சில்லு – 1 (Reed Bed) நாணல் படுகை/சம்பு (Narrow Leaf Cattail-Typha) – புள்ளி மூக்கு வாத்து (Indian Spot-Billed Duck)
நாணல் என்பது பேரினங்களைச் சேர்ந்த தாவரங்களுக்கான பொதுப்பெயர். கோரை என்றும் சொல்லப்படுவதுண்டு. நாணல் படுகைகள் என்பது நாணல்களால் நிறைந்து இருக்கும் நீர்நிலைகள் அல்லது சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி. அவை ஆரோக்கியமான நதி மற்றும் நீர் நிலைகளின் அடையாளம். மீன்கள், முதுகெலும்பில்லாத விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்வதற்குச் சிறந்த வாழ்விடத்தை வழங்குகின்றன.
சிறந்த
இயற்கை வடிகட்டிகளாக இந்த நாணல் படுகைகள் மூன்று அடிப்படை செயல்பாடுகளைச் செய்கின்றன:
(1) கசடுகளை நீக்குகின்றன (2) அதை கனிம மற்றும் மட்கிய கூறுகளாக மாற்றுகின்றன. (3) நீரை ஆக்ஸிஜனேற்றும் போது மாசுகளை நீக்குபவையுமாகவும்
செயல்படுகின்றன.
இந்த இயற்கை வடிகட்டிகள் தண்ணீரை சுற்றுப்புறத்திற்குக் குறிப்பாக நீர்ப்பாசனத்திற்கு வெளியேற்றும் முன் நீரை சுத்தப்படுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுகிறன. இந்தப் படுகை ஒவ்வொரு நாணலின், பிராணவாயுவை மண்ணிற்குக் கடத்தும் திறனைப் பயன்படுத்திக் கொள்வதோடு கழிவுநீரில் உள்ள அசுத்தங்களை நுண்ணுயிரிகள் உட்கொண்டு ஜீரணிக்க உதவுகிறது.
நீர் மட்டத்திற்கு மேலே சம்பு படுகை உள்ளதில் பிற செடிகள் வளர்ந்திருப்பது தெரிகிறதா
பொதுவாக
இந்த நாணல் படுகைகள் வறண்ட நிலத்தை மேம்படுத்துவதோடு திறந்த நீர்ப்பரப்பு அல்லது ஈரமான நிலத்தில் கொத்து
கொத்தாக வளர்கின்றன. நாணல் படுகைகள் வயதாகும்போது, அவை கணிசமான தழை குப்பை அடுக்கை
உருவாக்குகின்றன. அந்த தழைகள் அடுக்கு நீர்மட்டத்திற்கு மேலே உயரும் சமயம் புதிய பகுதிகளை
உருவாக்கி புதர்கள் மற்றும் மரங்கள் போன்ற பெரிய நிலப்பரப்பு தாவரங்களும் வளர்வதற்கு
உதவுகின்றன.
படுகைகள் நீர் மட்டத்தின் மேலே உயரும் போதும், நாணல் சதுப்பு நிலங்கள் கோடையில் 20 செமீ அல்லது அதற்கு மேற்பட்ட மேற்பரப்பு நீரை கொண்டிருக்கும் போதும் பெரும்பாலும் பறவை இனங்கள் அந்த அடுக்கில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. பறவைகள் மட்டுமின்றி சில முதுகெலும்பில்லா விலங்குகள் மற்றும் குட்டி போட்டு வாழும் சிறிய விலங்குகளுக்கும் இவை வாழ்விடமாக அமைகின்றன.
காலநிலை, பருவகால மாறுபாடுகள் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் உப்புத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, ஈர நில அமைப்பில் உள்ள இந்த நீர் நிலைகள்/சதுப்பு நிலங்களில் வளரும் தாவர/நாணல் படுகைகள் வேறுபடுகின்றன. நாணல் மற்றும் அதை ஒத்த தாவரங்கள் பொதுவாக மிகவும் அமில நீரில் வளராது. அப்படியான சமயங்களில் அவை அழிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நாணல் படுகைகளின் சிறப்பே நாணல்கள்தான் என்றாலும் இந்த இனத்தைச் சேர்ந்த எல்லா தாவரங்களும், அவை அதிகமாக வளர்ந்தாலும், நாணல் படுகைகளை உருவாக்குவதில்லை. அப்படியான வகைகளின் படுகைகள், பொதுவாக, பராமரிக்கப்படாத ஈரமான புல்வெளிகளிலும் மற்றும் சில வகையான ஈரமான வனப்பகுதிகளிலும் நிலத்தின் அடிமட்டத்தில் உருவாகின்றன.
நீர்த்தாவரங்கள், சதுப்புநிலத் தாவரங்கள், என்ற வகையில் சம்பு/சண்பு/கண்பு எனப்படும் படுகை பற்றித்தான் இங்கு.
நான் பயணம் செய்த இடங்களில் உள்ள சில நீர் நிலைகளில் நாணல் படுகைகள் மற்றும் படத்தில் உள்ள சம்பு நீர்த்தாவரப் படுகையையும் அதில் தாழைக் கோழிகள் இருப்பதையும் கவனித்திருக்கிறேன். அப்போதிலிருந்தே இதைப் பற்றி அறியும் ஆர்வம் தொடங்கினாலும் படங்கள் இல்லாததால் கூகுளில் தேட இயலவில்லை.
இங்கு வந்த பிறகு ஏரிகளுக்கு நடைப்பயிற்சியாகச் சென்ற பொது பல ஏரிகளிலும் இந்த நீர்த்தாவரம் வளர்ந்திருப்பதையும் புதருக்குள் தாழைக் கோழி வகைகள், வாத்துகள் பருவகாலத்தில் கூடு கட்டி அவற்றின் குஞ்சுகளையும் கண்டதும் ஆர்வம் கூடியது. படங்கள் எடுத்திருந்ததால் கூகுளில் தேடியதும் இந்த நீர்த்தாவரப் படுகை பற்றியும் பொதுவாக நாணல்படுகைகள் பற்றிய தகவல்களும் கிடைத்தன.
சம்பு தாவரத்தின் 'இணர்' கம்பின் கதிர் போன்று இருக்கிறது பாருங்க....இரு படங்களிலும். இலைகளின் நடுவில் கொஞ்சம் தடிமனாக ப்ரௌன் நிறத்தில்
இதில் முன்னில் சற்று வளைந்து ஒரு கதிர் தெரிவது உங்களுக்கும் பார்க்க முடிகிறது என்று நினைக்கிறேன்
சம்பு,
சண்பு என்றும் பண்டைய இலக்கியங்களில் கண்பு
என்றும் சொல்லப்படுகிறது இந்த வகை நீர்த்தாவரம். இது நீர்நிலைகளிலும், சதுப்புநிலங்களிலும்
வளர்கிறது. இதன் ‘இணர்’, கம்பின் கதிர் போன்றது. இதன் இலைகள் 10 அடி வரை வளரும். இதன்
தாவரவியல் பெயர் டைபா அங்கஸ்டடா (Typha angustata)
சம்பு/கண்பு அல்லது எருவை என்று சொல்லப்படும் (படத்தில் இருப்பது) இந்த நீர்த்தாவரம் நீர்ப்பறவைகளுக்குக் கூடு கட்டி இனப்பெருக்கத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதோடு மனித இனத்திற்கும் மிகுந்த நன்மைகளைத் தருகின்றது. பொதுவாகவே எல்லா நாணல்களின் இளம் இலைகளும் உணவிற்கு உகந்தவைதான் என்றும் சொல்லப்படுகிறது.
இதன்
நீண்ட இலைகள்தான் “சம்பு” என்று சொல்லப்படுகிறது. இந்த இலைகளைக் கொண்டு (சம்பு) தட்டிகள்,
பந்திப்பாய்கள், குடலைகள் செய்வதோடு வீட்டின் மேற்கூரை போன்றவற்றையும் வேய்கின்றனர்.
அதனால், வெப்ப காலத்தில் அதிக வெப்பத்தைக் கடத்தாமல், குளிர் காலத்தில் அதிக குளிரைக்
கடத்தாமல் இதமான வெப்ப நிலையை வீட்டிற்குள் வழங்குமாம். கூடவே இதன் கதிர், குருத்து எல்லாம் மிகுந்த மருத்துவ
குணம் உடையவையாம்.
தகவல்களுக்கு
நன்றி – இயற்கை வாழ்வியல் ஆலோசகர் ஞான சுந்தரபாண்டியன்
படுகைகள் இன்னும் உருவாகாத போது...
இப்படி முதிர்ந்த இலைகள் தழைகள் விழுந்து மெதுவாகப் படுகை உருவாகி மறைஞ்சிருக்கு. கூடவே வேறு நாணல் வகைகள் பூக்கொண்டையுடன் வலப்பக்கம் தெரிகின்றன இல்லையா?
ஏரியின்
ஓரங்களில் சம்பு எனப்படும் இந்த நீர்த்தாவரத்தைப் பார்க்கலாம். இளம் செடிகளாக படுகை இல்லாமலும், முதிர்ந்து படுகைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதையும்
பார்க்கலாம்.
இந்தக்
காணொளியில் தெரியும் படுகை இரு கரைகளையும் இணைக்கும் கற்பாதையின் ஓரத்தில் இருந்தது.
பாதையை ஒட்டியிருந்த பகுதியில் படுகைப் புதருக்குள் புள்ளி மூக்கு வாத்துகள் மற்றும்
தாழைக்கோழிகள் கூடு கட்டியிருந்தன.
இந்தப்
படுகை நகர்ந்த போது அதில் கூடு கட்டியிருந்தவற்றின் Reaction பற்றி சொல்கிறேன் என்று
சொன்னேன் இல்லையா அது இங்கே. இப்படுகை கப்பல் போன்று, அதாவது கரையை ஒட்டியிருந்த பகுதி
(அதுதான் பறவைகளின் நுழைவுவாயில்) என் பக்கம் திரும்பியதைப் பார்த்ததும் வியப்பாக இருந்தது.
யாரோ திருப்புவது போன்று. அதுவும் அது ஓரத்திலிருந்து பிய்த்துக் கொண்டு வரும் போது
இலைகள் கீழே சாய்வதையும் பார்க்கலாம்.
வெளியில்
வந்து உணவிற்காகத் தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த இரு புள்ளி மூக்கு வாத்துகளுக்கு
தங்கள் நுழைவுப் பகுதி எப்பக்கம் என்ற குழப்பம். ஒன்று ஏறிக் கொண்டு ஆராய்ந்தது. மற்றொன்று
படுகையைச் சுற்றி சுற்றி வந்தது.
படுகை
திரும்பியதும், வலப்புற ஓரத்தில் தாழைக்கோழி இருப்பதையும், ஒரு கோழி இறங்கி வருவதையும்
பார்க்கலாம். அது இந்தப் பக்கம் வந்து வாத்துகளின் நுழைவுப் பகுதி வழியாகப் புகப் பார்த்ததும்
ஏறியிருந்த புள்ளி மூக்கு வாத்து இறங்கிச் சென்று துரத்துவதையும், படுகையின் இடப் புறத்தில்,
சுற்றிக் கொண்டிருந்த புள்ளி மூக்கு வாத்து மற்ற கோழிகளை அருகில் விடாமல் செய்வதையும்
பார்க்கலாம். எனக்கு நேரில் பார்க்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. கடைசியில் அவற்றிற்கு
கூடுகள் இருக்கும் நுழைவுப் பகுதி தெரிந்து ஏறிவிட்டன.
இந்தப்
படுகை நகர்ந்து ஏற்கனவே இருந்த படுகையுடன் முட்டி நிற்பதையும் காணொளியின் கடைசியில்
பார்க்கலாம்.
(இந்தப்
புள்ளி மூக்கு வாத்துகள் பொதுவாகவே ஜோடியாகத்தான் இருக்கும். புள்ளி மூக்கு வாத்துகள்
பற்றி தனி பதிவு வரும்)
இப்பதிவு
பெரிதாகிவிட்டதால், செயற்கை நாணல்படுகை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். Stay
tuned to our posts!
****************
சில்லு
– 2 – உபரித் தகவல் – ஹோக்கர்சர் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலம் - 'Queen Wetland
of Kashmir', Hokersar Wetland Reserve
காஷ்மீரின், கடைசியாக எஞ்சியிருக்கும், நாணல் சதுப்பு நிலம் இந்த ஹோக்கர்சர். எவ்வளவு அழிந்திருக்கின்றன என்று தெரிகிறது. காஷ்மீர், ஸ்ரீநகரில்
இருந்து சில கிலோமீட்டர் தொலைவில், பிர் பஞ்சல்(Pir Panjal) மலைத்தொடரின் பின்னணியில்,
ஹோக்கர்சர் ஈரநில/சதுப்பு நில பாதுகாக்கப்படும் இடம் உள்ளடு. இது ஜீலம் நதி படுகையை
ஒட்டிய இயற்கையான வற்றாத ஈரநிலப் பிரதேசம். சைபீரியா, சீனா, மத்திய ஆசியா மற்றும் வடக்கு
ஐரோப்பாவைத் தங்கள் தாயகமாகக் கொண்டிருக்கும் பல நீர்ப்பறவைகளுக்கு விசா இல்லாம இம்மாந்தூரம்
விமானச் செலவு இல்லாம பறந்து வந்து புகுந்துக்கற ஒரு வாழ்விடமாக இருக்கு பாருங்க.
1978
ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஹோக்கர்சர் பாதுகாப்புச்
சதுப்புநிலமாக அறிவிக்கப்பட்டது. 2005 ஆம் வருடம் ஈரநிலப்பாதுகாப்பு மற்றும் நிலையான
பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ராம்சார் அமைப்பின் கீழ் இது ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது.
இது
மூன்று வகையான பகுதிகளைக் கொண்டுள்ளது:
நீர்ப்பறவைகள்
கூடு கட்டும் நீர்-நாணல் நிறைந்த சதுப்பு நிலங்கள்
நடுப்பகுதியில்
உள்ள ஆழமான பகுதி – நதி நீர் ஓடும் பகுதி.
வண்டல்
படிந்த பகுதி – கால்நடைகள் மேயும் பகுதி, விளைச்சலுக்கான பகுதியும் கூட
பெரிய
கொக்கு (Egret), கிரேட் க்ரெஸ்ட கிரேப் (Great crested Grebe), சின்ன நீர்க்காகம்
(Little Cormorant), காமன் ஷெல்டக் (Common Shelduck), டஃப்டெட் வாத்து மற்றும் அழிந்து
வரும் வெள்ளைக்கண்களியன் (White eyed Pochard) போன்ற 68 நீர்ப்பறவைகளின் பாதையில் இது
இருப்பதாலும், பல மீன்களுக்கு முட்டையிடும் பகுதியாகவும் நாற்றங்கால் பகுதியாகவும்
இருப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
இதன்
சதுப்பு நிலங்களில் Typha (சம்பு – இங்கு முதல் சில்லில் சொல்லப்பட்டிருப்பது), மற்றும்
வேறு வகை நீர்த்தாவரங்கள் உள்ளன. கிழக்கிலிருந்து பாயும் தூத்கங்கா(Dhoodhganga) வின்
நீர்ப்பிடிப்புப் பகுதியாக இந்தச் சதுப்பு நிலத்தின் கடைக்கோடி வட பகுதி இருப்பதோடு
இந்த ஈர நிலத்திற்கு இந்த துத்கங்காவும் மேற்கிலிருந்து பாயும் சுக்நாக் நல்லா(Sukhnag
Nalla) என்ற சிறு ஆறும்தான் காரணம்.
2014
வெள்ளத்திற்குப் பிறகு தூர் வாரப்படாததால் இதற்கு வரும் நீர் வரத்துக் குறைந்துள்ளதாலும்
இதைச் சுற்றிலும் பொறுப்பற்ற கட்டுமானத்தாலும் இதன் பரப்பளவு குறைந்துள்ளதோடு, வறண்டு
போன பகுதியும் ஆழமற்ற பகுதிகளும் குப்பைக் கிடங்காக மாறி தொடர்ந்து பாதிப்புள்ளாகி
வருகிறதாம். உள்ளூர்வாசிகள் சிலர் ஈர நிலத்தில் மீன் பிடிக்கவும், கால்நடை தீவனம் மற்றும்
வீட்டு உபயோக எரிபொருளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
மேலும்,
கட்டுப்பாடற்ற சுற்றுலாவினாலும் தேவையற்ற மனிதத் தலையீடுகளினாலும் சுற்றுச் சூழலியல் பாதிக்கப்படுகிறதாகவும் தெரிகிறது.
பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும், காஷ்மீரின் புகழ்பெற்ற இந்தக் கடைசி ஈர/சதுப்பு
நிலமான ஹோக்கர்சரைக் காப்பாற்ற அரசு ஆவன செய்தால் நல்லது.
(கொஞ்சம் பெரிய பதிவாகிவிட்டது. பொறுத்துக் கொள்ளவும்)
------கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இயற்கை நாணல், படுகை சம்பு எனப்படும் கோரைப்புற்கள் என நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு படங்களையும் அழகாக எடுத்துள்ளீர்கள். இந்த நீர் தாவரத்தின் பயன்களும், அதில் அடைக்கலமாக கூடு கட்டிக் கொண்டு இனப்பெருக்கம் செய்யும் பறவைகளைப்பற்றியும் தெரிந்து கொண்டேன். நீங்கள் தொகுத்து தந்த விபரங்கள் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது.
காணொளியும் கண்டேன். படுகை நகர்வது பிரமிப்பாக உள்ளது. நீங்கள் கூறியது போல் அதிலுள்ள வாத்து, கோழி, பறவைகள் மிகவும் பதட்டம் அடைந்திருக்கும் அல்லவா? பாவம்..! தன் குஞ்சுகள் உள்ளே இருந்து என்ன பாடுபடுமோ என அவை தவித்திருக்கும். இறுதியில் சுற்றி வந்த படுகையில் தம் நுழைவாயிலை கண்டுணர்ந்து கொண்டு அவைகள் ஏறியதும் நமக்கும் ஒரு நிம்மதி வருகிறது. அரிய காட்சி...! பொறுமையாக காணொளி எடுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
காஷ்மீர் சதுப்பு நில பகுதி பற்றியும் விபரமாக சொல்லியிருக்கிறீர்கள். அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டேன்.
/காஷ்மீரின் புகழ்பெற்ற இந்தக் கடைசி ஈர/சதுப்பு நிலமான ஹோக்கர்சரைக் காப்பாற்ற அரசு ஆவன செய்தால் நல்லது. /
நானும் அவ்வண்ணமே வேண்டிக் கொள்கிறேன். இயற்கையை அதன் உருகுலையாமல் காப்பாற்றி வந்தால் நல்லது. நிறைய தகவல்களை பதிவில் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா. சம்பு என்பது கோரைப்புல் வகை அல்ல. இது நீர்த்தாவரம். நாணல் என்பது எல்லாவற்றிற்கும் பொதுவான பெயர். அதில் நீரில் வளர்வதும், நீரில்லாத நிலத்தில் வளர்வதும் அடங்கும். இங்கு நீர்த்தாவரம்/ நாணல் பற்றியே அது உருவாக்கும் படுகை பத்தித்தான்..
நீக்குஆமாம் கமலாக்கா...நகரத் தொடங்கியதும் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தவை கொஞ்சம் நிலை தடுமாறியது. மறுபக்கம் கூடு கட்டியிருந்த தாழைக்கோழியும் வெளியில் வந்து என்னடா இது என்று பார்த்துவிட்டுச் சென்றது அதை வாத்துகள் துரத்த...நான் ரசித்துப் பார்த்துக்கொண்டே காணொளியும் எடுத்ததில் இடையில் கோணம் மிஸ் ஆகி அதனால் ஒரு சில பகுதில் கட் செய்து மீண்டும் எடுத்ததை இணைத்து என்று...
ஆமாம் அக்கா இந்த நாணல் படுகை பற்றித் தேடத் தொடங்கியதில் சிக்கியதுதான் காஷ்மீரின் சதுப்பு.நீர் நிலம். பாதுக்காக்க வேண்டும். பதிவை ரசித்தமைக்கு
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
இந்தளவுக்கு விளக்கம் யாராலும் சொல்ல முடியாது... அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி
நீக்குகீதா
இங்கின மீதான் 1ஸ்ட்டோஓஓ?.. இல்ல இல்ல இருக்காது நானில்லை நானில்லை, ஆராவது ஓடிவந்திருப்பினம் அதிராவின் காலை வாரிவிட்டுவிட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்:))..
பதிலளிநீக்குஹாஹாஹா இல்லை உங்க காலை............கப்சிப் நான்! மேலே பார்த்திருப்பீங்க ரெண்டு பேர்!!!
நீக்குகீதா
கமலாக்காவுக்குக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நீக்கு//புள்ளி மூக்கு வாத்து// ஆவ்வ்வ்வ்வ் இந்தப் பெயர் நல்லா இருக்கே... அஞ்சுவுக்கு வைக்கலாமோ என ஓசிக்கிறேன்ன் ஹா ஹா ஹா சொல்லிடாதீங்கோ கீதா:)).. ஹா ஹா ஹா என்னைத்தேம்ஸ்ல தள்ளிடுவா:))..
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஏஞ்சல் சந்தோஷப்படுவாங்க!!! இயற்கை விரும்பி!!! ஹையோ தேம்ஸ் வேண்டாம் அதிரா!!! மாத்திடுங்க உங்க ஊர் குளம் போதும்!! தேம்ஸ் பத்தி அடுத்த பதிவுல வருமே...அப்ப பார்த்துக்கங்க...நீங்க கண்டிப்பா இனி தேம்ஸ்னு ஜொள்ளவே மாட்டீங்க!
நீக்குமிக்க நன்றி அதிரா
கீதா
நாணல்தான் கோரையோ? கோரை சின்னவகை எல்லோ கீதா? கோரைப்புல் நம் கார்டினில் வளரும் ஆனால் நாணல் என்பது வளவுகளில் முளைப்பதில்லை எல்லோ.. ?? சரியாகத் தெரியாது.. நாணல் வளர தண்ணி நிலைகள் வேண்டும், கோரைக்கு அப்படியில்லை என நினைக்கிறேன்.. நாணல் என்பது படங்கள் கதைகளில் வருவதனால், எனக்கும் நாணணுக்கும் நெருங்கிய தொடர்பிருக்குது கீதா:).. எனக்கு ரொம்பப் பிடிக்கும்...
பதிலளிநீக்குநாணலைக் கோரை என்று சொன்னாலும் நாணல் என்பது பொதுப் பெயராகத்தான் சொல்றாங்க...நிறைய இனங்கள் இருக்கின்றன. நாணல்/கோரைகளில் வகைகள் இருக்கின்றன. அப்படித்தான் தாவரவியல் சொல்கிறது. நாணல் தண்ணீர் ஆம் வேண்டும்...கோரை காய்ந்தவை ஆனால் கோரைப் புற்கள் உயரமாக கொஞ்சம் அகன்ற இலையுடன் பச்சைப் பசேலென்றும் சில வகைகள் இருக்கின்றன. என்று நான் தேடிய போது படங்கள் மூலம் தெரிந்துகொண்டது.
நீக்குஆனால் பொதுவாகக்காய்ந்தவை கோரை நம்மூரில்.
//நாணல் என்பது படங்கள் கதைகளில் வருவதனால், எனக்கும் நாணணுக்கும் நெருங்கிய தொடர்பிருக்குது கீதா:).. எனக்கு ரொம்பப் பிடிக்கும்..//
ஹாஹாஹா!!! ஆஹா...
எனக்கும் பிடிக்கும் அதிரா....
மிக்க நன்றி அதிரா
கீதா
நீங்கள் சொல்லும்போதுதான் புரிகிறது, எங்கட வீட்டுக்கு அருகில் நடக்கும், சைக்கிள் ஓடும் இடமிருக்கு, அதில் ஒரு நீர்த்தடாகம் அதனோடு குளமும் இருக்குது, அங்கு காடைகள் இருக்கின்றன, கோமதி அக்கா மூலம் தான் கண்டுபிடிச்சேன் அவை காடை என, இப்போ நீங்கள் சொல்லும்போதுதான் தெரியுது, அதில் இருப்பது நாணல் புதர்கள், அதில் காடை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது, குஞ்சுகள் அங்கு தண்ணீரில் நீந்திச் சாப்பிடும் பின்னர் ஓடிப்போய் இந்த நாணலுக்குள் ஒளிப்பார்கள், விரைவில் படமெடுத்து வந்து போடுகிறேன்.
பதிலளிநீக்குஆஹா உங்க வீட்டுப் பக்கம் நீர்த்தடாகம் குளம் எல்லாமுமா..அழகு...காடை தண்ணீரில் நீந்துமா?!!!! காடை என்பது Quail bird. அது நீர்ப்பறவை அல்ல. அதிரா நீங்கள் படம் போடுங்கள் பார்த்துச் சொல்கிறோம், நானோ, கோமதிக்காவோ சொல்வோம்.
நீக்குபொதுவாக நீர்க் கோழிகள் இப்படி கரையோரம் உள்ள செடிகள் அல்லது நீரின் நடுவில் இருக்கும் புற்களின் படுகைகளில் இனப்பெருக்கம் செய்யும்.
படம் போடுங்கள் அதிரா...அப்ப என்ன என்று தெரிந்துவிடும்
மிக்க நன்றி அதிரா
கீதா
//படத்தில் உள்ள சம்பு நீர்த்தாவரப் படுகையையும் அதில் தாழைக் கோழிகள் இருப்பதையும் கவனித்திருக்கிறேன்//
பதிலளிநீக்குஆவ்வ்வ் இப்போ கொயம்பிட்டேன் அதிரா:) எங்களிடத்தில் இருப்பது சம்புவோ நாணலோ?:) காடையோ நீர்க்கோழியோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... என் நிம்மதி நித்திரை அனைத்தும் போச்சேஏஏஏஏஏ:))) ஹா ஹா ஹா..
அதிரா - இந்த நீர்த்தாவரம் 'சம்பு' நாணல் இனம். ஆங்கிலத்தில் Reed bed என்பது நாணல் படுகை என்று தமிழில். அதை வைத்து எல்லாமே ரீட் பெட் உருவாக்கும் என்று சொல்வதற்கில்லை. நாணல் என்பது பொதுப்பெயர். அதில் நீர்த்தாவரம், சதுப்புநிலத்தாவரம் என்று பல இனங்கள் வகைகள் இருக்கின்றன. அப்படி இது ஒன்று.
நீக்குகண்டிப்பாக காடையாக இருக்காது உங்கள் இடத்தில் இருப்பது. நீர்க்கோழியாகத்தான் இருக்கும். இதைப் பார்த்ததும் உங்களுக்கு இன்று நித்திரை நல்லா வரும்!!!!!
நான் கண்ட ஒவ்வொரு நீர்ப்பறவை பற்றியும் தனி தனி பதிவாகப் போடுவதாக இருக்கிறேன் அதிரா.
மிக்க நன்றி அதிரா
கீதா
ஓ சம்புவுக்கு , கம்புக்கதிர் போன்று கதிர்கள் வரும்போல, நாணலுக்கு வராது அப்படித்தானே?... எனக்கிது படிக்கப் படிக்க சரியான இண்டஸ்ரிங்காக இருக்கு..
பதிலளிநீக்கு//இந்தப் பெரிய சம்பு/கண்பு படுகை நகர்வதைப் பாருங்கள். 5 நிமிடம் 24 நொடிகள். கொஞ்சம் பெரிய காணொளியோ// ஆவ்வ்வ் வீடியோவில் இருப்பதுதான் இங்கும் இருக்குது, இப்படித்தான் பறவைகள் இதனோடு ஒட்டி உறவாடி வாழ்கின்றன...
இறைவனின் படைப்பை நினைச்சு அதிரா வியக்கேன்:))).. இப்பூடி அஞ்சுவுக்கு நெல்லைத்தமிழனுக்கெல்லாம் வியர்க்க சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே வியக்கத் தெரியாதாக்கும் ஹா ஹா ஹா:))
ஆமாம் கதிர்கள் உண்டு. நாணல் என்று நாம் சொல்வதில் நுனியில் நான்கு ஐந்து பூ போன்று நீட்டமா இருக்குமே...இங்கு ஒரு படத்தில் கூட வலது ஓரத்தில் கொஞ்சம் தெரியும் பாருங்க. இது மிகப் பெரிய சப்ஜெக்ட் அதிரா...இதில் நிறைய இருக்கு. வகைகள் இருக்கு. இனங்கள் இருக்கு...நாம் நாணல் என்றதும் நம் வீட்டுப் பக்கத்தில் உள்ள வயல்பக்கம் ஆற்றின் பக்கம் பார்ப்பதை மட்டுமே நினைக்கிறோம் இல்லையா? ஆனால் அதில் வகைகள் நிறைய.
நீக்குநாணல் புல் என்று சொல்வோம் இல்லையா ஆனால் அது புல் வகை அல்ல.
//ஆவ்வ்வ் வீடியோவில் இருப்பதுதான் இங்கும் இருக்குது, இப்படித்தான் பறவைகள் இதனோடு ஒட்டி உறவாடி வாழ்கின்றன...//
ஆமாம் அதிரா...பார்க்கப் பார்க்க அழகு சுவாரசியம்!!
நிஜமாகவே இயற்கை/இறைவனின் படைப்பை நினைத்து எனக்கு ரொம்பவே வியப்புதான்...
மிக்க நன்றி அதிரா
கீதா
படுகையும், வாத்துக்களும் பார்த்துக் கொண்டே இருக்கலாம், இதேதான் என் தொழிலும் நடையை மறந்து ரசித்துக் கொண்டிருப்பேன் ஹா ஹா ஹா.. பெரிசாக்கிப் பார்த்தேன் ஸ்கிரீனில், ஆனாலும் வீடியோ 2பிரைட்டாக இருக்கு, சரியாக அடையாளம் தெரியவில்லை, மூக்கில் கறுப்பிருக்கு என்பதால் மூக்கு வாத்துக் கண்டு பிடிச்சிட்டேன்.
பதிலளிநீக்குஆமாம் அதிரா பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஹாஹாஹா நீங்களும் மறந்து நின்று விடுவீங்களா....ஹைஃபைவ்!!! நானும் அப்படியே!!.
நீக்குஅதிரா அது என் கேமரா பவர் கம்மிதான் அதிரா...ஜூம் செய்து எடுத்தேன் எனவே அத்தனை தெளிவு இருக்காதுதான்......இருந்தாலும் ஆர்வத்தில் போடுகிறேன். இந்த வாத்துப் படங்கள் அதைப் பற்றி தனி பதிவு போடும் போது வரும். அப்ப படத்தில் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். உங்கள் ஊரிலும் இந்த வாத்துகள் உண்டு. Spot billed ducks! அது இங்கிலாந்து வாத்துகள். எங்கள் ஊர் வாத்துகள் இந்திய வாத்துகள்!!!!
மிக்க நன்றி அதிரா
கீதா
உண்மைதான் எல்லா நாடுகளிலும் வீடுகள், கட்டிடங்களுக்காக அழகிய இடங்கள் பற்றைகள், காடுகள் அழிஞ்சு வருவது கவலைக்குரிய விடயம்.
பதிலளிநீக்கு//(கொஞ்சம் பெரிய பதிவாகிவிட்டது. பொறுத்துக் கொள்ளவும்)
------கீதா///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொஞ்சம்தானோ?:))) ஹா ஹா ஹா
நிஜமாகவே ஈர நிலங்கள் சதுப்பு நிலங்கள் குறைகின்றன பறவைகள் வருவதும் குறைகிறது. கவலையான விஷயம் கண்டிப்பாக.
நீக்குஹாஹாஹாஹா கொஞ்சம் இல்லை ரொம்பவே பெரிசுதான் இல்லையா...அடுத்த பதிவிலிருந்து குட்டியாகப் போடுகிறேன்...
மிக்க நன்றி அதிரா...
கீதா
நிறைய தகவல்கள். இதுவரை தெரிந்துகொள்ளாத விஷயம். ரொம்ப விளக்கி எழுதியது கவர்ந்தது.
பதிலளிநீக்குபுதிய விஷயம் என்பதால் பதிவு நெடிதாக இருந்தும் தெரியவில்லை.
இயற்கைதான் எத்தனை அதிசயங்களைக் கொண்டிருக்கிறது. நாணல் புதர் வாழ் பறவைகளுக்கு பாம்புப் பிரச்சனையும், கழுகு பிரச்சனையும் இருக்கும்.
நெல்லை
//நிறைய தகவல்கள். இதுவரை தெரிந்துகொள்ளாத விஷயம். ரொம்ப விளக்கி எழுதியது கவர்ந்தது.புதிய விஷயம் என்பதால் பதிவு நெடிதாக இருந்தும் தெரியவில்லை.//
நீக்குமிக்க நன்றி நெல்லை.
நிறைய அதிசயங்கள். ஆமாம் கழுகு பாம்புப் பிரச்சனையும் உண்டு. கழுகு ரொம்பவே இருக்கின்றன.
மிக்க நன்றி நெல்லை
கீதா
சம்பு சம்பு என்பதைப் படித்தால் சம்புவரையர் நினைவுக்கு வருகிறார். நெல்லை
பதிலளிநீக்குஎனக்கும் நினைவுக்கு வந்தது நெல்லை அதைத் தெரிந்துகொண்டதும்!!!
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
காணொளி கண்டு வியந்தேன். பயமாகவும் இருந்தது. நல்ல மழைக்காலத்தில், இதுவே ஆற்றுப் பகுதியாக இருந்தால் இன்னும் கஷ்டம். நெல்லை
பதிலளிநீக்குஹா ஹா ஹா இது யாரிது பெயரில்லாமல் வந்து வியப்பது கர்ர்ர்ர்ர்ர்:))
நீக்குநான் நேரில் பார்த்தப்பா வியப்பாகத்தான் இருந்தது அதான் உடனே காணொளியாக எடுத்தேன். அதுவும் முதலில் அந்த வாத்துகள் ஏன் இங்கும் அங்கும் அலைகின்றன என்று கண்டதும்தான் தெரிந்தது படுகை நடரத் தொடந்தியது என்பது....
நீக்குசில சமயம் படுகைகள் அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவது போல் யானை காலைத் தூக்கி இங்கும் அங்கும் அசைப்பது போல் அசைந்து கொண்டிருக்கும். அப்படி அசைந்து அசைந்து டக்கென்று பிய்த்துக் கொண்டு நகர்கின்றன.
ஆமாம் மழைக்காலம் வெள்ளம் என்றால் கரையோரம் இருப்பவை எல்லாம் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு நகரும் பார்த்திருப்பீங்க. நான் நேர்ல பார்த்திருக்கிறேன். ஆனால் மழைக்காலத்தில் பொதுவாகப் பறவைகள் கூடு கட்டுவதில்லை இப்படியான இடங்களில்
மிக்க நன்றி நெல்லை
கீதா
நீர்ப்படுகைகள் பற்றிய தகவல்கள் அருமை.
பதிலளிநீக்குமுதுகெலும்பு இல்லாத விலங்குகள் வார்த்தைப் பிரயோகம் நன்று.
காணொளி கண்டேன், படங்கள் மிகவும் அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குமுதுகெலும்பு இல்லாத விலங்குகள் வார்த்தைப் பிரயோகம் நன்று.//
அப்படித்தானே சொல்வதுண்டு. ஆனால் நக்கலாக மனுஷங்களைச் சொல்வதுண்டுதான்!!!
காணொளி கண்டேன், படங்கள் மிகவும் அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி கில்லர்ஜி!
கீதா
எத்தனை தகவல்கள்..... பல தெரியாத தகவல்கள். உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குவெங்கட்ஜி நிறைய நமக்குத் தெரியாத ஆனால் சுவாரசியமான தகவல்கள் விஷயங்கள் இருக்கின்றன.
நீக்குஉங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது//
ஹாஹாஹாஹா வெங்கட்ஜி - அதுக்கான என் பட்டியல் பெரிது!!!
ஏட்டுப் படிப்பு ...தேர்வு தவிர.....அடுக்களையிலிருந்து தொடங்கினால்... புகைப்படம்/காணொளிகள் எடுப்பது பயணம் செய்து ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது, இயற்கையை ரசிப்பது, வாசிப்பது, புதியன தெரிந்துகொள்வது, தேடுவது....மனிதர்களைப் படிப்பது, நாலு சக்கரம் ஓட்டுவது என்று பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பட்டியல். எல்லாம் செய்ய முடியுமா!!! எனவே முடிந்ததைச் செய்வதென்றாகிவிட்டது!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
இன்று கொஞ்சம் பிஸி. எல்லோருக்கும் மாலையில் விரிவாகப் பதில் தருகிறேன்...
பதிலளிநீக்குகீதா
நாணல் காய்ந்தால் கோரை! நாணல் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். வெளிக்காதானுக்கு நேர்மார் நாணல்.
பதிலளிநீக்குஸ்ரீராம், இதிலும் பல இனங்கள், வகைகள் இருக்கின்றனவாம்....தேடிய போது நிறைய தெரிய வந்தது. எல்லாம் எழுதினால் தாவரவியல் வகுப்பாகிவிடுமே என்று...எழுதவில்லை. நாணல் / கோரை என்பது பொதுப்பெயர்.
நீக்குவெளிக்காதானுக்கு/
???????
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
வளையாதவனுக்கு? அமைதியான ந்தியினிலே ஓடம்... பாடலில் வரிகள் உண்டு
நீக்குஓ!! ஒப்பீட்டு வரி?! நாணல் காற்றடித்தால் சாய்வதில்லைன்னு வரும் அர்த்தமா..
நீக்குகீதா
இந்தப் புதரில் கூடு கட்டுவது பாதுகாப்பானதா? தண்ணீரை விழுந்தோ, மூழ்கியோ விடாதா?
பதிலளிநீக்குஸ்ரீராம் நானும் யோசித்திருக்கிறேன் பார்த்தப்ப....ஆனா அவை ரொம்பக்கவனமாக, அந்தபடுகை உயரமாக இருந்தாலும் அதற்குள்ளும் புல் தழைகள் எலலம் சேர்த்து நிறைய வைத்துக் கூடு கட்டுகின்றன.
நீக்குவேறு ஒரு கோழி வகை கூடு கட்டுவது எடுத்து வைத்திருக்கிறேன். தனிப் பதிவாக வரும்.
ஆனால் ரொம்பவே ஆராய்கின்றன அவை இருந்தாலும் இயற்கை கொஞ்சம் புரண்டால் கஷ்டம்தான் அவற்றிற்கு...
மிக்க நன்றி ஸ்ரீராம்...
கீதா
பாடம் நடத்துவது போல நிறைய விவரங்கள் வரிசையாக கொடுத்துக் கொண்டே வருகிறீர்கள். நமக்குதான் படித்த உடன் மறந்து போகுமே...!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா தாவரவியல்/பறவையியல் பாட வகுப்பாகிடுச்சோ!!!
நீக்குஆஆஆ! அப்ப செயற்கை நாணல் படுகை அடுத்த பதிவில் வருமே...நீங்க கூடக் கேட்டிருந்தீங்களே அது எப்படி இருக்கும் என்று போன பதிவில் நான் சொல்லியிருந்தப்ப....அதுவும் வகுப்பாகிடுமோ அப்படினா!!! ஹிஹிஹிஹி
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
இவ்வளவு அறிந்த பறவைகள் இந்தப் புதர்கள் நகரும் என்று அறியாதவையாய் இருக்குமா என்ன?
பதிலளிநீக்குஸ்ரீராம் நானும் நினைத்தேன் இதை. ஆனால் அவற்றிற்கு வேறு எங்கு இடம் அவர்ற்றின் இனத்தைப் பெருக்க? கூடவே தெரிந்திருந்தாலும் அது நகரும் போது கொஞ்சம் அங்கும் இங்கும் அலைந்தன அப்புறம் ஏறிக் கொண்டுவிட்டன....நமக்கும் என்னதான் எதிர்பார்த்திருந்தாலும் சிலப்போ ஒரு சின்ன தடுமாற்றம் பதற்றம் வருமே அது போல என்று தோன்றியது...
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
பெரிதான பதிவு..
பதிலளிநீக்குஇருந்தாலும் சிறப்பு.. அரிய தகவல்களின் தொகுப்பு..
அந்தக் காலத்தில் "சம்பந்தட்டி" என்று கூவிக் கொண்டே சுருள் பாய்களை விற்று வருவார்கள்.. தாழ்வாரங்களில் கட்டித் தொங்க விடும்போது வீட்டுக்குள் குளிச்சியாக இருக்கும்..
பறவைகளின் ஆனந்த வாழ்க்கையைத் தான் பல விதங்களில் அழித்துக் கொண்டு இருக்கின்றோமே!..
தாமதமான வருகை.. பொறுத்துக் கொள்ளவும்..
ஆமாம் சம்பந்தட்டி என்று பாய்கள் விற்கப்படுவதுண்டு. மறைப்பாகவும் விரிப்பதுண்டு. தாமதமாக வந்தால் என்ன பரவாயில்லை, துரை அண்ணா
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
சம்பு தாவரத்தை நிறைய ஏரிகளில் நான் பார்த்துள்ளேன்... அப்போதெல்லாம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துபவை மெத்தென்று காட்சியளிக்கும் அதன் "கதிர்" கள்தான்...
பதிலளிநீக்குசம்பு தாவரத்தை நிறைய பார்க்கலாம். அதன் கதிர்கள் வெடித்ததும் மெத்தென்று பஞ்சுபோல இருக்கிறது.
நீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா உங்கள் கருத்திற்கு
கீதா
நாணல் படுகை, புற்களை பற்றிய விளக்கம் மிகவும் அருமை.
பதிலளிநீக்குபறவைகளின் படங்கள், காணொளி எல்லாம் மிக அருமை.
நிறைய விஷயங்களை சேகரித்து கொடுத்து விட்டீர்கள்.
பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும், காஷ்மீரின் புகழ்பெற்ற இந்தக் கடைசி ஈர/சதுப்பு நிலமான ஹோக்கர்சரைக் காப்பாற்ற அரசு ஆவன செய்தால் நல்லது. //
ஆமாம். பல உயிரினங்கள் வாழும் இடத்தை காப்பாற்றினால் நல்லது.