வியாழன், 8 செப்டம்பர், 2022

ஓணப்பண்டிகை - 2

 

எங்கள் கல்லூரியில் நடந்த ஓணப் பண்டிகை கொண்டாட்டங்களைப் பற்றி முடிந்த அளவு சொல்கிறேன் என்று சொல்லி முடித்திருந்தேன். இதோ இப்போது அந்த நிகழ்வுகள் பற்றி.

அத்தப் பூக்களம் பற்றியும் அதற்கு பூக்கள் கிலோ கணக்கில் வாங்க வேண்டிவரும் என்றும் சொல்லியிருந்தேன்.  வெளி மாநிலங்களான கர்நாடகாவிலுள்ள மைசூர், மங்கலாபுரம், தமிழ்நாட்டில் தெற்கே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை, இப்பக்கம் உள்ள  மதுரை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்துதான் பூக்கள், காய்கறிகள் உட்பட கேரளத்திற்கு வருகின்றன. எனவே பூக்களை முதல் நாளே வாங்கி வந்து பிரித்து வைத்துக் கொண்டு தயாராக இருக்க வேண்டும்.


அதன் பின் பூக்களத்தை நிரப்ப வேண்டிய வடிவத்தை வரைந்து, எந்த இடத்தில் என்ன வண்ணப் பூ என்பதை எல்லாம் தீர்மானித்தனர். அப்படிச் செய்து, எங்கள் கல்லூரியில் காலை 9 மணிக்கு முன்பே பிள்ளைகள், ஆசிரியர்கள் எல்லோரும் வந்து வடிவம் வரைந்து அதில் ஒரு குழு பூக்களைப் பிரிக்க, மற்றவர்கள் வடிவத்தை நிரப்ப அந்த வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தன.

எல்லோருமே குறிப்பாகப் பெண்கள் ஓணத்திற்கான பாரம்பரிய உடையான செட் சாரி என்று சொல்லப்படும்கிட்டத்தட்ட நம் தமிழ்நாட்டு தாவணி போன்றதுதான் ஆனால் இது சந்தன நிறத்தில் மட்டுமே இருக்கும், உடையை அணிந்து வந்திருந்தனர்.  பூக்களம் நிரம்பும் நேரத்தில் மற்றொரு புறம் திருவாதிரைக் களியில் பங்கெடுக்கும் பெண்கள் அனைவரும்கல்லூரியில் பயிலும் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்தனர்அதற்குத் தலையில் தட்டம் வைப்பது முதல் எல்லாம் செய்துகொண்டு தயாராகிக் கொண்டிருந்தனர்.

அத்தப்பூக்களம் நிறைவுற்று அதை எல்லோரும் பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். பிள்ளைகளும் அதன் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின் திருவாதிரை களி.  விளக்கை நடுவே வைத்து அதைச் சுற்றி பெண் பிள்ளைகள் நடனமாடினர். சகோதரி கோமதி அரசு அவர்கள் இது கிட்டத்தட்ட கும்மி போன்ற ஒன்று என்று தன் அனுபவங்களையும் பகிர்ந்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.  ஆமாம் கும்மி போன்ற நிகழ்வுதான். இதை நான் காணொளியிலும் சொல்லியிருக்கிறேன்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் முடிந்தவுடன் ஓணக் களிகள் களிக்கும் சமயம். ஆனால் இடையில் மழைத்தூரல் தொடங்கியது. அது நின்ற பிறகுதான் களிகள் எனவே பசிக்கும் வயிற்றிற்கு உணவாக அட(டை)ப்பிரதமன் பாயாசம் விநியோகம் நடைபெற்றது. பாயாசங்களில் பல வகைகள் இருந்தாலும், கேரளத்தின் புகழ்பெற்ற அட(டை)ப்பிரதமன் பாயாசம் தான் செய்தோம்.

கயிறு இழுத்தல்

மழைச்சாரல் நின்றதும் அடுத்து ஓணக்களிக்கள் தொடங்கின.  ஸ்பூனில் எலுமிச்சை வைத்து வாயில் வைத்துக் கொண்டு ஓடுதல்,  வடம் வலி என்று சொல்லக் கூடிய கயிறு பிடித்து இழுத்தல் போன்ற விளையாட்டுக்களைப் பிள்ளைகள் போட்டி மனப்பான்மை இருந்தாலும் மிகவும் ஒற்றுமையுடன் விளையாடி வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதை எல்லாம் கண்ட போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றொன்று திருச்சூர் ஓணக் கொண்டாட்டத்தில் புலியாட்டம் என்று ஒன்று நடப்பதுண்டு. வயிற்றில் புலியின் முகம் வரைந்து கொண்டு உடல் முழுவதும் புலி உடலில் இருப்பது போல் வரிகள் போட்டுக் கொண்டு ஆடுவது. இதுவும் ஓணக் கொண்டாட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சிங்காரி மேளம்

ஒவ்வொன்றும் நிறைய நேரம் எடுக்கத்தான் செய்தது. கடைசியாக்ச் சிங்காரி மேளம். சிங்காரி மேளம் கேரளாவில் புகழ்பெற்ற ஒரு கலை. இந்த சிங்காரி மேளத்தை 26 பேர் கொண்ட குழுவினர் இணைந்து வாசிப்பார்கள்.  திருச்சூர்பூரத்தில் மிகவும் பிராபல்யம். பார்ப்போரையும் கேட்போரையும் பரவசப்படுத்தும் மேளம். இப்போது தமிழ்நாட்டிலும் வாசிக்கப்படுகிறது. இந்த மேளம் எப்படி கல்லூரிப் பிள்ளைகளின் சக்தி முழுவதையும் வெளிக்கொணர்ந்து ஆட வைக்கிறது என்பதை காணொளியில் காணலாம்.

அப்படியாகக், கோவிட் காரணம் இரு வருடமாக இல்லாத ஓண ஆகோஷம் – ஓணக் கொண்டாட்டம் இந்த வருடம் மிகவும் உற்சாகத்தோடு எங்கள் கல்லூரியில் கொண்டாடப்பட்டு நல்லபடியாக முடிவடைந்தது. பிள்ளைகள் எல்லோரும் இது போல் எந்தவித சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் காலம் காலமாய் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டு, இனி 10 நாட்கள் ஓண விடுமுறை என்பதால் நாங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொண்டு விடை பெற்றோம்.  

எல்லோருக்கும் ஓணாஷம்சகள் – ஓணப் பண்டிகை வாழ்த்துக்கள்!

ஓண விடுமுறையில் மருத்துவக் கல்லூரிகளின் ஃபெஸ்ட் காசரகோட்டில் நடந்ததால், நடந்த நிகழ்வில் போட்டிகளில் மகளும் பங்கெடுத்ததால் காசரகோடு வரை நாங்கள் மகளோடு சென்று வந்தோம்.  நிகழ்வுகளுக்கு இடையே ஓர் அழகான இடத்திற்கும் சென்று வந்தோம். நிகழ்வுகள் பற்றியும், சென்ற இடம் பற்றியும் பதிவுகள் வரும்.

(தீவிர சைவர்கள், சீர்காழி சட்டநாதர் பற்றி சொல்வது - மஹாபலியை பாதாளத்திற்குத் தள்ளிவிட்டு செருக்குற்ற விஷ்ணுவின் தோலை உரித்து சட்டையாக்கினாராம், அதனால் அப்பெயராம். அந்த சட்டநாதர் சீர்காழியில் மேல்கோபுரத்தில் வீற்றிருக்கிறாராம். இப்படி சைவ வைணவ வதந்திகள் இருந்தாலும் சில சைவர்கள் சொல்லும் ஒரு மஹாபலியைப் பற்றிய கதையை யோசிக்கையில் அதில் உண்மை இருக்கலாம் என்ற ஆய்வில் எழுதி இயக்கிய ஒரு குறும்படம்தான் மஹாமுடி, த கிரேட். அது ஒரு நாடக உருவில் எழுதப்பட்டதால், அதன் காட்சி அமைப்பு நடிப்பை விட அதில் உரையாடல்களுக்குத்தான் முக்கியத்துவம். அது 3 பகுதிகளாக இருக்கிறது.  2010 ல் இப்படி மூன்று பகுதிகளாகத்தான் பதிவேற்ற முடிந்தது. அதன் மூன்று பகுதிகளின் சுட்டிகளும் இதோ - 

https://youtu.be/P4y97v37HnQ (பகுதி 1)  

https://youtu.be/qPynEeyLdAg (பகுதி 2)

https://youtu.be/OW5wVzCux_o (பகுதி 3) நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம். )

ஓண நிகழ்வுகளின் காணொளி

https://youtu.be/6AVZQs5xLcA


-----துளசிதரன்

31 கருத்துகள்:

  1. குறும்படம் முன்னரே பார்த்திருக்கிறேனா, நினைவில்லை!  மறுபடி ஒருமுறை பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது நேரம் கிடைக்கிறதோ பாருங்கள் ஸ்ரீராம்ஜி. நாடகம் போன்ற ஒன்றுதான் குறும்படமாக.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  2. ஓணக் களியாட்டங்கள் மிக விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். படிக்கும்போது சுவையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.  இதுபோன்ற விழாக்களை முழுமையாக கொண்டாடுவது என்பது வாழ்நாளில் ஓரிருமுறை மட்டுமே வாய்க்கும் என்று தோன்றுகிறது.  போகப்போக ஸம்ப்ரதாயங்களாகி விடுகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்தவர்கள் மட்டும்தான், பாரம்பரிய வேஷ்டி, முண்டு (வெள்ளை), புடவையில் இந்த நாளில் பெருமிதத்தோடு வெளியிலும் வருவார்கள். பஹ்ரைன் ஹோட்டல்களில் ஓணம் சdhத்யா நிச்சயம் உண்டு. 20-40 ஐட்டங்கள் என்று விளம்பரப்படுத்துவார்கள், சாமானியர்களும் சாப்பிடும் விலையில். பாரம்பர்யத்தையும், மொழியையும், கலாச்சாரத்தையும் தொடர்ந்து பேணுவதில் கேரளத்தவர்களுக்கு நிகர் இல்லை என்பது என் அபிப்ராயம்.

      நீக்கு
    2. உண்மையாகவே உற்சாகமாக இருக்கும். கேரளம் முழுவதுமே ஆகோஷங்கள் இருக்கும் என்பதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரசியமாக இருக்கும். இங்கு இதுவரை ஒணக் கொண்டாட்டங்கள் பாரம்பரியம் அவ்வளவாக மாறாமல் கொண்டாடப்படுகிறது ஸ்ரீராம்ஜி. வெளிநாடுகளில் இருக்கும் கேரளத்தவரும் கூட கொண்டாடுவதாகத் தெரிகிறது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே. கல்ஃப் பிரதேசங்களில் வாழ்பவர்களன்றி மேலை நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் உட்பட 10 நாட்களில் இடையில் வரும் ஒரு ஞாயிறன்று கேரளத்தவர் ஒன்று சேர்ந்து கொண்டாடுகிறார்கள் என்றே அறிகிறேன்.

      கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  3. எல்லோரும் ஒருங்கிணைந்து அதிலும் கல்லூரி பள்ளிகளில், எந்த ஒரு விழாவைக் கொண்டாடினாலும், அதில் அழகும் மகிழ்ச்சியும் ஒருங்கிணைக்கும் உணர்வும் அதிகம். பதிவு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது.

    திருவாதிரைக் களி படம் காணோம். அடப்பிரதமன் - ஆஹா எவ்வளவு நாளாயிற்று சாப்பிட்டு. பஹ்ரைனில் எல்லாக் கடைகளிலும் அடைப்பிரதமனுக்கு உள்ள அடை பாக்கெட் கிடைக்கும் (300 ஃபில்ஸ்). வீட்டில் செய்வோம். இந்த ஊருக்கு வந்த பிறகு இன்னும் வாங்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நெல்லைத் தமிழன். எல்லோரும் எந்த ஒரு வித்தியாசமும் பாராமல் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.

      திருவாதிரைக்களி படம் இருக்கிறதே. மேலிருந்து 5 வது படம்.

      இப்போது பெரும்பாலான சூப்பர்மார்க்கெட்டுகளில் அடை பாக்கெட்டுகள் கிடைக்கின்றனதான். அரிசி அடை, மைதா அடை - பாலடைப் பிரதமனுக்கும், அடைப்பிரதமனுக்கும் சில கடைகளில் ரெடிமேடாகவே கூடக் கிடைப்பதாகத் தெரிகிறது.

      உங்கள் இனிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      துளசிதரன்

      நீக்கு
  4. பதிவு படிக்கும் போதே மகிழ்ச்சி.. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்..

    ஓணத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு சார்,

      கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. உங்களுக்கு இனிய ஓணத்திருநாள் வாழ்த்துகள்

      துளசிதரன்

      நீக்கு
  5. பதிவு படிக்கும் போதே மகிழ்ச்சி.. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்..

    ஓணத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி துரைசெல்வராஜு சார். உங்களுக்கும் இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்!

      துளசிதரன்

      நீக்கு
  6. ஓணப்பண்டிகை வாழ்த்துக்கள்... "அட(டை)ப்பிரதமன்" பாயாசம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்... எங்கள் ஊரில் இதனை "அடை பாயாசம்" என்று கூறுகிறார்கள்... காணொளி கண்டேன்... அதில் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள்... நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் ஓணப்பண்டிகை வாழ்த்துகள். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பர் நாஞ்சில் சிவா. கன்னியாகுமரி மாவட்டத்தில் நானும் இரு வருடங்கள் இருந்திருக்கிறேன் அங்குதான் முதுகலை படித்தேன். அடப்பிரதமன் அடைப்பிரதமன் என்பது நீங்கள் சொல்லியிருக்கும் அதே அடை பாயாசம்தான்.

      காணொளி கண்டதற்கும் மிக்க நன்றி.

      துளசிதரன்

      நீக்கு
  7. பதில்கள்
    1. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன். உங்களுக்கும் இனிய ஓணப்பண்டிகை வாழ்த்துகள்.

      துளசிதரன்

      நீக்கு
  8. மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!
    துபாயில் பரவலாக ஓணக்கொண்டாட்டங்கள் உண்டு. பெரிய பெரிய மால்களில் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பாலடைப்பிரதமனுக்கான அடைத்துண்டுகள் அடங்கிய பாக்கெட்டுகள், சர்க்கரை வரட்டி, நேந்திரம் சிப்ஸ், வெல்லம், வாழை இலை, பழங்கள், துணிமணிகள் என்று தூள் பறக்கும். எங்கள் உணவகத்திலும் இன்று ஓணம் சாப்பாடு உண்டு. மொத்தம் 25 ஐட்டங்கள். கூட்டம் மிக அதிகமாய் இன்று உணவகத்தில்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அங்கும் ஓணக் கொண்டாட்டங்கள் நன்றாக இருக்கும் என்று அங்கிருக்கும் உறவினர்கள் நட்புகள் சொல்லியிருக்கிறார்கள்.

      உங்களுக்கு உணவகத்திலும் ஓணம் சாப்பாடு உண்டு என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரி.

      துளசிதரன்

      நீக்கு
  9. ஓணம் வாழ்த்துகள் சிறப்பாக சொன்னீர்கள் காணொளி கண்டேன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும், வாழ்த்திற்கும் காணொளி கண்டதற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  10. காணொளி அருமை...
    ஓணப் பண்டிகை வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கும் வாழ்த்திற்கும், காணொளி கண்டதற்கும் மிக்க நன்றி டிடி

      உங்களுக்கும் ஓணப் பண்டிகை வாழ்த்துகள்

      துளசிதரன்

      நீக்கு
  11. இந்த மேளம் கண்டிப்பாக ஆட வைத்து விடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், உண்மையாகவே ஆடாதவர்களையும் கூட ஆட வைத்துவிடும்.

      மிக்க நன்றி டிடி, ரசித்ததற்கு

      துளசிதரன்

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. உங்களுக்கு இனிதான ஓணப் பண்டிகை நல்வாழ்த்துக்கள். கல்லூரியில் நடந்த ஓணப்பண்டிகை விவரங்களை கோர்வையான அழகுடன் சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் தாங்கள் சொல்லி விதத்தை ரசித்தேன். படங்கள் பதிவுக்கு மெருகூட்டி அழகு பார்க்கின்றன. இந்தப்பதிவுக்காக நீங்களும், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் பதிவையும், படங்களையும் தொகுக்கும் பணியில் பொறுமையுடன் செயல்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். உழைப்பு அருமையாக உள்ளது.

    காணொளி கண்டேன். அதில் மாணவ மாணவிகளின் செயல் முறைகள் சிறப்பாக உள்ளன.

    தங்கள் மகளோடு அவர் படிக்கும் கல்லூரிக்கும் சென்று அங்கும் நிகழ்வுகளை கண்டு வந்ததற்குக் வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் போது தாங்கள் தந்த சுட்டியில் சென்று குறும்படம் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். உங்களுக்கும் இனிய ஓணப்பண்டிகை வாழ்த்துகள்.

      பதிவை ரசித்ததற்கும், காணொளியை ரசித்ததற்கும் மாணவ மாணவிகளைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி

      நேரம் கிடைக்கும் போது சுட்டியைப் பாருங்கள் சகோதரி

      மிக்க நன்றி விரிவான கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    காணொளி யில் பூக்களின் சிறப்பான அலங்காரமும், கண்ணன் வெண்ணெய் உண்ணும் அலங்கார பூக்களின் படமும் அருமையாக உள்ளது. கயிறு இழுக்கும் போட்டி மற்றைய விளையாட்டுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. தீபக்கம்பத்தை ஏற்றி வைத்து சுற்றி கும்மி அடித்து பாட்டு பாடி மகிழ்வது எங்கள் வீடுகளிலும் உண்டு. வீட்டில் பெண் பெரியவளானதும், நடக்கும் சடங்கு நிகழ்விலும், பெண் பிள்ளைக்கு வளைகாப்பு, சீமந்தம் நடத்தும் நிகழ்விலும், இதைச் செய்வோம். இப்போதைய கால மாறுதலில் சிலவிடங்களில் இது இல்லாமல் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை என் வாழ்வில் இந்த நிகழ்வுகளை எங்கள் அம்மா செய்ய தவறியதில்லை. என் மகளுக்கும் செய்தேன். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியைக் கண்டு ரசித்ததற்கும் உங்கள் வீடுகளில் நிகழும் நிகழ்வுகள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்

      துளசிதரன்

      நீக்கு
    2. திருவாதிரை களி. விளக்கை நடுவே வைத்து அதைச் சுற்றி பெண் பிள்ளைகள் நடனமாடினர்.//

      இது போல வட்டமாக தான் ஆடினோம். பழைய நினைவுகள் வந்து போனது.
      எங்கள் பாட்டு டீச்சர் கேரளத்தை சேர்ந்தவர். அவர்தான் எங்களுக்கு கேரளத்து கொண்டை போட்டு அதை சுற்றி பூக்கள் வைத்து ஆடைகளையும் அதே போல கட்டி விட்டு ஆட வைத்தார். அவர் பேர் கல்யாணி.
      காணொளி அருமை. மலர் கோலங்கள் அருமை.
      அடப்பிரதமன் பாயாசம் முக்கிய பண்டிகைகளுக்கு கண்டிப்பாய் உண்டு.
      பதிவு அருமை.

      நீக்கு
  14. ஆஹா! அமர்க்களமான ஓணப்பண்டிகைக் கொண்டாட்டங்கள். எல்லாமே புதிய விஷயங்கள். எங்கள் பள்ளி நாட்களில் ஒவ்வொரு வகுப்பும் அத்தப்பூக்கோலம் எனப் பூக்களால் கோலம் மட்டும் வரைவோம். நன்றாக இருப்பதற்கு அந்த வகுப்பிற்குப் பரிசுகள் உண்டு. ஆனாலும் அப்போல்லாம் இத்தனை பிரபலமாகப் பேசப்படவில்லை என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பள்ளி நாட்களில் ஒவ்வொரு வகுப்பும் அத்தப்பூக்கோலம் எனப் பூக்களால் கோலம் மட்டும் வரைவோம். நன்றாக இருப்பதற்கு அந்த வகுப்பிற்குப் பரிசுகள் உண்டு. //

      மகிழ்வான விஷயம். நீங்களும் செய்திருப்பது. மதுரைகாஞ்சியில் சொல்லப்பட்டிருக்கிறதே. தமிழ்நாட்டில் ஓணம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட காலம் உண்டு என்று.

      //ஆனாலும் அப்போல்லாம் இத்தனை பிரபலமாகப் பேசப்படவில்லை என்பதே உண்மை.//

      ஆமாம். இரு காரணங்கள் இருக்கலாம் அப்போது இப்போது போன்று மீடியாக்கள் இல்லை. இரண்டாவது இப்போதைய தலைமுறையினர் இனி அடுத்தும் எல்லோரும் இப்படியான பாரம்பரியத்தை விடாமல் ஓரளவேனும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாலும் இருக்கலாம் அதிகம் பேசப்படுவது. என்று எனக்குத் தோன்றுவதுண்டு

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்

      துளசிதரன்

      நீக்கு