பாட்டியிடம்
நான் போட்ட பிட் இதுதான் - “பாட்டி,
நாங்க எல்லாரும் ஆத்துலதானே இருக்கோம். வடசேரி சந்தைக்கும், மாவு மெஷினுக்கும் போலாமா?
நாங்க எல்லாம் தூக்கிண்டு வருவோமே….சிவாஜி படம் கூட ஏதோ புதுசா வந்திருக்காமே! அப்படியே
அதையும்….”
என்ன
ஆச்சு?!! குழந்தை அழுததா சிரித்ததா? தொடரும். // இது முதல் பதிவு இங்கே
என்ன ஆச்சு!? பாட்டியிடமிருந்து பதில் இல்லை. தூங்கிட்டாங்க போல என்று நைஸாக எழுந்து என் வேலையைப் பார்க்கலாமே என்று நழுவினேன். என்னத்த பெரிய வேலை? அப்போதே என்னவோ பெரிய எழுத்தாளர் போல, கட்டுரை அல்லது கதை எழுத முயற்சி அல்லது படம் வரையறது, பேப்பர்ல கோலம் போட்டு டிசைன் போடுவது இப்படி ஏதாவதுதான். படிக்கும் புத்தகம் எல்லாம் டக்கென்று கையில் வராது அது சாட்சிக்கு அருகில் இருக்கும். பாட்டி எழுந்தால் புத்தகம் கைக்கு வந்துவிடும்.
என்
உடன் பிறப்பும் உடன்பிறவாக்களும் என்னிடமிருந்து பதில் இல்லாததால் என்னவோ பிரதமமந்திரி
கலந்தாலோசனை போல ரகசியக் கூட்டம் போட்டார்கள்.
சிறிது
நேரத்தில் பார்த்தால் பாட்டியைக் காணவில்லை. போச்சுடா, எங்கே போயிருப்பாங்க என்று நோட்டம்
விட்டால் வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டினுள் போய் உட்கார்ந்துவிட்டார். கோபமாம்.
அப்போதுதான்
புரிந்தது. நாங்கள் ஒவ்வொரு முறை இப்படி ஏதாவது கேட்கும் போதும் பக்கத்து வீட்டிற்குள்
சென்று உட்காரும் பழக்கம் அவரது கோபத்தின் வெளிப்பாடு என்பது. அங்கிருந்து வர மாட்டார்.
சில கோபங்கள் நேரடியாகவே எங்களிடம் பாயும். சில இப்படி.
1975
கோடை விடுமுறை. அதுவும் வடக்கே இருந்த என் மற்றொரு மாமா குடும்பம், பாட்டியின் தம்பி
குடும்பம் விடுமுறைக்கு வந்தார்கள்.
இந்த
வடக்கு உறவுகள் வீட்டிற்கு வந்தால் எங்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி, காரணம் கன்னியாகுமரி,
சுசீந்திரம் இல்லைனா படம் - அது ரொம்ப அபூர்வம் - கூட்டிக் கொண்டு போவாங்க.
இந்த
இரண்டு இடங்களை விட்டா வேற எவ்வளவோ நல்ல நல்ல இடங்கள், ஏன் எங்கள் ஊரைச் சிற்றி பசுமையோடு
மலைகளோடு இருக்கும் இறைச்சகுளம், அழகியபாண்டிபுரம், பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு எந்த
ஊருக்கும் கூட்டிக் கொண்டு போக மாட்டாங்க. இத்தனைக்கும் எல்லாம் ஷார்ட்கட்ல 5, 7 கிமீ
தான், ம்ஹூம்.
எங்கள்
மாமா குழந்தைகளை நாங்கள் வாய் பிளந்து பார்ப்போம். அவர்களின் உடை, நடை பாவனை, அவர்கள்
பேசிக் கொள்ளும் ஆங்கிலம், ஹிந்தி என்று நாங்கள் தூரத்தில் நின்று ஏதோ வேற்றுக் கிரஹ
மனிதர்கள் போலப் பார்த்துக் கொண்டிருப்போம். அருகில் செல்லவே மாட்டோமே! அவர்கள் ஆங்கிலத்தில்
பேசினால் எங்களுக்குப் பேச வராதே!
