சனி, 26 ஜூன், 2021

கல்வியால் ஆய பயனென்கொல்?

 

(இது  கொஞ்சம் பெரிய சீரியஸ் பதிவுதான். மன்னிக்கவும். முடிந்தால், ஆர்வமிருந்தால் வாசியுங்கள். )

சாதிக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கான பதிவு (பெற்றோரும் வாசிக்கலாம்) என்று, மதுரைத்தமிழனின் அருமையான சமீபத்திய பதிவின் தொடர்பாக என் எண்ணங்கள் பதிவாக….

பயணக்கட்டுரைகள், நகைச்சுவை, ஜனரஞ்சகமான பதிவுகள், அனுபவப்பதிவுகள், புத்தகங்கள் பற்றிய பதிவுகள், சமையல், கதைகள், என்று என்னை ஈர்க்கக் கூடியவற்றின் இடையே கொஞ்சம் சீரியசான கல்வி, உளவியல் என்று வந்தா நமக்குத்தான் உடனே ஆர்வம் மேலோங்கிவிடுமே.

இப்பதிவே கூட கோர்வையாக, சரியாக எழுதியிருக்கிறேனா என்பது எனக்குச் சந்தேகம்தான். சரி புலம்பலை விட்டு பதிவிற்கு வருகிறேன்…

மதிப்பெண்ணிற்கு அப்பாற்பட்டு விரிவான அறிவு தேவை என்று அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் அப்பதிவு ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அவர்களும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களின் அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்களும் இறுதி வரை மாணாக்கர்தாம்.

விசாலமான அறிவுவளர, குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும், ஆசிரியர்களும் சரி, பெற்றோரும் சரி. அதுதான் முதல் படி. அதுதான் சிந்தனையைத் தூண்டும். சீரியசிந்தனைகள் அதாவது தருக்கச் சிந்தனைகள் (logical thinking) எத்தனை முக்கியமோ அதைப் போல வித்தியாசமாகச் சிந்தித்தல் லாட்டரல்திங்கிங்க்தான் ஒருவரைத் தனித்தன்மை உடையவராகக் காட்டும்.

விடை தெரியவில்லை என்றால் பொதுவாக, குழந்தைகளைக் குட்டி, அதிகப்பிரசங்கித்தனமா கேக்காத, தொணதொணன்னு, அடுத்த க்ளாஸ் போறப்ப படிப்ப, தொந்தரவு செய்யாத, சொல்லிக்கொடுத்தது புரியலையா? அப்படியே மனப்பாடம் செய், என்று சொல்லி முடக்கப்படுகிறார்கள் கட்டிப் குழந்தைகளின் ஆர்வமும், தைரியமும் அடக்கப்படுகின்றன.

இது ஒரு வகை என்றால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் ரொம்ப புத்திசாலி என்று பிரகடனப்படுத்தி ஓவராகத் தலையில் தூக்கி வைத்தும் கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் வயதுக்கு மீறி என்ன பேசினாலும் அதை ரசித்து, பெருமையாகச் சொல்லி அதுவும் இப்போது காணொளியாக வேறு போடுகிறார்கள். முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று.

எல்லாப் பெற்றோரும் கல்வி அறிவோ, பண வசதி படைத்தவர்களாகவோ இருப்பதில்லை என்பதால் இங்கு ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியமாகிறது. (கல்வி அறிவும், வசதியும் உடைய பெற்றோருக்கும் இது பொருந்தும்.)

குழந்தைகள் கேள்விகேட்கும் போது ஆசிரியரும் சரி, பெற்றோரும் சரி, விடை தெரியவில்லை என்றால், “தெரியவில்லை” என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, “நான் பார்த்து தெரிந்துகொண்டு விளக்குகிறேன்” என்று சொல்லி அதைச் செய்யவும் வேண்டும். குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மீது நம்பிக்கை, ஈடுபாடு வரவேண்டும். கற்றலில் (இந்தச் சொல் மிக முக்கியம்) ஈடுபாடு ஏற்படும் படியான சூழலை விதைக்க வேண்டும். இது தொடக்கப்பள்ளியில் ஒரு விதையாக மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அடுத்து இடைநிலைப் பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளியிலும் பராமரிக்கப்பட்டால் தானே நல்ல பூத்துக்குலுங்கும் மரமாகும்.

ஆசிரியர்களும் சரி பெற்றோரும் சரி, “இதுகூடத் தெரியலையா, முட்டாள், ஒண்ணுக்கும் உதவாக்கரை, என்னத்தபடிச்ச? நீயெல்லாம் எதுக்குப் பிறந்த, எதுக்கு ஸ்கூலுக்கு வர, எருமை, நாயி, பேசாம மேய்க்கப் போ,” இப்படியான சொற்கள் வீசப்படும் சூழலை புறம் தள்ள வேண்டும். இவை கற்கும் ஆர்வத்தையும் கற்பதையும் முடக்குபவை.

சில குழந்தைகள் இதை அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவார்கள். ஆனால் எல்லாக்குழந்தைகளுக்கும் மனம் ஒரே போன்று அல்ல. தொட்டாலே உடையும் கண்ணாடி போன்ற மனதுடைய குழந்தைகள் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்வார்கள். சில குழந்தைகளின் ஒழுக்கத்தையும், ஆளுமை வளர்ச்சியையும் உரசிப்பார்க்கும்.

ஆசிரியப்பயிற்சியில் கல்வி உளவியலின் (Education Psychology) பங்கு மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையின் மனமுதிர்ச்சி ப்ளஸ் கற்றல் திறன் வேறுபடுவதால் மிக மிக அடிப்படைத் தேவையாகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயச் சூழல் மாறுபடுவதாலும், அதுவும் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்பவும் -  சமூகவலைத்தளங்கள், இணையம், கையடக்க அலைபேசி என்று தொழில்நுட்பமும், மின்னியல் பொருட்களும் சல்லிசமாக இருப்பதால், பிஹேவியரல் அடிக்ஷன் (behavioural addiction) ஏற்படுவதால் - கற்றல் உளவியலில் மேம்பாடு செய்யப்பட வேண்டியது இன்றியமையாத அடிப்படைத் தேவை.  ஆசிரியர், மற்றும் பெற்றோர் அவர்களைச் சிறப்பாகக் கையாளும் திறன் பெற்றிருப்பதோடு, ஒழுக்கம் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

ஒரு குழந்தை சாதிப்பதற்குப் – புகழ் பெறவேண்டும் என்றில்லை, கல்வியில் முதலிடம் பெறவேண்டும் என்றில்லை, எந்தத் துறையானாலும் செய்வதை செம்மையாகச் செய்வது, நேர்மையாகச் செய்வது, நல்ல ஒழுக்கத்துடன் மனித நேயத்தை இழக்காமல் செய்வது  என்பதுதான் மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கான உளவியல், அவர்களது ஆளுமைத் திறனை வளர்ப்பது, சூழல் என்பவை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சூழல் சரியில்லை என்றால் கற்பது என்பது மிகக்கடினம்.

பாடங்களை மனப்பாடமாய்ப் படிக்கும் திறன் கூடுதல் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி, மெடல் என்று வாங்கிவிட முடியும். ஆனால் அவர்கள் படித்ததை ஆழ்ந்து கற்றார்களா என்றால் அது பெரிய கேள்விக்குறி.

மேலே சொன்ன கருத்தில் இரு விஷயங்களைச் சொல்ல வேண்டும். சாதனை அல்லது வெற்றி (இரண்டிற்கும் சிறு வித்தியாசம் உண்டு என்றாலும்) இவற்றிற்கு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம் என்றாலும் அந்த இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நேர்மையானதாக, நல் வழியில் எடுக்கப்படுவதாக இருக்க வேண்டும்.

ஆம்பிஷன் – Ambition – தவறில்லை. ஆம்பிஷியஸ் – Ambitious என்பதும் நல்லதுதான் ஆனால் எப்படியேனும் (இந்த வார்த்தை மிக மிக முக்கியம்) அடைய வேண்டும் என்று வெறித்தனத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு மனிதனின் குணங்களையும், நல்ல பண்புகளையும் வீழ்த்தி ஆளுமைத் திறனைச் சிதைக்கவும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். கவனம் மிகத் தேவை. வெற்றி, சாதனை என்பதை விட வாழ்க்கையின் எந்தச் சூழலையும் மனம் தளராமல் எதிர்கொள்ளும் திறன் தான் முதலில் போதிக்கப்பட வேண்டும்.

இதற்குத்தான், பல சாதாரணக் குழந்தைகளுக்குக் கற்றலுக்கான, நல்ல ஆளுமைத் திறனை, தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள,  வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொள்ள சூழல் இல்லை என்பதால் பள்ளி, கல்லூரி, ஆசிரியர்களின் பங்கு மிகமிக இன்றியமையாததாக ஆகிறது.

குழந்தைகள் உளவியல், கல்வி உளவியல் பயிற்சி பெற்று கவுன்சலிங்க் செய்து வரும் நட்பு ஒருவர் கேட்ட கேள்வி, “எப்படி ஆசிரியர்கள் கல்வி உளவியல், குழந்தைகள் உளவியல் பயிற்சி பெறாமல் ஆசிரியர்களாகிறார்கள் என்பது ஆச்சரியம். கூடவே வேதனை. படித்த பெற்றோரும் குழந்தைகளைக் கையாளத் தெரியாமல்….என்னிடம் உளவியல் கவுன்சலிங்கிற்கு வரும் பல குழந்தைகளைப் பார்க்கும் போது வரும் ஆதங்கம் இது, என்றார்.

ஆசிரியர்கள் பலரும் பாடத்திட்ட வளர்ச்சிக்கும், காலக்கட்டத்திற்கும் ஏற்ப மேம்படுத்திக் கொள்ளாமை, ஆசிரியப்பயிற்சி சரியான விதத்தில் கொடுக்கப்படாமை, அப்பயிற்சியை உணர்ந்து கல்லாமை, அதை நடைமுறைப்படுத்தாமை, மதிப்பெண்களுக்கு மட்டுமே பயிற்றுவித்தல், ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாதல், பொறுமை இல்லாமை என்று பல காரணங்கள்.

இதில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களில் சாதிப்போர் அதிகம் ஆனால் இவர்கள் முட்டாள் என்று கைவிடப்பட்டு ஒதுக்கப்படும் போது வாய்ப்புகள் இல்லாமல் சுருங்கிப் போகிறார்கள். (கற்றல் குறைபாடு என்று நான் இங்கு குறிப்பிடுவது ஸ்பெஷல் குழந்தைகள் அல்ல.)

ஆசிரியப்பயிற்சி என்பதே சும்மா சான்றிதழ் பெறுவதாக, பல ஆசிரியர்களும் சான்றிதழ் வைத்திருக்கிறார்கள். ஆனால், கற்பித்தலில் பூஜ்ஜியமாக இருக்கிறார்கள், சிலர் ஒழுக்கத்திலும் மோசமாக இருக்கிறார்கள் என்பது மிக மிக வேதனையான, ஆதங்கப்பட வேண்டிய விஷயம், என்பதை நான் இங்கு வேதனையுடன் பதிவு செய்கிறேன். சமூகவலைத்தளங்களுக்கு, இணையத்திற்கு அடிமையான ஆசிரியர்கள் பலரின் செயல்பாடுகள்தான் என்னை அப்படி எழுத வைத்தது. (பதிவுலகில் உள்ள ஆசிரியர்கள் என்னை மன்னிக்கவும்.)

ஆசிரியர் என்பவர், மாணவர்களை மையமாகக் கருத்தில் கொண்டு, கருணையுடன், நட்பாக, மெய்யியலாளராக, நல்லவ வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள். இது பெற்றோருக்கும் பொருந்தும். Friend, Philosopher, Guide

இதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பெரிய கட்டுரையாக தொடராக உதாரணங்களுடன் எழுதலாம். அத்தனை இருக்கிறது. இங்கு இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

நன்றி மதுரைத்தமிழன்.


-------கீதா 

34 கருத்துகள்:

  1. logical thinking - தருக்கச் சிந்தனைகள் பொறுத்தளவு தானே தான் சிந்திக்க முடியும்... சொல்லித் தர முடியவே முடியாது... அதிலும் கணக்கு 100%

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் டிடி கற்றுத் தர முடியாது ஆனால் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்பதே சொல்லப்பட்ட கருத்து. பிள்ளைகள் கேள்விகள் எழுப்பும் போது அதைத் தலையில் தட்டி முடக்காமல் பதில் கொடுத்து அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். லேட்டர்ல் திங்கின் என்பது கண்டிப்பாகக் கற்றுக் கொடுக்க முடியாது ஆனால் அப்படிச் சிந்திக்கத் தூண்டலாம்.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
    2. அதிலும் கணக்கு 100%//

      ஆமாம் சில கணக்குகளுக்குப் புரிதலும் காமன்சென்ஸும் வேண்டும். வாய்ப்பாடு கூட மனனம் செய்வதோடு அது எப்படி வருகிறது என்பதைப் புரிந்து மனனம் செய்தால் மனதில் எளிதாய் வந்துவிடும்.

      நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  2. சூழல் சரியில்லை என்றால் கற்பதும் கடினம் தான்... ஆனால் பலருக்கும் தனது குடும்ப சூழலை கவனிக்க வைத்து, மனதை செம்மைப்படுத்தி சாதிக்கவும் வைக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாயிண்ட் மிகவும் ஏற்கத்தக்கது. இதில்தான் ஆசிரியரின் பங்களிப்பு மிக அதிகம். அவருக்குத்தான் ஒவ்வொரு மாணவனின் குடும்பச் சூழல் தெரியும். அதற்கேற்றபடி அதீத கவனம் செலுத்தி ஒரு மாணவனை முன்னுக்குக் கொண்டுவர முடியும்.

      ஆனால் பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதில் கவனம் செலுத்துவதே இல்லை. செலுத்தியிருந்தால், இவ்வளவு அவலம் நேர்ந்திருக்காது.

      நீக்கு
    2. சரியே டிடி அண்ட் நெல்லை. மிகவும் சரியே.

      இதில் இங்குதான் நெல்லை சொல்லியிருப்பது போல் ஆசிரியரின் பங்கு முக்கியம் என்பதுதான் சொல்லப்பட்டிருக்கு பதிவில்.

      மிக்க நன்றி டிடி அண்ட் நெல்லை.

      கீதா

      நீக்கு
  3. சில கருத்துரை செல்லவில்லை... ஆதலால், ஒன்றே போல் இருந்தால் வெளியிடாமல் நீக்கி விடவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி எல்லாம் ஒன்றொன்றுதான் வந்திருந்தது. எனக்கும் கருத்து போகாமல் படுத்துகிறது இந்த ப்ளாகர் அவ்வப்போது

      நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  4. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே! டிடி. எல்லோருக்கும் பொருந்தும்தான்

      நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  5. //பாடங்களை மனப்பாடமாய்ப் படிக்கும் திறன் கூடுதல் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி, மெடல் என்று வாங்கிவிட முடியும். // - நம் கல்வித் திட்டத்தில் இதுதான் மிகப் பெரிய பிரச்சனை. மனப்பாடக் கல்வியை மட்டுமே ஊக்குவிக்கிறது. அதுவும் தவிர, எந்த ஒரு இன்னொவேஷனும் இல்லாத வெறும் ரிபீடட் கேள்விகள் மட்டுமே நம் உயர் கல்வியில் மாணவர்களை மதிப்பிட உபயோகிக்கிறோம்.

    என்னிடம் பேசிய வெள்ளையர் ஒருவர் சொன்னது, உங்க ஊரில் தெருவுக்கு தெரு ஏகப்பட்ட எஞ்சினீயர்கள் மருத்துவர்கள் என்று. எல்லாமே மனப்பாடக் கல்வியின் விளைவு. குவாலிட்டியில் தேறாத எஞ்சினீயரிங், பட்டதாரிகள், டாக்டர்கள் (முனைவர்கள்). நான் எம்.எஸ்.ஸி படித்தபோது என்னுடன் படித்தவன், வெறும் 35 கேள்விகள் மட்டுமே ஒவ்வொரு சப்ஜெக்டிலும் படிப்பான். (based on last 5 years questions). அதை வைத்துத்தான் எல்லாப் பேப்பரையும் பாஸ் செய்தான், நல்ல மார்க்குகளும் வாங்கினான்.

    வாழ்க்கையில் முன்னேற, பட்டம் மட்டுமே போதாது. Smartness இருக்கவேண்டும். அவங்களாலதான் முன்னேற முடியும்.

    இதையுமே நான் நீட் தேர்வை லிங்க் செய்து எழுத முடியும். என்னுடைய கருத்து மிக மிக நீளமாகிவிடும்.

    நான் பி.எஸ்.ஸி படித்தபோது, என் கஸின், கெமிஸ்ட்ரி படித்தான். முதல் internal தேர்வில், பாடத்திலிருந்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை. கெமிஸ்டிரி பற்றிய புரிதலுக்கான மிக அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டு, 70 சதம் பேர் மார்க்கே வாங்கவில்லை. +2ல நல்ல மதிப்பெண்கள் பெறும் 80 சதவிகிதம் பேர் (95ன்னு எழுதியிருக்கணும்) +1 கேள்விகள் மட்டுமே +2 தேர்வில் கேட்கப்பட்டால் நிச்சயம் ஃபெயில் ஆயிடுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நீங்கள் சொல்லியிருப்பது போல் தான் நான் படிக்கும் போதும் நடந்திருக்கிறது.

      கல்லூரியில் படிக்கும் போதும், பள்ளியில் படிக்கும் போதும் நடந்தவை அதை இங்கு சொல்லத் தொடங்கினால் பதிவு நீண்டு விடும்.

      //வாழ்க்கையில் முன்னேற, பட்டம் மட்டுமே போதாது. Smartness இருக்கவேண்டும். அவங்களாலதான் முன்னேற முடியும்.//

      கண்டிப்பாக. எந்த ஒரு பிரச்சனையையும் அழகாக ஹேண்டில் செய்யத் தெரிய வேண்டும்.

      குவாலிட்டியில் தேறாத எஞ்சினீயரிங், பட்டதாரிகள், டாக்டர்கள் (முனைவர்கள்). //

      இதைப் பற்றி அப்புறம் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். அதுவும் கல்வி புன்புலம் நிறைய உண்டு இங்கு. மாமாக்கள் ஆசிரியர்கள், புகுந்த வீட்டிலும்,என்பதால் நிறைய அனுபவங்கள் உண்டு. நேரடி அனுபவம்.

      பாடத்திலிருந்து கேட்பதை விட பாடத்தை விட்டுக் கேட்பது// இது பற்றியும் என் அனுபவம் சொல்ல நினைத்து அனுபவங்கள் தொடரில் வருகிறது. அதுவும் இந்தப் பதிவின் தொடர்பாக.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. இதைப் பற்றிச் சொல்லப் போனால் நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாய்ப் பாடத்திட்டம். அதிலும் இந்த சமச்சீர்ப்பாடத்திட்டம் என்பதே சரியில்லை. அதோடு வரலாற்றிலும் முக்கியமான உண்மைகள் மறைக்கப்படுவதால் வரலாற்றில் ஆர்வம் உள்ள மாணவனால் மேலே தொடர முடியாமல் போகிறது. மொழிப்பாடங்களையும் மனப்பாடம் செய்து எழுதுபவர்கள் நிறையவே. அதிலும் இந்த தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபை நடத்தும் ஹிந்தித் தேர்வுகளில் எல்லோருமே பத்துவருஷத்துக் கேள்விகள்/பதில்கள் அடங்கிய நோட்ஸை வாங்கி வைத்துக் கொண்டு உருப்போட்டு எழுதி விடுகிறார்கள். முக்கியமாய்ப் பாடத்தை யாரும் படிப்பதில்லை. எந்த ஆசிரியரும் சொல்லியும் கொடுப்பதில்லை. நாம் கேட்டால் நாங்கல்லாம் இப்படித்தான் படிச்சோம், இப்போ என்ன கெட்டுப் போச்சு என்பார்கள். நீட் தேர்வைச் சுட்டி எழுதுவதானால் எவ்வளவோ எழுதலாம். நீளமாகப் போயிடும் என்பதோடும் எல்லோருமே ஒத்துக்கவும் மாட்டாங்க! பொதுவாகப் பாடத்திட்டம்/கற்பிக்கும் முறைகள் போன்றவற்றில் மாறுதல்கள் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

      அடிப்படையில் மாரல் வகுப்புகள், ஆளுமைத்திறன் வளர்க்கும் வகுப்புகள், சிவிக் சென்ஸ் போன்றவை கற்பிக்கப்பட வேண்டும். சிறு வயதிலிருந்தே இது வந்துவிட்டால் பொது இடத்தில் யாரும் உச்சா அடிக்க மாட்டாங்க துப்ப மாட்டாங்க.

      பொதுவாகப் பாடத்திட்டம்/கற்பிக்கும் முறைகள் போன்றவற்றில் மாறுதல்கள் வரவேண்டும்.//

      அதே அதே...ப்ராக்டிக்கல் வகுப்புகள் நிறைய வர வேண்டும். எங்கள் பள்ளியில் இப்படி நிறைய சொல்லித் தருவாங்க அப்போ. அதே போன்று மாணவிகளின் பிரச்சனைகள் கவுன்சலிங்க் எல்லாம் உண்டு பள்ளியில்.

      நன்றி கீதாக்கா

      கீதா



      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. ஆசிரிய பெருமக்கள், மற்றும் பெற்றோர்களின் நிலைகளைப் பற்றியும், குழந்தைகளின் கற்றலின் சூழல்களை பற்றியும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

    /ஒரு குழந்தை சாதிப்பதற்குப் – புகழ் பெறவேண்டும் என்றில்லை, கல்வியில் முதலிடம் பெறவேண்டும் என்றில்லை, எந்தத் துறையானாலும் செய்வதை செம்மையாகச் செய்வது, நேர்மையாகச் செய்வது, நல்ல ஒழுக்கத்துடன் மனித நேயத்தை இழக்காமல் செய்வது என்பதுதான் மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கான உளவியல், அவர்களது ஆளுமைத் திறனை வளர்ப்பது, சூழல் என்பவை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சூழல் சரியில்லை என்றால் கற்பது என்பது மிகக்கடினம்.

    பாடங்களை மனப்பாடமாய்ப் படிக்கும் திறன் கூடுதல் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி, மெடல் என்று வாங்கிவிட முடியும். ஆனால் அவர்கள் படித்ததை ஆழ்ந்து கற்றார்களா என்றால் அது பெரிய கேள்விக்குறி./

    நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். இது போல் நீங்கள் கூறிய நிறைய இடங்களை படித்து ரசித்தேன். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் உடன் கற்பித்தால், அந்தக் குழந்தை படிப்பிலும், அறிவிலும், வாழ்நாளில் வாழ்வதற்குரிய பிற செய்கைகளிலும் நன்றாக வளர்ந்து, சிறந்து பெற்றோர்களுக்கும், தன்னை கற்பித்து வளர்த்து விட்ட ஆசிரியர்களுக்கும் நன்மதிப்பை பரிசாக நரும் என்பதில் ஐயமில்லை. உண்மை.. அருமையான பகிர்வு. ஆழமாக சிந்தித்து தந்ததற்கு பாராட்டுக்கள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு குழந்தை சாதிப்பதற்குப் – புகழ் பெறவேண்டும் என்றில்லை, கல்வியில் முதலிடம் பெறவேண்டும் என்றில்லை, எந்தத் துறையானாலும் செய்வதை செம்மையாகச் செய்வது, நேர்மையாகச் செய்வது, நல்ல ஒழுக்கத்துடன் மனித நேயத்தை இழக்காமல் செய்வது என்பதுதான் மிக மிக முக்கியம்.

    இதை அப்படியே வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு

  9. நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப் பெற்ற குழந்தைகள் எல்லாம் இறைவனிடம் வரம் பெற்று வந்தவர்கள் எனலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மதுரை நல்ல ஆசிரியர் கிடைப்பது என்பது அதுவும் இப்போதெல்லாம் கொஞ்சம் கடினம்தான்

      நன்றி மதுரை

      கீதா

      நீக்கு
  10. பல நல்ல கருத்துகள் அடங்கிய பதிவு. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு பதிவு.  சொல்ல நினைத்த பல கருத்துகளை ஏற்கெனவே எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பலரும் சொல்லியிருக்கிறார்கள். நாம் படித்த காலம் கூடப் பரவாயில்லை ஸ்ரீராம். இப்போது தரம் ரொம்பத் தாழ்ந்திருக்கிறது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. அவ்வப்போது ஆங்காங்கே சில மாறுதலான பள்ளிகளும் துவங்கப்பட்டது என்று நினைக்கிறேன்.  ரஜினியின் மனைவி தொடங்கிய ஆஷ்ரம் பள்ளியே வித்தியாசமான கல்விமுறையில் தொடங்கப்பட்டதுதான் என்று ஞாபகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஷ்ரம் பள்ளி பற்றி கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதனைப் பற்றி அதன் பின் தகவல்கள் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இரண்டாவது அது சில குழந்தைகள் மட்டுமே படிக்க முடிந்த பள்ளி இல்லையோ? சாதாரணக் குழந்தைகளுக்கு அங்கு படிக்க இயலுமோ? ஃபீஸ் அதிகம் என்று கேட்டதுண்டு ஆனால் சரியாகத் தெரியாது. அதில் இடையில் சில பிரச்சனைகள் வந்ததாகவும் அறிந்தேன் ஆனால் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. திரைப்பட நடிகர்களின் குழந்தைகள், தொழிலதிபர்களின் குழந்தைகள் எனத் தான் ஆஷ்ரம் பள்ளியில் படிக்க இயலும். சாதாரணச் சேரியில் வளரும் மாணவனால் அங்கே நிழலுக்குக் கூட ஒதுங்க முடியாது. இப்படியான மாணவர்களுக்கென உள்ளவையே நவோதயா பள்ளிகள். அதை மட்டும் வரவிட்டால்! தமிழ்நாட்டு மாணவர்களை மிஞ்ச முடியாது. ஆனால் அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக நவோதயா பள்ளிகளை வரவிட மாட்டார்கள். மொழிப் பற்றைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வார்கள்.

      நீக்கு
  13. எந்த ஒரு வேளையிலும் அவ்வப்போது வரும் அப்டேட்களை தெரிந்துகொண்டால் வேலை செய்பவருக்கு நல்லது.  இதற்காக சில வேலைப்பிரிவுகளில் சில வகுப்புகள் எடுப்பதுண்டு.  இது ஆசிரியர் வேலைக்கும் பொருந்தும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். எல்லா வேலைகளுக்கும் பொருந்தும்.

      //இதற்காக சில வேலைப்பிரிவுகளில் சில வகுப்புகள் எடுப்பதுண்டு. இது ஆசிரியர் வேலைக்கும் பொருந்தும்.//

      அதே அதே ஸ்ரீராம்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  14. வருடா வருடம் சொன்னதையே சொல்லிச்சொல்லி ஆசிரியர்களுக்கும் போரடித்திருக்கும்!  ஒரு மாறுதலான கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் நன்றாய் இருக்கும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடா வருடம் சொன்னதையே சொல்லிச்சொல்லி ஆசிரியர்களுக்கும் போரடித்திருக்கும்! //

      ஹாஹாஹா கண்டிப்பாக இது நல்ல பாயின்ட்!!!!!

      ஆஅமாம் ஸ்ரீராம் மாறுதலான கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டால் நல்லதுதான். எல்லோருக்குமே ஆர்வம் வரும்...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  15. நல்ல பதிவு மேடம்.
    கல்விமுறையில் மாற்றங்கள் கொண்டுவர ஒரு தலைமுறையாவது ஆகும்.
    இன்றைய முறையில் ஊரிப்போன் ஆசிரியர்களையும் மாணவர்களையும் உடனே மாற்றுவது அசாத்தியம்.
    படிப்படியாக செய்யனும்.
    மணப்பாடம், புரிதலில்லா கல்விமுறையை மாற்ற கற்றுக்கொடுக்கும் முறையில் ஒருங்கிணைந்த தன்மை இருக்கனும்.
    உதாரனத்திற்கு, கணித ஃபார்முலாக்களை, அதன் வறலாற்றோடு பிண்ணிப்பிணைந்து சுவாரசியமான கதை போல கற்றுக்கொடுக்கலாம்.
    அறிவியல் சமன்பாடுகளையும், அதை கண்டுபிடித்தவரின் வாழ்வணுபவங்கள், சந்தித்த எதிர் வாதங்கள் என நடத்தினால் மாணவர்களின் சிந்தனை வலுப்பெறும்.
    இலக்கியப்பாடத்தை வெறும் கதை கூறலாக நடத்தாமல், அதன் ஆசிரியரின் வாழ்க்கைக்கும் அவரின் படைப்புகளுக்கும் தொடர்புபடுத்தி கற்றுக்கொடுக்கனும்.
    வயதிற்கு மீறிய கேள்விகள் எவை என்பதற்கு தெளிவான வறைமுறை வகுக்கவேண்டும்.
    ஏனெனில், நாம் மறுக்கும் பதில்களை மாணவர்கள் தவறான இடங்களில் தேடி கெட்டுப்போகும் சாத்தியங்களும் களையப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல கருத்து அரவிந்த்.

    ஏனெனில், நாம் மறுக்கும் பதில்களை மாணவர்கள் தவறான இடங்களில் தேடி கெட்டுப்போகும் சாத்தியங்களும் களையப்படவேண்டும்.//

    அதே அதே அரவிந்த். இதை நான் முன்பு ஏதோ ஒரு பதிவில் சொல்லிய நினைவு.

    நன்றி அரவிந்த்

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அருமையான கட்டுரை கீதா.
    குழந்தைகளின் கல்வியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்குபற்றி சொன்னது அருமை.

    //விசாலமான அறிவுவளர, குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும், ஆசிரியர்களும் சரி, பெற்றோரும் சரி. //

    ஆமாம்.

    //எந்த துறையானாலும் செய்வதை செம்மையாகச் செய்வது, நேர்மையாகச் செய்வது, நல்ல ஒழுக்கத்துடன் மனித நேயத்தை இழக்காமல் செய்வது என்பதுதான் மிக மிக முக்கியம்//

    தனக்கு பாடம் நடத்திய மூன்றாம் வகுப்பு ஆசிரியரைப்பற்றி என் கணவர் அடிக்கடி பேசுவார்கள். அவர்கள் போல ஆசிரியர் எல்லா வகுப்பிலும் அமைந்து இருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும் என்று சொல்வார்கள். கல்வியை கற்க விரும்ப வேண்டும் அந்த அடிப்படைக் கல்வி ஆசிரியர் தன்மையானவராக இருந்தால்தான் பள்ளி செல்ல குழந்தைகள் விரும்புவார்கள்.

    சிறு வயதில் என் கணவரின் எழுத்தை புகழ்ந்து பேசி பாராட்டி எல்லா வகுப்பிலும் போய் காட்டி இப்படி எல்லோரும் அடித்தல் , அழித்தல் , திருத்தல் இல்லாமல் சுத்தமாக அழகாய் எழுதவேண்டும் . என்று சொல்வார்களாம்.

    என் கணிதம் எடுத்தவர்கள்(உமா டீச்சர்) நான் கணக்கில் மதிபெண் குறைந்து இருப்பதைப்பார்த்து தனியாக வகுப்பு எடுத்து சொல்லி தந்தார்கள். கடுமையாக சொல்லாத அன்பாக பாடம் நடத்தும் ஆசிரியரை எல்லோரும் விரும்புவார்கள்.

    என் மகள், மகனுக்கும் நல் ஆசிரியர்களே அமைந்தார்கள். உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுத்து படிக்க வைத்தார்கள். இருவருக்கும் பாடம் நடத்திய ஆனந்தவல்லி டீச்சரை மறக்கவே முடியாது.
    விடுமுறைக்கு வரும் போது எல்லாம் மகன் அவர்களை பார்க்க மறக்க மாட்டான். ஆசிரியர் தினத்திற்கு அவர்களுக்கு மரியாதை செய்வான்.

    நல்ல கருத்துக்கள் அருமையான பதிவு. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கீதா.





    பதிலளிநீக்கு
  18. சிறப்பான கட்டுரை.

    //தொட்டாலே உடையும் கண்ணாடி போன்ற மனதுடைய குழந்தைகள் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்வார்கள். // நூற்றுக்கு நூறு உண்மை. குழந்தைகளிடம் சர்வ ஜாக்கிரதையுடன் பேச வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு