//பொதுவாக நான் எனது என்று தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொண்டு செயல்களை செய்யாத பொழுது அவனை கர்மவினைகள் பாதிப்பதில்லை என்கிறார்கள் செய்பவன் நான் என்னால் தான் இது நடக்கிறது என்னும் புத்தியை விட்டுவிட்டு கர்மங்களில் பற்றற்று அவற்றின் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவனை கர்மா பாதிப்பதில்லை என்பது ரமணர் அறிவுரையின் சாரம்.//
நம் ஸ்ரீராமின் இன்றைய (07-08-25) வியாழன் பதிவில் முதல் பகுதியில் அவர் சொல்லி இருந்த ரமணர் அறிவுரையின் சாரத்தை வாசித்ததுண்டு பள்ளி சமயத்திலேயே. கீதையின் சாரம்தான். மிகவும் பிடித்த சாரம். இதை வாசித்ததும் பள்ளியில் படிச்சப்ப நிகழ்ந்த ஒன்று நினைவுக்கு வந்தது.
10 ஆம் வகுப்பு. மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிக்கான
அறிவிப்பு ஒன்று பள்ளிக்கு வந்தது. தலைப்போ, யார் நடத்துகிறார்கள் என்ற விவரமோ இல்லை.
தலைப்பு அங்கு அந்த நிமிடத்தில் கொடுக்கப்படும் என்று தமிழ் ஆசிரியர் சொன்னார். இடம்
சித்ரா லைப்ரரி (நாகர்கோவில்). ஸ்டேடியம் எதிரில் இருக்கிறது. இங்குதான் கோபால்ஜி அவர்கள்
சத்சங்கம் நடத்துவார், ஆன்மீக உரைகள் ஆற்றுவார்.
அப்போதெல்லாம் போட்டிகள் என்றாலே உற்சாகம் தொற்றிக்
கொள்ளும். தலைப்பு தெரியவில்லை என்றால் என்ன? போய் பார்ப்போமே என்று பெயரும் கொடுத்துவிட்டேன்.
போட்டி நடந்த தினம் வார நாள். ஹை ஜாலி என்றிருந்த
எனக்கு ஆப்பு. போட்டி முடிந்ததும் பள்ளிக்குத் திரும்பிவிட வேண்டும் என்று ஆசிரியை
சொல்லிவிட்டார்.
நிறைய தலைப்புகளை யோசித்தும், வாசித்தும், சமூகப்
பிரச்சனைகளையும், செய்திகளையும் பார்த்து வைத்துக் கொண்டேன்.
போட்டிக்கான நாளும் வந்தது. சித்ரா லைப்ரரிக்குப்
போயாச்சு. போனதும் ஒரு சின்ன அதிர்ச்சி. போட்டி நடத்தியது, அப்போது எங்க மாவட்டத்தில்
ஓங்கி வளர்ந்து வந்துகொண்டிருந்த இயக்கம்.
ஒரு வேளை நாம் கலந்துகொண்டால் சேர வேண்டும் என்றோ
அவர்களைச் சார்ந்தவள் என்றோ, சொல்லிடுவார்களோ என்ற பயம் வேறு வந்தது. அப்படியான பயம்
பரவியிருந்த நேரம். பரவாயில்லை, வந்தது வரட்டும் என்று அங்கு பெயரைப் பதிந்து மற்ற
விவரங்களையும் பதிந்தேன்.
மேடையுடன் கூடிய ஹாலுக்குள் சென்றேன். மேலே கூரை மட்டும்
கொண்ட திறந்தவெளி ஹால். சுற்றிலும் உள்ளே நுழைவதற்கு மட்டும் ஆங்காங்கே இடைவெளி கொண்ட
சிமென்ட் திண்டு இருக்கும். மரங்கள் நிறைய இருக்கும். நுழைந்து தரையில் அமர்ந்தாச்சு. வந்திருந்தவர்களைச் சுற்றிப்
பார்த்தேன்.
என்னைத் தவிர, மாணவ மாணவியர் எல்லோரும் விபூதி, குங்குமம்,
சந்தனக் கீற்று என்று பக்திப் பரவசமாக வந்திருந்தார்கள். ஓரிரு மாணவர்கள், கையில் கூட
விபூதிப் பட்டை போட்டிருந்தார்கள். அந்த சபைக்குப் பொருத்தமில்லாதவளாக உணர்ந்தேன்.
சரிதான், நாம அவுட்.
போட்டிக்கான நேரம் வந்தது. தலைப்பு கொடுத்ததும் 10
நிமிடங்கள் யோசிப்பதற்குக் கொடுக்கப்படும் அதன் பின் பெல் அடித்ததும் எழுதத் தொடங்க
வேண்டும் என்று சொன்னார்கள்.
தலைப்பு கொடுத்தார்கள். "பகவத்கீதையில் கிருஷ்ணன்
சொல்லும் பக்தி யோகம் சிறந்ததா? கர்மயோகம் சிறந்ததா?" இரண்டாவது தலைப்பு-
"கர்மயோகி, பக்தயோகத்தைப் பின்பற்றும் பக்தி யோகி யார் பரம்பொருளுக்கு நெருக்கமானவர்?
இரண்டிலும் ஏதேனும் ஒன்று எடுத்தும் எழுதலாம் இல்லை இரண்டையும் இணைத்து அதாவது கர்மயோகம்
என்றால் கர்மயோகி, பக்தியோகம் என்றால் அதைப் பின்பற்றுபவர் இணைத்து உதாரணங்களுடன் எழுத
வேண்டும். அதிர்ச்சி. பிரமித்து நின்றேன். இப்படியான விஷயங்கள் சுத்தமாகத் தெரியாது.
ஐந்தாறு தாள்கள் சேர்ந்து புத்தகம் போன்று இருக்குமே
அப்படி ஷீட்டுகள் கொடுத்தார்கள். குறிப்புகள் எழுத தனியாக ஒரு பேப்பர் கொடுத்தார்கள்.
நான் பேக்கு மாதிரி முழித்தேன். பகவத்கீதை பற்றி முன்ன பின்ன ஏதாவது தெரிஞ்சாதானே!
அவ்வப்போது வரும் நோட்டீஸ்களில் எழுதப்பட்டிருக்கும் "கடமையைச் செய். பலனை எதிர்பாராதே"
என்பதைத் தவிர எதுவும் தெரியாது. இப்போது வரை பகவத்கீதையை வாசித்ததில்லை.
கொடுக்கப்பட்ட தலைப்பில் பக்தி என்ற சொல்லைத் தவிர
வேறு எந்தச் சொல்லும் என்ன என்று தெரியவில்லை. அசட்டு தைரியத்தில், எதையோ எதிர்பார்த்து
வீராப்பாக வந்தது தப்பாகிடுச்சோ? சபையை மீண்டும் ஒரு சுற்று நோக்கினேன். பலரும், கொடுக்கப்பட்ட
குறிப்புப் பேப்பரில் குறிப்பு எழுதிக் கொண்டிருந்தார்கள்.
போட்டி நடத்தியவர்களிடம் சென்று "கர்மயோகம் என்றால்
என்ன அர்த்தம் என்றதும் அவர்கள் என்னைப் பார்த்த பார்வை! "பகவத்கீதை வாசித்ததில்லையா"
என்ற கேள்வியுடன்! இல்லை என்று சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை வெட்கமும்
இல்லை. என் அனுபவங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப்பாடமே புடம் போட்டிருந்தது..
கர்மயோகம் என்றால் "செயல் யோகம்" என்றார்கள்.
மீண்டும் என் கேள்வி, 'யோகம்' என்றால்? இறைவனோடு, பிரபஞ்ச சக்தியோடு, உண்மையோடு - இதில்
நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் உன் விருப்பப்படி - இணைவது அல்லது ஒன்றுபடுவது
என்று பொருள்படும் என்று அவர் சொன்னார். பொருள் ஒகே எப்படி எழுதுவது? அதைப் பற்றித்
தெரிந்தால்தானே எழுதமுடியும் என்ற யோசனை.
சரி, வந்தாச்சு. நமக்குத் தெரிந்த தத்துவங்களை உதிர்ப்போம்.
அப்போதே அனுபவங்களினால் விளைந்த தத்துவப் பித்து! கண்ணை மூடிக் கொண்டேன். தாத்தாவும்
பாட்டியும் சொல்லிக் கொடுத்திருந்த மஹாபாரதத்தை அசைபோட்டேன். கர்ம/செயல்யோகம் மனதில்
பளிச்சிட்டது.
நான் என்ற அகந்தையற்ற நற்சிந்தனைகளும் நற்செயல்களும், யோகமும் தியானமும்
நம்முள் நல்ல பிரபஞ்சசக்தியைப் பெருக்கி நம்மை நிச்சலன நிலைக்குக் கொண்டு செல்லும்
என்பது என் மனதில் ஆழமாகப் பதிந்த ஒன்று. நன்றி ஸ்டெல்லாமேரி டீச்சர் கணவருக்கு. அவரிடம்
தெரிந்து கொண்ட விஷயம். அவர் ரிஷிகேஷில் அமைந்திருக்கும் சுவாமி சிவானந்தா ஆஸ்ரமத்தில்
யோகக் கலையும் தியானமும் கற்றவர். தியானத்தில் ஆழ்ந்து தரையிலிருந்து இரண்டடி எழுவார்
என்றும் சொல்வார்கள் நான் பார்த்ததில்லை.
கர்மயோகம் தான் சிறந்தது ஆனால் அதில் "நான்" என்பதைச் சேர்க்காமல், எல்லாவற்றையும் பிரபஞ்சசக்திக்கு அற்பணித்து, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்...என்றேல்லாம் கொஞ்சம் பூ சுற்றி தெரிந்தவற்றுடன் மஹாபாரதத்தையும்
கலந்து கட்டி ஏதோ எழுதினேன்.
பரவாயில்லை இந்தச் சின்னப் பிள்ளை இந்த சின்ன வயசுல!!!!! ஏதோ எழுதியிருக்கிறது என்று தேர்ந்தெடுத்தார்கள் போலும். பரிசு கொடுக்கும் போது சில பகுதிகளைச் சொல்லிப் பாராட்டினார்கள்! தலைக்கேறாத ஆச்சரியம். மாவட்ட அளவில் இரண்டாவது பரிசாக வாரியார் கதைகள் புத்தகம் கிடைத்தது.
உனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாதே, எப்படி எழுதின? யார்க்கிட்டயாவது எழுதி வாங்கி மனப்படாம் பண்ணி எழுதினியா? நம்பமுடியாத உண்மைகள் புத்தகத்தில் இந்த விஷயத்தைச் சேர்த்தே ஆக வேண்டும் என்றார் என் மாமா!
கீதா
நீங்கள் பெயர் சொல்லாமல் சொல்லி இருக்கும் இயக்கம் ஆர் எஸ் எஸ்ஸா? அல்லது ஏதோ ஒரு ஹிந்து இயக்கம். அதற்கென்ன அவ்வளவு பயம்?
பதிலளிநீக்குஹிந்து முன்னணி. அப்பதான் நாகர்கோவிலில் தீவிரமாக வளர்ந்து வந்த சமயம்.
நீக்குஎன்னவோ தெரியலை ரொம்பத் தயக்கமாக இருந்தது, ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
பள்ளியில் உங்கள் பயிற்று மொழி என்ன? தமிழா, ஆங்கிலமா? அல்லது மலையாளமா?
பதிலளிநீக்குஆனால் அந்த வயதில் இந்த வார்த்தைகளுக்கான ஆழமான அர்த்தம் புரிவது சிரமம்தான். அதையும் உள்வாங்கி எழுதி இருக்கிறீர்கள் என்றால் க்ரேட்தான்.
10 ஆம் வகுப்பு வரை தமிழ் முறைக்கல்வி.
நீக்குமலையாளமாக இருந்தால் இப்பவும் சரளமாக வாசிக்க எழுத வந்திருக்குமே, ஸ்ரீராம்.
//ஆனால் அந்த வயதில் இந்த வார்த்தைகளுக்கான ஆழமான அர்த்தம் புரிவது சிரமம்தான். அதையும் உள்வாங்கி எழுதி இருக்கிறீர்கள் என்றால் க்ரேட்தான்.//
நன்றி ஸ்ரீராம். ஆனால் உள்வாங்கி என்பதை விட அந்த சமயத்தில் முதலில் அச்சொல்லின் பொருள் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதை பேஸ் செய்து எனக்குத் தெரிந்ததை அடிச்சுவிட்டேன் அம்புட்டுத்தான். என் மனதில் பதிந்த விஷயம், நாம் நல்ல விதத்தில் இருந்தால், என்பதுதான்...ஏனென்றால் பக்தி என்று சொல்லி தொழுதுவிட்டு அடுத்தாப்ல வாயில் கெட்ட வார்த்தைகளும், எல்லோரையும் திட்டுவதும் நடந்ததைத்தான் பார்த்திருந்ததால் உண்மையான பக்தி எல்லாம் பாராததால், செயல்யோகமே மனதில் பதிந்து இருந்ததால் அப்படி எழுதினேன்.
கீதா
விபூதி பட்டையுடன் வந்திருந்த மற்ற குழந்தைகளுக்கு போட்டியை நடத்துபவர்கள் யார் என்று தெரிந்திருக்கிறது என்று தெரிகிறது. அதுசரி, ஒரு கிறித்துவ ஆசிரியையின் கணவருக்கு எப்படி இதெல்லாம் தெரிந்திருந்தது? கலப்பு மணம்?
பதிலளிநீக்குஆமாம், ஸ்ரீராம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
நீக்குஇல்லை கலப்பு மணம் இல்லை. அவங்க கத்தோலிக்க கிறித்தவர்கள். நான் படிச்ச பள்ளியும் கத்தோலிக்க கிறித்தவ பள்ளி.
இப்போது Stand up comedian ஆகக் கலக்கிக் கொண்டிருக்கும் அலெக்ஸாண்டர் பாபு வும் யோகா மாஸ்டர் அதைப் பற்றியும் அழகாகப் பேசுவார்.
கீதா
பள்ளிக் காலங்களில் சேமிப்பு இன்னும் ஏதோ ஒரு தலைப்புக்கு என் பெரியவனுக்கு நான் பேச்சுப்போட்டிக்கு எழுதிக் கொடுத்து, எப்படி பேச வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தேன். பல பள்ளிகள் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் இவன் பள்ளி சார்பில் சென்று, கலந்துகொண்டு, பேசி வென்று வந்தான் அவன். இதேபோல வேறு பொது விதத்தில் நடந்த பேச்சுப்போட்டி. இப்போதும் அவன் பேசிய அந்த வரிகளை அதே ராகத்தில் மீண்டும் சொல்கிறான். அது போல நீங்களும் அந்தக் கட்டுரையை இப்போது மறுபடி கொண்டுவர முடியுமா?!
பதிலளிநீக்குஆஹா! ராகுல் இன்னமும் நினைவு வைத்துப் பேசுகிறாரா!!!! வாவ். அசாத்திய நினைவுத்திறன்.
நீக்கும்ஹூம் எனக்கு முடியாது ஸ்ரீராம். அப்படிஏ கொண்டு வர இயலாது. கதை யானால் கூடக் கொண்டுவந்துவிடுவேன் ஓரளவு. ஆனால் இது முடியாது.
ஏற்கனவே தயாரித்து மனப்பாடம் செய்து எழுதியிருந்தால் கொண்டுவந்திருப்பேன் ஆனால் இது அந்த நிமிடத்தில் கொடுக்கப்பட்ட தலைப்பு. என்பதால் விஷயம் என்ன எழுதினேன் என்பது மட்டும் நினைவு இருக்கு ஆனால் எப்படி வரிகள் அமைத்தேன் என்பது நினைவில்லை.
பாட்டி தாத்தா சொல்லிக் கொடுத்த போது கர்மயோகம் என்ற வார்த்தையை எல்லாம் சொல்லாமல், சும்மா நாம செய்யறத நாம் செய்தோம்னு சொல்லக் கூடாது, எல்லாமே பெருமாள் செயல் என்று தான் சொல்லணும் கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லணும் என்று ஏற்றி வைத்திருந்ததையும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு என்ன சொன்னார் என்பதை (தாத்தா தினமும் கீதை வாசிப்பார், நான் பிறந்த போது அவர் கீதை வாசித்துக் கொண்டிருந்ததால் என் பெயர் கீதா!) எனக்குப் புரிவது போல் மிகச் சின்ன வயசுல சொல்லிக் கொடுத்ததை வைத்து அர்ஜுனனுக்குச் சொன்னதை எல்லாம் கலந்து கட்டி அடிச்சதுதான். கீதையுமே கர்மயோகத்தைத்தான் முன்னிறுத்துகிறது. இதுமட்டும் அப்ப தெரியும் அதான் கடமையை செய் பலனை எதிர்பாராதே. எதுவும் உன்னுடையதில்லை....இதெல்லாம் ஆங்காங்கே வாசித்ததை வைத்து சமாளித்தேன்.
நான் சத்தியமாகப் பரிசு எதிர்பார்க்கவே இல்லை ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
1999 ல் என் மகள் நான்காம் வகுப்பு படித்த பொழுது 'My dream 2000' என்று ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தேன். அவளுக்கு அகில இந்திய அளவில் முதல் பரிசு கிடைத்தது. கிடைத்த தேதி 9.9.99. அவளுக்கு கட்டுரைகள் எழுத உதவி செய்து நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறாள்.
நீக்குஓ! சூப்பர் பானுக்கா. பாராட்டுகள் உங்கள் இருவருக்குமே!!!
நீக்குகீதா
சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒரு மஹாபாரத புத்தகம் இருந்தது. இப்போது எங்கே போச்சு என்று தெரியவில்லை. நல்ல விளக்கமாக உப கதைகள் எல்லாம் சேர்ந்திருக்கும். இப்போது அது மாதிரி பிற்சேர்க்கைகள் இல்லாமல் புத்தகம் கிடைப்பது அரிது. அதே போலதான் எங்கள் வீட்டில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை இருந்தது. இப்போது காணோம்!
பதிலளிநீக்குஓ! தமிழிலா? ஆமாம் இப்ப ஒரிஜினல் கிடைப்பது மிகவும் கஷ்டம். நம் வீட்டில் இதெல்லாம் அப்ப இல்லை ஸ்ரீராம். நானாக வாசித்தது ராஜாஜி எழுதியதுதான்.
நீக்குநானும் சில விக்கிரமாதித்தன் கதைகள் வாசித்ததுண்டு இப்பவும் வாசிக்க ஆர்வம் உண்டு. ரொம்ப அழகான நமக்கு நிறைய புரியவைக்கும் வகையில் இருக்கும்...
அட !பெரிய எழுத்தில் இப்பலாம் கிடைக்குமா? வீடு மாறும் போது போயிருச்சோ?
கீதா
பதிலளிநீக்குவிதி என்று சொல்வதை விட அவன் செயல் என்று சொல்லலாம். போட்டியில் பங்கேற்க வைத்தது முதல் பரிசு கொடுத்தது வரை எல்லாம் அவன் செயலே. அதுவல்லவோ கீதையின் சாரம்.
இயக்கம் சின்மயா மிஷன் தானே?
என்னுடைய இரண்டு மகன்களும் சின்மயா பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்தார்கள். M R குரூப் சாருடைய பார்ய இந்திரா தான் பள்ளி முதல்வர்.
Jayakumar
நான் விதி என்று சொல்லவில்லையே அண்ணா, கட்டுரையில். நான் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதில்லை எப்போதுமே.
நீக்குஏனென்றால் என் பிறந்த வீட்டில் அதைப் பயன்படுத்தி நான் அறிந்ததில்லை.
நீங்கள் சொல்லியிருப்பதைத்தான் என் பாட்டி சொல்வதுண்டு. எல்லாம் அவன் செயல் என்று. அவன் பார்த்துப்பான் இப்படித்தான் பேசுவாங்க.
இயக்கம் சின்மயா இல்லை அண்ணா. ஹிந்து முன்னணி.
//என்னுடைய இரண்டு மகன்களும் சின்மயா பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்தார்கள். M R குரூப் சாருடைய பார்ய இந்திரா தான் பள்ளி முதல்வர்.//
சின்மயா அப்ப ரொம்ப பிராபல்யமாக இருந்தது. சென்னையிலும். என் உறவினர்களின் குழந்தைகள் அதில் படித்தார்கள்.
M R குரூப் சாருடைய பார்ய இந்திரா//
ஓ! நம்ம ISRO, scientist M R Kurup sir? Wow!
நன்றி ஜெ கே அண்ணா
கீதா
ஒரு பொருளைப் பற்றி எழுதத் துவங்கும் முன் அந்தப் பொருள்குறித்து எதுவும் தெரியாதெனினும எழுதத் துவங்கி விட்டால் அந்தப் பொருள் குறித்து எலலாமேஎனககுத் தெரியக் துவங்கிவிடும்.காரணம் எனக்குச் சிந்திக்கத் தெரியும்... கண்ணதாசன் வரிகளை தங்கள் பதிவுநினைவில் கொண்டு வந்துபோனது..
பதிலளிநீக்குமிக்க நன்றி ரமணி அண்ணா.
நீக்குகண்ணதாசனின் வரிகளையும் சொல்லியிருப்பதற்கு மிக்க நன்றி. இப்போதுதான் இதைத் தெரிந்து கொள்கிறேன்.
கீதா
நினைவுப் பெட்டகத்திலிருந்து நல்லதொரு அனுபவம். சில சமயங்களில் நமக்குத் தெரியாது என்று தோன்றும் விஷயத்தில் கூட சில பக்கங்கள் எழுதி விட முடிகிறது - நம் சிந்தனையின் ஆற்றல் என்று கூட தோன்றும் எனக்கு!
பதிலளிநீக்குஉங்கள் நினைவுகளை மீட்டெடுக்க ஸ்ரீராம் அவர்களின் பதிவும் உதவியிருக்கிறது.
தொடரட்டும் பதிவுகள்.
சரிதான் வெங்கட்ஜி.
நீக்குநாம் கேட்பதும், வாசிப்பதும், சிந்திப்பவையும் நம்மை அறியாமல் நம் மூளைக்குள் எங்கோ ஒரு மூலையில் சேமிப்பில் இருக்கும் அவை அந்தச் சமயத்தில் வெளி வந்து எழுதவைக்கும் தான். அந்தச் சமயத்தில் வெளி வந்துகை கொடுக்க வேண்டும் அதுதான் அந்த ஆற்றல். சக்தி.
கதைகள், பதிவுகள் எழுதுவது கூட இப்ப எனக்கு மனதுள் இருந்தும் அதை எழுத்தில் போட முடியாமல் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது. அது என் மனம்தான் என்பதும் தெரிகிறது. மீள வேண்டும்.
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒரு விஷயத்தைப் பற்றி எதுவும் தெரியாமலே சும்மா அடித்து விட்டுக் கூட பரிசு வாங்கலாம் என்றா???(just joking). நம்முடைய பெரியவர்கள் நமக்குள் inculcate பண்ணும் விஷயங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன பார்த்தீர்களா?
பதிலளிநீக்குநன்றி பெயரில்லா.
நீக்கு//என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒரு விஷயத்தைப் பற்றி எதுவும் தெரியாமலே சும்மா அடித்து விட்டுக் கூட பரிசு வாங்கலாம் என்றா???//
சிரித்துவிட்டேன். அதுவும் சரி எனலாம். பெயரில்லா - இது பிரச்சனை இல்லை ஆனால் கருத்தின் கீழ் நீங்கள் யாரென்று குறிப்பிடாமல் விடுவது ஏன் என்று தெரியவில்லை. குறிப்பிட்டால் நல்லது இன்னும் கருத்தில் ஒரு பிடிப்பு வருமே!
//நம்முடைய பெரியவர்கள் நமக்குள் inculcate பண்ணும் விஷயங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன பார்த்தீர்களா?//
ஆமாம். கண்டிப்பாக.
ஆனால் சுய சிந்தனை, சிந்திப்பது நாமாக அறிவது என்று வரும் போது அவற்றில் மாற்றங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. எனக்குமே நிறைய வந்துள்ளன.
நன்றி பெயரில்லா
கீதா
நீங்கள் எழுதியதை இப்போதான் வாசித்தேன். அனுபவம், கேட்டவற்றில் உள்ள அறிவு இவையே உங்களுக்கு உதவியிருக்கிறது (அனுபவம்னா, வாசித்த கேட்ட அனுபவம்).
பதிலளிநீக்குநீங்கள் பெயர் குறிப்பிடாதபோதே அது இந்து முன்னணி என்று தெரிந்துவிட்டது. கோபால்ஜி, இராம கோபால்ஜியா? பாளையில் இன்னொரு கோபால்ஜி என்பவர் நிறைய உபன்யாசங்கள் பண்ணுவார். அவர் திடுமென ஒரு நாள் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணத் திருமணம் செய்துகொண்டதும் பலருக்கு அதிர்ச்சி. பிறகு அந்தப் பெண்ணை அவர் சமூகத்தைச் சார்ந்தவர் போல நடை உடை பாவனைகளில் மாற்றிவிட்டார். ஆயினும் அவருடைய மதிப்பு அப்போது சரிந்துவிட்டது.
பரவால்ல நெல்லை, இப்பதான் எனக்கும் பதில்கொடுக்க முடிகிறது வேலைப்பளு.
நீக்குகேட்டது உண்டு. வாசித்ததும் கொஞ்சம் உண்டு. ஆனால் பட்டறிவு நிறைய! அந்த அனுபவத்தில் கற்றது நிறைய, நெல்லை.
நான் பார்த்தவர், நிழலாய் இருக்கும் நினைவுப்படி ஒல்லியாக சில சமயம் சின்ன தாடியுடன். பெரும்பாலும் காவித் துணி? நான் இப்படியானவற்றிற்கு போனதில்லை, பார்த்ததோடு சரி. என் பாட்டியுடன் சென்ற போது. கோபால் ஜி இருவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லையே, நெல்லை.
நன்றி நெல்லை
கீதா
ஒரு கட்டுரை எழுதவோ இல்லை பேசவோ, நமக்கு உடனடியாகச் சிந்திக்கும், சிந்தித்ததைச் சொல்லும் திறமை மாத்திரமே வேண்டும். சில நேரங்களில் மடை திறந்ததுபோல நமக்குக் கருத்துகள் தோன்றும். அப்படித்தான் நீங்களும் எழுதியிருக்கவேண்டும். பாராட்டுகள்
பதிலளிநீக்குஅப்போது அப்படித் தோன்றியதுதான் நெல்லை. அப்போதெல்லாம் நிறைய இப்படி முடிந்தது. இப்போது மனதுள் ஓடினாலும் எழுத்தில் போட முடியாதபடி பல தடைகள். வேலைகள், ஆக்ரமிப்பதால்.
நீக்குநன்றி நெல்லை
கீதா
சிறு வயதில் நீங்கள் எழுதி பரிசு பெற்றது அருமையான மலரும் நினைவு.
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் அவர்கள் பதிவில் புத்தக சேகரிப்பு, கலைப்பொருட்கள் பற்றி பேசும் போது பள்ளியில் ஒரு கட்டுரை எழுத பள்ளி நூலகம் நோக்கி படையெடுப்பை பற்றி கருத்து சொன்னேன். இங்கு நீங்களும் நூலகம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.
நீங்கள் நூலகத்தில் உள்ள ஸ்டேடியத்தில் போட்டியில் கலந்து கொள்ள போய் இருக்கிறீகள். மனதில் அந்த நேரம் தோன்றியதை சொன்னது, எழுதியதுதான் சிறந்த
செயல். நல்ல திறமை உள்ளவர்களுக்கே அது நடக்கும். பாராட்டுகள், வாழ்த்துகள்.
பரிசை எதிர்பார்க்காமல் கலந்து கொண்டு நம் கருத்தைமட்டும் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தது கடமையை சரிவர செய்த மன திருப்பதி பலனை எதிர்பார்க்கவில்லை கீதையின் சாரம் வந்து விட்டது.
மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குஅப்போதெல்லாம் நிறைய போவேன் நூலகத்திற்கு பள்ளியில் உள்ள நூலகம், ஊரில் உள்ளது என்று. போட்டிக்குச் சேகரிக்க.
ஆமாம் அக்கா எதிர்பார்ப்பு இருப்பதில்லை. இருந்தால் செய்ய முடியாதுதானே இல்லையா?
ஆனால் அது இப்ப வரணும் இப்ப எழுத முடியாததற்குக் காரணமும் சில எதிர்பார்ப்புகளோ என்றும் தோன்றுகிறது.
மிக்க நன்றி கோமதிக்கா.
கீதா
//மாவட்ட அளவில் இரண்டாவது பரிசாக வாரியார் கதைகள் புத்தகம் கிடைத்தது. //
பதிலளிநீக்குநல்ல பரிசு
//கர்மயோகம் தான் சிறந்தது ஆனால் அதில் "நான்" என்பதைச் சேர்க்காமல், எல்லாவற்றையும் பிரபஞ்சசக்திக்கு அற்பணித்து, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்...//
நீங்கள் பிரபஞ்சம் என்று சொல்லி விட்டீர்கள். கீதையில் எல்லாம் நானே என்று கண்ணன் சொகிறார்.
பிரபஞ்சத்திடம் நீங்கள் எல்லா வற்றையு. அற்பணித்த பின் அவை உங்களிடம் கொடுத்து விட்டது.
ஆம் கோமதிக்கா, கீதையில் எல்லாம் நானே என்று கண்ணன் சொல்வது அப்போது அவ்வளவாக என் மனதில் ஏறவில்லை. பிரபஞ்சம் பற்றி அப்போது தெரிந்து கொண்டதையும் மஹாபாரதத்தில் உபதேசம் பகுதி வருமே அது பாட்டி சொன்னதை எல்லாம் வைத்து எழுதியதுதான்.
நீக்குஆமாம் அக்கா வாரியார் கதைகள் புத்தகம் நல்ல புத்தகம்
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்களுடைய பதிவை படித்து கருத்துரைத் தர இன்றுதான் தாமதமாக வந்திருக்கிறேன். அதனால் மன்னிக்கவும் என்ற வார்த்தை உங்களுக்கு பிடிக்காதெனினும், உடனடியாக வராமல் இப்படி தாமதமாக வந்தது என் மனதில் தவறென உறுத்துவதால், அதையே சமர்ப்பிக்கிறேன். ஹா ஹா ஹா.
நல்ல அறிவுத்திறன் உங்களுக்கு. பயமின்றி அந்த கட்டுரைப் போட்டிக்கு போனதுடன், தெரியாத ஒரு விஷயத்தை தலைப்பாக தந்ததும், சிறிதும் கலங்காமல், நன்கு எழுதி பரிசு வாங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள சகோதரி. .
நடப்பது அனைத்தும் அவன் செயல்,. அந்த செயலுக்கு கட்டுப்பட்டுத்தான் நீங்களும் சென்று வென்று பரிசை வாங்கியிருக்கிறீர்கள். உங்களை அந்த வழியில் நடத்திச் சென்றவனை குறித்து அந்த சிறுவயதில் நீங்கள் எழுதியிருப்பது சிறப்பு.
பதிவுக்கு வந்த அனைவரது கருத்துரைகளையும் அதற்கு தங்களது பதில்களையும் படித்து ரசித்தேன்.
/ (தாத்தா தினமும் கீதை வாசிப்பார், நான் பிறந்த போது அவர் கீதை வாசித்துக் கொண்டிருந்ததால் என் பெயர் கீதா!)/
ஆகா.. உங்கள் தாத்தா உங்களுக்கு வைத்த நல்ல பெயர். "இப்போது சரியாக சொல்லவேண்டுமென்றால், கீதை, ரெங்கனிடமே வந்து சேர்ந்து விட்டதென எனக்குத் தோன்றியது." உங்கள் இருவரின் பெயர்களும் நல்ல பொருத்தம் இல்லையா?
இப்போதைய உங்கள் குணநலன்களை நான் உணரும் போது உங்கள் பெயரும் கீதையோடு மிகப் பொருத்தமாக தெரிகிறது. வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா முதல் பத்தி பார்த்து சிரித்துவிட்டேன். இங்க பாருங்க உங்க சூழல் தெரியும். அதனால் எப்ப வந்து வாசிக்கறீங்களோ அது போதும். யாரும் எதுவும் நினைக்கப் போவதில்லை. இல்லையா....அதனால வருத்தமே வேண்டாம். எனக்கும் பல பதிவுகளை வாசிக்க முடியாமல் போவதுண்டே. தாமதமாக வாசிபப்தும் உண்டே.
நீக்கு//நல்ல அறிவுத்திறன் உங்களுக்கு. பயமின்றி அந்த கட்டுரைப் போட்டிக்கு போனதுடன், தெரியாத ஒரு விஷயத்தை தலைப்பாக தந்ததும், சிறிதும் கலங்காமல், நன்கு எழுதி பரிசு வாங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள சகோதரி. .//
நன்றி கமலாக்கா. அக்கா பரிசெல்லாம் எதிர்பார்க்காததால், அந்த பயமோ கலக்கமோ வரவில்லை. அதைத்தானே கீதையும் சொல்கிறது!!!!! அதை எதிர்பார்க்கும் போதுதான் பயம் கலக்கம் வரும் அப்ப நம் மனம் சிந்திக்காது. அது இல்லாததால் தலைப்பு ஒரு ஆர்வம் கொடுத்ததால் எழுதினேன்.
/// (தாத்தா தினமும் கீதை வாசிப்பார், நான் பிறந்த போது அவர் கீதை வாசித்துக் கொண்டிருந்ததால் என் பெயர் கீதா!)/
ஆகா.. உங்கள் தாத்தா உங்களுக்கு வைத்த நல்ல பெயர். "இப்போது சரியாக சொல்லவேண்டுமென்றால், கீதை, ரெங்கனிடமே வந்து சேர்ந்து விட்டதென எனக்குத் தோன்றியது." உங்கள் இருவரின் பெயர்களும் நல்ல பொருத்தம் இல்லையா?//
ஹாஹாஹாஹா.....கமலாக்காவின் டிப்பிக்கல் கருத்து!!!! சிலதுக்குப் பதில் சொல்வது கடினம்!!!!
//உங்களை அந்த வழியில் நடத்திச் சென்றவனை குறித்து அந்த சிறுவயதில் நீங்கள் எழுதியிருப்பது சிறப்பு.//
அப்படி எல்லாம் எழுதலைக்கா நான்.
//இப்போதைய உங்கள் குணநலன்களை நான் உணரும் போது உங்கள் பெயரும் கீதையோடு மிகப் பொருத்தமாக தெரிகிறது.//
ஹாஹாஹாஹா மீண்டும் கமலாக்கா! என் குண நலன்களைக் கருத்தை வைத்து கணிக்காதீங்கக்கா. கீதைக்குப் பக்கத்துல என் பெயரைப் போட்டுக்கலாம் ஆனால் அதன் அருகில் கூட நான் கிடையாது. மிக மிகச் சாதாரண நபர்.
என் நெருங்கிய உறவினர்களில் சிலர் ஒரு தங்கை உட்பட என்னை ஹேய் கீதை, கீதே என்றுதான் விளிப்பார்கள் கேரளத்து ஸ்டைலில்!!
நன்றி கமலாக்கா
கீதா