பகுதி 12, பகுதி 11, பகுதி 10, பகுதி 9, பகுதி 8, பகுதி 7, பகுதி 6, பகுதி 5, பகுதி 4, பகுதி 3, பகுதி 2, பகுதி 1
சென்ற பகுதியின் இறுதியில் தடிகுடா நீர்வீழ்ச்சி பற்றி சொல்லி அங்கிருந்து சுமார் 11.5 கிமீ தூரத்தில் இருக்கும் போரா குகைகளைப் பார்க்கச் சென்றோம் என்று சொல்லி முடித்திருந்தேன். பதிவுகளை வாசிப்பவர்கள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் நன்றி.
அங்கு சென்று அடையும் முன் போர்ரா குஹாலு பற்றிச் சொல்லிவிடுகிறேன். என்ன இது தலைப்பில் போரா என்று சொல்லிவிட்டு இப்போது போர்ரா என்று சொல்லியிருக்கிறேனே என்று பார்க்கிறீகளா? ஆங்கிலத்தில் இரண்டு R. அந்தச் சொல் ஒரியா (ஒடியா) மொழி. அதைக் கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமாம் எனவே போர்ரா. ஒரியா - ஒடியா மொழியில் துளை என்று பொருள். குஹாலு - தெலுங்குச் சொல். வெங்கட்ஜி யும் போரா குகைகள் பற்றி அழகாகச் சொல்லியிருந்த நினைவு.
150 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று சொல்லப்படும் இயற்கையாக உருவான இக்குகைகள் ஒடிசா எல்லையில் இருப்பதால் தங்களுக்குச் சொந்தம் என்று ஒடிசா மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிட, ஆந்திர மாநிலம் தனக்குத்தான் சொந்தம் என்று புவியியல், நில அமைப்பு, என்று பல ஆதாரங்களைக் காட்டிட உச்ச நீதிமன்றம், ஆந்திர மாநிலத்திற்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பும் வழங்கியது. இரு இடங்களின் எல்லையில் இருந்தாலே இப்படித்தான் பிரச்சனை வரும் போல! (Bபோர்ரா - ஒடியா மொழி!!!!)
இந்தக் குகைகளை 1807 ஆம் ஆண்டு முதலில் கண்டுபிடித்தவர் பிரிட்டிஷ் புவியியல் வல்லுநரான வில்லியம் கிங்க். என்றாலும் அந்த வட்டாரக் கதை சொல்வது என்னவென்றால் பல வருடங்களுக்கு முன் பழங்குடி ஒருவர் கோஸ்தானி ஆற்றங்கரையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது மாடு ஒன்று திடீரென்று காணாமல் போக, அதைத் தேடிச் சென்ற போது இந்த இடத்தில் ஒரு பெரிய துளை இருப்பதைப் பார்த்து உள்ளே சென்றால் அங்கு ஆழமான பள்ளத்தில் மாடு இருப்பதைப் பார்க்கிறார். அங்கு தண்ணீரும் ஓடுவது தெரிகிறது. அப்படிப் பார்த்த போதுதான் அங்கிருந்த இந்தக் குகைகளைக் கண்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படிக் கண்டு பிடிக்கப்பட்டதால் Bபோர்ரா (துளை) என்று பெயர்.
நாங்கள் போரா குகைகளை அடைந்ததும், நுழைவு வாயிலின் வலப்புறம் இருக்கும் நுழைவுச் சீட்டு எடுக்கும் இடத்திற்குச் சென்று நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டோம். உள்ளே கேமரா, கேமரா உள்ள அலைபேசி மற்றும் வீடியோ கேமிரா தவிர வேறு பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால் நம் பொருட்களை வைக்கும் வசதியும் இருக்கிறது.
நுழைவுக் கட்டணம் - பெரியவர்களுக்கு - ரூ 60. சிறுவர்களுக்கு - ரூ 45. புகைப்பட காணொளிக் கருவிகளுக்கு - ரூ 100. கேமராவுடனான அலைபேசி என்றால் - ரூ 25. பார்வை நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. மதிய உணவு இடைவேளை 1 மணி முதல் 2 மணி வரை. மீண்டும் பார்வை நேரம் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை. நல்ல காலம் நாங்கள் சென்ற போது மணி 3.45 ஆகியிருந்தது. 5 மணிக்குள் பார்த்துவிட்டு வர வேண்டும் கூடவே ரயிலையும் பிடிக்க வேண்டுமே!
நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததும் இடப்பக்கம் கழிவறை வசதிகள் இருக்கின்றன. சுத்தமாகவும் இருந்தன. அங்கிருந்து படிகள் இறங்க வேண்டும். அப்படி இறங்கும் போது வலப்புறம் இந்தத் தகவல் பலகை இருக்கிறது.
இயற்கை எப்படி வடிவமைத்திருக்கிறது என்பதை அங்கு இருக்கும் இந்தத் தகவலின் புகைப்படத்தை இங்கு தந்திருக்கிறேன் எனவே நான் தனியாகத் தமிழில் தரவில்லை. படத்தைப் பெரிதாக்கி வாசித்துக் கொள்ளலாம். புரியும் என்று நினைக்கிறேன்.
அப்படி இறங்கிச் செல்லும் போது குகைகளுக்குச் சற்று முன்னே கீழே கோஸ்தானி ஆறு ஓடுவதைக்? கண்டதும் ஆஹா ஆறு என்று என் மூன்றாவது விழி சிமிட்டியது! தண்ணீர் அதிகம் இல்லை இருந்தாலும் 'நான் இன்னும் இருக்கிறேன்' என்று தன் அடையாளத்தைக் காட்டும் வகையில். பாறைகளைப் பார்த்தீர்களா?
இப்படி இறங்கிச் செல்ல வேண்டும்.
குகையின் நுழைவு வாயிலைப் படம் எடுத்தேன் ஆனால் சரியாக வரவில்லை. பிரச்சனை தெரிந்ததுதானே! சிவனும் நந்தியாரும் இருக்காங்க. சில தெய்வப்படங்களுடன் ஒருவர் அமர்ந்திருந்தார். பூக்கள் ஊதுபத்தி எல்லாம் இருந்தன. வழிபாடு செய்யப்படுவதும் தெரிந்தது.
குகையின் நுழைவுப் பகுதி நல்ல வெளிச்சத்துடன் இருக்கிறது. கொஞ்சமே கொஞ்சம் சூரிய ஒளி சில பகுதிகளில். கும்மிருட்டாகச் சில பகுதிகள். கும்மிருட்டுப் பகுதிகள் சிலவற்றில் வண்ண ஒளி விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பச்சை, நீலம், மஞ்சள், வயலெட் என்று மாறி மாறி ஒளியைப் பாய்ச்சுவதால் பாறைவடிவங்களைக் காண முடிந்தது.
நுழைவுப் பகுதியில் படிகளில் இறங்கிக் கொண்டே க்ளிக்ஸ்
இப்படி இறங்கும் போது
மேற் பரப்பையும் தரையையும் இணைப்பதால் உருவான இயற்கையான தூண்கள்
குகைக்குள் நுழைந்ததும் சிலையாகி நின்றேன்! மிகப் பெரியதாக இருந்தது. படத்தில் காட்டப்படும் தேவலோகம் போன்று இருந்தது. இயற்கையின் பிரம்மாண்டம்!
இந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் பாறைகளின் மேலே நீர்க்கசிவு தெரியும். இடையில் மரத்தின் வேர் தெரியும். இப்படி சில பாறைகளில் இருந்ததுகுறைவான ஒளி புகும் பகுதி மற்றும் வண்ண விளக்குகள் ஒளி வீசும் பகுதிகள் மட்டும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றன.
அண்டா கா கசம், அபூ கா கசம் - திறந்திடு சீசே! என்பது போல இருக்கோ!!!! இந்த ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் குறுகிய பாதை.
தூரத்தில் தெரியும் குழு உறுப்பினர், ஒளிக் கோடுகள் எல்லாம் சேர்ந்து அட! அப்போதே இப்போதைய பிராபல்யமான Light painting photography எல்லாம் முயற்சி செய்திருக்கிறேனா என்று நினைச்சுடாதீங்க!!! ஹிஹிஹி...என்னிடம் அதற்கான உபகரணங்கள் இல்லை என்பதோடு என் கேமராவில் long exposure times கிடையாது! கேமரா தானாகவே ஏதோ எடுத்தது!!!
ஸ்டலக்மிட்டுகள் மற்றும் ஸ்டலக்டைட்டுகளினால் உருவான அற்புதமான வடிவங்கள்
இந்த இரண்டு மஞ்சள் படங்களையும் உற்றுப் பாருங்கள். நம்ம மக்களின் கிறுக்குப் புத்தி தெரியும்!
பாதை போன்று தெரிகிறதா? ஆனால் அனுமதி இல்லை
சிவலிங்கம் போல இருக்கோ!? பின் பக்கம் வழி இருப்பது தெரிகிறதா? வெளிச்சம் இருக்கிறது பாருங்கள்.
