரு கர்மம் செய்ய அனுகூலமான ஸ்தலமாம். இது, ராமேஸ்வரத்திற்கு இணையாக பித்ரு கர்மம் செய்யும் சக்தியுடைய ஸ்தலம் என்றும் கோவில் குருக்கள் கூறினார்.//

//இராமர் இங்கிருக்கும் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இராமலிங்கசுவாமி என்றும்//

ஒரு வேளை நம்ம சின்ன வயசுல நம்ம வீட்டில் இதெல்லாம் சொல்லலையோ என்ற கேள்வியும் எழுந்தாலும், அதெப்படி அப்போது சொல்லப்படாதவை இப்போது என்ற கேள்வியும். 

இதில் எனக்கு விளங்காதது என்னவென்றால், 

இதே கதைகளுடன் இதே ஜடாயுபுரம், இதே ஜடாயுபுரீஸ்வரரோடு வேறு இரு ஊர்கள்.

ஜாடாயுபுரம் (தற்போது கழுவத்தூர்) என்பது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இங்குள்ள சிவபெருமான் ஜடாயுபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எங்கள் ஊர் ஜடாயுபுரத்திற்குச் சொல்லப்படும் அதே கதை இந்த ஊருக்கும்.

மற்றொரு ஊரில் -

ஜடாயுபுரீஸ்வரர் கோவில் திருமலைராயன்பட்டினம் தேவார வைப்பு தலம், இந்த பழமையான தேவார வைப்புத்தலம், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், திருமலைராயன் பட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. எங்கள் ஊர் ஜடாயுபுரத்திற்குச் சொல்லப்படும் அதே கதை இந்த ஊருக்கும்.

ஊருக்குப் போயிருந்த போது பல மாற்றங்கள். நான் கண்களாலும் மனதாலும் ரசித்தவற்றை, உணர்வுகளோடு கலந்தவற்றை மட்டும் படங்களோடு சொல்லிப் போகிறேன்.  கூடவே நாங்கள் இருந்த போது அறியாதவற்றை இப்போது தெரிந்து கொண்டதையும் சொல்கிறேன்.

ந்த நாகர் வரிசை எல்லாம் புதியவை. நாங்கள் இருந்த போது இப்படி இல்லை இப்போது தான்.....

மண்டபத்தின் இடப்புறம் பழையாறு பாருங்க. வெள்ளம் வந்து கொஞ்சம் குறைந்த நிலையில். தண்ணீர் குறைவாக ஓடும் போது இறங்கும்படியாக இருக்கும் . சற்றுத் தள்ளி மணற்பாங்கும் இருக்கும். மிகவும் சுத்தமாக இருக்கும்.

இந்த மண்டபமும் இந்த ஆறும், நான் எழுதி முடிக்காத கதையில் இடம் பெற்றிருக்கின்றன. அப்படி என் உணர்வுகளோடு, நினைவுகளில் புதைந்து கிடக்கும் இடங்கள். ஊரில் இருந்த போது மண்டபத்தில் எங்கள் துணிகள் எல்லாம் வைத்துவிட்டு இந்தப் படித்துறையில் குளிப்போம். இங்கு ஆண்கள் குளித்தால் (பெரும்பாலும்), நாங்கள் இன்னும் சற்றுத் தள்ளிச் சென்று மணற்பாங்கான இடத்தில் பாறைகளின் மீது துணிகளை வைத்துவிட்டு அத்தனை ஆழமில்லாத ஆற்றில் பாறைகளின் நடுவில் படுத்துக் கொண்டும், நீச்சல் அடித்துக் கொண்டும் குளித்துவிட்டு வருவோம். 

தண்ணீர் பளிங்கு போன்று இருக்கும்.  அடியில் மணற்பகுதியும் பாறைகளும் தெளிவாகத் தெரியும் அந்த அளவு தண்ணீர் சுத்தமாக இருக்கும். இதெல்லாம் கோடைவிடுமுறை நாட்களில் கிடைத்த அனுபவங்கள். ஜடாயுபுரம் போய் குளிச்சுட்டு வரலாமா என்றாலே நாங்கள் குஷியாகிவிடுவோம்.

வருடந்தோறும் கனு அன்றும், ஆடிப்பெருக்கு அன்றும் அதே மணற்பாங்கு இடத்தில்தான் ஊரே கூடி அவரவர் கொண்டு வந்த கலந்த சாதத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, தண்ணீரில் விளையாடிக் கொண்டு, தினப்படியான கஷ்டங்களை சிறிது நேரம் மறந்து, சிரித்துப் பேசிக் கொண்டாடிய இடங்கள்.

இப்போது அந்த மணற்பாங்கான இடத்துக்குப் போக முடியுமா என்று பார்த்தேன். வழி இல்லை. வெள்ளம் ஆற்றின் கரையை அடைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. எனவே படங்கள் எடுக்க முடியவில்லை. (அனுவின் தளத்தில் அப்பகுதியின் படம் இருக்கிறது ஆனால் மணற்பாங்கான இடம் இல்லாமல் ஆற்று நீருடன்) மற்றும் ஆண்கள் குளித்துக் கொண்டிருந்ததால் புகைப்படம் அந்த இடத்தைச் சரியாக எடுக்க முடியவில்லை.

இந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு ஆற்றைப் பார்த்துக் கொண்டு சுகமான காற்றை அனுபவித்துக் கொண்டு கனவில் மிதந்த காலங்கள்...அல்லது அந்த மணற்பாங்கான நிலப்பரப்பில் அமர்ந்து கொண்டு...

இப்படம் ராஜியின் தளத்திலிருந்து....பிள்ளையார் கோயில்

மேலே அந்த மண்டபம் இருக்கிறது இல்லையா? அதன் அருகில் இருக்கும் அரசமர மேடையில் முன்பு நாகர்கள் ஒரு சில இருந்தாலும் தற்போது நிறைய வரிசையாகப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். முன்னர் அரசமரம் மட்டும் தான். இப்போது வேப்பமரமும் அதனிடையில் வளர்ந்திருப்பதை தனி விசேஷம் என்று சொல்லியிருக்கிறார்கள். நானும் சென்றிருந்த போது அறிந்தேன்! அங்கிருந்த போது அறியாதது!

அங்கு முன்பு சாதாரணமாக இருந்த பிள்ளையாருக்கு இப்போது தனி கோயில். நான் 2021ல் சென்றிருந்த போதும் எடுத்திருந்தேன். எல்லாம் காணொளியில் காணலாம். அதற்கு இப்போது ஒரு கதையும் இருக்கிறது தெரிந்தது அனுவின் பதிவில் அதாவது கேரள அரச குடும்பத்தினர் வழிபட்ட பிள்ளையார் என்று. ஊரிலேயே பிறந்து வளர்ந்த எங்களுக்குத் தெரியாதவை!!!!  

மண்டபம், அரசமரம் கடந்து பிள்ளையாருக்குத் தற்போது எழுப்பட்ட கோயிலைக் கடந்து  சுற்றி வரும் போது இடப்பக்கம் இத்தோட்டம்.  (காணொளியில் நன்றாகக் காணலாம்)

இதுவும் ராஜியின் தளத்திலிருந்து. இந்த இரு படங்களைத் தவிர மற்றவை நான் எடுத்தவை

நாங்கள் ஊரில் இருந்த போது கோவிலின் கிழக்கு வாயிலில் இருந்த தாமரைத் தடாகம் போன்றுதான், ராஜி சென்றிருந்த 2013 லும் தாமரைப் பூ தடாகமாக இருந்திருக்கு. குருக்கள் இதற்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். ராஜியின் தளத்தில் அக்கதையை வாசித்தேன். //இது ஒருகாலத்தில் தெப்பகுளமாக இருந்ததாம்.  திருமால், தினமும் ஆயிரம் பூக்கள் கொண்டு அபிஷேகம் செய்வாராம்.  ஒரு நாள் பூக்களில் ஒன்று  குறைத்து பெருமான் திருவிளையாடல் புரிந்தாராம்.  அதற்கு ஈடாக திருமால் தன கண்ணையே சமர்ப்பித்து வணங்கினாராம். இதனால்,  மனம் மகிழ்ந்த சிவபெருமான்,  திருமாலை ஆரதழுவிய போது  திருமாலுக்கு கண் மீண்டதாம்.  அவரின் நெற்றி திருமண் லிங்கத்தில் பதிந்ததாம் ஆகையால் இன்றும் சிவலிங்கத்தில் திருநாமம் பதிந்த நிலையில் காணப்படுகிறதாம்.// 

 தாமரைத் தடாகத்தை தற்போது சுவர் எழுப்பிக் கோயில் குளமாகக் கட்டியிருக்காங்க.  இக்குளத்தில் தாமரையைக் காணவில்லை!!!!!!!

எங்கள் ஊர் முழுவதற்கும் ஒரு வாட்சப் குழு. அதில் என் உறவுகள் எல்லோரும் இருக்கிறார்கள். என்னைத் தவிர. வாட்சப்பில் ஊரைப் பற்றிய புராணக் கதைகள் நிறைய வருகின்றனவாம். அவர்களும் சொன்னார்கள். குழுவில் ஒரு பெரியவர் இப்படி எழுதுகிறாராம். அங்கு பிறந்து வளர்ந்த எங்களுக்கு வியப்பாக இருக்கிறது என்று பேசிக் கொண்டோம்.

இரண்டு விஷயங்கள் புரிந்தன. ஒன்று - இப்படித்தான் ஒவ்வொரு ஊர் பற்றியும், காலங்கள் மாறும் போது செவி வழி, வாய்வழிக் கதைகள் பிறக்கின்றன(வோ?), அந்தந்தக் காலத்திற்கேற்ப, சுற்றுலாத்துறை வளர்வதாலும் ஆன்மீகப்பயணங்கள் என்று விரிவடைவதாலும் புதியதாய் கதைகளும், ஜோஸ்யர்கள் பரிகாரம் என்று சொல்லும் புதிய பூசை வழிபாடுகளும் உருவாகின்றன(வோ?), வரலாறுகள் மாறுகின்றன(வோ?).

இரண்டு - எப்படியோ இப்படி அப்படி நம்ம ஊரும் (பின்னர் வரும்) ஊர்ப்பகுதியும் பிரபலமாகியிருக்கின்றன! யுட்யூபிலும் பேசப்பட்டிருக்கிறது, பல புதிய விவரங்களுடன்! வெளிச்சத்தில் இருக்கிறது. நெட்டில் திருப்பதிசாரம், ஜடாயுபுரம் என்று தேடினால் நம்ம ஊர்ப்பகுதி ஜடாயுபுரமும் வரும் அளவில்!!!

அடுத்த பதிவில் அருகிலுள்ள வேறு ஒரு பகுதியைக் காட்டுகிறேன்...அதற்கு முன் கீழுள்ள காணொளியை முடிந்தால் பாருங்கள். 9 நிமிடங்கள்......வினாடிகள்.  

போகும் வழி, பறவைகள் (படங்கள் முதல் பதிவில் பார்த்திருப்பீங்க...இங்கு காணொளியாக (நெல்லை அடுத்த முறை போனால் இவ்வழி போய் பார்த்துவிட்டு வரலாமே என்று!) மற்றும் ஜடாயுபிரீஸ்வரர் கோயிலின் வெளிப்புறம், ஆறு, மண்டபம், குளம் என்று காட்சிகள். 

https://www.youtube.com/watch?v=q84cPbcHqM8


-----கீதா

48 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.......படங்கள், காணொளி வழி ஊரின் அழகினை கண்டு ரசிக்க முடிந்தது..... இயற்கை தந்த கொடை....... பிரமிப்பு......

