செவ்வாய், 29 நவம்பர், 2016

ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சி.

“தெய்வத்திண்டே ஸ்வந்தம் நாடு” என்று பெருமை பேசும் பலகைகள் எல்லா இடங்களிலும் சுற்றுலாத் துறையினால் பொருத்தப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தில், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் நிலம்பூரிலிருந்து ஏறக்குறைய 16 கிமீ தூரத்தில் இருக்கும் ஆட்டியன்பாற (ட்டி என்பது ஆங்கில எழுத்தாகிய என்பதன் உச்சரிப்பு)  அருவியை நோக்கி எங்கள் பயணம், இந்த வருடத்து ஜூன் மாதத்தில் என் மகனின் பயணத்திற்கு முன் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுச் சென்ற பயணம். துளசியின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் சென்றோம். அவர்கள் இந்த அருவிக்கு மிக மிக அருகில் இருந்தும் இப்போதுதான் முதல்தடவையாகப் பார்க்கிறார்கள். 

கேரளத்துப் பருவ மழை நேரமாதலால் மஞ்சு தவழும் மலை முகடுகள். கார் மேகங்கள் சூழ்ந்து இதோ மழையைக் கொட்டிவிடுவேன் என்று கண் சிமிட்டிக் கொட்டும் மழை அல்லது தூறிக் கொண்டே இருக்கும் மழைச் சாரல்.




பயணப் பகுதி, கேரளாவின் மலபார் பகுதி என்பதால், பேருந்துப் பயணம்/ கார் பயணம் ரயில் பயணம் என்றாலும் சரி, எங்கெங்குக் காணினும் பசுமையடா, பச்சையைத் தவிர வேறொன்றுமில்லை என்று பறை கொட்டும் அளவிற்குப் பசுமையான மலைகளும், ரப்பர் தோட்டங்களும், பாக்கு மரங்களும், தென்னை மரங்களும், வயல்களும், வாழைத் தோப்பும், காடுகளும் கொஞ்சம் அல்ல நிறையவே மனதை மயக்குகின்றது. இடையிடையே நதிகளும், சிற்றோடைகளும் பருவமழைக்காலம் என்பதால் நீர் நிறைந்து கேரளத்தின் பசுமை வளத்திற்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.

வழி முழுவதும் இயற்கை அன்னையின் ஆட்சியே. சாலையின் இருமருகிங்கிலும் ரப்பர் தோட்டங்களும், காடுகளும் நம்மைக் கிறங்கடித்து ரசிக்க வைக்கின்றன. சாலை மிக நேர்த்தியாகவும், போக்குவரத்து அதிகம் இல்லாமல் வெறிச்சென்று இருந்தாலும், சாலை வளைந்து, வளைந்து செல்வதால், வளைவில் எதிரில் அதி வேகமாக வரும் வண்டிகள் தெரிவது இல்லை என்பதால், மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும்.


இந்த இயற்கை நீர்வீழ்ச்சி இருக்கும் கிராமத்தின் பெயர் குரும்பலங்கோடு. மலையின் மேலே ஓடும் கஞ்சிரப்புழா எனும் ஆறு பாறைகளுக்கிடையில் படிப்படியாக வீழ்வதுதான் ஆட்டியன்பாற  நீர்வீழ்ச்சி. மலப்புரம் மாவட்டத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இருந்ததால், தற்போது கஞ்சிரப்புழா ஆற்றின் ஒரு சிறு பகுதியைத் தடுத்து சிறிய அணை கட்டி அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 

கேரள மாநிலம், சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதற்காக, சமீபத்திய முயற்சியாகப் பல அணைக்கட்டுகளையும், பவர் ஹவுசையும், அருவிகளையும் இணைத்து  கேரளா ஹைடல் சுற்றுலா மையங்கள் என்ற பெயரில் சுற்றுலாத்தலங்களை உருவாக்கி வருவதால், அதன் கீழ் ஆட்டியன்பாற அருவியையும் 3 கோடி ரூபாய் செலவில் சுற்றுலாத்தலமாக உருவாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2.5 கிலோமீட்டர் தூரமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட சாலையை பவர் ஹவுசிலிருந்து மேயின்பள்ளி பகுதிக்கு அதாவது கஞ்சிரபுழா ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டு வரை அமைத்துள்ளது.


இப்பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதாக இருப்பதாலும், இந்த நீர்வீழ்ச்சியில் கோடை காலத்தில் நீர் மிகவும் குறைந்து சுற்றுலாப் பயணிகள் வருவது குறைந்துவிடும் என்பதாலும், சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக, 14 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பாட்டரியில் இயங்கும் கார் ஒன்று பவர் ஹவுசிலிருந்து அணைக்கட்டு வரைச் செல்ல விடப்பட உள்ளதாக சமீபத்தில் கேரள ஹைடல் சுற்றுலா மையம் அறிவித்துள்ளது. நாங்கள் பார்வையிட முடியவில்லை.

அருவிக்குச் செல்லும் பாதை வரை நாம் வண்டியில் செல்லலாம். அங்கு வண்டிகளை நிறுத்த இடம் உள்ளது. கட்டணம் ரூ 20. அருகில் அல்சனாஹ் எனும் ஒரு சிறிய உணவகம் இருக்கின்றது. ஆனால் நாங்கள் சென்ற சமயம் திறந்திருக்கவில்லை. எனவே நாம் கையில் உணவு கொண்டு செல்வதே நல்லது. அதனை அடுத்து கைவினைப் பொருட்கள் விற்கும் கடையும் உள்ளது.
அருவிக்கு நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ 10. நுழைந்தால் மிகவும் அழகான பூங்கா, கல்லில் செதுக்கப்பட்ட கொரில்லா சிலை அதைச் சுற்றிலும் பயணிகள் அமர்வதற்கு ஆங்காங்கே பெஞ்சுகளும், அதனை அடுத்து இறங்கினால், இளைப்பாற பெரிய அளவில் ஒரு அறையும், அதிலும் அமர பெஞ்சுகளும் உள்ளது. அதன் வழிதான் அருவிக்குச் செல்ல வேண்டும். 

மீண்டும் படிகள் இறங்கிச் செல்லும் போது நடுவில் போகைன்வில்லா வளைவும், இரு புறமும் அமைக்கப்பட்டப் பூங்காவில் வன்ண வண்ணப் பூக்களும் மனதைக் கவர்கின்றது.
குளுமையான காற்றிற்கிடையில் கண்ணிற்கும், மனதிற்கும் விருந்தும், இதமும் அளிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கிடையில் இயற்கை அன்னையின் மடியில் படிப்படியாய், அருவிக்கே உரிய இனிய ஓசையுடன் பாறைகளுக்கிடையில் தவழ்ந்து வீழ்கின்றது அருவி. ஆங்காங்கே விழுகின்ற இடத்தில் சுனைகளும்/சிறிய குட்டைகளும் இருக்கின்றன.
இந்த அருவியில் 22 பேர் சறுக்கி விளையாடி பாறைகளில் மோதி இறந்திருப்பதால் எச்சரிக்கை அறிவிப்பு.
தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் போது இந்தக் குழிகள் தெரியாது, ஆபத்தானவை என்பதால் தான் எச்சரிக்கை
பல இளைஞர்கள் அருவி விழும் பாறையில் சறுக்கிக் கொண்டு கீழே சுனையில் விழுந்து நீந்துகின்றார்கள். அதிகமாக மழை பெய்யும் காலத்தில் தண்ணீரின் அளவு கட்டுக்கடங்காமல் எல்லா பாறைகளையும் மூழ்கடித்து ஓடும் சமயம் தண்ணீருக்கடியில் இருக்கும் பாறைகளோ, பாறைகளின் குழிகளோ, நீரின் ஆழமோ அறிய முடியாததால், இவ்வாறு சறுக்கி விளையாடுபவர்கள் பாறைகளில் மோதி இது வரை 22 பேர் இறந்துள்ளதால் ஆங்காங்கே இதை அறிவித்து எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றது.

அதன் காரணமாக, பூங்கா வழி செல்லும் போது பிரதான அருவிக்கு அங்கிருந்து பாறைகளில் இறங்கினால் அங்கு கம்பித் தடுப்பும் சிறிய வாயிற்கதவும் இருக்கின்றது. மாலை 5 மணி வரைதான் வாயிற்கதவு திறந்திருக்கும். அதன் பின் அருவிக்குச் செல்ல அனுமதியில்லை. இந்தக் கம்பித் தடுப்பு பாறைகளின் மேல் நீண்ட தூரத்திற்குக் கட்டப்பட்டிருக்கிறது.


நீர் ஓடும் வழியில் தடுப்புக் கம்பி நீண்ட தூரம் வைக்கப்பட்டிருக்கிறது. கம்பி வரை நீர் வந்துவிட்டால் கம்பியைத் தாண்டி அனுமதி இல்லை என்றும் அச்சமயம் அருவியைக் கம்பியின் இப்புறம் இருந்து மட்டுமே காண முடியும் என்றும் சொல்லப்பட்டது.

நாங்கள் சென்றது ஜூன் மாதம் ஆரம்பம் என்பதால் அபாயகரமான அளவிற்கு நீரில்லை. பாறையில் இறங்கி மெயின் அருவிக்குச் செல்லாமல் கீழே பாறைகளில் இறங்கி மீண்டும் மடிந்து விழும் சிறிய சிறிய அருவிகளிலும், சிறிய சுனைகளிலும், ஓடும் நீரிலும் நனைந்து, குளித்து மகிழலாம். எவ்வளவு நேரம் அருவியிலும், ஓடும் நீரிலும் விளையாடி மகிழ்ந்தாலும் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை எனலாம்.  நீர் மிகவும் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்கின்றது.

இந்தப் படத்தில் வலது புறம் ஒரு பாதை செல்லுகிறது அல்லவா அது வழிதான் அருவிக்குச் செல்ல வேண்டும். அங்கு சிறிய கம்பிக் கதவு இருக்கிறது. 5 மணிக்கு மூடி விடுகிறார்கள்.
வ்யூ பாயின்ட் செல்லும் வழி
வ்யூ பாயின்ட்

பாறைகளில் இறங்காமல், பூங்காவின் வழி நடந்தால், படிகள் ஏறி, இறங்கிய பின் சரிவான மண் பாதையில், ஆங்காங்கே இருக்கும் பாறையில் ஏறி, கரடு முரடான பாதை வழி ஏறினால் அங்கு மடிந்து விழும் அருவியை மிக உயரத்தில் இருந்து காணும் வ்யூ பாயின்ட் உள்ளது. சுற்றிலும் மலையும், அடர்த்தியான காடும், மலை உச்சியும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றது. நம் கண்களுக்கு மட்டுமல்ல விருந்து, மூன்றாவது விழியான புகைப்படக் கருவியின் கண்களுக்கும்தான்.

பேருந்தில்/ரயிலில் பயணம் என்றால், பாலக்காடு அல்லது ஷோர்னூரிலிருந்து நிலம்பூர் சென்ற பிறகு, ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சிக்கு நிலம்பூரிலிருந்து நாம் பயண ஏற்பாட்டாளர் (ட்ராவல்ஸ்) வண்டி ஏற்பாடு செய்து கொண்டு பயணம் செய்வதே நல்லது. நிலம்பூரிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இடது புறம், வெளியந்தோடு எனும் இடத்தில், நிலம்பூர்-ஆட்டியன்பாற சாலையில் திரும்ப வேண்டும்.

அந்தச் சாலையில் மயிலாடி, அகம்பாடம் எனும் இடங்களைக் கடக்கும் போது ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழிக்கான அம்புக்குறியும், தூரமும் குறிப்பிடப்பட்டுத் தகவல் பலகை உள்ளதால் வழி அறிவதில் சிரமம் இல்லை. அங்கிருக்கும் மக்களிடம் கேட்டாலும் வழி சொல்லுகின்றனர். நிலம்பூரிலிருந்து பயண நேரம் 30-40 நிமிடங்கள்.

பாலக்காட்டிலிருந்து நிலம்பூர் செல்ல 3 மணி நேரம். பாலக்காட்டிலிருந்துக் கோழிக்கோடு செல்லும் பேருந்தில் ஏறினால் 2 மணி நேரப்பயணத்தில் பெரிந்தல்மன்னா எனும் ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து நிலம்பூர் செல்வதற்குப் பல பேருந்துகள் இருக்கின்றன. 1 மணி நேரப்பயணம்.

பாலக்காடு,  ஷோர்னூரிலிருந்துப் புறப்படும் ரயில் விவரங்கள் :
Dep ↑↑
16349
Thiruvannathapuram -...
Exp
SR
SRR
05:45
NIL*
07:20
56611
Palakkad - Nilambur ...
Pass
SR
SRR
07:05
NIL*
08:40
56613
Shoranur - Nilambur ...
Pass
SR
SRR*
09:20
NIL*
10:55
56362
Ernakulam - Nilambur...
Pass
SR
SRR
11:25
NIL*
13:00
56617
Shoranur - Nilambur ...
Pass
SR
SRR*
15:05
NIL*
16:40
56619
Shoranur - Nilambur ...
Pass
SR
SRR*
17:10
-
NIL*
18:45
56621
Shoranur Nilambur Ro...
Pass
SR
SRR*
19:30
-
NIL*
21:10


நிலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து நிலம்பூர் டவுண் (Town) 3 கிமீ தூரத்தில் உள்ளது.  நிலம்பூர் டவுணிலேயே நிறைய நல்ல உணவகங்களும், விடுதிகளும், பயண ஏற்பாட்டாளர் (ட்ராவல்ஸ்) வசதிகளும் உள்ளது.. இணையம் வழியாகத் தங்கும் இடமும், ட்ராவல்சும் பதிவு செய்ய முடியும்.


 (KTDC) “டாமரின்ட்” (Tamarindஉணவகம் மற்றும் தங்கும் விடுதி

கேரளா சுற்றுலாத்துறை வளர்ச்சி கார்ப்பரேஷனின் (KTDC) “டாமரின்ட்” (Tamarind) உணவகம் மற்றும் தங்கும் விடுதி, நிலம்பூர் – கூடலூர் செல்லும் சாலையில், நிலம்பூரிலிருந்து 4 கிமீ தூரத்தில் சாலையின் வலது புறத்தில், கரிம்புழா ஆற்றின் கரையில் உள்ளது.

சென்று வருவதும் எளிது என்பதால் மிக மிக அருமையான ஒரு சுற்றுலாத்தலம் என்றால் மிகையல்ல.


------ கீதா

(படங்கள் அதிகமாகக் கொடுத்திருப்பதன் காரணம்,  பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் படங்களைப் பார்த்து மகிழலாம் என்றும்,   மேற்கொள்ள முடிந்தவர்கள் புகைப்படங்களைப் பார்த்துப் பார்க்க ஆர்வம் ஏற்படுமே என்பதற்காகவும்  கொடுத்திருக்கிறேன்.  அடுத்த முறை டிடி அவர்களின் பாடமான ஸ்லைட் ஷோ முயற்சி செய்ய வேண்டும்.இப்போது நேரம் பற்றாக் குறை!

இப்போதுதான்  நண்பர்களின், சகோதரிகளின் தளங்களுக்கு ஒவ்வொன்றாக வருகை தருகிறோம். வாசிக்கின்றோம். நிறைய இருப்பதால்..  கொஞ்சம் தாமதமாகலாம்.)

42 கருத்துகள்:

  1. ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சி அழகு.
    படங்கள் எல்லாம் அருமை.
    விவரங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அக்கா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  2. ரொம்ப நல்லா இருக்கு.. பாறைகளைப் பார்க்கும்போது, மழைக்காலத்தின் தண்ணீர் வரத்தையும், அருவியின் பிரம்மாண்டத்தையும் கற்பனை செய்ய முடிகிறது. 'மஞ்சு தவழும்' - நல்ல, மறந்த தமிழ் வார்த்தை. சாப்பாடு நிலம்பூர் டவுணிலேயே கிடைக்கிறதா?

    ஜூன் மாதப் பிரயாணம் நவம்பரில் (கிட்டத்தட்ட டிசம்பரில்) வந்திருக்கிறது. இப்போது இன்னும் அருமையாக இருக்கும், நிறையத் தண்ணீர் வரத்து இருக்குமென்பதால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன். நிலம்பூர் டவுணிலேயே உணவகங்கள் இருக்கின்றன. நல்ல பேக்கரிகள் இருக்கின்றன. இந்த அருவியுடன், தேக்குமர ம்யூசியம், வனத்தில் நடை, மற்றுமொரு அருவி என்று ஒரு சில இடங்களைத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டால் 3, 4 நாட்களுக்கு சுற்றுலா சென்று வரலாம். இங்கிருந்து ஊட்டியும் 3 மணி நேரப்பயணம்தான். கூடலூர் வழியாக. பல இடங்கள் இருக்கின்றன இதனைச் சுற்றி.
      ஜூன் மாதப் பயணம் நம் சகோ செந்தில் அவர்களின் பயண இதழிற்காக அனுப்பப்பட்டதால் இங்கு வெளியிட தாமதம். இப்போது அவரது அனுமதியுடன் இங்கு வெளியிட்டேன்.

      தண்ணீர் நிறைய வரும் போது பார்க்க அழகாக இருக்கும் ஆனால் குளிக்க முடியாது. ஜூன் மாதத் தொடக்கத்தில் நன்றாக பயமில்லாமல் விளையாடி, குளித்து மகிழலாம். தண்ணீர் நிறைய இருந்தால் கம்பித் தடுப்பிற்கு இப்புறம்தான் இருந்து பார்க்க முடியும்.

      நீக்கு
  3. அருமையான இயற்கை பயணம். மனத்தைக் கொள்ளைகொள்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ! அங்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன. தங்கள் தளத்திற்கு தேக்கு மர ம்யூசியம் சென்ற குறிப்புகள் எங்கள் தளத்தில் ஏற்கனவே வெளியிட்டதை அனுப்புகின்றேன் சகோ. மற்றும் இன்னும் வட்ல முடிப்பயணம் பற்றியவையும் தருகின்றேன். இப்போது சமீபத்தில் சென்று வந்த கோயில் பயணங்கள் குறித்தும் எழுதித் தருகின்றேன்.

      நீக்கு
  4. தேவையான சகல information களையும் தந்துள்ளீர்கள் . நன்றி .
    எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களையும் தந்துள்ளீர்கள் நன்றி.
    அப்படியே கூட்டிக்கொண்டும்போனீர்களென்றால் டபிள் நன்றி கீதா மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக அழைத்துச் செல்கிறேன் உமா. மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஓகோ ஓகோ தான் டிடி அருமையான இடம்!. மிக்க நன்றி டிடி கருத்திற்கு

      நீக்கு
  6. அருமையாக இடமாகத் தெரிகிறது. முடிந்தால் செல்ல வேண்டும். கேரளத்தின் இன்னும் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் எனும் எண்ணம் உண்டு. பார்க்கலாம் எப்போது முடிகிறது என!

    படங்களோடு சிறப்பாக பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் ஜி திட்டமிடுங்கள். ரோஷினியின் விடுமுறையின் போது திட்டமிட்டால், துளசியின் வீட்டின் அருகில்தான் இந்த இடம். எனவே அங்கும் சென்று வரலாம். இந்த அருவி மட்டுமல்ல தேக்கு ம்யூசியம், வள்ளம்தோடு அருவி, தொங்குபாலம் என்று நிறைய இருக்கின்றன ஜி! செல்லும் வழியே அழகுதான்...

      மிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  7. அழகான ஒரு நீர் வீழ்ச்சியைக் கண்டு வந்த சந்தோஷத்தைக் கொடுத்தது பகிர்வும் படங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  8. ஆகா . அழகோ அழகு.
    ஆர்வம் அதிகரிக்கிறது. கேரளா இயற்கை அன்னையின் கொடை .
    நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சிவகுமாரன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்! அங்கு சென்றால் ஒரு வேளை நீங்கள் அங்கு அமர்ந்து கவிபாடத் தொடங்கிவிடுவீர்கள் வியப்பல்ல!!!

      நீக்கு
  9. படங்கள் எல்லாம் மிக துல்லியமாக, அழகாக இருக்கின்றன. இந்த மாதிரி நீர்வீழ்ச்சிகளைக் காணச் செல்லும்போது ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கும். அதோடு கரடு முரடான பாறைகளில் ஏறி இறங்க வேண்டியிருக்கும். உதாரணம் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. ஆனால் நீங்கள் எழுதியிருப்பதையும் புகைப்படங்களையும் பார்க்கும்போது அந்த மாதிரி கஷ்டப்படத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மனோ அக்கா, ஆமாம் அகஸ்தியர் மட்டுமில்லை குற்றாலத்தின் மேலெ இருக்கும் செண்ப்கா நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சி, தொம்மங்குத்து(தொடுபுழாவில் இருப்பது) கோவைக்குற்றாலம் என்று பல உள்ளனதான் நீங்கள் சொல்லுவது போன்று. ஆம் இது கடினமாக இல்லை.

      மிக்க நன்றி மனோ அக்கா கருத்திற்கு

      நீக்கு
  10. அழகு பூமியின் அழகான சுற்றுலாத்தகவலுக்கு நன்றிகள். என்றாவது ஒரு நாள் போவேன் என்ற நம்பிக்கை என்றும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனிமரம்....கண்டிப்பாக நீங்கள் சென்று வருவீர்கள். மிக்க நன்றி தனிமரம்

      நீக்கு
  11. அழகிய படங்கள். அருமையான இடம் என்று தெரிகிறது. படங்கள் வாயிலாகவே பார்த்து ரசித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு எங்கே செல்ல முடியப் போகிறது! இயற்கை எழில் கொஞ்சுகியது. பசுமை கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இன்னும் செல்ல முடியாதவர்களும் பார்த்து ரசிக்கத்தான் படங்கள் அதிகமாகக் கொடுத்திருக்கிறேன் ஸ்ரீராம்.

      நீங்கள் திட்டமிடுங்கள் அங்கு துளசி இருப்பதால் தங்குவதற்கு எல்லாம் பிரச்சனை இல்லை..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  12. கண்களுக்கு அற்புதமாய் ஓர் விருந்து படைத்துவிட்டீர்கள்
    படங்கள்அழகோ அழகு
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  13. மண் களிக்கும் பச்சை. வண்ணம்.. அழகு.. அழகு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  14. ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சி..கொள்ளை அழகு....

    அனைத்து படங்களும் அருமை...அதிலும் வ்யூ பாயின்ட்ல் எடுத்த படம் சூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு ரொம்ப நாளாச்சு! முடிந்தால் உங்கள் குழந்தைகளுடன் ட்ரிப் அடிங்க....மிக்க நன்றி அனு

      நீக்கு
  15. அருமையான இடம். அழகான படங்கள். பார்க்க ஆவல் வந்துவிட்டது. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  16. மிகவும் குளிர்ச்சியான பதிவு! I mean "cool"! :-)

    வழக்கமாக உங்கள் எழுத்தில் காணப்படும் சொற்றொடர் பிழைகள் இந்தக் கட்டுரையில் இல்லை. மேலும், வர்ணனைகள் மிகவும் அழகு! குறிப்பாக, "கார் மேகங்கள் சூழ்ந்து இதோ மழையைக் கொட்டிவிடுவேன் என்று கண் சிமிட்டிக் கொட்டும் மழை அல்லது தூறிக் கொண்டே இருக்கும் மழைச் சாரல்" அருமை! "மஞ்சு தவழும் மலைமுகடு" - ம்! ம்! கவிஞராகி வருகிறீர்கள் சகோ!

    படங்களும் மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள்! ஆனால், இத்தனை பேர் போயிருக்கிறீர்கள், நீங்கள் யாரும் அங்கே நின்று படங்கள் எடுத்துக் கொள்ளவில்லையா? அல்லது, அவற்றை நாங்கள் பார்க்கக்கூடாதா? போகட்டும், அந்த நீள இருக்கையில் மட்டுமாவது யாரையாவது உட்கார்த்திப் படம் பிடித்திருக்கக்கூடாதா? ஏதோ பேய்ப் படத்தில் வரும் இருக்கை போல மிரட்டலாக இருக்கிறது! :-P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நக்கீரன் வாயிலிருந்து வந்த முதல் கருத்து!! மிக்க நன்றி! நான் நிறுத்தி நிதானமாக எழுதியதால் இருக்கலாம். மட்டுமல்ல கொஞ்சம் எனது பழைய நினைவுகள் எட்டிப்பார்க்கத் தொடங்கி உள்ளது. அப்போதிருந்த தமிழ் மொழி! கல்லூரிக்காலம் வரை கவிதைகள் எழுதி பரிசும் பெற்ற அனுபவம் எல்லாம் உண்டு சகோ.

      சகோ முதலில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன். நானும் எனது மகனும் சென்றால் அல்லது நான் தனியாகச் சென்றால் நாங்கள் 99.9% இயற்கையை மட்டுமே படம் பிடிப்போம். எங்களை எடுத்துக் கொள்வதில்லை. எங்களுடன் வருபவர்கள் விரும்பினால் எடுப்பதுண்டு. பொதுவாக வித்தியாசமான மனிதர்கள் என்றால் எடுப்பதுண்டு..குழந்தைகள் இப்படி..அல்லாமல் இயற்கை, விலங்குகள் வித்தியாசமான இடங்கள் என்றுதான் இருக்கும். அதனால் இந்தப் பயணத்தில் எங்களில் சிலரை எடுத்த படங்களை இங்கு கொடுக்கவில்லை. சரி இனி அப்படி எடுத்தால் பகிர்கின்றேன் சரியா....

      அட அந்த நீள இருக்கை பேய்ப்படத்தை நினைவூட்டியதா!!! ஹஹஹ்ஹ்

      மிக்க நன்றி இபுஞா சகோ!

      நீக்கு
    2. நக்கீரனா! நானா! சூரியனைச் சுவர்க்கோழியோடு ஒப்பிடுகிறீர்களே! நியாயமா? :-)

      நீக்கு
  17. ஜூன் மாதத்தில் மேற்கொண்ட பயணத்தை இயற்கையின் அழகுகளோடு நிறைவாக விவரித்திருப்பது பாராட்டுக்குரியது/ நீலாம்பூர் என்றதும் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் பற்றியோ எனும் சந்தேகம் இருந்தது படங்கள் இயற்கை அழகைக் காட்டும் முயற்சியில் வெல்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவோயிஸ்டுகள் பற்றிய கட்டுரை துளசி எழுதி இதோ வெளிவந்துவிட்டது சார்.

      மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  18. சகோ துளசி & கீதா,

    பசுமை கொஞ்சம் இயற்கை சூழல், அழகு.

    நீங்க எவ்ளோ புகைப்படம் வேண்டுமானாலும் போடுங்கோ, ரசிக்கிறோம்(றேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சித்ரா ....கொடுத்துட்டா போச்சு இன்னும் இருக்கு நிறைய படங்கள் மூன்றாவது விழி க்கு வைச்சிருக்கேன்...

      நீக்கு
  19. எழில் கொஞ்சும் படங்கள் ஐயா.கண்ணுக்கு குளுமையும் மனத்திறக்கு இனிமையும் படிப்பதற்கு சுவையாகவும் அமைந்தது.இவ்வூரைப் போல அனைத்து ஊர்களிலும் இதுப் போன்று இயற்கை வளங்கள் செழுமையாக இருந்தால் சுற்றுலாவுக்காக நாம் ஏன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் அங்கு வசிபவர்களே இங்கு வருவார்கள் அல்லவா.

    வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதை சரியாக பின்பற்றும் மாநிலம் கேரளா தான் ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைசாலி தங்களின் கருத்திற்கு. இயற்கையைப் பேணுவதில் கேரளத்தவர் வல்லவரே! உங்கள் கருத்தை வரவேற்கிறேன் வைசாலி! நல்ல கருத்து.

      மிக்க நன்றி

      நீக்கு
  20. தாங்கள் இட்ட படங்கள்
    இயற்கையின் சாட்சிகள்
    அவை
    இயற்கைக் காட்சிகள்!
    இயற்கை இரசிக்க
    எமது வாழ்நாள் காலம் போதாதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவலிங்கம் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். இயற்கை எப்போதுமே ஆனந்தம்தானே!!

      நீக்கு
  21. அருமையான வர்ணனைகளோடு அழகான பயணக்கட்டுரைக்கு நன்றிமா.பதிவை படிக்க முன் படங்களை பார்த்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு