செவ்வாய், 20 செப்டம்பர், 2022

பத்தொன்பதாம் நூற்றாண்டு (ந்நூற்றாண்டு) – வரலாற்றுத் திரைப்படம் - ஒரு பார்வை

 


வரலாறும் இலக்கியப் படைப்புகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. வாய் மொழியாக வாழ்ந்த அவை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஓலைகளிலும் பின் புத்தகங்களிலும் புகுந்து பயணிக்கத் தொடங்கின. இடையில் அரசர்களும், ஆதிக்கமுள்ளவர்களும் அவற்றில் கலப்படம் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றாலும், வாய் மொழியாகச் சில வரலாறு உண்மைகள் இப்போதும் உயிர் வாழத்தான் செய்கின்றன.

         ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்                        ஆஸ்கார் ஷின்ட்லர்                                  

20 ஆம் நூற்றாண்டில் புத்தகங்களை விட எல்லாவற்றையும் காட்சிகளாய்க் காண்பித்து வரலாற்றையும் இலக்கியத்தையும் சேமித்து வைக்கும் ஒன்றாய் திரைப்படம் மாறியிருக்கிறது. அப்படி 1993ல் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், Schindler’s list எனும் தன் படத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான யூதர்களை ஹிட்லரின் நாஜி படையிலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பாற்றும் ஆஸ்கார் ஷிண்ட்லர் எனும் மாமனிதனை நமக்குக் காண்பித்தார்.

அதற்கு ஆதாரமான ஆஸ்திரேலியன் நாவலாசிரியரையோ, அவர் எழுதிய நாவலையோ வாசிக்காமலேயே உலகெங்கும் ஷின்ட்லர் எனும் மாமனிதனை எல்லோரும் கண்டு வியக்க, அந்தப் படம் நமக்கு உதவியது.  யூதர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் நம் கண்களில் நீர் நிறைத்தது.

அப்படி அத்திப் பூத்தாற்போல் சில படங்கள் இப்போதும் பூக்கத்தான் செய்கின்றன. சுதா கொங்கரா பிரசாதின் இயக்கத்தில் சூரியா நடித்த 2020 ல் வெளிவந்தசூர்ரைப் போற்றுஅப்படிப்பட்ட ஒரு படம்தான். விமானயாத்திரை சாதாரண மக்களுக்கும் இயலும் ஒன்றே என்பதை சாதித்த ஒரு மனிதனின் கதை.

            ஜே சி டானியல்      சேலங்காட்டு கோபாலக் கிருஷ்ணன்

கேரளத்திலும் இப்படி வரலாற்று நிகழ்வுகள் வெளிக் கொணரும் படங்கள் இடையிடையே வருவதுண்டு. 2013ல் கமலின் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்தசெல்லுயாய்ட்அப்படிப்பட்ட ஒரு படம்தான். மலையாள சினிமாவின் தந்தை என்று அழைப்படும் ஜோசஃப் செல்லயா டானியல் நாடார் எனும் ஜே.சி. டானியலின் கதையை மையமாகக் கொண்ட படம் சேலங்காட்டு கோபால கிருஷ்ணன் எனும் எழுத்தாளர் எழுதிய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

    
          படம் - விகதகுமாரன்   ரோசி - கேரள திரைப்பட உலகில்                                             முதல் பெண் நடிகை
தென்னிந்தியாவில் மிகவும் மோசமான சாதி சம்பிரதாயங்கள் நிலவிய கேரளத்தில் 1928-ல் வெளியான அப்படத்தில் நடித்த ரோசி எனும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நடிகை படத்தில் ஒரு உயர் குலப்பெண்ணாக நடித்த ஒரே குற்றத்திற்காக அப்படம் திரையிடப்பட அனுமதிக்கப்படவில்லை. அந்த நடிகை ரோசி கேரளாவை விட்டே ஓட வேண்டிய நிலை.

                 இயக்குநர் கமல்    படம் - செல்லுலாய்ட்

இப்படிப்பட்ட எல்லா கசப்பான உண்மைகளையும் கண்டறிந்து எழுதிய சேலங்காட்டு கோபால கிருஷ்ணனையும், ஜே சி டானியலையும் புது தலைமுறக்கு அறிமுகப்படுத்திய படம் தான் கமலின்செல்லுலாய்ட்’.  இப்படி உண்மைச் சம்பவங்கள் திரைப்படமாக்கும் போது சில உண்மைகளைப் பொய்யாக மாற்றவும் சிலர் முயல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒரு படத்தை இங்குச் சொல்லியே ஆக வேண்டும்.  அதுதான் 1989-ல் ஹரிஹரன் இயக்கத்தில், எம் டி வாசுதேவன் நாயரின் திரைக்கதையில் வெளிவந்த, மம்மூட்டி நடித்தஒரு வடக்கன் வீர(G)காதா’. 

      இயக்குநர் ஹரிஹரன்   எம் டி வாசுதெவன் நாயர்

உண்ணியார்ச்ச
16 ஆம் நூற்றாண்டில் வட கேரளத்தில் வாழ்ந்த திய்ய சாதியைச் சேர்ந்தஉண்ணியார்ச்சஎனும் வீர மங்கையின் உண்மைக்கதை 1961-ல் குஞ்சாக்கோவின் இயக்கத்தில் வந்திருந்தது. ஆனால் ஒரு வடக்கன் வீரகாதையில் அவரை மிகவும் கீழ்த்தரமாக, ஒரு காம நோயாளியாகக் காண்பித்ததில் அப்படி என்ன ஒரு சுகம் எழுத்தாளரான எம் டி வாசுதேவன் நாயருக்குக் கிடைத்ததோ தெரியவில்லை. அதன் அவசியமும் விளங்கவில்லை.

ஞானபீட விருது பெற்ற சிறந்த எழுத்தாளர்தான். இருப்பினும் உன்னியார்ச்சயோடு அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

ஆராட்டுப்புழா வேலாயுத சேகவர்              இயக்குநர் வினயன்

19 ஆம் நூற்ராண்டில் சாதி தலைவிரித்தாடிய கேரளத்தில் வாழ்ந்த பிற்பட்ட சாதியான ஈழவ சாதியைச் சேர்ந்த ஆராட்டுப்புழா வேலாயுதசேகவர் (1825-1874) எனும் ஒரு மாமனிதனின் கதைதான் கடந்த ஓண நாளில் திரையிடப்பட்ட, வினயனின் இயக்கத்தில் வெளியான பத்தொம்பதாம் நூற்றாண்டு எனும் திரைப்படம்.

அவர் வாழ்ந்த ஆலப்புழ மாவட்டம் சேர்த்தல பகுதியில் மட்டும் பேசப்படும் அவர் புகழ், உலகெங்கும் அறிய இப்படம் உதவும் என்றே தோன்றுகிறது. ஆஸ்கர் ஷெண்ட்லர் மற்றும் ஜே சி டானியலை அறிந்தது போல் நாம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய ஒரு வரலாற்று நாயகன்தான் இவரும்.


இவரைப் பற்றிப் பேசினால் இவருடன் தொடர்பான பல சாதிக் கொடுமைகளைப் பற்றி உலகறியும் என்பதற்காகவே இதுவரையிலும் இவரது வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. கிபி 1800 களில் திருவிதாங்கூர் கொச்சி நாட்டில் பிற்பட்ட மற்றும் தாழ்ந்த சாதி ஆண்கள் மீசை வைத்தால் வரி, தலையில் துண்டு கட்டினால் வரி, மீனவர்கள் உபயோகிக்கும் வலைக்கு வரி, பெண்களின் முலையின் அளவுக்கேற்ப வரி, பெண்கள் முலையை மறைக்கும் துணி (முலைக்கச்சை) கட்டினால் அடி. முழங்காலுக்குக் கீழே மறையும் விதம் துணி கட்டினால் அடி மற்றும் சூடு வைத்தல், மூக்குத்தி இட்டால் மூக்கு அறுக்கப்படும், இப்படியான விசித்திரமான சட்ட திட்டங்கள் 1750 களில் மார்த்தாண்ட வர்மாவின் காலம் தொட்டுத்தான் தொடங்கின.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

