வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

ஸ்ரீ சூரிய நராயண சுவாமி கோயில் - பெங்களூரு


கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக இப்போது வரை எங்கள் வீட்டுச் சூழலில் இடங்களைப் பார்ப்பதற்கான பயணம் மேற்கொள்வது என்பது ரொம்பவும் கடினமான ஒன்றாக, யோசித்துச் செய்ய வேண்டியதாக உள்ளது.

தவிர்க்கமுடியாத காரணங்கள் என்றால் மட்டுமே இருவருமாக ஒரு நாள் பயணம் மட்டுமே அதுவும் பல முன்னேற்பாடுகளுடன் மேற்கொள்ள வேண்டிய சூழல். எனவே சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை மட்டுமேனும் பெங்களூருவுக்குள் சென்று வரலாம் என்று இடையில் செல்வதுண்டு. எனக்கு வெளியில் சுற்றிப் பார்ப்பது என்பது மிகவும் பிடிக்கும் அதுவும் பயணம் என்றால் துள்ளல்தான். இல்லை என்றால் கொஞ்சம் அயற்சி ஏற்படுகிறதுதான் எனக்கு.

அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று சென்ற கோயில் தான் பெங்களூரில், Domlur (டொம்லூர்? டோம்லூர்) டோம்லூரில் உள்ள சூரிய நாராயணர் கோயில். இந்தியாவில் உள்ள மிகச் சில சூரிய பகவான் கோயில்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கோயில் 1995 இல் ஸ்ரீ பட்டேல் கிருஷ்ணா ரெட்டி அவர்களால் கட்டப்பட்டு ஸ்ரீ சித்தகங்கா மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியால் திறந்து வைக்கப்பட்டது என்று தகவல்.

டோம்லூரில் உள்ள சூரிய நாராயணர் கோயில், கொஞ்சம் சோழர் காலத்துக் கலைவடிவ பாணியில், தமிழ்நாட்டுக் கோபுரங்களைப் போன்று கட்டப்பட்டிருக்கிறது. கவர்ச்சிக்கரமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

சரி இப்ப என்னோடு வாங்க, ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வருகிறேன். கோயிலுக்குள்ள போவோம்.

கோபுர வாயிலைக் கடந்ததுமே - இடப்பக்க படத்தில் உள்ளிருந்து எடுத்த படம். காணொளியில் முன்பக்கம் நன்றாகத்  தெரியும். நுழையும் போதே நடுவில் திறந்த வெளி. நேராகக் கொடிமரம் பலிபீடம். நுழைந்ததும் நம் வலப்புறம் - படத்தில் பார்க்கறப்ப இடப்புறம் நவக்கிரகசன்னதி. இடப்புறம் - படத்தில் நாம் பார்க்கும் போது வலப்புறம் ஆஞ்சநேயர் சன்னதி, அதன் பின் - இதுக்கப்புறம் சொல்லப்படும் தெய்வங்களின் படங்கள் இல்லை. கணவர் வேகமாகச் சென்று கொண்டே இருந்ததால் நான் ஓட வேண்டுமே! படம் எடுக்க முடியவில்லை - நாகராஜர் தன் பரிவாரங்களுடன், பஞ்சமுகி விநாயகர், ஆதி சேஷசாயி எல்லாருக்கும் நான் வந்திருக்கிறேன் என்று ஆஜர் வைத்து கும்பிட்டுவிட்டு அந்த இடத்திலிருந்தே வரிசை தொடங்கியதால் அதில் இணைந்து கொண்டோம். (மேலே கொடிமரம் இருக்கும் படத்தில் அப்பகுதி தெரியும் பாருங்க. காணொளியில் இப்பகுதி தெரியும்).

சூரியனுக்கான நாள் ஞாயிறு அன்று சென்றதாலோ என்னவோ நல்ல கூட்டம் இருந்தது. என்றாலும் தள்ளு முள்ளு இல்லை. வரிசையில் நிற்கும் இடம் – பிராகாரம் போன்று - தவிர மற்ற இடங்கள் திறந்த வெளி என்பதால் காற்றும், வெளிச்சமும் இருப்பதால் முட்டி மோதாமல் செல்லலாம். எனவே சூரியநாராயணர் தரிசனத்திற்கு 45 நிமிடங்கள் ஆனது. ஒவ்வொரு முறை நகரும் போதும் 20 பேர் நகர்ந்து செல்வது தெரிந்தது. இப்பகுதி தாண்டி உள்ளே சென்ற பின் தான் காரணம் தெரிந்தது. கீழே சொல்கிறேன்.

ராமர் சன்னதி
ராமர் சன்னதியின் மேல் உள்ள சிற்பங்கள் முன்புறம்

வரிசை நகரும் பகுதி மேலே தளம் மட்டும் இடப்புறம் சுவர், வலப்புறம் திறந்தவெளிப் பகுதி – கோயில் உள்ளே நுழைந்ததும் இருக்கும் பகுதிதான் – என்பதால் நல்ல வெளிச்சம் காற்றோட்டமாக இருந்தது, மெதுவாக நகர்ந்து சில படிகள் ஏறி இடப்புறம் நுழைந்ததும் இருப்பது ராமர் சன்னதி. ஏதோ குளிர்ப்பிரதேச மலைகளில் இருக்கும் வீடு போன்று கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்ட சன்னதியின் பின்புறம். (படத்தில்) முன்புறம் சூரியநாராயணர் சன்னதியை நோக்கி. சூரிய வம்சம் இல்லையா!!


இராமர் சன்னதியின் பின்புறத்தின் அருகில் இடப்புறம் திரும்பி வரிசையில் நிற்கும் பகுதியின் மேற்புறம் தான் இப்படியம். வரிசையில் நிற்கும் போது நம் இடப்புறம் பிராகாரம் பெரிய நீளமான திண்ணை மண்டபம் அதன் சுவரில் நிறைய சுவாமி ஓவியங்கள். எடுக்கலாம் என்று பார்த்தால், வரிசையில் நிற்க சிரமப்பட்ட மக்கள் விளிம்பில் உட்கார்ந்திருந்தார்கள். இப்படத்தில் அந்த பிராகார மண்டபத்தின் மேல்பகுதி கொஞ்சம் தெரியும்.

 

நடுவில் சூரிய நாராயணர் ஏழு குதிரைகளுடன்.

இந்தப் படங்களில் மேலே உள்ளதில் இடப்புறம் ஒரு மண்டபம் போன்று தெரிகிறது இல்லையா? இது நல்ல பெரிது. இது தரையோடு சேர்ந்து இருக்கும் ஒன்று. சூரிய நாராயணர் சன்னதி இந்த மண்டபத்தின் முன் என்பதால் இந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம் நின்றாலே நேரே சுவாமியை தரிசனம் செய்யலாம். சுவாமியின் கருவறை உயர்வான இடத்தில் இருப்பதால் உள்ளே மக்கள் இருந்தாலும் இங்கிருந்து தரிசனம் செய்யலாம். வரிசையில் நிற்காமலேயே. கீழே உள்ள படத்தில் அந்த மண்டபத்தின் மேலே இருக்கும் சிற்பங்கள். நடுவில் சூரிய நாராயணர் ஏழு குதிரைகளுடன்.

இந்த இடத்தில் சுவாமி சன்னதி பக்கவாட்டில் தெரிந்ததால் அப்போதுதான் தெரிந்தது சன்னதி முன் நின்றிருந்த காவலாளர் அங்கு ஒரு கயிறு கட்டிவைத்து ஒவ்வொரு 20-25 பேராக உள்ளே செல்ல அனுமதித்துக் கொண்டிருந்தார். அப்படியாக வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. 

அப்படி ஒரு வழியாக உள்ளே விட்ட போது எங்களுக்கு முன்னால் நின்றவர்கள் எங்களை முந்திக் கொண்டு செல்ல!!! அவர்கள் வரை விட்டு எங்களை நிறுத்தப் பார்த்தார் அந்தக் காவலாளர்! அடுத்த batch தான் போல என்று நினைத்திருக்க கணவரை உள்ளே போகச் சொன்னார், ஆ நான் அடுத்தபடியா என்று அவர்  முகத்தைப் பார்த்ததும் நல்லகாலம் என்னை விட்டுவிட்டார்.

ஒவ்வொரு 20-25 பேர் உள்ளே சென்றதும் சிலர் அர்ச்சனை செய்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான அர்ச்சனை தீபாராதனை, தீர்த்தம், துளசி, பூ பிரசாதம், சடாரி எல்லாம் ஆனதும் இந்தச் சன்னதியைச் சுற்றி வரும் பகுதியில் பக்கவாட்டில் இருக்கும் வாயில் வழியாக வெளியே வர வேண்டியதுதான். 

உள்ளே எல்லாராலும் இறைவனை நன்றாகப் பார்க்க முடிகிறது உயரமான பீடத்தில் நின்ற நிலையில் இருக்கிறார் (அப்படித்தான் என் கண்ணில் தெரிந்தார்) என்பதால். தகதகவென வைரம் வைடூரியம் தங்கம் என்று கண் கூசும் அளவுக்குச் ஜொலிக்கிறார்.

சூரிய நாராயணரின் சிலை – நின்ற நிலையில் - பத்ரிநாத்திலிருந்து வாங்கப்பட்டது என்றும் மற்றும் திருவாச்சியுடன்-(பிரபாவலி/ளி?) 3.25 அடி உயரம் கொண்டதாம். இறைவனின் கீழ், காஷ்யபர் மற்றும் அதிதியைப் பார்க்கலாம். உள்ளே 10-15 நிமிடங்கள் வரை ஆகிறது அர்ச்சனை செய்பவர்கள் நிறையப்பேர் இருந்தால். அப்படி 15 நிமிடங்கள் ஆனது.

முன் மண்டபத்தில் (மேலே சொல்லியிருக்கிறேனே சுவாமி முன் என்று) அந்த மண்டபத்தில் நின்று இறைவனை தரிசிக்கலாம். வரிசையில் நிற்காமலேயே! இந்த இரு படங்களும் இணையத்திலிருந்து 

வெளியில் வந்ததும் முன் மண்டபத்தில் (மேலே சொல்லியிருக்கிறேனே சுவாமி முன் என்று) அந்த மண்டபத்தில் நின்று சிலர் வணங்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சன்னதியைச் சுற்றி வந்த போது தெரிந்தது சூரியநாராயணர், சூரியனின் ரதத்தின் மீது இருப்பது போன்று இருப்பதால்தான் உள்ளே இறைவன் பெரிய பீடத்தில் இருக்கிறார் என்று. 

சூரியநாராயணர் கருவறை சன்னதியின் வெளிப்புறம் தேர் போன்ற வடிவமைப்பு அழகிய சிற்பங்கள்



சன்னதியின் வெளிப்புறம் நான்கு புறமும் முனைகளில் சக்கரத்துடன் தேர் போன்ற வடிவமைப்பில் தேரில் சிற்பங்கள் இருப்பது போன்று மிக அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இடையில் நடுவில் இறைவன்.முனிவர்கள் திருஉருவச் சிலைகள். சன்னதியைச் சுற்றி வந்த போது அந்த பிராகார மண்டபம் போன்று சுற்றி இருந்ததே அதில் சன்னதியின் இடப்புறத்தில் பிரசாதம் சர்க்கரைப் பொங்கல்! அங்கு கை கழுவும் வசதி இருக்கிறது. அமர்ந்து சாப்பிடலாம். குடிநீரும் வைத்திருக்கிறார்கள்.

பழைய படங்களில் அதாவது 10 வருடங்களுக்கு முன்பு இத்தேர்ப்பகுதி கல்லின் நிறத்திலேயே இருந்திருக்கிறது. இப்போதுதான் இப்படிக் கருப்பு வர்ணம் அடித்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியாக கோயிலை விட்டு வெளியில் வந்தோம்.

வெளியே வந்த போது உள்ளிருந்து ஒரு க்ளிக்!

ரதசப்தமி நாள் சூர்யநாராயண ஸ்வாமிக்கு ஆண்டு விழா நடக்கும். திருவிழாக் காலங்களில் 32 அடி நீளமான தேரில் சூரிய பகவான் சிலையை பக்தர்கள் இழுத்துச் செல்லும் திருவிழாவும் நடப்பதாகத் தெரிகிறது. 

ஆனால் எப்படி எங்கு இழுத்துச் செல்வார்கள் என்று யோசித்தேன். ஏனென்றால் கோயிலைச் சுற்றிலும் அடுக்குமாடிக் கட்டிடங்கள், குடியிருப்புகள். கோயில் இருப்பது குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் மற்றும் செல்லும் பாதை சிறு சிறு தெருக்கள், கிட்டத்தட்ட திருவல்லிக்கேணி பெருமாள் கோயிலுக்குச் செல்வது போன்றுதான்.

முதன்முறையாக வருபவர்களுக்கு கோவிலை கண்டுபிடிப்பது கடினம். ஓரிரு இடங்களில் மட்டுமே வழிகாட்டிப் பலகைகள் இருந்தன. செல்லும் பாதையில் ஒரிரு இடத்தில் சுவரில் எழுதி அம்புக்குறியால் கோடும் போட்டிருந்தாங்க.

கோயில் காற்றோட்டமாகவும், சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. கோயில் முன் கடைகள், வியாபாரிகள், கோயிலுக்கான பூக்கடைகள் என்று எதுவும் இல்லை. கோயிலின் முன் வண்டிகள் நிறுத்த இடம் உள்ளது. கோயிலை ஒட்டியே அதே நிர்வாகத்தின் திருமணமண்டபம் இருக்கிறது அரண்மனை போன்று!

கோயில் பற்றி டக்கென்று பலருக்கும் தெரிவதில்லை குறிப்பாக ஆட்டோ, Cab காரர்களுக்கு. எனவே, கூகுள் மேப் போட்டுத் தெரிந்து கொண்டு செல்ல முடியும். 

நாங்கள் எங்கள் பகுதியிலிருந்து பேருந்தில் சென்று இறங்கி, 15 நிமிடம் நடையில் கோயிலை அடைந்தோம். கோயில் எங்கு இருக்கிறது என்று தெரிவது சிரமம் எனவே கூகுள் மேப் போட்டுக் கொண்டோ அல்லது அங்கிருக்கும் கடைகளில் விசாரித்துக் கொண்டோ செல்லலாம்.

சூரியநாராயணர் கோயில் முகவரி

கிருஷ்ண ரெட்டி லே அவுட், அமர்ஜ்யோதி லே அவுட், டொம்லூர், பெங்களூரு - 560071.

Surya Narayan Temple Rd

Krishna Reddy Layout, Amarjyoti Layout, Domlur, Bengaluru, Karnataka 560071

(கோயிலில் புகைப்படம் எடுக்க அனுமதி இருந்தது. கருவறையிலும் உண்டா என்று தெரியவில்லை ஆனால் நான் எடுக்கவில்லை.

(துளசியின் பதிவான துபாய் நாட்கள் 4 வது பகுதி அடுத்து வரும்.)


https://youtu.be/bgvVe9QxYSw
கோயிலின் காணொளி - முடிஞ்சா பாருங்க. பார்ப்பவர்களில் யாரேனும் ஏதேனும் கண்டுபிடிக்கிறீங்களா என்று அறிய ஆவல்


------கீதா


 

18 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் தெளிவு.  இடமும் அழகு.  புதிதாக வர்ணம் பூசப்பட்டு பளபளக்கிறது கட்டிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம் எனக்கும் ஏனோ கோயில் என்று சொல்ல முடியவில்லை. எவ்வளவோ பழைய கோயில்கள் இருக்கின்றன அவற்றைப் பராமரிக்கலாம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. ஏனோ கட்டிடம் என்று சொல்ல முடிகிறதே தவிர கோவில் என்று ஏன் சொல்ல முடியவில்லை? ஏதோ ஒன்று மிஸ்ஸிங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஹைஃபைவ். கோயில் அம்சம்? மிஸ்ஸிங்க். நான் சும்மா புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்துக் கொண்டேன். ஆனால் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் இறைவன் அதனால் எங்கிருந்தாலும் அந்த உணர்வு வர வேண்டும் என்பாங்க வீட்டில். நான் அதுக்கு எதிர்பக்கம். மனதிலும் இருக்கிறார் என்பேன்!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. காணொளியில் கண்டு பிடிக்கிறீர்களா பார்க்க ஆவல் என்றதும் விழுந்து விழுந்து (அடிபடாமல்தான்!) பார்த்தேன்.   ஊ..ஹூம்..  காணொளி அற்புதமாக இருந்தது.  ஆனால் நீங்கள் சொல்வது என்ன என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா....ஏமாற்றிவிட்டேனா....ஒன்றுமில்லை ஸ்ரீராம், அதன் இசை! சும்மா Loops கோர்த்து செய்து பார்த்தேன் இலவச தளத்தில். எனக்கு ரொம்ப ஆசை உண்டு நானே நோட்ஸ் எழுதி இசை அமைக்க வேண்டும் என்று. அதில் loops இருந்தாலும், piano/keyboard இருக்கிறது அதில் நாம் ஸ்வரம் போட்டு அமைக்கலாம்...முயற்சி செய்கிறேன். நன்றாக வந்தால் பகிர்கிறேன். நேரம் தான் ரொம்ப எடுக்கிறது. ஆனால் மனம் relax ஆகிறது. எனவே நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்து பார்க்கலாமே என்று.

      காணொளி அற்புதமாக //

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  4. சூரிய நாராயணன் கோயில் அழகாக இருக்கிறது. படங்கள் செல் போனில் எடுத்து போல் உள்ளன. ஆகையால் சரியன கோணங்களில் எடுக்கமுடியவில்லை என்று தோன்றுகிறது. OK எனலாம்.

    பதிலளிநீக்கு
  5. மொபைலில்தான் எடுத்தேன் ஜெ கே அண்ணா. கோணம்- மொபைலினால் அல்ல, அண்ணா. வரிசையில் நின்று கொண்டே எடுத்தவை. எனவே அந்த இடத்தில் என்ன கோணம் கிட்டியதோ அதை எடுத்தேன். அது கூட்டம், மக்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். கட்டிடங்கள், கோயில்கள் எடுக்கும் போது மக்கள் இருந்தால் எடுப்பதில் எனக்கு சிரமம் உண்டு. எனவே அப்படி வேண்டாத சிலவற்றை frame க்குள் வராமல் எடுக்கச் சிரமமாக இருந்தது. free shoot பண்ண முடியவில்லை.

    மிக்க நன்றி ஜெ கே அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. டொம்லூர் சூரிய நாராயணர் கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கோவிலின் விபரங்கள் எல்லாம் விவரணையாக சொல்லியுள்ளீர்கள். கோபுர படங்கள், ரதத்தின் படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது. ஸ்ரீ சூரியநாராயண மூர்த்தியை தரிசித்து கொண்டேன்.

    வரும் பதினாறாம் தேதி ரதசப்தமிக்கு ஏற்ற பதிவாக தந்துள்ளீர்கள். இந்தக் கோவிலுக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் சென்றுள்ளோம். அப்போது கோபுரங்கள் இப்படி பளிச்சென்று இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை. இப்போதுதான் கலர் தந்து புதுமையாக்கப்பட்டுள்ளதா.? எங்கள் குழந்தைகள் கைப்பேசியில் எடுத்த போட்டோக்களை பார்க்கலாமென்றால், எல்லாம் எப்படி மாயமாகி உள்ளதோ எனத் தெரியவில்லை. என்னிடமும் புகைப்படம் எடுக்கும்படியான கைப்பேசி வசதி அப்போது இல்லையென நினைக்கிறேன்.

    காணொளியும் கண்டேன். இன்னொரு முறை உங்கள் பதிவின் வாயிலாக இப்போது தரிசனம் பெற்றுக் கொண்டேன். இனி ஒருமுறை நேரடியாகவும் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் 17 ரத சப்தமியா! நீங்களும் இக்கோயில் சென்று வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி கமலாக்கா. ஆமாம் அப்போது வர்ணம் அடிக்கவில்லை பழைய படங்களைப் பார்த்தால் தெரிகிறது. இது சமீபத்தில் அடித்திருக்காங்க.

      அப்போது நீங்கள் சொல்லியிருக்கும் வருட்ங்களில் என்னிடமும் கைப்பேசி இல்லை அதுவும் படம் எடுக்கும் வகையில் அப்போது கிடையாது.

      காணொளியு கண்டதற்கு மிக்க நன்றி கமலாக்கா. உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  7. ஊருக்கு உள்ளேயே அமைந்த கோயில் போலும். நான் சென்றதில்லை. முயன்றிடுகிறேன். படங்களும் தகவல்களும் நன்று.

    பிடித்தவற்றைச் செய்கையில் மனம் ரிலாக்ஸ் ஆவது நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒன்று :)!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ராமலக்ஷ்மி. ஊருக்குள்ளேயேதான் அமைந்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள்.

      ஆமாம் பிடித்தவற்றைச் செய்கையில் மனம் ரிலாக்ஸ் ஆகிறது. உண்மை ராமலக்ஷ்மி. எனக்குப் புகைப்படம் எடுப்பது, பறவைகள் விலங்குகள் இயற்கை என்று பல இடங்களைப் பார்ப்பது, எழுதுவது, வாசிப்பது, இசை புதிதாகக் கற்றுக் கொள்வது, வரைதல், தையல் என்று பல ஆர்வங்கள்.

      மிக்க நன்றி ராமலக்ஷ்மி

      கீதா

      நீக்கு
  8. சூரியநாராயணர் கோவில் மிக நன்றாக இருக்கிறது.
    படங்கள் எல்லாம் துல்லியமாக தெளிவாக இருக்கிறது.
    1995 ல் கோவில் கட்டப்பட்டது என்றாலும் அல்லது புதுபிக்க பட்டு புதிதாக காட்சி அளிக்கிறது. படங்கள், விவரங்கள் என்று எல்லாம் அருமை.
    காணொலி அருமை பின்னனி இசை அருமை.

    //loops இருந்தாலும், piano/keyboard இருக்கிறது அதில் நாம் ஸ்வரம் போட்டு அமைக்கலாம்...முயற்சி செய்கிறேன். நன்றாக வந்தால் பகிர்கிறேன். நேரம் தான் ரொம்ப எடுக்கிறது. ஆனால் மனம் relax ஆகிறது. எனவே நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்து பார்க்கலாமே என்று.//

    புதிய முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள்.
    இரண்டு நாள் உறவினர் வீட்டுதிருமணம், வரவேற்பு என்று போய் விட்டது, வீட்டுக்கு விருந்தினர் வருகை. அதனால் வலை பக்கம் வரமுடியவில்லை கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா கோமதிக்கா, நன்றாகப் பராமரிக்கறாங்க. காணொலி பின்னணி இசை நன்றாக இருக்கா அக்கா? காணொலியையும் பின்னணி இசையையும் ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா.

      //புதிய முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள்.//

      நன்றி கோமதிக்கா. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

      பரவாயில்லை கோமதிக்கா.. உறவினர் திருமணம் எல்லாம் முக்கியம் இல்லையா..பதிவுகள் இங்கதானே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  9. தேர் சக்கரம் மேல் கலை நுட்பத்துடன் சிற்பங்கள் உள்ளது. மண்டபத்தின் மேல் பகுதியில் எடுக்கப்பட்ட படங்களில் சிங்கமுகம் என கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கவர்ச்சியாகக் கட்டியிருக்காங்க காற்றோட்டமாக, வெளிச்சத்துடன் இருக்கிறதுதான்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் நன்று. காணொளி இப்போது பார்க்க இயலவில்லை. தகவல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் சொல்வது சரிதான். புதிதாக கட்டப்படும் கோவில்களை பார்க்கும்போது பக்தி உணர்வு எழமறுக்கிறது. இதுவும் ஒரு கான்கிரீட் கட்டிடம் என்ற எண்ணம் தான் உண்டாகிறது. என்றாலும் உங்கள் கட்டுரை வழக்கம் போல் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு