சனி, 1 மார்ச், 2014

உயிரே உன் மதிப்பென்ன?!


     உயிர் என்பது கண்ணுக்குப் புலப்படாத, உணர்வு பூர்வமான, மிகவும் அதிசயமான, அறிவிற்கும் எட்டாத ஒன்று! இந்த உடம்பை உயிர்ப்பித்து, அது எந்த உருவமாக இருந்தாலும், தன் இருப்பிடமாகக் கொண்டது.  இந்த உலகில் வாழும் எந்த ஜீவ ராசியாக இருந்தாலும், நுண்ணுயிரியிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் வரை, வெளித் தோற்றம்தான் வேறு அல்லாது அதனுள் இருக்கும் உயிர் எல்லா ஜீவரசிகளுக்கும் ஒன்றுதான். இந்த உயிர் தன் இருப்பிடத்திற்குள் எந்த நொடியில் உருவாகின்றது, அந்த இருப்பிடத்தை விட்டு எந்த நொடியில் பிரியா விடை கொடுக்கின்றது என்பது, எந்த மருத்துவ நிபுணருக்கும், அறிவாளிக்கும், எக்காலத்தும் புலப்படாத விடை, புதிர்தான்! எத்தனை அறிவியல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் இதற்கு விளக்கம் இல்லை என்பதுதான் உண்மை!  ஏனென்றால், ஒரு உயிர் உருவாகி, இந்த உலகை எட்டிப் பார்த்து, இந்த உலகம் அதை வரவேற்கும் முன்னரேயே  கூடப் பிரிய வாய்ப்புண்டு!


     உருவாகும்போதே பாதியில் பிரிய வாய்ப்புள்ள உயிர், ஒருவேளை பாதியில் பிரியாமல், பல தடைகளைத் தாண்டி, அந்த உயிர் ஏதோ ஒரு வடிவில், விலங்காகவோ, பறவையாகவோ, பயிராகவோ,  இல்லை ஆறறிவு படைத்த மனிதனாகவோ இந்த உலகை எட்டிப் பார்த்தால், அந்த உயிரின் விலையில்லா மதிப்பை உணர்ந்து, மனதில் கொள்ளத்தானே வேண்டும்?! பொதுவாக, நாம், வாழ்க்கையில் எத்தனைத் துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தாலும், நம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவதில்லைதானே! அபடித்தானே மற்ற உயிர்களும்? இந்த விலை மதிக்கமுடியாத உயிர் இன்று, உலகில், மனிதர்களிடம் அகப்பட்டுக் கொண்டு படாதபாடு படுகின்றதோ?!


     சிலநாட்களுக்கு முன் நான் சீருந்தில் (கார்) சென்று கொண்டிருந்த போது ஒரு பெரிய மேம்பாலத்தில், அது அரைவட்டமாக வளைந்து கீழிறங்கும் பகுதியில் மிகவும் மெதுவாகச் சென்று கொண்டிருந்தேன்.  அந்த அரைவட்டம் கீழிறங்கி பிரதான சாலையோடு இணையும் இடத்தில் நான் இறங்கிக் கொண்டிருந்த போது, என் இரு புறமும் புற்றீசல்கள் போல் இருசக்கர வாகனங்கள் மிக வேகமாக ‘விர் ‘விர் என்று பறந்தன. எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த அவசரம்? இந்த வேகத்தினால் இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? யாரை வென்று எதை ஜெயிக்கப் போகின்றார்கள்? எதற்காக இந்த விவேகம் இல்லாத வேகம்?  இந்த வேகம் நல்லதல்லவே. அதுவும் சாலை இறங்கும் இடத்தில் பக்கவாட்டில் உள்ள இரு சாலைகளிலிருந்து பல வண்டிகள் வந்து பிரதான சாலையின் போக்குவரத்தோடு இணையும் அந்த இடத்தில் இந்த வேகம் ஆபத்தை விளைவிக்குமே என்ற எண்ண ஓட்டத்துடன் நான் ஓட்டிக் கொண்டிருந்தேன்.


என் கண் முன்னேயே, என்னைத் தாண்டிச் சென்ற அந்தப் புற்றீசல்களில் இரண்டு தடுமாறின. பல வண்டிகளுடன், ஒரு பெரிய வாகனம் பக்காவாட்டுச் சாலையில் இருந்து பிரதான சாலையில் இணைய, அது எதிர்பாராத விதமாக வேகத்தடையை உபயோகித்து நிற்க, மற்றொரு புற்றீசல் அதன் மீது மோதி தூக்கி எறியப்பட்டது.  நான் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், என் கண் முன் அது நடக்கும் போது சற்று அதிர்வாகத்தான் இருந்தது. அந்த உயிர் நிலை கொண்டதா இல்லை, அமைதியாகிப் பிரிந்ததா, இல்லைத் தடுமாறிக் கொண்டிருக்கின்றதா  என்று தெரியவில்லை! ஆனால், இந்த விபத்தால், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் வந்ததும், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதும் மட்டும் தெரியும். “உயிரே!  உயிரே! வந்து என்னோடு கலந்து விடு! என்று மரணம் அழைக்கின்றதோ!

     விபத்துக்குள்ளானவர் இளைமையானவர், 28 வயதுக்குள் இருக்கலாம்.  இன்னும் அவர் தன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்! அவருக்குப்  பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தவர், சுற்றத்தார் இருக்கலாம். அவரையே சார்ந்து கூட அந்தக் குடும்பம் இருக்கலாம்! எத்தனையோ கனவுகளுடன் அவரும், அவரது குடும்பமும் இருந்திருக்கலாம். அப்படி இருக்கும் போது அவர் இன்னும் அதிகமான கவனத்துடன் வண்டி ஓட்டியிருக்க வேண்டும் இல்லையா? இந்த விபத்து பற்றி அறிய நேர்ந்தவுடன் அந்தக் குடும்பத்தின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மனம் துடித்திருக்கும். ஒருவேளை அந்த மனிதர் காப்பீட்டுத்திட்டம் எடுத்திருந்தால், அதன் மதிப்புதான் இந்த உயிரின் விலையா?  மதிப்பா? இது ஒரு புறம் இருக்க...


சாலையில் குறுக்கிடும் விலங்குகள், பல சமயம், நமது கவனக் குறைவாலும், தவறான அணுகு முறையாலும் அடிபட்டு இறக்கின்றன!  அது “அது தானே என்ற அலட்சியப்போக்கா? அதே சமயம் அந்த விலங்குகள் வீட்டில் வளர்க்கப்படுபவையாக இருந்தால், அவற்றை வளர்ப்பவர்கள் வந்து, அதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லி (ஆடு, மாடு, கோழி...) அதற்கு நஷ்ட ஈடாகப் பணம் கேட்டுக் கோரிக்கை வைப்பதும் உண்டு! நியாயம்தான்! ஆனால், அந்தப் பணம் தான் அந்த உயிரின் மதிப்பா?  விலையா?  எத்தனை நாட்களுக்கு? இவ்வளவு ஏன்? மரம், செடி, கொடிகள் எல்லாவற்றிற்கும் கூட உயிர் உண்டுதான்! அவற்றின் காய்களையோ, பூக்களையோ நாம் பறிக்கும் போதும், அவற்றை நமது சுய லாபத்திற்காக வெட்டிச் சாய்க்கும் பொதும், விலங்குகளின் உயிரைப் பறிக்கும் போதும், அவற்றின் அனுமதியை நாம் பெறுகின்றோமா?


சுற்றுச் சூழலை மாசுபடுத்தியும் பல உயிர்களை வதைக்கின்றோம், பல உயிர் இனங்களை அவ்வின்ங்களே இல்லாது வேரோடும் அழித்து விடுகின்றோம்!


     நிற்க, மேற் சொன்ன சாலை விபத்துகள், அழிவுகள் ஒரு புறம் இருக்க மறுபுறம், ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நம்மில் எத்தனை பேர், இறைவனால்/இயற்கையால் தரப்பட்ட இந்த அற்புதமான, நம் அறிவுக்குப் புலப்படாத பல அதிசயங்களைச் சுமக்கும் இந்த உடலைப் பேணுகின்றோம்? அதன் உயிரை மதித்து அதன் ஆரோக்கியத்தைப் பாது காக்கின்றோம்? அதில்தான் எத்தனை அலட்சியப் போக்குகள்! நம் உடலானாலும் சரி, மனதின் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையினாலும், அலட்சியப் போக்காலும் பல நோய்களை வரவழைத்துக் கொண்டு நம் உயிரை மாய்த்துக் கொள்வதும், மன ஆரோக்கியம் கெடுவதால் தற்கொலை செய்து கொள்வதும், நாம் நம் உயிரை மதிக்காமல் இழிவுபடுத்துவதைத்தானே குறிக்கின்றது?!

கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சி. நண்பர் துளசியின் பள்ளி மேனஜ்மென்டின் உறுப்பினர் ஒருவரின் மகன் பொறியாளராகப் பங்களூரில் வேலை செய்கிறார். மணமாகி ஒன்றரை வருடமே ஆகியிருந்தது.  மனைவி ஒரு ஆயுர்வேத மருத்துவர்.  அவர்களுக்கிடையில் ஏதோ பிரச்சினை.  பிரச்சினையை தீர்க்க அந்த மருத்துவர் கண்ட ஒரே வழி தற்கொலை. இப்போது, கணவன் விசாரணைக் கைதி.  இதெற்கெல்லாம் என்ன நியாயங்கள் சொல்லப்பட்டாலும் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  படித்தவர்கள் இப்படி நடப்பதை பார்க்கையில், உயிருக்கு என்ன மதிப்பு என்று மனது வலிக்கத்தான் செய்கிறது.

கரு வளரும் சமயம் அதன் உயிர் பிரிவதும், சிறு வயது மரணங்களும், அகால மரணங்களும் ஒரு புறம் இருக்க, வளரும் கரு, பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை அழிப்பதும், பிறந்த குழந்தை பெண் குழந்தையானால், அதை நெல் மணிக்கும், கள்ளிப் பாலுக்கும் தாரை வார்ப்பதும், நாம் ஒரு உயிரை எவ்வளவு துச்சமாகக் கருதுகின்றோம் என்பதற்கானச் சான்றுதானே!


அனாதைகளாக வாழ்ந்து உயிர் பிரியும் மனிதர்கள் எத்தனை பேர் உள்ளனர்! வயதானாலும் உயிர் பிரியாமல், படுத்த  படுக்கையாக இருந்தாலும் அது ஊசலாடிக் கொண்டிருக்கும் தருணங்களில், நாம் பொறுமையிழந்து “இந்தக் கிழம் எப்ப மண்டையப் போடுமோ என்று அங்கலாய்க்கும் தருணங்களும், மனிதர்களும் இருக்கத்தானேச் செய்கிறது நம் சமூகத்தினில்?!! அது சுற்றி இருப்பவர்களின், பணி செய்த களைப்பினால் வரும் வார்த்தைகளா இல்லை அந்த உயிர் பிரிந்து பிணத்தின் பின் வரும் பணத்திற்காக வரும் வார்த்தைகளா? எதுவாக இருந்தாலும் அந்த உயிர் இது போன்ற நிலைகெட்ட மனிதர்களின் வாயில் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கும்! ஆறறிவு படைத்த மனித குலம் எவ்வளவு கேவலாமாகவும், கீழ்தரமாகவும், ஆகிவிட்டது என்பதற்கான அடையாளங்கள் தானே மேற் சொல்லப்பட்ட உண்மைகள்? 

இது மட்டுமா? மனித குலம் மேற்கொள்ளும் போர்களும், குண்டுவெடிப்புகளும், காவல் துறை மேற்கொள்ளும் துப்பாக்கிச் சூடும் இதில் அடக்கம்தான்! உயிருக்கு மதிப்பு என்பது ரத்த வெள்ளம்தான்! பரிதாபம்!


இந்த இடத்தில், எங்கள் குடும்ப உறுப்பினரான ஒருவர்  மறதியாலும் (Alzheimer), நீரிழிவு நோயினாலும் (Diabetes) பாதிக்கப்பட்டத்  தனது அப்பாவை, அவரது இறுதி மூச்சு வரை மிக நேர்த்தியாக, எந்தவித மனவருத்தமுமோ, குறைபாடோ, அலுப்போ, சலிப்போ இல்லாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கூடப்பிறந்தவர்கள் இருந்தும், தனி ஆளாகக் கவனித்துக் கொண்டதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும்! அவர் தன் வேலையில் இருக்கும் சமயம், அப்பா எழுந்தால் தெரிய வேண்டும் என்று அப்பாவின் கட்டிலுக்கடியில், அவரது கால் பதியும் இடத்திற்கருகில் ஒரு சென்சர் கருவி வைத்து, அது ஒலிஎழுப்பும் சமயத்தில் உடனே அப்பாவைக் கவனித்து, அவருக்குத் தேவையான பணிவிடை செய்து, அவர் மலம் கழிக்கக் கஷ்டப்பட்ட போது (மலம் வாதி வழியிலேயே நின்று விடும் சமயம்), கையில் உறை அணிந்து அதை மெதுவாக வெளியேற்றி, தந்தைக்கு கொடுக்க வேண்டிய நல்ல சத்துணவை அவ்வப்பொழுது செய்து கொடுத்து கவனித்துக் கொண்ட விதம் மிகவும் பாராட்டிற்குறியது!  இது போன்று, உயிருக்கு மதிப்பு கொடுக்கும், விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள், நமக்குப் பாடம் புகட்டும் வகையில்!

மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று: எல்லா உயிருமே ஒரு நாள், அது தங்கி இருக்கும் உடலாகிய இருப்பிடத்தை விட்டு, இந்த உலகை விட்டு விடை நல்கி, பிரிந்துதான் ஆகவேண்டும். அதுதான் உலகியல், அறிவியல் நியதி! இந்த மிகக் குறுகிய வாழ்க்கையில் கடுஞ் சொற்களால் நம்மைச் சுற்றி இருப்பவர்களை இழிவு படுத்துகின்றோம்! துன்புறுத்துகின்றோம்!  நம்மைச் சுற்றி இருப்பவர்களை அவர்கள் உயிரோடு நம்முடன் இருக்கும் வரை கவனிக்காமல், அன்பு செலுத்தாமல், அவர்கள் மனம் நோகும்படி சொற்களாலும், செயல்களாலும் வருத்தி விட்டு, அவர்கள இறந்ததும், மேளதாளங்களொடு வழி அனுப்புவதும், அவர்களுக்கு ஏதோ மரியாதை செலுத்துவது போல சடங்குகள் செய்வதும் விந்தையாகத்தான் உள்ளது! அப்படியென்றால், உயிர் பிரிந்த பிறகுதான் மதிப்போ? உயிர் இருக்கும் போது மதிப்பில்லையோ?

நம் உயிரின் மேல் மதிப்பும், காதலும் உள்ளவர்களாக இருந்தால், ஏன் சாலைகளில் வேகப் பயணமும், அலட்சியமும், விபத்துகளும்? நம் உடலின், மனதின் ஆரோக்கியத்தில் அலட்சியம்?

எனவே, நாம் உயிருடன் இருக்கும் போது நம் உயிரையும், உயிர் தன் இருப்பிடமாகக் கொண்ட இந்த உடலையும் சேர்த்துத்தான் மதிக்க வேண்டும். உயிர் பிரிந்தால் இந்த உடலுக்கேது மதிப்பு? நம் உயிரை மட்டுமல்லாது, நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஜீவ ராசிகள் ஏன், மரம் செடி கொடிகள் இன்ன பிற எல்லாவற்றையும், இந்த உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும், அவற்றின் உன்னதமான, விலை மதிக்க முடியாத உயிரையும், நாம் மதிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையை எழுதியதன் நோக்கம்!
-கீதா, துளசிதரன்


22 கருத்துகள்:

  1. நிறைய விஷயங்களை ஒரு பதிவில் சொல்ல முயற்சித்து இருக்கிறீங்க அதனால் பதிவின் நீளம் சற்று அதிகமாகிவிட்டது போல இருக்கிறது என்னைக் கேட்டால் இதை மூன்று பதிவாக இட்டு இருக்காலம் என்றுதான் சொல்வேன் கடைசியில் மகன் தந்தைக்கு செய்யும் உதவி நெகிழ வைத்தது. இந்த காலத்தில் இப்படியும் ஒரு நல்ல மகன் இருக்கிறார் என்பது சந்தோஷமே

    பதிலளிநீக்கு
  2. நல்ல இடுகை; இன்று தமிழ்நாட்டில் அதிகம் இறப்பது...RTA (Road traffic accident) மூலம் தான்
    த.ம.+1

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    காலம்கலியுகமாச்சி காலந்தான் பதில் சொல்ல வேண்டும் நல்ல விழிப்புணர்வுப் பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    சிலவாரங்கள் இணையம் வர முடியாது தங்களின் பதிவுக்கு சில நேரங்கள் கருத்து போட முடியாமல் போகலாம்.காரணம்
    அண்ணா தனபாலனுக்கு தெரியும்...

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  4. மரணம் ஒன்று உண்டு என்பதையே மறந்து விடுகிறார்களே... இருக்கிற வரைக்கும் சந்தோசமாக இருப்போம் என்கிற நினைப்பில் வாழ்வதும், அதற்காக குடும்பம் உட்பட அடுத்தவர்களின் சந்தோசத்தை கெடுத்து, வாழ்வதா வாழ்க்கை...? அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி வாழ்வது தான் வாழ்க்கை... இன்றைக்கு எதற்குமே மதிப்பில்லாமல் போய் விட்டதும் உண்மை... எதிலும் அவசரம் - "போய் சேர்வதில் கூட...!"

    நேரம் கிடைப்பின் வாசித்து கருத்துகளை பகிரவும்... நன்றி...

    மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  5. நேற்று கூட என் கண் எதிரே ஒரு கோர விபத்து.

    பதிலளிநீக்கு
  6. இப்படிப்பட்ட மகனைப் பெற அந்த தந்தை மிகவும் பேறு பெற்றவர்தான் !
    'தந்தைக்கு மரியாதை...இருந்தவரை ஏசிய பிள்ளைகள் இறந்த பின் வைத்தார்கள் ஏ சி பெட்டியில் 'என்று முன்பு நான் எழுதியது நினைவுக்கு வந்தது !
    த ம +1

    பதிலளிநீக்கு
  7. மதுரைத் தமிழனுக்கு, ஆம் கொஞ்சம் நீள் பதிவுதான். நீங்கள் சொல்லியிருப்பது போல் 2, 3 பதிவாக போட்டிருக்கலாம....ஆனால் வாசிப்பதற்கு யார்? என்ற கேள்வி எழுந்ததால் பிரித்து இடாமல் அப்படியே போட்டாயிற்று! இனி கவனத்தில் கொள்கிறோம்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப நன்றி நம்பள்கி! ஓட்டிற்கும், கருத்திற்கும்!

    பதிலளிநீக்கு
  9. ரூபன் தம்பி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! பரவாயில்லை தம்பி! தாங்கள் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. ஆமாம்! DD! எல்லாவற்றிலுமே அவசரம்தான்! //"போய் சேர்வதில் கூட" // ரொம்ப சரியே !

    கண்டிப்பாக வாசிக்கிறோம்!

    மிக்க நன்றி1

    பதிலளிநீக்கு
  11. தமிழ் நாட்டில் விபத்துக்கள் பெருகிவிட்டதுதான்! நண்பரே!

    மிக்க நன்றி! கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  12. //தந்தைக்கு மரியாதை...இருந்தவரை ஏசிய பிள்ளைகள் இறந்த பின் வைத்தார்கள் ஏ சி பெட்டியில் '// ஹை ரைமிங்க் தலைப்பு!!! நல்லாருக்கே ஜி!

    உண்மைதான் தந்தை பாக்கியசாலிதான்!

    மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  13. மிக்க நன்றி நண்பரே பாராட்டிற்கு!

    பதிலளிநீக்கு
  14. அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி வாழ்வது தான் வாழ்க்கை... இன்றைக்கு எதற்குமே மதிப்பில்லாமல் போய் விட்டதும் உண்மை... எதிலும் அவசரம் - "போய் சேர்வதில் கூட...!"

    பதிலளிநீக்கு
  15. நன்றி! அசிரியரே தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  16. சாலை விபத்துக்கள் சகஜமாகிவிட்டது! நாம் ஒழுங்காக சென்றாலும் வேகமாக வந்து இடிக்கிறார்கள்! உயிரை மாய்த்துக்கொள்ளுதல் தற்கொலை கேவலமான ஒன்று! நன்கு படித்தவர்களும் இந்த நோயில் சிக்கிக்கொள்வதுதான் வேதனை! சிறப்பான பதிவு ! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தாங்கள் கூறியிருப்பது மிகச் சரியே! நாம் ஒழுங்காகச் சென்றாலும் மற்ற ஓட்டுநர்கள் சரியாக இல்லை என்றால் விபத்துதான்!

      நீக்கு
  17. புற்றீசல் மனதை எதோ செய்துவிட்டது.. என்ன இருந்தாலும் ஒரு உயிர் அல்லவா?

    பதிலளிநீக்கு
  18. //உயிர் பிரிந்த பிறகுதான் மதிப்போ? உயிர் இருக்கும் போது மதிப்பில்லையோ?//
    இதுதான் கசப்பான உண்மை...

    பதிவு பெரிதாக இருந்தாலும் வாசிக்க சலிக்கவில்லை... சரளமான நடை... பொருத்தமான படங்கள்...!

    மகுடம் ஏத்தியாச்சு... ஏத்தியாச்சு...!

    பதிலளிநீக்கு
  19. ஆவி, ஆமாம் உயிருக்குதான் இப்போது மதிப்பே இல்லாமல் ஆகிவிட்டதே! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. நைனா தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!

    மகுடம் ஏற்றியதற்கும் சேர்த்துத்தான்!

    பதிலளிநீக்கு