பதிவர் சகோதரி
ஏஞ்சலின், எங்கள், பிரிவு
தரும் வேதனை...பிரிந்து போகா வேதனை...பிறர் அறியா வேதனை இடுகைக்குத் தந்த பின்னூட்டத்தில்,
உடல் ஊனம் ஒரு பிரச்சினையே அல்ல என்பதை உலகிற்குத் தன் எழுத்து மற்றும் பேச்சாற்றலால்
உணர்த்திக் கொண்டிருக்கும் நிக் எனும் நிக்கோலாஸ் ஜேம்ஸ் வூஜிசிக்கைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
காணொளி-கூகுள்
பாலா இயக்கிய “நான் கடவுள்”
எனும் படத்தில், உடல் ஊனமுற்றவர்களை பிச்சைக்காரர்களாக்கி பணம் சம்பாதிக்கும் கும்பலின்
இம்சையைத் தாங்க முடியாமல், கைகளும், கால்களும் இல்லாத எப்போதாவது மட்டும் பேசும் ஒரு
மனிதரிடம் சிலர் சென்று முறையிடும் ஒரு காட்சி வருகின்றது. கை, கால்கள் இல்லாத இடுப்புக்கு மேலே உள்ள உடல்
பாகம் மட்டும் உள்ள ஒருவரை ஆடை அணிவித்து, தலையில் முண்டாசுக் கட்டியபின் ஒருவர் ஒரு
ஷெட்டில் கொண்டுவந்து வைப்பார். அதிசயப் பிறவியானதால், அவரை எல்லோரும் சாமியாகக் கருதி,
காணிக்கையிட்டுத் தங்கள் குறைகளைச் சொல்லும்
காட்சிகளும் அப்படத்தில் உண்டு. அது போன்ற உருவமைப்புள்ள மனிதர்தான் நிக்கோலா ஜேம்ஸ் வூஜிசிக்
என்பவர்.
1982 டிசம்பர் 4 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மருத்துவமனையில்
கை கால்கள் இல்லாத உடலுடன் பிறந்த அவரைக் கண்ட அவரது பெற்றோர்களான பாஸ்டர் போரிஸ் வூஜிசிக்கும்,
நர்ஸான லுஸ்காவும் செய்வதறியாது திகைத்தனர். கை,கால்கள் இல்லாத அவர்களது குழந்தைக்கு
கையும், காலுமாக அவர்கள் மாறி அவனை வளர்க்க முடிவு செய்தனர். தெற்றா அமீலியா எனும் ஜெனிட்டிக் குறைபாடு, உலகில்
மிகவும் அரிதாக மிகச் சிலருக்கு மட்டும் வருகின்ற ஒன்று. அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் மட்டும்தான் இப்படிக்
கை மற்றும் கால்கள் இன்றிப் பிறக்குமாம். அப்படிப் பிறக்கும் குழந்தைகள் அதிக நாட்கள்
உயிர் வாழ்வதில்லையாம். ஆனால், நிக்கின் பெற்றோர்களது
அன்பும், பாசமும் நிக்கை ஆரோக்கியத்துடன் வளரச் செய்தது. பள்ளிப் பருவத்தில் ஔ முறை
தன் தந்தையிடம் ஒரு ஜோடி ஷூ வாங்கிவரச் செய்து இரவெல்லாம் மனமுருகிப் பிரார்த்தனை செய்த
நிக், ஹேசு தனக்குக் கை கால்களை வளரச் செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து,
இறைவனை வெறுக்க ஆரம்பித்தாராம். இடையில் ஒரு
முறை தற்கொலை செய்ய முடிவெடுத்துக் குளிக்கும் தொட்டியில் விழுந்தும் இருக்கிறார். ஆனால், தன் மரணத்திற்குப் பின் தனக்காகக் கண்ணீர்
சிந்தப் போகும் தன் பெற்றோர்களை நினைத்துத் தற்கொலை முயற்சியிலிருந்து பின்வாங்கியிருக்கின்றார்.
அதை அறிந்த நிக்கின் தாய், அன்று செய்தித் தாளில் வந்திருந்த, உடல் ஊனமுற்ற ஒருவர்
தன்னம்பிக்கையுடன் வாழும் செய்தியை வாசித்துச் சொல்லி அவரதுப்படத்தையும் காண்பித்திருக்கின்றார். அன் நிகழ்ச்சி நிக்கிற்கு வாழ வேண்டும் என்ற மன
உறுதியைக் கொடுத்ததாம்.
பள்ளியில்
நல்ல பேச்சாளராகத் திகழ்ந்த அவர், கல்லூரியில் வணிகவியலில் பட்டமும் பெற்றார். அவருக்கே
உரித்தான விதத்தில், நீச்சல் மற்றும் சர்ஃபிங்கில் தேர்ச்ஹ்கி பெற்று,2005 ஆம் ஆண்டு
“யங்க் ஆஸ்திரேலியம் ஆஃப் தெ இயர்” ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டும்
இருக்கிறார். இப்போது நிக், தன் மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியுடன் அமெரிக்கா கலிஃபோர்னியாவில்
வாழ்ந்து வருகின்றார். லாஸ்ட் ஷிப், பட்டர்ஃப்ளை
சர்க்கஸ் எனும் திரைப்படங்களை உருவாக்கி அதில் நடித்திருக்கிறார் நிக். அன்ஸ்டாப்பபிள்,
லைஃப் வித்தவுட் லைம்ப்ஸ், ஸ்டாண்ட் ஸ்ட்ராங்க் எனும் புத்தகங்களையும், நிக் எழுதியிருக்கிறார்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தன் நம்பிக்கையின் அவசியம் பற்றி உரையாற்றியும், உலகெங்கும்
ஏசு தேவனின் அன்பையும், கருணையயும் பற்றி பிரச்சாரங்கள் நடத்தி, உடல் ஊனம், மனதை ஊனப்படுத்த
விடாமல் தடுத்து எப்படி வாழ்வை இன்பமயமாக்கலாம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.
2007ல்
நிக்கைப் போல் ஒரு குழந்தை கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் டெட்ரா அமிலியா எனும் ஜெனிட்டிக்
குறைபாடுடன் பிறந்தது. அக்குழந்தையின் பெற்றோர்கள்,
தங்களது வறுமை மற்றும் அக்குழந்தையை வளர்க்க இயல்லாமை காரணமாகவோ என்னவோ, அக்குழந்தையை
ஒரு அனாதை விடுதியில் விட்டிருக்கிறார்கள்.
குழந்தை மருத்துவரான சிஸ்டர் டாக்டர் மேரி லிட்டி அக்குழந்தையின் தாயாக மாறி,
அக்குழந்தையை பத்தனம்திட்டை குன்னம்தானம் தெய்வபரிபாலன பவனுக்குக் கொண்டு சென்று, அங்கு
வளரும் நூற்றுக் கணக்கான அனாதைக் குழந்தைகளுடன், அக் குழந்தைக்கு அபிஷேக் என்று பெயரிட்டு,அவனை
அங்கு வளரச் செய்திருக்கிறார். அபிஷேக்கிற்கு
11/2 வயதான போது அவனை வேலூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, 6 மாத காலம் பிசியோதெரப்பி
செய்து அவனை ஒரு “நிக்காக” மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 7 வயதான அபிஷேக், இப்போது தன் கால் விரல்களின்
இடையே பேனா மற்றும் பென்சிலைப் பிடித்து விரைவாகவும் தெளிவாகவும் எழுத முடிகிறது. இயந்திர நாற்காலியில் அமர்ந்து அதைச் சுலபமாக இயக்கி
ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு அபிஷெக்கால் போகவும் முடிகின்றது. நிக்கின் வீடியோக்களைப் பார்க்கும் அபிஷேக், தானும்
வளர்ந்து பெரியவனாகி ஒரு “நிக்” ஆவேன் எனும் போது மதர் மேரி லிட்டிக்கும், அந்த அனாதை
இல்லத்திலிருக்கும் கன்னியா ஸ்த்ரீகள் மற்றும் குழந்தைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை,
இதை எழுதும் நான் மட்டும் அல்ல, வாசிக்கும் நீங்களும் உணர்கின்றீர்கள் இல்லையா? – “அன்பிற்கும்
உண்டோ அடைக்கும் தாழ்?”
மதம்
மற்றும் இறைவனின் பெயரால் வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்துக் கொண்டு ஒரு பாவமும்
அறியாக் குழந்தைகள் என்றும் பாராமல், அவர்களைக் கொன்று குவிக்கும் கல்நெஞ்சக்காரர்களின்
நடுவே, மதர் மேரி லிட்டி போன்றவர்களைப் பற்றிக் கேட்கும் போது, பாலைவன பயணத்தின் போது
எப்போதாவது தென்படும் பாலைவனச் சோலைக்குச் சென்று இளைப்பாகும் சுகம் மனதிற்கு ஏற்படுகின்றது.
நிக்கிற்கும், அபிஷேக்கிற்கும், மதர் மேரி லிட்டிக்கும் ஆயுளும், ஆரோக்கியமும் கூடவே
எல்லாம் நன்மைகளும் நிகழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
காணொளிகள் : கூகுள் : நன்றி
பின் குறிப்பு:
பின் குறிப்பு:
விருப்பமுள்ளோர் உங்கள் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு. இதற்கான விவரங்களை மேலும் அறிய சொடுக்குங்கள் இந்தச் சுட்டியை...
வாழ்த்துக்கள்!