ஞாயிறு, 14 ஜனவரி, 2024

துபாய் நாட்கள் - இரண்டாம் நாள் - 27-10-2023

துபாய் நாட்கள் பகுதி 1  வாசித்தவர்கள், கருத்திட்டவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வாசிக்காதவர்கள் விரும்பினால் இச்சுட்டி சென்று வாசித்துக் கொள்ளலாம். 

இதோ இரண்டாம் நாள் பகுதி.

‘Snakit’

27-10-2023 காலை தங்கியிருந்த இடத்தின் கீழே உள்ள ‘Snakit’ எனும் தேநீர்க் கடைக்குப் போய் தேநீர் குடித்து (1 அமீரக திர்ஹாம்) மூன்று இட்லி வடை செட் (3 அமீரக திர்ஹாம்) சொன்னோம்.  அறைக்குக் கொண்டு வந்து கொடுத்தார்கள், Disposable தட்டுகளில்.

அன்று ஜமால் வரமுடியாத நிலை. அவர் பணிபுரியும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அடுத்த இரண்டு நாட்கள் அவர் எங்களுடன் வருவதாகச் சொன்னார். அதனால் எங்களுக்கு அன்றைய தினம் மெட்ரோ ரயிலில் ஏறி Museum of the Future – (மியூஸியம் ஆஃப் த ஃப்யூச்சர்) மற்றும் துபாய் மால் செல்லத் தேவையான அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

Baniyas Square Metro
 அட்டை,  NOL கார்டு - Nol, which means 'fare' in Arabic, is a smart card thoughtfully created by the Dubai Roads & Transport Authority (RTA) to make your public transportation experience smooth and hassle-free. அரபு மொழியில் கட்டணம் என்று சொல்லப்படும் இந்த ஸ்மார்ட் கார்ட் பொதுப்போக்குவரத்தான மெட்ரோ ரயில், பேருந்து என்று எல்லாவற்றிற்கும் பயன்படுத்தும் வகையில் எளிதாக, சௌகரியமாகப் பயணம் செய்யும் வகையில் துபாய் போக்குவரத்து அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்று

அருகிலுள்ள Baniyas Square Metro – Bபனியா ஸ்கொயர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று ஒவ்வொருவருக்கும் 25 அமீரக திர்ஹாம் செலுத்தி மெட்ரோ ரயில் நிலைய (Counter)கவுன்டரிலிருந்து 6 அட்டைகள், 6 NOL கார்டுகள் எடுத்தோம். மெட்ரோவில் பணிபுரியும் ஒரு பெண்மணி எங்களுக்கு உதவினார். 

Union Station ல் இறங்கி Red line ல்

அங்கிருந்து அடுத்த Union Station ல் இறங்கி Red line ல் - சிவப்பு லைன் தடத்தில் - செல்லும் ரயிலுக்கு மாறி எமிரெட்ஸ்/அமீரக மால் ஸ்டேஷனில் இறங்கி Museum of the Future கண்ட பின், திரும்ப துபாய் மால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருவது நல்லது என்றார். நாங்களும் சொன்னபடி செய்தோம்.
துபாய் மால் மெட்ரோ

யூனியன் மெட்ரோ நிலையம்உலகிலேயே பூமிக்கு அடியில் உள்ள மிகப் பெரிய  நிலையம் 

யூனியன் மெட்ரோ நிலையம் (துபாய் மெட்ரோ) Deira – தேராவில், Union Square-யூனியன் ஸ்கொயருக்கு கீழே பூமிக்குள் இருக்கிறது. இது துபாய் கிரீக்கின் மத்திய பகுதிக்கு மிக அருகில் உள்ள மெட்ரோ நிலையங்களில் ஒன்று. மட்டுமல்ல உலகிலேயே பூமிக்கு அடியில் உள்ள மிகப் பெரிய நிலையமும் கூட. 

எல்லா இடங்களுக்கும் வழி காட்ட எல்லா இடங்களிலும் அறிவிப்புப் பலகை இருந்தது. அதே போல் மெட்ரோ தட வரைபடமும் உதவியது. மெட்ரோவில் அறிவிப்பும் துணையானது. 

அமீரக மெட்ரோ நிலையம் செல்லும் வழியில் இரு புறமும் துபாய் நகரத்தின் வானளாவிய கட்டிடங்களும், விசாலமான சாலைகளும், சிக்னல்களுக்குக் காத்திருக்கும் அவசியமில்லாத விதத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதை வழிகளும் மேம்பாலச் சாலைகளும் பிரமிப்பூட்டின. (காணொலியில்)

அமீரக டவர் மெட்ரோ நிலையத்திலிருந்து (Emirates Tower Metro Station) Museum of the Future – ம்யூஸியம் ஆஃப் த ஃப்யூச்சருக்குச் செல்ல ஒரு ஆகாயப் பாதை, வெண் மேகக் குகை மிக அருமையான வடிவமைப்பு. சிறிது தூரத்திற்குப் பின் இரு புறமும் காணும் விதத்தில் கண்ணாடிப் பாதையாய் மாறி நம்மை Museum of the Future – ம்யூஸியம் ஆஃப் ஃப்யூச்சரின் தரைத்தளத்திற்குக் கூட்டிச் செல்கிறது.



இதில் சில விவரங்கள். வாசிக்க முடிகிறதா? பெரிதாக்கி முடிகிறதா என்று பார்க்கலாம்

அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பின் துபாய் எப்படி இருக்கும் என்பதை விளக்குவதுதான் Museum of the Future – ம்யூஸியம் ஆஃப் த ஃப்யூச்சர். 78 மீட்டர் உயரமும் 7 மாடிகளையும் கொண்ட இது இரும்புச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட கட்டிடம். உள்ளே சென்றால் ஒரு விண்வெளி நிலையத்தில் (Space Station) நிற்பது போன்ற ஓர் உணர்வு. 

 

அதை உருவாக்கியவர்களில் ஒருவரான Mattar Bin Lahej

கட்டிடம் முழுக்க உள்ளும் புறமும் அரபி மொழி. அதனால்தான் அதை உருவாக்கியவர்களில் ஒருவரான Mattar Bin Lahej – மட்டர் பின் லாஹெஜ் – எனும் கலைஞர் இதை அரபு மொழி பேசும் கட்டிடம் என்று அழைக்கிறார்.  அரபு மொழியில் அதன் வாயிலில் அமீரகத்தின் பிரதமர் திரு முகம்மது பின் ராஷித் அவர்கள் எழுதிய அரபி வாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளுக்குப் பின் நாம் வாழ முடியாதெனினும் நம் படைப்பாற்றல்கள் வாழும் என்று.

நுழைவுக்கட்டணம் 145 AED (ஏறத்தாழ 3300 ரு). Museum of the future க்கான நுழைவுச் சீட்டை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதால் அதன் தரைத்தளம் மற்றும் முதல் தளத்திலிருந்தும் அதன் முன்பில் நின்று அதன் அழகை ரசித்ததுடன் படங்களும், காணொளிகளும் எடுத்துக் கொண்டோம்.

தூரத்தில் தெரியும் புர்ஜ் கலிஃபா

அதன் பின் மெட்ரோ ஏறி துபாய் மால் நிலையத்தில் இறங்கினோம். மெட்ரோ நிலையத்திலிருந்தே துபாய் மாலுக்கு நீண்ட ஒரு ஆகாயப் பாதை.  கீழே 8 வழிச் சாலைகள் தூரத்திலிருந்தே தெரிகின்ற Burj Khalifa.

துபாய் மால்

துபாய் மால் பிரமிப்பூட்டியது. இருந்தாலும் லுல்லு மால் போன்ற பல மால்களை இங்கு கண்டிருந்ததாலோ என்னவோ அதிகம் வியப்பில்லை. நாங்கள் நடந்து மீன் அருங்காட்சியகத்தை அடைந்தோம். நுழைவுச் சீட்டு எடுத்து உள்ளே சென்று பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று தோன்றியது. முன்பிலும், இடப்புறமும் கடல் வாழ் உயிரினங்களின் காட்சியே போதும். நீண்ட நேரம் பார்த்து படங்களும் எடுத்துக் கொண்டோம். 


தரைத்தளத்திலிருந்து Burj Khalifa வின் நீரூற்றிற்கு வழி

தரைத்தளத்திலிருந்து Burj Khalifa வின் நீரூற்றிற்கு வழி இருக்கிறது. அதன் வழியாக நீரூற்றை அடைந்த போது அங்கு சுற்றுலாப் பயணிகள் கடலெனத் திரண்டு நின்றிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் இசையுடன் கூடிய நீரூற்றின் அழகைக் கண்டு களித்தோம். (புர்ஜ் கலிஃபா பகுதி காணொளியில்)

Burj Khalifa சிறிய காணொளி - பதிவின் முழு காணொளியில் இதை இன்னும் விரிவாகக் காணலாம் இசையுடன் கூடிய நீரூற்றுடன்

மீண்டும் Burj Khalifa வின் இரவு அழகை ரசிக்க வர வேண்டும் என்று முடிவு செய்து அங்கிருந்து கிளம்பி Baniyas Square ரயில் நிலையத்தை அடைந்தோம். 

பின் அங்கிருந்து நடந்தே அருகிலுள்ள Gold Souk-கோல்ட் ஸூக் - கிற்குச் சென்றோம். தங்கத்தால் ஆன அணிகலன்கள் மட்டுமல்ல, ஆடைகளே இருந்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பார்க்கத்தான் வேண்டும். (காணொலியில்)

குங்குமப்பூ குவியல்

தங்கம் மட்டுமா! அதிசயமாய் பொன் தோட்டத்தில் பூத்திருக்கும் குங்குமப்பூ குவியலைக் கண்டதும் வியப்புடன் பாத்தோம். பின் அறையை அடைந்து தூங்கினோம். மறு நாள் அதாவது மூன்றாம் நாள், ஜமாலுடன் எங்கு சென்றோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

https://youtu.be/MxADNPD-FNc
பதினோரு நிமிடங்கள் 25 நொடிகள். முடிந்தால் நேரமிருந்தால் பாருங்கள்

மூன்றாம் நாள் இடங்களைக் காண பயணத்தில் என்னோடு இணைந்திருப்பீர்கள்தானே!  


-----துளசிதரன்


32 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிற்கான உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி. தொடர்ந்து வாருங்கள்.

      துளசிதரன்

      நீக்கு
  2. Burj Khalifa. Furj அல்ல. இது கட்டப்பட்டு முடிக்கும் தறுவாயில் மிகக் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் துபாய் சிக்கியது. அதனை மீட்டது அபுதாபியின் அரசர் (அதாவது எமிரேட்ஸ் அதிபர்). அதனால் துபாயால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்திற்கு அவரின் பெயரை வைக்கவேண்டிய கட்டாயம் (சிலர் அந்தக் கட்டிடத்தையே அவர்கள் வாங்கிவிட்டார் என்றும், இல்லை சில பல தளங்கள் மாத்திரம் என்றும் சொல்கிறார்கள்). ஆனால் அபுதாபி அரசர் பெயரை வைக்கவேண்டிய கட்டாயம் அப்போது துபாய் அரசருக்கு ஏற்பட்டுவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஆமா நான் டைப் பண்ணும்போது தமிழும் ஆங்கிலமும் மாற்றி மாற்றி அடித்ததால் ஏற்பட்டது. திருத்தினேன். சில இடங்களில் சேவ் ஆகாம போயிருக்கு. பி ன்னு தான் இருக்கு கீழ....இப்ப எல்லாத்தையும் மாற்றிவிட்டேன்....நேத்து துளசி பதிவு பார்க்க நேரம் இல்லையா ....அதான் அவரும் சொல்லலை நானும் பார்க்காம விட்டிருக்கேன்..

      மிக்க நன்றி நெல்லை இப்ப நினைவுபடுத்தியதுக்கு

      கீதா

      நீக்கு
    2. ஆம் அதை கவனிக்கவில்லை. திருத்தியதற்கு மிக்க நன்றி. கரெக்ட் செய்துவிடுகிறோம். (நான் கரெக்ட் செய்துவிட்டேன் அதை துளசிகவனிக்கவில்லை ஹாஹாஹாஹாஹா!!!!!!)

      ஓ புர்ஜ் கலிஃபாவின் பின் இப்படி ஒரு நிகழ்வும் இருக்கிறதா! ஆம் எல்லாவற்றிற்கும் ஒரு காரண காரியம் உண்டாகும்தானே.

      கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  3. துபாய் மாலில் ஐஸ் ஸ்கேட்டிங் மைதானமும் பார்த்திருப்பீர்களே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பகுதிகளுக்குச் செல்லவில்லை. நேரமும் இல்லை. மீன் காட்சியகம், பின் நீரூற்று. சாப்பிட வேறு இல்லை. ஒரு பாட்டில் தண்ணீருக்கு 20 அமீரக திர்ஹாம் கொடுத்து தாகத்தை அடக்கி, பனியாஸ் ஸ்கொயர் போய் எங்கள் இடத்தருகில் உள்ள ஹோட்டல் போய் சாப்பிட்டு ரூமை அடைந்து ஓய்வுக்குப் பின் கோல்ட் சூக் போனோம்.

      நன்றி நெல்லைத் தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
    2. எங்கள் இடத்தருகில் உள்ள "சிக்கன" ஹோட்டலில். இந்தச் சிக்கன விடுபட்டுவிட்டது.

      துளசிதரன்

      நீக்கு
    3. அருமை, ஏராளமான அறியாத அறிய வேண்டிய விஷயங்களைப் பகிர்கிறீர்கள். எல்லோரும் வாசித்தால் நல்லது. வாய்ப்பு குறைவு
      என்ன செய்ய? நேரமின்மையால் பல இடங்கள் விட்டுப் போனது. துபாயில் கிரீக்கும், கோல்ட் சூக்கும் தான். வேறு எங்கும் போகவில்லை. 5 நாட்களில், பாக்கேஜ் அல்லாததால், பல இடங்களையும் காணஇயலவில்லை.

      துளசிதரன்

      நீக்கு
  4. முதலில் மெட்ரோ ட்ராக் அமைக்கப்பட்டபோது, இது என்ன, துபாய் மாலிலிருந்து (அதாவது ஒவ்வொரு மாலிலிருந்தும்) அரை கிமீ தூரத்தில் ட்ராக் வைத்திருக்கிறார்களே என்று எனக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் இணைத்த பிறகுதான் அட்டஹாசமான திட்டமாக எனக்குத் தோன்றியது.

    பனியாஸ் ஸ்ஃகொயர் என்று அழைக்கப்படும் இடத்தின் அருகிலுள்ள க்ரீக் (தேராவையும் பர்துபாயையும் பிரிக்கும் நீர்ப்பகுதி) இடத்திற்குத்தான் தற்போதைய துபாய் அரசருக்கு முந்தையவருக்கும் முந்தையவர்... சாதாரண நிலையில் இருக்கும்போது தேநீர் அருந்த வருவாராம். அவர்களெல்லாம் படகுகள் வைத்திருந்த சாதாரண மீன்பிடி இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய அரண்மனையை (வீட்டை) பர்துபாயில் பார்த்திருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான பயண தொகுப்பு, விவரங்கள் அருமை.
    துபாய் செல்பவர்களுக்கு கையேடாக பயன்படும்.
    படங்கள் காணொளி எல்லாம் அருமை. தங்கத்தில் முதலை பாம்பு என்று அழகாய் செய்து இருக்கீரார்கள். குங்கும பூ நம் ஊர் குங்குமம் கிண்ணத்தில் வைத்து இருப்பது போல பார்க்க இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான பயண தொகுப்பு, விவரங்கள் அருமை.
      துபாய் செல்பவர்களுக்கு கையேடாக பயன்படும்//

      மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      தகவல்களைச் சுருக்கிவிட்டேன் என்று கீதா சொல்லிக் கொண்டே இருக்கிறார். இங்கு சகோதரி மனோ சாமிநாதன் அவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

      ஆம் கோல்ட் சூக் ஒரு தங்கப் பூங்கா என்றுதான் சொல்ல வேண்டும். காண வேண்டிய இடம். தங்கத்தாலான ஆடை இடுபவர்களும் (ஒரு வேளை மணநாளில் மட்டுமாக இருக்கலாம்) உண்டு என்பதை நம்ப வேண்டி இருக்கிறது.

      நன்றி சகோதரி.

      துளசிதரன்

      நீக்கு
  6. நுணுக்கமான விவரங்களுடன் (விலைப்பட்டியல்) பயணக்கட்டுரையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகும் முன் இதை எல்லாம் பற்றித்தான் நான் தெரிந்துகொள்ள விரும்பினேன், ஸ்ரீராம். எனவே அதை இங்கும் குறிப்பிட்டேன். ஆனால் பாருங்கள், நெல்லைத்தமிழன் எவ்வளவு அரிய விவரங்கள் தருகிறார் பாருங்கள். தெரிந்து கொள்ளலாம் நாமும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம், கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  7. அழகாக விவரித்திருக்கிறீர்கள்! ஆனாலும் நீங்கள் ரசித்தவற்றை சுருக்கமாக எழுதியிருப்பது போலத்தோன்றுகிறது. புகைப்படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன! மெட் ரோ ரயில் தானாகவே செயல்படுவது ! [ ஓட்டுனர் இல்லாமல்-automatic!]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுருக்கிவிட்டதாகத்தான் கீதாவும் சொல்கிறார். பதிவு நீண்டு விடுமோ என்ற தயக்கம். அந்தந்த நாளுக்கு உரியதை ஒரே பதிவாக என்பதாலும் இருக்கலாம்.

      ஆமாம், தானியங்கி துபாய் மெட்ரோ அருமை. ரயிலிலும் ஸ்டேஷனிலும் இரண்டு கதவுகள். விபத்துக்கு வாய்ப்பே இல்லை. முன்னேறிய தொழில்னுட்பம் உபயோகிக்கத் தடையில்லையே. செழுமையான நாடாயிற்றே.

      மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்

      துளசிதரன்

      நீக்கு
  8. 1 அமீரக திர்ஹாம் என்பது இந்திய மதிப்பில் எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.  இல்லை, நீங்களே சொல்லி விடுங்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் போன போது 22 ரூபாய்க்கு அடுத்து இருந்தது. இப்போது சிறிய மாற்றம் வந்திருக்கலாம். 1 டீ குடிக்க இங்கு 10-15 ரூ அங்கு 22 - அதுவும் சாதாரண மக்கள் அருந்தும் கடையில்!

      துளசிதரன்

      நீக்கு
    2. நான் அங்கு சென்றபோது (93), 1 லட்சத்துக்கு 11000 திர்ஹாம். பஹ்ரைனில் 95ல், 1080 தினார் 1 லட்சத்துக்கு. 2000-2012 வரையில் பஹ்ரைன் 1 தினார் 120 ரூபாயிலேயே இருந்தது. 2018ல் 140க்குப் போனது. பிறகு ராக்கெட் வேகம்தான். திர்ஹாமும் அப்படியே... நான் முதன் முதலில் சொந்தக் காசில் ப்ரேஸ்லெட் துபாயில் கிராம் 35 திர்ஹாமுக்கு வாங்கினேன். இப்போ 250 திர்ஹாமுக்கு மேல் இருக்கலாம்.

      நீக்கு
    3. அப்போது துபாயில் கிராம் 35 திர்ஹாம் இப்போது 250 எனும் போது ஏறக்குறைய 8 மடங்கு கூடியிருக்கிறது இல்லையா? இங்கு நம் நாட்டில் 10 மடங்குக்கு மேல் கூடியிருப்பதால்தான் தங்கக்கடத்தல்கள் அதிகமாகியிருக்கிறது உடலுக்குள் மறைத்து முக்கியமாகக் கேரளத்தில் கூடியுள்ளது.

      துளசிதரன்

      நீக்கு
  9. Museum of the Future  நல்ல ஆக்ஸிமோரான்!  சுவாரஸ்யமான கான்செப்ட்.  ஒரு ஸ்மார்ட் கார்டை வைத்தே பலவிதமான போக்குவரத்து செலவுகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது நல்ல செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ம்யூஸியம் உள்ளே செல்ல முடியவில்லை. நுழைவுக்கட்டணமும் 3000 ரூபாய்க்கு மேல் மட்டுமல்ல, 1 நாள் அதற்காக மாற்றி வைக்க வேண்டும். டிக்கெட்டில் டைம் ஸ்லாட் உண்டாம். இப்படிப் பல பிரச்சனைகளால் ஏக்கத்துடன் அதன் நுழைவாயிலிலிருந்து பார்த்து விட்டுத் திரும்பினோம். அதுவே ஒரு அதிசயக் காட்சி என்றால் பாருங்களேன், ஸ்ரீராம். உள்ளே சென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று.

      ஆம் Nol கார்டில் மெட்ரோ ம்ற்றும் பேருந்திலும் பயணிக்கலாம் என்பது மிகவும் நல்ல காரியம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
  10. நம்மூர் பூமிக்கு அடியில் இருக்கும் மெட்ரோ ஸ்டேஷனே அழகு.  அங்கு இருப்பது உலகிலேயே பெரிய ஸ்டேஷன் என்றால் பிரம்மாண்டமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நாமும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பது பெருமையாக இருக்கிறது. துபாய் போன்ற நாடுகளின் செழிப்பு இப்படி பல அதிசயங்களை உலகுக்கு இனி காட்டும் தான். ஆமாம் மிகப் பெரியது. ஆனால் பெரியது என்பதை இணையத்தில்தான் தெரிந்து கொண்டேன்.

      ஸ்ரீராம், உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  11. புகைப்படங்களை ரசித்தேன். Burj Khalifa சமீபத்தில் தன் சாதனைப் பெருமையை இழந்தது என்று செய்தியில் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பொலிட்டிகல் விஷயமும் கூட. எமிரேட்ஸில், துபாயில் உலகில் பெரிய கட்டிடம் என்பதே பெரிய பொறாமைக்குரிய விஷயம்...கடைசியில் அபுதாபி அரசர் பெயருக்கு மாறியது. அப்போதே சௌதிக்கு கடுப்பு. அவங்கதான் கல்ஃபிலேயே பணக்காரங்க. அதனால உடனேயே திட்டமிட்டாங்க...ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் தாமதமாகியது

      நீக்கு
    2. புகைப்படங்களை ரசித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      அது இயல்புதானே. ஒன்றியை பின் தள்ளி முன்னால் குதிக்க வேறு ஒன்று உருவாகிக் கொண்டுதானே இருக்கும்.

      மிக்க நன்றி, ஸ்ரீராம் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
    3. போட்டி பொறாமை, பொலிட்டிக்கல். அதனால்தான் சவுதியில் புர்ஜ் கலிஃபாவை விட அதிக உயரமாக ஒன்று கட்ட வேண்டும் என்று நினைத்து Jeddah Tower / Kingdom Tower, எனும் பெயரில் கட்டிக் கொண்டு இருப்பதாகச் செய்தி.

      துளசிதரன்

      நீக்கு
  12. துபாயில் இரண்டாம் நாள் - தகவல்கள் அனைத்தும் சிறப்பு. கோல்ட் சூக் - துபாய் போகும் அனைவரும் இங்கே போகாமல் வருவதில்லை. சமீபத்தில் தோழி ஒருவருடைய மகள் ஷார்ஜாவில் வேலை கிடைத்து போயிருக்கிறார். தோழி தங்கம் வாங்க கடைக்குச் சென்று வந்தார்.

    படங்கள், காணொளி, தகவல்கள் என சிறப்பாகச் செல்கிறது பயணத் தொடர்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், தங்களது தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ உங்கள் தோழி சென்று வந்தாரா. அங்கு நகைகள் வாங்கினால் சிறிய லாபம் உண்டுதான். கோல்ட் சூக்கில் 22 கேரட் தங்கத்தில் என்றால் ஒரு சில இந்திய கடைகளில் மட்டுமே கிடைக்குமாம். நாங்களும் அங்கு ஒரு மோதிரம் வாங்க மலபார் கோல்ட் கடையைக் கண்டுபிடித்துப் போனோம். ஆனால் நேரம் தாமதமாகிவிட்டது. கடை அடைக்கும் நேரமாகிவிட்டதால் வருந்து எங்களை அனுப்பினர்.

      இனிய பொங்கல் நல் வாழ்த்துகள், வெங்கட்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. துபாய் பற்றிய பல விபரங்களை தெரிந்து கொண்டேன். அனைத்தும் வியப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது. படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. கருத்துரைகளிலும் பல விபரங்களை அறிந்து கொண்டேன்.

    தங்கஆடைகள் பற்றிய விபரமும், குங்குமப்பூவின் குவிப்பும் திகைப்பூட்டுகின்றன. அந்த காலத்தில் ஒரு பல் தங்கத்தில் செய்து பொருத்திக் கொண்டாலும், அவர்களை பெரிய பணக்காரன் என்ற பார்வையில் பார்ப்பார்கள். தங்கத்தில் ஆடை என்றால் அவ்வளவுதான்..!! .

    காணொலியிலும் துபாயின் அழகை பார்த்து ரசித்தேன். பதிவின் விபரங்களை உங்கள் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் விபரமாக சொன்னது மிக அருமையாக உள்ளது.

    நேற்று பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. அதனால் மிகத்தாமதமான பொங்கல் வாழ்த்துக்களை உங்கள் இருவருக்கும், (சகோதரி கீதாரெங்கன், நீங்கள்.) உங்கள் இருவரது குடும்பத்தினருக்கும் சொல்லிக் கொள்கிறேன். நாளை காணும் பொங்கல் வரை வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது நம்இயல்புதானே..!! (எனினும் தாமதமாக வந்து பொங்கல் வாழ்த்துகளை சொல்வதற்கு மன்னிக்கவும்.) இங்குதான் மகர சங்கராந்தியுடன் இனிதே நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான இயல்புகள். பதிவை தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவையும் காணொளி கண்டு காணொளியையும் பற்றி விரிவாகக் கருத்து சொன்ன சகோதரி கமலா ஹரிஹரனுக்கு நன்றி.

      ஆம் அக்காலத்தில் தங்கப்பல் என்று சொல்லிப் பெருமை பேசுவதுண்டு. தங்கத்தில் ஆடை என்பது உண்மையிலேயே அணிவார்களா என்று தெரியவில்லை. ஒரு வேளை அரச குடும்பத்தினருக்கு, ஆள்பவர்களி குடும்பத்தில் இருப்பவர்களுக்காக இருக்கலாம்.

      காணொளியும் கண்டு ரசித்ததற்கு மிக்க நன்றி சகோதரி.

      நானும் தாமதமாகவே வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தாருடன் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      ஆமாம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள் என்றாலும் எல்லா மாநிலங்களிலும் சூரிய வழிபாடு தான் பொது என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்

      துளசிதரன்

      நீக்கு