செவ்வாய், 29 டிசம்பர், 2015

மாறுமா தமிழகத்தின் தலைவிதி?! - 2 (பொதுச்சுகாதாரம்-சென்னை)

படம் - இணையத்திலிருந்து

வெள்ள நிவாரணப்பணிகள் பல தன்னார்வலர்களின் உதவியுடன் மின்னல் வேகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஒருபுறம். மறுபக்கம், ஏற்கனவே, குப்பைகள் மண்டிகளாய் பொதுச் சுகாதாரம் துளியும் இல்லாத தமிழ்நாட்டின் தலைநகரில், வெள்ளத்தினால் அடித்து ஒதுக்கப்பட்டக் குப்பைகளும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததானால் வீணாகிப் போன பொருட்களும் குப்பைகளாய் மலை போல் ஒவ்வொரு தெருவிலும் குவிந்து, மக்கி நாற்றமெடுத்தக் குப்பையும் சேர்ந்து கொண்டு பொதுச்சுகாதாரம் பயமுறுத்தியது. சாதாரண நாட்களிலேயே சென்னையைச் சுத்தப்படுத்தல் என்பது மலையைப் புரட்டும் வேலைதான் எனும் போது இப்போதோ?

சிங்காரச் சென்னையாக்கப் போகின்றோம் என்று சொல்லியவர்கள் எல்லாம் காணாமல் போயிருக்க, அரசும் மெத்தனமாக இருக்க, பொது மக்களும் கூட தங்கள் பகுதியைச் சுத்தப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாத போது, சுத்தப்படுத்தலிலும் கூட தன்னார்வலர் குழு ஒன்று இறங்கியது களத்தில்.  அவர்தான் பீட்டர் வான் கெய்ட். சென்னை ட்ரெக்கிங்க் க்ளப் எனும் குழு/தளம் அமைத்து நிறுவி வருபவர். இவரைப் பற்றி எங்கள் ப்ளாகில் பாசிட்டிவ் செய்தியிலும் வந்தது.

படம் இணையத்திலிருந்து 
பீட்டர் குழுவினர் எல்லோருமே இளைஞர்கள், நடுத்தரவயதினர். மட்டுமல்ல நல்ல வேலையில் இருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சுத்தம் செய்து வந்த வேளையில் சென்ற ஞாயிறு (20/12/2015) அன்று கோட்டூர்புரத்தில், அடையாற்றை ஒட்டினாற் போல் அதன் கரையில் அமைந்திருக்கும் சித்ராநகர் எனும் பகுதியில் சுத்தம் செய்தனர்.

அன்று பீட்டர் குழுவுடன் இணைந்து, நிசப்தம்-வா மணிகண்டனும் கலந்து கொள்ளப்போவதாகவும் ஆர்வம் உள்ளவர்கள் கை கொடுக்கலாம் என்றும் தனது வலைத்தளத்தில் அறிவித்திருந்தபடி, அவரும் அவரது நண்பரும், கலந்து கொண்டனர். நிசப்தம் வாசகர்களில் 2, 3 பேர் கலந்து கொண்டதாக மணிகண்டன் நிசப்தத்தில் எழுதியிருக்கிறார். ஏற்கனவே நான் சிறிய அளவில் செய்துவந்தாலும், இந்தக் குழுவுடனும் கலந்து கொள்ள முடிவு செய்து கலந்து கொண்டேன்.

ஒரு குடும்பமே தாம்பரத்திலிருந்து வந்திருந்தது! குழுவினர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு சிறிய முணுமுணுப்பும் கூட இல்லாமல் சென்னையைச் சுத்தம் செய்து வருபவர்கள். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும், அகராதியில் கூட அதற்கு வார்த்தைகள் இல்லை எனலாம். ஏனென்றால், அந்தக் குப்பைகளை அள்ளுவது என்பது அத்தனை எளிதல்ல. அருகில் கூடச் செல்ல முடியாத அளவிற்கு நாற்றம்.

எனது இரு அனுபவங்களிலிருந்தும் நான் அறிந்து கொண்டது. நாம் சுத்தம் செய்யும் பகுதியைச் சேர்ந்த மக்கள் (இளைஞர்கள் உட்பட) எல்லோருமே வேடிக்கைப் பார்க்கின்றார்கள், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத்தைப் போல, உதவும் மனப்பான்மையற்று இருப்பதைப் பார்க்க முடிந்தது. இதோ இங்கு குப்பை இருக்கிறது, அதோ அங்கு இருக்கிறது என்று கை வேறு காட்டினரே தவிர மிக மிக அலட்சியப் போக்கு. சுத்தம் செய்யப்படும் பகுதியில் அடுத்த நாள், இல்லை, அடுத்த வேளையே அவர்கள் குப்பை போடத்தான் போகின்றார்கள் என்பதும் தெரிந்ததுதான்.

எனக்கு சற்று வேதனையும், கடுப்பும் வரத்தான் செய்தது, இலவசத்திற்கும், தன்னார்வலர்கள் தங்கள் உழைப்பில் கொடுத்த நிவாரணப் பொருட்களுக்கும் ஓடிவரத் தெரிந்தவர்களுக்குத், தங்கள் பகுதியைச் சுத்தம் செய்யும் பொறுப்பற்ற மனதையும், செய்பவர்களுடன் சிறு ஒத்துழைப்பைக் கூட கொடுக்க முன்வரும் எண்ணமுமற்ற, அலட்சிய மனப் போக்கையும் கண்டு. அப்படி ஒரு பொறுப்புணர்வு இருந்திருந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே வெள்ளம் வடிந்த உடனேயே சுத்தம் செய்திருப்பார்களே!

எனக்குத் தோன்றியது என்னவென்றால், தன்னார்வலர்களும் சரி, துப்புரவுப் பணியாளர்களும் சரி, ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது அந்தப் பகுதி மக்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வைக்கலாமோ என்று. அப்படியாவது மக்களுக்கு ஒரு உணர்வும், பொறுப்பும் வராதோ என்ற ஒரு ஆதங்கம். மேட்டுக் குடி மக்கள் என்றில்லை, சாதாரண மக்களும் அலட்சியமாகப் பொறுப்பற்றுத்தான் இருக்கின்றனர்.
 
என்னுடன் பயணித்த துப்புரவுப் பணியாளப் பெண்மணி ஒருவரிடமிருந்து அறிந்தவை. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் துப்புரவுப் பணியாளர்களும் சென்னையைச் சுத்தம் செய்யும் பணிக்காக வந்துள்ளனர்.  மட்டுமல்ல சென்னையைச் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சியின் ஒப்பந்த அடிப்படையிலும் மக்கள் சேர்க்கப்பட்டுச் செய்துவருகின்றனர். சென்னையைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்களில் பலரும் தங்கள் வீடுகளையும், குருவி சேர்ப்பது போல் சேர்த்த பொருட்களையும், நெருங்கிய உயிர்களையும் இழந்தவர்கள். சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்கள். (எனக்கு அப்படி அவர்களை அழைப்பதில் விருப்பம் இல்லாததால் சொல்லவில்லை.  அவர்களும் மனிதர்கள்!)


இந்த மக்களில் பெரும்பான்மையோர், மக்கிய, துர்நாற்றம் வீசும் குப்பைகளை, வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட கழிவறைகளும், மனிதக் கழிவுகளும் அடங்கிய குப்பைகளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் (கையில் உறையோ, முகத்தில் மாஸ்க்கோ, காலில் பூட்சோ இல்லாமல்) அள்ளுகின்றார்கள். இவர்களுக்கு எந்தவிதத் தொற்றும் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இவர்களுக்குத் தரப்படும் கூலியோ மிகவும் குறைவு. அரசு எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கவில்லை. எங்கள் பகுதியில் சுத்தம் செய்யும் பெரியவர் உட்பட. சென்னை மக்கள் இந்த மக்களுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள் மட்டுமல்ல, தங்கள் பொறுப்பற்ற நிலைக்கு வெட்கித் தலைகுனியவும் வேண்டியவர்கள். உண்மையான ஹீரோக்கள் இந்தத் துப்புரவுப் பணியாளர்கள்!

 கோட்டூர்புரம் ஹவுசிங்க் போர்ட் பகுதி - படம் - இணையத்திலிருந்து

இப்போது அள்ளப்படும் குப்பைகளில் ப்ளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னால், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்துப் பிரித்து இடும் பழக்கம் கொண்டுவரப்பட்டு இப்போது கிடப்பில். இதுதான் நம்மூர் பழக்கம்.  அரசு குப்பைகள் அள்ளும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த வேண்டும். செய்யுமா? கேள்விக்குறியே! 

எந்தச் சட்டதிட்டமும் வன்மையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் நிசர்சமான உண்மை. அதனால் மக்களும் மெத்தனமாகி அதற்குப் பழகியேவிட்டனர். ஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பொறுப்புடன் ஒத்துழைக்காவிடில், சென்னையின் சுத்தமும் சிங்காரச் சென்னைக் கனவும் மிகப்பெரிய சவலாகவே இருக்கும். கடலூரிலும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன். இந்தப் பொதுச் சுகாதாரச் சுத்தம் என்பது தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும். இது ஒருபுறம்... மறுபுறம் ....தொடரும்..நாளை

----கீதா

(ஸ்கூப் ந்யூஸ்! வலைப்பதிவர்கள் எங்களிடமிருந்து வாழ்த்துகள் செந்தில்!! ஐந்து மாநிலங்கள் சேர்ந்து நடத்தவிருக்கும் விவசாயம் சம்பந்தப்பட்ட விழாவில் நம் நண்பர் கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் பரிசு பெறப் போகின்றார், விவசாயத்தைப் பற்றிய பத்திரிகை நடத்துவதற்கு, 103 பேர் பரிசு பெறுவதில் ஒருவராக என்பதை இங்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் விவரங்கள் அவரது தளத்தில் அவர் பரிசு பெற்றதும் பகிரப்படும்.)


22 கருத்துகள்:

  1. வணக்கம்

    தாங்கள் சொல்வது உண்மைதான்.. அரசியல் வாதிகளை விட மக்கள் உணர வேண்டும்... அப்போதுதான் சிங்கார சென்னையாக உருவெடுக்கும் ஆழமான கருத்தை சொல்லியுள்ளீர்கள். த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  2. சுத்தம், சுகாதாரம்,
    சீரான பாதைகள், தங்கு தடையின்றி ஓடும் ஓடைகள்,
    போக்கு வரத்து கண்காணிப்பு, மக்கள் பாதுகாப்பு,
    நீர், காற்று மாசில்லாது காப்பது,
    கல்வி, மருத்துவம்,
    இவையெல்லாம் மட்டுமே ஒரு அரசின் முதற்பணியாக இருத்தல் வேண்டும்.

    இவற்றிற்கான செலவுகளைக் குறைத்து
    இலவசங்கள் வழங்கப்போய் தான்
    இன்றைய அவல நிலை உருவாகிறது. உருவானது.

    பலன்களை இலவசங்களை வாங்கியவர் பலரும்
    அனுபவிக்கின்றனர்.

    விழிப்புணர்வு தேவை. யாருக்கு ?
    விதியை நிர்ணயிப்பவருக்கு முதலில்.

    சு தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுப்புத்தாத்தா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..கடைசி வரிகளின் அர்த்தம் நன்றாகவே புரிகின்றது..

      நீக்கு
  3. நல்ல பதிவு.அத்துனை பேருக்கும் வாழ்த்துக்கள் சேவை செய்வதும் எளிதல்ல என்பது புரிகிறது.ஏதோ அரசாங்கப் பணியாளர்கள் வந்து வேலை செய்கிறார்கள் என்று அலட்சியமாக நினைப்பார்கள். முதலில் சுத்தப் படுத்தும் பகுதியில் முதலில் வீடுவீடாக சென்று பேசவேண்டும்.நம் பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற மன நிலையை உருவாக்க வேண்டும். அவர்களுக்கும் பங்கு உள்ளது என்பதை உணர வைக்க வேண்டும். அது அவ்வளவு எளிதானதன்று. குப்பைகள் சார்ந்து கடுமையான சட்டங்களும் அதை மீறுவோருக்குதண்டனையும் வழங்கப் படவேண்டும்.
    சிறப்பான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முரளிதரன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டிற்கும்!!

      நீக்கு
  4. இந்த பதிவை படித்துமுடித்தபோது ஒரு பக்கம் மனசு இரு விஷயங்களுக்காக மகிழ்ச்சி அடைந்த அதே நேரத்தில் வேதனையும் அடைந்தது.
    மகிழ்ச்சி - தன்னார்வலர் குழு எந்த விட எதிர்ப்பார்ப்போடு இல்லாமல் சென்னையை சுத்தம் செய்தது. மற்றொன்று செந்தில் பரிசு பெறுவது. செந்திலுக்கு வாழ்த்துக்கள்.
    வேதனை - நம் மக்கள் இன்னும் திருந்தவில்லையே என்பது தான். அதிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, இங்க இருக்கிறது, அங்கு இருக்கிறது என்று சொல்லியதை படிக்கும்போதே எனக்கு அப்படி ஒரு எரிச்சல். இவர்கள் எல்லாம் எப்பொழுது தான் திருந்த போகிறார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சொக்கன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  5. ஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பொறுப்புடன் ஒத்துழைக்காவிடில், சென்னையின் சுத்தமும் சிங்காரச் சென்னைக் கனவும் மிகப்பெரிய சவலாகவே இருக்கும்.
    உண்மைதான் சகோதரியாரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையார் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  6. தன்னார்வலர்களின் சேவை கண்டு மனம் நெகிழும் அதே நேரத்தில் ரோம்ப வேதனையாகவும் இருக்கிறது. அவர்கள் பாதுகாப்புக் கருதி அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமையும் உபகரணங்கள் எதுவும் வழங்காமையும். அத்துடன் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்ப்பதையும் கேட்க நெஞ்சு பொறுக்குதில்லை. என்னமோ எப்படி திருந்துவார்களோ இத்தனைக்குப் பிறகும் திருந்தாவிடில் யார் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். சிறப்பான தோர் பதிவு கீதா நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இனியா சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  7. அருமையான பகிர்வு, அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள், இன்றைய நிலைகளைப் பார்க்கும் போது தமிழகம் மாறுமா என்பது கேள்விக்குறியே, நாம் தான் நம்மைச் சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாக வைக்க முயற்சிக்கனும், எல்லாவற்றையும் பிறர் தான் செய்ய வேண்டும் என்று சொல்வது தவறு இல்லையா? செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஸ்வரி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  8. அனைவருக்கும் பாராட்டு!வருந்திப் பயனில்லை இதுதான் அவர்களின் நடைமுறை!செந்திலுக்கு வாழ்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  9. வணக்கம் நல்லதொரு அலசல் குப்பைகளை சொல்லவில்லை மனித மனங்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள் என்று சொல்லிவி விட்டு மீண்டும் அயோக்கியர்களுக்கே அந்த வாய்ப்பை கொடுக்கின்றோம்.
    மக்கள் மனதில் மாற்றம் வராதவரை மீண்டும் இதே குப்பை வாழ்க்கைதான்.
    நண்பர் திரு. எஸ்.பி. செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்!

      நீக்கு
  10. நம் மக்கள் பொறுப்புணர்வு அற்றவர்கள் என்பதை சொல்லிய பதிவு. ஆனாலும் மற்றவர்களின் பொறுப்புணர்வு. நிம்மதியை தருகிறது. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
    என்னுடைய விருதை முன்னதாக நண்பர்களுக்கு சொன்னதற்கும் நன்றி!
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ செந்தில் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      உங்கள் விருது உண்மையாகவே மனதிற்கு மிகவும் மகிழ்வு தந்தது. மட்டுமல்ல துளசியிடம் சொன்ன போது அவர் உடனே அதைப் பின்குறிப்பு கொடுத்துப் போட்டுவிடு இன்றே போடும் பதிவில் என்று உடனே சொல்ல...யாம் அடைந்த மகிழ்வை இவலையுலகம் அடையட்டுமே என்றுதான்... சகோ. வாழ்த்துகள் எங்கள் இருவரிடமிருந்தும்!

      நீக்கு
  11. இன்றைய சமூகத்துக்கு உரைக்க வேண்டிய செய்திகள் தாங்கிய கட்டுரை. இதே போன்ற ஒரு கட்டுரை இரு கிழமைகளுக்கு முன் 'ஆனந்த விகட'னிலும் வெளிவந்தது. அதிலிருக்கும் பல கருத்துக்களைத் தாங்கள் இக்கட்டுரையில் உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள். இன்று, விகடன் எதை எழுதினாலும் அதற்குத் தி.மு.க சாயம் பூச ஒரு கையில் கறுப்புச் சாயமும் ஒரு கையில் சிவப்புச் சாயமுமாய் 'வெள்ளுடை' அணிந்த பலர் கிளம்பியிருக்கிறார்கள். களப் பணியில் ஈடுபட்டவர், எல்லாவற்றையும் கண்ணால் பார்த்தவர், எந்தக் கட்சிச் சார்பும் இல்லாத நடுநிலையாளர் எனும் முறையில் நீங்கள் சொல்வதிலிருந்தாவது இவையெல்லாம் உண்மை என்பதைத் தமிழ் சமூகம் உணரட்டும். இதே போல, செம்பரம்பாக்க ஏரித் திறப்புக் குறித்தும் ஒரு பதிவை ஆய்ந்து அலசி எழுதினீர்களானால் உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போடுவேன்! (வணங்குதல் எனும் முறையில்தான்).

    பதிலளிநீக்கு
  12. //எல்லோருமே வேடிக்கைப் பார்க்கின்றார்கள், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத்தைப் போல, உதவும் மனப்பான்மையற்று இருப்பதைப் பார்க்க முடிந்தது. இதோ இங்கு குப்பை இருக்கிறது, அதோ அங்கு இருக்கிறது என்று கை வேறு காட்டினரே தவிர மிக மிக அலட்சியப் போக்கு.// இதை சென்னை, அம்பத்தூர் வீட்டில் இருந்தப்போ நேரிலேயே அனுபவித்திருக்கிறோம். நாங்கள் எங்கள் பகுதியைச் சுத்தம் செய்கையில் பக்கத்துக் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்தோர் ஓர் ஏளனச் சிரிப்புடன் பார்ப்பார்கள். அவர்கள் வீட்டுக் குப்பைகளையும் போடுவதோடல்லாமல், ஏன் போடறீங்கனு கேட்டால் நீங்க குப்பை அள்ளும்போது இதையும் சேர்த்து அள்ள வேண்டியது தானே என்பார்கள். மனசாட்சியே இல்லாமல் செப்டிக் டாங்கைச் சுத்தம் செய்து அதன் கழிவுகளை எங்கள் வீட்டு வாசலில் வண்டியை ஏற்றும் சாய்வுப் பாதையில் கொட்டிவிட்டுச் சிரிப்பார்கள். இவர்களும் மனிதர்கள் என்ற பெயருள்ளவர்களே! :(

    பதிலளிநீக்கு