அவர்களுக்கு
ஏக உபசாரம் நடக்கும். நாங்கள் அதை எல்லாம் கொஞ்சம் அசூயையோடு எங்களுக்குள் ரகசியக்
குரலில், “பாருடி அவாளுக்கு மட்டும் ஓவல்டின், ஹார்லிக்ஸ், சாக்கலேட் டிஃபன் எல்லாம்.
நமக்கெல்லாம் பழைய சாதமும், தண்ணிக் காபியும்தான். அவ ட்ரெஸ் பார்த்தியா. தலைல க்ளிப்
பார்த்தியா? ஹேய் இங்க பாருடி அவ ஸ்கர்ட் முட்டிக்கு மேலதான் போட்டிண்டிருக்கா நம்ம
இந்திராகாந்தி (பாட்டி) எதுவுமே சொல்லலை” என்று Husky குரலில் பேசிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்போம்.
அவர்களுக்கு எங்களைப் பார்க்கப் புதிராக இருக்கும்.
அப்படி
அவர்கள் வந்திருந்த அந்த வருடத்தில் (1975) அப்போது வந்திருந்த படம் எல்லோரும் நல்லவரே!
ஒழுகினசேரி லக்ஷ்மி தியேட்டரில். வீட்டில் யாருக்கு இந்தப் படம் போணும்னு தோன்றியதோ
தெரியலை, வந்தவர்கள் சும்மா ஏதேனும் தமிழ்ப்படம் போலாம்னு சொல்லியிருந்திருப்பார்கள்.
பாட்டி வரவில்லை. அவங்க தனிக்கட்சி! அப்பதான் தெரிந்தது இது சிவாஜி படம் இல்லைன்னும்,
மருமகள்களோடு படத்துக்கு வரமாட்டார் என்ற கெத்து என்றும். எப்படி, யார் அனுமதி வாங்கினாங்க
என்று தெரியலை. ஊரிலிருந்து வந்த மாமியாக இருக்கும்! அபூர்வமாக வரும் மருமகளின் பவர்!
எங்க
பெரியமாமா தலைமையில பட்டாளம் கிளம்பியது. சினிமா போவதென்றால் அது ஒரு பெரிய Ritual.
நல்ல உடுப்புகள் இருந்ததே 2, 3 தான். பெரும்பாலும் Eastman Colour தாறுமாறான அடிக்க
வரும் நிறங்களில் ரெண்டு வருடம் முன் தைத்த பாவாடை சட்டை அதுல ஒன்றை எடுத்து போட்டுக்கச்
சொல்லுவாங்க. சட்டை சேராது இல்லைனா பாவாடை குட்டையா இருக்கும். உடனே டக் வைத்திருப்பதை
பிரித்துவிட்டுக்கச் சொல்வார்கள். எங்க விருப்பம் எதுவும் கிடையாது. தண்ணீர் கூஜாக்கள்,
வீட்டில் செய்த தீனிப்பண்டங்கள், பெரும்பாலும் மாலைக்காட்சிதான் அதனால் சாப்பாடு டப்பாக்களில்
தோசை இட்லி ஏதாவது இருக்கும். படம் முடிந்து வீடு போய்ச் சேர 9 மணி ஆகிவிடுமே!
எல்லாம்
கட்டிக் கொண்டு நாங்கள் சுமக்க வேண்டும் அதைச் சுமக்க எங்களுக்குள் நடக்கும் பேரம்….
வடக்கிலிருந்து
வந்தவங்க ஃப்ரில் வைத்த ஃப்ராக், அழகழகாகப் போட்டுக் கொண்டு, தலையில் band, clip,
என்று அழகாகக் கிளம்பறத பார்த்து எங்களுக்குப் புகையா வரும். நாங்க தள்ளி நடப்போம்.
நாங்கதானே சுமையும் தூக்க வேண்டும்!
உலகளவு
பிரதமர், ஜனாதிபதிகளுக்குக் கூட இப்படி ஒரு கறுப்புப் பூனைப் படை பாதுகாப்பு அதுவும்
பல அடுக்குகள் இருக்குமா என்று தெரியாது, முன்னில்
பெரிய மாமா. அடுத்தாப்ல வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகள் இருவர், அதன் பின் நாங்கள் பெண்
பிள்ளைகள், பின்னால் இரு ஆண் பிள்ளைகள், அதன் பின் மூன்றாவது மாமா, எங்கள் இரு பக்கமும்
மாமிகள் என்று பாதுகாப்பு வளையத்துக்குள் நாங்கள் எல்லோரும் ஒருகையில் சுமைகளும், மாமிகளின்
கையையும் பிடித்துக் கொண்டு……எங்களைப் பொருத்தவரை அது ஒரு Outing!!
உள்ளே
சென்றதும் தீனிகள் பெரியவர்கள் கைக்குப் போய்விடும். பின்ன நாங்க இருட்டுல யாருக்கும்
தெரியாம எடுத்து எங்களுக்குள்ள பங்கிட்டுத் தின்னுட்டோம்னா!!
உள்ளே
போய் இருக்கையில் – அதுதான் முதல் தடவை தனித்தனி இருக்கையில் அமர்ந்து பார்த்தது அதுவும்
வடக்கு உறவுகள் வந்ததால். அமர்வது கூட, பாதுகாப்பு வளையத்துள்தான். இரு முனையிலும்
மாமாக்கள். நாங்க பெண் குழந்தைகள், மாமிகள் நடுவில் பெண் குழந்தைகள் எங்கள் பின்னிலும்
முன்னிலும் ஆண் பிள்ளைகள்! வேற எந்த ஆணும் எங்க மேல கை வைச்சுடக் கூடாதே! ஆசிரியரான
மாமாவுக்குத் தெரிந்தவர்கள் தியேட்டர்காரர்கள் என்பதால் சலுகை இப்படி அமர்வது.
பத்துக் கட்டளைகள் - 1 – படம் ஓடும் போது யாரும் பேசக் கூடாது. 2 –
இடையில் இயற்கை உபாதைக்கு எழுப்பக் கூடாது. 3 – நாங்களாகத் திங்க எதுவும்
கேட்கக் கூடாது. அவங்க சப்ளை பண்ணும் போதுதான். 4 – கை தட்டிச் சிரிக்கக்
கூடாது. 5 – எழுந்து நின்று பின்னால் உள்ளவர்களுக்குப் படத்தை மறைக்கக்
கூடாது. 6 – இடைவேளையில் தனியாகக் கழிவறைக்குச் செல்லக் கூடாது. (ஹாஹாஹா
இவங்க பாதுகாப்பு வளையத்த மீறி எப்படிப் போக முடியும் சொல்லுங்க!!) 7 –
வெளியாட்கள் யாருடனும் பேசக் கூடாது அவர்கள் ஏதேனும் கேட்டாலும் பதில் சொல்லக் கூடாது. 8 – சீட் மாறி அமரக் கூடாது. அவங்க எந்த சீட்ல உட்காரச் சொல்றாங்களோ அந்த
சீட்டில் மட்டுமே. 9 – பாட்டு வரும் போது தாளம் போடக் கூடாது. 10 – படம் விட்டதும் பாதிக் கூட்டம் சென்ற பிறகே நாங்கள் எழ வேண்டும். எழுந்து ஒருவருக்கொருவர்
கைபிடித்துக் கொண்டு பள்ளியில் வரிசையாகச் செல்வது போலச் செல்ல வேண்டும். வெளியில்
போன பிறகு பாதுகாப்பு வளையம்!
படம்
பாடாவதிப்படம். போர். அப்பப்ப பெரியவங்க கையில் இருக்கும் கூடைகளில் இருந்து வரும்
தின்பண்டத்தைக் கொறித்துக் கொண்டே படம் பார்த்தாலும் எங்களுக்குள் பேசிக் கொள்ளக் கூடாதே!
எனவே தூங்கிவிட்டேன்.
இப்படி
வடக்கு உறவுகள் வரும் போதுதான் வெளியில் இப்படி போக நேர்ந்தால், மிக அபூர்வமாக வெளி உணவகம் ஒன்றிலும் ஒரு நேரம் டிஃபன்
சாப்பிடுவதும் நடக்கும். அப்பதான் ஹோட்டல் வெங்காய சாம்பார் கிடைக்கும். அதுவும் பெரியவர்களில்
யாரேனும் ஒருவர்தான் எல்லாருக்கும் ஆர்டர் கொடுப்பார். நம் விருப்பம் எதுவும் எடுபடாது!
இப்படியாக
ஓடிய காலங்களில் நான் 10 ஆம் வகுப்பு முடித்த வேளையில் மூன்றாவது மாமா தெருவின் கிழக்கு
அத்தத்தில் கட்டிய வீட்டிற்கு நாங்கள் எல்லோரும் தெருவின் மேற்கிலிருந்து மாறினோம்.
இங்கு
மாறிய பிறகு பாட்டிக்குக் கோபம் வந்த போதெல்லாம் ஒரு வீடு தள்ளி இருந்த சீஷ்மி வீட்டுத்
திண்ணைதான் அவர் போய் உட்காரும் இடம். சீஷ்மி
பெயர்க்காரணம் – அவர் கணவர் அவரை அப்படித்தான் சுருக்கமாக விளிப்பார். மாமாவுக்கு நாங்கள் வைத்த
பெயர் இறக்கை கட்டி பறவை! (அப்ப அண்ணாமலை படம் வரலையாக்கும்!) இரு கைகளையும் பக்கவாட்டில்
விரித்துக் கொண்டே படு வேகமாக நடப்பார் இல்லை பறப்பார்!
பாட்டியும்
சீஷ்மியும் ரொம்ப தோஸ்த். எங்களிடம் அன்பாக இருப்பது போல் இருந்து பாட்டியிடம் போட்டுக்
கொடுப்பதில் கில்லாடி! பாட்டியின் தங்கை வராத நேரங்களில் சிவாஜி படம் பார்க்க இவர்கள்
இருவரும் கிளம்பிவிடுவார்கள்.
எங்கள்
வீட்டில் பெண்களில் நான் மட்டும் தான் ஆண்களிடம் சகஜமாகப் பேசுபவள், நிமிர்ந்து நடப்பவள்.
கூச்சம் என்பது கிடையாது. போட்டிகளில் கலந்து கொண்டு, வீட்டிற்குத் தாமதமாக வரத் தொடங்கினேன்.
ஆண் பசங்க என்னிடம் யாரேனும் வம்பு செய்தால் சட்டையைப் பிடித்துச் சண்டை போடும் தைரியம்.
பல்லாயிரம் கண்கள் கொண்ட எங்க ஊர் மூலம் பாட்டிக்குச் செய்தி வந்துவிடாதோ! இன்னும்
கட்டுப்பாடுகள் கூடின
மூன்றாவது
வருடத்தின் இறுதியிலேயே, பாட்டி தான் இருக்கும் போதே என் கல்யாணத்தை நடத்த வேண்டும்
என்று பார்க்கத் தொடங்கினார்.
மீண்டும்
வேதாளம் முருங்கை மரம் ஏறியது. வேதாளம் நான் தாங்க, M. A. படிக்க வேண்டும், IES எழுத
வேண்டும் என்ற Strong Script மனதில் இருந்ததால் அழுது புரண்டு ஆகாத்தியம் செய்து எப்படியோ
முதுகலையில் சேர்ந்துவிட்டேன்.
முதுகலை
இரண்டாம் வருடம். சிந்துபைரவி படம் வெளியான சமயம். நான் என் தங்கைகள் எல்லோரும் எங்கள் கல்லூரியில்
இந்தப் படம் பற்றிப் பேசிக் கேட்டு அதுவும்
பாடல்கள் எல்லாம் சூப்பர் என்று உசுப்பேற்றியிருக்க…. அப்போது சுஹாசினி, தாஸேட்டன்
பாடல்கள் என்று எங்களை ஈர்த்திட நாங்கள் எப்படியாவது பார்க்க வேண்டும் என்றிருக்க…
“சிந்துபைரவி
படம் பேஷா இருக்கு. பாட்டெல்லாம் நோக்கு ரொம்பப் பிடிக்கும். போய் பார்த்துட்டு வாங்கோ.
நானும் உங்க பாட்டியும் பார்த்தாச்சு” – சீஷ்மி வேறு தூபம் போட….
முதன்
முறையாகச் சிவாஜி இல்லாத படத்தை பாட்டி பார்த்துவிட்டு வந்த விஷயம் எங்களுக்கு ஆச்சரியத்தை
ஏற்படுத்த…..
கேட்டால்
அனுமதி கிடைக்குமா? வழக்கம் போலக் கால் பிடித்த போது கேட்டேன்…..வழக்கம் போல பாட்டி
கோபத்தில் சீஷ்மி வீட்டுத் திண்ணையில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்து
நான் சென்று கூப்பிட்டாலும் என்னிடம் முகம் பார்த்துப் பேசாமல் திருப்பிக் கொண்டார்.
“இந்தப்
பொண்ணு பத்திதான் நேக்கு ரொம்பக் கவலையா இருக்கு. ஆம்பள மாதிரி ராணுவ ஜவான் மாதிரி
அதிர அதிர தலை நிமிந்து நடக்கறா, கொஞ்சம் கூட பயம், கூச்சம் இல்லவே இல்லை. பொண்ணா லட்சணமா
தலை எல்லாம் அழகா பின்னிண்டு பூ வைச்சுண்டு எதுவுமே செஞ்சுக்கறதில்ல. எப்படிக் கல்யாணம்
ஆகப் போறதோ?”
என்று
அந்தத் திண்ணையில் சீஷ்மியிடம், அதுவும் நான் சினிமாவுக்கு அனுமதி கேட்கும் போதெல்லாம்
கோபத்தில் அரற்றிய பாட்டி 1986 பொங்கல் அன்று நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அவரைச் சேர்த்திட, அங்கு அவரைப் பார்க்கப் போன போது நான் அழுதுவிட, ஒரு கோபப் பார்வையுடன் கண்களை விரித்து “உம்” என்ற உறுமல் சத்தம் போட்டு, “ஏவ்ட்டி
என்ன அழுகை வேண்டிக்கிடக்குவிட்டி. எதுக்கு இப்ப அழற? பொண்கள் அழக் கூடாது. உன் தைரியம் அவ்வளவுதானா? நான் ரெண்டு நாள்ல வந்துடுவேன்”
அதன்
பின் சீஷ்மி வீட்டுத் திண்ணை வெறிச்சென்று இருந்தது.
-----கீதா
ஒரு சில்லுதான். இதுவே பெரிதாகிவிட்டதால்.
இன்றைய பதிவு சூப்பர், சுவாரஸ்யம். அன்றைய கிராமத்து சூழலை கண்முன் கொண்டுவந்து காட்டி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம். பாஸிட்டிவ், ஊக்கமிகு வரி.
நீக்குகீதா
அப்போதே கதை கட்டுரை, படங்கள்.... சூப்பர். சிறுவயதிலிருந்தே தயாராகி விட்டீர்கள்!
பதிலளிநீக்குஹிஹிஹிஹி....படிக்க கஷ்டமாச்சே. இதெல்லாம்தான் செய்வேன். ஆனா என்ன உபயோகம். என்னால் எதிலும் முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை. வீட்டில் ஊக்கம் கிடைத்ததில்லை. அதனால் எல்லாம் தேங்கி நின்றன. 10 ஆம் வகுப்பிலிருந்து கலந்து கொள்ளத் தொடங்கி பரிசுகள். ஆனா லேட்டா வருவேன் வீட்டுக்கு. அதுக்கப்பறம் என்ன நடக்கும்ன்றது டண்டணக்கா தான். வீட்டில் என்னை கற்பனையில் மிதப்பவள்னு சொல்லுவாங்க.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
படம் போவதற்கு இவ்வளவு கட்டுப்படுகளா, விதிகளா... அச்சோ.. கொடுமைதான்.
பதிலளிநீக்குநிறைய, போன வாரம் கூட நானும் தங்கையும் பேசிக் கொண்டிருந்த போது இந்தப் பழைய நினைவுகள் ...நான் சொன்னேன் இதெல்லாம் எழுதியிருக்கிறேன்னு.
நீக்குபாட்டியின் மறைவுக்குப் பிறகு பல கட்டுப்பாடுகள் தளர்வாயின. ஆனால் எங்களுக்கு அதுவே பழக்கமாகிப் போனதால ஃப்ரீடம் கிடைத்துவிட்டது என்று எதுவும் தோன்றவில்லை.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஊரிலிருந்து வந்திருக்கும் உறவுகளின் நாகரீக வெளிப்பாடுகள் பற்றிய வரிகளை நானும் டிட்டோ செய்கிறேன். எங்களுக்கும் இந்த அனுபவங்கள் உண்டு.
பதிலளிநீக்குஅப்போதைய சிறு ஊர்களில் இருந்தவங்களுக்கு இப்படியான அனுபவங்கள் இருந்திருக்கும்னு நினைக்கிறேன், ஸ்ரீராம்
நீக்குகீதா
எல்லோரும் நல்லவரே படத்தில் ஒரு SPB பாடல் உண்டு.'படைத்தானே பிரம்மதேவன்... ' KJY பாடல் கூட உண்டு... 'பகைகொண்ட உள்ளம்...'
பதிலளிநீக்குபகை கொண்ட உள்ளம் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது பாடல் தெரியும். ஆனா பாருங்க அது இந்தப் படம்ன்றது இப்ப நீங்க சொல்லித்தான் தெரிகிறது. மற்றபாடல் கேட்கிறேன் ஸ்ரீராம்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
பாட்டியின் மறைவு வருத்தம்தான். உள்ளுக்குள் ரசித்திருக்கிறார் என்று தெரிகிறது. வெளிப்படையாக சொன்னால் விவரம் தெரியாமல் இன்னும் அதிகம் ஆகிவிடும் என்று பயந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஇருக்கலாம் ஸ்ரீராம். ஆனால் பாட்டியை ரொம்ப கட்டுப்பாடுகள் நிறைந்த பாட்டியாவே பார்த்து...நிறைய நல்லவை கற்றுக் கொண்டாலும், பாட்டு கற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை வீட்டிலும் பாடக் கூடாது...ஆர்வங்கள் பல அப்படியே புதையுண்டுவிட்டன.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்கள் பாட்டியை பற்றியும், அப்போது வீட்டில் நடைபெற்ற சூழல்களையும் விளக்கியது அருமை. ஒவ்வொன்றையும் நாங்கள் நேரில் கண்ணால் பார்ப்பது போன்ற எழுத்து நடை.
அப்போதே நீங்கள் கதை கட்டுரையென ஈடுபாடுடன் இருந்தது மற்றொரு சிறப்பு. அதனால்தான் நீங்கள் சிறு வயதிலேயே கற்ற, பெற்ற அனுபவங்கள் நல்ல நடையுடன் இப்போதும் எங்களை வந்தடைகின்றன. சிறந்த கதாசிரியரை எங்களுக்கு தந்துமிருக்கின்றன. உங்களுக்கு என் அன்பான மனம் நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சகோதரி.
எங்கள் (அம்மா) வீட்டிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. திருமணமான பின்பும், நானும், கணவரும் பார்த்த திரைபபடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலிருந்து திரையரங்கிற்கு சென்று திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வமே எனக்கு குறைந்து விட்டது. நடுவில் தொ. காட்சியில் படங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது அதுவும் எப்போதோதான்.
/சீஷ்மி பெயர்க்காரணம் – அவர் கணவர் அவரை அப்படித்தான் சுருக்கமாக விளிப்பார். மாமாவுக்கு நாங்கள் வைத்த பெயர் இறக்கை கட்டி பறவை! (அப்ப அண்ணாமலை படம் வரலையாக்கும்!) இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்துக் கொண்டே படு வேகமாக நடப்பார் இல்லை பறப்பார்!/
ஹா ஹா ஹா. மனம் விட்டு சிரித்து விட்டேன் சகோதரி. இப்படி பெயர் காரணங்கள் எங்கும் இருக்கும் போலும்.!! நமக்கும் யாராவது இப்படி எதையாவது மறைமுக பெயர்கள் வைத்திருப்பார்கள் இல்லையா!! என எப்போதுமே யோசிப்பேன்.
தங்கள் பாட்டிக்கு உள்ள கவலை நியாமானதுதானே ! அதனால்தான்,அவர்கள் தெம்பாக இருக்கும் போதே தங்களுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டிருப்பார்கள்.என் திருமணமும் பத்தொன்பது வயதில் எங்கள் பாட்டியின் ஆசைக்காகத்தான் நடை பெற்றது.
இறுதி வரிகளைப் படித்ததும் மனம் கலங்கி கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. நீங்கள் அதை தாங்கியிருக்கிறீர்கள் எனும் போது மனதில் இனம் புரியாத ஒரு வேதனையும் வந்தது. என்ன செய்வது..? காலம் மாறினாலும், நம் நினைவுகள் அழிவதில்லையே ..!
அருமையான தங்களின் மலரும் நினைவு பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா. அப்போதே அப்படி எல்லாம் இல்லை கமலாக்கா. ஏதோ சும்மா. ஆர்வங்கள் இருந்தாலும் இப்போதும் அவ்வளவு எழுத முடிவதில்லை.
நீக்குநானும் திருமணம் ஆன பிறகும் திரைப்படங்கள் பார்த்தது அபூஊஊஊஊர்வம். வீட்டில் ஆர்வம் கிடையாது. மற்ற உறவினர்களுடன் சென்றதுதான். அதுவும் ரொம்ப அபூர்வம். மகனோடு சில பார்த்ததுண்டு.
நாங்கள் இன்னும் சில பெயரெல்லாம் கூட வைத்ததுண்டு எங்களுக்குள். அது ஒரு காலம். நிறைய உண்டு. ஆனால் சிலவற்றைப் பொதுவெளியில் எழுதக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.
அவர் கவலை நியாயமாக இருக்கலாம் அது அவர் கோணம். எனக்கென்று சில ஆசைகள் இருக்கும் இல்லையா....என் கோணம். நான் எவை செய்யக் கூடாது என்று கற்றுக் கொண்டவை அதிகம்.
உங்களுக்குப் 19 வயதில் திருமணம் - ஆமாம் அப்போதெல்லாம் இப்படித்தான் பாட்டி, தாத்தா என்று ஏதேனும் ஒரு காரணம் சொல்லி பெண் பிள்ளையை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று என்னவோ அது ஒரு காலம். உங்கள் திறமையைப் பார்க்கறப்ப தோன்றும் கமலாக்கா எவ்வளவு முடக்கப்பட்டுவிட்டது என்று.
நம் நினைவுகள் அழிவதில்லை, கமலாக்கா. உங்கள் கவிதையை வாசித்துவிட்டேன். இனிதான் வர வேண்டும்.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
படம் பார்க்கச் செல்வதற்கான முஸ்தீபுகள்…. சுவாரஸ்யம். இன்றைய பதிவு மனத்தைத் தொட்டது. எங்கள் வீட்டில் கூட படம் பார்க்க தன்னிச்சையாக எதுவும் முடிவு எடுத்து விட முடியாது. அப்பா முடிவு செய்து, இன்ன படம் போகிறோம் என்று சொன்ன பிறகு, காலையில் நானும் அக்காவும் சைக்கிளில் சென்று முன்பதிவு செய்து வருவோம். மூன்று சைக்கிள்களில் ஐந்து பேரும் சென்று படம் பார்த்து திரும்புவோம். திரையரங்கில் எதுவும் வாங்கித் தரமாட்டார்கள். வீடு திரும்பிய பிறகு தான் சாப்பாடு. பெரும்பாலும் மாலைக் காட்சி தான். எனது அனுபவங்களை எனது பக்கத்தில் எழுதி இருக்கும் நினைவு…..
பதிலளிநீக்குநீங்கள் மூன்று சைக்கிள்களில் சென்று வந்தது பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது வெங்கட்ஜி. ஆமாம் உங்கள் அனுபவங்கள் திரைப்பட அனுபவங்கள் நெய்வேலி பற்றிய நினைவுகள் வாசித்த நினைவு இருக்கிறது.
நீக்குஅக்காலத்தில் படம் பார்க்க எல்லாம் பெரியவர்கள் எடுப்பதுதானே...
மிக்க நன்றி வெங்கட்ஜி.
கீதா
பதிவு நல்ல சுவாரஸ்யமாக சென்றது இறுதியில் பாட்டியின் வரிகள் மனதை கனக்க வைத்து விட்டது.
பதிலளிநீக்குபாட்டிக்கு அன்பு இருந்தாலும் வெளியில் காட்டிக்க் கொண்டதில்லை எனலாம் கட்டுப்பாட்டோடு வளர்க்கும் பொறுப்பு...
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி பதிவைப் பற்றிய உங்கள் கருத்திற்கு
கீதா
பழைய நினைவுகளை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள்.
பதிலளிநீக்குமலரும் நினைவுகளில் தான் எத்தனை எத்தனை விஷயங்கள்!
எல்லா வற்றுக்கும் கட்டுப்பாடுகள், அதை மீறாத இளசுகள்.
வீட்டுக்கு வந்த வடக்கு உறவுகள் தந்த பாதிப்புகள். எல்லாம் அருமையாக தொகுத்து கொடுத்து விட்டீர்கள் கீதா.
எங்கள் வீடுகளிலும் உறவுகளுக்கு மிக அதிகபடியான உபசரிப்பு நடக்கும் போது நாங்களும் அம்மாவிடம் எங்களுக்கும் வேண்டும் என்று கேட்டு தொந்திரவு செய்து இருக்கிறோம்.
தருகிறேன் முதலில் வந்தவர்களுக்கு அப்புறம் உங்களுக்கு என்று சமாதானம் செய்வார்கள்.
உறவுகளுடன் நம் ஊரை சுற்றி காட்ட போகும் போது உற்சாகம் தான். சினிமா பார்ப்பதும் உற்சாகம் தான். அதை அனுபவிக்க முடியாமல் பாட்டியின் 10 கட்டளைகள் கஷ்டம் தான்.
//சீஷ்மி வீட்டுத் திண்ணை வெறிச்சென்று இருந்தது.//
மனது கனத்து போய் விட்டது. இப்போது திண்ணைகளும் இல்லை, அதில் அமர்ந்து பேசும் பாட்டிகளும் இல்லை. எல்லோரும் தொலைக்காட்சியில் மூழ்கி விட்டார்கள்.
சில் கிராம்ங்களில் திண்ணியகளில் அமர்ந்து பேசும் வயதானவர்களை கண்டால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
தட்டச்சு பிழை
நீக்குபழைய நினைவுகளை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள்.
நீக்குமலரும் நினைவுகளில் தான் எத்தனை எத்தனை விஷயங்கள்!
எல்லா வற்றுக்கும் கட்டுப்பாடுகள், அதை மீறாத இளசுகள்.
வீட்டுக்கு வந்த வடக்கு உறவுகள் தந்த பாதிப்புகள். எல்லாம் அருமையாக தொகுத்து கொடுத்து விட்டீர்கள் கீதா.//
ஆமாம் கோம்திக்கா. அது ஒரு காலம்.
அப்போதெல்லாம் வீட்டில் ரொம்பக் கட்டுப்பாடுகள். இப்படி வெளியே போறப்ப நீங்க சொல்லுவது போல் மகிழ்ச்சி இருந்தாலும், பாட்டி மட்டுமில்ல பெரிய மாமாவும் அப்படித்தான் எல்லா மாமாக்களுமே இப்படியான கட்டுப்பாடுகள்தான்......அன்று பாட்டி வரவில்லை என்றாலும் கட்டளைகள் மாமாக்களும் அதேதான்.....ஆனால் அப்படி வளர்ந்ததும் அதன் பின்னான வாழ்க்கையிலும் பல மேடு பள்ளங்கள் அவற்றைக் கடக்க மனம் பக்குவப்பட்டது எனலாம் என்றாலும் இன்னும் அழகாக எங்களை வளர்த்திருக்கலாம் என்றும் தோன்றும்.
ஆமாம் இப்போது திண்ணைகள் எங்கள் ஊரிலும் இல்லை கோமதிக்கா...அதே தெரு அதே வீடுகள் ஆனால் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன! அத்தனை வீடுகளும்.
தட்டச்சுப்பிழை புரிந்தது கோமதிக்கா பரவாயில்லை எனக்கும் நிறைய வருகிறது.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
பாட்டிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு ரகம். கோவித்துக்கொண்டால் திண்ணை என்ற உங்கள் பாட்டி நான் விமரிசனம் செய்த நீல பத்மனாபனின் 'சண்டையும் சமாதானமும்' பாட்டி மாரியம்மையை நினைவூட்டினார்.
பதிலளிநீக்குஅழியாத கோலங்கள் என்றுமே நினைத்து மகிழ்ச்கை கொள்ள வைப்பவை.
Jayakumar
ஆமாம், ஜெ கே அண்ணா, எனக்கும் நினைவுக்கு வந்தது அந்தக் கதை வாசித்த போதே. ஆனால் அன்று சொல்லவில்லை....இப்படி பாட்டி பற்றி கொஞ்சம் எழுதி வைத்திருந்ததால் சொல்லவில்லை....ஸ்ரீராமின் சினிமா அனுபவப்பதிவு பார்த்ததும் முடித்து போட்டுருவோம் என்று போட்டாச்!
நீக்குஅழியாத கோலங்கள் மகிழ்ச்சி ஒரு புறம் மற்றொரு புறம் என்னடா பொல்லாத வாழ்க்கை...ந்னு
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
சில கிராமங்களில் திண்ணையில் அமர்ந்து பேசும் வயதானவர்கள் உண்டு.
பதிலளிநீக்குபுரிந்து கொண்டேன் கோமதிக்கா...
நீக்குகீதா