சனி, 23 நவம்பர், 2013

இரண்டாம் உலகம் - ஒரு பார்வை




‘அவதாரின் பாதிப்பால் (INFLUENCE) எடுக்கப்பட்டு,  ஆனால், அவதார் எந்த விதத்திலும் இப்படத்தை பாதிக்கவில்லை என்பதை நிரூபிப்பதில் மட்டும் ஓரளவு வெற்றி கண்ட படம். காதலன், காணாமல் போன தன் காதலியைத் தேடி சென்னையிலிருந்து, மும்பை செல்வது போல், இறந்து போன தன் காதலியைத் தேடி (AT LEAST காதலியைப் போல் உருவமுள்ள ஒர்த்தியைத் தேடி) பூமி போல் மனிதர்களைக் கொண்ட (தமிழ் மொழி!!!! பேசும்) ஒரு கிரஹத்துக்குச் செல்லும் (கொண்டு செல்லப்படும்) கதை.  இரண்டாம் உலகத்தை “இண்டெர்வெல்லுக்குப் பின் தான் காட்டுவேன், என்று அடம் பிடித்து முதல் உலகத்தை ஜவ்வாக இழுத்தது கொஞ்சம் மனிதாபிமானமற்ற (??!!) செயலாகிவிட்டது.








இரண்டாம் உலகில், பூக்கள் விரிய முதல் உலக மது (ஆர்யா) வரும் வரைக் காத்திருந்தது, அது போல் காதல் உணர்வுகளை அறிய இதே மது வரும் வரை (தற்கொலை முயற்சி செய்தும் சாகாமல்!!) இரண்டாம் உலக அனுஷ்கா காத்திருந்தது, இதெல்லாம் கொஞ்சம் உள்வாங்க கடினம் என்றாலும், இரண்டாம் உலகை மிகவும் அருமையாகக் கண் குளிர காட்டியதைப் பாராட்டத்தான் வேண்டும். க்ராஃபிக்ஸ்-GRAPHICS, காஸ்ட்யூம்-COSTUME, ஆர்ட் டைரெக்ஷன்-ART DIRECTION இவை அருமை.  இரண்டாம் உலகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், கதாபாத்திரத் தேர்வு, அவர்களுடைய டயலாக் டெலிவரி இவற்றில் எல்லாம் காண்பித்த கவனத்தையும், ஆர்வத்தையும், ஸ்க்ரீன் ப்ளேயிலும் – SCREEN PLAY – காண்பித்திருந்தால் படத்தில் விழுந்த பல ஓட்டைகளையும், தவிர்த்திருந்திருக்கலாம்.
முதல் உலக அனுஷ்கா, இண்டெர்வெல்லுக்கு முன், ஆர்யாவைக் கட்டிப் பிடிக்கின்ற (ஸிக்னலில் -SIGNAL லில் காத்திருக்கும் வண்டிக்குப் பின்னால் ப்ரேக் – BRAKE  பிடிக்காமல் கார் வந்து இடிப்பது போல்) காட்சியிலிருந்த (உட்கார்ந்திருந்த ரோவே – ROW குலுங்கிருச்சு!!!) இனிமையும், ஆவேசமும்,
இரண்டாம் உலக அனுஷ்கா, இரண்டாம் உலக ஆர்யாவிற்கு, கடைசிக் காட்சியில் கொடுக்கும் முத்தத்தில் இல்லை.  படத்தில், ஆர்யாவின் நடிப்பு, அதற்காக அவர் போட்ட உழைப்பினால் நன்றாக மிளிர்கிறது.  அனுஷ்காவின் நடிப்பும் மிக நன்றாக உள்ளது.


காதல் செய்வதிலும், கட்டிப் பிடிப்பதிலும் கெட்டிக்காரர்கள் முதல் உலகத்தினர்தான் என்பது பிரபஞ்ச சத்தியம் போலத் தெரிகிறது.  அதனால் தான் “அந்தத் தெய்வத்தாய் மதுவை இரண்டாம் உலகத்திற்குக் கொண்டு செல்கிறார் போலும். (காதல் எல்லாம் இல்லாமல், அந்தக் கிரஹத்துல கல்யாணம் முடித்துக் குழந்தைகளும் பெத்துதானிருக்கிறார்கள்).  செல்வராகவன் எடுத்த ரிஸ்கிற்காகவும், நம் படங்களிலும் க்ராஃபிக்ஸின் அட்வான்ஸ்டு டெக்னாலஜி – ADVANCED TECHNOLOGY OF GRAPHICS- உபயோகப் படுத்துவதை ஊக்குவிக்கவும் இப்படத்தைப் பார்க்கலாம்.


 

அதிசயம் ஆனால் உண்மை




ஆல்பெர்ட் ஷ்வெய்ஷரைப் (Albert Schweitzer) பற்றிக் கேள்விபட்டிருபீர்கள். தன் 21 அம் வயதில் தனக்கு மிகவும், மகிழ்சிகரமான வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல, உதவியற்று உழலும் மனிதர்களுக்கு உதவுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்தவர்.  பின்பு ஒரு போதும் வருந்தக் கூடாது என்று ஒன்பது வருடங்கள் தன் மகிழ்சிகரமான வழ்க்கையைத் தொடர்ந்த பின், தன் 30 வது வயதில் ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவர்களின் அவசியத்தை உணர்ந்து 7 ஆண்டு காலம் மருத்துவம் பயின்று, 
தன் மனைவியை செவிலியும் ஆக்கி ஆப்பிரிக்கா சென்று மருத்துவச் சேவை புரிந்த மஹான்.  அது போல் ஒரு மஹான் காசரகோடு (கேரளா ) அருகே உள்ள பதிஅடுக்கா எனும் இடத்தில்.  பெயர்  சாய்ராம் பட் என்று அழைக்கப்படும் 
K.N. கோபாலகிருஷ்ண பட்.



 ஒரு சாரண விவசாயி.  சாதித்ததோ வியக்க வைக்கும் சாதனை. கடந்த மாதம், மற்றவர்களின் உதவி ஏதும் இன்றி, தான் கட்டிய 208 வது வீட்டின் சாவியை வீடில்லாத ஒரு ஏழைக்குக் கொடுத்தார். அன்றைய தினம், காசரகோடு மாவட்டத்திற்கு மட்டுமல்ல, கேரள மாநிலத்துக்கு மட்டுமல்ல, தென்னகத்துக்கே ஒரு பொன்னாள்.  அரசியல்வாதிகளும், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் என்று எல்லாத் துறையிலும் உள்ளவர்கள் அவரைப் பாராட்டிப் பேசவும், எழுதவும் செய்தார்கள்  தனி ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் 208 வீடுகள் வீடில்லாத ஏழைகளுக்குக் கட்டிக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த ஒரு மஹான். இவருடைய இந்தச் சேவை ஏராளமான மனிதர்களுக்கு ஊக்கம் தரும் ஒன்றாக மாறியிருக்கிறது.  பெரும்பான்மையான பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், தங்களுடன் பயிலும் வீடில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடந்து வருகிறது.  சமூக்சேவையில் ஈடுபட்டிருக்கும் ஸ்தாபனங்களும் இது போன்ற சேவையில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன.  அப்படி இந்த தனிமனிதனின் சாதனை எல்லோருக்கும் ஒரு முனுதாரணாமாக மாறியிருக்கிறது.



வெள்ளி, 22 நவம்பர், 2013

மரணத்தின் விளிம்பில்




இந்தப் பதிவு, நம்மூர் ஆஸ்பத்திரிகள், பெயர் பெற்ற பெரிய்ய்ய, -அதுவும் எதற்கு? பணம் கறப்பதில் - அதற்கு உதவியாக இருக்கும் பெரிய Expert மருத்துவர்கள் பற்றியும், மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டு இங்கு ஒரு காலும், அங்கு ஒரு காலுமாக இருக்கும் அதாவது உயிர்த்தெழுந்து ஒரு சில நாட்களாவது உயிர் வாழ்வாரா, இல்லை உடனடியாக இறையூருக்குப் பயணமா? என்று அல்லாடும் நெருங்கிய சொந்தக்காரர் – அவரையும் அவரைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும்தான்.. அதாவது, நம் மக்கள், வலியுடன் மரணத்தின் விளிம்பில் உள்ளவரை எப்படிப் பார்க்கிறார்கள்.


எனது சொந்தகாரர் 60 வயதைக் கடந்த  பெண்.  3 வருடங்களுக்கு முன் Ovarian Cancer –stage 3Cஅதாவது advanced stage ல் இருப்பதாகக் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு கடந்த மாதம் வரை நன்றாக, அவர் தன்னை நல்ல மனவலிமையுடன் வைத்துக் கொண்டு, கைவேலைகள், பல வகுப்புகள் சென்று தான் விரும்பிய கலைகள் கற்றுக்கொண்டு, இந்த மாதிரியான நோய்களுக்கு வேண்டிய மனோதைரியத்துடன், மிகுந்த உற்சாகத்துடன் வளைய வந்து கொண்டிருந்தார். நம் பெண்கள், கண்டிப்பாக அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.  இதில் என்ன வேதனை என்றால் கண்டுபிடிப்பதற்கு முன் 2 ½ வருடங்களாக, அஜீரணக் கோளாரினாலும், அடி வயிறு உப்பியும், வலியுடனும் பல மருத்துவர்களைக் கண்டபின்னும் – இதில் 3 gynecologists  - ஒரு Gastroenterologist  அடக்கம் – எல்லா வகையான  ஸ்கான்களும், X-Ray என்று பல சோதனைகள் செய்தும், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. Ascites  னால் தான் வயிறு உப்பி இருக்கிறது என்று சொல்லப்பட்டது. Reflux problem மும் இருந்தது.  அதற்கு ட்ரீட்மென்ட். Endoscopy test  இப்படிப் பல. ஆனால், உண்மையானக் காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. 50வயதைக் கடந்தாலே இத்தனை அறிகுறிகள் இருக்கும்போது கான்சருக்கான டெஸ்ட் செய்ய்யச் சொல்லி டாக்டர்கள் சொல்லியிருக்க வேண்டாமா? மேலை நாடுகளில் எல்லாம் பெண்கள் 35 வயதுக்கு மேலேயே தவறாது கான்சர் செக்கப் செய்து கொள்கிறார்கள்.  சரி, இந்த வகை கான்ஸர் மற்ற வகைகளைக் கணக்கில் கொள்ளும்போது கண்டுபிடிப்பது சிறிது கஷ்டம் என்று கூறப்பட்டாலும், அவர்கள் ஏன் நோயாளியை ஒரு முழு செக்கப்பிற்கு உட்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. ஏன், differential diagnosis செய்ய(வ)தில்லை? மற்றொரு உறவினர் Radiologist ஆக இருப்பதால் அவர் தான். ‘எதற்கும் இன்னுரு தடவை Ultrasound Scan ஒண்ணு செய்து பார்க்கலாம்‘ என்று சொல்லி அழைத்துப் போக இதோ இன்று மரணத்தின் விளிம்பில். கண்டுபிடிக்கப்பட்டதும், உறவினர்களில் சிலர், “நல்ல குணம் உள்ளவங்களுக்கு எல்லாம் ஏந்தான் இப்படிக் கடவுள் சோதிக்கறாரோ. இல்ல, போன ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சாங்களோ “அவங்க பையன் வேறு ஒரு ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் இல்லியொ அதான் இவங்களுக்கு கான்சர் என்று, அம்மாவாசைக்கும் அப்துல்காதாருக்கும் முடிச்சுப் போட்டனர். வீடு நிறைய ஊரில் உள்ள பல ஸ்லோக புத்தகங்கள், Positive thoughts  புத்தகங்கள், CD க்கள, music files etc etcவந்து குமிந்தன. அவர்கள் தான் மருத்துவர் போல பல பல அறிவுரைகள், அதைப் சாப்பிடு, இதைச் சாப்பிடாதே....இப்படித்தான் என் ஒண்ணுவிட்ட, ரெண்டு விட்ட நாத்தனார், மாமியார், மூணுவிட்ட அக்கா இவர்களுக்கும் இதே மாதிரிதான்....அவங்க 6 மாசத்துல போயெ போயிட்டாங்க என்ற extra information. எப்படிப்பட்ட உறவினர் சமூகம்!!!  இப்படிப் பல பேச்சுக்கள் காற்றில் பரவ, அவர் மனவலிமையுடன், நோயுடன் போராடினார். டாக்டரே கூட “இவங்க 52 வாரங்களுக்கு முன்னாடியே இறந்திருக்கணும். Really, it is God’s grace! அவங்க  52 வாரம் கடந்து வாழ்ந்து வந்தது.!! அவரது மகனும், மருமகளும் அவரை மிக நன்றாக கவனித்துக் கொண்டார்கள். அவர்களுடைய அன்பான கவனிப்பும், அவரது மனவலிமையும், போராடும் குணமும், Positive சிந்தனைகளும் தான் காரணமாக இருக்கும்.


புற்று என்றாலே வளரும் என்பதுதான்  அதுவும் advanced நிலையில் உள்ள ஒன்று, அதன் வேலையை நிறுத்துமா? புற்று பரவுவதை நிறுத்தவில்லை. கடந்த 25 நாட்களாக தளர்ந்த நிலையில். சாப்பிட முடியாமல், சாப்பிட்டாலும் அது முழுவதும் வாந்தி எடுக்கும் நிலை. சென்றவாரம் மிகவும் தளர்ந்த நிலையில்திடீரென மூச்சுத் திணறல். 3 நாட்கள் முன்பு ஆஸ்பத்திரி சேர்க்கை. Critical care Unitl ல் சேர்க்கை.  யாரும் உள்ளே நுழையக் கூட முடியாத நிலை.  அவர்கள் மட்டும்.  அட்மிட் ஆன போது அவர்கள் almost இறந்து விட்டார்கள் என்றுதான் சொன்னார்கள்.  ஏதேதோ செய்ய அவர் கொஞ்சம் தன் நிலைக்கு வந்தார்.  டாக்டரிடம், என்ன காரணம்?  என்ன நடக்கிறது என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. என்ன செய்கிறார்கள் என்பதற்கும் பதில் இல்லை. “48 மணி நேரம் கழித்துத்தான் சொல்லமுடியும் என்ற பதில் ம்ட்டுமே.

“பையனுக்கு சொல்லிட்டீங்களா?  அவன் அமெரிக்கால இருக்கான் இல்லையா? - டாக்டர்

“அவன் அம்மா தளர்ந்து போய்ட்டாங்கனதும் அவன் கிளம்பி வந்துட்டுதான் இருக்கான்.  இன்னிக்கு ராத்திரி 11 மணிக்கு வந்துடுவான்.- கணவர்.

அடுத்த நாளும் அவர் சுய நினைவில் இருந்தாலும் நிலைமை என்னவோ அதே தான்.  ஏதேதோ டெஸ்டுகள். 

lungs சுற்றி காற்று arrest (pneumothorax-collapse of the lungs) ஆகியிருந்ததுனால...ஸோ...tube  போடணும்.....இதயம் வேகமாக அடிக்கிறது.  சாப்பாடு கொடுத்தால் வாந்தி வருவதால்...heart rate குறையாது ஸோ வயிற்றில் ட்யூப் போட்டு சாப்பாடு....என்று பல சொல்லி...முதலில் நுரையீரலுக்கு ட்யூப்.... ஆக்ஸிஜன் மாஸ்க்...இப்படி பல...பல.....
பார்க்கப் போனால், டாக்டரே, இறுதியில் “ஒருவேளை நுரையீரலுக்கு கான்சர் பரவியிருக்கலாம். முதலில் X-Ray. …என்று சொல்ல..ஆனால் அதில் ஒன்றும் தெரியவில்லை.  ஸோ...ultra sound scan, CT scan....

சரி, பரவியே இருக்கட்டும்.  இனி எந்த ட்ரீட்மெண்டும் பயனளிக்கப் போவதில்லை..என்றும் அவர்களே சொல்கிறார்கள். இருந்தாலும் 48 மணி நேரம் பார்ப்போம் என்பதற்கு என்ன அர்த்தம்? அப்படி இல்லை என்றால் நார்மல் ரூமுக்கு மாற்றி ஜஸ்ட் பேசிக் ட்ரீட்மென்ட் கொடுத்து – வலி நிவாரணி, ஆக்சிஜன், ட்ரிப்ஸ் – பார்க்கலாம் என்ற பதில்.  ஏன் டாக்டர்கள் தெளிவாக நோயாளியின் மகனிடமும், கணவரிடமும் உண்மையைச் சொல்லக் கூடாது? “இனி எந்த ட்ரீட்மென்டும் பயனில்லை என்று சொன்னாலும், “இப்பக் கொஞ்சம் stable ஆக இருக்காங்க ஸோ இன்னும் பார்க்கலாம் என்ற பதில். “இப்படிச் செய்வதால் ஒரு நாளைக்கு ரூ.65,000 லுருந்து ரூ.75,000 வரை செலவு. ஏன் டாக்டர்கள் நோயாளியின் மகனிடம் தெள்ளத் தெளிவாகக் கூறி வீட்டிற்கு அனுப்புவதில்லை? இது கிட்டத்தட்ட ‘ரமணா பட்த்தில் வருவது போலத்தானே இருக்கிறது?

என் கேள்வி. இப்படி மரண விளிம்பில் போராடுபவரை வீட்டிற்குக் கொண்டுவந்து, அவர் சுய நினைவில் இருப்பதால் அங்கு என்ன நார்மல் என்று சொல்கிறார்களோ அதையே வீட்டிலும் செய்யும் வசதி-ஒரு நர்ஸின் உதவியுடன் - இப்போதுதான் இருக்கிறதே. இல்லையென்றால் அப்படியே கூட அவரை துன்புறுத்தாமல் விட்டுவிடலாமே.  அவரே “எனக்கு mercy killing கொடுத்துவிடுங்கள் என்று சொல்லும் நிலை. ஏன் நம் மக்களால் செண்டிமென்டை விட்டு விலகி நின்று யதார்த்தமாக நோயாளியின் கோணத்திலிருந்து யோசிக்க முடியவில்லை? அவருக்கு வேண்டியது அமைதியான, அன்பான, ஒரு சூழ்நிலை.  எல்லோரும் அருகில் இருந்து அவருக்குப் பிடித்ததை செய்து மகிழ்வித்து, அவருடனேயே அருகில் அன்பாக இருந்து, இறப்பதற்கான ஒரு தைரியத்தையும், நம்மைச் சுற்றி எல்லாரும் இருக்கிறார்கள் எல்லோரையும் பார்த்துவிட்டோம் என்ற ஒரு மன நிறைவுடன், சந்தோஷமாக இறக்கும் அந்த நொடியை நாம் அவருக்கு கொடுக்கலாமே.  ஏன் நமது மக்கள் இன்னும் அந்த ஒரு மன நிலைக்கு, மனப் பக்குவத்திற்கு வரவில்லை.? 


வியாழன், 21 நவம்பர், 2013

உயிரா? மானமா?



சிந்திக்க வைத்த ஒரு பூதம்!.நம்பள்கி திறந்துவிட்ட பூதம்.  நம்பள்கி சில நாட்களுக்கு முன்பு தன் வலைப்பூவில், ஒரு பாட்டிலில் இருந்து ஒரு பூதத்தைத் திறந்து விட்டது நினைவு இருக்குமே எல்லோருக்கும்? துப்பாக்கி முனையில் நீங்கள். நீங்கள் ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம்.  படு இல்லையேல் சாவு.  Yes or No.  இந்தக் கேள்விக்கு பதில் சொல்பவர்கள், பலவிதமான சிந்தனைகளை மனதினில் ஓடவிட்டாலும் கேள்வி ஒன்றுதான். வாழ்வா? சாவா?  சாகத் தயாராகும் ஒருவர் என்னதான் நியாயங்கள் சொன்னாலும் அவர் தன் உடலை முழுவதுமாக உதறிவிட்டுத்தான் சாகிறார். ஆனால், அதற்காக அவர் சொல்லும் காரணமோ? என் உடலை என் சம்மதத்துடன் தரமாட்டேன் என்பது. கற்பழிக்கப்படும் பெண்களில் பலரும் உயிருக்குப் பயந்த நிலையிலோ, போராடி வலு இழந்த நிலையிலோ, அடியும் உதையும் பட்டு மயங்கிய நிலையிலோதான் ஆணுக்குக் கீழ் படுக்கிறார்கள்.  இங்கு தவறு செய்பவன் ஆண்.  அவனுக்கு இல்லாதக் குற்ற உணர்வு, அவனுக்கு வர வேண்டியக் குற்ற உணர்வு அவசியம் இல்லாமல் பெண்ணுக்கு வர வேண்டுமா?  தன் சம்மதமின்றி, வலுக்கட்டாயமாக தன் வாழ்வில் ஒரு காமப் பிசாசு அதன் உமிழ் நீரைத் துப்பி விட்டது. உடனே அதை வெளியேத் துப்பி, வாயைப் பலமுறைக் கழுவியாகி விட்டது.  என்றாலும் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.  உடலும்தான். ஏதோ குடலைப் புரட்டி வாந்தி வருவது போல். “வேண்டாம்!  அவனுடைய எச்சிலில் ஒரு துளியின் ஒரு சின்ன அளவாவது என் உடலுக்குள் சென்று விட்டது.  இனி இந்த உடல் வேண்டாம்.  இந்த சமூகம் என்னை ஏற்கவும் செய்யாது.  இந்த வாழ்க்கை வேண்டாம். என் அப்பா வேண்டாம். ஏன் அம்மா வேண்டாம். கணவர் வேண்டாம். குழந்தைகள் வேண்டாம்.  இதோ நான் உயிரை விடுகிறேன். இது தான் நடக்கிறது. இதுதான் நடக்க வேண்டும் என பெரும்பான்மையான ஆணகளும் பெண்களும் எதிர்பார்க்கிறார்கள்.
நான் என் இளம் வயதில், உடலுறவை அனுபவ ரீதியில் அறியாது இருந்த கல்லூரி நாட்களில் ஒரு கதை எழுதினேன்.  எங்கள் வலைப்பூவில் இட, தூசி தட்டி எடுத்த சில பழைய கதைகளில் அதுவும் இருந்தது.  வாசித்த நான் அதைக் கிழித்தே போட்டு விட்டேன். கதை சுருக்கம் இதுதான். ஹனிமூன் போகும் கணவனும், மனைவியும். வழியில் கார் பஞ்சராகிறது.  இருள் படரும் நேரம். டயர் மாற்றிக் கொண்டு இருந்த போது வந்த ஒரு ஜீப்பிலிருந்த சிலர் மனைவியைக் கற்பழிக்க முயல, காப்பாற்ற பல வழிகளில் முயன்றும் முடியாத கணவன் வேறு வழி இன்றி, “சுதா மன்னிச்சிரு, என்று மனைவியின் தலையில் ஒரு பெரிய கல்லைப் போட்டுக் கொன்று விடுகிறான். (இச் சிறு துரும்பும் இப்படி பல் குத்த உதவும் என்று நினைக்கவே இல்லை!)  இந்த ஐம்பது வயது வரை நான் கண்டதும், கேட்டதும், வாசித்தவைகளும், புரிந்து கொண்டவைகளும், என்னை, அந்தக் கணவன் சுதாவைக் கொலை செய்ய இப்போது அனுமதிக்க வில்லை. 






சில வருடங்களுக்கு முன்.  காசரகோடு அருகே பேக்கல் கோட்டை( Bekal Fort).   இளம் கணவனும் மனைவியும்.  மாலை நேரம். இருவரும் இருட்டு வரும் வரை கோட்டைக்குள்ளே பல இடங்களையும் சுற்றிப் பார்த்துத் திரும்பும் நேரம். 


திடீரென்று நான்கைந்து இளைஞகள் முன்னால்.  எவ்வளவோ கூச்சல் போட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை.  இருவர், கணவனை அடித்து உதைத்து அவன் கை கால்களைக் கட்டி போட்ட பின் ‘இருவரையும் கொன்று கடலில் எறிந்து விடுவோம் என்று அச்சுறுத்தி அந்தப் பெண்ணைக் கற்பழித்து விட்டார்கள்.  நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலை பாவம் அந்தப் பெண்ணிற்கு.  எனவே இருவரும் தங்களை அன்று இரவு தங்க ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலிலாவது கொண்டு சென்று விடவேண்டும் என முறையிட ‘கல்லுக்குள் கொஞ்சம் ஈரம் இருந்திருக்க வேண்டும். கயவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் காரிலேயே டவுணில் உள்ள லாட்ஜுக்குக் கொண்டு சென்றனர்.  தந்திரமாகக் கயவர்களை அறைக்குக் கூட்டிக் கொண்டு போய் (இரவு மீண்டும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கூட அந்தக் கயவர்களுக்கு இருந்திருக்கலாம்) அவர்களை அறையில் ஆக்கிய பின், வெளிக் கதவைப் பூட்டி அந்தப் பெண் கூச்சல் போட்டு ஆட்களைக் கூட்டினார். போலீஸ் வந்தது.  கையோடு கயவர்கள் பிடிபட்டார்கள்.  நாளிதழ்கள் பாதிக்கப்பட்ட்வர்களின் பெயரை வெளியிடாம்ல் அவர்கள் கண்ணியத்தை வெளிப்படுத்தினார்கள்.  பாதிக்கப்பட்ட அந்த கணவனும் மனைவியும் இன்றும் அந்தப் பயங்கரமான நாளை மறக்க முயற்சி செய்து வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.


அதுபோல் சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த மற்றொரு சம்பவம்.  பகல் 1 மணி.  பரபரப்பான தெருவில் உள்ள ஒரு துணிக் கடை. திடீரென ஷட்டர் இறக்கப் படுகிறது.  கத்தியுடன் 4 பேர் உள்ளே.  வெளியே ஒருவன். யாரையும் உள்ளே விடாமல் இருக்க ஏதாவது காரணம் சொல்வதற்காக.  கடையில் இருந்த பத்து பதினைந்து பேரில், ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்து கடைக்குள்ளேயே மறைவான ஒரு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். கூச்சல் போட்டவர்களை கத்தியால் மிரட்டியும் அடித்தும் மௌனமாக்கினார்கள்.  ஆனால், ஒரு 45 வயதுள்ள தாய், அழுவதை நிறுத்தாமல் அந்தக் கயவனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள். (வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் பேரிடி.) கெஞ்சினாலும் பலனில்லை என்று தெரிந்ததும் “என்னை உபயோகித்துக் கொள் என் குழந்தையை விட்டு விடு என மன்றாட, அந்தக் 'கல்லுக்குள்ளும் கொஞ்சம் ஈரம்' இருந்த்திருக்க வேண்டும்.  அவனது காமப் பேய்க்கு அந்தத் தாய் தீனி போட்டாலும் போதும்னு நினைத்திருப்பான் போலும்.  அந்த சம்பவத்தைப் பற்றி வாசித்த போதும், இப்போதும்  நான் இறைவனிடம் வேண்டுகிறேன், “இறைவா அவர்களுக்கு விபரீத சிந்தனைகள் ஏதும் வராமல், நடந்ததெலாம் ஒரு பெரும் விபத்து என்று எண்ணி வாழச் செய். விவரிக்கப்பட்ட இரு சம்பவங்களிலும், பெண்கள் எடுத்த முடிவு அந்தச் சந்தர்பத்தில் எடுக்கப் படவேண்டிய முடிவுதான். 

வாகன விபத்தில் காயமடையும் போது ஒருவரை எப்படியேனும் காப்பாற்றி அவர் மனதுக்கும் உடலுக்கும் தெம்பேற்றி அவரை மீண்டும் அவரது வாழ்க்கையைத் தொடரச் செய்வது போல்,  இது போன்ற சம்பவங்களையும் ஒரு விபத்தாக நினைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் இந்தத் தவறு செய்யும் கயவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க முடியும்.  இது போன்றத் தவறுகளைச் செய்யும் கயவர்களுக்கு, துணிச்சல் தருவது, அவர்களுக்கு இறையாகும் பெண்கள், ஒன்று, தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையேல் வெளியே சொல்லாமல் நான்கு சுவர்களுக்கு இடையே வாழ்வை வாழ்ந்து தீர்ப்பார்கள் என்ற எண்ணம் தான்.  நம்பள்கியும் தன்னுடைய பதிவின் மூலம் சொல்ல வருவது ஒருவேளை இந்தக் கருத்தாக இருக்கலாம். உயிரா, மானமா என்றக் கட்டம் வரும் போது உயிர்தான் பெரிது என்ற யாதாத்தமான முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது.


புதன், 20 நவம்பர், 2013

அரட்டை அகம் 2



ஹலோ தில்லைஅகத்தானே! எப்படி இருக்கீங்க? என்னாச்சு?  நியூஸ் ஒண்ணும் காணோம்?

ஹலோ! கீதா...நாலடியாரே!  நான் நல்லாத்தான் இருக்கேன்.  நியூஸுக்கு என்ன பஞ்சம்?  நேத்து இங்க கேரளாவுல பந்த்.  நீ படிச்சுருப்ப.  அதான் கஸ்தூரி ரங்கன் குழு, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரைப் பாதுகாப்பது பத்தி கொடுத்திருக்கிற சில பரிந்துரைகளை அமல்படுத்த எடுத்த மத்திய அரசின் முடிவை எதிர்த்துதான் இந்த பந்த்.

அதான் தெரிஞ்ச விஷயமாச்சே!  கேரளாவுல ஒரு நல்ல விஷயம் வந்துடக் கூடாதே.  உடனே அதை எதிர்த்து பந்த்! அதுவும் இடது சாரி உடனே கொடி பிடிச்சுடுவாங்களே! ரொம்பவே பாப்புலர்.

ஆனா இதுல என்னன்னா அந்தக் குழு எடுத்துருக்கற வரைபடத்துல மலைகள்ள உள்ள வயல் பகுதிகளும், தோட்டப் பகுதிகளும் (ரப்பர், மிளகு, காப்பி, தேயிலை) வனபாதுகாப்பு ஏரியாக்குள்ள வந்துடுதாம். அப்ப அங்க வசிக்கற விவசாயிகள், தொழிலாளர்கள் அவர்கள் வாழ்க்கை பாதிக்கபடுமாம் அதான் இந்த ஹர்த்தால். 11 மாவட்டங்களில், 121 பஞ்சாயத்துக்கள் பாதிப்படையுமாம். C.M. உம்மன்சாண்டி, அந்த பரிந்துரையை விவசாயிகள் பாதிக்கப்படாம என்ன செய்யலாம்னு ஆராய நிபுணர் குழு அமைச்சு, அவங்க சொல்லற திருத்தங்களை ஏற்கணும்னு கோரிக்கை வைக்கலாம்னு சொல்லிருக்காராம்.  கோர்ட் இந்த பந்த்னால அரசுக்கு எவ்வளவு பாதிப்புனும், கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை பத்தி ஒரு விழிப்புணர்வை மக்கள் மத்தியில அரசு ஏற்படுத்தணும் அப்படினு சொல்லிருக்காம்.

கேரளாவுல ஹர்த்தால்னா ஜாலிதான் எல்லாருக்கும்.  சின்னப் பசங்க கிரிக்கெட் விளையாட,  இளம் வயது பசங்க கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாட, வேலை செய்யும் பெண்கள் வீட்டுல டி.வி. பார்க்க, ஆண்கள் பாட்டில தூக்கிட்டு, கூட்டம் போட்டு தண்ணி அடிக்க இப்படி பல விஷயம் செய்ய இந்த ஹர்த்தால் உதவியா இருக்குனு சொல்லு....  

.சரி வேற என்ன அங்க விசேஷங்கள்? 

.“Fire In the Blood” அப்படினு ஒரு ஆவணப் பட்த்தை, டைலன் மோஹன் அப்படின்றவரு எடுத்துருக்காரு.  அதுல என்னன்னா, மேற்கத்திய மருந்து கம்பெனிங்களோட லாப வேட்டைய அப்படியே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிருக்காங்களாம்.  அதப் பார்க்கறவங்களுக்கு கண்டிப்பா ஆத்திரமா வருமாம்.  அந்த அளவுக்கு மருந்து கம்பெனிங்க மனுஷ உயிர பொருட்டா நினைக்காம லாபம் ஒண்ணுதான் குறியா இருக்கறதா வெவரமா சொல்லிருக்காங்களாம்பா.  அத முக்கியமான நாடாளுமன்றங்கள்ள போட்டுக் காட்டறாங்களாம். 

அதான் மருத்துவ உலகத்துல நடக்கற அட்டூழியங்கள் எல்லாம் தெரிஞ்சதுதானே!  சரி, அப்படியே நம்ம நாடாளு மன்றத்துலயும் போடுவாங்களாமா?  நம்ம நாட்டுக்கு ரொம்பவேத் தேவை.
ஆங்க் அதுக்கும் முயற்சி செய்றாங்களாம். .ஏதோ அதப் பாத்தாவது திருந்தினா சரிதான்...இன்னுரு interesting news  கேளு...உன் friend  மல்லிகாக்கு கல்யாணமாம். 

யாரு உன் பக்கத்து வீட்டு மல்லிகாவா? 

.அடப்பாவி!! அவளையும் லுக் விட்டுருக்கியா?  அவ இல்ல நான் சொன்னது பாலிவுட் மல்லிகா ஷெராவத், தசாவதாரத்துல கிளு, கிளுப்பு டான்ஸ்..... 37 வயசு, 24 வயசு பையன கல்யாணம் பண்ணிக்கறாங்களாம்.
போற போக்க பாத்தா 80 வயசு பாட்டி, 20 வயசு பையன கல்யாணம் பண்ணிக்குவாங்க போல... மல்லிகாவோட முதல் கல்யாணம் டைவோர்ஸ்தானே?

ஆமாமாம்.....இப்பவும் மல்லிகா தாலி கட்டின மறு நிமிஷம் டைவோர்ஸ் பண்ணாம இருந்தா சரி..... எந்த வயசா இருந்தா என்ன...வேலை ஒழுங்கா நடந்தா சரி...!!!!

ஒரு நியூஸ் படிச்சியா....வயல்ல வேலை செய்யும்போது மின்னல் தாக்கி ஒரு பெண் இறந்துட்டாங்களாம்..ஆனா அவங்களோட வேல செஞ்ச மத்த 8 பேரு உயிர் தப்பிட்டாங்களாம்.  இத போலீஸ் வழக்கு பதிஞ்சு விசாரிச்சிட்டு இருக்காங்களாம்...வினோதமா இருக்கு இல்ல...இத போயி என்ன விசாரணை...

ஒருவேளை “வாம்மா மின்னல் அப்படின்னு மின்னல ஸ்டேஷன் வரசொல்லி விசாரிக்க போறாங்க போல...."ஏன் அந்த அம்மாவை மட்டும் போட்டுத் தள்ளின அதனால, உன்ன இந்திய சட்டத்தின் கீழ் Section 302 ன் படி, கைது செய்யறோம்" அப்படினு...

ஓ! அதான் போலீஸ் மின்னலத் தேடி தீவிர வேட்டை போல....பாவம் போலீஸ் கருகிடாம இருக்கணும்...உள்ள வழக்கெல்லாம் விட்டுட்டு.....எதுக்குதான் வழக்கு போட்டு விசாரணைனு இல்லாம...

மழை நீர் வடிகால்வாய்களில் முறைகேடான வகையில் கழிவு நீர் இணைப்புகள் 1.16 லட்சம் துண்டிப்பு னு நியூஸ்..

ஊழல் நாறுதுனு சொல்லு...ஊரெல்லாம் நாறுதோ?

ஏற்கனவே நாத்தம்தானே.....இதுல என்ன புதுசா?   இதக் கேளு...11-12-13 அதிர்ஷ்ட தினமா...அபூர்வ தினமா...அப்படினு......பைத்தியகாரங்க நிறைய பேரு இருப்பாங்க போல...இந்த தேதிலதான் கல்யாணம் fix பண்ணிருக்காங்களாம் நிறைய பேரு, இந்த நாள்ல தான் பிள்ளை பெத்துகணும்னு சிசேரியனுக்கு அட்வான்ஸ் புக்கிங்காம்....ஸ்டார் ஹோட்டெல்ஸ் எல்லாம் கொண்டாட்டத்துக்கு தாயாராகிட்டு இருக்காங்களாம்....இது ஜஸ்ட் வரிசையா வரதுனால இந்த கொண்டாட்டமாம்......

அத நானும் படிச்சேன்...நமக்கு இதுவும் எல்லா நாளப் போலத்தான்ன.....இதுல வேற இந்த நாள ஜோதிட சாஸ்திரப்படிகூட ஆராஞ்சங்களாம் நம்ம மக்கள்.  என்னத்த சொல்லறது....காச வைச்சுக்கிட்டு என்னத்த செய்யறதுனு தெரில போல....

Technology  வளர வளர...உலகம் போற போக்க பாத்தா நீயும், நானும் பேசறத கூட ஒட்டு கேப்பாங்க போல.....இப்ப பாரு இந்தோனேசிய அதிபரின் சொலைபேசி ஒட்டு கேட்புனு ஆஸ்திரேலியா உளவு பார்த்ததாக நியூஸ்....கொஞ்ச நாள் முன்னாடிதான் அமெரிக்கா இத மாதிரி சில நாடுகள ஒட்டுக் கேட்டு வேவு பார்த்ததா  நியூஸ் வந்துச்சு....அதான் சொன்னேன்..

ஆமாம் நாம ரெண்டு பேரும் அப்படியே VVIP பாரு, ஒட்டு கேக்க....சரி அப்படியாவது நம்ம பேசறத ஒரு ஆளு கேக்கட்டும்.....வாசிக்கதான் மாட்டேன்றாங்க....at least ...ஒட்டுக் கேக்கவாவது செஞ்சுட்டு போட்டும்...

இன்னுரு இன்டெரெஸ்டிங்க் செய்தி. பாண்டிச்சேரில ஜிப்மெர்ல ரெண்டு பெண்களுக்கு பிறந்த குழந்தைகள்ல இரண்டுக்குமே ஒரே அம்மா பெயர் போட்டு சீட்டு கட்டியிருந்தாங்களாம்.  குசழந்தைகள் மாறிடுச்சாம்...இப்ப அதனால, DNA டெஸ்ட் பண்ண சொல்லிருக்காங்க. 

தமிழ் Directors please note this down…. படத்துக்கு அருமையான plot கிடைச்சுருக்குனு சொல்லு.....கிரேசி மோகன கதை எழுத சொன்னா...இத வைச்சு ஒரு ஆளமாறாட்டக் கதையே எழுதிடுவாரு. ஆனா அவருதான் ஏற்கனவே எழுதிருக்காரே....

இப்படி ஒரு மூடநம்பிக்கை பாரு...தேவாங்கு ஒரு அப்பாவி, குரங்கு குடும்பம்..இதச் சமைச்சு சாப்பிட்டா கண் நல்லாத் தெரியுமாம்.....

இந்த மாதிரி மூட நம்பிக்கைகளுக்குத்தான் நம்ம நாடு பெயரெடுத்த நாடாச்சே....இதனாலதான் நாம உருப்படாம போயிட்டுருக்கோம்.

நாம் நேத்திக்குத்தானே “சிவசிதம்பரம்னு ஒரு கதைய நம்ம வலைப்பூல போட்டோம்.  இன்னிக்கு பாரு “உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா அப்படினு ஒரு கட்டுரை, தி இந்து தமிழ் பேப்பர்ல வந்திருக்கு.  அருமையா இருக்கு.......

கூகிள் கூட இந்த மாதிரி குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தறதை,இன்டெர்னெட்டிலிருந்து நீக்கவும், இனி upload  and download செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுத்துருக்காங்களாம்....இதுக்காக வேண்டி 200 பேரு கடந்த 2 மாசமா தீயா வேலை செஞ்சுட்டுருக்காங்களாம்...

ஏதோ நல்லது நடந்தா சரிதான்....இப்பலாம் இந்த இன்டெர்னெட்ல வர ஆபாசமான வீடியோக்களதான் நம்ம நாட்டுல நடக்கற பாலியல் பலாத்காரத்துக்கு மூல காரணமாக இருக்குது......சில சமயம் ஒரு ஆட்டோல ஏற முடியல...ஒரு பெண் தனியா கடைல போயி சாமான் வாங்கமுடில..ஏன்...இளம் ஆசிரியைகள் higher classes ல பாடம் நடத்த முடில...அந்த அளவுக்கு இருக்கு ஆண்களுடைய பார்வைகள்.......ஏதோ ஒரு பாட்டுல வரும்ல ...பார்த்தாலே கர்பம் உண்டாயுரும் னு அந்த மாதிரி....சரி சரி லேட்டாகிப் போச்சுப்பா.......நாளைக்கு continue  பண்னுவோம் நம்ம அரட்டைய....


செவ்வாய், 19 நவம்பர், 2013

சிவ சிதம்பரம்


தேதி : 18.11.2013
நேரம் : 10.30 a.m.
இடம் கன்ணூர் அருகிலுள்ள ஒரு சிறிய டவுண்



     மோஹன், அவன் மனைவி ராதா, தங்கள் 13 வயது நிரம்பிய மகன் சிவசிதம்பரத்துடனும்,  11 வயது மகள் மீனாட்சியுடனும், கண்ணூர் அருகே உள்ள முத்தப்பன் காவு கோயிலில், நெடுநாளாக முடிக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த கடைசிப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு, காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.  வழியில் ஒரு சிறிய டவுணில், பழக் கடையில், பழங்கள் வாங்குவதற்காக காரை நிறுத்தினர். 

கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த போது கடைக்குச் சற்றுத் தள்ளி ஒரு கூட்டம் கூடி கூச்சல் இடுவதைக் கண்டனர்.  போலீஸ் ஜீப் ஒன்று வந்து ஒரு 5 வயதுச் சிறுவனை ஏற்றிச் சென்றதையும் கண்டனர்.  அச் சிறுவனின் உடலில் சில காயங்களும் இருந்தன. காலும் ஊனம்.  இவர்களின் முகத்தில் தோன்றிய கேள்விக்குறிகளைக் குறிப்பால் அறிந்த  பழக்கடைக்காரர்,


“இங்க ஒரு நாடோடிக் கூட்டம், எங்கேயோ வடக்கருந்து வந்து இங்க டென்ட் அடிச்சு, ஏதேதோ தினக் கூலி வேலை செஞ்சுகிடிருக்காங்க.  வேலை மட்டும் செஞ்சா ஏதோ பொழச்சு போட்டும்னு விட்ரலாம்.  ஆனா, திருட்டு வேற. இவங்க கூட்டத்துக்குச் சம்பந்தமே இல்லாத குழந்தைங்க எல்லாம் திடீர், திடீர்னு முளைக்கிறாங்க.  மறு நாள் பாத்தா அந்தக் குழந்தைங்க கையி, காலு ஏதாவது முறிஞ்சிருக்கும்.  உடம்புல காயம் இருக்கும்.  பிள்ளைங்க அழுதுகிட்டே இருப்பாங்க.  இதப் பத்தி போலீஸ்ல கம்ப்ளயின்ட் கொடுத்தோம் முதல்ல கண்டுக்கல. தெருவோர முருகன பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க இல்ல.  நிறைய இந்த மாதிரி குழந்தைங்கள எல்லாம் காப்பாத்தி குழந்தைகள் காப்பகத்துல, இல்லன அவங்க அப்பா, அம்மாவத் தேடிக் கண்டுபிடிச்சு போலீஸ் உதவியோடு ஒப்படைக்கறது இப்படி சுயநலம் பார்க்காம செஞ்சுகிட்டு இருக்காரு. இப்ப இங்க இருக்கற இளைஞர் அமைப்பு அவர கான்டாக்ட் செஞ்சு அவரு இதுல தலையிட்டுதான் போலீஸ நேர கூட்டிட்டே வந்துட்டாங்க.  இப்ப நீங்க பார்த்தீங்கல்ல, அந்தப் பையனக் காப்பாத்தி, கூட்டத்துலருந்து ஆளுங்களை அடிச்சு போலீஸ் கூட்டிட்டுப் போறத...அந்தப் பையனுக்கும், இந்தா இங்க உக்காந்துருக்குதே வெத்தலய குதப்பிகிட்டு அந்த பொம்பளைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கறா மாதிரி இருக்கா பாருங்க... இப்படித்தன் இந்தக் கூட்டம் பிள்ளைங்கள எல்லாம் கடத்திக்கிட்டு வந்து தங்க கூட்டத்தோட கூட்டிட்டு போயி பிச்சை எடுக்க வைக்கறது.....நல்ல காலம் இந்தப் பையன் தப்பிச்சுட்டான் என்று அங்கு நடந்த கதையை சொல்லி முடித்தார்.

இந்தக் கதையைக் கேட்டதும், குழந்தைகள் இருவரும் ராதாவை இறுகக் கட்டிக் கொண்டனர். அவர்கள் காருக்குத் திரும்பியதும், சிவசிதம்பரம் ஜன்னல் கண்ணாடி வழியே அந்தக் கூட்டத்தையே ஒருவித பயத்தோடு பார்த்துக் கொண்டே, தன் அம்மாவிடம், “இப்படில்லாம் கூட பிள்ளைங்களைத் திருடுவாங்களாம்மா?  பாவம் இல்ல அந்தப் பையன்? அவன் அப்பா, அம்மா அவனத் தேட மாட்டாங்களாம்மா? என்று கேட்கவும், மோஹனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சிவசிதம்பரத்தை அணைத்து, உச்சி முகர்ந்து முத்தமிட்டு, 11 வருடங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தனர்.  அதுவும் இதே தேதிதானே...

தேதி: 18.10.2002    நேரம் : 7.30 a.m.
இடம்:  பாலக்காடு அருகே உள்ள கொடுவாயூர்

     மோஹன் கொடுவாயூர் தட்சிணாமூர்த்தி கோவிலின் கொடிமரத்திற்கு அருகே நின்று இறைவனிடம் மௌனமாக வேண்டிக் கொண்டிருந்தான்.  வேண்டுதல் பட்டியல் மிகவும் நீண்ட ஒன்றுதான்.  அதில் அவனது transfer முதல், அவனுக்கு அடுத்து ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பது வரையுண்டு.  அவனது மகன் சிவசிதம்பரத்தின் தேக சுகத்திற்கும், ஆடோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் வேண்டி பிரார்த்தித்தபோது திடீரென கூப்பிய கைகளில் சூடான டீ ஊற்றப்பட்டது போல் உணர்ந்து கைகளை உதறியபின் பார்த்த போதுதான் புரிந்தது, காக்கை இட்ட எச்சம் அது என்று.  சுற்றிப் பார்த்த மோஹன் கொஞ்சம் தொலைவில் தரையில் கிடந்த பழைய பேப்பரை எடுத்துக் கைகளைத் துடைத்தான்.  கோவிலுக்கு வெளியே சென்று பஞ்சாயத்துக் குழாயில் கை கழுவிய போது “குழந்தைக்காக வேண்டும் போதுதானே கையில் எச்சம் விழுந்தது. ஒருவேளை அவனுக்கு ஏதேனும் பிரச்சனை வருமோ என எண்ணிய மோஹன் உடனே தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். ‘சே! அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது.  எல்லாம் “அவன் பாத்துக்குவான்.   பின் கொடிமரத்திற்கு அருகே சென்று கண்களில் கண்ணீர் கசிய வேண்டிக் கொண்டான்,

‘இறைவா! என் சிகம்பரத்திற்கு எந்த வித ஆபத்தும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கோயிலைவிட்டு வெளியே வந்த மோஹன் P.H.C (Primary Public Health Centre) நோக்கி நடந்த போது, ஹார்ன் அடித்தபடி ஒரு ஸ்கூட்டர் அருகே வர திரும்பினான்.  ஹெல்த் இன்ஸ்பெக்டர் (Health Inspector) ஜோஸ்தான் அது.
“குட் மார்னிங்க் ஸார்என்றான்.  உடனே ஜோஸ், “மோஹன், அந்த ரங்கசாமி வேலைக்குப் போவதற்கு முன் எப்படியாவது பேசி அந்த ஆளோட கையெழுத்து வாங்கணும். வா போவோம் என்றார். மோஹன் பின்னால் ஏறி அமர்ந்தவுடன், ஸ்கூட்டர் வேகமாகப் பாய்ந்தது ரங்கசாமியின் குடிலை நோக்கி.

நேரம் : 7.30 a.m.   
இடம் : பாலக்காடு-கோழிக்கோடு ரோட்டிலுள்ள பெருந்தில்மன்னயில் “அல்-ஷிஃபா மருத்துவமனை


     ராதா தன் இரண்டு வயதான சிவசிதம்பரம் மற்றும் துணைக்கு வந்த ஆயிஷா உம்மாவுடன், ஸ்கானிங்க் ரூமுக்கு வெளியில் இடப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்.  மனமெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்தவித பிரச்சனையும் இருக்கக் கூடாது என்ற வேண்டுதல்தான்.  டாக்டரிடம் பெண்குழந்தை தானா என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். கதவைத் திறந்தபடி வெளியே வந்த நர்ஸ், கையிலிருந்த பேப்பரைப் பார்த்து “அடுத்து ராதா என்றாள்.  “தண்ணீ நிறைய குடிச்சீங்களா?  என்றதும், ராதா தலையாட்டியபடி, சிவசிதம்பரத்தை ஆயிஷா உம்மாவின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றாள்.  இனி ½ மணி நேரம் இல்லை ¾ மணி நேரத்திற்குப் பின் தான் வெளியில் வரமுடியும்.  உள்ளேயும் ஒரு ‘க்யூ இருக்கும்.  அதில் குறைந்தது 6 அல்லது 7 பேர் இருப்பார்கள்.  அவர்களுக்குப் பின் தான் அவளை டாக்டர் அழைப்பார்.

     அருகிலிருந்த பெண் தண்ணீர் குடிப்பதன் அவசியத்தைப் பற்றிக் கேட்டதும், ஆயிஷா உம்மா அவளிடம் “அப்போதுதான் டாக்டருக்குக் குழந்தையைத் தெளிவாகக் காண முடியும் என்று விவரிக்கத் தொடங்கினாள்.  திரும்பியபோது,  சிவசிதம்பரத்தைக் காணாமல் திகைத்து எழுந்து ஓடினாள்.  20 அடிக்கு அப்பால் உள்ள படிகளில் குழந்தை இறங்கிக் கொண்டிருந்தான்.  போய் வாரி எடுத்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.  அவனது கைகளில் 2 மிட்டாய்கள்.  “யார் தந்தது என்று கேட்டதும், அவன் கை நீட்டிக் காண்பித்த படிகளில் ஒரு நர்ஸ் ஒரு கைலி கட்டிய ஆளுடன் பேசிக் கொண்டிருந்ததை ஆயிஷா உம்மா கவனிக்கத் தவறவில்லை.  ஒருவேளை அந்த நர்ஸ் கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி நடந்த போது, சிவ சிதம்பரம் அதில் ஒன்றைப் பிரித்து ஆயிஷா உம்மாவின் வாயில் வைத்தான்.  விக்ஸ் மிட்டாய் போல் ஒரு வித்தியாசமான சுவை.  திடீரெனக் கண்கள் இருண்டு தலை சுற்றுவது போல் தோன்ற ஆயிஷா உம்மா, சிவசிதம்பரத்தைக் கீழே இறக்கியபடி சரிந்ததும், எதிரில் நடந்து வந்த நர்ஸ் “ஐயோ என்றபடி ஓடிவந்து தாங்கிப் பிடிக்க, ஆயிஷா உம்மாவுக்கு அதன் பின் வேறு ஒன்றும் நினைவில்லை.

நேரம் : 9.30 a.m. 
இடம் : கொடுவாயூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை.


     வாசக்டாமிக்காக (ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை) ஒரு ரங்கசாமி கிடைத்த சந்தோஷத்தை, ஃபார்மஸிஸ்ட் மேரி, PHN பத்மினி மற்றும் ப்யூனிடம், ஜோஸ் பகிர்ந்து கொண்டிருந்தார். 

“டாக்டர் இதுவரை வரலை. இதைக் கேட்டா அவருக்கு ரொம்ப சந்தோஷமாகும்.  நாளைய Conference-ல இனி தலை நிமிர்ந்து நின்னு குரல உசத்தி பேசலாம்.  ரங்கசாமியோட சம்மதம் வாங்க நானும், மோஹனும் எல்லா நாளும்  அவனைப் போய் பார்த்து பேசினோம். அரசோட பண உதவி மட்டுமில்லாம நானும், மோஹனும் ரங்கசாமிக்கு 500 ரூபாய் கொடுக்கறோம்னு சொன்னப்புறம்தான் ரங்கசாமி சம்மதிச்சான்.  எப்படியோ இனி ஆறு மாசம் வரை, வரப் போற கான்ஃபரஸ்கள்ல தைரியமா பங்கெடுக்கலாம். நர்ஸ் பத்மினியோட தயவிலதான் ரங்கசாமி கிடைச்சான். பத்மினியோட கோட்டா முடிஞ்சதால ரங்கசாமியோட மனைவிய பத்மினியோட லேப்பரோஸ்கோப்பி (Laparoscopy)  லிஸ்டிலருந்து நீக்கிட்டு அவ கணவனை வாசக்டமிக்கு, எந்தப் பிரச்சினையும் இல்லாம நாம வாசக்டாமி லிஸ்ட்ல சேத்துக்க உதவியா இருந்த பத்மினிக்குத்தான் மொதல்ல தாங்க்ஸ் சொல்லணும். என்றார் ஜோஸ்.

“தாங்க்ஸ் மட்டும்லாம் போதாது. ராத்திரி பத்துமணிக்கு ஜோஸ் சாரோட செலவுல ஒரு சின்ன “Refreshment Party”  வேணும் என்று ப்யூன் கேட்ட்தும், ஜோஸ் ஓ.கே என்றான்.

ஃபோன் அடித்தது.  ஃபார்மஸிஸ்ட் எடுத்ததும், ‘மோஹனுக்குப் ஃபோன் என்றாள்.  ஜோஸ் ரிஸீவரை எடுத்துப் பேசினான். ரிஸீவரை வைத்த ஜோஸின் முகத்தில் முன்பிருந்த சந்தோஷம் காணாமற் போயிருந்தது.

“நான் உடனே மோஹனைப் போய் பார்க்கணும். மோஹனோட நண்பர் தாமோதரனுடைய ஃபோன்.  குழந்தையைக் காணோமாம்.  2 மணி நேரத்துக்கு முன்னாடி பெருந்தில்மன்னயில ஒரு ஆஸ்பத்திரியிலருந்துதான் மிஸ்ஸிங்காம்..  மோஹன் உடனே பெருந்தில்மன்னைக்குப் போகணுமாம்.  டாக்டர் வந்த உடனே விபரத்தைச் சொல்லுங்க  என்றபடி ஜோஸ் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து பாலக்காடு பஸ் ஸ்டாண்ட் நோக்கிப் போனார்.  ரங்கசாமி வாசக்டாமிக்குக் கிடைத்த சந்தோஷத்தில் ஜோஸ், ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆன மோஹனை அப்போதே வீட்டுக்குப் போக அனுமதித்தார்.  டாக்டரிடம் மோஹன் வேறு எங்கேனும் ஃபீல்ட் வொர்க் செய்யப் போயிருப்பதாகச் சொல்ல முடிவு செய்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு.  மோஹன் பஸ் ஏறும் முன் பாலக்காடு பஸ் ஸ்டாண்டில் பார்த்து விபரத்தைச் சொல்ல வேண்டும் என நினைத்து வண்டியை விரைவாக ஓட்டினார் ஜோஸ்.

நேரம் : 9.45 அ.ம்.
இடம் : அல்ஷிஃபா ஹாஸ்பிட்டல்


     ராதா அழுதபடி ஹாஸ்பிட்டல் வராந்தாவில் இடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்.  அருகே பக்கத்து வீட்டு தாமோதரன், அவரின் மனைவி சாரதா, ஆயிஷா உம்மாவின் மகள் ரஹ்மத், எல்லோரும் ராதாவை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர். வருவோர், போவோரெல்லாம் வார்த்தைகளாலும் கண்களினாலும் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துப் போனார்கள். ஆயிஷா உம்மாவின் மகன்கள் மூவரும் அங்கில்லை.  ஹக்கிம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ரஹீமும், சித்திக்கும், இரண்டு ஆட்டோ பிடித்து பெரிந்தல்மன்னா டவுணில்  ஓரிடம் பாக்கி இல்லாமல், சிவசிதம்பரத்தைத் தேடவும் போனார்கள்.  அப்போது அங்கு வந்த வார்ட் மெம்பர் மைமுனா, கொஞ்சம்பேர் ஜீப்பில் மலப்புரம், நிலம்பூர், பாலக்காடு, பட்டம்பி ரோடு வழியாகப் போயிருப்பதாத சொன்னார். “மோஹனுக்குப் ஃபோன் செய்தாகி விட்டதா? என்று கேட்ட்தும், தாமோதரன், தான் ஃபோன் செய்ததாகவும், மோஹன் கிடைக்காததால், ஆபீஸில் விவரம் சொன்னதாகவும் சொன்னார். எல்லோரும் ராதாவைத் தைரியமாக இருக்கச் சொன்னார்கள். 

“ராதா உன் வயித்துல இருக்கிற குழந்தையை நினைச்சாவது மனச தைரியமா வச்சுக்கணும்! சிவசிதம்பரம் எப்படியும் கிடைச்சுடுவான். போன மாசம் ஒரு 35 வயசு பொண்ணு ஒரு பெண் குழந்தையோட நடந்து போறதப் பாத்த ஆளுங்கச்  சந்தேகப்பட்டு விசாரிக்க, ஏதோ ஒரு L.P. ஸ்கூலில் இருந்து “வீட்டுக்குப் போகலாம் வான்னு கூட்டிட்டுப் போனாளாம்.  உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போனாங்களாம். அதனால, தைரியாமா இரு.  குழந்தைய எங்கேயும் தூரதேசத்துக்கெல்லாம் கொண்டு போயிருக்கமாட்டானுங்க. எப்படியும் ஆண்டவன் அருளால கண்டுபிடிச்சுரலாம். என்று மைமூன தைரியம் சொன்னார். 

ஆயிஷா உம்மா ஒரே அழுகை. ராதாவின் நினைவில் சிவசிதம்பரத்தின் சிரிப்பும், அழுகையும், கொஞ்சலும், கோபமும் ஒவ்வொன்றும் மாறி, மாறி வந்து இதயத்தை என்னென்னவோ செய்தது.  கடந்த நான்கு மாதங்களாக பால்குடி மறக்கச் செய்ய அவள் பாவம் குழந்தையை அவன் பாட்டியுடன் தான் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை எத்தனை நாள் அழுதிருக்கிறான், ராதாவுடன் தான் தூங்க வேண்டும் என்று.  “இபோது எங்கே யாருடனோ.... மனதில் ஒரு நீர் குமிழி பந்து போல் பெரிதாக, அவள் கதறி அழுதாள்.

நேரம் : 10 a.m.
இடம் : பாலக்காடு முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஹோட்டல்

     மோஹன் நெய் ரோஸ்டின் ஒரு பாதி பாகம் சாப்பிட்ட பின் திடீரென ஒரு “முடி தென்பட, அப்படியே அதை வைத்து விட்டு கை கழுவப் போனான்.  ஒரு வாசக்டமி கிடைத்த சந்தோஷம் அடியோடு போனது. மனதில் ஏதோ ஒரு சஞ்சலம், இன்று காலயிலிருந்தே. என்னவென்று சொல்லத் தெரியாத ஒரு உணர்வு. சரி, வந்த கஷ்டகாலம் அந்த பாதி தோசையுடன் போகட்டும் என்று நினைத்தபடி, தான் அமர்ந்திருந்த டேபிளுக்கு வந்ததும், அங்கே திடீரென முளைத்த இரண்டு பேரைக் கண்டதும், டேபிளின் மறுபக்கத்தில் அவர்களுக்கு எதிராக அமர்ந்தான்.  முன்னால் அமர்ந்த இருவரில் ஒரு ஆள் கையில் கண்டக்டர் பேக். டிரைவரும், கண்டக்டரும் ஆக இருக்கலாம். மோஹன், கொண்டுவந்து வைக்கப்பட்டக் காபியை சுவைத்துக் குடித்துக் கொண்டே, அவர்கள் பேசுவதைக் கேட்டான். 

“எனக்கென்னவோ அந்த ஆளு அந்தப் பையன எங்கேயிருந்தோ கடத்திட்டு வந்த மாதிரிதான் தோணுது.  பெரிந்தல்மன்னயிலருந்தே குழந்தை மயக்கம்தான். இடையில கண் தொறந்து அம்மா, அம்மானு பலவீனமா அழும் போதெல்லாம் ஏதோ ஒரு மிட்டாயை எடுத்து வாயில வைச்சானுங்க.  உடனே குழந்தை கண்களை செருகி மயங்கிப் போனான். யார் பெத்த பிள்ளையோ?......நான் வண்டியை விட்டு இறங்கியதும், ஓடிப் பொய், பார்க்கிங்க் கன்ட்ரோல் பண்ணும் டைம் கீப்பிங்க போலீஸ் கான்ஸ்டபிள் (P.C.) கிட்ட விவரத்தைச் சொன்னேன். அதுக்கு அவரு “அதெல்லாம் சும்மா நம்ம சந்தேகம்தான்,  விசாரிச்சுப் பார்த்தா வெங்காயத்த உரிச்சுப் பார்க்கற மாதிரி அதுல ஒண்ணுமே இருக்காது.  அங்க பாரு, .அவன், “அனஸ் 30 செகண்டு டிலே பண்ணிட்டு போகாம நிக்கிறான்......என்று சொல்லி விசில் ஊதிக் கொண்டே “அனஸ் வண்டியை வெளியேற்ற ஓடிவிட்டார்.  பிறகு நான் என்ன செய்ய...பார்த்த போது அவனையும் குழந்தையும் காணம்... நாம என்ன செய்ய?....அங்க பாரு.....அந்த ஆளு இங்க, இந்த ஹோட்டலுக்குத்தான் வர்ரான்.  குழந்தையோட கையில கிடந்த ஒரு தங்க வளையலக் காணோம்!. நான் நல்லா கவனிச்சேன்.  அவனோட மடியில படுத்திருந்தப்ப, வளையல் கையில இருந்திச்சு.  நீ அவன கவனிச்சுக்க நான் இப்ப வர்ரேன்...போயி P.C ய கூட்டிட்டு வர்ரேன்.

மோஹன் திரும்பிப் பார்க்க, கைலியுடுத்தியிருந்த ஒரு கறுத்த மனிதனும் அவனுடன் ஒரு குண்டு மனிதனும், கறுத்த மனிதனின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு 2 வயதுக் குழந்தையுடன் வந்தார்கள்.  பார்த்தாலே தெரிந்தது, குழந்தைக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. 

“என் சிதம்பரத்தின் உயரமும், தடியும் உள்ள குழந்தை.  முகம் தெரியவில்லயே.  குழந்தை அணிந்திருக்கும் சட்டையும், ட்ரவுசரும் என் சிதம்பரத்திற்கு உள்ள ஒரு ஜோடி போல இருக்கே!”  என்று மோஹன் நினைத்துக் கொண்டிருந்த போது, அவன் இருப்பிடத்தை அந்த மர்ம மனிதர்கள் கடந்து சென்றனர்.  குழந்தையின்  பாதிமுகம் கண்ட மோஹன் சிலையானான்.  “டேய் இது என் சிதம்பரம்! என் குழந்தை, என் மகன், என் சிதம்பரம் என்று கத்திக் கதறிகொண்டே ஓடிச் சென்று அவர்களிடமிருந்து குழந்தையைப் பிடித்து உயர்த்தி அவர்களிடமிருந்து பிடுங்கினான்.  திகைத்த அவர்கள் அங்கிருந்து ஓட முயல யாரெல்லாமோ அவர்களை விரட்டிப் பிடித்தார்கள். கூட்டத்தில் திகைத்து நின்ற அந்த டிரைவர் மற்றும் கண்டக்டருக்கும், கண்களில் நீர் மல்கத் தலையாட்டி நன்றி சொன்னான் மோஹன். மயக்கத்திலிருந்து தெளியாத சிவதிதம்பரத்தைக் கட்டிக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டான். பின்புறம் ஒரு கை தோளில் ஆறுதலாகப் படிந்தது போல் இருந்தது. திரும்பிப் பார்த்த போது கண்களில் நீர் மல்க ஜோஸ் ஸார்.


11 வருடங்களுக்கு முன், இதோ இப்போது அந்தச் சிறுவனுக்கு நடந்தது போலத்தானே சிவசிதம்பரத்துக்கும்? அந்தச் சம்பவத்தை இருவரும் நினைத்தபடி, இருவரின் கண்களும் அதைப் பேசிக் கொள்ள, மோஹன் பின் பக்கம் திரும்பி மகனின் தலையை வருடிக் கொடுத்தான்.  இருவரும் குழந்தையை அணைத்துக் கொண்டு “பயப்படாதடா கண்ணா அந்தப் பையன போலீஸ் அவங்க அம்மா அப்பாகிட்ட சேர்த்துடுவாங்கடா பயப்படாதடா செல்லம்.  என்று சிவசிதம்பரத்தைத் தேற்றி விட்டு, தங்களுக்கு மலை போல் வந்து பனி போல விலகியதை நினைத்து இறைவனுக்கு இருவரும் நன்றி கூறினர்.