சனி, 17 டிசம்பர், 2016

வார்த - என் பார்வையிலும், எனது மூன்றாவது விழியின் பார்வையிலும் -3

சென்னையின் இயல்பு வாழ்க்கையையே ஒரு சில மணி நேரங்களில் வாரிக் கொண்டுச் சென்ற வார்த. ஒரு சில மணி நேரங்கள்தான்! ஆனால், சுழற்றிச் சுழற்றி அடித்து வாரி ஆட்டம் போட்டது. இயற்கை அன்னையின் சிக்சர் பௌன்சர்! இயற்கை அன்னை எவ்வளவு அழகானவளோ, எவ்வளவு அமைதியானவளோ, எவ்வளவு நன்மை தருவாளோ, அத்தனைக்கும் நிகராக, அந்த அன்னை சீற்றம் கொண்டால் பெரும் சீற்றத்துடன், பேரிசைச்சலுடன், தாண்டவம் ஆடி எல்லாவற்றையும் புரட்டியே போட்டும் விடுவாள். எங்கள் வீட்டின் - முதல் மாடி - பால்கனி வழியாகத் தண்ணீரை அறைக்குள் தள்ளிக் கொண்டே இருந்தாள். நாங்களும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் தள்ளி விட்டுக் கொண்டே இருந்தோம். அன்னையின் இந்தச் சீற்றத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே, பல எண்ணங்களுடன், நான் வார்த புயலையையும் , மழையையும் ரசித்தேன்.


புயல் காற்று நின்றதும் நான் எங்கள் பகுதியைப் பார்வையிடச் சென்றேன். புயல் கரையைக் கடந்து சென்றதும், போருக்குப் பின் அமைதி என்பது போல் அப்படியொரு அமைதி. ஆனால் நிலமோ, போருக்குப் பின் வீரர்களும், யானைகளும், குதிரைகளும் மடிந்து இரத்த வெள்ளத்தில் பிணக்குவியல்கள் மலை போல் காணப்படுவது போல், மரங்கள் வேரோடும், ஒடிந்தும் வீழ்ந்து, சாய்ந்திருக்க, நின்றிருந்த மரங்களில் பல, கணவரைப் போரில் இழந்த விதவைகள் போல் இலைகள் உதிர்ந்து மொட்டையாய், ஒரு போர் பூமி போல் காட்சியளித்தது. அளிக்கிறது. ஆடி அடங்கியபிறகு சிறிது நேரத்தில் வருடிக் கொடுக்கும் சிறிய காற்று!

“அடிப்பாவி! நீயா சற்று நேரம் முன்பு இப்படித் தலைவிரித்தாடியது? ஒன்றுமே நடவாதது போல் இப்படி வருடிக் கொடுத்துக் கொண்டு அமைதி காக்கிறாயே! பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது போல் அல்லவா இருக்கிறது உன் செயல்! உன் சீற்றத்திற்கான காரணம்தான் என்னவோ?” என்றும் என் மனம் கேட்டது.

“ஏய் மனிதா நீ உன் பேராசையில், உனக்கு நிழல் கொடுத்த, கனிகள் கொடுத்த, மண் அரிப்பைத் தடுத்த, நிலத்தடி நீரை சேமிக்க உதவிய என் மரங்களை வெட்டி வீழ்த்தி அதில் அடுக்கடுக்காய் கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று கட்டினாயே! இப்போது பார் அதே மரங்களை நான் வீழ்த்துகிறேன்! இப்போது பார் நீ வசிக்கும் நிலத்தை. வெட்ட வெளியாகிவிட்டது இல்லையா? ஒவ்வொரு மரத்தையும் வளர்க்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை உற்றுக் கவனித்துக் கற்றுக் கொள்! இனி வரும் கோடை மேலும் கடும் கோடையாக இருக்கும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள். அத்தண்டனையை அனுபவி. இனியேனும் உனக்குப் புத்தி வரட்டும்!” என்று சொல்கிறாளோ என்பது போல் தோன்றியது.

"சரி மனிதனைத் தண்டிக்க நினைக்கிறாய்! மிகவும் சரியே! ஆனால், வாயில்லா உயிர்களான பறவைகளும், குஞ்சுகளும், இன்னும் குஞ்சுகள் வெளிவராத நிலையிலான முட்டைகளும் அல்லவா  அன்று இறந்தன." என்ற என் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. இல்லை இல்லை என் மூளைக்குள் அதற்கான பதில் இல்லை!
 
இந்திராநகர் பேருந்து நிறுத்தம்
நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதி
எங்கள் பகுதி முழுவதும் நிழற்சாலைகள். பசுமை நிறைந்த இடம். ஆனால், நான் கண்டதோ? நான் நடைப்பயிற்சி செய்யும் மரங்கள் அடர்ந்த நிழற்சாலைகள் அனைத்தும் வெட்டவெளியாய், வேரோடு சாய்ந்த பெரிய மரங்கள், இலைகள் இழந்து மொட்டையாய் மரங்கள், கிளைகள் ஒடிந்து ஊனமுற்ற மரங்கள் என்று சாலையில் குவிந்து இருந்தக் காட்சியைக் கண்டு என் மனம் வெம்பி, விக்கித்து நின்றுவிட்டேன், இனி எத்தனை வருடங்கள் ஆகும் மீண்டும் இச்சாலைகள் அனைத்தும் முன்பு போல் நிழல் தருவதற்கு?

மறு தினமே அடித்த வெயிலின் கடுமை தெரிந்தது! பல இடங்கள் சென்றேன். அனைத்துச் சாலைகளிலும் மரங்கள் வீழ்ந்து போக்குவரத்தைத் தடுத்திட போக்குவரத்து நெரிசல். போக்குவரத்தை ஒழுங்கு படுத்திட நிறையக் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல இடங்களில் கார்களும், கட்டிடங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பேருந்து ஒன்று கவிழ்ந்தது என்று சொல்லப்பட்டு விழுமியம் பகிரப்பட்டது. எனக்குக் கிடைக்கவில்லை.

எல்லா இணையத் தொடர்புகளும் அற்று, அலைபேசிகள் தொடர்புச் சேவையும் செயலிழந்து, மின்சாரம் தடைப்பட்டு, தண்ணீரில்லாமல் என்று இதுவரை இன்னும் முழுவதும் மீண்டபாடில்லை. இணையத் தொடர்பும், அலைபேசித் தொடர்புகளும், மின்சாரமும் அவ்வப்போது செயலிழந்து விட்டுவிட்டுத்தான் வருகிறது.

அன்று புயல் நின்றதும், அந்தந்தப்பகுதியைச் சேர்ந்த மக்களே, பொதுச் சேவையை எதிர்பார்க்காமல் மரங்களை வெட்டி அகற்றிச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தற்போது பொது மக்களுடன், பொதுச் சேவைப் பணியாளர்களும், மலை போல் குவிந்து கிடக்கும் மரங்களையும், குப்பைகளையும் அகற்றிடத் துப்புரவு பணியாளர்களும் இணைந்து கொண்டு மீட்புப் பணிகள் நடக்கின்றது, என்றாலும், சென்னை முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பிட இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்றே தோன்றுகின்றது. கட்டிடக் காடாக இருந்த சென்னை இப்போது காடு போல் காட்சியளிக்கிறது. கட்டிடங்கள் பெருகிவரும் சென்னையில் இத்தனை மரங்களா என்ற வியப்பு ஒரு புறம். ஐயகோ! இருந்த மரங்களும் இப்படி வீழ்ந்துவிட்டனவே என்று வேதனை மறுபுறம். என்ன செய்வது? நம்மை எல்லாம் மீறிய வலுவாய்ந்த இயற்கையின் சீற்றத்தை எதிர்க்க முடியுமா!!! 

நான் எடுத்த சில புகைப்படங்களுடன் எனது உறவினர் அனுப்பிய மூன்று புகைப்படங்களும்.

 
படத்திலேயே எந்த அலுவலகம் என்று தெரிந்துவிடும். டைடல் பார்க்கிற்கு அடுத்திருப்பது
 டைடல் பார்க் முன் - புயல் நின்றதும் எடுத்த படம்மேலே நந்தனம் சிக்னலில்  
கீழே கோடம்பாக்கம் பகுதி
 மறுதினமே வெயில் சுளீரென்று அடித்தது
 
 கீழே நீலாங்கரையில்
 


----- கீதா
படங்கள் எல்லாம் புயல் அன்றும் அடுத்தும் எடுத்து, பதிவும் எழுதியிருந்தாலும் இணையத் தொடர்பு சரியாக இல்லாததால் இன்றுதான் வெளியிட முடிகிறது. இன்னும் முழுவதும் சரியாகவில்லை.





16 கருத்துகள்:

  1. புகைப்படங்கள் வேதனை அளிக்அளிக்கி

    பதிலளிநீக்கு
  2. புயலின் கோரத்தாண்டவத்தை
    படங்களின் மூலம் உணர முடிந்தது
    போருடன் புயலை ஒப்பிட்ட விதம் அருமை
    இனியாவது இயற்கை அன்னை கோபப்படாதிருக்க
    செய்ய வேண்டியதைச் செய்வோமா ?

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அண்ணா

    இயற்கையை வெல்ல யாரால் முடியும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இறைவனை பிராத்திப்போம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. இயற்கையின் பேரிடரை எடுத்துச்சொல்லும் விதமாக ஆக்ரோஷமான புகைப்படங்களுடன் கூடிய மிக அருமையான பயனுள்ள பதிவு.

    போருடன் புயலை ஒப்பிட்ட விதம் மிகவும் அருமை.

    மனித சமுதாயத்திற்கு இனியாவது ஓர் நல்ல விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையும் ஏற்பட இயற்கை காட்டியுள்ள சீற்றமாகவே இதனை உணரமுடிகிறது.

    பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்த்து வந்ததுபோல உணர முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்தையும் பார்க்கும் போது, மனதில் சொல்ல முடியாத வேதனை....

    பதிலளிநீக்கு
  6. கால மாற்றத்தால் பொருட்சேதம் மட்டுமே என்பது தெரிகிறது உயிர்ச் சேதம் தவிர்க்கப் பட்டது நன்று

    பதிலளிநீக்கு
  7. பார்க்கவும் படிக்கவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் குறைவானது என்பது மனதிற்கு சற்று ஆறுதலைத் தரும் செய்தியாகும்.

    பதிலளிநீக்கு
  8. இயற்கை அன்னையின் கோர தாண்டவம்...!

    பதிலளிநீக்கு
  9. One thing ...
    Nature is very kind
    compared to the artificial one last year.
    stay safe

    பதிலளிநீக்கு
  10. யானைக்கு மதம் பிடித்தால் எப்படியிருக்கும்? நாம் ரசிக்கும் அதே யானை ருத்ரதாண்டவம் ஆடும். மரணபயத்தை உண்டாக்கும். மதம் அடங்கியதும் மெல்ல ஆடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்... அது போல! படங்கள் நல்ல கலெக்ஷன்!

    பதிலளிநீக்கு
  11. ஒருவாரமான பின்பும்கூட , மின்சாரம் கூட சீரடையாமல் மக்கள் சிரமப் படுவது வருத்தமளிக்கிறது !

    பதிலளிநீக்கு
  12. படங்களைப் பார்க்கும் பொது கோரத்தாண்டவம் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
  13. அருமையான கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. துயரக் காட்சிக்கு
    நற்சான்றாகத் தங்கள் பதிவு
    அருமையான பகிர்வு
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  15. புயலின் தாக்கம் இன்னமும் சரியாகவில்லை என்பது புரிகிறது. ஆங்காங்கே மக்களே விழுந்த மரங்களை அப்புறப்படுத்துகிறார்கள் என்னும் செய்தி ஆறுதலையும் அளிக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் அரசைக் குறை சொல்வதிலேயே இருக்கின்றன! :( படங்கள் எல்லாம் சேதத்தின் அளவைச் சொல்கின்றன. ஒவ்வொரு படமும் ஒரு வேதனையான கவிதை! இந்த மரங்களை எப்படி மீட்டெடுப்போம்? வேருடன் விழுந்த மரங்கள் உயிருடன் இருந்தால் விழுந்த இடத்திலேயே புதைக்குமாறு அறிவித்துக் கொண்டிருந்தனர். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  16. படங்களை பார்த்ததுமே எனக்கும் போர்க்கள நினைவே வந்தது, சரியாய் நீங்களும் அதையே சொன்னீர்கள்.
    மனிதனின் பேராசையே இவற்றிற்கு காரணம்

    பதிலளிநீக்கு