சனி, 27 ஆகஸ்ட், 2016

மயங்கிக் கிடக்கும் மனிதாபிமானம்

From Hospital, Odisha Man Carried Wife's Body 10 Km With Daughter
படம் இணையத்திலிருந்து

மரணம் எந்த வயதில் யாருக்கு ஏற்பட்டாலும் அது அவரது குடும்பத்தினருக்குத் தரும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தனக்கு உறுதுணையாகவும், தனது 12 வயது மகளுக்கு எல்லாமுமாக இருந்த தன் மனைவியை, தனது கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது ஒடிஷாவைச் சேர்ந்த அவருக்குத் தன் மனைவி எப்படியேனும் நோயிலிருந்து குணமாகி விடுவார் என்ற அசையாத நம்பிக்கை இருந்தது. ஆனால் எவ்வளவோ முயன்றும் மனைவியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் சொன்னதும் அவரும், மகளும் அதிர்ந்தே போனார்கள். மனைவியின் உயிரற்ற உடலை வீட்டிற்குக் கொண்டு சென்று இறுதி மரியாதை செய்து உடலை அடக்கம் செய்ய வேண்டும்.

கையில் பணம் இல்லாத ஆதிவாசியான அவர் மருத்துவமனையிலிருந்து உடலைக் கொண்டு போக ஆம்புலன்ஸ் கிடைக்குமா என விசாரிக்க, மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் கை விரித்துவிட்டார்கள். கூடி நின்றவர்கள் எல்லாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. யாரும் உதவமாட்டார்கள் என்பதை உணர்ந்த அவர் தன் மனைவியின் உயிரற்ற சடலத்தைத் தன் கைவசமிருந்த துணிகளால் சுற்றிக் கட்டி, தோளில் ஏற்றி நடக்கத் தொடங்கினார்.  இதை எழுதும் போது கண்களில் நீர் நிரைகிறது.

சமூகச் சேவை செய்யும் எத்தனையோ இயக்கங்களும், மனிதர்களும் வாழும் நம் நாட்டில், அவருக்கும், கதறி அழும் மகளுக்கும் அப்போது உதவிக்கரம் நீட்ட ஒருவரும் அங்கு இல்லாமல் போனதை எண்ணும் போது மனது துடிக்கிறது. எப்போதும் எல்லா இடத்திலும் அவரவர் பிரச்சனைகள் அவரவருக்குத்தான். காண்போர்கள் காண மட்டுமே செய்வார்கள்.

இந்தக் கால கட்டத்தில் கையில் மொபைல் இருந்தால் அதைப் படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் போடுவார்கள் அவ்வளவே. கூடி நிற்கும் கூட்டம் தனக்கு உதவப் போவதில்லை என்பதை உணர்ந்த அவர் தன்னுடன் மரணம் வரை இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட மனைவியின் உடலைத் தோளில் ஏற்றி 60 கிலோமிட்டர் தொலைவிலுள்ள கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

இதனிடையே ஊடகங்கள் வாயிலாக செய்தி உலகெங்கும் பரவியது. ஏதோ ஒரு சேனலைச் சேர்ந்தவர்கள் அச்செய்தியைக் காட்டியதோடு நில்லாமல் மாவட்ட ஆட்சியாளருக்கு அறிவிக்கவும் செய்தார்கள். பல மணி நேரம் கடந்து போனது. அவரோ எதையும் கவனிக்காமல் தன் உயிரற்ற மனைவியின் உடலுடன் நடந்துகொண்டே இருந்தார். அவருக்கு உதவ வந்த ஆம்புலென்ஸ் 12 கிலோமிட்டர் ஓடிய பின் தான் மனைவியின் சடலத்தை தோளில் ஏற்றிச் செல்லும் அவரின் அருகே சென்றடைய முடிந்தது. மயக்கமடைந்த மனிதாபிமானம் சுயநினைவுக்கு வந்து அவரைக் கவனிக்க இப்படிப் பலமணி நேரங்கள் வேண்டி வந்தது.
இதே போல்தான் வாகன விபத்திற்குள்ளாகி சாலையில் கிடப்போரது நிலையும். நேரத்தை வீணாக்காமல் மருத்துவமனையில் அவர்களைக் கொண்டு செல்லத் தயங்குவோர்தான் பெரும்பான்மையினர். நமக்கு ஏன் வம்பு என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.

இதனிடையே அப்படி விபத்து நேரும் நேரம் இரவானால் அப்படி நேரும் இடத்தின் அருகே அதிகமான ஆட்கள் இல்லாத வேளையில் அங்கு செல்லும் சிலர் உயிருக்கு மன்றாடும் பலரது நகைகள் மற்றும் உடைமைகளைக் கைப்பற்றும் மனிதாபிமானமற்ற செயல்களும் நம் நாட்டில் நடக்கத்தான் செய்கிறது.

சில வருடங்களுக்கு முன் சின்னமனூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிர் தப்பிய இரு இளைஞர்கள் தூரத்தில் கண்ட ஒரு கடைக்கு ஓடிச் சென்று விபத்தைப் பற்றிய விவரத்தைச் சொல்லி உதவி கேட்டிருக்கிறார்கள். போலீஸ் வழக்கு விசாரணை போன்ற பின் விளைவுகளுக்குப் பயந்துதான் தாங்கள் இது போன்ற நேரத்தில் உதவுவது இல்லை என்று சொல்லி இளைஞர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்! ஆக, இப்படிப்பட்ட மனநிலை வர நம் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஒரு காரணமாகிறது. இந்நிலை மாறி எல்லோரும் மனிதாபிமானமிக்கவர்களும், பிறருக்கு ஆபத்து நேரும் போது உதவுபவர்களாகவும் மாற வேண்டும். மாறுவது எப்போது?!! மனிதாபிமானம் மயங்கிக் கிடக்கிறதா? இல்லை மரித்தே விட்டதா?



10 கருத்துகள்:

  1. மனிதாபிமானமும் மரித்துவிட்டது
    சுயநலமும் பெருத்துவிட்டது நண்பரே
    தன் வீடு தன் பெண்டு தன் பிள்ளை
    இதுதான் இன்றைய யதார்த்தம்
    வேதனை வேதனை வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஐயா.. பதிவும் உங்கள் பின்னூட்டமும், நான் படித்த "தன் பெண்டு தன் பிள்ளை... தானுண்டு இவையுண்டு என்போன்.. சின்னஞ்சிறு கடுகு போல் உள்ளம் கொண்டோன் தெருவார்க்கும் பயன்ற்ற சிறிய வீணன்" என்ற பாவேந்தரின் (?) வரிகளை நினைவுபடுத்திவிட்டது.

      நீக்கு
  2. மனிதாபிமானம்
    காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது
    எனினும்
    இந்த விசயம் அவமானகரமானது
    தம +

    பதிலளிநீக்கு
  3. பெருமூச்சு! என்ன சொல்வது? அந்த மனிதரின் மனம் எப்படி இருந்திருக்கும்? கூடவே நடந்த அந்த மகளின் மனம்தான் என்ன பாடு பட்டிருக்கும்?

    பதிலளிநீக்கு
  4. மனிதாபிமானம் மயங்கித் தான் கிடக்கின்றது..

    பதிலளிநீக்கு
  5. மனிதாபிமானம் மறைந்து விட்டதோ என்று எச்சரித்ததே ஊடகங்கள் தானே

    பதிலளிநீக்கு
  6. S.P.SENTHIL KUMAR27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 9:45
    மனிதம் மரித்துப்போய் பல நாட்கள் ஆகிறது.
    நகர்ப் பகுதிகளில் சிறிய விபத்து சிறிய காயம் என்றால் மக்கள் உதவுகிறார்கள். அதுவே பெரிய விபத்து படுகாயம் என்றால் உதவத் தயங்குகிறார்கள். இதற்கு காரணம் பிரச்சனையில் மாட்டிகொள்வோமோ என்ற பயம்தான்.
    த ம 1

    பதிலளிநீக்கு

    KILLERGEE Devakottai27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 10:41
    Kanneer Anjali

    பதிலளிநீக்கு

    Avargal Unmaigal27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 11:38
    பிணத்தை தூக்கி சென்றதைவிட அந்த சிறுமியின் அழுகைதான் மனத்தை கொல்லுகிறது

    பதிலளிநீக்கு

    மனோ சாமிநாதன்27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 12:56
    மனிதாபிமானம் மரணித்து ரொம்ப காலம் ஆகிறது! உங்கள் பதிவைப்படிக்கையில் மனம் கனத்துப்போனது. இது மாதிரி உதாரணங்கள் அனுதினமும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்! ஏதோ சில மனிதர்களின் கருணையுள்ள‌த்தால் தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது. சமீபத்தில் தான் எந்த விநாடியும் மருத்துவமனையில் கணவர் இறக்கலாம் என்ற மருத்துவர்கள் சொன்ன நிலையில் தன் 12 வயது மகனை கவனிக்க வீட்டுக்கு சென்று விட்ட மனைவியைப்பார்த்த அதிர்ச்சி இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை!

    பதிலளிநீக்கு

    அபயாஅருணா27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 1:09
    மனிதாபிமானம் என்பது மனதளவில் பாவப் படத் தோணுகிறது எல்லாருக்கும் .
    ஆனால் எழுந்து போய் உதவுவதில் பலப் பல சிக்கல்கள் .பூச்செண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பிரச்னையில் மாட்டிக்கொள்ள யாருமே தயாராக இல்லை

    பதிலளிநீக்கு

    பரிவை சே.குமார்27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:17
    மனிதம் மரித்துப் போன நிகழ்வு இது...
    செல்போனில் படமெடுக்க நினைக்கும் மனிதன் உதவுவான் என்று நினைப்பது தவறு...
    காவல்துறையின் செயல்பாடுகளே உதவி செய்யாமைக்கு காரணம் என்றாலும் அதற்காக எப்படி ஒதுங்கியிருப்பது...? பாதிக்கப்பட்டவன் உறவினன் என்றால் தானே முன்வந்து உதவுவோமே...
    இப்போ சாதிதான் சமூக வலைத்தளங்களில் முன் நிற்கிறது... அது இழுத்துச் செல்லும் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டோம்...
    எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டோம்...

    பதிலளிநீக்கு

    ‘தளிர்’ சுரேஷ்27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:21
    சமூக வலைதளங்கள் இந்த நிகழ்வை வெளியிட்டிருக்காவிட்டால் அவருக்கு உதவி கிடைத்திருக்காது. ஆனாலும் மனிதம் மறந்து நடந்துகொண்ட மருத்துவமனை ஊழியர்களை எவ்வளவு தண்டித்தாலும் போதாது.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:50
    ஒரே பதிவு இரு முறை...?

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 5:12
    செய்திகளில் படித்த நிகழ்வு. மனிதத்தைத் தொலைத்து எதையோ தேடி எங்கோ போகிறோம். வேதனை.

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்28 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 6:51
    ஒரே பதிவி மீண்டும் மீண்டும்நண்பரே

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கரந்தையாருக்கு மிக்க மிக்க நன்றி பதிவு மீண்டும் வெளிவந்துள்ளது என்று தெரிவித்தமைக்கு....நண்பரே.மிக்க நன்றி மீண்டும்

      நீக்கு
  7. பதிவு வெளியிட்டதும், சில திருத்தங்கள் செய்ய வேண்டி செய்துவிட்டு வெளியிடும் போது ஒரே பதிவு இரண்டாகிவிட்டது. அதைக் கவனிக்கும் முன் கருத்துகளும் வந்து வெளியிட்டும் ஆகிவிட்டது. பின்னர் நண்பர் கரந்தையார் சொன்ன பிறகு கவனித்த போதுதான் கருத்துகள் பிரிந்து, வாக்குகளும் பிரிந்து இரு பகுதியிலும் வந்திருக்கின்றது என்பதை அறிந்தோம். இப்போது எந்தப் பதிவை நீக்கினாலும் கருத்துகள் போய்விடும். வாக்குகள் பற்றிக் கவலை இல்லை. அதனால் முதலில் வந்த கருத்துகளுடன் பின்னர் வந்த கருத்துகளைக் காப்பி பேஸ்ட் முதலில் வெளியான பதிவில் இணைத்து விட்டோம். வேறு வழி தெரியவில்லை. எனவே சகா சகோக்களே மன்னித்துவிடுங்கள் தனித் தனியாகப் பதில் கொடுக்க இயலவில்லை.

    கருத்திட்ட அனைத்து சகா, சகோக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு