திங்கள், 18 மார்ச், 2024

ஜெயமோகனும் மஞ்ஞும்மல் பாய்ஸும்

 

இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமலிருக்க என்னால் முடிந்தவரை தாக்குப் பிடித்தேன்.  இனி முடியாது என்பதால்தான் இந்தக் கருத்து.

கேரள மக்களுக்குப் புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தனைத் தெரியாது. ஆனால் ஜெயமோகனைத் தெரியும். அவரது படைப்புகளில் சில மலையாள எழுத்துலகில் இடையிடையே பேசப்படுவதுண்டு. அதுதான் காரணம். அதனாலேயே அவர் ஏதேனும் சொன்னால் அது தமிழகத்திலும் கேரளத்திலும் அதிகமாக விவாதத்திற்கு உள்ளாகும்தான்.

அதனால், அவருக்கு உண்மை என்று தோன்றுவதை இவ்வளவு கடினமாகச் சொல்லாமல், தன்மையாகச் சொல்லியிருக்கலாம் என்பதுதான் என் கருத்து.

காரணம், ஒரு கோபத்தில் கிணற்றில் குதித்துவிட்டு அது போல் ஆயிரம் மடங்கு கோபம் வந்தாலும் ஏற படிக்கட்டுகள் இல்லாத கிணற்றிலிருந்து ஏறி வர முடியாது என்று ஒரு பழமொழி உண்டு. அப்படி அவர் சொன்னவிதம் இது போன்ற எல்லோராலும் போற்றப்படும் எழுத்தாளருக்கு ஏற்றதல்ல.

இனி அவர் சொன்ன கருத்துகளைப் பற்றிச் சொல்வதானால், குடிப்பழக்கம், போதைப் பொருள் உபயோகம் இயற்கைக்கும் வனவிலங்குகளுக்கும் துன்பம் விளைவித்தல் என்பது நம் சமூகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட வேண்டியவைதான்.

அரசும், அதனோடு தொடர்புடைய இலாக்காக்களும் மட்டும் நினைத்தால் செயல்படுத்துவது சிரமம். லஞ்சத்தையும் வன்முறையையும் ஒழிக்கப் பாடுபடுவது போல், இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது நம் கடமை, அவை இல்லையேல் நாமில்லை என்ற எண்ணத்தை ஒவ்வொருவரிலும் வேரூன்ற வைக்கப் பாடுபடுவது போல், மது மற்றும் போதைப்பொருள் உபயோகம் மரணத்திற்கான குறுக்குவழியன்றி வேறொன்றல்ல என்பதை வரும் தலைமுறைக்குப் புரிய வைக்க முயற்சிப்பது போல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்தான். இதற்குக் காலமும் பொறுமையும் மட்டுமே நமக்குத் துணையாக இருப்பவை.

ஆசிரியர்களான நாங்கள் கல்லூரிகளில் மட்டுமல்ல, பள்ளிகளிலும் இந்த போதைப் பழக்கம் எனும் இந்தக் காட்டுத்தீ படர்வதைக் கண்டு பதைத்து நிற்கிறோம்.

அப்படிப்பட்ட நிலையில் திரைப்படத் துறையில் மட்டும் இது எப்படி இல்லாமல் இருக்கும்? அங்கங்கு இருக்கும் பெரும்பான்மையானவர்கள் இதை எதிர்த்துப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருக்க நட்பை, காதலுக்கு, அதுவும் புனிதமான காதலுக்கு ஒப்பிடும் இப்படத்தை எல்லோரும் பாராட்டும் இப்படத்தை அதன் சிற்பிகளை இந்த அளவுக்குத் தூற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.

அடுத்து, எர்ணாகுளம் குழுவைப் பற்றி, மறைமுகமாக அதில் அதிகமாக உள்ள ஒரு மதம் சார்ந்தவர்களைக் குறித்துச் சொன்னது பற்றிச் சொல்வதானால், முன்பெல்லாம் மலையாளத் திரைப்படங்களில் கதைகளும் கதாபாத்திரங்களும் கடந்த நூற்றண்டிலிருந்து எல்லாவிதத்திலும் இறக்குமதி செய்யப்பட்டவைகள்.

இப்போது அது போன்ற ஒரு சமூகச் சூழல் கேரளத்தில் இல்லை. நான்கு, எட்டு கட்டு தரவாடுகளும், மேலாள், கீழாள், சம்பிரதாயங்களும் இல்லை. இப்போதைய தலைமுறையினர் காண்பதையும் நிகழ்வதையும் பற்றிப் படமெடுக்கிறார்கள். அவை எல்லாவிதத்திலும் மாறுபட்டதாய் இருக்கின்றன.

திரைப்படத் துறையில் எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்புத் துறையில் முன்பு ஆதிக்கம் செலுத்தியிருந்தது போல் ஓரிரு மதத்தினர் அல்லாமல் எல்லா சாதி, மதத்தினரும் இருக்கிறார்கள். அதனால், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் நிகழும், அதுவரை அன்னியமாயிருந்த பல நிகழ்வுகளையும் காண்பித்த “உஸ்தாத் ஹோட்டெல்” போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெருகின்றன. தண்ணீர் மத்தன் தினங்கள், கும்பளங்கி நைட்ஸ், ப்ரேமலு போன்ற படங்களை விரும்பும் அவர்களிடம் தேவாசுரம், ஹிட்லர், காட்ஃபாதர், வலிஏட்டன், நரசிம்ஹம் போன்ற படங்களை படங்களின் பெருமை பற்றிப் பேசிப் பலனில்லை. அது அப்போது. இது இப்போது. மாற்றங்கள் இன்றியமையாதது.

இப்போதைய காலம் இந்தத் தலைமுறையின் காலம். அவர்கள் இந்தக் காலகட்டத்தைப் புரிந்து கொண்ட அளவுக்கு முன் தலைமுறையினர் புரிந்து கொள்வது சிரமம்.

எனவே நம் அனுபவம் சார்ந்து தேவைப்படும் போது அறிவுரை வழங்கலாம். இங்கு சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமைகள் மற்றும் சாதிக் கொலைகள்  பற்றிச் சொல்லும் போது ஒரு இளைஞர் சொன்ன வார்த்தை நினைவுக்கு வருகிறது. “எங்களைப் போன்ற இளைஞர்கள் மனதில் சாதி வெறி இல்லை. இப்போது 50 வயது கடந்த ஆட்கள்தான் இக் கொலைகளுக்குக் காரணம். அவர்கள் வாழும் வரை இது போன்ற சாதிக் கொலைகள் ஒரு வேளை தொடர வாய்ப்புண்டு. அதன் பிறகு கண்டிப்பாக இது நிகழாது”.

ஆமாம் இது சாதிக்கு மாட்டுமல்ல மதத்திற்கும் பொருந்தும். அதனால் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் போது, நாம், நமக்கு அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள், ஆனால் இப்போது 20 ஆண்டுகள் அனுபவமுள்ள இளைஞர்கள்  என்ற எண்ணத்துடன்தான் சொல்ல வேண்டும்.

சிலர் செய்யும் தவறுகளுக்கு எல்லோரையும் ஒட்டு மொத்தமாகக் குற்றம் சொல்லி, எல்லோரது எதிர்ப்புக்கும் விரோதத்திற்கும் பாத்திரமாகாமல் இருப்பது நல்லது. இல்லையேல் புதிய தலைமுறை பழைய தலைமுறையினரை ஒதுக்கி ஒரு மூலையில் இருக்கச் செய்துவிடும். காரணம் உலக நீதிதான். Survival of the fittest.


------துளசிதரன்


24 கருத்துகள்:

  1. தங்களது அலசல் சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  2. ஜெயமோகன் அவருடைய கருத்துக்களைக் கூறியிருக்கிறார். அவர் எப்போதும் எல்லா விஷயங்களிலும் தலையிடுபவர் தான். ஒரு வக்கீல் ஆகவேண்டியவர் எழுத்து துறையில் நுழைந்து விட்டார். மிகைப்படக் கூறல் அவரது பண்பு.

    போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கம் தற்போதைய தலைமுறையினரிடம் அதிகம் இருப்பது வருந்த தக்கது. இப்பழக்கங்கலால் செய்வது அறியாமல் அரசியல் கொலை வரை செய்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகள் தப்பிவிடுகின்றனர்.

    கட்டுரை ஆதங்கத்தை அப்படியே வெளியிட்டாலும் கூறவந்த கருத்துக்களை இன்னும் சற்று வெளிப்படையாகவே கூறியிருக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நீங்கள் சொல்வது போல் அவர் கொஞ்சம் வெளிப்படையாகவும் மிகையாகவும் பேசுகிறார்தான். இப்போதெல்லாம் ஒவ்வொன்றையும் விவாதமாக்க மனிதர்கள் காத்திருக்கிறார்கள். இணைய இதழ்கள், சமூக வலைத்தளங்களில் இப்போதெல்லாம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்ற எண்ணம்.

      நாம் என்ன சொன்னாலும் அதைக் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது. நாம் சொல்வதால் இந்த உலகம் மாறப் போவதில்லை. இருந்தாலும் நம் ஆதங்கங்களை இப்படி ஒருமித்த ஆதங்கங்கள் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் அவ்வளவுதான். இப்படிப் பகிர்ந்து கொள்ளும் போது ஒரு சின்ன ரிலீஃப் கிடைக்கிறது என்பதால்.

      இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் மீண்டும் விவாதங்கள் வலுப்பெறும். அதுவும் சமூக வலைத்தளங்களில் அது பெரிய போர் போன்று ஆகிவிடும் அபாயம் இருக்கிறதே பின் அதன் பின் நாம் இழுக்கப்பட்டு மீண்டும் கருத்துச் சொல்லித் தொடர்வது என்பதெல்லாம் சிரமமே என்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்தேன். எனவே ஆதங்கத்தை மட்டும் வெளிப்படுத்திவிட்டுக் கடந்து செல்ல வேண்டியதுதான் என்பதால் இப்படிப் பகிர்ந்து கொண்டேன்.

      //போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கம் தற்போதைய தலைமுறையினரிடம் அதிகம் இருப்பது வருந்த தக்கது. இப்பழக்கங்கலால் செய்வது அறியாமல் அரசியல் கொலை வரை செய்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகள் தப்பிவிடுகின்றனர்.//

      ஆமாம் உண்மை காரணமானவர்கள் தப்பி விடுகிறார்கள்.

      மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார், உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  3. சிறப்பான அலசல். பல சமயங்களில் இப்படியான எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை இப்படி வெளியில் சொல்லி விடுகிறார்கள் - பிரச்சனையாகும் என்று தெரிந்தும் சொல்லிவிடுவது சரியல்ல.

    போதை/குடிப்பழக்கம் - எங்கு சென்று முடியப்போகிறது என்ற வேதனை எப்போதும் நெஞ்சில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி, பிரச்சனையாகும் என்று தெரிந்தும் தங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாகப் பேசுகிறோம் என்று பேசி விடுகிறார்கள் அதுவும் சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள். ஒரு வேளை பிரபலம் என்பதாலேயே அப்படிப் பேசுகிறார்கள் போலும். ஆதரவு கிடைக்கும் என்று.

      இப்போதெல்லாம் இந்தப் பழக்கங்கள் ரொம்ப தீவிரமாக இருப்பது வேதனைக்குரியது. காரில் செல்லும் போது முன்னாடி செல்ல ஓவர்கேட் செய்ய கொஞ்சம் தாமதித்தால் நம் வண்டிக்குப் பின்னால் நிற்பவர் உடனே கையில் கிடைக்கும் கட்டை, கம்பி எடுத்து அடிப்பது, ஹோட்டலில் தாங்கள் விரும்பிய சாப்பாடு இல்லை என்றால் அடித்து நொறுக்குவது இப்படி எல்லாம் போதைப்பொருளுக்கு அடிமை ஆகிறவர்கள் செய்கிறார்கள். இதெல்லாம் எங்கு போய் விடுமோ? எல்லாவற்றிற்கும் ஒரு விடிவுகாலம் வரும் தானே நம்புவோம்.

      மிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  4. ஹாய் கீதா, துளசி அண்ணன் நலம்தானே...
    அதிராவைக் காணவில்லையே என யோசிச்சிருப்பீங்கள், 6 மாசம் முடிவதற்குள்ளேயே கால் எடுத்து மீண்டும் வச்சிட்டனே புளொக்கில் ஹா ஹா ஹா.

    கீதா, தொடர்ந்து என் யூரியூப் ஷனல் வருவது எனக்கு மிக்க மகிழ்ச்சி... கொமெண்ட்ஸ் போடாட்டிலும், நம் புளொக்கர் எல்லோரும் பார்ப்பினம் லைக் போடுவார்கள் என நம்புகிறேன்.

    துளசி அண்ணனின் டுபாய்ப் பயண வீடியோக்கள் பார்த்தேன், அப்போ நானும் பயணத்தில் இருந்தேன், லைக் போட்டுவிடுவேன் கண்ணில் தெரிஞ்சதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அதான் யுட்யூப் ல தெரியுதே ஏன் காணலைன்னு. நீங்க கால் எடுத்து மீண்டும் வைங்க....நாங்க கால் எடுத்து வெளியில் வைக்கப் போறோம்!!!! நான் தான் ஆனால் நான் வரலைனா துளசியின் பதிவும் கருத்துகள் எதுவும் நான் தட்டிப் போட முடியாதே அதனால்.,கொஞ்ச நாள்.....அப்புறம் எழுதும் மூட் இருந்தால் நான் எழுதுவேன். வோம்.

      உங்க யுட்யூப் பார்ப்பேன்....நீங்களும் பார்ப்பது மகிழ்ச்சி, அதிரா....

      கீதா

      நீக்கு
    2. வாருங்கள் அதிரடி அதிரா சகோதரி! ஓ! எங்கள் நாட்டிற்கு வந்த பயணமோ? அதான் அந்த வீடியோக்கள் வந்துகொண்டிருக்கின்றனவோ! மேலும் மேலும் நீங்கள் பயணம் செய்ய இறைவன் வாய்ப்பை கொடுத்திடட்டும். யுட்யூபிலும் காணொளிகள் தொடரட்டும்.

      என் துபாய் பயணக் காணொளிகளைக் கண்டதற்கும் மிக்க மகிழ்ச்சி!

      துளசிதரன்

      நீக்கு
  5. போஸ்ட்டுக்கு வருகிறேன், துளசி அண்ணன் நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.. இப்போதைய தலை முறை நிறையவே மாறி வருகிறது.. எங்கட அப்பாவுக்கு இருந்த எதிர்ப்பும் கோபமும் நமக்கில்லை... இந்தக் காலத்தில் கோபத்தைக் காட்டினால் பிள்ளைகள்தான் நம்மை விட்டுப் போய்விடுவார்கள் ஹா ஹா ஹா அதனால அணைந்து போவதுதான் எதுக்கும் ஒரே வழி, ஆனா எது நடந்தாலும் அது விதி அல்லது நம் முன்வினைப் பயன்.

    ஜெயகாந்தன் அவர்களின் எழுத்து எனக்கும் பிடிக்கும்.. ஆனா ஜெயமோகன்.. அவரின் புத்தகங்கள் படிச்ச நினைவில்லை.. இனிமேல் பார்க்கிறேன் தேடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க ஜெயமோகனைப் படிக்கப் போறாங்களாம். ஊருக்குப் போனேன் என்ற ஒற்றை விஷயத்தையே ஜெமோ பத்து பக்கத்துக்கு எழுதுவாயர். ஜெமோ நாவல்கள் இரண்டாமிரம், பத்தாயிரரம் பக்கங்கள்னு போகும். எப்போ எழுத்துக்கூட்டிப் படிச்சு முற்றும் அறிவது?

      நீக்கு
    2. இவரும் நல்ல எழுத்தாளர்தான். கொஞ்சம் தேவைக்கதிகமாகச் சொல்லி விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டார். நீங்கள் சொல்வது போல் புதிய தலைமுறைக்கு எங்கும் எதிலும் வேகம் தான். நீங்கள் சொல்வது போல் அவர்களை அணைத்துத்தான் போக வேண்டும்.

      மிக்க நன்றி அதிரா சகோதரி உங்கள் இரு கருத்துகளுக்கும்

      துளசிதரன்

      நீக்கு
    3. நெல்லை - பலரும் அவரைக் குற்றம் சொல்ல அவரே ஒரு காரணத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டார். நீங்கள் சொல்வது போல் ஊருக்குப் போனேன் என்பதையே பத்து பக்கம் எழுதுவார் என்பதை வாசித்துச் சிரித்தே விட்டேன்.

      துளசிதரன்

      நீக்கு
  6. மிகச்சரி..படத்தை நானும் பார்த்தேன்..அந்த எல்லை மீறும் துள்ளலுக்கு‌ இது போன்ற ஒரு காரணம்.தேவையே..

    பதிலளிநீக்கு
  7. இதை இரண்டுவகையாகப் பார்க்கணும் துளசிதரன் சார்

    திரைப்படங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி. அதனால் படத்தின் காலத்தையொட்டித்தான் எல்லாமே இருக்கும். உடை உணர்வு பழக்கம் மற்ற எல்லாமே. அந்தக் காலக்கட்டத்தில் சொல்லப்படும் உணர்வு, சொல்லியவிதம் பார்வையாளர்கள் மனதைத் தொட்டால் அது ஹிட் படம்.

    இரண்டாவது சமூகந்தில் நிகழ்வதாலேயே வெளிப்படையாகக் காட்டிக்கொண்டே இருந்தால் அதுபற்றிய குற்ற உணர்ச்சி போயிடும். மத்தவங்களுக்கும் இது சாதாரணமாயிடும். இது சமூகம் மேலும் சிதைவுற வழிவகுக்கும். சந்தானம் படங்கள் குடிப்பதைத் தொழிலாக ஆக்கி அதுபற்றிய குற்ற உணர்வே இப்போ பெரும்பாலானவர்களுக்கு இல்லை. இதற்கு முன் சிகரெட்டுக்கு நேர்ந்த கதி போல. சந்தானத்திற்கு முந்தைய தலைமுறைக்கு கடுப்பாகத்தான் இருக்கும். அரசு விருது என வரும்போது நெறிகளைத்தான் கவனத்தில் கொள்வர். அதனால்தான் அருமையான மோகன்லாலின் படம் (பாபநாசத்தின் ஒரிஜினல் மலையாளப் படம்) விருது பெறவில்லை. தேவர் மகன் படமும் ரோஜாவிடம் தோற்றது

    பாபுலர் கருத்துக்கு எதிர் கருத்து கவனம் பெறும். எழுத்தாளன் வேலை சமூகத்தின் ஆன்மாவைத் தட்டி எழுப்புவதுதான்

    ஜெமோவின் எழுத்தைத் திரைப்பட விமர்சனமாகக் கொள்ளக்கூடாது என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன், நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்.

      பாபநாசம் படம் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் சொல்வது போல் அதில் வரும் கருத்து சமூகத்திற்கு சரியல்லதான். கொலைகளைத் தூண்டும் விதம் என்ற ரீதியிலான ஒன்று. அப்படிப்பட்ட படங்களுக்கு அரசின் அவார்ட் கிடைக்காதுதான்.
      ஜெயமோகன் அவரின் வார்த்தைப் பிரயோகத்திற்கு மட்டும்தான் என் கருத்து. மற்றபடி குற்றம் சொல்லும் நோக்கில் அல்ல. என்பதோடு பலரும் இப்போது அவரைக் குற்றம் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது அவரது கருத்து. அவ்வளவே.

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன், உங்களின் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  8. ஒவ்வொரு தலைமுறையும் நெறிகளில் மாறிவருகிறது. நல்லன பலவும் இருப்பது போல அல்லாதனவும் மேற்கத்தைய தாக்கத்தால் வருகின்றன.இது வருந்தத்தக்கது. இதுக்கு என்ன தீர்வு? பெற்றோர்களும் ஆசிரியர்களும் மட்டும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர்களும் ஆசிரியர்களுமே ஒருவிதத்தில் காரணமாகவும் இருப்பதும் வருத்தமான விஷயம்தான், நெல்லைத் தமிழன். ஆனால் அவர்களையும் விட இளைஞர்களையும் சிறுவர்களையும் அடிமையாக்கும் ஊடகங்கள் - சமூக வலைத்தளங்கள் அவர்களை அதிகப்படியாகவே தங்கள் வலைக்குள் சிக்க வைத்திருக்கின்றன என்பதும் உண்மை.

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன் உங்க்ள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
    2. I meant, only parents and school teachers can imbibe good characters among young generation. என் தலைமுறை வரை பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு அவ்வளவு சுதந்திரமும் உரிமையும் கொடுத்திருந்தார்கள். ஆசிரியர் திட்டினதை இல்லை அடித்ததை வீட்டில் சொன்னால் அவர்களிடமிருந்தும் தண்டனை கிடைக்கும் என பயந்தார்கள் இப்போ பெற்றோர்கள், ஆசிரியர் என்ன ஜாதி, எப்படி என் பையனை அடிக்கப்போயிற்று, என் பையனைக் குறை சொல்ல இவர்கள் யார் என்பதுபோலச் செல்வதால் நமக்கு ஏன் வம்பு என ஆசிரியர்கள் நினைக்கிறார்கள்

      நீக்கு
  9. போதை/குடிப்பழக்கம் - எங்கு சென்று முடியப் போகிறது?.. இன்றைய வேதனைகளில் இதுவும் ஒன்று..

    தொடர்புடைய திரைப்படம் எனக்குத் தேவையில்லாத ஒன்று..

    அந்த குணா என்ற திரைப்படத்தையே ரசித்ததில்லை.. சிவனே என்றிருந்த பொண்ணுக்கு விளைந்த கொடுமை எந்த விதத்தில் நியாயம்?...
    இப்போதும் பிடிக்காது..

    ஆயினும் தங்களது ஆதங்கம் புரிகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதையும் குடிப்பழக்கமும் கூடவே சமூக வலைத்தளங்களும் தான் ரொம்பவே தாக்கத்தை ஏறுபடுத்துகின்றன. ஆசிரியர்களாகிய எங்களுக்கு அது தெரிகிறதுதான்.

      மிக்க நன்றி துரை செல்வராஜு சார் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  10. நீங்கள் சொல்லி இருப்பது போல் கடுமை காட்டாமல் கருததைச் சொல்லி இருக்கலாம்தான்.  இந்தக் காலத்தில் குடிப்பழக்கத்தைக் காட்டடாத படம் எது?  அதை சமுதாயத்தின் ஒரு சகஜமான பழக்கமாக மாற்றி விட்டார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் என் கருத்தும் அதுவே. அவரது கருத்து தவறே இல்லை. அதைச் சொல்லும்விதத்தில் சொல்லியிருந்தால் உண்மையாகவே பலரையும் நல்ல விதத்தில் சென்றடைந்திருக்கும். நேர்மறையாகச் சென்றடைந்திருக்கும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம், உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு