வெள்ளி, 26 ஜூன், 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - நாமக்கோழி - Common Coot - பகுதி - 2

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

=============================================================================

முந்தைய பதிவு <=======

வை     கூட்டமாக   நீந்தும் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தது நினைவில் இருக்கலாம். படமும் பகிர்ந்திருந்தேன். என்றாலும், இனப்பெருக்கக் காலத்தில் பொதுவாகச் ஜோடியாக நீந்தும். (மற்ற சமயங்களில் கூட்டமாக நீந்தும்) கூடுகட்டும் அழகைப் பார்க்கணும் ரொம்ப சுவாரசியமாக இருக்கும். கொஞ்சம் கஷ்டப்படும். (காணொளியில் குச்சி பொறுக்கிக் கொண்டு போவது இருக்கும்) 

னப்பெருக்க காலம் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை என்றாலும் நாம் நாட்டில் இரு பருவமழைக்காலங்களில் நீர் நிரம்பும் போது இனப்பெருக்கம் பெருகும். தாவரங்கள் அடர்த்தியா இருக்கற இடத்துல கூடு கட்டும் என்றாலும் தோதா இடம் கிடைக்கலைனா கொஞ்சம் அடர்த்தி இல்லாத இடங்களிலும் இவை தங்களின் இனப்பெருக்கத்தைத் தொடங்குவதைப் பார்க்க முடிந்தது. பாவம், அதுக்கான இடம் குறைந்து வருகிறது. 

கூடு தெரிகிறதா இப்படங்களில்?

நாமக்கோழிகள் தங்களின் கூடுகளை, நீரிலேயே அமைப்பதில் வல்லவை என்று தெரிகிறது. நீர்நிலைகளின் ஓரங்களில் காய்ந்த தாழை, நாணல் புற்கள், நீர்ச்செடிகள், கிளைகள் மற்றும் இலைகளைக் கொண்டு தண்ணீரின் மேல் பெரிய மேடை போன்ற கூட்டைக் கட்டுகின்றன. இந்தக் கூடு பொதுவாக நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும் அல்லது நீருக்குள் இருக்கும் வலுவான செடிகளின் மேல் தாங்கி நிற்கும். நீர் மட்டம் உயர்ந்தால், கூடு மூழ்கிவிடாமல் இருக்கவும் முட்டைகள் விழுந்துவிடாமால் இருக்கவும், இவை கூட்டின் உயரத்தை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் திறமை வாய்ந்தவை.

அடை காப்பது தெரிகிறதா? 
இந்த படத்துல அடைகாக்கும் கோழிகளின் நாமம் மட்டும் தெரியும் பாருங்க. தெரிகிறதா?

ண் மற்றும் பெண் நாமக்கோழிகள் இரண்டுமே மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும். சுமார் 21 முதல் 24 நாட்கள் வரை இந்த அடைகாத்தல் நீடிக்கும். 

ரு பெண் நாமக்கோழி பொதுவாக ஒரு முறையில் 6 முதல் 10 முட்டைகள்வரை இடுமாம். இந்த முட்டைகள் லேசான பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில், கரும்புள்ளிகளுடன் காணப்படும். ஆனால் என்னால் பார்க்க முடியாததால் படங்கள் எடுக்க முடியவில்லை.

காவல்

முட்டையிட்ட பிறகு இந்தத் தம்பதிகள்! தங்களின் கூட்டைச் சுற்றியுள்ள பகுதியை தீவிரமாகப் பாதுகாக்கும். அந்த எல்லைக்குள் எந்தப் பறவையோ அல்லது எதிரியோ வந்தால் ஆக்ரோஷமாகத் தாக்கி விரட்டும். 

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர சுமார் 21 முதல் 26 நாட்கள் ஆகும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் பார்ப்பதற்குப் பெரிய பறவைகளைப் போலக் கறுப்பாக இருக்காது. கறுத்த சிறகுகளுடனும், அவற்றின் தலைப் பகுதியில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த மென்மையான முடிகளுடனும் (Fluff) பிறக்கின்றன. அவற்றின் அலகு (மூக்கு) நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். (இதைக் காணொளியில் காணலாம் ஆனால், கூடியவரை என் கேமராவின் திறனுக்கேற்ப எடுத்திருக்கிறேன்)

முட்டையிலிருந்து வெளிவந்த சில நாட்களிலேயே (பொதுவாக சில மணி நேரங்களிலேயே) குஞ்சுகள் தண்ணீரில் நீந்தத் தொடங்கிவிடும். எனினும், ஆரம்ப நாட்களில் அவை உணவிற்காகத் தாய்-தந்தையைத்தான் நம்பியிருக்கும்.

சுமார் 30-60 நாட்களில் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கி தாங்களாகவே முழுமையாக உணவு தேடப்பழகி, சுதந்திரமாக வாழத் தொடங்கிவிடுகின்றன. இறகுகள் முளைத்து, தோராயமாக 55 முதல் 60 நாட்களில் அவற்றால் பறக்க முடியும். Fledgling துள்ளும் பருவம்.

ளம் பருவம் (Juvenile), முட்டையிலிருந்து வெளிவந்ததில் இருந்து தோராயமாக 3 முதல் 4 மாதங்கள் முன் வரை. இப்பருவத்தில் அவற்றின் கழுத்து மற்றும் மார்புப் பகுதி வரை சாம்பல் கலந்து வெள்ளை நிறத்தில் இருக்கும். 

3 முதல் 4 மாதங்களில் மங்கலான இளம் பருவ இறகுகள், முதிர்ந்த பறவைகளின் அடர் சாம்பல் அல்லது கருப்பு நிற இறகுகளாக மாறத் தொடங்குகின்றன. (Plumage)

தற்கே உரிய தனித்துவமான வெள்ளை நிற அலகு மற்றும் நெற்றிக் கவசம் (Facial Shield - நாமம்), சுமார் ஒரு வயதாகும் வரை முழுமையாக வளர்ச்சியடைவதில்லை. அவை வளர்ந்து முதிர்ச்சியடையும் போதுதான் மெல்லத் தோன்றத் தொடங்குகிறது. அது முழுமையான அளவையும், நல்ல பளபளப்பான வெள்ளை நிறத்தையும் எட்டுவதற்குச் சரியாக ஒரு முழு வருடம் ஆகுமாம்.

Brood Reduction - குஞ்சு எண்ணிக்கைக் குறைப்பு என்பது நாமக்கோழிகளின் இனப்பெருக்கத்தில் பரவலாகக் காணப்படும் கடுமையான இயற்கை நியதி. குஞ்சுகள் பிறந்த பிறகு, பெற்றோர் இரண்டுமே அவற்றுக்கு உணவளிக்க மிகவும் சிரமப்படும். உணவுப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், தங்களுக்குக் கட்டுப்படும் மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும் குஞ்சுகளுக்கு மட்டுமே பெற்றோர் உணவளிக்கும். சோம்பலாக இருக்கும் அல்லது பலவீனமான குஞ்சுகளைப் பெற்றோர் சில சமயம் கொத்திக் தள்ளிவிடும். இதன் மூலம் ஆரோக்கியமான குஞ்சுகள் மட்டும் பிழைப்பதை அவை உறுதி செய்கின்றன. 

பல சவால்களை எதிர்கொண்டுதான் தங்கள் வாழ்க்கையை நீந்திக் கடக்கின்றன!

நாமக்கோழியைப் பற்றி தெரிந்து கொண்டோம் இல்லையா....இனி அடுத்ததாகச் சில நாட்களில் வேறு ஒரு பறவையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

இக்காணொளியில் அவை கூடு கட்டுவதையும் அடை காப்பதையும் குஞ்சுகளையும் பார்க்கலாம். முடிந்தால், விருப்பமிருந்தால் பாருங்கள். 



----கீதா

26 கருத்துகள்:

  1. // இனப்பெருக்கக் காலத்தில் பொதுவாகச் ஜோடியாக நீந்தும். //

    ஹனிமூன் போகும் ஜோடிகள் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...ஆமா இருக்கும் ஆனா அடுத்த சீசன்ல ஜோடி மாறும்...

      கீதா

      நீக்கு
  2. // கொஞ்சம் கஷ்டப்படும். //

    தரைல கூடு காட்டுவதே பெரும்பாடு.  இதில் நீரில் நீந்திச் சென்று கட்டணும்னா...  மரத்திலும், தண்ணீரிலும் கூடு காட்டும் பொறுமை!  மனிதனுக்கு அந்த கஷ்டத்தை தரவில்லை இயற்கை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஸ்ரீராம் முட்டை இட்டால் பருந்து, கழுகு எங்கடான்னு காத்திருக்கும் தழைவாகப் பறந்து வந்து தூக்கிச் செல்லும் ஆபத்து உண்டு பாவம் இந்த நீர்ப்பறவைகள் இதுங்க கொஞ்சம் ஓப்பனா பண்ணுகின்றன...ஆனா இன்னொரு கோழி பத்தி வரும் அது ரொம்ப ரகசியம்...

      மனிதனுக்கு அந்த கஷ்டத்தை தரவில்லை இயற்கை!//

      6 அறிவுக்கு நாம ரொம்ப நன்றி சொல்லணும் ஸ்ரீராம். ஆனா நாம அந்த 6 அறிவை எப்படி எல்லாம் பயன்படுத்தறோம் இல்லையா?

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. அடைகாப்பது தெரிகிறது. இவற்றை எல்லாம் எப்படி காத்திருந்து பொறுமையாக படம் எடுத்தீர்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஒவ்வொரு நாளும் நடக்கும் போது தெரியும் காட்சிகளைப் படம் பிடித்துவிடுவதுதான். கூடு கட்டும் போதே தெரிந்துவிடும் ஓகே குஞ்சுகள் வரும்னு கொஞ்சம் நினைவு வைத்திருந்து நடக்கும் போது பார்த்தால் ...சில சமயம் ஏதேச்சையாகவும் கூடக் கிடைக்கும். ஆனால் நிறைய மிஸ் ஆகி இருக்கிறது ஸ்ரீராம்.

      இங்கு பகிர்ந்திருக்கும் எல்லாம் பழைய ஏரியா இரண்டு ஏரியாக்களில் இருந்த மூன்று ஏரிகளில் எடுத்தவை.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. கூடுகள் தண்ணீரில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த முட்டைகளுக்கு ஆபத்து கம்மி என்று நினைக்கிறேன்.  இதை அணுகக்கூடிய மற்ற பறவைகள் பெரும்பாலும் அனாவசியமாக தொந்தரவு செய்யாது இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடுகள் தண்ணீரில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த முட்டைகளுக்கு ஆபத்து கம்மி என்று நினைக்கிறேன். //

      மேலே சொல்லிவிட்டேனோ...முட்டைகளுக்கு ஆபத்து பருந்து கழுகுகளிடமிருந்து நிறைய வரும் ஸ்ரீராம். நீர்ப்பாம்புகள் நிறைய உண்டு...அந்த வீடியோ இங்கு பகிர்கிறேன். ஒன்று எடுத்திருந்தேன். பாம்பு நீந்துவதை.

      மற்றபடி கூட உள்ள நீர்ப்பறவைகள் தொந்தரவு கொடுத்துப் பார்த்ததில்லை என் கண்ணில் பட்டதில்லை.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. வெகு சீக்கிரமே இவைகள் தனி வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றன போல..  இவற்றின் ஆயுட்காலம் தோராயமாக எவ்வளவு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரமே 3,4 மாதங்களில் இளம்பருவம் அடையும் போதே பருவ வயது. ஆயுட்காலம் பொதுவாகத் தோராயமாக 5, 6 வருடங்கள். ரொம்ப அரிதாக 10, 12 அதிகபட்சம் 16-19 வருடங்கள் வாழ்ந்தவை இருக்கின்றனவாம் காட்டுப் பகுதி நீர்நிலைகளில் இருக்கும் நாமக்கோழிகள்.