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வெங்கட்ஜி. உங்களுக்கு நம்ம மாவட்டத்திற்குப் போகும் வாய்ப்பு கிடைத்தால், அதுவும் நம்ம அண்ணாச்சி அங்குதானே இருக்கிறார். ரெண்டு பேரும் பல இடங்கள் போய்ப் பார்க்கலாம். அவர் இருக்கும் இடமான சுசீந்திரமும் பழையாற்றின் கரையில்தான். எனவே அங்கும் பல இடங்கள் பார்க்கலாம் ஜி, அப்பக்கங்களும் என் பதிவில் வரும். இனிதான்

      மிக்க நன்றி ஜி

      கீதா

      நீக்கு
    2. அண்ணாச்சி அழைத்துக் கொண்டு தான் இருக்கிறார். போவதற்கு இன்னும் நேரம் அமையவில்லை.

      நீக்கு
    3. கண்டிப்பாக வாய்ப்பு, நேரம் அமையும் ஜி.

      கீதா

      நீக்கு
  2. ஜடாயுபுரீஸ்வரர் கோவில் சிறிதாக இருக்கிறது.  பெயரை டைப் செய்தால் விரல் சுளுக்கிக் கொள்ளும் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அடுத்த கருத்து பார்த்துவிட்டேன், ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. ஓ..  சிறிதாக இருப்பது கிருஷ்ண சைதன்ய மடமா...   கோவிலும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அது ஏதோ முன்னர் ஒரு ஞானி இருந்ததாக இப்போது சொல்லபப்டுகிறது. சரியாகத் தெரியலை ஸ்ரீராம். இப்ப நல்லா பண்ணிருக்காங்க

      கீதா

      நீக்கு
  4. ராஜி இன்னும் பதிவுகள் எழுதிகிறாரா என்ன?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம். முன்ன போனது 2013ல் கீழ உங்க கருத்தும் பார்த்துவிட்டேன்...

      கீதா

      நீக்கு
  5. சில பழைய கோவில்களில் இப்படிதான் புதிய சன்னதிகள் சேர்த்து புதுசாக்கி விடுகிறார்கள்.  நந்தம்பாக்கம் ராமர் கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.  சமீபத்தில் அங்கும் இப்படி மாறுதல்கள் செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அப்படிச் செய்யும் போது அது பழமையான கோயில் என்று சொல்லும் போது ஓ அப்படியா என்று நினைக்கத் தோன்றுகிறது. வியப்பும் வரும்.

      நந்தம்பாக்கம் ராமர் கோயில் பத்தி முன்ன சொல்லியிருக்கீங்க எபி ல.

      கீதா

      நீக்கு
  6. ஓ... மேலே ராஜி பற்றி நான் கேட்ட கேள்விக்கு பின்னர் பதில் வருகிறது. சிறிய கோவில்களையும் அவர் விட்டு வைக்கவில்லை போல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்....ஹாஹாஹ அவர் நம்ம ஊர்ப்பக்கம் போயிருந்திருக்கிறார் 2013ல் அனு 2018ன்னு நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
  7. ஜடாயுவின் சிறகுகள் அவ்வளவு உயரத்தில் வெட்டப்பட்டபோது எடையில்லாத சிறகுகள் என்பதால் காற்றில் அல்லாடி அங்கும் ஒன்று விழுந்ததோ என்னவோ..  ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா எனக்கும் இப்படித் தோன்றினாலும்......அட்லீஸ்ட் நம்ம ஊர் இலங்கைக்கு கொஞ்சம் க்ளோஸ் ஆச்சே!! அப்ப காடா இருந்திருக்கலாம்...கடல் கூட அப்ப மகேந்திரகிரி மலை வரை இருந்ததுன்னும் சொல்லப்படுவதுண்டு

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. புராணக் கதைகளுக்கு ஆதாரங்கள் புனையறீங்களா?

      நீக்கு
    3. ஹிஹிஹி....நெவர் நெல்லை. நான் எங்கேயோ வாசித்ததைத்தான் சொல்றேன். மற்றபடி இதிலெல்லாம் நோ!

      கல்வெட்டுடனான சரித்திரக் கதைகளே பல திரிபுகள் அப்படி இருக்க புராணக் கதைகளா!!?

      கீதா

      நீக்கு
  8. ஆஹா..  மண்டபத்தை ஒட்டி ஓடும் ஆறு..   அழகு.  ஒரு பேப்பர் இருந்தா கொடுங்க..  சின்னதா ஒரு கவிதை எழுத முடியுதான்னு பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா பேப்பர் வேண்டாம், மனசு வந்திருமே இப்பவே மொபைல்ல தட்டிடுங்க!!!

      எனக்கு அப்ப நிறைய வந்ததுண்டு! கதைகளும் தான்

      கீதா

      நீக்கு
  9. தண்ணீர் பளிங்கு போல இருக்கும் என்று நீங்கள் சொல்லி இருப்பது பழைய கதை போல.. இப்போது படத்தில் பார்த்தால் அப்படித் தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப படத்தில் இருப்பது வெள்ளம் வந்து போன ரெண்டாவது நாள் ஸ்ரீராம் அதனால கலங்கி இருக்கு. மற்ற நாட்களில் போய்ப்பார்த்தால்தான் தெரியும் எப்படி ஓடுதுன்னு.

      போக முடிஞ்சா நாங்க இருந்தப்ப மணற்பாங்கான இடம் இருக்கான்னு பார்க்கவேண்டும்.

      கீதா

      நீக்கு
  10. ஓஹோடா..    கொரானாவுக்கு நடுவிலும் ஊர் சென்று வந்தீர்களா?  2021.  இப்படியான தோட்டங்கள் இந்த மாதிரி தண்ணீர் ஓடும் ஆறுகளுக்கு அருகே மட்டுமே சாத்தியம்.  உள்ளே பம்பு செட் மோட்டார் வைத்திருந்தால் ஒரு ஆனந்தக் குளியலும் போடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவைப் பார்க்க. அப்போதுதான் வெள்ளம் வந்து அப்பாவை கூட்டிக்கொண்டு வந்தேன். வெள்ளம் வந்த போது அங்குதானே இருந்தேன்.

      ரொம்ப வளமான பூமி. பம்பு செட் போட்டால் குளிக்கலாம் ஆனால் ஆற்றிலே இறங்கலாமேஹிஹிஹி..

      கீதா

      கீதா

      நீக்கு
  11. ஒவ்வொரு கோவிலைப் பற்றியும் எத்தனை கதைகள்..  இவைகளை யார் புனைகிறார்கள்!  எப்படி பரவச் செய்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே கருத்துதான் ஸ்ரீராம் எனக்கும்...

      கீதா

      நீக்கு
    2. ஐயையோ.. தெய்வக் குத்தமாகிவிடப் போகிறதே

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை ஆனா ஆகிட்டுப் போகுது!

      கீதா

      நீக்கு
  12. காணொளி ஊரின் அழகை எடுத்துக் காட்டுகிறது.  உற்சாகமான துள்ளிசை காணொளியை சிறப்பாக்குகிறது.  சட்டை போடாத ஒரு பைக்கர் விரைந்து தாண்டிச் சென்று மறைகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் ரொம்ப அழகு ஸ்ரீராம். ஆமாம் தெரிந்த அண்ணன் தான் பைக்கில் போவது. அப்புறம் கேட்டார் வீடியோ எடுப்பதை பத்தி

      இசை யுட்யூபில் இருந்துதான். வேறு போட்டால் யுட்யூப் போடமாட்டேன்னு படுத்துகிறது

      கீதா

      நீக்கு
  13. வயல்வெளிகள், அசைந்தாடும் வெண்பறவைகள் போல கதிர்கள்.  உணவு தேடும் நாரைகள், மரங்கள், நீர் நிலைகள்.. 

    பசுமையான இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இப்ப போனாலும் நான் வீட்டில் இருபப்தை விட இங்கெல்லாம் சுற்றுவதை ரொம்ப விரும்புவேன்

      கீதா

      நீக்கு
  14. அந்த பிரம்மாண்ட ஆலமரம் அழகு.  நல்லவேளை, அந்தப் பசங்க நீங்க காணொளி எடுப்பதை பார்க்கவில்லை!  அவங்க குளிக்கறதை வீடியோ எடுக்கறீங்கன்னு சண்டைக்கு வந்திருப்பாங்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசமரம் ஸ்ரீராம்.

      ஹாஹாஹா ஆமா.....பசங்க தலை தெரிஞ்சதும் கேமராவை நகர்த்திட்டேன். அங்குதான் அந்த அண்ணனும் குளித்துக்கொண்டிருந்தார்.

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் எந்தக் காலத்துல இருக்காரு? பசங்க நீர்நிலைகளில் விளையாடுவதை காணொளி எடுத்தா அவங்க ஏன் சண்டைக்கு வரப்போறாங்க?

      பெண்கள் நீர் நிலையில் இருந்தால், படம் எடுத்தால் மத்தவங்க சண்டைக்கு வருவாங்க.

      நீக்கு
    3. நெல்லை எங்கூர்லலாம் அப்படி இல்லை. ஆண்பிள்ளைகளையும் கேட்டுக்கொண்டுதான் எடுக்க முடியும். அங்க பெரியவங்களும் இருந்தாங்களே!

      பெண்களுக்கு இன்னும் ஆமாம் சண்டைக்கு வந்துருவாங்க கண்டிப்பா. அதுவும் ஒரு ஆண் எடுத்தா....ஆனா இப்பலாம் ஒரு காணொளி வேறு எதையேனும் எடுத்தாலும் பின் புறத்தில் இருக்கும் ஆட்களும் வராங்க. நான் கூடியவரை புகைப்படத்திலும் காணொளியிலும் தவிர்க்க நினைப்பேன்.

      கீதா

      நீக்கு
  15. வரிசை நாகங்களை பார்த்தபடியே நாங்களும் உங்களுடன் பிரதட்சணம் வந்து விட்டோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ....பாருங்க வெர்ச்சுவலா உங்களுக்கு கிடைச்சுருச்சு ஹிஹிஹிஹிஹி

      எல்லா கருத்துகளுக்கும் நன்றி.

      கீதா

      நீக்கு
  16. ஜடாயுபுரம் - 2 படங்கள் எல்லாம் அழகு.

    ஜடாயுபுரம் தல வரலாறு கதைகள் போல நிறைய கதைகள் இருக்கிறது ஒரே மாதிரி கதைகள் பல கோயில்களுக்கு.

    தாமரைத் தடாகம் தாமரையோடு உள்ள படமும், இப்போது படித்துறை கட்டி இருப்பதும்
    அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா.

      ஆமாம் பல கோயில்களுக்கும் ஒரே போன்றுகதைகள்

      ரெண்டுமே அழகுதான் அக்கா ஆனால் இப்ப தாமரை இல்லை. தாமரையோடு இருந்ததையே கூட இப்படி படித்துறை கட்டியிருக்கலாமொ அல்லது இனி தாமரை அதில் வளர்ப்பாங்களோ என்னவோ பார்க்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
  17. ராஜியின் தளத்திலிருந்து....பிள்ளையார் கோயில், மற்றும் தாமரை தடாகம் படமும் அருமை.
    காணொளி மிக அருமை.

    //இந்த நாகர் வரிசை எல்லாம் புதியவை. நாங்கள் இருந்த போது இப்படி இல்லை இப்போது தான்.....//

    நாகதோஷம் நீங்க நாகர்கள் செய்து அரசமரம், ஆலமரம் இருக்கும் இடங்களில் வைக்க சொல்கிறார்களே ! ஜோதிடர்கள் .

    அதனால் கோயில்களில் ஆலமரம்,அரசமரம் இருக்கும் இடங்களில் நாகர்கள் நிறைய இருக்கிறது.
    பெங்களூரில் பார்த்து இருப்பீர்களே மரத்தடியில் நாகர்கள் இருப்பதை. காலையில் பால் ஊற்றி வணங்கி போவார்கள் மக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அப்படித்தான் இருந்தது கோமதிக்கா நாங்க இருந்தப்ப அந்தக் குளம். எங்க ஊர்ல தாமரைக்குளம் நிறைய இருக்கு இப்ப ஒவ்வொன்றாக அழிந்து வருகிறது என் தம்பியின் வீட்டின் எதிரே பெரிய தாமரைக்குளம் இருந்தது என் மகனுக்கு என் அம்மா தாமரை பறிச்சுக் கொடுப்பாங்க. இப்ப அக்குளம் இல்லை அங்கு வீடுகள் காலனிகளாக.

      அதனால் வெள்ளம் எல்லாம் வெள்ளத்தில் இடுப்பளவு வந்துவிட்டது.

      பார்த்திருக்கிறேன் அக்கா நாகர்கள் ஆலமரம் அரசமரம் பகுதியில்

      இங்க ரொம்ப எல்லா கோயில்களிலும் பெரும்பாலும் இருக்கும். தினமுமே பால் ஊற்றி வணங்குவாங்கதான். பார்க்கிறேன்.

      எங்க ஊர்ல முன்ன சும்மா ஒன்றிரண்டு இருந்தன இப்ப பரிகாரம் என்று சொல்லபப்டுவதால் வைச்சிருப்பாங்க போல.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  18. இன்றைய பதிவில் படங்கள் ஓகே. கோயில் வெளிப்புறங்கள் என்பதால்.

    என்னைக் கவர்ந்தது ஆறு, அதையொட்டி இருக்கும் மண்டபம். நல்லா குளிச்சுட்டு, மண்டபத்தில் உடை மாற்றிக்கொண்டு வீட்டைப் பாத்துப் போகலாம்.

    வெள்ளம் இல்லாத சமயத்தில் குளியல் சுகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை வாங்க. கோயிலின் உட்பக்கம் எடுக்கவில்லை. உள்பிரகாரமும் வெளியிலும் தான் எடுத்தேன். ராஜியின் தளத்தில் சிவகாமி அம்பாள் இருப்பாங்க. அவங்களும் நிறைய போடலை. அனுவும் உட்புறம் இறைவனை எடுக்கமாட்டாங்க எப்பவுமே அதனால் போடலை. நானும் உட்புறம் இறைவன் சன்னதிகளை பெரும்பாலும் எடுப்பதில்லை. பூஜை செய்யும் இடங்கள் இல்லையா.

      ஆறும் மண்டபமும் நல்லாருக்கும் நெல்லை அங்க சுகமா உட்கார்ந்திருக்கலாம். அதேதான் வெள்ளம் இல்லா சமயத்தில் நாங்க நிறைய குளிச்சு அனுபவித்திருக்கிறோம்

      நன்றி நெல்லை

      கீதா



      நீக்கு
  19. தாமரை இருந்தவரை தடாகமாக மிளிர்ந்திருக்கிறது.

    இப்போ வெறும் சிறு குளம் மாதிரி தெரியுது, அழகில்லை.

    எப்படித்தான் தாமரைச் செடிகளை நீக்கிவிட்டார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்த மாற்றம் அவ்வளவாகப் பிடிக்கலை. தாமரையை நீக்கிட்டாங்க பாருங்க. நாங்க அங்க இருந்தப்ப அப்படி அவ்வளவு அழகா இருக்கும்.

      கீதா

      நீக்கு
  20. ராஜியின் கனவுகள் தளத்தையா சொல்றீங்க? நான் ரொம்ப விரும்பிப் படித்த தளம்.

    அங்கு போட்டிருந்த பிடி இனிப்பு கொழுக்கட்டை இன்னும் என் கண்ணில் இருக்கிறது.

    அவங்களும் அனுராதா ப்ரேம்குமார் அவர்களும் ஒரு பதிவு போட்டாங்கன்னா, முடிந்தவரை எல்லாத் தகவல்களுடனும் போடுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதே தளம்தான், நெல்லை

      ஆமாம் எல்லாத் தகவல்களுடனும் போடுவாங்க ரெண்டு பேருமே.

      கீதா

      நீக்கு