சில்லு - 1 - மூப்பியல்
உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்களா? இல்லை நீங்களே Senior Citizen பட்டியலில் இளமைத் துள்ளலுடன் அடி எடுத்து வைக்கும் பருவத்தில் இருக்கிறீர்களா? சற்றே இதைக் கவனத்தில் கொள்ளவும். எங்களுக்கு வயசாகிடுச்சுன்னு யார் சொன்னது!!? என்ற குரல்கள் ஒலிப்பது எனக்கு மூன்றாவது காது பொருத்தாத சமயத்திலும் கேட்கிறது!!! Wait! Wait! யாருங்க சொன்னது வயசாகிடுச்சுன்னு? கவனமா இருங்கன்னுதானே சொல்லப் போகிறேன்.
சமீபத்தில், கேரளத்தில், அரசு மருத்துவமனையில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணனாகப் பணிபுரியும் என் நண்பர் வந்திருந்தார்.
வயதாகும் போது எலும்புகளின் தன்மை, பிரச்சனைகள் அவர் பார்க்கும் நோயாளிகள், உடற்பயிற்சிகள் என்று பேசிக் கொண்டிருந்த போது அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் பெரும்பான்மையோர் கீழே விழுதல் அதிகமாகியுள்ளதாக. அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது...
எங்கள் ஊரில் தனியாக இருக்கும் மாமி ஒருவரது வீட்டில் அவரது வயதிற்கான சில வசதிகள் செய்யப்பட்டிருந்ததைப் படங்கள் எடுத்திருந்ததையும் மூப்பியலில் மிக முக்கியத் தேவையாக நான் கருதும் ஒன்றான கீழே விழாமல் இருத்தல் பற்றியும் எழுதிய பதிவு
பாதியில் இருப்பது நினைவுக்கு வர அதை முடித்துவிடுவோம் என்று இதோ.
வயதிற்கேற்ற சின்ன சின்ன உடற்பயிற்சிகள், எளிய நடைப்பயிற்சி, உடல் நலம், உணவுக்கட்டுப்பாடு, உடல் எடையில் கவனம், மனதை நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தல், மனதை நன்றாக வைத்துக் கொள்ளுதல் கூடியவரை நம்மை சுறு சுறுப்பாக வைத்துக் கொளல், , கால் மேல் கால் போட்டு அமர்வதைத் தவிர்த்தல், என்று அடுக்கலாம். மூப்பியலில் தேவையான கவனங்கள் பற்றி என் அனுபவங்களில் அறிவதை அவ்வப்போது சொல்லி வைக்கலாமே.
பொதுவாக, வயதானவர்களுக்கு என்றில்லை நடுத்தர வயது மற்றும் 60 ஐ நெருங்குபவர்களும் கீழே விழாமல் கவனமாக இருப்பது என்பது மிக முக்கியம். எலும்புகள் பப்படமாவதும், தசை நார்கள் சேதமடைவதும் நடக்கும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால்.
வீட்டிலுள்ள மிதியடிகள் எல்லாம் தரையில் நல்ல Grip உள்ளவையாக இருத்தல் நலம். குளியலறை/கழிவறையிலும் கூட அப்படியான bathroom mat with grip போட்டுக் கொள்ளலாம். அப்படி Bathroom mat போடுவதற்கு இடம் இல்லை என்றால், கழிவறைகளை நல்லா துடைச்சு எப்பவும் காய்ந்த நிலையில் இருந்தால் நல்லது.
பெருக்கி, தரையை சுத்தம் செய்யும் திரவங்கள் விட்டு துடைக்கறப்ப, பாத்ரூம் கழுவி விடறப்ப வழவழப்பு இல்லாம இருத்தல் நலம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் குளித்த பிறகும், கழிவறையைக் கழுவி விடும் சமயமும் முடிவில் wiper stick இருக்குமே அதைக் கொண்டு தண்ணியை நன்றாகத் தள்ளிவிட்டு துணி கொண்டு ஈரமில்லாமல் துடைத்துவிடல் நலம். மிக முக்கியம், கழிவறை/குளியலறையைப் பயன்படுத்தும் போது கதவை வெறுமனே மூடிக்கொண்டு உட்பக்கம் தாழ்பாள் போட்டுக் கொள்ளாமல் இருப்பது.
60 வயதைக் கடந்தவர்கள் மட்டுமின்றி எலும்புகள்
தேய்மானம் உள்ளவங்க, எலும்பு அடர்த்தி குறைவாக இருப்பவங்க எல்லாருக்குமானவைதான்
இந்தப் பரிந்துரைகள்.
சாலைகளில் குப்பைகள் மிக அதிகமாக இருக்கும் இடங்களில் குறிப்பாகக் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில், கோயில்கள் அருகில், சரக்குகள் வந்திறங்கும் இடங்களில் கம்பிகள், வயர்கள், நார்கள், கிழிந்த பைகளும் கூடக் கிடக்கும். நம் கால்களோ செருப்புகளோ இதில் மாட்டிக் கொண்டால் நாம் கவனிக்கவில்லை என்றால் தடுக்கி விழும் அபாயம். அப்படித்தான் கோயிலருகில் என் அப்பா கீழே விழுந்தார்.
இப்பல்லாம் எல்லா வீடுகளிலும், குடியிருப்புகளிலும் வழ வழ டைல்ஸ் போட்டுடறாங்க. பொது இடங்களில் மால்கள் பெரிய கடைகள் எல்லாம் பள
பளன்னு இருக்கணும்னு தரைகள் படிகள் எல்லாமும் வழவழப்பாகக் கட்டிவிடுகிறார்கள். வயசானவங்க மட்டுமில்ல, யாருக்குமே இது ஆபத்துதானேங்க! கொஞ்சம் காலை
அகத்தி வைச்சுட்டா சில இடங்களில் ஜொய்ங்க்னு வழுக்கி விடுகிறது. அப்படி சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிற்குத் தொடடையில் எலும்பு முறிவு. மாலில் வழுக்கியதில். எனவே
அம்மாதிரியான இடங்களில் காலை நீட்டி நீட்டி நடக்காமல் கவனமாகச் சின்ன சின்ன
அடிகளாக எடுத்து வைத்து நடந்தால் சரியான பாத அணிகளை அணிந்து நடந்தால் பாதுகாப்பு.
மின் ஏணிகள் - சில மாதங்களுக்கு முன் (சென்ற வருடம்) வேளச்சேரி மாலில் வெங்கடேஷ் பட் மற்றும் அவரது மகள் escalator ல் ஏறிய போது மகளின் காலணி அதில் மாட்டிக்
கொண்டுவிட இவர் மகளைப் பிடித்து இழுத்ததால் நல்லகாலம் விபத்திலிருந்து
தப்பித்திருக்கிறார். இதோ அவரே காணொளி இட்டிருந்தார் நீங்களும்
பார்த்திருப்பீர்கள். (அப்போதே போட எடுத்துவைத்து இப்பதிவை எழுதத் தொடங்கி.....
வழக்கம் போல தாமதம்...)
பாருங்க, எல்லாருமே கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக
வயதானவங்க. யாராக இருந்தாலும் சரி, Escalator ஐ பயன்படுத்தும் போது உங்கள் புடவைத்
தலைப்பு, சல்வார் என்றால் அதன் ஷால், இப்போதெல்லாம் பரவலாக அணியப்படும் நீளமான தரையில் புரளும் அளவு பாவாடை போன்ற உடைகள் போன்றவற்றை Escalator ல் செல்லும் போது புரள்வது போல் இல்லாமல் பார்த்துக் கொள்ளக் வேண்டும்.
ஏறும் போதும் இறங்கும் போதும் கைப்பிடிகள் இருக்குமே
அதைப் பிடித்துக் கொண்டு ஏறி இறங்கலாம். மொபைல் பார்த்துக் கொண்டு, அல்லது மொபைலில் பேசிக்கொண்டு
செல்வதைத் தவிர்க்கலாம். குறிப்பாக Escalator ல்.
எலும்புகள் சேதமடைந்தால் நாம் படும் துன்பம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிரமங்கள் என்பதோடு எலும்பு சிகிச்சை மற்றும் விபத்துக்கான மருத்துவச்
செலவு என்பது சும்மா ஆயிரம் எல்லாம் இல்லைங்க. லட்சக்கணக்கு! செலவழிக்க துட்டு இருந்தாலும்
கூட இப்படிச் செலவழிக்கணுமா சொல்லுங்க!
வயசானவங்க வீட்டுல இருந்தா கீழே விழாமல் இருக்க என்ன செய்யலாம்
என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். எங்க ஊர்ல ஒரு மாமி. தனியா இருக்காங்க. குழந்தைகள் கிடையாது.
கணவர் தற்போது இல்லை. அவங்களை கவனிச்சுக்கற ரத்னம் (என் அம்மாவுக்கு
வலதுகையா இருந்தவங்க) இப்ப இந்த மாமியைப் பாத்துக்கறாங்க. ரொம்ப நல்ல மனசு இந்த ரத்னம்மாவுக்கு.
மாமியை என்னதான் ரத்னம்மா பார்த்துக்
கொள்ள இருந்தாலும் மாமிக்காகச் செய்யப்பட்டிருக்கும் சில வசதிகள் இதோ....
கட்டிலில் இருந்து கீழே சரிந்துவிடாமல் இருக்க கட்டிலில்
இப்படி பக்கவாட்டில் தடுப்புக் கம்பிகள் மருத்துவமனைகளில் உள்ளது போன்று பொருத்தியிருந்தாங்க.
கீழே காலைத் தரையில் ஊன்றும் போது grip உள்ள மிதியடி. பக்கத்தில் நடுவில் ஓட்டை உள்ள
நாற்காலி தெரிகிறதா? அடியில் அதில் இணைக்க ஒரு வாளி உண்டு. இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்கானது. இங்கு ஒன்று சொல்ல வேண்டும். அடியில் இணைக்கும்
வாளி அல்லது பேசினில், கால்பகுதி நீருடன் அதில்
டெட்டால் அல்லது நல்ல மணமுள்ள கிருமி நாசினியை கொஞ்சம் ஊற்றிக் கலந்து வைத்து விட்டால் வாடை
அவ்வளவாக வராது.
மூப்பியலில் தேவையான கவனங்களை அனுபவங்களின் அடிப்படையில் அவ்வப்போது சொல்கிறேன்.
சில்லு – 2 – இரட்டை - ஹம்ஸநாதம் - சாரங்கதரங்கிணி
இந்த இரட்டை ஹம்ஸநாதமும் சாரங்கதரங்கிணியும் சில நாட்களாக என்னை கிறுக்குப் பிடிக்காத குறையாக தங்களுக்குள் இழுத்துக் கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன. காதல் கிறுக்கு போல் இந்த இரட்டையிடம் வசமாகச் சிக்கிக் கொண்டு மயங்கிக் கிடக்கிறேன். இரண்டிற்கும் ஒரே ஒரு ஸ்வரம்தான் வித்தியாசம் என்றாலும் இந்த சாரங்கதரங்கிணி லேசுபட்டதில்லை. கொஞ்சம் கூடுதலாகவே சுண்டி இருக்கிறது.
இரண்டிற்குமான வித்தியாசம் எங்கே எப்படி பாடல்களில் வருகிறது? அந்த இடத்தை கண்டுபிடித்து சாரங்கத்தரங்கிணியை சரியாக எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற ஒரு துடிப்பில் திரைப்படப் பாடல்களில் இந்த ராகத்தில் அமைந்த பாடலின் ஸ்வரங்களைப் பிரித்து மேய்பவர்கள் தளங்களுக்குச் சென்று புரிந்துகொள்ள முயற்சி.
அப்படியாகச் சாரங்கதரங்கிணியை ஆராய்ந்ததில் ராஜாவின் ராஜாங்கமான இசையில் தொடங்குதம்மா (ஹேராம் படப் பாடலை எல்லோருமே கேட்டிருப்பீர்க்ள். இது ஹரிஹரன் அவர்கள் மேடையில் பாடிய சுட்டி) பாடலை ஸ்வரங்களாகப் பிரித்துப் பாடியதைக் கேட்டப்ப ராஜாவின் Notes ஆஹா! அது கீழே .
ஜிவி பிரகாஷும் கூட இதே ராகத்தில்
மெட்டு போட்டிருக்கிறார் என்பதும் அப்படித் தெரியவந்தது.. மலர்தான் விழுந்தது பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. நீங்களும்
கேட்டுப் பாருங்க. பிடிக்கும் என்று நினைக்கிறேன். படம் அநீதி. சென்ற வருடம் வந்ததாம். இயக்கம்
வசந்தபாலன். பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா (புதுசாக இருக்கிறது பெயர்.) பாடியவர்கள்
ஹேஷம் அப்துல் வஹாப், ரவி. G. புதியவர்கள் போலும். எனக்கு No idea.
சில்லு - 3 - கூடவே மற்றொரு Craze. இலவச இசைக் கோர்வைகள் இருக்கும் ஒரு தளத்தில் - ஒரு மாதம் இலவசமாம் - இசைக் குறிப்புகள் எழுதியும் அதிலிருக்கும் Piano வில் இசை அமைத்துப் பதிய முடியும் என்றாலும் தற்போது இலவசமாக ஏற்கனவே இருக்கும் சிறியதான தாள, மெட்டு Loops கிடைப்பதைக் கொண்டு சின்னதாகக் கன்னாபின்னா மெட்டுகள் சில எங்கள் காணொளிகளுக்குச் செய்து கொண்டு....
திருப்பதி அம்பட்டன் கதை நினைவுக்கு வருகிறதா? அந்தக் கதைதான்....
........கீதா
வயதானவர்களுக்கான குறிப்புகள் உபயோகமானவை. பொறுமையாக இது மாதிரி சில வசதிகள், முன்னேற்பாடுகள் செய்து விட்டால் வீட்டிலுள்ள வயதானவர்களுக்கு வசதிதான். பிடித்து ,மற்றும் குளியலறை கிரிப் மிதியன்கள். கூடவே கழிவறையில் பிடித்துக் கொண்டு அமர, எழ கம்பிகளும் இருக்கலாம். எங்கள் மாமா வீட்டில் உள்ளது, ஏன் எங்கள் வீட்டிலும் உள்ளது! ஆனால் இந்த நடைபாதை பிடியன்கள் இல்லை. இத்தனூண்டு வீட்டில் தேவையா என்றும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குமாமியாருக்கு என் மைத்துனர் செய்திருந்தார். குளியலரையில் தரையே நல்ல கிரிப் உள்ளதாக இருக்கும். அது காய்வது கொஞ்சம் தாமதமாகும். ஆமாம் கழிவறையிலும் பிடித்துக் கொண்டு அமர கம்பிகள்.
நீக்குசின்ன வீட்டில் தேவை இல்லை என்பதோடு போடுவதும் சிரமம்தான். ஆனால் தொடர்ச்சியாகப் போடலைனாலும் கழிவறையிலிருந்து வெளியில் வருவதற்கானதை கொஞ்சம் பெரிதாகப் போட்டுவிட்டால் அலல்து அதிகமாகப் பயன்படுத்தும் இடங்களில்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
வயதானவர்கள் என்றில்லை, யார் விழுந்தாலும் சிரமம்தான். உங்கள் பதிவை இன்றுதான் படிக்கிறேன். நான் நேற்று மதியமே சில்லறை பொறுக்கி விட்டேன்!
பதிலளிநீக்குஸ்ரீராம், பதிவு இன்றுதானே வந்தது....நேற்று மதியமே வந்ததா? புரியவில்லையே
நீக்குகீதா
ஆமாம் வயதானவர்கள் என்றில்லைதான். யார் விழுந்தாலும் சிரமம்தான் சின்ன வயது என்றால் எலும்பின் வளர்ச்சி தாங்கும் சக்தி குணமாகும் நேரம் சீக்கிரமாக என்று ஓரளவு சமாளித்துவிடலாம்....வயதாகும் போது அதுவும் சிரமமாச்சே. அந்த ஒரு வித்தியாசம்தான்.
நீக்குநான் நேற்று மதியமே சில்லறை பொறுக்கி விட்டேன்! //
ஸ்ரீராம், அர்த்தம் புரிந்தது...ரொம்ப லேட்டாக. திருஷ்டி கழிந்துவிட்டதுன்னு சொல்வாங்களே அப்படித்தான். எல்லாம் நல்லதாக நடக்கும். நான் தமிழ் இன்னும் நிறைய கத்துக்கணும் போல!
கீதா
இசை, பாடல்கள் பற்றிய குறிப்பு வசீகரிக்கிறது. இசையில் தொடங்குதம்மா ஓரிருமுறை கேட்டிருக்கிறேன். ஜீவி பிரகாஷ் பாடல் கேட்டதில்லை. அநீதி என்கிற படத்தை OTT யில் பார்த்தும் படம் பார்க்கும் பொறுமை இல்லை!
பதிலளிநீக்குஇசையில் தொடங்குதம்மா அஜய் சக்ரபர்த்தி பாடியிருப்பதால் ஈர்க்கலையா....இங்கு நான் ஹரிஹரன் அவர்கள் மேடையில் பாடிய சுட்டியை இணைத்திருந்தேன் பின்னர் தெரிந்தது கீழே இருப்பதைத்தான் அங்கும் கொடுத்திருந்திருக்கிறேன் என்று இப்ப மாற்றிவிட்டேன். சுட்டி ஹரிஹரன் மேடையில் பாடியிருப்பது ரொம்ப நன்றாக இருக்கும்.
நீக்குஜீவி பிரகாஷ் பாட்டு கேட்டுப் பாருங்க இதுல சீன் எதுவும் இல்லை படத்தை எடுக்கும் போதான ஷாட்ஸுடன் பாடல் ஓடுகிறது. பாட்டு நல்லாருக்கு. அவ்வளவு போரா இருக்கோ? வசந்தபாலன் என்றதும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் என்றிருந்தேன். அப்ப சரி அப்பால வைச்சிட்டேன். மற்றபாடல்கள் கேட்கலை இந்தப் பாட்டு மட்டும்தான் சாரங்கதரங்கிணி என்று தெரிந்ததும் கேட்டேன்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீங்களே இசை அமைக்கும் முயற்சி நன்று. எனக்கொன்று அமைத்து அனுப்புங்கள். வரிகளும் அனுப்புங்கள். நானும் பாடிப்பார்க்கிறேன் - பாத்ரூமில்!
பதிலளிநீக்குஆ! ஸ்ரீராம் அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்த அளவு இசை அறிவு எதுவும் கிடையாது ஸ்ரீராம். என் ஆத்ம திருப்திக்காக. அவ்வளவுதான். சும்மா இருக்கும் லூப்ஸ்கு ஏற்ப அமைப்பது சிரமமாக இருக்கு அதுவும் எல்லாம் மேற்கத்திய லூப்ஸ். ஸ்வரம் எழுதினால் தான் நம்ம பாட்டுகள் போட முடியும். அதுக்குத் தனி ஞானம் வேண்டுமே.
நீக்குசெஞ்சா ஒழுங்கா வந்தா அனுப்பறேன் ஸ்ரீராம். பாத்ரூம்ல பாட வேண்டாம் எனக்கு அனுப்புங்க!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
பாத்ரூம் கதவின் தாழ்ப்பாளைச் சரிசெய்துவிடவேண்டியதுதானே ஸ்ரீராம். இதற்கு எதற்கு பாடும் பரீட்சையெல்லாம்.
நீக்குவயதானவர்களுக்கான குறிப்புகள் சிறப்பு. மற்ற சில்லுகளும் நன்று. இசை குறித்த தகவல்களும் நன்று.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி. அந்தப் பாட்டு கேட்டுப் பாருங்க நன்றாக இருக்கிறது.
நீக்குகீதா
பதிவு அருமை கீதா. வயதானவர்களுக்கு தேவையான குறிப்புகள்.
பதிலளிநீக்குமூப்பியலில் தேவையான கவனங்களை நீங்கள் பகிர்ந்து கொள்வது நல்லதுதான்.
வயசானவங்க வீட்டுல இருந்தா கீழே விழாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக நிறைய செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர்களின் மலர்ந்த முகம் மனதை கவர்ந்தது.
பார்த்து கொள்பவரின் நல்ல குணத்தை பற்றி சொல்லியதும் அவர்களும் வயதானவர்கள் என்று தெரிகிறது. வீட்டில் செய்து இருக்கும் அமைப்புகள் அவர்களுக்கும் வசதிதான்.
ஆமாம் கோமதிக்கா. ரொம்ப நாட்களாக எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. அனுபவங்கள் மற்றும் கேட்ட சம்பவங்கள் எல்லாம் வயதானவர்களைக் குறித்து அல்லது ஏதேனும் சில பிரச்சனைகள் உள்ளவர்களைக் குறித்து.
நீக்குஆமாம் அவங்க ரொம்ப மலர்ந்து சிரித்துக் கொண்டே பேசுவாங்க. நான் ஊருக்குச் சென்றிருந்தப்ப தினமும் அவங்க வீட்டுக்குப் போய் அவங்களோடு கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு வருவேன்.
ஆமாம் ரத்னம்மா ரொம்ப அன்பானவங்க. எனக்குச் சின்ன வயசுலருந்தே பழக்கம். அவங்களுக்குப் பிள்ளைகள் பேரன்கள் என்று இருக்காங்க இன்னமும் தன் காலில் நிற்க இப்படிச் செய்து வராங்க. ஊரில் சில வீடுகளில் வேலை பார்த்தாங்க அப்புறம் டிஃபன் கடை போட்டிருந்தாங்க என்று அறிந்தேன். அதன் பின் இப்பத்தான் பார்த்தேன் இரு வருடங்கள் முன்ன வெள்ளம் வந்தப்ப போனேனே அப்ப.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
இந்த ராகத்தில் அமைந்த பாடலின் ஸ்வரங்களைப் பிரித்து மேய்பவர்கள் தளங்களுக்குச் சென்று புரிந்துகொள்ள முயற்சி. //
பதிலளிநீக்குநீங்கள் தெரிந்து கொண்டதை நாங்களும் புரிந்து கொள்ள பகிர்ந்து கொண்டது கேட்டேன் நன்றாக சொல்கிறார். இசையில் ஆரவம் உள்ளவர்கள் மட்டுமே இதை கேட்பார்கள் அவர் சொன்னது உண்மைதான்.
பாடலை கேட்டேன். இசையில் தொடங்குதம்மா பாடலை கேட்டேன்
. மலர்தான் விழுந்தது பாடலும் கேட்டேன் மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி.
இந்த டாக்டர் லாவண்யா ரொம்ப நல்லா பல பாடல்களையும் எடுத்து அழகாக சுவரங்களைப் போட்டு பாடிக் காட்டறாங்க. ஆமாம் இசையில் ஆர்வம் உள்ளவங்களுக்கு அது உதவியாகவும் இருக்கும்.
நீக்குஇரு பாடல்களுமே அழகான பாடல்கள். ஒரிஜினல் பாடல் அஜய் சக்ரபர்த்தி அவர்கள் பாடியது. இது ஹரிஹரன் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடியதும் பிடித்தது அதனால் அந்தச் சுட்டி கொடுத்தேன்.
மலர்தான் விழுந்தது இப்போதுதான் கேட்டேன். உடனே இதோடு பகிர்ந்திடலாம்னு
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வயதானவர்களுக்கான பகுதி மிக மிக உபயோகமானது.
பதிலளிநீக்குவீட்டில் இப்படி கம்பிகள் அமைத்துப் பார்த்ததில்லை. கீழே போட்டிருக்கும் க்ரிப் உள்ள தேங்காய் நார் மேட் மிக உபயோகமானது.
எனக்கு எப்போதுமே தோன்றும், வழுக்கி இந்தக் கம்பியில் தலை அடிபட்டால் அது பெரிய ஆபத்தல்லவா என்று.
எங்கமாமியாருக்கும் மைத்துனர் போட்டிருந்தார். ஆங்காங்கே. கழிவறையிலும் பிடித்துக் கொள்ள வசதியாக. ஆமாம் அந்த நார் பாய் இப்படி நீட்டமா போட்டா உறுதியாக இருக்கும் சின்னதா போட்டால் அடியில் க்ரிப் இல்லைனா அடியில் மணல் துகள் தூசி இருந்தா மழு மழு சிமென்ட் தரை டைல்னா டக்குனு சறுக்கிடும்....
நீக்குஇல்லை நெல்லை வழுக்கி விழுந்தாலும் கம்பியில் அடிபட சான்ஸ் இல்லை பெரும்பாலும். கை பிடிச்சிட்டுதானே இருக்கும் ஸோ கம்பி பக்கம் சாய வழியில்லை. பெரும்பாலும்.
மிக்க நன்றி நெல்லை
கீதா
உங்களுக்கு இந்த 'மூப்பியலில்' பல பெரியவர்களைப் பார்த்து, அவர்களுக்கானவற்றைச் செய்திருப்பவைகளைப் பார்த்து நல்ல அனுபவம்.
பதிலளிநீக்குகுறிப்புகள் மிக அருமையானவை. பாராட்டுகள்.
அப்படி எலலாம் இல்லை நெல்லை. அதிகம் பார்த்துக் கொண்டதில்லை. நிறைய ஐடியாக்கள் தோன்றுவதுண்டு...அவ்வளவுதான்
நீக்குவீட்டை விட பொதுவெளியில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நெல்லை.
மிக்க நன்றி நெல்லை. பாராட்டிற்கு.
கீதா
வயதானவர்களுக்கான படங்களுடன் விரிவான பதிவு அருமை..வாழ்த்துகளுடன்
பதிலளிநீக்கு.
மிக்க நன்றி ரமணி சகோ.
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. முதல் சில்லாய் வந்த பகுதி அருமை. மூப்பியில் பற்றி கூறியது அனைத்தும் வயதானவர்கள் பின்பற்ற வேண்டியது. வயதானவர்களை கவனத்துடன் பாதுகாக்கும் அனைவரும் போற்றப்படக் வேண்டியவர்கள்.
வயதானவர்கள் மட்டுமின்றி, சற்றே வயதானவர்களும் (என்னைப் போல் இருப்பவர்கள்) கீழே விழுந்து அடிகள் ஏதும் படக்கூடாது. அது எவ்வளவு சிரமங்களை தருகிறது என்பதை நானே அனுபவ பூர்வமாக உணர்ந்து வருகிறேன். இறைவனின் நல்லாசிகளால் மாதங்கள் கணக்கில் எனக்கு மருத்துவர்கள், மருந்துகள் ஏதுமின்றி அடிகள் குணமாகி வருகிறது. இதனால் அனேகமாக வெளியில் செல்லவே நான் பயப்படுகிறேன். (அதுவும் யார் துணையின்றி தனியாக)
இன்று உங்கள் கட்டுரை பயனுள்ளதாக இருக்கிறது. இரு(ற)க்கும் வரை யாருக்கும் தொந்தரவில்லாமல் இருந்து விட்டு போக வேண்டும். அதை ஒன்றைத்தான் நான் எப்போதும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
உங்கள் ஊரில் உள்ள மாமியை அன்பாக கவனித்து வரும் அந்த ரத்னாம்மாவின் குணநலன்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். இறைவன் அவர்களுக்கு அவர் அன்பிற்கு துணையாக இருப்பார். வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டிய படங்களை பார்த்துக் கொண்டேன். தங்கள் அன்பிற்கும் அக்கறையான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.
இசை சம்பந்தபட்ட சில்லுகளும் அருமையாக உள்ளது. நீங்கள் இசையில் வல்லவர்கள். தங்களைப் போல ராகங்களை கண்டுபிடித்து அலசும் திறமை எனக்கில்லை. ஆயினும் அருமையான பாடல்களை கேட்டு மகிழ்வேன். நீங்கள் தந்த சுட்டிகளில் சென்று பாடல்களை கேட்கிறேன் இந்தப் பதிவில் நீங்கள் தந்த விஷயங்கள் பயனுள்ளவை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
உங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் என்னை என் பதிவுகளில் மேலும் எழுத வைக்கிறது என நம்புகிறேன். உங்களுக்கு நேரம் அமையும் போது என் பதிவுகளுக்கு வாருங்கள். குறிப்பிட்டுச் சொல்லி அழைத்தற்கு மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா வருகிறேன் உங்கள் பதிவுகளுக்கு....அது தினமும் வரும் பதிவுகள் என்று எபி, வெங்கட்ஜி டக்கென்று பார்த்துவிடுகிறேன்....துளசிக்கும் அனுப்பிவிடுகிறேன். என் கருத்துகள் உங்கலுக்கு ஊக்கம் தருகிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கு கமலாக்கா எனக்குமே எல்லாரும் தரும் கருத்துகள் தான் நீங்கள் விரிவாகத் தருவது உட்பட. உங்கள் பதிவு மிஸ் ஆகிவிட்டது இதோவருகிறேன் லால்பாக் பார்க்க...
நீக்குஅக்கா இசையை ரசிக்க அதில் ஞானமோ அறிவே தேவையில்லை இசைக்கு மொழி இல்லை நமக்கு ரசிக்கும் மனம் இருந்தால் போதும்.
நீங்கள் விழுந்தது பற்றி தெரியும் கமலாக்கா சொல்லியிருக்கீங்க. எல்லாம் குணமாகி வருவதும் மகிழ்ச்சி.
உங்கள் பதிவுகளை வாசிக்க அழைத்தற்கு மன்னிப்பு எதுக்கு கமலாக்கா...சொன்னது நன்றாக ஆயிற்று. நான் இனி எங்கள் பகக்த்தில் வந்திருப்பவற்றைக் கொஞ்சம் கீழேயும் சென்று பார்க்க வேண்டும் இனி அப்படிச் செய்கிறேன்.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
கீதா
நானும் வழுக்கி விழுந்தவன் தான். ஆனால் விழுந்தது எல்லாம் வெளியில் தான் வீட்டில் இல்லை. நல்ல வேளையாக பெரிய அடி ஒன்றும் ஆகவில்லை. ஆனால் சுளுக்கு ஏற்பட்டு கொஞ்சம் நாள் அவதி.
பதிலளிநீக்குகலை ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. உண்மையான ஈடுபாடு, அர்ப்பணம் வேண்டும்.
வெங்கடேச பட் காண்பிப்பது சீன செருப்பு. மிகவும் மெத்தென்று இருக்கும். ஆனால் வழுக்கும் சான்ஸ் அதிகம்.
Jayakumar
நல்ல காலம் சுளுக்கோடு போச்சே...ஆமாம் அதுவும் அவதியாக இருக்கும் சில நாட்கள், ஜெ கே அண்ணா. அடி படாமல் தப்பித்ததும் நலல்து.
நீக்குவீட்டில் பலர் வழுக்கி விழறாங்க அண்ணா குறிப்பா பெண்கள்.
உண்மைதான் ஈடுபாடும் அர்ப்பணித்தலும் வேண்டும். எனக்கு ஈடுபாடு உண்டு ஆனால் அதை முன்னோட்டு எடுத்துச் செல்லும் சூழல் இல்லை. மற்றும் நான் வெளியில் அதிகம் சொல்லிக் காட்டிக் கொண்டதில்லை, ஜெ கே அண்ணா. எங்கள் குடும்பத்திற்குள் நாங்கள் ராகங்கள் பற்றியும் ஸ்வரங்கள் பற்றியும் சில நுணுக்கங்கள் செய்வதுண்டு. ஆனால் அதிகம் இங்கு சொல்வதில்லை. துளசி சொல்லிக் கொண்டே இருக்கிறார் நீ செய்யும் இசைக்கோப்புகளை போடு என்று....எனக்கு அத்தனை அறிவு, ஞானம் கிடையாது என்பதால் பொதுவெளியில் போடுவதில்லை.
வெங்கடேஷ் பட் சொல்லியிருப்பது அந்தச் செருப்பு மாட்டிக் கொண்டது பற்றி. எப்படியிருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் எஸ்கலேட்டரில் ஏறும் போது. இங்கும் அப்படி ஒருவரது செருப்பு மாட்டிக் கொண்டது. அவர் செருப்பு போனால் போகட்டும் என்று விட்டுவிட்டார். அது மேல் பக்கம் உள்ளே செல்லும் போது... மற்றொரு முறை ஒருவரது துட்டப்பா சிக்கிக் கொண்டது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
வயதானோருக்கு பயனுள்ள பதிவு பலருக்கும் உதவியாக இச்செய்தி இருக்கும்.
பதிலளிநீக்குகாணொளி கண்டேன்.
மிக்க நன்றி கில்லர்ஜி. காணொளியும் கண்டதற்கும் நன்றி
நீக்குகீதா
வயதானவர்களுக்கான குறிப்புகள் தெரிந்து கொள்ள வேண்டியவை..
பதிலளிநீக்குஅவசியமானவை..
வயதானவர்கள் என்றில்லை.. யார் வழுக்கி விழுந்தாலும் கஷ்டம் தான்...
மூப்பியல் விவரத் தொகுப்புகள் பயனுள்ளவை..
ஆமாம் அண்ணா யார் வழுக்கி விழுந்தாலும் கஷ்டம்தான்....ஆனால் வயதாகும் போது அதனுடனான பிரச்சனைகளும் தொற்றிக் கொள்ளுமே அதான்.
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா.
கீதா
வயதானவர்களுக்கான குறிப்புகள் தெரிந்து கொள்ள வேண்டியவை..
பதிலளிநீக்குஅவசியமானவை..
வயதானவர்கள் என்றில்லை.. யார் வழுக்கி விழுந்தாலும் கஷ்டம் தான்...
மூப்பியல் விவரத் தொகுப்புகள் பயனுள்ளவை..
மூத்தவர்களுக்கான கவனக்குறிப்புகள் அனைத்தும் மிக பயனுள்ளவை. நாம் அலட்சியமாக இருக்கும் சிறிய விஷயங்கள் கூட பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. நன்றி கீதா. ராகங்கள் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் பாடல்கள் மயக்கவைக்கின்றன. உங்கள் இசை முயற்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா ரொம்ப நாளாச்சு பார்த்து. நலம்தானே.
நீக்குபாடல்களை ரசிக்க ராகங்கள் பற்றியோ பெரிய அறிவோ தேவையில்லை கீதா.
மிக்க நன்றி கீதா மதிவாணன்
கீதா
வாங்க கீதா ரொம்ப நாளாச்சு பார்த்து. நலம்தானே.
நீக்குபாடல்களை ரசிக்க ராகங்கள் பற்றியோ பெரிய அறிவோ தேவையில்லை கீதா.
மிக்க நன்றி கீதா மதிவாணன்
கீதா