திங்கள், 18 பிப்ரவரி, 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் .(Spot billed pelicans) புள்ளியிட்ட அலகு கூழைக்கடாக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய கொண்டாட்டமான இடம். புலிக்கட் ஏரியில் கடல் நீர் உள்வாங்கி உப்பு நீர்க்காயலாக இருந்தாலும், சரணாலயத்திற்குள் இந்த ஏரியின் நன்னீர் சதுப்புநிலப் பகுதி பரவியிருக்கிறது. 4.5 சதுர கிலோமீட்டர் பரப்பிலமைந்துள்ளது இந்த நீர்ப்பரப்பு.  கருவேல மர இனத்தையொத்த மரங்கள் வளர்ந்துள்ளமையால்  இந்த பெலிக்கன்ஸ்கு கொண்டாட்டம்.

இவ்வகை பெலிக்கன்ஸ் தவிர  மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கரண்டிவாயன், பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், புள்ளியிட்ட அலகு கூழைக்கடா, கருந்தலை கொக்குகள், அன்றில், சிறு வெண் கொக்கு, வெண் கொக்கு, பெருங்கொக்கு, இராக்கொக்கு, குளத்துக் கொக்கு மற்றும் நத்தை குத்தி நாரை. நூற்றுக்கணக்கான நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, ஆண்டி வாத்து போன்றவைகளும் வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எங்கள் கண்ணில் ஒரு சில வாத்துகளும், சின்னநீர்க்காகம், கொண்டை நீர்க்காகம் என்று சொல்லப்படுபவையும்  (cormorant) மட்டுமே கண்ணில் பட்டன. இல்லை இல்லை பைனாகுலரில் பட்டன! தூரத்தில் இருந்ததால் என் கேமராவில் ஜூம் செய்தும் எடுக்க முடியவில்லை.

சென்ற பதிவில் வியூ பாயின்ட் செல்லும்வழி படம் போட்டு முடித்திருந்தேன்.அந்த வியூபாயின்ட் பகுதிக்குச் செல்லும் முன் மூன்று பாதைகள் இருந்தன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும் பாதைகள். இதோ படத்தில் உள்ளது போல். ஒவ்வொரு பாதை தொடங்கும் போதும் அந்தப் பாதையில் என்ன பார்க்கலாம் என்ற தகவல் பலகைகள் இருந்தன. எந்தப் பகுதியில் செல்வது என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு கடைசியில் இதோ ஆர்ச் தெரிகிறதா ஒரு படத்தில் அவ்வழி சென்றோம். ஏற்கனவே சொல்லியிருந்தபடி மிகப் பெரிய சரணாலயம். பறவைகள் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்தான். 


அந்தப் பாதையில் கொஞ்சம் நடந்ததும் அதோ ஆர்க் இருக்கின்றது இல்லையா அதற்கு சற்று முன்பு இடப்புறம் இந்தத் தகவல் பலகை இருந்தது. கீதாக்காவின் சுப்புக்குட்டிகள் இங்கு இருக்கின்றன என்று. காட்டிற்குள் இருக்குமாக இருக்கும்.

அங்கு நடுவில் இப்படி ஒரு சின்ன குளம் இடப்புறம் இருந்தது. இதில் ஆமை போன்றவை விடுவதற்காகவோ இல்லை பறவைகளுக்காகவோ இருக்கும். ஏமாற்றமாக இருந்தது. பறவைகள் வந்திருந்தால் இங்கெல்லாம் இருந்திருந்திருக்கும்.

மேலே உள்ள சிறிய குளம் தாண்டியதும் நாங்கள் சென்ற பாதையில் இந்தப் பறவைகள் இங்கு வரும் என்ற அடையாளத்திற்கான அவற்றின் சிலைகள் மற்றும் பறவைகளின் வேண்டுகோள்கள் சொல்லும் பலகை என்று இருந்தன. 


வழியில் இப்படி ஏறிச் செல்லும் பாதை அழகாக இருந்தது.


அவ்வழியே போன போது அழகான பூச்செடிகள் ஆங்காங்கே…

இந்த நான்கு படங்களில் முதல் படம் அடுத்து வரும் படத்தில் உள்ள இரு டவர்களில் இரண்டாவதாக இருக்கும் டவரில் இருந்து எடுத்தேன். இந்தச் சிறிய குளம் வெகு அழகாக இருந்தது மட்டுமல்ல சுற்றிலும் பெஞ்சுகள் இருந்தன. வெகு அழகாக இருந்தது இந்த இடம். இங்கும் குளத்தைச் சுற்றிப் பூச்செடிகள் இருந்தன. அவைதான் மேலே உள்ள அந்த நான்கு படங்கள். இன்னும் உள்ளன. படங்கள் பகுதியில் பகிர்கிறேன்.  

இப்படி ஆங்காங்கே வியூ டவர்கள் இருக்கின்றன!!!!! 


நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதால் ஓய்வு எடுக்க இப்படி நிழலுடன் ஆன இருக்கைகள் கட்டியிருக்காங்க. இந்த நான்கு படங்களில் கீழ் இருக்கும் அந்தக் கூரையின் கீழ் இருகும் இருக்கைகளுக்கு முன்னே இடது புறம் இருக்கும் பகுதியில் நீர் இருந்திருக்கும் போல. கொஞ்சம் நீர் தேங்கியிருந்தது. மீண்டும் வெட்டி சிறிய குளம் போல கொண்டு வருவாங்க போல.
இடப்பக்கம் மரங்களுக்குப் பின்னால் சதுப்பு நில நீர் ஏரி. இந்த இடத்துலதான் நம்மவர்கள். இந்த நண்பர் மட்டும் நம்ப கிட்ட வந்தார். பாருங்க அந்தக் கம்பித் தடுப்பு மேல உட்கார்ந்து எங்கள் குழுவை அங்கு பார்த்துக் கொண்டிருந்தவரை, “ஹலோ கொஞ்சம் என் கேமரா பார்த்து போஸ் கொடுங்க” என்றதும் பாருங்க  அடுத்த படத்துல போஸ் கொடுக்கிறார்.

எங்கள் குழு அல்லாத வேறு சில மக்கள் வந்திருந்தாங்க அவங்கள்ல யாரோ எதையோ போட அவர் கீழே குதித்து அதை எடுக்க வந்தவர் எங்களைப் பார்க்கிறார்…..

இதுதான் சதுப்பு நில ஏரி. பாருங்க கருவேல மர இனத்தையொத்த மரங்கள் வளர்ந்துருக்கா இங்கதான் பெலிக்கன்ஸ், நீர்க்காகம் எல்லாம் குழுமி கும்மி அடிக்கும். எங்கள் கண்ணில் ஒரு சில வாத்துகளும், சின்னநீர்க்காகம், கொண்டை நீர்க்காகம் என்று சொல்லப்படுபவையும்  (cormorant) மட்டுமே கண்ணில் பட்டன. இல்லை இல்லை பைனாகுலரில் பட்டன! தூரத்தில் இருந்ததால் என் கேமராவில் ஜூம் செய்தும் எடுக்க முடியவில்லை.

இன்னும் வழி போய்க் கொண்டே இருந்தது. நேரமாகிடுச்சு. அடுத்து புலிக்கட் போனுமே. ஸோ எல்லாரும் வாங்க வந்த வழியே மீண்டும் போவோம். நெலப்பட்டு ஓவர். வெளியே வந்த பிறகு மீண்டும் அந்த தூசி பறக்கும் சாலையில் வந்து நெடுஞ்சாலையில் இடப்பக்கம் திரும்பி 10 கிமீ சென்றால் (இதுவும் வந்த வழிதான்) இடது புறம் சூளூர்பேட்டை சந்திப்பு.  அங்கிருந்து ஷார் செல்லும் சாலையில் சென்றால் புலிகாட் ஏரி.  இது ஆந்திரா பக்கம் உள்ள பகுதி. தமிழ்நாடு பக்கம் இருக்கும் பகுதி புலிக்கட்/ பழவேற்காடு.

லஞ்ச் சாப்பிடனுமே! சூளூர்பேட்டில் சைவ உணவகங்களைத் தேட வேண்டியதாக இருந்தது.  ஒரு சிறிய மெஸ் இருப்பதாக அறிந்து சந்து பொந்துக்குள் நுழைந்து அந்த மெஸ்ஸை அடைந்தோம். அங்கு நாங்கள் சாப்பிட்ட மீல்ஸ் படம் இதோ. சாப்பாடு நல்லா இருந்தது. சாப்பாட்டின் ருசி, குறிப்புகள் அறிந்து நான் செய்தாலும் நான் சாப்பாடு எப்படி இருந்தாலும் சாப்பிடும் ரகம். எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது. இதில் சாதம் மட்டும் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிகம். எனவே முக்கால் பாகத்தை உறவுகள், நட்புகளிடம் (ஆண்களிடம்) கொடுத்துவிட்டேன். சரி சாப்பிட்டுவிட்டு புலிக்கட் செல்வோம். தயரா இருங்க. 



--------கீதா





51 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    முதல் பகுதியை தாமதமாக இல்லையில்லை.. கடைசியில் தொடர்ந்த நான் இரண்டாவது பகுதிக்கு நான்தான் 1பர்ஸ்ட்.. போலிருக்கு... இங்கும் அழகான படங்களுடன் அருமையான வர்ணனை. எவ்வளவு பறவைகள். பறவையின் பெயர்கள் மிக மிக அழகு. மிகவும் ரசித்தேன். காடுகள் நடக்க நடக்க இனிதாக இயற்கை சூழலுடன் நன்றாகவே இருந்திருக்கும்.நடந்து செல்லும் வழிகளெல்லாம் தூய்மையாக உள்ளது சதுப்பு நில ஏரி அழகாக உள்ளது. இன்னமும் முதலில் தாங்கள் சொன்ன நீண்ட பறவை பட்டியல் ஆங்காங்கே இருந்திருந்தால் மிகவும் கண் கொள்ளா காட்சியுடன் இருந்திருக்கும்.

    என்ன இருந்தாலும் நம்மவர் அழகே தனிதான்..! அவரில்லாத இடமேது? நல்ல விளக்கங்களுடன் அருமையாக எங்களையும் வழிநடத்தி அழைத்துச் சென்றீர்கள்.உணவு படம் அருமை. நடுவிலுள்ளது நாலுபேருக்கு காணும் போலிருக்கிறது. சாப்பிட்டாச்சு.. அடுத்து புலிக்கட் செல்ல தயாராக இருக்கிறோம். அங்கும் பறவைகள்தானா? இல்லை விலங்குகளா? இதையெல்லாம் உங்களது பயணக்கட்டுரையில்தான் தெரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த பகுதிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலாக்கா நாங்க போயிருந்தப்பதான் வார்தா வந்ததால் பறவைகள் வரவில்லை. மற்றபடி நெட்டில் பார்த்தால் பலரும் அங்கே சென்றவர்களின் படங்கள் சூப்பரா இருக்கு நிறைய பெலிக்கன்ஸ், பிற பறவைகள் எல்லாம் எடுத்து போட்டுருக்காங்க...

      அப்புறம் நாங்க போகலையே...அடுத்த வருடம் போயிருந்தால் ஒரு வேளை பார்த்திருக்கலாமோ என்னவோ...ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது...

      மிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    பறவைகள் எல்லாம் வெக்கேஷனில் சென்ற நேரம் நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்கள் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட் ஆஃப்டர்னூன் ஸ்ரீராம்...

      ஹா ஹா ஹா ஹா....ஆமாம் எல்லாம் இங்கு அந்த வருடத்தில் வார்தா வந்திருந்ததால் வேற இடத்துக்கு வேக்கேஷனுக்குப் போயிருச்சு....இல்லைனா இந்த இடத்துக்குத்தான் எல்லாம்வ் அருமாம்...இனப்பெருக்கத்திற்கு...பாவம் எல்லாம் அந்த வருடம் எங்க போச்சோ?

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. படங்களை அழகாக வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள். நம் மூதாதைய நண்பர் ஒரு படத்தில் சோகமாக உற்கார்ந்திருக்கிறாரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்..படங்கள் பத்தி சொன்னதுக்கு...

      தனக்குப் போட்டதை சாப்பிட முடியலை....இவங்க வேற ஏதோ என்னை படத்துக்குப் போஸ் கொடுக்க சொல்றாங்க அதுக்குள்ள வேற எவனாவது வந்து என் பங்கை எடுத்துட்டுப் போய்டுவானோனு சோகமோ?!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  4. அளவுச்சாப்பாடு அழகாய் அடுக்கப்பட்டிருக்கிறது. என்ன விலை? 80 ரூபாய்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அழகா அடுக்கிருந்தாங்க பார்க்கவே அழகா இருந்துச்சு. சாப்பாடும் நல்லாருந்துச்சு...80 இல்லை ஸ்ரீராம்...60 என்ற நினைவு. ஸ்ரீராம் எனக்குத் தெரிந்தவரை ஆந்திராவில் எல்லாம் சின்ன ஊர்களில் எல்லாம் மெஸ்ஸில் சின்ன ஹோட்டல்களில் மீல்ஸ் விலை குறைவாகவே இருக்கு...ஐட்டெம்ஸும் இப்படித்தான்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  5. படங்கள் ஒவ்வொன்றும் அழகு
    நன்றாகத்தான் பராமரித்து வருகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ கருத்திற்கு..ஆமாம் நன்றாகப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள்...

      கீதா

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் ரொம்ப அழகாய் வந்திருக்கின்றன. நம்மவர் எங்கே போனாலும் காணப்படுவார். இப்போ இங்கே நடமாட்டம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு! :) நேற்று மயிலாரை வெளியே உறவினரைப் பார்க்கச் சென்றபோது பார்த்தேன். மொபைல் எடுத்துப் போகலையேனு வருத்தமா இருந்தது. அவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு போயும் எந்தப் பறவைகளையும் பார்க்க முடியலையேனு வருத்தமாத் தான் இருக்கு. புலிக்காட் ஏரி இங்கே தான் என்பதும் இப்போத் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நம்மவர் என்றால் அதிரா ஏஞ்சல்தானே?

      நீக்கு
    2. கீதாக்கா காடு மலை என்றாலே நம்மவர்தானே. சென்னையிலும் நாங்க இருந்த தரமணில நிறைய வருவாங்க நம் ஏரியாவை ஒட்டி ஐஐடி சுவர் தானே...

      ஆமாம் பறவைகள் இல்லை ஆனால் புலிக்கட்டில் கொள்ளை அழகு அக்கா ஏரியும் பறவைகளும் அதுவும் செல்லும் சாலையில் இருபக்கமும்...ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நிறுத்தி படம் பிடித்துக் கொண்டே போனோம்...விவரங்கள் அப்பதிவில் தரேன் கீதாக்கா

      புலிக்கட் ஏரியின் ஒரு பகுதி ஆந்திராவிலும் மற்றொரு பகுதி தமிழ்நாட்டிலும் பழவேற்காடு....எல்லையில் என்பதால்...பழவேற்காட்டில் போட்டிங்க் சென்று ஷார் தீவை அடையலாம் தீவு ரொம்ப அழகா இருக்கும். அங்கிருந்தும் பறவைகளை படம் எடுக்கலாம் அக்கா....

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    3. மதுரை ஹா ஹா ஹா ஹா

      அதிராவின் குருவாக்கும் நம்மவர்!!!

      மிக்க நன்றி மதுரைதமிழன் ...

      கீதா

      நீக்கு
  7. சுப்புக்க்குட்டிங்க ஒண்ணுமே கண்ணில் படலையா? அடடா!!!!!!!!! சாப்பாடு பார்க்க நல்லா இருக்கு. சாதம் ரொம்பவே அதிகம் தான். ருசியும் நல்லா இருந்திருக்கும் என நம்புகிறேன். ஆனால் எனக்கெல்லாம் கொஞ்சம் நல்லா இல்லைனாலே இறங்கவே இறங்காது. அப்படியே வைச்சுடுவேன். :) கெட்ட பழக்கம்னு தோணுது தான். ஆனாலும் சாப்பிட முடியறதில்லை/பிடிக்கிறதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்புக்குட்டிங்க ஒன்னுமே கண்ணுல படலை..பட்டிருந்தா எடுத்திருப்பேனே...உள்ள இருந்திருக்குமா இருக்கும்.

      சாப்பாடு நல்லாருந்தது அக்கா..

      எனக்கு வேறு ஒன்றுமில்லை என் சிறுவயது அனுபவங்களினால் அப்போதே வந்த ஒரு மனதில் ஏற்பட்ட தத்துவ நிலை...பழக்கம் அக்கா. சூழ்நிலைகளினாலும் அப்புறம் 6 வருடங்களுக்கு முன்ன என் ஆல்ஃபேக்டரி நெர்வ் பின்னந்தலையில் அடிபட்டதால் மணம் அறியும் சக்தி போயிடுச்சே...மணம் தெரியாது என்றால் சுவையும் தெரியாதே....மனம் பழகிவிட்டது. எப்போதேனும் கறிவேப்பிலை மணம் தெரியும்...அப்புறம் சில நாட்கள் தெரியாது. சில நாட்கள் புதினாவும் கொத்தமல்லியும் வித்தியாசமான ஒரு மணத்துடன் தெரியும்...அப்புறம் அதுவும் தெரியாது....

      எப்படி சமைக்கிற என்றால் சிலதுக்கு பிறரின் உதவி வேண்டியிருந்தது முதலில் ஆனால் அப்படி எனக்கு ஒருவரைச் சார்ந்திருப்பது சரியில்லையே என்பதால் பழக்கிக் கொண்டேன்...ஒரு வித டிக்ஷ்னரி என் மனதிற்குள் வைத்துக் கொண்டு...(உப்பு, புளிப்பு, காரம், கசப்பு, இனிப்பு, துவர்ப்பு எல்லாம் தெரியுமானால் ஃப்ளேவர்தான் தெரியாது...சமாளித்துவிடுவேன் என் டிக்ஷன்ரி வைத்துக் கொண்டு ஹா ஹா ஹா....)

      கீதா

      நீக்கு
  8. ஆகா...! அழகான படங்களை அழகாக பகிர்ந்து கொண்டது சிறப்பு...

    பதிலளிநீக்கு


  9. அட்டகாச படங்கள் எல்லாம் ஓகே கா..

    பறவைகள் சரணாலயம் ...ஆனால் பறவைகளை மட்டும் காணோம் ...கஷ்டம் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு. அந்த வருடம் வார்தா வந்ததால் பறவைகள் வரவில்லை...மற்ற சமயங்களில் வந்திருக்கின்றன...படங்கள் நெட்டில் செமையா இருக்கு....

      என்றாலும் எனக்கு வருத்தமாத்தான் இருந்துச்சு..ஆனால் புலிக்கட்டில் செமையா இருந்துச்சு....

      கீதா

      நீக்கு
  10. என்னாது... அங்க போய் ரெண்டு வருஷத்துக்கு மேலாக ஆகிவிட்டதே நீங்கள். இப்போதான் இடுகை போட்டிருக்கீங்க. இந்த நேரத்துக்கு அந்த இடம் ஆந்திரால இருக்கோ இல்லை தெலுங்கானாவுல இருக்கோ, சரணாலயம் அப்படியே இருக்கோ இல்லை புது தலைநகருக்காக இடத்தைப் பிடிங்கிட்டாங்களோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...ஹா ஹா ஹா ஹா இது ஆந்திராதான் தெலுங்கானா கிடையாது...ஹிஹிஹி

      ஜஸ்ட் பார்டர் தமிழ்நாட்டு..

      ஷார் வேறு இருக்கே அங்கு...ஸ்ரீஹரிகோட்டா...

      சரணாலயம் இடத்தைப் பிடுங்காமல் இருக்கனும்தான் நெல்லை ஆந்திராவே ...

      அமராவதி நாங்க போய்வந்து இடுகை போட்டிருக்கேனே...அங்கு பார்த்த இடங்கள் எல்லாம். அமராவதி அருமையான இடம் நெல்லை..சிறிய கிராமம்...போகும் வழி எல்லாம் வயலும், காலிஃப்ளவர், சிறுதானியம் என்று விளைச்சல்கள்...செமையா இருக்கும் இடமெல்லாம். கிருஷ்ணா நதிப்பக்கம் வேறு...அப்படி ஒரு செழுமையான இடம் நெல்லை. ஆந்திராவில் வட்லமுடில அது சின்ன ஊர்தான் காய் எல்லாம் செமையா இருக்கும். தோட்டத்துல விளைஞ்சது. பக்கதுலயே செழுமையா பக்கிங்காம் கனால்...வயல்கள் ஆரஞ்சு தோட்டம் சுத்தி....ஜஸ்ட் 45 மினிட்ஸ் ட்ராவல் செஞ்சா தெனாலி டவுன்...செம சீப்...எல்லாமே...

      தெனாலிக்கு ஷேர் ஆட்டொ ஜஸ்ட் 10 ரூபாய்தான். அங்குதான் ரயில் ஏறணும்...ஹையோ

      அமராவதி கேப்பிடல் என்று வருதுனதும் எனக்கு செம வருத்தம் அதையும் இடுகைல சொல்லிருந்தென்..அதுக்கு ஒரு ஆந்திராலருந்து கமென்ட் கூட வந்திருந்தது..அது யாருன்னு கூடத் தெரியலை...குண்டூரும் அழகா இருக்கும்...நகரம்...

      நீங்க அமராவதி பத்தி சொன்னதும் அதெல்லாம் நினைவுக்கு வந்துருச்சு...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. சுவை அதாவது ஃப்ளேவர் தெரியலைனாலும் கூட நான் சாப்பாட்டை மிகவும் ரசித்துச் சாப்பிடுவேன்...எல்லாரும் கேப்பாங்க...எப்படி சாப்பிடறனு....எனக்குப் பதில் சொல்லத் தெரியாது ஆனா நான் ரசித்துச் சாப்பிடுவேன்.....எப்படி ஃப்ளேவர் தெரியாம நல்லாருக்குனு சொல்லறனும் கேப்பாங்க...அதுக்கும் பதில் சொல்லத் தெரியாது...அதுவும் என் மனம் தான்...(அறு சுவை புலன் நல்லாருக்கே!!! மணம் குணம் தானே போயிடுச்சு....அதற்கும் மனம் பழகிவிட்டது...)

      ஒரு சில விஷயங்களில் கவனமா இருக்கனும்...தீஞ்சா மணம் தெரியாது....கேஸ் லீக் தெரியாது ஸோ கவனமா இருப்பேன்...

      கீதா

      நீக்கு
    3. //அதாவது ஃப்ளேவர் தெரியலைனாலும்// - இதுக்கு எனக்கு அர்த்தம் புரியலை கீதா ரங்கன்.

      எனக்கு கிட்டத்தட்ட 11 மாதங்களாக 'வாசனை அறியும் திறன்' திடுமென போய்விட்டது. இயல்பா எனக்கு அந்தத் திறன் அதீதமாக உண்டு. இதைச் சரிப்படுத்துவதற்கோ இல்லை ஆலோசனை கேட்க ஈ.என்.டியை அணுகவோ மனசுக்கு இஷ்டமில்லாமல் போய்விட்டது.

      என்னுடைய அலுவலகத்தில் (96ல் நடந்தது) ஒரு தடவை நான், 'எரியும் ஸ்மெல் வருது' என்று எழுந்து நின்று சொன்னேன். யாருக்கும் புரியாம செக் பண்ணும்போது கம்ப்யூட்டர் கனெக்‌ஷன் வயர் ஒன்று டிரிப் ஆவதைக் கண்டுபிடித்தார்கள். எல்லோருக்கும் ரொம்ப ஆச்சர்யம், அவ்வளவு பெரிய ரூம்ல எப்படி நான் டக் என்று கண்டுபிடித்தேன் என்று. அப்போது என்னுடன் வேலை பார்த்த பெண்ணுக்கு 'ஸ்மெல்' பண்ணும் திறமையே இல்லையாம். அதுனால கேஸ் லீக் மட்டும்தான் பிரச்சனை என்று சொன்னார்கள் (அவங்க கர்நாடகா காரி).

      நீக்கு
  11. பறவைகள், ரெப்டைல்ஸ் போஸ்டர் படங்கள் நல்லா இருக்கு, ஆனால் உயிரோடு ஒண்ணுத்தையும் காணோமே (குரங்குகளைத் தவிர)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெலப்பட்டுல வார்தா நால எல்லாம் ஒடுங்கிடுருந்துச்சு அப்ப. பறவைகள் வர வேண்டியவை வார்தா புயல் வந்ததால் வரலை...

      ஆனா புலிக்கட் ஏரில ஹையோ ஷார் போற வழில புலிக்கட் ஆரம்பிச்சதும் பறவைகள் கூட்டம் செமையா இருந்துச்சு...முடிஞ்ச மட்டும் க்ளிக்கிருக்கேன்...ஜூம் பண்ணித்தான் பலதும் க்ளிக் செய்ய வேண்டியிருந்துச்சு...என் கேமரா சாதாரண கேமரா தானே ஜூம் சக்தி குறைவுதான்..என்றாலும் பிடிச்சேன்...வரும்...படங்கள்

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  12. செம்மண் சாலைப்பாதையும் .சிற்றோடைகளும் நிழலுக்கு நாற்காலியும் அழகுதான் ..பறவைகள் மனித கண்ணுக்கெட்டாதூரத்தில் இருக்காங்கன்னு நினைக்கிறேன் .நம்மவர் மட்டும் நம்பி அருகில் வரார் :) செம ஸ்டைல் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல் அம்முறை கொஞ்சமே கொஞ்சம் பறவைகள்தான் ஆனால் உள்ளே தள்ளி இருந்திருப்பாங்க போல!!!

      நம்மவர் எப்போதுமே நம்ம பக்கத்துல வந்துருவாரே ஹா ஹா ஹா ஆமாம் அவர் ஸ்டைலே தனிதான்..

      மிக்க நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு

  13. பெலிக்கனுக்கு (Pelican) கூழைக்கடா என்று பெயர் வைத்த அந்த தமிழ்க்கடா யாரென்று தெரிந்துகொள்ள பரபரப்பாகிறேன்!
    அது இருக்கட்டும், அண்டி வந்த வாத்துக்களை ’ஆண்டிவாத்து’ என்றெல்லாமா கிண்டல் செய்வது.. ஒரு இங்கிதம் வேணாம்!

    போர்டில்: We’re wild but desire your fried ship.
    ஏன், பச்சையா இருந்தா சாப்பிட நன்னா இருக்காதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா நெஜம்மாவே நானும் இந்தப் பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆனேன்...

      அண்டி வந்த வாத்துக்களை ’ஆண்டிவாத்து’ என்றெல்லாமா கிண்டல் செய்வது.. ஒரு இங்கிதம் வேணாம்!//

      ஹா ஹா ஹா ஹா அண்ணா அது ஆண்டி வாத்துனு பெயராம்...தமிழ்ப்பெயராம்..உங்க வரியை ரொம்ப ரசித்தேன் அண்ணா..

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  14. அழகிய இடம் கீதா, மனதுக்கு மிக றிலாக்ஸ் தரும் இடங்கள். அந்த நீரோடை, செயற்கையாக செய்திருக்கினம் போல, அழகாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா அது செயற்கைதான். என்றாலும் மிக மிக அழகான இடம்...ரொம்பவெ மனதை ரிலாக்ஸ் செய்யும் இடம் தான் அதிரா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  15. பறவாயில்லை, இம்முறை இடம் பார்த்தாச்சு, இனி இன்னொருதடவை போனால், இடம் பார்க்காமல் பறவைகளை மட்டும் சூஊஊம் பண்ணிப் பார்த்திட்டு வாங்கோ. படத்தில பாஆஆஆஆஅம்புப்படமும் போட்டிருக்கே.. அங்கு இருக்கினமாமோ?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாம்புகள் இருக்கின்றன என்று சொல்லிருக்காங்க ஆநால் கண்ணில் தென்படவில்லை.

      ஆமாம் வாய்ப்பு கிடைத்தால் பறவைகளை படம் எடுத்து வரேன்.

      புலிக்கட் வரும் பாருங்க அதுல பறவைஅள் கூட்டம் கூட்டமா இருக்கும் படம் வரும் ...இன்று அல்லது நாளை போடுறேன் பதிவு

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  16. இந்தப் புயலுக்குள்ளும் என் கிரேட் குருக்குடும்பம் இருக்கிறார்களே. அழகாக இருக்கினம்.

    சாப்பாட்டைப் பார்க்க ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ எனக்குப் பசிக்குது.. அழகாக இருக்கு..விதம் விதமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா உங்க/நம்ம கிரேட் குரு குடும்பம் எங்குதான் இல்லை சொல்லுங்க!! அவங்களால எவ்வளவு பாடம்கற்கிறோம் இல்லையா?!!!!!

      சாப்பாடு நல்லாருந்துச்சு அதிரா..ஆந்திரா சாப்பாடு..பசிக்குதா எடுத்துக்கோங்க ஹா ஹா

      கீதா

      நீக்கு
  17. படங்கள் மிகவும் அழகு.
    பலருக்கும் பயனுள்ள தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி! மகன் கல்யாணம் முடிந்து எல்லா பரபரப்பும் முடிந்து வந்தாச்சு போல...நான் ஊருக்குக் கிளம்பிய அன்று உங்க பதிவு...வரேன்...

      மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  18. நான் பார்க்க ஆசைப்பட்ட இடம். இது வரை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களின் இப்பதிவு காணும் ஆர்வத்தை மிகுவித்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ முனைவர் ஐயா உங்கள் லிஸ்டில் உள்ள இடமா...அப்படி என்றால் புயல் வராத வருடம் சென்று பாருங்க ஐயா...

      மிக்க நன்றி ஐயா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  19. படங்கள் அனைத்தும் அழகு
    (சாதம் கொஞ்சம் அதிகம் தான். )

    சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள் என்று பார்த்தால் அடுத்து புலிக்கட் சென்றுவிட்டிர்கள். அது சரி, முக்கால் பாக சாப்பாட்டை அடுத்தவர்களுக்கு கொடுத்துவிட்டால் உண்ட மயக்கம் தொண்டனுக்கு எப்படி வரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா சொக்கன் சகோ ரெஸ்ட் எடுத்தா அப்புறம் புலிக்கட் எப்படி போறது இதுவே சாப்பாடே மூன்று மணி ஆகிடுச்சு...அப்புறம் 4 மணிக்குத்தான் கிளம்பினோம்...இங்குள்ள பறவைகளை மிஸ் செய்திடக் கூடாதே...அதான்

      மிக்க நன்றி சொக்கன் சகோ

      கீதா

      நீக்கு
  20. அழகழகான பதிவுகளுடன் இனிய பதிவு...

    வருடத்தில் சில நாட்களாவது நகரத்தின் சந்தடியிலிருந்து விலகி இப்படியான சூழலில் சுற்றித் திரிவது நல்லது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை அண்ணா. ஆமாம் அண்ணா நிஜமாகவே இப்படியான இயற்கையுடன் ஒரு தினமேனும் இருந்துவிட்டு வருவது மனதிற்குப் புத்துணர்ச்சி..

      மிக்க நன்றி அண்ணா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  21. வனப் பயணம் என்றாலே மனதில் மகிழ்ச்சி ததும்பும் எனக்கு. இங்கே பார்க்க பறவைகளும் இருந்து இருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும்.

    இதோ அடுத்த பகுதியை பார்க்க வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி!! எனக்கும் வனப்பயணம் அருவி என்றால் ரொம்பவே மனம் துள்ளும். இங்கு பறவைகள் வார்தா புயலினால் வரலை...

      மிக்க நன்றி வெங்கட்ஜி!

      கீதா

      நீக்கு
  22. படங்கள் எல்லாம் அழகு.
    நான் ஊரில் இல்லாத போது போட்ட பதிவு போலும் இப்போதுதான் பார்த்தேன்.
    இங்கு போனது இல்லை.
    படங்கள் போகும் ஆவலை தூண்டுகிறது.
    அமைதியான இடம் போல! நிறைய பேராக போனால் தான் நன்றாக இருக்கும் இல்லையா?
    உணவு படம் அழகு. சாதம் மட்டும் அதிகம்தான். மற்றவை அளவாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா நீங்கள் ஊரில் இல்லாதப்ப போட்ட பதிவுதான். உங்களை நினைத்துக் கொண்டேன்....

      பறவைகள் இருக்கும் நேரத்தில் போகனும் அக்கா...நாங்கள் போனது சீசன் தான் என்றாலும் வார்தா புயல் வந்து சென்ற நேரம் என்பதால் பறவைகள் இல்லை...

      ஆமாம் அக்கா சாதம் மட்டும் கூடுதல் மற்றவை எல்லாம் அளவுதான் நன்றாக இருந்தது.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  23. பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா...இன்னும் பூக்கள் இதே பூக்கள்தான் வேறு வேறு கோணத்தில் இடங்களில் என்று இருக்கு ஆனால் போடலை நிறைய படங்கள் என்பதால்..

      கீதா

      நீக்கு