குகையின் பள்ளத்திலும், மேடு போன்ற பகுதியில் இருக்கும் இருண்ட பகுதிகளுக்குச் செல்ல, பாதுகாப்பில்லை என்பதால் அனுமதி இல்லை. (நான் அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் கேட்டேன்!!! ஹிஹிஹி!) ஏன் கேட்டிருப்பேன் என்று படங்களைப் பார்த்தால் தெரிந்திருக்கும். வள்ளி குகை போன்று ஒரு கேப் இருக்கு பாருங்க! படங்களில். மற்றும் இந்த சிவலிங்கம் போன்று இருக்கும் படத்திலும். பள்ளத்தில் இருக்கும் பகுதி கோஸ்தானி ஆற்றுடன் இணைகிறதாம். அதனால் ஆபத்தாம். (ஆற்றில் தண்ணீரே இல்லையே!!!)
குகைகளின் உள்ளே ஸ்பீலியோதெம் எனப்படும் கனிம படிவங்கள் அதிகமாக, சிறிய மற்றும் பெரிய அளவுகளில் காணப்படுகின்றன. போரா குகிகளின் பாறைகள் படிக சுண்ணாம்புகளால் ஆனவை. பழைய கால்சியம் க்ரானுலைட்ஸ். சுண்ணாம்புப் பாறைகளின் இடையில் உள்ள சிறிய பிளவுகளின் வழி மழை நீர் கசிந்து கசிந்து பிளவுகளை விரிவாக்கியதோடு இந்த நிகழ்வு மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்ததால் கீழே ஹால் போன்ற குகை உருவாகியுள்ளது. மழை நீர் கீழே சொட்டுச் சொட்டாக வீழ்ந்ததாலும், நிலத்தில் தேங்கியதாலும் சுண்ணாம்புக் கற்கள் கரைந்து ஸ்டலக்மைட்ஸ் அதாவது கசித்துளிப்படிவுகள் மற்றும் ஸ்டலாக்டைட்ஸ் அழகிய வடிவங்களில் உருவாகி இருப்பதைக் காணலாம்.
பல அற்புதமான வகை வகையான வடிவங்கள். ஜடாமுடி, தாடியுடன் முனிவர்கள் போன்றும், யாரோ தலையைக் கவிழ்த்துக் கொண்டு தலைமுடியைக் கீழே தொங்கப் போட்டிருப்பது போன்றும், அமானுஷ்யமாகக் கைகளை விரித்திருப்பது போன்றும், கால்கள் பாதங்கள் போன்றும், மரம், சில விலங்குகள் போன்றும் பல வடிவங்கள். உயரத்தில் அலங்கார விளக்குகள் தொங்குவது போன்ற தோற்றமும் எனக்குத் தோன்றியது. உங்கள் கற்பனைக்கேற்ப உருவங்கள் உங்கள் மனதில் தோன்றலாம்.
குகைக்குள் சிறிய சிறிய வழிபாட்டுத் தலங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. நான் எடுத்தவை சரியாக வரவில்லை என் மூன்றாவது விழிக்கு இருட்டுன்னா பயம்! சிவன் கோவில் ஒன்று இரும்புப் படிகள் ஏறிச் சென்று தரிசிக்கலாம். ஆனால் படிகள் மிகவும் குறுகியவை மட்டுமல்ல சரியான தடுப்புக் கைப்பிடிகள் இல்லை. கூட்டம் வேறு வரிசையாக ஏறிச் சென்று கொண்டிருக்க (முந்தி அடிச்சு ஏற முடியாதாக்கும்!!!) நாங்கள் மூவர் மெதுவாக ஏறி தரிசித்துவிட்டு வந்தோம். பலரும் ஃப்ளாஷ் அடித்ததால் என் கேமரா திணறிவிட்டது!!! அதனால் படம் எடுக்க முடியவில்லை.
இப்பகுதியின் பழங்குடிமக்கள் இக்குகைக்குச் சிவராத்திரி தினத்தன்று வந்து வழிபாடு செய்வது வழக்கமாம். இந்த தினத்தில் மட்டும் குகையின் பல பகுதிகளுக்குச் செல்ல அனுமதி உண்டாம்! எனக்கு ஆர்வம் எழுந்தது. ஆனால் வாய்ப்பு கிடைக்குமா?
பாறைகளைத் தொட்டுப் பார்த்தேன். செம 'ஜில்லிப்பு'. இதுதான் இந்தியாவிலேயே மிகவும் பெரிய குகை. என்பதோடு பெரும்பான்மை சுண்ணாம்புக் கற்களால் உருவாகியிருக்கும் இக்குகை 80 மீட்டர் ஆழமாக இருப்பதால் ஆழம் மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. குகையின் உட்புறம் கடல்மட்டத்திலிருந்து 625 மீ. உயரத்தில் உள்ளது. குகைக்குள் நுழைவுப் பகுதி பெரிதாக இருந்ததோடு சில இடங்களில் நல்ல அகலமாகவும் (100 மீ) உயரமாகவும் (75 மீ) இருக்கின்றது. இதன் நீளம் 200 மீ. என்றும் சுமார் 1 கி.மீ. க்கும் மேலான தூரம் பரந்து விரிந்துள்ளன என்றும் சொல்லப்பட்டது.
ரசித்து ரசித்துப் பார்த்துவிட்டு, இன்னும் நிதானமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அடக்கிக் கொண்டு வெளியில் வந்தேன்(தோம்). வந்த வழியேதான். எனவே வெளிச்சம் உள்ள நுழைவுப் பகுதியில் மீண்டும் சில க்ளிக்ஸ்.
வெளியில் வந்த போது நேரம் 4.30. ஓ கடவுளே ரயில் 4.45 ற்கு வந்து 4.50க்குக் கிளம்பிவிடும். பதற்றம். அங்கிருந்து ரயில் நிலையம் 1/2 கிமீ தூரம் தான். ஆட்டோ பிடிக்க வேண்டும், டிக்கெட் எடுக்க வேண்டும். குகைகளுக்கான டிக்கெட் கவுண்டரில் எங்கள் பொருட்களைப் பெற்றுக் கொண்ட போது அங்கிருந்தவர் சொன்னார், அவசரமில்லை ரயில் அரை மணி நேரத்திற்கும் மேல் தாமதமாகத்தான் வருகிறது என்று. பெரிய ரிலீஃப்!
வெளியில் இருந்த உணவகத்தில் சாப்பாடே முடியவில்லை என்பதால் காஃபி இல்லை. மற்ற கடைகளில் எல்லாம் மூங்கில் சிக்கன். எதுவும் சாப்பிடவும் வழி இல்லை. சரி என்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து ரயில் நிலையத்தை அடைந்தோம். 10 நிமிடத்தில். நிலையத்தை அடைய மிகப் பெரிய ஏற்றம். அதில் ஆட்டோ ஏறாது என்பதால் நாங்கள் ஏறினோம்.
ரயில் நிலையத்தில் கடைகள் என்று எதுவும் இல்லை. ரயில் வரும் நேரங்களில் உள்ளூர் மக்கள் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை இங்கு வந்து விற்கிறார்கள். காஃபி, உளுந்து வடை மற்றும் பருப்பு வடைகள் வாங்கிக் கொண்டோம். நன்றாக இருந்தன. ஒரு வழியாக ரயில் 5.45க்கு வந்தது. பாசஞ்சர் ரயில் என்பதால் எந்தப் பெட்டியில் இடம் இருக்கு என்று பார்த்து ஏறிக் கொண்டோம். ஜன்னல் இருக்கையும் கிடைத்தது எனக்கு. ஆனால் என்ன பயன்?!! இருட்டும் நேரம். க்ளிக்ஸ் இல்லை. ஆனால் இரவு நேரக் காட்டை ரசித்து வந்தேன்! ஆங்காங்கே புள்ளிகளாய் விளக்குகள்! விசாகப்பட்டினத்தை 9.30க்கு வந்தடைந்தோம். மறு நாள் சென்னை நோக்கிப் பயணம், இனிய நினைவுகளுடன்.
இக்குகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கத் தொடங்கி உள்ளனர். இக்குகைகள் சுண்ணாம்புப் பாறை நிலப்பரப்பில் உடைந்து வீழ்ந்து துளைகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. Mass tourism shouldn't be encouraged in Borra Caves, say experts. அதிகமான சுற்றுலாப் பயணிகளால் அதுவும் பாறைகளில் கிறுக்கும் கிறுக்குகள், பாறைகளைத் தொடுவது பிடித்துக் கொண்டு நடப்பது, ஃப்ளாஷ் விளக்குகளால் ஏற்படும் பாதிப்பு, புகைப்படம் எடுக்கும் போது ஃப்ளாஷ் னால் ஏற்படும் பாதிப்பு எல்லாம் இக்குகைகள் விழும் காலத்தை துரிதப்படுத்துவதாக எச்சரிக்கிறார்கள். அது சரி இக்குகைகளின் மேல்தானே ரயில் பாதை இருக்கிறது! ரயில்களினால் அதிர்வுகள் ஏற்படாதா? அதனால் குகைகள் உடையாதா என்ற என் கேள்விக்கும் பதில் கிடைத்துவிட்டது!
ஆம்! ஏற்கனவே ரயிலின் அதிர்வினால் இக்குகை நலிந்து பாதிப்படைந்துள்ளதாம். ஒவ்வொரு முறை கிரண்டுல் விசாகப்பட்டினம் ரயில் சென்று வரும் போதும் அதிர்வினால் குகையின் பாறாங்கற்களும், கற்களும் உடைந்து விழுகின்றனவாம். எனவே, மாஸ் சுற்றுலா, படப்பிடிப்பு, அதிக பிரகாசமான ஒளிவிளக்குகள் போன்றவற்றைத் தவிர்ப்பதோடு, குகைகளின் மேல் இருக்கும் ரயில் பாதையைச் சற்று அப்புறப்படுத்தி ஒரு லூப் லைன் போட வேண்டும். கூடவே, புராணக் கதைகளைப் பற்றி மட்டும் பேசாமல், உண்மை விவரங்களைப் பற்றி பார்வையாளர்களுக்குச் சொல்லக் கூடிய விஞ்ஞானப் பயிற்சி பெற்ற புவியியல் வழிகாட்டிகளும் தேவை என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.
அதே போன்று குகைகளுக்குள் வைஃபை வேலை செய்ய சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் எடுப்பதையும் எச்சரிக்கிறார்கள். இணையச்சேவை, மொபைல் டவர்களிலிருந்து வெளியாகும் ரேடியோ அலைகள், இந்த உடையும் தன்மை கொண்ட சுண்ணாம்புப்பாறை வடிவங்களைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். பார்ப்போம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று.
அழகான மலைகள், காடுகள், ஆறு, அருவிகள் என்ற சூழலின் நடுவில் இப்படி ஒரு அற்புதமான, வியப்பிற்குரிய இயற்கையில் உருவான குகை! இந்த அரக்கு பள்ளத்தாக்கில் குறைந்தது மூன்று நாட்களேனும் தங்கி நிதானமாக மலையில் நடந்து எல்லா இடங்களும் அருவிகளும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. விட்டு வர மனமே இல்லை. வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ கனவு காண்பதற்குக் காசா பணமா? இணையத்தில் பார்த்துக் கனவு கண்டுக்க வேண்டியதுதான்!
ஹப்பா ஒரு வழியாக பல தடங்கல்களின் நடுவில் விசாகப்பட்டினம் பயணக் கதை, கட்டுரையையை முடிச்சாச்சு! கீதா உனக்கே உனக்கு ஒரு ஷொட்டு போட்டுக்க!!!! போரா குகைகள் படங்கள் இன்னும் உண்டு, அவற்றையும் இன்னும் விட்ட படங்களை வேறு ஒரு பதிவில் படங்களின் பதிவாகப் பகிர்கிறேன்.
பதிவு பெரிதுதான். மன்னிச்சுக்கோங்க. நம்ம பதிவை எல்லாம் வாசிப்பவர்கள் மிகவும் குறைவுதான்! சரி அடுத்த என் பதிவில் சந்திப்போம்! அடுத்து பெரும்பாலும் துளசியின் ரப்பர் தோட்டப் பதிவாகத்தான் இருக்கும்.
-----கீதா
படங்கள் எல்லாமே அருமை.
பதிலளிநீக்குகாட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
தகவல்கள் நன்று ரயில் பாதை நிச்சயம் மாற்றியமைக்க வேண்டும்.
குகைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு விரைவில் செய்யட்டும்.
படங்கள் எல்லாமே அருமை.//
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி.
ஆமாம் காட்சிகள் அதுவும் நேரில் பிரமிப்புதான்.
//தகவல்கள் நன்று ரயில் பாதை நிச்சயம் மாற்றியமைக்க வேண்டும்.
குகைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு விரைவில் செய்யட்டும்.//
ஆமாம் கில்லர்ஜி. நம்புவோம்.
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்கு//புராணக் கதைகளைப் பற்றி மட்டும் பேசாமல், உண்மை விவரங்களைப் பற்றி பார்வையாளர்களுக்குச் சொல்லக் கூடிய விஞ்ஞானப் பயிற்சி பெற்ற புவியியல் வழிகாட்டிகளும் தேவை என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.//
இந்த வேலையை மிகவும் மகிழ்வாக செய்வீர்கள் நீங்கள்.
படங்களும் விவரங்களும் அருமையாக இருக்கிறது.
படங்கள் அனைத்தும் அருமை./
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா...
//இந்த வேலையை மிகவும் மகிழ்வாக செய்வீர்கள் நீங்கள்.//
ஆஹா!!! கோமதிக்கா....வெட்கமாகிவிட்டது. மிக்க நன்றி கோமதிக்கா....
ரசித்திட்ட கருத்துகளுக்கு மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
சிவராத்திரி தினத்தன்று வந்து வழிபாடு செய்வது வழக்கமாம். இந்த தினத்தில் மட்டும் குகையின் பல பகுதிகளுக்குச் செல்ல அனுமதி உண்டாம்!//
பதிலளிநீக்குசிவராத்திரி சமயம் வாய்ப்பு கிடைத்தால் போய் வாங்க.
ஆசை உண்டு கோமதிக்கா....ஆனால் அதெல்லாம் வீட்டிலுள்ளவர்களும் வர வேண்டுமே....வாய்ப்பும் கிடைக்க வேண்டும்...
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
குகை கண்டு பிடிப்பு கதைகள் எப்படி இருந்தாலும் குகையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் சரிதான். வேறு ஒரு சமயத்தில் மீதி படங்களையும் போடுங்கள். எல்லா பின்னூட்டங்களும் வந்து விட்டதா என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஆமாம் கோமதிக்கா குகையைப் பாதுக்காக்க வேண்டும்.
நீக்குமீதி படங்களையும் போடுகிறேன். உங்களின் (4) பின்னூட்டங்கள் வந்துவிட்டன.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
இந்த இரண்டு மஞ்சள் படங்களையும் உற்றுப் பாருங்கள். நம்ம மக்களின் கிறுக்குப் புத்தி தெரியும்!//
பதிலளிநீக்குமேலே போய் தங்கள் பேரை எழுத வேண்டுமென்றால் கண்டிப்பாய் பழுது அடைய வாய்ப்பு இருக்கே! இன்னும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆமாம் பழுது அடையும் வாய்ப்பு கூடுதல். கிறுக்கி வைச்சுருக்காங்க...கை எட்டும் தூரம் தான் அக்கா....இன்னும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பயணிகள் வரும் போது கவனிக்க பணி ஆட்கள் மிகவும் குறைவாக உள்ளதாகச் சொன்னாங்க.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
புகைப்படங்களை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள். பிரமிக்க வைக்கும் படங்கள். ரசிக்க வைக்கின்றன. விவரங்களை வேகமாக படித்து வந்தேன்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் நிஜமாகவே ரொம்ப ரசித்து எடுத்தேன். ஆனால் கேமரா இன்னும் நல்ல கேமரா இருந்திருக்கலாமே என்று தோன்றும்.
நீக்குநேரில் ரொம்பவே பிரமிப்பாக இருந்ந்தது ஒவ்வொன்றும், ஸ்ரீராம்.
பதிவு பெரிதாகிவிட்டது முடித்துவிட வேண்டும் என்று ஒரே பதிவாகப் போட்டுவிட்டேன் ஸ்ரீராம்....
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
த்ரில் பயணம்... யப்பா...!
பதிலளிநீக்குத்ரில் என்பதை விட இயற்கையின் பிரம்மாண்டமான இடம் டிடி
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
ஆறு ஆறு என்கிறீர்கள். அது சரியாகக் கண்ணில் படாமல் மனம் ஆற மாட்டேன் என்கிறது!!
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா கருத்தை வாசித்ததும் சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்....!!! ரசித்தேன்.
நீக்குஆமாம் எனக்கும் அந்தக் குறை இருந்தது. ஆனால் சரி அடையாளமேனும் இருக்கே என்று ஆறுதல் பட்டுக் கொண்டேன். பல இடங்களில் அடையாளத்தை அடைத்துக் கட்டிடங்கள் கட்டிவிட்டாங்களே....உதாரணத்திற்கு சென்னையில் பக்கிங்க்ஹாம் கனால்...
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
இறங்கும் வழிதோறும் வண்ணக்கலவை. உள்ளே உண்மையிலேயே பிரம்மாண்டம்.
பதிலளிநீக்குவண்ண விளக்குகள் ஃப்ளாஷ் அடிச்சிட்டே இருந்தன. இல்லைனா இருட்டு....வழக்கமான விளக்குகளும் இருந்தன. ஆமாம் பிரம்மாண்டம் தான் ஸ்ரீராம். நேரில் பார்க்க அப்படி ஒரு வியப்பு...மிகப் பெரிய குகை. அதிசயம் தான்...
நீக்குகோமதி அக்கா கூட அமெரிக்காவில் பார்த்தது பத்தி போட்டிருந்தாங்களே கிட்டத்தட்ட இப்படியான குகை
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
இவற்றை எல்லாம் பார்க்கும்போது வண்ண வண்ணமாக வடிவங்களாகி இருக்கும் இவைகள் என்ன சொல்ல வருகின்றன என்று நம்மால் உணர முடிவதில்லை.
பதிலளிநீக்குஅதுதான் இயற்கையின் ரகசியம், ஸ்ரீராம்
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
இந்த அழகான இடத்துக்கு இவ்வளவு ஆபத்துகள் வருகிறதா? பாதுகாக்கப்பட வேண்டும். நம் அரசாங்கங்கள் விழித்துக் கொள்வதற்குள் என்னென்ன நடக்குமோ....
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் ஆபத்துகள் நிறையவே இருக்கு.
நீக்கு//நம் அரசாங்கங்கள் விழித்துக் கொள்வதற்குள் என்னென்ன நடக்குமோ....//
அதைச் சொல்லுங்க....தினம் தினம் ரயில் போய் வந்துகொண்டிருக்கிறது. அந்த அதிர்வே குகையைப் பாதிக்கும்....போடும் போதே யோசித்துப் போடமாட்டாங்களோ? என்ன திட்டமோ என்ன படிப்போ....யோசிக்க மாட்டாங்களோ? இப்ப பாருங்க அந்த இடத்திலிருந்து ரயில் லைன் லூப் போடணும்னு சொல்லிருக்காங்க நிபுணர்கள்...
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
"குகைகள்" என்ற உடனேயே உள்ளே பயங்கர கருப்பா இருக்கும் அல்லது கருப்பா பயங்கரமா இருக்குமே என்று சந்தேக கண்ணோட்டத்தோடு வந்து பார்த்தால்... இங்கு கலர் கலரா இருக்கிறதே!
பதிலளிநீக்குநல்லவேளை!... இது ஆந்திராவில் இருப்பதால் மனித வாசத்துடன் வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது... இதுவே தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்நேரம் பத்தோடு பதினொன்றாக "வவ்வால்"களின் சரணாலயமாக நாறியிருக்கும்... ஏனென்றால், நாங்களெல்லாம் டமிழர்கள்...
டமிழர்களாகிய நாங்களெல்லாம் நகைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம்... குகைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம்...
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. குகை பார்க்கவே பிரம்மாண்டமாக அநேக வண்ணங்களுடன் உள்ளது. ஒவ்வொரு படத்தையும் பெரிதாக்கி ரசித்துப் பார்த்தேன். நீங்களும் வழக்கம் போல் ரசித்து படங்கள் எடுத்து விரிவாக சொல்லியிருப்பதால் நாங்களும் உங்களுடன் பயணித்த உணர்வு வந்தது.
/பல அற்புதமான வகை வகையான வடிவங்கள். ஜடாமுடி, தாடியுடன் முனிவர்கள் போன்றும், யாரோ தலையைக் கவிழ்த்துக் கொண்டு தலைமுடியைக் கீழே தொங்கப் போட்டிருப்பது போன்றும், அமானுஷ்யமாகக் கைகளை விரித்திருப்பது போன்றும், கால்கள் பாதங்கள் போன்றும், மரம், சில விலங்குகள் போன்றும் பல வடிவங்கள். உயரத்தில் அலங்கார விளக்குகள் தொங்குவது போன்ற தோற்றமும் எனக்குத் தோன்றியது. உங்கள் கற்பனைக்கேற்ப உருவங்கள் உங்கள் மனதில் தோன்றலாம்./
ஆம் உண்மைதான் படங்களை பெரிதாக்கி பார்த்தபோது, நீங்கள் கூறுவது போல விதவிதமான உருவங்கள் தெரிகின்றன.
மூன்றாவதான படத்தில் ஒரு பெண் தலையில் ஜடை போட்டுக் கொண்ட பெண் மண்டி போட்டு அமர்ந்து ஓடும் ஆற்றை ரசிக்கிற மாதிரி இருக்கிறது. இப்படி சில உருவங்களை சொல்லலாம். எல்லாமே ரசிக்கிற மாதிரி இருக்கின்றன. அதிசயமான ஒரு குகையை எங்களுக்கு பகிர்ந்தளித்து காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோதரி.
இதன் தொடர்ச்சியான முந்தைய பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். ஏதேதோ வேலைகள் காரணமாக உடனே வர இயலவில்லை. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்க ரொம்ப ஸாரி. தாமதமாகப் பதில் தருவதற்கு. மறந்து போய்விட்டேன். வேலைப் பளுவும்....
நீக்குபடத்தைப் பெரிதாக்கி ரசித்துப் பார்த்ததற்கு ரொம்ப நன்றி கமலாக்கா. நீங்க ரசிப்பீங்கன்னு தெரியும். நம்ம கட்சிதானே!!! ஹாஹாஹாஹா
//மூன்றாவதான படத்தில் ஒரு பெண் தலையில் ஜடை போட்டுக் கொண்ட பெண் மண்டி போட்டு அமர்ந்து ஓடும் ஆற்றை ரசிக்கிற மாதிரி இருக்கிறது.//
அட! பாருங்க உங்கள் கற்பனை!! சிறகடிச்சுப் பறக்குது!!! கமலாக்காவின் கற்பனையைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?!!!!
மெதுவாக வாசியுங்க கமலாக்கா...அவசரமே இல்லை. உங்களுக்கு வேலைகள் இருக்குன்னும் புரிந்துகொள்ள முடியும் கமலாக்கா நம் எல்லோருக்கும் பொதுவாகவே பெண்கள் நமக்கு வேலைகளுக்கா பஞ்சம்!!!! ஹாஹாஹா
மிக்க நன்றி கமலாக்கா...
கீதா
தேவலோகம் போன்று இருந்தது. இயற்கையின் பிரம்மாண்டம்!.... உண்மை கீதா அக்கா ...ரசித்து வாசித்தேன் ...
பதிலளிநீக்குஅட கடைசி பதிவா ...இந்த மாதம் எனது பதிவுகள் , பசங்க விடுமுறை என கொஞ்சம் கடினமான நேரம் அதனால் முந்தைய பதிவுகள் எல்லாம் வாசிக்காமல் இருக்கிறது ...விரைவில் வாசிப்பேன் ..
மிக அழகான இடமும் , படங்களும் ...மிக அருமையா இருக்கு அக்கா
இந்த அழகை பாதுக்காக்க வேண்டும் ...ம்ம் நடக்கும் என நம்புவோம்
ரசித்து வாசிச்சதுக்கு மிக்க நன்றி அனு. எனக்குத் தெரியும் நீங்கர சிப்பீங்கன்னு தெரியும்,,,,...நாம ஃபோட்டோ எடுத்து தள்ளுறதுலயும் ஒரே கட்சியாச்சே!!!! ஹாஹாஹாஹா
நீக்குஆமாம் கடைசி பதிவு. நீங்க மெதுவா வாசியுங்க அவசரமே இல்லை
ஆமாம் பசங்க விடுமுறை உங்க வேலைகளும் இருக்கும் தெரியும் அனு. ஆமாம் இந்த அழகைப் பாதுகாக்க வேண்டும்.
மிக்க நன்றி அனு
கீதா
Borra Caves ! விசாகப்பட்டினம் அருகே இப்படியெல்லாம் அதிசயம் இருப்பதை, உங்கள் தயவால் தெரிந்துகொள்ள நேர்ந்தது. படங்கள் ..ஆஹா!
பதிலளிநீக்குகுகைக்குள் கொஞ்சம் வெளிச்சம் போடவேண்டியதுதான், தெளிவாகப் பார்ப்பதற்கு உதவியாக இருக்க. அதுக்காக இப்படி வண்ணத்தைத் தாறுமாறாகத் தெளித்துக் கோமாளித்தனம் செய்யவேண்டுமா! எதையும் செயற்கைப்படுத்துவதில் நமது டூரிஸம் டெபார்ட்மெண்ட்டுகளை மிஞ்சமுடியாது...
Borra Caves ! விசாகப்பட்டினம் அருகே இப்படியெல்லாம் அதிசயம் இருப்பதை, உங்கள் தயவால் தெரிந்துகொள்ள நேர்ந்தது. படங்கள் ..ஆஹா!//
நீக்குமிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா. ஆனால் இதற்கு முன்பே நம்ம வெங்கட்ஜி போட்டிருக்கிறார் அவர் தளத்தில்.
ஆமாம் குகைக்குள் இப்படி வண்ணவிளக்குகள் ஃப்ளாஷ் நல்லதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
எதையும் செயற்கைப்படுத்துவதில் நமது டூரிஸம் டெபார்ட்மெண்ட்டுகளை மிஞ்சமுடியாது...//
அதைச் சொல்லுங்க....ஹாஹாஹா
மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா
கீதா