என்று ஔவைப்பாட்டி சொல்லியும் மாறாத சாதி வெறி, அதன் பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தோன்றிய பாரதியார்,

சாதிகள் இல்லையடி பாப்பா,

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

என்று பாடியும் மாறாத வெறி, இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. அப்போதுதான் மாறுமென்று தோன்றுகிறது.

  ஹைதர் அலி         திப்பு சுல்தான்        

1750-ற்கு முன், இது உண்மையிலேயே மனிதரெல்லாம் ஒரு போல் ஒன்றாய் வாழ்ந்த மாவேலி நாடுதான். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுக்குப் பயந்த திருவிதாங்கூர் மன்னர்கள் பத்மநாபருக்குக் கீழே கட்டிய ரகசிய அறைகளில் எல்லாவிதமான தங்க வைர வைடூரிய நகைகளையும் பதுக்கி வைத்ததால் வரி மூலம் அதிகமான பணம் வசூலிக்க வேண்டிய நிலை. நிலங்கள் எல்லாம் தேவஸ்வம் எனும் இறைவன் சொத்து, பிரம்மஸ்வம் எனும் பிராமணர்கள் சொத்து, பண்டாரம் வகை எனும் நாடுவாழிகளான சில நாயர் தரவாட்டார்களின் சொத்து என்று ஆனதால், உழவனுக்கு அவன் மண்ணில் விளைவிப்பதில் முக்கியப் பங்கை நாடுவாழிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலை. நாடுவாழிகளின் கைப்பாவையான அரசன். பிரிட்டிஷ்காரர்களுக்கும் நமக்கு ஏன் வம்பு? நம் காரியங்கள் நடக்கிறதே அது போதும் எனும் நிலை.


இதற்கெல்லாம் முன்பு வெளிநாட்டு வாணிபமும், நிலமும், கப்பலுமாக இருந்த ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் வேலாயுத சேவகர். அப்படி 19-ம் நூற்றாண்டில் கேரளத்தில் அங்கிங்காகச் சில பணக்காரர்கள் பிற்பட்டவர்களிலும் பிறமதத்தவர்களிலும் இருந்திருக்க வேண்டும். பிற்பட்டவர்களில் பிற்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் எனும் இரு பிரிவு போல், முற்பட்டவர்களிலும், நாயர், சத்ரியர்கள், பிராமணர்கள் என்ற மூன்று பிரிவிகள் உண்டுதான். அங்கும் பிராமணர்கள் சத்ரியர்களைத் திருமணம் செய்து கூடத் தங்குவார்கள்ஆனால் நாயர்கள் வீட்டில் சம்பந்தம் மட்டும். சம்பந்தம் மட்டும் என்றால் உடலுறவு மட்டும். அவ்வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்கள்.

இப்படத்தில் அப்படி ஒரு 91 வயது நம்பூதிரியின் 24 வது சம்பந்தத்தைக் காண்பிக்கிறார்கள். அப்பெண் அவரை நசுக்கியே கொல்லும் ஒரு காட்சியும் இருக்கிறது. அது போல் வேலாயுதச் சேவகர் தலைமையில் நடக்கும் முலைக்கச்ச சமரம். சமரம் என்றால் போராட்டம். மூக்குத்தி சமரம்.

வேலாயுதச் சேவகர் மங்கலம் எனுமிடத்தில் ஒரு சிவன் கோவில் கட்டிபிரதிஷ்டை செய்திருக்கிறார்.
அச்சிப்புடவ சமரம், (அச்சி புடவ என்றால் நாயர் பெண்கள் கட்டும் வேட்டி) இவை எல்லாம் உண்மையிலேயே அவர் வாழ்வில் நிகழ்ந்தவைதான்.  1852ல் வேலாயுதச் சேவகர் மங்கலம் எனுமிடத்தில் ஒரு சிவன் கோவில் கட்டிப் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதுவும் இப்படத்தில் காண்பிக்கப்படுகிறது. அதர்காக 3 ஆண்டுகள் பிராமண வேடத்தில் வைக்கம் சிவன் கோயிலில் தங்கி பிரதிஷ்டை விதிகள் பயின்றதாகவும் இறுதியில், ஒரு பிற்பட்டவர் இப்படிப் பூஜை மற்றும் பிரதிஷ்டை விதிகள் பயின்றால் செய்ய வேண்டிய பரிஹாரம் கேட்டறிந்த பின், குருவிடம் அதற்கான செலவுக்கான பணம் கொடுத்து வணங்கி விடை பெற்றதாகவும் உள்ள நிகழ்வை இப்படத்தில் காட்சிகளாய்க் காண்பிக்காமல் உரையாடலில் காண்பித்திருக்கிறார்கள்.

கதகளி காணும் ஆசையுள்ள தன் தாத்தாவுக்காக ஈழவ சாதியிலிருந்து ஒரு கதகளிக் குழுவை நிறுவி கதகளி காண்பிப்பதுடன் அதன் கதை புரியாமல் விழிக்கும் மக்களைக் காண்பிக்கையில், கல்வியும் கலையும் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றியிருந்த ஒரு காலத்தை எண்ணி மனம் வேதனைப்படுகிறது. அதே நேரத்தில் அத்தகைய அநீதிக்கு எதிரே போராடிய இத்தகைய வீரர்களை எண்ணிப் பெருமிதமும் கொள்கிறது.

திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாபருக்குச் சமர்ப்பிக்க கொடுங்கல்லூரிலிருந்து கொண்டு வரப்பட்ட நகைகளைக் கொள்ளையடித்த காயங்குளம் கொச்சுண்ணியைப் பிடித்து அவர் கையிலிருந்து நகைகளை மீட்டுக் கொடுக்கும் வேலாயுதச் சேவகருக்குத் திருவிதாங்கூர் ஆயில்யம் திருநாள் ராஜா, ‘பணிக்கர் எனும் ஸ்தானப் பெயர் கொடுக்கும் நிகழ்வும் படத்தில் அருமையாகக் காண்பிக்கப்படுகிறது

1874ல் படகில் காயங்குளம் காயலில் பயணித்த வேலாயுதப் பணிக்கரைச் சதி செய்து கொல்லும் காட்சியும் மிக அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கவில்லையே தவிர ஆராட்டுப்புழா வேலாயுதப் பணிக்கர் வாழ்க்கையில் நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதாரம் உண்டு.


ஆனால் இப்படத்தில் காண்பிக்கப்படும் நங்கேலி எனும் கதாபாத்திரம் 19-ஆம் நூற்றாண்டில் என்று பிறந்தார் என்று இறந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் முலைக்கரம் (முலை வரி) கொடுக்க முடியாது என்று சொல்லி தன் இரண்டு முலைகளையும் அறிவாளால் அறுத்துக் கொடுத்த நிகழ்வு உண்மை. அவரது உடலைத் தீக்கிரையாக்கிய போது கணவன் அதில் விழுந்து இறந்ததும் உண்மை. அச்சம்பவமும் படத்தில் மனதைத் தொடும் விதத்தில் இறுதியில் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தை அறிமுகப்படுத்த மோகன்லாலின் குரல் வரும் போது, முடிவைச் சொல்லிப் படத்தை முடிக்க மம்மூட்டியின் குரல். கதாநாயகன் சிஜூவில்சன், ஓரிரு படத்தில்தான் நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு வருடம் கடினமான பயிற்சிக்குப் பின் தான் கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்.

சண்டைக் காட்சிகள், நடனக் காட்சிகள், காட்சி அமைப்புகள்(Settings), பாடல்கள், பின்னணி இசை, இசை, ஒளிப்பதிவு, உடைகள் ஆபரணங்கள் எல்லாம் அருமை. பாடல்களும் அவற்றின் காட்சி அமைப்பும் சிறப்பாக இருக்கிறது. எல்லாக் கதாபாத்திரங்களும் அதில் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு எப்படி பொன்னியின் செல்வன் வரலாறு ஆகப் போகிறதோ அப்படி கேரளத்துக்குப்பத்தொன்பதாம் நூற்றாண்டு’ வரலாறு ஆகியிருக்கிறது. தயாரிப்பாளரான கோகுலம் கோபலன் அவர்கள்உண்ணியார்ச்சையைப் பற்றி ஒரு படம் எடுக்க ஹரிஹரன் மற்றும் எம் டி யை அணுகிய போது, அவர்கள் அது வேண்டாம்பழசிராஜாஎடுப்போம் என்று அவர் ஆசையை நிறைவேற்றாமல் போய்விட, வினயன் கோபாலுனுக்குப் பிரியமான வேலாயுதபணிக்கரைப் பற்றி ஒரு படம் எடுத்துக் கொடுத்து அவர் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்.


எனக்கென்னவோ, வினயன் இப்படத்தின் மூலம் வேறு ஒரு உண்மையை உறக்கச் சொல்கிறார் என்றே தோன்றுகிறது. உண்மை விதையை மண்ணடியில் புதைத்தாலும், தளிர் விட்டு வெளி வந்து வளரும். இது மறைக்கப்பட்ட வரலாற்று வீர்ர் வேலாயுதப் பணிக்கருக்கு மட்டுமல்ல 17 ஆண்டுகள் திரை உலகினரால் தள்ளி வைக்கப்பட்ட ஒரு திறமையான இயக்குநர், வழக்காடி நீதி பெற்று, தான் கேரளத்தில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று இப்படத்தின் மூலம் நிரூபித்த விநயனுக்கும் பொருந்தும்தான்.

சமூகம் எப்போதும் உண்மையின் பக்கமல்ல. பணபலம், ஆள்பலம் உள்ளவர்களுடன் தான் நிற்கும் என்பதை உணர்ந்த அவர், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கல், திரைப்பட ஊழியர்கள் உள்ளிட்ட மொத்த திரையுலகமும் அவரைப் புறக்கணித்த போதும், வேலாயுதப்பணிக்கர் நீதிக்காகப் போராடி வென்றது போல், இறுதியில் வெற்றிவாகை சூடிவிட்டார் என்பதற்கான அத்தாட்சிதான் இந்தப்பத்தொன்பதாம் நூற்றாண்டு’.  இந்தக் கருத்தையும் விநயன் இப்படத்தின் மூலம் சொல்லாமல் சொல்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

https://youtu.be/EW3h2Rr8x90


----துளசிதரன்

 

 

20 கருத்துகள்:

  1. மக்கள் கஷ்டப்பட்டது குறித்து என்ன எழுதுவது என்று தெரிய வில்லை..

    // முலை வரி கொடுக்க முடியாது என்று சொல்லி தனது முலைகளை அரிவாளால் அறுத்துக் கொடுத்த நிகழ்வு உண்மை..//

    மனம்
    அழுந்துகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். பல நிகழ்வுகள் அதுவும் படத்தில் காட்சிகளாய்க் காணும் போது மனம் மிகவும் வேதனைப்படுகிறதுதான்

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்

      துளசிதரன்

      நீக்கு
  2. கட்டுரை விவரங்களுடன், படங்களுடன் அருமையாக இருக்கிறது. நான் ISRO வில் வேலையில் இருந்தபோது film club களில் உறுப்பினர் ஆக இருந்து பல திரையிப்படாத, வெளிநாட்டு, விருதுகள் பெற்ற மற்ற மொழி, என்று பலவகைத் திரைப்படங்களைக் கண்டவன். சூர்யா கிருஷ்ணமூர்த்தி பற்றி கீதா ரங்கன் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

    கட்டுரையை நினைவில் நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் மெருகு ஏற்றியிருக்கலாம். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

      35 வருடங்களுக்கும் மேல் கேரளத்தில் வசிக்கும் எனக்கு சூர்யா கிருஷ்ணமூர்த்தியை எப்படித் தெரியாமல் போகும்!

      துளசிதரன்

      நீக்கு
  3. தெரியாத வரலாற்று நிகழ்வை திரைப்படம் ஆக்கியதை விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.

    காணொலியாக பேசியதையும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும், காணொளி கண்டதற்கும் கேட்டதற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. தங்களின் பதிவு ஒரு ஆய்வுக் கட்டுரையாக மிளிர்கிறது. நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் ஊக்கம் மிகு கருத்திற்கு மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே

      துளசிதரன்

      நீக்கு
  5. இவ்வளவு நாட்களாக மலையாளப் படங்களைப் பார்க்காமலே இருந்துவிட்டேன். நீங்கள் சொல்லும் இந்தப் படங்களை யாவது இனிய பார்த்துவிடவேண்டும். அருமையான விமர்சனத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நல்ல திரைப்படங்கள் உண்டு. நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சார்

      கருத்திற்கு மிக்க நன்றி இராய செல்லப்பா சார்

      துளசிதரன்

      நீக்கு
  6. படங்கள் விமர்சனம் அருமை.
    அந்தக்கால பெண்கள் நிலை மனதுக்கு வேதனை.
    படித்து இருக்கிறேன் அவர்கள் கஷ்டங்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வேதனையான விஷயம்தான்.
      கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு

      துளசிதரன்

      நீக்கு
  7. நெடிய கட்டுரை.  ஆனால் சுருக்கமான வரலாறு. தெரியாத பல விவரங்கள்.  மனதைப் பிசையும் விவரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு கொஞ்சம் நீண்டு விட்டதுதான் ஸ்ரீராம்ஜி. மனதை வேதனை கொள்ளச் செய்பவைதான்.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  8. இன்றளவும் தீண்டாமை நம்நாட்டின் சாபம்...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. மலையாள திரைப்பட உலகைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு படம் வந்திருப்பது இன்றுதான் அறிந்து கொண்டேன். நான் அவ்வளவாக திரைப்படங்களே பார்ப்பதில்லை. வீட்டில் அனைவரும், மலையாள மொழி படங்களை விரும்பி பார்ப்பார்கள். தங்கள் விபரமான பதிவை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வீட்டிலும் மலையாள மொழி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பது மகிழ்ச்சி. பதிவை ரசித்ததற்கு மிக்க நன்றி.

      துளசிதரன்

      (கமலா அக்கா நான் கொஞ்சம் பிசி. அதனால் துளசி அனுப்பிய பதிலை உடனே போட முடியவில்லை. வேறு பதிவுகளுக்கும் போட முடியவில்லை. பொறுத்துக்கோங்க - கீதா)

      நீக்கு
  10. நம் தேசத்தில் கொடுமையிலும் பெரிய கொடுமை ஜாதிக்கொடுமையாகத்தான் இருந்துவந்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது நம் முன்னோர்கள் சமீப காலம் வரையில் நாகரிகமில்லாத காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்து வந்துள்ளனரோ என்கின்ற அச்சத்தையும் சந்தேகத்தையுமே தோற்றுவிக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடந்ததை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடியும். இப்போதைய நிலைமையைக் குறித்து மகிழ்ச்சியடைவோம்

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

      துளசிதரன்

      நீக்கு