      கீதா

      நீக்கு
  6. அவ்வளவு வேகமாக தனி வாழ்க்கையைத் தொடங்கும் அவை, முழு வளர்ச்சி அடைய ஒரு வருடம் பிடிக்கும் என்பது அநியாயம் இல்லை?  இதை வைத்துப் பார்த்தால் இவை ஒரு முப்பது நாற்பது வருடங்கள் வாழுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாமம் வரும் போதுதான் முழுவளர்ச்சினு சொல்றாங்க ஆனால் அதுக்கு முன்னரே சுதந்திரமாகத் தனியாக வாழத் தொடங்கிவிடுகின்றன. இல்லை ம்ஹூம் 30-40 இல்லை ஸ்ரீராம்....நகரத்தில் இருப்பதால் நோய்கள் வருகிறதாம், கூடவே இயற்கை ஆபத்துகள், பறவைகளின் ஆபத்துகள் குஞ்சுகளை பருந்துகள் கொத்திச் செல்லும் ஆபத்து...என்று...சவால்கள் நிறைய இருக்கின்றன, ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. // பலவீனமான குஞ்சுகளைப் பெற்றோர் சில சமயம் கொத்திக் தள்ளிவிடும். //
    அடப்பாவமே....  என்ன கொடுமை நாமக்கோழி!  சரியா படிக்காத பசங்களை வேற ஸ்கூலுக்கு மாறிக்கொள்ளச் சொல்லும் உயர்தர பள்ளிகள் போல கொடுமை செய்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் மனசுக்குக் கஷ்டமாக இருநது ஸ்ரீராம். ஆனா நாம கருணைக் கொலை நு பண்ண கோர்ட் அப்ரூவ் பண்ணினாதானே பண்ண முடியும் நிறைய ப்ரொசீஜர்ஸ் இருக்கு அதுங்களுக்கு அதெல்லாம் இல்லை பாருங்க!! ஒரு குஞ்சு பிழைக்கறது கஷ்டம்னா அதுங்களே கொன்று விடுகின்றன...ஸோ ஆரோக்கியமா இருக்கறதுதான் வருது இதே போல பூனைகளும் செய்கின்றன கண்டுக்காம விட்டுவிடுகின்றன அந்தக் குட்டிகளை....இயற்கையின் நியதி போலும். நமக்க்குதான் கஷ்டமா இருக்கு இதைப் பார்க்க

      கீதா

      நீக்கு
  8. சென்றமுறை காணொளி குரலுடன் இருந்தது என்பது கோமதி அக்காவின் கமெண்ட் என்று நினைக்கிறேன், அதைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.  மீண்டும் சென்று பார்க்க..  இல்லை கேட்க வேண்டும்!  இன்று உஷாராக முதலிலேயே ஸ்பீக்கர் ஆன் செய்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்தது ஸ்ரீராம். இல்லைனா நீங்க கமென்ட்ல சொல்லிருப்பீங்க. உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன் அப்புறம் மறந்து போய்டுச்சு...நானும் அதெல்லம் ரொம்ப கண்டுக்காததுனால. துளசிதான் கேட்டார் யாருமே சொல்லலியான்னு அப்புறமும் உங்ககிட்ட கேட்க மறந்து போச்சு இப்ப இந்த ஆதார் அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ண அந்த எண்ணங்கள்லயே ஓடுவதால்.

      இன்னிக்குக் கேட்டு சொல்லிட்டீங்களே நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. அந்தக் கூடுகள் அப்புறம் என்னாகும்.  காலப்போக்கில் இயற்கையினால் பலவீனமாகி விழுந்து விடுமோ...   ஏற்கனவே கட்டப்பட்டு கைவிடப்பட்டிருக்கும் கூட்டை இன்னொரு சாமக்கோழி ச்சே நாமக்கோழி அண்டாது இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீன முடிந்ததும் கூடுகள் கலைந்துவிடுகின்றன தண்ணில மிதக்கும்...இல்லைனா உரமாகிவிடும் தாழைச் செடிகளுக்கு. ஆனா நம்ம மக்கள் போடும் குப்பைகளினால் ஏரிகள் மிகவும் மோசமாகி பற்வைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன அதை அடுத்து சில நாட்களில் வரும்ட் தாழைக்கோழிகளின் வாழ்வியலில் பார்க்கலாம்.

      இன்னொரு சாமக்கோழி ச்சே நாமக்கோழி அண்டாது இல்லை?//

      ஹாஹாஹா ஆமா அண்டாது....ஆனா குச்சி இலை எல்லாம் மிதக்கும் ல தண்ணில அதைப் பொறுக்கிக்கும்...இஷ்டம் இருந்தா!!!!!

      கீதா

      நீக்கு
  10. காணொளியும் குரல் வர்ணனையும் அருமை கீதா. உங்கள் பொறுமையையும், திறமையையும் வியந்து பாராட்டுகிறேன். பொறுமையாக எத்தனை காலம் தொடர்ந்து படம் எடுத்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீராம்....

      கிட்டத்தட்ட அதன் சீசன் முடியும் வரை...ஜூன் ஜூலைல தொடங்கி....இளம் பருவம் வர 6 மாசம் பிறகு குளிர்காலம் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் வரும் போது கூடுகள் இருக்காது எல்லாம் தனியா மேய ஆரம்பிச்சுடுமே..ஆனால் அடுத்த மழைக்காலத்தில் ஒரு சிலது கூடு கட்ட ஆரம்பிக்கும் நவம்பர் அது அரிதாக....அது வரை ...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. இனப்பெருக்கக் காலத்தில் பொதுவாகச் ஜோடியாக நீந்தும். , பின் அழகாய் கூடு கட்ட பொருட்களை சேகரிப்பதும் கூடு கட்டுவதும் அழகு.
    இறைவன் அதற்கு நிறைய அறிவை கொடுத்து இருக்கிறான். இரண்டும் அடை காப்பது அருமை. பாதுகாத்து குஞ்சுகளை தண்ணீரில் நீந்த பழகி கொள்வது பார்க்க அருமையாக இருக்கும். அவை சுதந்திரமாக இறை தேட ஆரம்பிக்கும் வரை பாதுகாப்பது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா பார்த்துக் கொண்டே இருக்கலாம் அத்தனை அழகு. தாழைக்கோழி தன் குஞ்சுகளை அழைத்துச் செல்வதைப் பார்க்கணும் அடுத்து வரும் அதைப் பற்றிய பதிவு. அது ரொம்ப ரகசியமாகச் செய்யும். குஞ்சுகளை ஒரு ராணுவ பாரேட் படி அழைத்துச் செல்லும்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. காணொளியும், உங்கள் குரலும் அருமை.
    ஒவ்வொரு உயிரினமும் வாழ போராட வேண்டி இருக்கிறது. சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று எளிதாக பாடி விடுகிறோம்.
    அவைகள் கூடு கட்ட, அடைகாக்க , வேற்று உயிரினகளிடமிருந்து குஞ்சுகளை பாதுகாக்க என்று எவ்வளவு கஷ்டங்களை கடந்து வர வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா பறவைனா சந்தோஷம்னு நினைக்கிறோம் ஆனால் அவற்றிற்கான சவால்கள் அதிகம் தான். நீங்க சொல்லிருப்பது போல்

      குரல் பற்றிச் சொன்னதுக்கும் மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  13. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதத்தில் வாழ்வு. நாமக்கோழிகள் வாழ்க்கை முறையை படிப்படியாக படங்களும் காணொளிகளும் எடுத்துப் பகிர்ந்த உங்கள் பொறுமைக்கு ஒரு சல்யூட்! பறவைகளைப் படம் எடுப்பது மிகவும் கடினமான வேலை.

    தகவல்கள் அனைத்தும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி. உண்மைதான் பறவைகளை எடுப்பது ரொம்பக் கடினமானதுதான். இவற்றை விட இன்னும் சிலவற்றை எடுப்பது இன்னும் கடினம்...

      நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு