சென்ற பதிவில் கால்காவிலிருந்து சிம்லாவிற்கான டாய் ரயில் 7.15 ற்கு என்று தவறாக வந்துவிட்டது. 7 மணிக்குக் கால்காவிலிருந்து (ஹிந்தியில் कालका வாம். எனவே கால்கா) சிம்லாவுக்குச் செல்லும் ஹிமாலயன் தர்ஷன் எனும் டாய் ரயிலில் முன்பதிவு செய்திருந்த பயணம். 1 1/2 மணி நேரம்தான் இருந்தது. டாய் ரயிலில் எங்களால் பயணிக்க முடிந்ததா? என்று சென்ற பதிவின் கடைசி வரி.
கால்கா சிம்லா ரயில் பாதை பற்றிய தகவல் இப்படத்தில் உள்ளது. கால்கா-சிம்லா குறுகிய ரயில் பாதைக்கான திட்டம் நவம்பர் 1847ல் போடப்பட்டாலும் தில்லியிலிருந்து கால்கா வரையான அகலப்பாதை 1891ல் ஜனவரி 3 ஆம் தேதி திறக்கப்பட்டதன் பிறகுதான், கால்கா சிம்லாவுக்கான 95.57 கிமீ பாதை, உத்தேசமாக 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் போடத் தொடங்கப்பட்டு, லார்ட் கர்சன் வைஸ்ராயாக இருந்த போது 1903, நவம்பர் 9 ஆம் தேதி போக்குவரத்து ஆரம்பித்தது என்ற தகவல். இப்பாதையில் இருக்கும் 102 சுரங்கப்பாதைகளும் 1900-1903 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை. இதைப் பற்றிய மீதி சுவாரசியமான தகவல் படத்தில்.
இந்த லைனில் செல்லும் எல்லா ரயில்களுமே டாய் ரயில்கள் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு பெயர்களில். கால்கா சிம்லா எக்ஸ்பிரஸ், ஹிமாலயன் க்வீன், ஹிம் தர்ஷன் எக்ஸ்பிரஸ், ஷிவாலிக் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் என்று.
25-04-2024 - புதன் - 5.30 மணி வரை சண்டிகார் நிலையத்தில் ரயில் வரவில்லை
என்பதால் உடனே, எங்கள் பெட்டிகளுடன் ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்து 2 ஆட்டோக்களில்
ஒவ்வொரு ஆட்டோவிலும் மூன்று பேர் வீதமாகக் கால்கா ரயில் நிலையம் நோக்கிப் போனோம்.
6.45 ற்குக் கால்கா ரயில் நிலையத்தை அடைந்து 7 மணிக்குக் கிளம்பும் ரயிலில் ஏறும் வரை பதைபதைத்துப்
போனோம்.
1815-16 ல் "கோர்க்கா (கூர்க்கா)
போர்" முடிவுக்கு வந்த போதுதான் சிம்லா நகரம் உருவானது என்றும் பிரிட்டிஷ் சில
ராணுவப் பகுதிகளைத் தங்கள் கீழ் வைத்துக் கொண்டு, "Sanitaria" பகுதியை பிரிட்டிஷ்
அதிகாரிகள் தங்கள் குடும்பத்துக்கான விடுமுறைக்கான இல்லங்களாக்கிக் கொண்டார்கள் என்று
தகவல். அதாவது உடலநலம் சரியில்லை என்றால் இங்கு அந்து தங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்திக்
கொள்ளும் இடமாக. "Sanitaria" - சானிடேரியா பகுதி பிரிட்டிஷ் காலத்து கட்டிடக் கலையில் பெரும்பாலும்
பெரியதாகவும் விசாலமாகவும் இருக்கும், பிரமாண்டமான
கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டதோடு அழகிய இயற்கைக் காட்சிகள் இருக்கும் இடங்களில்
அமைக்கப்பட்டனவாம். இன்று, பல சானிடேரியாக்கள் ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் அல்லது
பாரம்பரிய தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளனவாம். சுற்றுலாப்பயணிகளுக்கு பிரிட்டிஷ்
காலத்து சிம்லாவைப் பார்த்தது போலவும் இருக்கும்.
சிம்லாவில் முதன் முதலில் கட்டப்பட்ட வீடு 'கென்னடி வீடு" என்று சொல்லப்படும் வீடு. நீண்ட காலம் அங்கேயே தங்க வேண்டியிருந்ததால் அடிப்படை வசதிகளுடன் லெப்டினன்ட் சார்லஸ் பாட் கென்னடி 1822 ஆம் ஆண்டு கட்டிய வீடு. 'கென்னடி ஹவுஸ்' சிம்லாவின் முதல் நிரந்தர வீடாம்.
******
சாப்பிட்ட பிறகு நாங்கள் இருந்த இடத்திலிருந்து 1 கிமீ தூரம் உள்ள மால்ரோட்டிற்கு, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முன்பில் உள்ள சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்த ஹிமாச்சல பிரதேச அரசுப் பேருந்தில் ஏறி - பயணக் கட்டணம் ரூ 10 ஒருவருக்கு - பேருந்து நிலையம் சென்றடைவதற்குச் சற்று முன்பான மால் ரோட் லிஃப்ட் எனும் நிறுத்தத்தில் இறங்கினோம். அங்கிருக்கும் லிஃப்டில் ஏறி மால்ரோடை அடையலாம். லிஃப்டில் செல்ல சீட்டு வாங்க வேண்டும். ஒரு நபருக்கு ரூ 10. வாங்கிக் கொண்டு ஏறி, மால் ரோடை அடைந்தோம். இந்த லிஃப்ட் வசதி சமீபத்தில் வந்த ஒன்றாம். முன்பெல்லாம் கிடையாதாம். மால் ரோடில் வித்தியாசமான காட்சிகளைக் கண்டு கொண்டே நடந்து தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தோம்.
மால்ரோடில்
மால் ரோடு பற்றிய தகவல். பதிவு பெரிதாகிறது என்பதால் இதைத் தமிழில் தரவில்லை. மால் ரோடு மற்றும் அதை ஒட்டிய 'த ரிட்ஜ்' எனப்படும் பகுதிக் காட்சிகள்
மால் ரோடை ஒட்டிய 'த ரிட்ஜ்' பகுதியில்
இங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அனுமன் வலப்பக்கம் ஜாக்கூ மலை மேலே. இங்கு சென்ற தகவல் கீழே
ரிட்ஜ் இங்கே சில சிலைகளைப் பார்க்கலாம். தூரத்தில் இந்திராகாந்தி சிலை. இங்கு குளிர்காலத்தில் பனி பொழிந்து தேங்கினால் இங்கிலாந்து போன்று இருக்குமாம்
மேலே செல்ல
எஸ்கலேட்டர்
இதில் சுவாரசியமான தகவல். உங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சோதிக்கவும் என்று ஒவ்வொரு வயதினருக்கும் இக்கோவிலுக்கு நடந்து செல்லும் போது எடுக்கும் நேரத்தைப் பொருத்து ஆரோக்கிய அளவீடு கொடுத்து ஒரு பலகை.
பின் அங்கிருந்து குஃப்ரிக்குச் சென்றோம்.
குஃப்ரியில் பார்க்க வேண்டிய இடத்திற்குக் குறிப்பாக மஹாசூ உச்சிக்குக் குதிரை/கோவேரி கழுதையில்தான் செல்ல முடியும் என்று சொல்லப்பட்டது. ஆளுக்கு ரூ 1000 சென்று திரும்பி வருவதற்குக் கொடுத்துக் குதிரையில் ஏறினோம். இரு புறமும் கால் வைத்து Balance செய்ய இரும்பு வளையம் உண்டு. ஆனால் பிடிப்பதற்கு நாம் அமர்ந்திருக்கும் இருக்கை மட்டுமே. விழுந்தால் படுத்த படுக்கையாகிவிடத்தான் வாய்ப்பு. சிவநாமத்தைச் சொல்லி 20 நிமிடப் பயணத்தில், இடத்தை அடைந்தோம்.
கொஞ்சம் தள்ளி தொலை நோக்கியில் சுற்றியுள்ள பனி படர்ந்த மலைகளையும், சிம்லா ஒப்பந்தம் நடைபெற்ற கட்டிடத்தையும் பார்த்தோம்.
அதன் பின் zipline போன்ற சாகச விளையாட்டுகளில் அருணும் நாங்களும் பங்கெடுத்தோம்.
குஃப்ரியில் அழகான காட்சிகள்
எங்களுடன் வந்தவரில் ஒருவருக்கு உடல்நலமில்லாமல்
போனதென்றாலும் பயணத்தைத் தொடர்ந்ததைப் பற்றிச் சொல்லியிருந்தேன். மலைப்பாதையில் Bolero ஓட்டுநர் ஓட்டிய விதம், உடல் நலம் சரியில்லாதவருக்குத் தலைச்சுற்றல், வாந்தியை
வரவைத்தது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை. மருத்துவனான மகன் அருண் அருகிலிருந்த
மருந்துக் கடையில் ORS பாக்கெட்டுகளும் சில மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்து அன்று
இரவைக் கழித்தோம்.
மறு நாள் 27-04-2024 அன்று,சிம்லாவிலிருந்து திரும்ப வேண்டும். அடுத்த பகுதியில் தொடர் நிறைவுபெறுகிறது.
-----துளசிதரன்
இந்த மாதிரி புதிய இடத்தைப் பற்றி ஏராளமான படங்களுடன் ஐந்து பதிவுகளாகவாவது எழுதியிருக்கலாமே
பதிலளிநீக்குஎழுதலாம்தான், நெல்லை, ஆனால் வாசிப்பவர்களுக்கு அது அயற்சியாக, போர் அடிப்பதாக, தேவையில்லாதது போல் தோன்றுமே என்பதால்தான் சுருக்கிவிட்டேன். படங்கள் இதில் கொடுத்திருந்தாலும், காணொலியும் வரும் கடைசி பதிவில். அதில் காணொளிகள் வரும். விரைவில்.
நீக்குமிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
துளசிதரன்
இந்த மாதிரி புதிய இடத்தைப் பற்றி ஏராளமான படங்களுடன் ஐந்து பதிவுகளாகவாவது எழுதியிருக்கலாமே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு. அதிலும் சில படங்கள் வெளிநாடு போன்ற தோற்றம் தருகிறது.
பதிலளிநீக்குஆப்பிள் இல்லை. ஆப்பிள் பூ மட்டுமே. பனிவிழுந்த இடங்கள் இல்லை. தூரத்துச் சிகரங்கள்தாம். குளிர்காலத்தில் போயிருக்கணுமோ
நெல்லை, சிம்லாவுக்கு நீங்க ஜனுவரியில் பொங்கல் சமயத்தில் "புது வெள்ளை மழை அங்கு பொழிகின்றதா' என்று கூகுளைக் கேட்டுக் கொண்டு சென்றால் பனிப்பொழிவைப் பார்க்கலாம்.
நீக்குஇல்லைனா ஏப்ரல் இறுதியில் மே தொடக்கத்தில் மனாலி போனால் ரோத்தாங் பாஸில் பனியைப் பார்க்கலாம். அதற்கு முன் போனால் மனாலியிலேயே கூட அலல்து ரோத்தாங் பாஸ் போகும் வழியில் மார்ஹி எனும் இடத்திலும் பார்க்கலாம் பனியில் விளையாடலாம்.
ஆப்பிள் காய்த்துக் குலுங்குவதைப் பார்க்க ஜூலையில் செப்டம்பர் போனால் ஆப்பிள் தோட்டங்களுக்கே கூட ட்ரிப் உண்டு. பெரும்பாலும் நான் அறிந்த வரையில் ஆகஸ்ட் இறுதி செப்டம்பரில் அறுவடை சீசன். நாங்கள் அந்தச் சமயத்தில் மனாலி போயிருந்தப்ப ஆப்பிள் திருவிழா பார்க்க நேர்ந்தது விதம் விதமான ஆப்பிள்கள் அதில் செய்யப்பட்ட உணவுகள், பாரம்பரிய நடனம் என்று களை கட்டியது.
செப்டம்பர் தொடக்கத்தில் ரோத்தாங் பாஸ் அருகில் உள்ளே ஒரு கிமீ - 1 1/2 கீ தூரத்தில் ஸ்னோ பாயின்ட் இருக்கும். கோவேரி கழுதையில் சென்றோம். அப்போ. இப்ப மாறியிருக்கலாம். டனல் எல்லாம் வந்திருக்கிறதே
கீதா
ஏப்ரல் பாதிக்கு மேல் மே மாதங்களில் போனால் ஆப்பிள் மரங்கள் பூத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இது மலையின் உயரம் சீசனைப் பொருத்து சற்று மாறுபடும். நான் இரு வேறு சீசன்களில் சென்றதால் பூத்திருப்பதும் பார்த்தேன். காய்த்துக் குலுங்கி அறுவடையானதும் பார்த்தேன்.
நீக்குகீதா
டங்கள் அனைத்தும் அழகு. அதிலும் சில படங்கள் வெளிநாடு போன்ற தோற்றம் தருகிறது.//
நீக்குஆமாம், மால் ரோடில் எல்லாம் போனால், அதுவும் பனி விழும் காலங்களில் வெளிநாடு போலத் தோற்றம் தருவதைக் காணொளிகளிலும் படங்களிலும் பார்த்தால் தெரிகிறது. ஆனால் நமக்கு அந்தக் காலநிலைகளில் செல்வதென்பது சிரமம். உடலுக்கு எப்படி என்று தெரியவில்லை. அதனால்தான் நாங்கள் இதை இப்படித் தேர்ந்தெடுத்தோம். பனிக்காலத்தில் அந்த குஃப்ரி எல்லாம் பனியால் மூடப்பட்டிருக்கும் என்று சொன்னார்கள். அருமையான இடம் தான். நவம்பர் டிசம்பர் ஜனுவரியில் போனால் ஸ்விச்சர்லாந்து, இங்கிலாந்து போனது போன்ற அனுபவம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆப்பிள் பூ பூக்கும் காலம் நாங்கள் போன நேரம். ஜூலை ஆகஸ்ட் செப்டம்பரில் போனால் ஆப்பிள்கள் கொத்து கொத்தாய்த் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும் என்றார்கள்.
கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
அறை விலை, உணவு, எப்படி ஆட்டோவில் சென்று டாய் இரயிலைப் பிடித்தீர்கள் என்ற விவரம் மிக உபயோகம்
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் கூடுதல் விவரங்கள் நன்று
ஆம் நெல்லை, உண்மையிலேயே சண்டிகரிலிருந்து கால்காவிற்கு ரயிலில் போக வேண்டிய அவசியமே இல்லை. ஊபர் டாக்சி ஆட்டோவில் போய்ச் சேர்ந்து விடலாம். கால்காவிற்குச் சரியான நேரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அந்த டாய் ரயில் அனுபவம் என்பது மிகவும் அருமையான அனுபவம். மேலே எல்லாம் கண்ணாடிகள். சுற்றிலும் கண்ணாடிகள், மிகவும் அருமையான அனுபவம். ஊட்டிக்குச் சென்றது சிறிய தூர அனுபவம் ஆனால் அதைவிட இது மிகவும் நீண்ட பயணம் அல்லவா. அருமையான அனுபவம். நீங்களும் சென்று வாருங்கள்.
நீக்குமிக்க நன்றி நெல்லை
துளசிதரன்
நெல்லை அன்றே சொல்ல நினைத்து விட்டுப் போனது. நம்ம வெங்கட்ஜியும் சிம்லா பயணம் பற்றி எழுதியிருக்கிறாரே. அவர் நார்கண்டா போன்ற பகுதிகளுக்குப் போனது பற்றி தங்கிய இடம் உணவு எல்லாமே சொல்லியிருக்கிறார்...வேறு பகுதிகளுக்குச் சென்றது பற்றியும் எனக்கு நினைவு இருக்கிறது. அவர் தளத்தில் சிம்லா என்று போட்டாலே வரும் அவர் பதிவுகள் என்று நினைக்கிறேன்.
நீக்குநான் துளசியிடமும் நார்கண்டா முடிந்தால் போய்வரச்சொன்னேம் காட்சிகள் மிக அழகாக இருக்கும் மலையும் செல்லும் வழியும்.... அருகில்தான் என்று சொல்லியிருந்தேன். லிஸ்ட் போட்டுக் கொடுத்ததில். குஃப்ரி மட்டுமே செல்ல முடிந்தது அவர்களுக்கு.
கீதா
நெல்லை லிங்க் எடுத்துவிட்டேன் இதோ இதிலிருந்து நீங்கள் பல பகுதிகளையும் தெரிந்து கொள்ளலாம்.
நீக்குநான் சென்றது இன்னும் பழசு.
https://venkatnagaraj.blogspot.com/2018/09/blog-post_19.html
கீதா
பயணப்பாதை அற்புதமாக இருக்கிறது. இந்தப்; பயணம் நிச்சயம் வாழ்நாள் பூராவும் மனதில் நிற்கும். இன்னொருமுறை பயணம் செய்யவும் ஏங்க வைக்கும்.
பதிலளிநீக்குஆமாம், ஸ்ரீராம். பயணங்கள் எப்போதுமே இனிமையானவை அதுவும் நீண்ட நாட்களாகப் போகஆசைப்படும் இடத்திற்குப் போகும் போதும் அந்த நாட்களை மீண்டும் அசை போடும் போதும் அதை எல்லாம் அனுபவித்து அறியத்தான் வேண்டும். இப்போதெல்லாம் அவற்றை மீண்டும் மீண்டும் காணக் கிடைப்பதற்கு உதவும் படங்களும் காணொளிகளும் எடுக்க முடிவது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய அனுக்ரஹம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
மலைமேல் செல்ல எஸ்கலேட்டர் இருக்கிறது என்பது வியப்பு. எவ்வளவு நேரம் ஏறவேண்டும்? எவ்வளவு உயரம்
பதிலளிநீக்குஎஸ்கலேட்டர் பற்றிச் சொல்லும் முன், மால் ரோடுக்குச் செல்லவும் லிஃப்ட் இருக்கிறது வாசித்திருப்பீர்கள். அதுவும் சௌகரியமாக இருந்தது. பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் இந்த லிஃப்ட் இருக்கிறது. மால்ரோடிற்கு நடந்தும் செல்லலாம் ஆனால் கொஞ்சம் கஷ்டமான ஏற்றம் வளைந்தும் செல்லும் கொஞ்சம் தூரம். மலை தானே கொஞ்சம் கீழே மிடில் பஜார் என்பதையும் மேலே உள்ள மால் ரோடையும் இணைக்கும் லிஃப்ட்.
நீக்குபடிகளும் இருக்கின்றன ஏறியும் செல்லலாம் ஆனால் அதுவும் சிரமம். இதைஎல்லாம் கணக்கிலெடுத்து முடியாதவர்களுக்கு சிம்லா முனிசிபாலிட்டி இப்படி லிஃப்ட் அமைத்து வசதி செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. Rapid Transport System Development Corporation (RTDC) இதை பராமரிக்கிறார்கள்.
முன்னே எல்லாம் இல்லை என்று கீதா சொன்னார்.
லிஃப்டில். ஒரே நேரத்தில் ஏராளமான ஆட்கள் செல்ல முடியும். சட்டென்று மேலே செல்ல முடியும். இரண்டு தட்டுகளாக முதல் ஃபேஸ் இரண்டாவது ஃபேஸ் என்று செய்திருக்கிறார்கள். மிஞ்சிப் போனால் 1 1/2 நிமிடமே எடுக்கும். திரும்பி வரும் போது கடைகளைப் பார்த்துக் கொண்டே நடந்துவிடலாம். ஆனால் போகும் போது நடந்து செல்வது நேரத்தை மிச்சப்படுத்தவும், மலைப்பாதையை ஏறுவது சிரமம் என்பதாலும் அங்கு ஏராளமாக நடந்து பார்க்க வேண்டும் என்பதால் லிஃப்டை பயன்படுத்தலாம்.
அடுத்து நீங்கள் கேட்டிருக்கும் எஸ்கலேட்டர் - அனுமன் கோவிலுக்கான எஸ்கலேட்டருக்குக் கட்டணம் இல்லை. ஃப்ரீதான். 200 மீ வரும் ஏகதேசமாக . மலை ஏற முடியாதவர்களுக்கு எல்லாம் இது வ்ராப்பிரசாதமே. இப்படி எல்லாம் அமைத்திருப்பது வியப்பாகவும் இருந்தது யோசித்துச் செய்திருப்பதாகத் தெரிந்தது. அருமையான இடம். அங்கிருந்து பார்த்தால் சிம்லா டவுனின் அழகைப் பார்க்கலாம்.
குதிரை மேலேறியும் போகலாம். நடந்து செல்பவர்களும் இருக்கிறார்கள்.
நடந்து செல்வதானால் ஆரோக்கியத்தை செக் செய்து கொள்ளலாம் என்று ஒரு போர்டு அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஒன்றோ இரண்டோ எஸ்கலேட்டர்கள் உண்டு. சிரமம் இல்லாமல் மேலே சென்று கீழே வந்துவிடலாம். படிகள் ஏற வேண்டிய அவசியமும் இல்லாமல்.
கார் பார்க்கிங்க் லிருந்து கொஞ்சம் ஏறினால் எஸ்கலேட்டர் பகுதி இருக்கிறது.
மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
//இக்கோவிலுக்கு நடந்து செல்லும் போது எடுக்கும் நேரத்தைப் பொருத்து ஆரோக்கிய அளவீடு கொடுத்து //
பதிலளிநீக்குநிச்சயம் நான் Fail ஆகிவிடுவேன்!
ஸ்ரீராம் நீங்கள் மட்டுமல்ல, நானுமே ஃபெயில் ஆகிவிடுவேன். நம் கீதா வேண்டுமென்றால் வெற்றி பெற்றுவிடுவார்.
நீக்குதுளசிதரன்
ஸ்ரீராம் துளசியின் கருத்தைப் போடும் போது சிரித்துவிட்டேன். அவருமே சிரித்துக் கொண்டேதான் இக்கருத்தை அனுப்பியிருந்தார். கீதா முன்னாடி நடந்திருக்கா மலை ஏறி. அப்போதை விட இடமும் வித்தியாசமாக இருக்கிறது நிறைய மாற்றங்கள்.
இப்ப எப்படி என்று தெரியவில்லை. ஆனால் இந்த போர்டை பார்த்ததும் ஆஹா ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று தோன்றியது. நடந்து பார்த்துவிடலாமே என்று தோன்றியது குளிர்காலத்தில் செல்ல வேண்டும். சிம்லாவை மீண்டும் குளிரில் அனுபவிக்க வேண்டும் என்று ஆசை எழுகிறது. பிடித்த மாநிலம்...இமயமலை...
கீதா
கோவேறு கழுதை, குதிரைச் சவாரி ரிஸ்க்குத்தான்!! சில உயர இடங்களை கடக்கும்போது கீழே பார்க்கக் கூடாது என்பார்கள். நமக்கு அப்போதுதான் கீழே பார்க்க தோன்றும்!
பதிலளிநீக்குமலை உச்சி காட்சிகள் அபாரம். ஆப்பிள் பூ அழகு.
நீங்கள் சொல்லியிருப்பது போல் எனக்கும் அது ஆபத்தான யாத்திரையாகத்தான் பட்டது. மற்றவர்களை எல்லாம் நினைத்த போது அவர்கள் எல்லோரும் எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் எளிதாக அமர்ந்திருந்ததைப் பார்த்த போது ஓ நமக்குத்தான் பயமாக இருக்கிறது போலும் என்று நினைத்தேன். குதிரைக்காரர்கள் கவனித்து அழைத்துச் செல்ல வேண்டும் ஆனால் அவ்வளவாக சட்டை செய்வதில்லை. சிறிதாகக் கவனிக்கத் தொடங்கினால் முழுவதாகக் கவனிக்க வேண்டிவருமே என்ற பயமாகவும் இருக்கலாம்.
நீக்குஆப்பிள் பூ நானும் இதுதான் முதல் முறையாக என் வாழ்நாளில் பார்த்தேன். ஆப்பிள் தொங்கிக் கிடப்பதை எல்லாம் பார்க்க ஆவல். அதுவும் நடக்கும் என்று நம்புகிறேன். ஆப்பிள் தொங்குவதைப் பார்க்க வேண்டும் என்றால் ஜூலை செப்டம்பர் அக்டோபர் வரை என்று சொல்லப்பட்டது அந்த மாதங்களில் பயணித்தால் பார்க்க முடியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
அங்கு தெரியும் மலைச்சரிவுகள் அபாய அழகு, பயமுறுத்தும் கவர்ச்சி.
பதிலளிநீக்குமலைப்பாதை பயணம் என்பது எனக்கும் ஒத்துக்கொள்ளாது. நானும் வாந்தி தலைசுற்றல் கேஸ்தான்! நம்மைப்பற்றி நாம் அறிந்திருப்போம்.
முதலிலேயே முன்னெச்சரிக்கையாக சில மாத்திரைகள் எடுத்திருந்திருக்கலாம்.
எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் 'பயமுறுத்தும் கவர்ச்சி' 'அபாய அழகு' அருமையான வார்த்தைகளில் அழகான வர்ணிப்பு. உண்மையிலேயே இந்த வார்த்தைகள் தான் அதை விவரிக்க ஏற்றது. Danger of beauty என்பார்கள்.
நீக்குஆமாம் அருமையான காட்சிகள்
ஆனால் ரயிலில் மேலே ஏறிச் செல்வதெல்லாம் பிரச்சனையாகவே இல்லை. இது போன்ற உபாதைகள் வர வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. அதே சமயத்தில் rash driving அந்த பொலரோ ட்ரைவர் அவரது டிரைவிங்க் சிரமமாகத்தான் இருந்தது. வளைவுகளில் எல்லாம் ரொம்ப வேகமாகத் திருப்பி ஓட்டியது நம் உடல்கள் ரொம்பக் குலுங்கி தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புண்டுதான். அது எங்களில் பலருக்கும் நேர்ந்தது. ஆனால் உடல்நலம் சரியில்லாதவருக்கு வாந்தியும் வந்து ஓரிரு இடங்களில் வண்டியை நிறுத்த வேண்டியதானது. அதன் பிறகும் அந்த ட்ரைவருக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் வண்டியை அதே போன்றுதான் ஓட்டினார்.
மற்றபடி சாதாரணமாக ஓட்டிச் சென்றால் தலைச்சுற்றல் வாந்தி வர வாய்ப்பு இல்லைஎன்றே சொல்லலாம், ஸ்ரீராம்
மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சிம்லா சுற்றுலாவுக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்த ரயிலை வேறு மார்க்கமாக எப்படியோ பிடித்து சென்றதற்கு மகிழ்ச்சி. ஆனால், ரயிலை பிடிக்க வேண்டிய குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் மனம் பதைபதைத்துதான் போயிருக்கும். அதன் பின் நல்ல இயற்கை வளம் மிகுந்த இடங்களை கண்டதற்கு மகிழ்ச்சி. அந்த மலை பிரதேச படங்களும் மிக அருமையாக இருந்தன. மலை சரிவுகளில் வீடு கட்டிக் கொண்டு மக்கள் எப்படித்தான் குடியிருக்கிறார்களோ.? இங்கு ஹொரநாடு செல்லும் போதும், இதே போன்ற காட்சிகளை நாங்கள் கண்டோம்.
உங்களின் குதிரையேற்றம் பயணம், சாகச விளையாட்டுகள், அனைத்தையும் கண்டேன். பயமின்றி சென்ற பயணத்தை எஞ்சாய் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. உடல் நிலை சரியில்லாத அந்த சகோதரிக்கு இருநாட்களில் சரியாகி விட்டதெனவும் சற்று குணமடைந்ததும் அவரை ஊருக்கு விமானத்தில் பயணிக்க செய்து விட்டதாகவும் சென்ற பதிவின் கருத்துக்கு பதிலாக தாங்கள் சொல்லியிருந்தீர்கள். அவருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாததால், மலை பாதையில் பயணிக்கும் போது, மேலும் பல தொந்தரவுகளைத் தந்துள்ளது. கடவுள் அருளால் குணமடைநந்தது மகிழ்ச்சி.
உயரமான அனுமன் சிலையை தரிசித்து கொண்டேன். அங்கிருக்கும் இடங்கள் எல்லாமே இயற்கையின் அழகோடு பிரகாசிக்கிறது. மேலும் கண்டு களிக்க தங்கள் பதிவோடு உடன் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
நீக்குஅந்த நட்பு அவ்வளவு தூரம் வந்துவிட்டு சிம்லா வராமல் எப்படி என்று மனோதைரியத்தில் வந்துவிட்டார். இறையருளும் இருந்தது. எப்படியோ சமாளித்தார் நாங்களும் சமாளித்தோம். பிரச்சனை இல்லாமால் எல்லாம் பார்த்து வர முடிந்தது.
படங்கள், காணொளிகளைத் தொகுத்து அடுத்த பதிவில் காணொளியாகவும் தருகிறேன்.
படங்களையும் பதிவையும் ரசித்ததற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்
துளசிதரன்