பயணம் என்பதே மனதிற்கினியது! மகிழ்ச்சியையும்,
உற்சாகத்தையும் தருவதாகும். அதுவும் இயற்கையுடன் ஒன்றிய சுற்றுலா பயணங்கள் என்பது மனதை
ஈர்த்து லயிக்க வைத்து ஒரு வித மோன நிலைக்கே கொண்டு செல்லும். இவ்வுலகின் படைப்பை,
இயற்கையின் விந்தையை நினைத்து வியக்க வைக்கும். அருமையாகப் படைக்கப்பட்ட உலகின் அழகை
நாம் மனிதர்கள் அலங்கோலமாக்குவதையும் சுட்டிக் காட்டும். இயற்கையுடன் ஒன்றி இயற்கையையும்
இவ்வுலகையும் ரசிக்க கற்றுக் கொண்டுவிட்டால் மனதில் தீய எண்ணங்கள் எழுமோ?
எங்கள் வீட்டு உறவினர், நண்பர்கள்
அடங்கிய பயணக் குழு, இருவருடங்களுக்கு முன் நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் மற்றும் புலிகாட்
ஏரி என்று ஒருநாள் பயணமாகச் செல்ல முடிவு செய்தது. எப்போது திட்டம் போட்டாலும் நானும்
வர வேண்டும் என்று அன்பான வலியுறுத்தல் இருக்கும். என்றாலும் என்னால் பல பயணங்களில் கலந்து கொள்ள
முடியாத சூழலினால் வாய்ப்புகள் தவறிய தருணங்கள் உண்டு. ஆனால், இப்பயணத்தில் நானும்
இணைந்து கொள்ள வசதியாகச் சூழல் இருந்திடவே விடுவேனா வாய்ப்பை! ஊசி நுழையும் அளவேயான
வாய்ப்பு கிடைத்தால் கூட நுழைந்துவிடுவேன்! அவ்வப்போது கிடைக்கும் இது போன்ற பயணங்கள்
என்னை உயிர்ப்பித்து உற்சாகத்துடன் இருந்திட வைக்கிறது எனலாம்.
நெலப்பட்டு சென்னையிலிருந்து
95 கிமீ தூரம். நெல்லூர் மாவட்டத்தில் சென்னைக்கும் நெல்லூருக்கும் சரி பாதி தூரத்தில்,
நெல்லூர் செல்லும் சாலையில் சூளூர்பேட்டை தாண்டி 10 கிமீ தூரத்தில் இருக்கிறது.
சீசன் அக்டோபர் முதல் மார்ச் வரை. பலவகை பறவைகள் வந்து குவியும் இடம் நெலப்பட்டு. பறவைகள் அருகில் இருக்கும் புலிகாட் ஏரியில் உணவருந்தி, நெலப்பட்டில் இருக்கும் எப்போதும் பச்சையாய் இருக்கும் குறுங்காட்டிலும், நன்நீர் சதுப்பு நிலக்காட்டிலும் கூடு கட்டி தங்கள் தலைமுறைகளை உருவாக்குகின்றன. பெரிய சரணாலயப்பகுதி. ஒரு
நாள் முழுவதும் போதாது சுற்றிப் பார்க்க.
டிசம்பர், ஜனுவரி மாதங்கள் தான் பெருக்கம் அதிகம் உள்ள மாதங்கள் என்பதால் டிசம்பர் 31 ஆம் தேதியை முடிவு செய்தார்கள்
குழுவினர். வார்தா புயல் சென்னையைத் தாக்கி 15 நாட்களே ஆகியிருந்த நேரம். எனக்குள்
சிறு சந்தேகம் இருந்தது. பறவைகள் இருக்குமா என்று. ஆனால் நான் வாயைத் திறப்பேனோ? வாய்ப்பு
கிடைத்த பயணமாச்சே! நெலப்பட்டில் இல்லாவிட்டால் என்ன புலிக்காட் ஏரியில் இல்லாமலா போகும்?
ஒரு நாரையாவது? உங்கள் எல்லோரிடமும் சொல்லிப் பெருமை அடித்துக் கொள்ள!!!!
அன்று காலை 7 மணி அளவில் புறப்பட்டு
வழியில் நண்பரையும் அவரது மனைவியையும் (இவரைப் பற்றி பர்வதமலை பயணத்தில் குறிப்பிட்டிருந்தேன்).
ஏற்றிக் கொண்டு எங்கள் 16 சீட்டர் வண்டி சென்னை நெல்லூர் நெடுஞ்சாலை NH 16 ல் சுறுசுறுப்பாகச்
செல்லத் தொடங்கியது.
இப்படித்தான் நாங்கள் வண்டியில் ஒரு பையைத் தொங்கவிட்டுவிடுவதுண்டு. குப்பையைப் போட.....இது முன்பு. இப்போதுதான் ப்ளாஸ்டிக் கவர்கள் தடையாச்சே!
இந்தப் பயணத்தில் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்லவில்லை என்பதால் காலை உணவு எங்கே என்று
பார்த்துக் கொண்டே வந்ததில் வழியில் நல்ல உணவகங்கள் எதுவும் தென்படவில்லை. இருந்தவற்றில்
வண்டி நிறுத்த முடியாத அளவிற்கு லாரிகளின் தொடர் போக்குவரத்து மற்றும் பிற வண்டிகளின்
போக்குவரத்து நெருக்கியது. சுங்கச் சாவடிகள் இடையில் இரண்டு.
புழல் எல்லாம் தாண்டி கொஞ்ச தூரம் சென்ற பிறகு சாலையில் இருந்து இடதுபுறமாகக் கொஞ்சம் உள்ளே சென்று
அங்கிருந்த உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு அப்படியே வலப்பக்கம் உள்ள சாலையில்
திரும்பி நெடுஞ்சாலைக்கு வந்தோம். அந்த இடத்தின் பெயர் மறந்துவிட்டது. ஆந்திர எல்லை வரும் சமயம் அங்கிருந்த
செக் போஸ்டில் வண்டிக்கான விவரங்களைக் காட்டிவிட்டு, செக்போஸ்டில் வரிப்பணம் கட்டிவிட்டு
நெலப்பட்டு நோக்கிச் சென்றோம்.
ஆந்திர எல்லையில் செக்போஸ்ட். குப்பம் பகுதி. வரி ரூ.2650. வண்டியில் ரிஃப்ளெக்டர்ஸ் இல்லை என்று ஃபைன் ரூ.200 கட்டச் சொல்லி மொத்தம் ரூ.2850 கட்ட வேண்டியதானது. பெர்மிட் ஒருவாரத்திற்குக் கொடுக்கப்பட்டாலும் நம் பயணம் என்னவோ ஒரே நாள் பயணம்.
சூளூர் பேட்டை தாண்டி 10 கீமீ
தூரம் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்று இறங்கியதும் வலது புறம் திரும்பி - யு டர்ன்
- சில அடிகள் சென்றதும் இடது பக்கம் வரவேற்கும் பெரிய வளைவு. வளைவிற்குள் தூசு பறக்கும்
சாலையில் 2 கிமீ தூரத்தில் இடது புறத்தில் இருக்கிறது நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்.
இனி படங்களின் மூலம் உள்ளே செல்வோமா?
நிறைய படங்கள் இருக்கின்றன. எனவே இரண்டு, மூன்று பதிவாக நெலப்பட்டு சரணாலயத்தின் ஒரு
சிறு பகுதியை மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு புலிகாட் ஏரிக்குப் போவோம்!
பாருங்க எல்லாரும். நாம நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் வந்தாச்சு. சத்தம் போடாம உள்ள வாங்க. இருங்க டிக்கெட் வாங்கிட்டுப் போவோம்.
டிக்கெட் கவுண்டரில் சொன்னார்கள் வார்தா புயலினால் பறவைகள் வராமல் போய்விட்டன என்று. எல்லோருக்கும் ஏமாற்றமாக இருந்தாலும் சும்மா உள்ளே போய் பார்ப்போமே என்று போனோம்.
இதோ இந்த கேட் வழிதான் உள்ளே போகனும். வாங்க போலாம். நடக்கத் தயார்தானே?! நீளமான பாதை. உள்ளே பறவைகள் எதுவும் இல்லைனா என்னை யாரும் திட்டக் கூடாதாக்கும். மரம், பூக்கள், பறவைகளின் சிலைகள் எல்லாம் பார்த்துட்டே வாங்க!!!
டவருக்கு ஏறும் வழி. டவரிலிருந்து, பறவைகள் இருந்தால் பார்க்கலாம். சரணாலயம் முழுவதும் தெரியும். வாங்க ஏறுங்க...
டவரில் இருந்து பார்த்தப்ப இப்பகுதியில் தூரத்தில் மான்கள் இருந்தன. இதோ கீழே கூடியவரை க்ளோஸப்பில் எடுத்தேன் பாருங்க...
இரு மான்கள் தெரிகின்றனவா?
இது சரணாலயத்தின் மறு பகுதி....டவரிலிருந்து...வியூ. இதில் நீங்கள் பார்க்கும் குறுங்காடுகள்/ஸ்கரப்ஸ் தான் சரணாலயத்தின் பெரும்பகுதி. சதுப்பு நிலம் அடுத்த பதிவுகளில் வரும். என்னெல்லாம் பறவைகள் வருகின்றன என்பதையும் சொல்கிறேன்.
டவரிலிருந்து கீழே இறங்கியதும் இப்படி பார்க் போல கம்பித் தடுப்புகள் இருந்தது. இவை வேறு மான்கள். முதல் படத்திலும் இரண்டாவது படத்திலும்...
நான் கூப்பிட்டதும் அருகில் வந்து பார்க்கிறது பாருங்கள் என்ன அழகு இல்லையா?!!!
அடுத்த கம்பித் தடுப்பில் வாத்துகள் பாருங்க...படுத்திருந்தவை எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டன.
அந்தக் கம்பித் தடுப்புகள் முடிந்து இரு பக்கமும் காடு. நீ............ண்ட பாதை. இடையில் ஆங்காங்கே பறவைகள் பற்றிய பதாகைகள், அறிவிப்புகள், பறவைகள் பேசுவது போன்ற வசனங்கள்...
பறவைகள் நம்மிடம் கெஞ்சுகின்றன......பாருங்கள்!
அப்புறம் அந்த நீளமான பாதையில் ஓர் இடத்தில் பறவைக் கூண்டுகள். கூண்டுகள் எதற்கு என்று தெரியவில்லை. சரணாலயம்தானே இது!!!? இந்தக் கூண்டில் பெயர்ப்பலகை மட்டுமே இருந்தது. பறவையைக் காணவில்லை.
ஒரு கூண்டில் இக்கிளி வகை இருந்தது. தூரத்தில் இருந்தது. கம்பி ஓட்டை வழியாக ஜூம் செய்து எடுத்தேன் கேமராவில். அப்போது கேமரா பழுதடைந்திருக்கவில்லை.
இதுவும் கம்பி வலையின் ஓட்டை வழியாக ஜூம் செய்துதான் எடுத்தேன். பாரகீட்...
அந்த நீண்ட பாதை 1/2 கிமீ தூரம். அப்பாதை இங்கு வந்து முடிந்து இங்கிருந்துதான் சரணாலயம் தொடங்குகிறது. இங்கு கழிவறைகள் இருக்கின்றன. நவீனம் என்று சொல்வதற்கில்லை. ரொம்ப சுமாராகத்தான் இருக்கும்.
இந்த அரங்கிற்குள் பறவைகள் பற்றிய படம் காட்டப்படும். நாங்கள் நேரப்பற்றாக்குறையால் பறவைகள் ஷோ பார்க்கச் செல்லவில்லை.
முந்தைய தினம் ஏதோ நிகழ்வு நடந்திருக்கிறது. சாப்பாட்டுக் கடைகளும் இருந்திருக்கிறது. பாருங்கள் எப்படிப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று..பறவைகள் சரணாலயத்தில். நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.
அடுத்த பதிவில் வ்யூ பாயின்ட் செல்வோம். ....ரொம்ப தூரம் நடந்துவிட்டோம். அதனால கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க. அடுத்த பதிவில் சந்திப்போம்.
-----கீதா
நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் பற்றிய புதிய தகவல்களுடன் அழகான புகைப்படங்களுடன் பதிவு சுவாரஸ்யமாகத் துவங்குகிறது...ஆவலுடன் தொடர்கிறேன்!
பதிலளிநீக்குவாங்க மனோ அக்கா.
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி மனோ அக்கா..
கீதா
புலிக்கட் கடல் பக்கம் அருகிலா இந்த சரணாலயம் ? நான் ரொம்ப வருஷமுந்தி போயிருக்கேன் mcc லேப் இருக்கு அங்கே .
பதிலளிநீக்குபடங்கள் அழகு ,தெள்ளத்தெளிவா இருக்கு .பறவைகளை கெஞ்ச வைத்தது சுயநலப்பிடித்த ஹோமோசேப்பியன்ஸ்கள் தான் .
தொடர்கிறேன்
புலிகாட் கடல் பக்கம் தான் இந்த இடம் ஏஞ்சல். ஆனால் 10 கிமீ தள்ளி உள்ளது. நீங்கள் சொல்லும் லேப் புலிக்கட்டில் இருக்கு...ஷார் (ஸ்ரீஹரிகோட்டா) செல்லும் பாதையில் உள்ளது.
நீக்கு//படங்கள் அழகு ,தெள்ளத்தெளிவா இருக்கு//
மிக்க நன்றி ஏஞ்சல்...அப்ப கேமரா வேலை செய்தது...இது இரு வருடங்களுக்கு முன்ன. இப்ப கேமரா வேலை செய்வதில்லை...பார்க்கனும் என்ன பிரச்சனைன்னு..
//பறவைகளை கெஞ்ச வைத்தது சுயநலப்பிடித்த ஹோமோசேப்பியன்ஸ்கள் தான் .//
அதே அதே....ஏஞ்சல் கூடவே இடங்களை அழுக்காக்கும் இதுங்களை என்ன சொல்ல என்ன செய்ய?
மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு
கீதா
படங்களும் தங்களின் விளக்கங்களும் அருமை சகோ.
பதிலளிநீக்குகேள்விப்படாத ஒரு இடம்.
அழகாக இந்த பதிவை நிறைவு செய்திருக்கிறீர்கள். தொடர்கிறேன்
மிக்க நன்றி சொக்கன் சகோ கருத்திற்கு...
நீக்குகீதா
குட்மார்னிங். பயணக்கட்டுரையா? அம்மாடி... எத்தனை படங்கள்... இதோ பார்க்கிறேன்!
பதிலளிநீக்குகுட்மார்னிங்க் ஸ்ரீராம்...ஆமாம் ஒரே நாள் பயணக் கட்டுரை...ஆனால் ஒரு சில பதிவுகளில் வரும்...ஹா ஹா ஹா...இப்பதிவில் நிறைய படங்கள் வந்துவிட்டன அறிமுகம் என்பதால் அடுத்த பதிவில் கொஞ்சம் கொஞ்சமாகப் போடுறேன்....
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்...
கீதா
நீங்களும் பயணங்களின் காதலிதானா? நமக்கு சந்தர்ப்பம் அமைவதுதான் சிரமம். அமைந்தால் விட மனதிருக்காது!
பதிலளிநீக்குஆமாம் ஆமாம் ஆமாம்....நானும் பயணங்களின் காதலி!!! ரொம்ப ரொம்பப் பிடிக்கும்...தளத்தில் இதற்கு முன்னும் எழுதியிருக்கிறேனே ஸ்ரீராம்....
நீக்குவெங்கட்ஜியின் பதிவுகள் பலவற்றில் நான் சொல்லுவதுண்டு என் பயணக் காதலை...
அதே ஸ்ரீராம் நமக்கு சந்தர்ப்பம் அமைவதுதான் சிரமம்...மீக்கும் நிறையவே...ஆனால் நீங்க சொல்லிருக்கறது போல அமைந்தால் விட மனமே இருக்காது. அப்படிக் கிடைத்த ஒன்றுதான் இப்பயணமும், பர்வதமலை பயணமும்...
கீதா
அதுதானே? நாம் ஏதாவது சந்தேகம் கிளப்பி பயணத்தை மக்கள் ரத்து செய்துவிட்டால் கிடைத்த வாய்ப்பும் போய்விடுமே! ஹா.. ஹா... ஹா... ஒரு நாரையை)யாவது)ப் பார்க்க ஒருநாள் பயணம்! ஹா.. ஹா.. ஹா...
பதிலளிநீக்குஅதே அதே ஸ்ரீராம்...பொறுமை பொறுமை....நெலப்பட்டில் இல்லைதான் ஆனால் புலிக்கட் ஏரியில் ஷார் ஏரியாவில் ஹையோ அழகு...அழகு...அப்பகுதி வரும் அப்ப வரும் பாருங்க...
நீக்குகீதா
அடப்பாவி... அங்கு என்ன அவ்வளவு வரி? அந்த ஒரு வாரத்துக்கான பணத்தை ஒரு நாளுக்கு கணக்கு செய்து கட்டக்கூடாதோ!!!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் நானும் அப்படி நினைத்தேன். நாம் போகும் நேரம், தேதி எல்லாம் குறித்துதான் கொடுக்கிறோம்...அப்படி இருக்க இப்படி இதெல்லாம் கவர்ன்மென்ட் கவனத்தில் கொள்ளலாம்...
நீக்குகீதா
ஸ்ரீராம் பதிலில் சொல்ல விட்டுப் போச்சு இந்த வரி ஆந்திரா தமிழ்நாடு பார்டர் செக்போஸ்ட் ரோட் டாக்ஸ்...வரி ...
நீக்குஅந்த ஃபார்மை படம் எடுத்து வைத்துள்ளேன். அடுத்த பதிவில் போடுகிறேன்..
கீதா
பறவைகளைக் காணாமல் வெறிச்சென்று இருக்கிறது சரணாலயம். நீங்கள் சொன்ன அந்த ஒரு நாரையைக் கூடாக காணோமே...!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் ரொம்ப வெறிச்சென்று இருந்தது ஆனால் நம்மவர்கள் இருந்தார்கள்...அதுவும் ஃப்ரீயாகச் சுற்றிக்கொண்டு....அடுத்த படங்களில் வருவாங்க ...பூக்கள் கார்டென் எல்லாம் ரொம்ப அழகா இருந்துச்சு...
நீக்குஅந்த நாரை இங்கில்லை ஸ்ரீராம் அது புலிக்கட் பகுதியில்...அப்பகுதியும் வருமே....விவரங்களுடன்...
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
கூடவே அழைத்து சென்றது போல் உணர்வு... அருமை...
பதிலளிநீக்குகருத்திற்கு மிக்க நன்றி டிடி....
நீக்குகீதா
உடன் வந்த உணர்வு. மைசூர் பூங்கா சென்றது நினைவிற்கு வந்தது. புகைப்படங்கள் அருமை.
பதிலளிநீக்குகருத்திற்கு மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குகீதா
ஒரு நாள் பயணம்... சாப்பாடு கைல கட்டிக்கலை.... காலை உணவு சரியான இடம் அமையலை. புயல்னால பறவைகள்லாம் வரலை.... இன்றைக்கு வாத்தும் கிளியையும், புள்ளிமானையும் படமாப் போட்டிருக்கீங்க. அங்க கூட சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்ததா?
பதிலளிநீக்குநெல்லை காலை உணவு சாப்பிட்டோமே. நல்ல இடத்தில்தான் சாப்பிட்டோம். சொல்லிருக்கேனே அந்த இடத்தின் பெயர்தான் மறந்து போச்சு...
நீக்குவார்தா புயல் வந்த சமயம் என்பதால் பறவைகள் இல்லை....ஆனால் அடுத்து புலிக்கட் பகுதி வரும் போது வரும்...
நெலப்பட்டும் சரி புலிக்கட்/ஷார் பகுதியிலயும் சாப்பிட ஒன்றும் கிடைக்காது. நாங்கள் கையில் சாப்பாடுதான் கொண்டு போகலை மற்றபடி ஸ்னாக்ஸ் வைத்திருந்தோம்.
அடுத்த பகுதியில் லஞ்ச் எங்கு என்பதெல்லாம் பற்றி சொல்கிறேன்...
மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு
கீதா
உங்கள் வண்டியில் பிளாஸ்டிக் பை (குப்பைகள் போட) வைத்திருப்பது ரொம்பவும் பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குஆமாம் நெல்லை எப்போதுமே பயணத்தின் போது அப்படித்தான். நான் தனியாகப் பயணம் செய்தாலும் இப்படி ஒரு பை வைத்துக் கொள்வதுண்டு. வேஸ்ட் போட. நான் வெளியில் போடுவது இல்லை. கலெக்ட் செய்து கொண்டு அப்புறம் குப்பைத் தொட்டியைப் பார்க்கும் போது போடுவது வழக்கம்.
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
இந்தச் சரணாலயம் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லை. செங்கல்பட்டுப் பக்கம் இருக்கும் ஏரிதான் புலிக்காட் ஏரி என நினைத்தேன். அங்கேயும் ஒன்று இருக்கா? படங்கள் எல்லாம் அழகு. கீழே கொடுத்திருக்கும் கருத்துக்கள் தான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பச் சின்ன எழுத்துக்கள், பெரிசு பண்ணிப் படிச்சேன்.
பதிலளிநீக்குகீதாக்கா இந்த சரணாலயம் அவ்வளவா யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புலிக்கட், ஸ்ரீஹரிகோட்டா (ஷார்) போறவங்களுக்குத் தெரிந்திருக்கலாம்...
நீக்குசெங்கல்பட்டு பக்கம் இருப்பது செங்கல்பட்டு கொலவை ஏரி. ரயிலில் போகும் போதே தெரியும். நான் ஃபோட்டோ எடுத்திருக்கேன்...போடுகிறேன் இங்கு...அப்புறமா வரும் படங்களின் பதிவில்...
புலிக்கட் என்பது தமிழில் பழவேற்காடு ஏரி. இரண்டும் ஒன்றுதான்... ஷார் தீவு பக்கத்தில் இருப்பது ஆந்திரா பக்கம் ஆன புலிக்கட் என்றே சொல்லுகின்றார்கள். தமிழ்நாட்டுப் பக்கம் இருப்பது பழவேற்காடு/புலிக்கட்..இரண்டிற்கும் இடையில் கொஞ்சமே தூரம்தான்....பழவேற்காடு தமிழ்நாடுபக்கம் இருப்பதற்கு செல்ல செக் போஸ்ட் எல்லாம் கிடையாது...ஆனால் தமிழ்நாட்டு எல்லையில் ஆந்திரப்பக்கம் இருப்பதற்குத்தான் இந்த செக் போஸ்ட்....ஆனால் பழவேற்காட்டில் ஏரியில் கடல்பக்கம் செல்ல போட்டிங்க் உண்டு. அப்படி போட்டில் சென்று ஷார் பகுதி தீவில் இப்பக்கம் நாம் சுற்றி வரலாம் பறவைகளைப் பார்க்கலாம்...
புலிக்கட் அதாவது ஆந்திராவில் ஷார் ஏரியா பக்கம் இருக்கும் பகுதியில் நாம் ரோட்டிலிருந்தே பார்த்துக் கொண்டு செல்லலாம்....செம கூட்டம் கூட்டமா இருக்கும்....
இம்முறை கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது. தண்ணீர் அதிகம் இல்லை....புலிக்கட் பகுதி வரும் போது சொல்கிறேன்..கீதாக்கா
சின்ன எழுத்துகள் அது மாற்ற முடியாமல் போச்சு...அடுத்த முறை வேர்டில் அடித்து காப்பி செய்து போட்டுவிடுகிறேன்...
கீதா
//செங்கல்பட்டு பக்கம் இருப்பது செங்கல்பட்டு கொலவை ஏரி. ரயிலில் போகும் போதே தெரியும். நான் ஃபோட்டோ எடுத்திருக்கேன்...போடுகிறேன் இங்கு...அப்புறமா வரும் படங்களின் பதிவில்...// இஃகி, இஃகி, சுமார் பத்து வயசில் இருந்து இந்த ஏரியைப் பார்த்துட்டு இருக்கேன். அதன் தண்ணீர் குடிக்க லாயக்கில்லை என அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாகப் புலிக்காட் என்றே பெயர்ப்பலகை பார்த்த நினைவு. அடுத்த முறை சென்னைக்கு ரயிலில் போனால் கவனிக்கணும். படமும் எடுக்கணும். பார்க்கலாம். ஆனால் இந்த ஆந்திராப் புலியைப் பற்றி இப்போத் தான் முதல்முதலாகக் கேள்விப் படறேன்.
நீக்குநாங்க அடிக்கடி மாற்றல், ஊர்ப்பக்கம் வருகை என அநேகமா வருஷத்திற்கு ஒரு முறையாவது நீண்ட பயணங்கள் மேற்கொண்டதால் எப்போவுமே குப்பைகள் போடப் பைகளும் துடைக்கத் துணியும் கொண்டு செல்வோம். கையில் வாஷிங் லிக்விடும் இருக்கும். சமைத்துச் சாப்பிட்டதில்லையே தவிர்த்துப் பயணங்களை நன்றாக அனுபவிச்சிருக்கோம். இத்தனைக்கும் ரயில் தாமதத்தால் டிக்கெட் எல்லாம் கான்சல் ஆகி முன் பதிவெல்லாம் போய், கழிவறைப்பக்கம் உட்கார்ந்து கூடப் போயிருக்கோம். ஆனாலும் அந்தப் பயணங்கள் இனிமையானவை!
பதிலளிநீக்குஆமாம் அக்கா நாங்களும் துடைக்கத் வேஸ்ட் துணிகள் வைத்திருப்போம். நான் தனியாக வரும் போதே ஒரு சின்ன டவல் இருக்கும்..சில சமயம் குழுவாகச் செல்லும் போது செல்லும் இடம் பொருத்து ரைஸ் குக்கர் அரிசி, புளிக்காய்ச்சல், பொடிகள் கொஞ்சம் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று விடுவோம்...இல்லை என்றால் ப்ரெட் பிஸ்கட் என்று...
நீக்குஅக்கா எனக்கும் கழிவறைப்பக்கம் உட்கார்ந்து போயிருக்கேன்..
பல பயணங்கள் அன் ரிசர்வ்டில் பயணித்துள்ளேன்...சமீபத்திய பயணம் போகும் போது திடீரென்று என்பதால் புக் செய்ய முடியலை... அன்ரிசர்வ்ட்...கூட்டம் நெருக்கி அடித்தது. நிற்க கூட இடம் இல்லை அப்புறம் மேலே பெர்த் போன்று இருக்கும் கம்பியில் ஏற்கனவெ மூன்று பேர் இருக்க அவர்கள் எனக்கும் இடம் தரேன் என்று சொல்ல ஏறி உட்கார்ந்தேன் இரு கால்களையும் சேர்த்து உட்கார்ந்து என்று...ஆனாலும் அதுவும் ரசனையான பயணம் தான் மேலே இருந்து கொண்டு எல்லாரையும் பார்த்துக் கொண்டு ...ஸ்வாரஸ்யமாக இருந்தது...
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
நாராய்! நாராய்! செங்கால் நாராய்! தானா இங்கேயும்! அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன். டோல் கேட்டில் கொள்ளை அடிப்பதைப் பற்றிப் புகார் கொடுத்திருக்கலாமோ?
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா இங்கு நாரைக் கூட்டம். வித விதமான நாரைகள்....நீர்க்கோழிகள்...என்று
நீக்குபடங்கள் வரும்...
அது டோல் கேட் இல்லைக்கா...இன்டெர் ஸ்டேட் செக் போஸ்ட் வரி...அது அரசு வசூலிப்பதாச்சே....அதற்கு ஃபார்ம் எல்லாம் உண்டு. அதில் அமௌன்ட் ப்ரின்ட் ஆகியிருக்கும்....வண்டி எண் உரிமையாளர் பெயர் எல்லாம் அவர்கள் தரும் ஃபார்மில் நாம் ஃபில் செய்து கொடுத்து அப்புறம் பல சீல்கள் வைக்கப்பட்டுத்தான் தருவாங்க. லைட் எல்லாம் சரியா இல்லைனா மறுப்பாங்க என்ட்ரிக்கு இல்லைனா அபராதம் கட்டனும் எங்க வண்டிக்கும் ரிஃப்லெக்டர் இல்லைனு ரூ 200 அபராதம் கட்ட வேண்டியதானது....எல்லாமே அஃபிஷியல்தான் அக்கா...ஆந்திரா கவர்ன்மென்ட்/தமிழ்நாடு கவர்ன்மென்ட்...
மிக்க நன்றி கீதாக்கா..
கீதா
செக் போஸ்ட்டில் நாங்களும் பணம் கட்டி இருக்கோம். ஹிஹிஹி, அ.வ.சி. டோல்கேட் எனத் தவறாக மனதில் பதிந்து விட்டது. :)
நீக்குஅன்பு கீதாமா. டிசம்பர் மாதம் போனீர்களா.
பதிலளிநீக்குபயணம் எப்பவுமே இனிது.
பறைவகள் இல்லாத சரணாலயம் பாவம் போல் இருக்கு.
உங்கள் வர்ணனை எல்லாவற்றையும் அருமையாகக் கொண்டு போகிறது.
அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.வாழ்த்துகள் அன்பு கீதா.
வாங்கம்மா வல்லிம்மா...ஆமாம் 2016 டிசம்பர்ல...2 வருஷம் முடிஞ்சு போச்சு ஹா ஹா ஹா எப்பவோ எல்லாம் போடனுன்னு வைச்சுருந்தாலும் எழுத லேட்..டக்குனு எழுத முடியறதில்லை ..
நீக்குமிக்க நன்றிம்மா கருத்திற்கு
கீதா
//இயற்கையுடன் ஒன்றி இயற்கையையும் இவ்வுலகையும் ரசிக்க கற்றுக் கொண்டுவிட்டால் மனதில் தீய எண்ணங்கள் எழுமோ? //
பதிலளிநீக்குஎழுமே:)... சூறாவளியைப் பார்த்ததும் மனமும் சூறாவளியாப் பொங்குமே:) ஹா ஹா ஹா:)..
வாங்க அதிரா....அதிரடி வரும் போதே சூறாவளியா வருதே!! ஹா ஹா ஹா ஹா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....சூறாவளியைப் பார்த்ததும் சூறாவளியா பொங்குமா மனம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
உண்மைதான் கீதா, இடைக்கிடை பயணம் நமக்குத் தேவைதான், இல்லை எனில் ஒரு மாற்றம் இல்லாமல் இருக்கும்.
பதிலளிநீக்கு//சீசன் அக்டோபர் முதல் மார்ச் வரை.//
ஓ விண்டர் காலத்தில்தான் திறந்திருக்குமோ.. டெல்லியிலும் ஒரு சரணாலயம் இருக்கெல்லோ நம் உறவினர்கள் போனார்கள், அது விண்டரில் மூடிடுமாமே.. பறவைகள் இருக்காதாம்.
// ஒரு நாள் முழுவதும் போதாது சுற்றிப் பார்க்க.
//
அப்படித்தான் அறிஞ்சே, 2 நாட்கள் எனில் மெதுவா ரசிச்சு ரசிச்சு இளைப்பாறி சுற்றி வரலாம். அதுதானே உல்லாசப் பயணம் என்பது, உல்லாசப் பயணம் எனச் சொல்லிப்போட்டு அங்கு காலில் வீல் கட்டியதுபோல சுற்றினால் ?? ஹா ஹா ஹா...
சரணாலயம் வருடம் முழுவதும் திறந்திருக்கும். ஆனால் பறவைகளின் சீசன் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு வந்து கூடு கட்டி தன் இனப்பெருக்கத்திற்க்கா....
நீக்குநாங்கள் சீசனில் போன போதே வார்தா புயல் விசிட் செய்து போன சமயம் என்பதால் பறவைகள் பயந்து வரவில்லை!!
பறவைகள் இல்லாத போது தங்கினாலும் பயனில்லையே. அங்கு தங்கும் வசதிகள் எதுவும் இல்லை அதிரா. சூளூர்பேட்டையில்தான் தங்க வேண்டும். அங்கும் தங்கும் இடங்கள் என்பது ரொம்பக் கிடையாது..
மிக்க நன்றி அதிரா..
கீதா
//ஒரு நாரையாவது? உங்கள் எல்லோரிடமும் சொல்லிப் பெருமை அடித்துக் கொள்ள!!!!//
பதிலளிநீக்குஹாஹா ஹா ஆனா நாரை கிடைக்கவில்லைப்போலும்:)
16 சீட்டர் எனில் அது மினிபஸ்தானே? நல்ல விசயம் ஷொப்பிங் பாக் இருப்பது, நாமும் இங்கு ஒரு பாக் காரில் வைத்திருப்போம்.. இருந்தாலும், மண் புல்லு என அப்பப்ப காரில் ஏதும் ஒட்டிக்கொள்ளும்.
நாரைகள் புலிக்கட்டில் அதிரா....வரும் பாருங்க...
நீக்குவேன் தான்...ஆமாம் பேக் வேஸ்ட் போட மற்றபடி வண்டியில் நாம் செல்லும் இடங்களைப் பொருத்து மணல், அழுக்கு என்று சேரும்தானே...மழை என்றால் கேட்கவே வேண்டாம்...
மிக்க நன்றி அதிரா
கீதா
//இந்தப் பயணத்தில் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்லவில்லை என்பதால் காலை உணவு எங்கே என்று பார்த்துக் கொண்டே வந்ததில் //
பதிலளிநீக்குகர்ர்ர்:) வாகனத்தில் ஏறினாலே சாப்பாட்டு நினைப்புஇத்தேன்ன் ஹா ஹா ஹா:).
//பாருங்க எல்லாரும். நாம நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் வந்தாச்சு. சத்தம் போடாம உள்ள வாங்க. இருங்க டிக்கெட் வாங்கிட்டுப் போவோம். //
நோஓஓஓ பறவைச் சத்தத்துக்கு ஏற்ப நானும் கத்துவேன் அது போல:))
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அதிரா பின்ன சாப்பாடு வேண்டுமே எவ்வளவு தூரம் நடக்கனும்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குநோஓஓஓ பறவைச் சத்தத்துக்கு ஏற்ப நானும் கத்துவேன் அது போல:))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹா ஹா ஹா அது பறவையைப் போலச் சத்தம் போடடலாம்...அதிரா நானும் அப்படி ஒலி எழுப்புவது உண்டு அவற்றை நம்மை நோக்கிப் பார்க்கச் செய்ய....ஆனால் நாம் சும்மா சத்தமாகப் பேசி பயமுறுத்தினால் அவை எங்காவது ஒளிந்து கொண்டுவிடுமே...
வாங்க அதிரா நாம பறவை போல கத்திக் கொண்டே போவோம் அப்படியாச்சும் ஏதாவது ஒளிந்து கொண்டவை வெளிய வருதான்னு பார்ப்போம்...ஹா ஹா ஹா
கீதா
பறவை பார்க்கப் போனேன்ன்.. இரு மான்கள் படமெடுத்து வந்தேன்ன்ன்:)
பதிலளிநீக்குஇது 2016 இல் போனதோ கீதா?
நான் நம்பமாட்டேன்ன் நிங்க போனது பறவைகள் சரணாலயம் அல்ல, மிருகக்காட்சிச்சாலை..:) பின்ன ஒரு பறவையைக் கூடக் கண்ணில காட்டல்ல நீங்க கர்:)) கிளியும் வாத்தும் தானே தெரியுது:)).. அதிராவை ஆரும் பேய்ப்க்காட்ட முடியாதூஊஊஊஊஊஊஊஊ:)).. ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா அதிரா கூல் கூல்.. அடுத்த போஸ்ட்டில நிறையப் பறவை வரும் வெயிட் யா:))..
ஓகே ஓகே ஹா ஹா ஹா தொடருங்கோ கீதா.. நீண்ட இடைவெளி விட்டால், இப்போஸ்ட் மறந்து போவோம் சொல்லிட்டேன்ன்:)
அதிரா அதே 2016 ல் போனது..
நீக்குஅங்க தெள்ளத் தெளிவா சொல்லிருக்கேன்...பறவைகளைப் பார்க்க முடியலைனா எதுவும் சொல்லக் கூடாதுனு...ஹா அஹ ஹா ஹா ஹா..
.அப்புறம் வார்தா புயல் வந்த சமயம் ஸோ பறவைகள் வரவில்லை என்றும் சொல்லிருக்கேன்......கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....போஸ்ட் பாருங்கோ..சரி சரி
இது நெலப்பட்டு...நெலப்பட்டில் பறவைகள் பார்க்க முடியலை....
புலிக்கட்டில் பார்க்கலாம் அதிரா...
மிக்க நன்றி அதிரா
கீதா
அழகான படங்கள்....
பதிலளிநீக்குஇந்த சரணாலயம் பற்றி அறிந்ததில்லை.
சிறப்பாக தொடங்கி இருக்கிறது பயணம்.
குப்பைகளை போட்டுச் மக்கள்.... திருந்தவே மாட்டார்கள்.... :(
மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கு
நீக்குநீங்கள் சென்றிருந்தால் கண்டிப்பாக இன்னும் நல்ல படங்களாக வந்திருக்கும்...அதுவும் புலிக்கட் பகுதி பறவைகளை நீங்கள் நன்றாக எடுத்திருப்பீர்கள்...
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான பயணக் கட்டுரை. அழகான படங்கள். மிகவும் அழகாக ஒவ்வொரு இடத்தையும் பொறுமையாக வர்ணித்திருக்கிறீர்கள்.படங்கள் கண்களை கவர்கின்றன. சரணாலயத்தின் அனைத்து இடங்களையும் நீங்கள் வர்ணித்து படங்களுடன் பார்க்கும் போது, எங்களுக்கு தங்களுடன் பயணித்த திருப்தி வருகிறது. பசேலென்ற காட்டுப்பகுதி, செம்மண் விரித்த பாதையில் நீண்ட காடு.. (சிகப்பு கம்பளம் விரித்த மாதிரி நல்ல கலர்.) அனைத்தும் மிகவும் ரசிக்கத் தக்கவையாக இருக்கிறது.மான்கள் அழகாக உள்ளது. நல்ல அழகான தெளிவான பயணக்கட்டுரை. இதை நான் பார்த்து ரசித்து கருத்து இடும் போது இதன் இரண்டாவது பகுதியையும் போட்டுள்ளீர்கள். இதோ அதனுடனும் பயணிக்கிறேன். இந்த பதிவுக்கு தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா தாமதமானால் என்ன அதனால் ஒன்றுமில்லை. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்ப வாங்க...
நீக்குமிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்திற்கு. ப்றவைகள் இல்லையே தவிர நன்றாகப் பராமரிக்கப்படும் அழகு மெருகூட்டப்படும் சரணாலயம். அதுவும் வார்தா வந்து விட்டு போனதால் பறவைகள் வரலை...
ஆனால் நெட்டில் பார்த்தீர்கள் என்றால் அதற்கு முன் பயணித்தவர்கள் போட்டிருக்கும் படங்கள் செமையா இருக்கு பறவைகளை அழகா எடுத்து போட்டுருக்காங்க...
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
இப்போதுதான் நுழைகிறேன். இரண்டு பகுதி எழுதிவிட்டீர்களே அதற்குள். ஆனால் கேமரா தேதி 2016 டிசம்பர் என்கிறது.. சரி, பறவைகள் கதை என்றும் புதுக்கதைதான்..
பதிலளிநீக்குஏகப்பட்ட போர்டுகளைப் பார்த்து, என்னென்ன இன்ஸ்ட்ரக்ஷனோ தெரியலையே எனப் பயந்து பறவைகள் பறந்தோடிவிட்டனவோ!
வாங்க ஏகாந்தன் அண்ணா. பரவால்ல வெயிட் பண்ணறோம்...மெதுவா வாங்க சுத்திட்டு ஹா ஹா ஹா
நீக்குஆமாம் என்றுமே புதுக்கதைதான்...
ஹா ஹா ஹா ஹா .....அந்த போர்டுகள் நமக்கான இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்...ஹா ஹா பறவைகள் சொல்லுவது போல...
வார்தா தான் துரத்திடுச்சு பறவைகளை...
மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா
கீதா
நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்...
பதிலளிநீக்குவாவ் சூப்பர் கீதாக்கா...அழகான இடம் ..படங்கள் எல்லாம் சூப்பர் ...
மான்கள் படம் அழகு கா ..
வாங்க அனு....இடம் அழகான இடம் அனு. ஒரு நாள் முழுவதும் வேண்டும்....அதுவும் பறவைகள் வந்திருந்தால் கண்டிப்பாக இரண்டு நாட்கள் வேண்டும் என்றே தோன்றுகிறது.
நீக்குமிக்க நன்றி அனு
கீதா
சரணாலயம் குறித்து நிறைய தகவல்கள்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
இயற்கையுடன் ஒன்றி இயற்கையையும் இவ்வுலகையும் ரசிக்க கற்றுக் கொண்டுவிட்டால் மனதில் தீய எண்ணங்கள் எழுமோ?//
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள். இயற்கையை ரசிக்க கற்றுக் கொண்டால் மனம் சாந்தம் அடையும்.
பறவைகள் சரணாலயத்தில் இப்படி குப்பைகளை போட்டு விட்டு போனால் அவைகளுக்கு ஆபத்து.
பதிலளிநீக்குதண்டிக்கபட வேண்டும். இயற்கை காட்சிகளை பார்க்க போகிறவர்கள் சுற்றுப்புறத்தை அசுத்தம் ஆக்காமல் வரலாம்.
ஆமாம் கோமதிக்கா...எனக்கு அன்று அதைப் பார்த்து கொஞ்சம் கோபமே வந்தது. நம்மூர் இன்னும் திருந்தவில்லையே என்று...
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா.
கீதா
செம்மண் பாதை அழகு. நீண்ட தூரம் போய் பறவைகள் கண்ணுக்கு தட்டுபடவில்லை என்பது கஷ்டம் தான் மனதுக்கு.
பதிலளிநீக்குநாங்கள் எங்கு பயண்ம போனாலும் குப்பை போட பைகள் வைத்து இருப்போம் அதில் சேகரித்து குப்பை போடும் தொட்டி இருந்தால் போடுவோம், அல்லது வீட்டுக்கு கொண்டு வந்து குப்பை போடும் இடத்தில் போடுவோம்.
நாங்களும் உங்களுடன் வந்தது போன்ற உணர்வு.
மீண்டும் நேரம் கிடைக்கும் போது மூன்று பதிவுகளையும் மீண்டும் படித்து கருத்து சொல்கிறேன்.
கோமதிக்கா சூப்பர் குப்பை பேக் கொண்டு செல்வது..அதே..
நீக்குஆமாம் அக்கா உள்ளே நிறைய நடந்தோம்..நன்றாக இருந்தது என்றாலும் பறவைகள் இல்லை. வார்தாவினால் வரவில்லை...
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா