வியாழன், 15 செப்டம்பர், 2016

தமிழரிடையே மறைந்து வருகிறதா? குழந்தையின் முதல் தமிழ் வார்த்தை

அம்மா என்பது தமிழ் வார்த்தை - கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் அருமையான பாடல். நான் ரசிக்கும் பாடல். உங்களுக்காக...

அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை!
அருமையான பாடல். சரி இது எதற்கு இப்போது?

எங்கள் நண்பர் குடும்பத்தில், குழந்தைகள் பெற்றோரை மம்மி, டாடி என்றே விளிக்கின்றர்.

மிகவும் நல்ல மனதுடைய பெற்றோர். சாதாரணமானவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள். ஆனால். தந்தை ஓட்டுநர் வேலை பார்ப்பவர். தாய், பள்ளிக்கூடம் ஒன்றில் துப்புரவுப் பணியாளர். எனக்கும் என் மகனிற்கும் நல்ல நண்பர்கள்.

தங்களுக்குத்தான் கல்வியறிவு இல்லை தங்கள் குழந்தைகளேனும் நல்ல கல்வி பெற்று, நல்ல நிலையில் வாழ வேண்டும், அதுவும் பள்ளியில் அடி எடுத்து வைக்கும் முதல் தலைமுறை என்பதால் சற்றுக் கூடுதல் கவனம் வேறு. ஆங்கில வழிக் கல்வி.

இப்படித்தான், நான் பார்த்த வரையில், நகரங்களிலும், சிறு நகரங்களிலும் வசிக்கும் பெரும்பான்மையான, கல்வியறிவு இல்லாத பெற்றோர்களும், சிறிது கல்வியறிவு பெற்ற பெற்றோரும் சரி, தாங்கள் கல்வியறிவு பெறவில்லை என்பதற்காகத் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என்று தங்களை அம்மா, அப்பா என்று அழைக்கக் கூடாது என்று சொல்லி மம்மி, டாடி என்றுதான் விளிக்கச் சொல்கிறார்கள். மாமாவை அங்கிள் என்றும், அத்தையை ஆண்டி என்றும் அழைக்கச் சொல்கின்றார்கள்.

இந்தப் பழக்கம் கொஞ்சம் மேல் தட்டு மக்களிடையே மம்மி, டாடி என்பதற்குப் பதில் மாம், டாட். அவ்வளவே.

அம்மா என்பது எவ்வளவு அழகான வார்த்தை! உலகில் எந்த மொழி பேசும் நாட்டிலும் மாடும் கூட “மா” என்றுதான் கத்துகிறது!

எனக்கு எனது 6 ஆம் வகுப்பில் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் தான் நினைவுக்கு வருகிறார். அருமையான தமிழ் ஆசிரியர்.

உயிர்மெய் எழுத்து பற்றி தமிழ் இலக்கண வகுப்பில் கற்பித்த போது அவர் சொன்ன விளக்கம் இதுதான்.

உயிர் எழுத்து + மெய் எழுத்து = உயிர்மெய் எழுத்து

இப்படித்தான் கரும்பலகையில் அவர் எழுதினார். இதற்குச் சொன்ன உதாரணங்கள் வழக்கமாகச் சொல்லப்படும் உதாரணங்கள்.

இன்று இப்போது உங்களுக்குச் சொல்லப் போவது இதற்கான முழுமையான உதாரணம் அல்ல ஆனால் நீங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

நீங்கள் எல்லோரும் உங்கள் பெற்றோரை எப்படி அழைப்பீர்கள்?

வகுப்பில் பத்து பேரைத் தவிர எல்லோரும் சொன்னது அம்மா, அப்பா. அந்தப் பத்து பேரில் ஆறு பேர் சொன்னது மம்மி, டாடி. மற்ற நான்கு பேரும் சொன்னது அம்ம/அம்மே, அச்சா/சோ.

உங்கள் தாய்மொழி என்ன?

ஆறு பேர் தமிழ் என்றனர். நான்கு பேர் மலயாளம்

தமிழ் மொழிக்கே உரித்தான அந்தப் பெருமையை இதோ சொல்கிறேன் இதற்குப் பிறகாவது உணர்ந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆறு பேரும் உங்கள் பெற்றோரைத் தமிழில் அழகுற விளியுங்கள் என்றார்.

அ  - உயிர் எழுத்து;  ம் – மெய்யெழுத்து;   மா – உயிர்மெய் எழுத்து.

அ – உயிர் எழுத்து;   ப் – மெய்யெழுத்து    பா – உயிர்மெய் எழுத்து

நான் கையை உயர்த்திக் கொண்டு எழுவதைப் பார்த்ததும் ஆசிரியருக்குப் புரிந்து விட்டது.

அ + ம் = ம     அ + ப் = ப. எப்படி மா, பா வரும் என்பதுதானே உன் கேள்வி? 

அம்ம சரிதான். அதன் விளக்கம் இப்போதைய வகுப்பில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

இப்போது எனது அர்த்தத்திற்கு வருகிறேன். மா என்பதும் உயிர்மெய் தானே? அதனால் மா என்பதையும் உயிர்மெய் என்பதையும் மட்டும் எடுத்துக் கொள்வோம்.

மெய் என்றால் உடல் என்ற பொருளும் உண்டு.

உயிரும், மெய்யும் இணைந்து. உயிர்மெய்

அம்மா அப்பா என்ற இரு உயிர்களும், மெய் களும் இணைந்து பிறப்பது குழந்தை எனும் உயிர்மெய். இப்படியும் கொள்ளலாம்

குழந்தைகளாகிய உங்களுக்கு உயிர் கொடுத்தவர் அப்பா. உங்கள் அம்மாவின் வயிற்றில் நீங்கள் கருப்பையில் வளரும் போது உங்களுக்கு உங்கள் உடல் அதாவது மெய்யின் பாகங்கள் உருவாகக் காரணமானவள் உங்கள் அம்மா. இப்படியும் கொள்ளலாம்.

அந்த உயிரும், மெய்யும் சேர்ந்து உயிர்மெய்யாகி வந்தது குழந்தைகளாகிய நீங்கள். எதிர்காலத்தில் நீங்களும் இப்படித்தான் பல உயிர்மெய்களை உருவாக்குவீர்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இதைச் சொல்லிக் கொடுங்கள். அம்மா, அப்பா என்றே சொல்லிக் கொடுங்கள்.

பிற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும் எனது அறிவுரை, உங்கள் தாய் மொழியிலேயே உங்கள் பெற்றோரை அழையுங்கள் என்பதே.

வேறு எந்த மொழியிலும் இல்லாத பெருமை, இந்த இரு வார்த்தைகளுக்கும் இப்படிப் பொருள் கொள்ளும் பெருமை தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதால் உங்கள் பெற்றோரை அம்மா, அப்பா என்றே விளியுங்கள்! தயவாய்! உங்கள் தாய் மொழியைப் போற்றிப் பெருமை சேருங்கள்! தமிழ்த்தாயின்/மொழியின் அற்புதங்கள் பல! என்று வகுப்பை முடித்தார்.


அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே!! – புலமைப்பித்தன் 

அமுதே தமிழே அழகிய மொழியே- எப்போது கேட்டாலும் சலிக்காத நான் ரசிக்கும் பாடல். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்

-----கீதா (இந்தப் பதிவு எழுதி கிட்டத்தட்ட இரு வருடங்கள் ஆகிவிட்டன. அதைத் தேடி எடுத்து இப்போதுதான் வெளியிட முடிந்தது)

காணொளிகள் யுட்யூபிலிருந்து. 



28 கருத்துகள்:

  1. வணக்கம்... நலமா ?

    அம்மா என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தும் அழகான, அவசியமான பதிவு...

    உலகின் வேறந்த நாட்டினரையும் விட, இந்தியாவுக்குள்ளேயே பார்த்தால் மற்ற மொழிக்காரகளைவிட தமிழர்களின் ஆங்கில மொழி பித்து அதிகம் ! கவனித்து பாருங்கள்... சிங்கப்பூரில் சீன மொழி, அரபுநாடுகளில் அரபி... மலேசியாவில் மலாய் மொழி... இந்த நாடுகளிலெல்லாம் வாழும் தமிழர்களின் பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழிகளில் தாய் தந்தையரை விளித்தால் கூட பிழைக்க வந்த நாட்டின் மொழி என கொள்ளலாம்... ஆனால் அந்த பிள்ளைகளுக்கும் மம்மி டாடி தான் !

    தமிழரின் ஆங்கில மோகம் குறையாத வரையிலும் தமிழ் சிறக்க வழியில்லை !

    ஆனால் இலங்கைதமிழர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். புலம் பெயர்ந்து, ஐரோப்பா, ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா, கனடா என எங்கிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் போதிப்பதை நிறுத்தவில்லை. அந்தந்த நாடுகளில் எத்தனையோ துறைகளில் சிறப்பாக முன்னேறிய இன்றைய இளம் தலைமுறை இலங்கை தமிழ் பிள்ளைகள் தங்கள் வீடுகளில் சரளமாக தமிழ் பேசி,பெற்றோர்களை அம்மா, அப்பா என்றே அழைக்கிறார்கள் !

    நன்றி
    சாமானியன்

    எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சாமானியன் சாம். நலமே. தாங்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். மிகவும் சரியே. நீங்கள் சொல்லியிருக்கும் முதல் வரியை எழுதிவிட்டு பின்னர் எடுத்துவிட்டேன். இதிலும் கூட நம் நாட்டுத் தமிழர்களைக் குறித்துதான் எழுதியுள்ளேன். முதலில் தமிழ்நாட்டில் என்று தலைப்பிட்டுவிட்டு அதையும் அப்புறம் மாற்றினேன்.

      நீங்கள் சொல்லுவது போல் நம் அன்பர்கள் இலங்கைத் தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ் போதிப்பதை நிறுத்தவில்லை.தங்களின் பின்னூட்டத்தின் இறுதி வரிகளை அப்படியே ஏற்கின்றேன். இப்போது தலைப்பில் அவர்களும் அடங்கிவிட்டனரல்லவோ என்று தோன்றுகின்றது.

      மிக்க நன்றி தங்களது விரிவான கருத்திற்கு. தங்கள் பதிவையும் பார்க்கின்றோம்.

      நீக்கு
  2. தாய்மொழியைப் பேசுங்கள், தாய்மொழியால் எழுதுங்கள் என்று எழுதுமளவுக்கும், விவாதிக்குமளவுக்கும் நாம் போய்விட்டோம் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. தமிழரிடையே மறைந்து வருகிறதா என்றுள்ளீர்கள். மறைந்துவரவில்லை. முற்றிலும் போய்விட்டது என்றே கொள்ளலாம். நேரில் நண்பர்களிடம் பேசும் உரையாடல் தொடங்கி ஊடகங்களின் பல நிகழ்வுகள் வரை ஆங்கிலம் என்பதே மேலோங்கி நிற்கிறது. எங்கள் பேரனுக்கு (தற்போது வயது 3) தமிழழகன் என்று பெயர் வைத்துள்ளோம். என்னங்க இந்த காலத்துல இதுமாதிரி பேர் வச்சுருக்கீங்க என்று கேட்டவர் ஏராளம். இது என்ன காலம் என எனக்குப் புரியவில்லை. இதை நினைத்து சிரிப்பதா? வேதனைப்படுவதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா தங்கள் கருத்துகள் அருமை ஐயா. தங்களின் ஆதங்கமும் புரிகிறது. அழகான பெயர். சமீபத்தில் கும்பகோணம் அருகே உள்ள ஒரு சிறு ஊரிலிருந்து வந்து, என் கணவருடன் வேலை செய்யும் பையனைச் சந்தித்தேன் அவரது பெயரைக் கேட்டதும் எனக்கு மனம் மகிழ்வடைந்தது. பெயர் கவிமுகில்!!! என்ன ஒரு அழகான பெயர்!! அவரது தாத்தா வைத்த பெயராம். அதற்கு அடுத்து அவரது தம்பி, தங்கைக்கு எல்லாம் பெயர் நவீனப் பெயர் தான்.

      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு

  3. என்னது மம்மி டாடி என்பது தமிழ் வார்த்தைகள் இல்லையா???/போங்கப்பா உங்களுக்கு தமிழே சுத்தமாக தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ஹஹஹ் உண்மைதான் மதுரைத் தமிழன்!!! அட இது கூட என்ன ஒரு அழகான பெயர் இல்ல!!!

      நீக்கு
  4. உண்மைதான்இலங்கைத் தமிழர்களால்தான் தமிழ் இன்றும் போற்றப்படுகிறது

    பதிலளிநீக்கு
  5. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று பாவேந்தர் சொன்னார்,நம்மாளுங்க முழங்குவதற்கு பதிலாய் தமிழுக்கு சங்கு ஊதி வருவது வருத்தம் தரும் விடயமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாணியில் கருத்து அருமை பகவான் ஜி!! மிக்க நன்றி

      நீக்கு
  6. தாய் மொழி எது என்பதே சந்தேகமாயிருக்கும் பலரும் இருக்கின்றனர் இது குறித்து ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் என் மூத்தமகன் அம்மா அப்பா என்றே கூப்பிடுவான் எனிளைய மகன் அம்மா டாடி என்று அழைப்பான் என்வீட்டில் என் பேரக்குழந்தைகளுக்கு நான் அப்பாதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! ஆம் உங்கள் பதிவு வாசித்துள்ளோம் சார்!

      நீக்கு
  7. நல்ல பதிவு கீதா. என் பேரன் அயல்நாட்டில் இருந்தாலும் தமிழில் பேசுகிறான். தமிழ்சங்கம் மூலம் வாராவாரம் சனிக் கிழமை தமிழ் படிக்கிறான், எழுதுகிறான்.
    என் மருமகள் தமிழ் சொல்லி தருகிறார். தமிழ்சங்கத்தில் . நாம் வீட்டில் தமிழ் பேசினால் குழந்தைகள் பேசுவார்கள். அம்மா, அப்பா என்று அழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தால் சொல்வார்கள்.

    பாடல் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு விஷயம் கோமதி அக்கா மிகவும் மகிழ்வாக இருக்கிற்து தங்கள் பேரனைக் குறித்து நீங்கள் சொல்லியிருப்பது. மிக்க நன்றி கோமதிக்கா

      நீக்கு
  8. என்ன செய்ய? தமிழில் பேசுவது அந்தஸ்துக் குறைவாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  9. நமக்கு தமிழில் பேசினால் அந்தஸ்து இல்லை...
    இலங்கைத் தமிழர்களாலேயே நல்ல தமிழ் வாழ்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான். மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. தமிழில் பேசுவதை மட்டமாக நினைக்கின்றனரே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் அப்படித்தான் கீதாக்கா. மிக்க நன்றி க்ருத்திற்கு

      நீக்கு
  11. நல்ல பகிர்வு. இங்கேயும் பலருக்கு டாடி மம்மி தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பல இடங்களில் அப்படித்தான் மாறி வருகிறது வெங்கட்ஜி..மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  12. நான் பயின்றதும் நல்ல தமிழாசிரியர்களிடம் தான்..

    அவர்களும் இப்படித்தான் கற்பித்தார்கள்..

    தமிழ்ச் சமுதாயம் - வெற்று ஆடம்பரத்திற்காக வாழ ஆசைப்படுவது.. அதனாலேயே பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக போலி ஆங்கிலப் பித்துப் பிடித்து அலைகின்றது...

    யார் மாற்றக்கூடும்?..

    நல்ல பதிவினுக்கு மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாசிரியர்கள்....ஆமாம் ஐயா. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  13. //அம்மா அப்பா என்ற இரு உயிர்களும், மெய் களும் இணைந்து பிறப்பது குழந்தை எனும் உயிர்மெய்// அருமையான விளக்கம்.

    சமீபத்தில் சென்னைக்குப் போய்க்கொண்டிருந்தபோது ரயிலில் ஒரு பாட்டி தன பேரனுடன் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தார். நான் அந்தக் குழந்தையிடம் தமிழில் அதன் பெயர், எந்த வகுப்பு என்று கேட்டபோது புரிந்துகொண்ட நன்றாக பதில் சொல்லியது அந்தக்குழந்தை. பாட்டிக்கு தமிழில் பேசுவதில் என்ன கௌரவக் குறைச்சல் என்று புரியவில்லை. ஒருதலைமுறையை விட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  14. நான் பார்த்த வரை படிக்காதவர்களும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களும்தாம் பெரும்பாலும் இப்படிப் பிள்ளைகள் தங்களை ஆங்கிலத்தில் அழைக்க வலியுறுத்துகிறார்கள். நீங்கள் கூறியதிலிருந்து மேல்தட்டுக் குடும்பங்களிலும் இப்படித்தான் எனத் தெரிகிறது. மற்றபடி, நடுத்தரக் குடும்பங்களில் இன்றும் ‘அம்மா’, ‘அப்பா’தான்.

    என்னைப் பொறுத்த வரை, பிள்ளைகளை மம்மி எனக் கூப்பிடச் சொல்கிறார்களோ டம்மி எனக் கூப்பிடச் சொல்கிறார்களோ, குறைந்தது தமிழில் சரளமாகப் பேசவும் படிக்கவும் பிள்ளைகளுக்குக் கற்பித்தாலே அத்தகைய பெற்றோர்க்குக் கைகூப்பி நன்றி கூறுவேன்!

    பதிலளிநீக்கு