கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும்
போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ்,
நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால்,
யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
=========================================================================இந்த நீர்ப்பறவையின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? இங்கு பெங்களூர் ஏரிகளில் நிறைய பார்க்கலாம். நாமக்கோழியை இதற்கு முன்னும் பார்த்திருந்தாலும் படங்கள் காணொளிகள் எடுத்ததில்லை. அப்போதெல்லாம் கேமரா அலைபேசி இல்லையே.
பெங்களூரில் நான் இருந்த/இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் ஏரிகளில் நடைப்பயிற்சி சென்ற/செல்லும் போதெல்லாம் நிறைய புகைப்படங்களும், காணொளிகளும் எடுத்திருக்கிறேன். அவற்றின் செயல்பாடுகள், வாழ்க்கை முறை உட்பட.
இவற்றின் கண்கள் சிவப்பாகத் தனியா தெரியும். ஆனால் closeup எடுக்க முடிந்ததில்லை.
வாத்துகளைப் போல இவற்றின் விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டிருக்காது. மாறாக, இவற்றின் விரல்களில் அகலமான துடுப்பு போன்ற தோலமைப்பு (Lobate feet) இருக்கும். இது சேற்றில் நடக்கவும், நீரில் நன்றாக நீந்தவும் உதவுகிறது. (இதற்கு மேலே உள்ள படத்தைக் கொஞ்சம் பெரிது பண்ணிப் பார்த்தால் தெரியும்) காலைத் தூக்கிக் காட்டு, இப்படிக்காட்டு அப்படிக் காட்டுன்னு டான்ஸ் ஆட வைக்க முடியுமா என்ன? சொல்லுங்க!
இவை அனைத்துண்ணிகள் வகையைச் சேர்ந்தவை. நீரில் இருக்கும் பாசிகள், நீர்ச்செடிகள், புற்கள், சிறு பூச்சிகள், புழுக்கள் மற்றும் சிறிய மீன்களை உணவாக உட்கொள்ளும். தலைகீழாக நீரில் மூழ்கி அடிமட்டத்தில் இருக்கும் உணவை உண்ணும் காட்சி மிக அழகாக இருக்கும். நீரில் டைவ் அடிச்சு உணவு சாப்பிடுவதை நீங்க காணொளியில் பார்க்கலாம்.
தண்ணீரில் மட்டும் அல்லாமல், இவை தரைப்பகுதிக்கும்
வந்து புல்வெளிகளில் உள்ள விதைகள், தானியங்கள் மற்றும் பூச்சிகளையும் விரும்பி மேய்கின்றன.
சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்ட இந்த நாமக்கோழிகள், பிற பறவைகளின்
உணவைப் பறித்து உண்ணும் தந்திரமும் வாய்ந்தவை.
கூட்டமாக இருப்பது தெரிகிறதா?
ஏரிகள், குளங்கள், பெரிய குட்டைகள் மற்றும் சதுப்புநிலங்கள் போன்ற நன்னீர் நிலைகளில் இவை, இனப்பெருக்கக் காலம் அல்லாத சமயத்தில் (Non-breeding season) கூட்டமாக 'ராஃப்ட்ஸ்' (Rafts) எனப்படும் பெரிய குழுக்களாக வாழும். இதனால் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும், நிம்மதியாக உணவு தேடவும் அவற்றுக்கு வசதியாக இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் எல்லை போட்டுக்குவாங்க! கூட்டமாக இருக்க மாட்டாங்க.
பல நீர்வாழ் பறவைகளைப் போலவே, நாமக்கோழிகளும்
தங்களின் மூக்குத்துவாரங்களில் (Nostrils) இருக்கும் அழுக்கு, சேறு மற்றும் கழிவுகளை
வெளியேற்றுவதற்காகத் தங்களின் அலகுகளை, முகத்தை அடிக்கடி தண்ணீருக்குள் அமிழ்த்தி அமிழ்த்தி எடுத்து உதறுவதைக் காணலாம். கண்ககளையும் அப்படியே சுத்தம் செய்யுமாம். (காணொளியில் தலையை மட்டும் தண்ணீருக்குள் அமிழ்த்தி அமிழ்த்தி எடுப்பதைப் பார்க்கலாம்.)
தன் தலை மற்றும் கழுத்துப் பகுதியின் மேல்
தண்ணீரை அள்ளித் தெளித்துக் கொண்டு, பின்னர் உடலை பலமாக உதறுகிறது. இது சிறகுகள் முழுவதும்
தண்ணீர் பரவுவதற்கு உதவுகிறது. இதுவே அவை தங்கள் சிறகுகளைச் சீரமைப்பதற்கான
(Preening) மிக முக்கியமான முதல் படியாகும். அதன் பிறகு, நாமக்கோழிகள் தங்களின் வால்
பகுதிக்கு அருகில் இருக்கும் சுரப்பியில் (Preen gland) இருந்து சுரக்கும் இயற்கையான,
நீர் புகாத எண்ணெய்ப் பசையை (Water-proofing oils), புதிதாகக் கழுவப்பட்ட தங்களின்
தலைச் சிறகுகளின் மீது தடவிப் பரப்பிக் கொள்கின்றன.
வெப்பம் அதிகமாக இருக்கும்போது, தலையைத் தண்ணீரில்
மீண்டும் மீண்டும் முக்கி, பின்னர் உடலில் ஒட்டியிருக்கும் நீர்த்துளிகளை உதறித் தள்ளுவது,
அவை தங்கள் உடலின் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
நாமக்கோழிகள் தங்கள் இறக்கைகளை லேசாகத் தூக்கி, பஃப் என்று உப்பலாக விரித்துக் கொண்டு (Arching wings/Puffing up) நீந்துவதைப்
பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். இது என்னன்னு பார்த்தீங்கனா (பதிவின் கடைசியில் உள்ள காணொளியில் கடைசி க்ளிப்
இதுதான். )
இப்படத்தில்பின் பக்கம் வெள்ளையாகத் தெரிகிறதா?
நாமக்கோழிகளின் பின்புறத்தில் வெள்ளையாகத் தெரிகிறதா? அவற்றின் உடலமைப்பில் உள்ள ஒரு மிக முக்கியமான பகுதி.இதை ஆங்கிலத்தில் "White Under tail Coverts" (வாலின் அடிப்பகுதி இறகுகள்) என்று சொல்வார்கள்.
இவை தண்ணீரில் நீந்தும்போது, தங்களின் தலையை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டே நீந்தும். அப்போது உடலின் பின் பகுதி லேசாக மேல்நோக்கி எழும்பும் போதெல்லாம் அந்த வெள்ளை நிறம் நமக்குத் தெரியும். வாலின் கீழ் இருக்கும் இந்த வெள்ளை நிறமும் அவற்றுக்கு இடையே பேசிக்கொள்ள உதவும் ஒரு "இயற்கை அடையாளக் குறியீடு".
எச்சரிக்கை மற்றும் தகவல் தொடர்புக்காக (Signaling) அதாவது ஆபத்தை உணரும்போதோ அல்லது மற்ற நாமக்கோழிகளுக்கு ஏதேனும் தகவல் சொல்ல நினைக்கும்போதோ, தங்களின் வாலை மேல்நோக்கித் தூக்கிக் காட்டுமாம் (Tail flicking). அப்படிச் செய்யும்போது அந்த வெள்ளை நிற இறகுகள் பளிச்சென்று தெரியும். இது பின்னால் வரும் மற்ற பறவைகளுக்கு ஒரு 'சிக்னல்' போலப் பயன்படுகிறது. என்ன ஒரு டெக்னிக் இயற்கையின் படைப்பு இல்லையா!!
https://www.youtube.com/watch?v=5LBoXpBQMQ4
ஏரி குளங்களின் ரௌடி -Beautiful Chasing Scene!
Chasing Scene! இரண்டு நாமக்கோழிகள் தண்ணீரின் மேல் மிக வேகமாக ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடுவதைப் பார்த்தால் இது விளையாட்டுப் போலத் தோன்றினாலும், அதுவல்ல, காரணம்.
தங்களின் எல்லை
விஷயத்தில் மிகவும் பிடிவாதமானவை. தனது எல்லைக்குள் வேறு எந்த நாமக்கோழியும் நுழைவதை
இவை விரும்புவதில்லை. உணவுத் தேடலுக்கான இடத்தை தங்களுக்குள்ளேயே
பிரித்து வைத்திருக்கும். அங்கே யாராவது அத்துமீறி நுழைந்தால், ஆக்ரோஷமாக
விரட்டியடிக்கும்.
இப்படி ஒன்றை ஒன்று துரத்தும் போது, இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டு கால்களால் தண்ணீரை உதைத்து, நீர் மேலேயே ஓடுவது போல வேகமாகப் பாய்வது தெரிகிறதா காணொளியில்? இதற்கு "ஸ்கிட்டரிங்" (Skittering) என்று பெயர். எதிராளியைப் பயமுறுத்தி ஓட வைப்பதற்கான ஒரு ஆக்ரோஷமான எச்சரிக்கை. இறுதிவரை விடாமல் துரத்தித் தனது எல்லையைத் தக்க வைத்துக் கொண்டது பாருங்க இந்த ரவுடி பேபி! பார்ப்பதற்கு மிக சுவாரசியமாக இருக்கும்.
கீழே இப்பகுதி காணொளியாகக் கொடுத்திருக்கிறேன். 3 நி.15 நொ தான் முடிந்தால், விருப்பமிருந்தால் பாருங்கள்.
இத்தொகுப்புக் காணொளியில் கடைசி க்ளிப்பிங்கில் வேறொரு துரத்தலைப் பார்க்கலாம். ஒரு பெண் நாமக்கோழிக்காக இரண்டு ஆண் நாமக் கோழிகள் இறக்கைகளை உப்பலாக விரித்து போட்டி போடுவதைப் பார்க்கலாம்.
"ஏய் இது என் ஏரியா உள்ள வராதே!" என்று மிரட்ட தங்கள் இறக்கைகளை இப்படி உப்பலாக விரித்துக் கொண்டு நீந்தும். தன்னை விடப் பெரிய எதிரிகளை அல்லது சக பறவைகளைப் பயமுறுத்தி ஓட வைப்பதற்கும் இந்த டெக்னிக். ஆனால்....
இனப்பெருக்கக் காலங்களில் (Mating season) ஆண் நாமக்கோழிகள், பெண் நாமக்கோழிகளைக் கவர்வதற்காகத் தங்கள் இறக்கைகளை இப்படி அழகாக வளைத்து, கம்பீரமாக நீந்திக் காட்டும். கூடவே வேறு ஒரு ஆண் நாமக்கோழி வந்தா துரத்தும்.
https://www.youtube.com/watch?v=1Fgmm-5GNaw
அடுத்த பகுதியில் நாமக்கோழி கூடு கட்டும் விதம், குஞ்சுகள் எல்லாம் பார்ப்போம்...தொடர்வோம்...
-----கீதா
// இதை ஸ்ரீராம் மறக்க மாட்டார்! இனி வசந்தின் டயலாக் சொல்ல மாட்டீங்கல்ல?!!!! //
பதிலளிநீக்குஇதெல்லாம் இப்பவே மறந்து போகும். வசந்த்தின் டயலாக் நிரந்தரம்!
ஹாஹாஹாஹா....நினைச்சேன் இந்த பதில் பெரும்பாலும் வரும்னு!!!
நீக்குகீதா
இன்று ஆதார் முகவரி மாற்றத்துக்குப் போணுமா 9 மணிக்குக் கிளம்பணும் ஸோ அது நல்ல பெரிய நடை ஆகிடும் என்பதால் இப்ப பதில்...
நீக்குகீதா
அதுமட்டுமல்லாமல் நீங்க நாமக்கோழின்னா எனக்கு இளையராஜா பாட்டு நினைவுக்கு வருது!
பதிலளிநீக்கு"சாமக்கோழி.. ஏன் கூவுதம்மா?"
எனக்கும் இக்கோழியைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் பாட்டு நினைவுக்கு வரும் ஸ்ரீராம்...உங்களுக்கும் இது வந்து கமென்டில் வரும்னு நினைச்சேன்...
நீக்குகீதா
ஆனால் திருப்பதி பாலாஜி போல நாமம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நடுவில் இடைவெளியே இல்லையே...!
பதிலளிநீக்குநீங்க சொல்றது சரிதான் ஸ்ரீராம்...ஆனாலும் அந்த இடைவெளி இல்லாமல் கண்ணு கூட மறைந்து வெள்ளை நாமம் பளிச்சுனு இருக்காப்ல படங்கள் இருக்கே ஸ்ரீராம்...அதுதான் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது... நடுல சிவப்பு கோபி இருக்கும் இடைவெளி இல்லாமல்....நீங்க நெட்ல பார்த்திருப்பீங்கள் ஸ்ரீராம்.
நீக்குகீதா
ஆறாவது படத்தில் பெரிய வாழைத்தண்டு ஒன்று நீரில் மிதப்பது போல தெரியுது!
பதிலளிநீக்குஆமாம் ஆனா அது ப்ளாஸ்டிக் டப்பா..
நீக்குகீதா
முதல் காணொளி சுவாரஸ்யமான சேசிங்! ஆனால் அதில் ஒன்று நீருக்குள் அமிழ்ந்ததும் இதுவும் நீருக்குள் அமிழ்ந்து தேடாமல் மேலே காத்திருப்பது வினோதம்!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் அதுக்குத் தெரியும் அது வெளில வரும்னு அதுவும் இடம் எலலம் அதுங்களுக்கு அத்துப்படி, ஸ்ரீராம்...நீருக்குள் போனால் பலம் போய்டும் போல...அதைவிட மேலே காத்திருப்பது அதுக்கு வசதி போல....அப்படி ரெண்டும் டபக்குனு நீருக்குள் நுழையுதுனா பெரும்பாலும் சீசன்ல ஜோடியாக இருக்கும்!!!!!
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
எடிட்டிங் திறமையாக செய்திருக்கிறீர்கள். பொதுவாக இவைகளை பார்க்கும்போது தஞ்சாவூர்ப் பக்கம் வசித்தபோது நான் பார்த்த போந்தாக்கோழி என்போம்.. அவற்றின் நினைவு வருகிறது. அல்லது கொஞ்சம் அவற்றைப் போல இருக்கிறது.
பதிலளிநீக்குஓ!! ரொம்ப நன்றி ஸ்ரீராம்...
நீக்குபோந்தாக்கோழி? ஒருவேளை இதுக்கு இன்னொரு பெயரா இருக்குமோ? நெட்டில் பார்க்கிறேன்...
பார்த்தேன், பார்த்தப்ப வழக்கமான கோழி படம் ப்ளஸ் அது போண்டா கோழின்னும் சொல்வாங்க போல...சிக்கன் போண்டான்னு போடுவாங்கன்னும் தெரியுது அந்தப் பதார்த்தம் செய்ய சின்ன கோழிகளைப் பயன்படுத்துவாங்க போல அதான் போண்டா கோழின்னும்...
கீதா
பொறுமையாக போட்டோக்கள் காணொளிகள் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இப்படி எல்லாம் எடுத்தால் அப்புறம் நடைப்பயிற்சி என்னாகும்?!!
பதிலளிநீக்குஹாஹாஹா அது தனி இது தனி ஸ்ரீராம்...பெரும்பாலும் நல்லா நடந்த பிறகு ஏரிக்கரைல உலாத்திட்டுதான் வருவது. பெரும்பாலும் ப்ரிஸ்க் நடைக்கு நாங்க இருக்கும் பகுதியின் உட்பகுதி, இல்லைனா ரோடு இதில் செய்துவிட்டு...அல்லது ஏரிக்குள்ளேயே கூட...அப்படித்தான் நிறைய மிஸ் ஆகுது ஸ்ரீராம் படங்கள் எடுக்க அதுவும் செம காட்சிகள் மிஸ் ஆகும்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
இன்றைக்கு முதலில் காணொளிகளைப் பார்த்துவிட்டேன்.
பதிலளிநீக்குஇரண்டு பறவைகளும் ஒன்றையொன்று துரத்துவது சூப்பர். நல்லா பொறுமையா எடுத்திருக்கீங்க
நன்றி நெல்லை.
நீக்குநேரில் பார்க்கும் போது ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது. பெரிய காணொளியாக இருந்ததால் கொஞ்சம் எடிட் பண்ணிப் போட வேண்டியிருந்தது.
கீதா
படங்களும் மிக அழகாக இருக்கின்றன
பதிலளிநீக்குஆமாம் இதெல்லாம் நீங்க நடைப்பயிற்சி செய்யும்போது எடுத்தீங்களா?
அப்போ அப்போ நின்னீங்கன்னா வேகம் தடைப்படாதா?
நன்றி நெல்லை.
நீக்குநடைப்பயிற்சிக்குப் போறப்பதான்...ஆனால் நம்ம பயிற்சி வேறு இது வேறு. பெரும்பாலும் நான் சாலையில் இல்லைனா வீடுகள் இருக்கும் பகுதியில் உட்பகுதியில் முடிச்சுட்டு ஏரிப்பக்கம் போவேன் அப்ப அங்கும் ஜாகிங் செய்துவிட்டு அல்லது நடந்துவிட்டு அப்ப சில காட்சிகள் நல்லாருக்கும் ஆனா எடுக்காமல் மிஸ் ஆகிவிடும் அப்படி நிறைய உண்டு. பயிற்சி முடிச்சு கொஞ்ச நேரம் உலாத்துவேன் அங்கு. அப்படி எடுப்பதுதான். சில சமயம் நடக்கும் போது நிற்பதுண்டு ஆனால் என் ஸ்டெப்ஸை பார்த்துக் கொள்வேன். அப்ப்டி நின்றால்....மீண்டும் வேக நடை போட்டுவிடுவேன்...
கீதா
இருக்கிற நீர் நிலைல எல்லையா?
பதிலளிநீக்குஎனக்கு சமீபத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது.
ஆதிவாசிகளின் காட்டுக்குப் போகு முன்பு, (போலீஸ் அனுமதிக்குக் காத்திருந்தபோது) அங்கு நிறைய தெருநாய்கள் (அதாவது காட்டுத் தெரு நாய்கள்) இருந்தன. அதனால் பக்கத்துக் கடைல இரண்டு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி, ஒன்றை ஒரு இடத்தில் போட்டேன். அங்கிருந்த இரண்டு நாய்களும் கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு நாயும் வந்தன. உடனே இரண்டு நாய்களும் பிஸ்கெட்டை எடுத்துக்கொள்வதை விட்டுவிட்டு, அந்த மூன்றாவது நாயைத் துரத்தின. பிறகுதான் பிஸ்கெட் எடுத்துக்கொண்டன.
நான் கொஞ்சம் தள்ளிப்போய், அந்த நாயின் எல்லையில் இன்னொரு பாக்கெட்டைப் பிரித்துப் போட்டேன்.
அதுங்களுக்குத் தெரியும் நெல்லை எல்லை எல்லாம்...
நீக்குநாய்கள் என்றில்லை எந்த ஜீவராசியுமே முதலில் தங்கள் உணவை, அப்புறம் இணையை தேடும் சமயத்தில்இந்த சமயத்தில் எல்லை ரொம்பவே பாக்கும். உணவு ரொம்ப முக்கியமாச்சே அதுங்களுக்குத் தெரியும் அந்தக் கஷ்டம். மனுஷங்கள் உணவுக்குச் சண்டை போடுவதைப்பார்த்திருப்பீங்க தானே நான் பார்த்திருக்கிறேன். அப்ப நினைவுக்கு வரும் வரி தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்..
இப்ப பாருங்க நதி நீருக்குச் சண்டை போடறதில்லையா... ஒரு கப்பலோ விமானமோ எல்லை தாண்டி வந்தால் என்னாகும் சொல்லுங்க...ஸோ இந்த எல்லை என்பது மற்ற ஜீவராசிகளுக்கு மட்டுமில்லை. 6 அறிவுக்கும்தான்.
கீதா
நம் மனது பல நேரங்களில் வெறுமையாக ஆகிவிடும்.
பதிலளிநீக்குஅப்போது கடலையே பார்த்துக்கொண்டிருந்தாலோ இல்லை இயற்கையைப் பார்த்துக்கொண்டிருந்தாலோ மனது லேசாகிவிடும். இல்லையா?
டிட்டோ செய்கிறேன் நெல்லை உங்க கருத்தை. உண்மை..இயற்கை என்றுமே வலியது
நீக்குகீதா
நீர் நிலைல (பெங்களூர்ல) இவ்வளவு வேலிகள் போட்டிருந்தும் பிளாஸ்டிக்கை எறியறாங்களே. அநியாயம்
பதிலளிநீக்குஎல்லா நீர் நிலைகளிலும் வேலி கிடையாது நெல்லை. வேலி இருந்தாலும் தூக்கிப் போட முடியாதா என்ன? அப்புறம் வீட்டின் கழிவு நீர் நீர்னிலைகளில்தானே வருது!
நீக்குஇதெல்லாம் சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம், சுய சிந்தனை இல்லாதவங்க பெரும்பான்மை அதான் இப்படி..
கீதா
கோழிலயும் வைணவர்கள் இருக்கிறார்கள் என்று இப்போது தெரிந்தது, தலைப்பு மூலமாக.
பதிலளிநீக்குஹாஹாஹா....சிரித்துவிட்டேன் நெல்லை. எங்க வீட்டுல இதைப் பத்திச் சொன்னதும் ஐயங்கார் கோழின்னு சொல்லிச் சிரித்தார்கள்.
நீக்குகீதா
நாமக்கோழி படங்கள் செய்திகள் , காணொளிகள் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் குரலுடன் காணொளி மிக அருமை.
மிக விவரமாய் பதிவு. நன்கு கூர்ந்து பார்த்து படங்கள் எடுத்து பதிவு செய்து இருக்கிறீர்கள்.
பறவை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவும் இந்த பதிவு.
கோமதிக்கா காணொளி பற்றிச் சொன்னதற்கு நன்றி கோமதிக்கா.
நீக்குமிக விவரமாய் பதிவு. நன்கு கூர்ந்து பார்த்து படங்கள் எடுத்து பதிவு செய்து இருக்கிறீர்கள்.
பறவை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவும் இந்த பதிவு.//
அபப்டின்றீங்களா? ஆனால் பறவை ஆராய்ச்சி செய்பவர்கள் இன்னும் இதை விட நிறைய எடுத்திருப்பாங்க ஆராய்ந்திருப்பாங்க இல்லையா? என்றாலும் நன்றி கோமதிக்கா இந்தக் கருத்துக்கு
உங்களுக்கும் பறவைகள் பற்றி அறிய ஆர்வம் உண்டே!
கீதா
பெங்களூர்க்கு காரில் வரும் போது உங்களை, நெல்லையை , கமலா ஹரிஹரனை நினைத்து கொண்டேன். ஏரிகளை பார்த்தேன், அதில் பறவைகளை பார்த்தேன் அப்போது உங்கள் நினைவுதான்.
பதிலளிநீக்குநன்றி கோமதிக்கா. எங்களை நினைத்துக் கொண்டதற்கு...இங்கு ஏரிகள் நிறைய பார்க்கலாம். கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் நீங்க பறவைகளைப் படம் பிடிச்சிருப்பீங்க.
நீக்குநன்றி கோமதிக்கா
கீதா
கூட்டமாக இருப்பது தெரிகிறதா?//
பதிலளிநீக்குதெரிகிறது.
//இந்த ரவுடி பேபி! பார்ப்பதற்கு மிக சுவாரசியமாக இருக்கும். //
ஆமாம், பார்க்க சுவாரசியமாக இருக்கிறது.
நிஜமாகவே அக்கா இதுங்க ரொம்ப அட்டகாசம் பண்ணும் சில நேரங்களில் சில ஏரிகளில். இப்ப இருக்கற ஏரில இடம் கூடுதல் அதனால் ரொம்ப துரத்தல்களைப் பார்க்க முடியவில்லை ஆனால் பழையவீட்டருகில் ஏரியில் துரத்தல்கள் நிறைய காரணம் சின்ன ஏரி!
நீக்குநன்றி கோமதிக்கா
கீதா
நான் நாமக்கல் கோழி என்று சொல்ல நினைத்து நாமக்கோழி என்று எழுதிவிட்டீர்கள் என்று நினைத்தேன். பதிவு விவரங்கள் ஆற்றும் படங்கள் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குJayakumar
ஹாஹாஹாஹா......நாமக்கல் கோழிகளுக்குப் பிரபலம் ஆச்சே!
நீக்குநன்றி ஜெ கே அண்ணா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. ஏரிக்கரை படங்கள் நாமக்கோழிகளின் படங்கள் என அனைத்தும் அட்டகாசமாக உள்ளது. நாமக்கோழி காரணப்பெயர் படிக்க சுவாரஸ்யமாக, நன்றாக உள்ளது. இறைவன் படைப்பில், இந்த பறவையினத்தில் என்ன ஒரு விசித்திரங்கள் என வியக்க வைக்கிறது
நீங்கள் அதன் உணவு, இயல்பு நிலை, தங்குமிடங்கள், அதன் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் ஆராய்ந்து கட்டுரையாக தந்திருப்பது மிக சிறப்பாக உள்ளது.
நேரில் பார்க்கும் போது அதன் செயல்களின் சிறப்பை உணர முடிகிறது. நன்றாக பொழுது போகும். காணொளிகள் அருமை. அதன் எல்லை கட்டுப்பாடுகள், அதற்காக ஒன்றுக்கொன்று அதன் துரத்தல்கள் என அனைத்தும் காணும் போது நம் கண்களுக்கு விருந்து.
நீங்கள் நன்கு படங்கள் எடுத்து, அதன் வாழும் முறைகளையும் விவரித்து எழுதியதில், நானும் நேராகவே இந்தப்பறவையை கண்ட மகிழ்வில் மெய்மறந்தேன். மிக அழகான துல்லியமான படங்கள் தங்களுடையது. உங்களின் அற்புதமான இந்த திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி. அடுத்தப் பதிவையும் காண ஆவலாக உள்ளேன்.
நேற்றும், இன்றுமாக உடனே வர இயலவில்லை. அதனால் தாமதம். எ. பியிலேயே இன்று கொஞ்ச நேரத்திற்கு முன் "மன்னிக்கவும்" கேட்டு விட்டேன். அதனால் இங்கில்லை. ஹா ஹா ஹா பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஜாமக்கோழி என்று கேள்வி பட்டிருக்கிறோம், இது நாமக்கோழி. எவ்வளவு வேகமாக நீந்துகின்றன! படங்கள் அழகு+தெளிவு. இப்படி ஒரு பரவை உண்டு என்பதே இப்போதுதான் தெரிந்தது. தகவல்கள் கூடுதல் சிறப்பு.
பதிலளிநீக்கு