கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது
உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான்
என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால்,
யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு கொஞ்சம் பெரியதுதான். தயவாய்
பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு தொடங்குகிறேன்.
மடிவாலா ஏரி அல்லது BTM - இதற்கு விரிவாக்கம் (B)பொம்மனஹல்லி (T)தவரேக்கரே (M)மடிவாலா மூன்றும் அடுத்தடுத்து இருக்கும் பகுதிகள் என்பதால் இப்படி அவற்றின் ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்தை எடுத்துக் கொண்டு BTM layout என்று சொல்லப்படுகிறது. இதில் BTM முதல் Stage, BTM இரண்டாம் Stage என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் Stage ல் தான் இந்த ஏரிப்பகுதி.
மடிவாலா
பகுதியின் முனையிலிருந்து தொடங்கி, ஒரு கரையில் BTM second stage மற்றொரு கரையில் பொம்மனஹல்லி
பகுதி என்று விரிந்து இருப்பதால் மடிவாலா ஏரி என்றும், BTM ஏரி என்றும் சொல்லப்படுகிறது.
பெங்களூரில் இருக்கும் மிகப் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. 114 ஹெக்டேர் - ஏறத்தாழ
272–275 ஏக்கர் பரப்பளவு.
ஏரியின் மடிவாலா பகுதியில் (அந்த முனையிலிருந்து ஏரி) இந்தப் படத்தில் இருப்பது பாழடைந்த, கோயிலின் ஒரு பகுதி போன்று....அல்லது வரலாறு சம்பந்தப்பட்ட?
இந்த ஏரி வரலாற்றுச்
சிறப்புடையதாம். சோழர்கள் இங்கு ஆண்ட போது உருவாக்கப்பட்டது என்றும் இந்த ஏரியின்
நீரை தங்கள் வணிகத்திற்காக, "மடிவாலாக்கள்" (கன்னடம்) - சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தியதால்
இந்த ஏரி மடிவாலா என்று பெயரிடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். (மடிவாலா எனும் பகுதியின்
பெயர்க்காரணமும் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.).
பண்டு
விவசாயம், மீன் பிடித்தல், மக்களின் குடிநீர் தேவை என்று பயனுள்ளதாக இருந்த இந்த ஏரி
அதன் பின் பல ஆண்டுகளாக, நகரமயமாக்கல் காரணமாக, 1990களின் முற்பகுதி வரை ஓரளவு குடிநீராகப் பயன்பாட்டில் இருந்த ஏரியின் சுற்றுச்சூழல் குறிப்பிடத்தக்க அளவில் சீரழிந்துள்ளது என்பதைத் தரவுகள் இன்றி நேரில்
பார்த்தாலே தெரிந்துவிடும். இருந்தாலும்...
தேசிய
பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) அறிக்கையில், ஏரியின் ஆக்ஸிஜன் அளவு அசாதாரணமாகக் குறைந்த
(DO) அளவைக் காட்டியதாகவும், பெரும்பாலும் 3 மி.கி/லிட்டருக்கும் குறைவாக, நீர்வாழ்
உயிரினங்களுக்குத் தேவையான குறைந்தபட்சத்தை விட மிகக் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
இப்படித் தொழிற்சாலைக் கழிவுகளாலும் சுற்றியுள்ள கட்டுமானங்களின் (வீடுகள், உணவகங்கள், கடைகள்) கழிவுநீராலும் - சில கட்டுமானங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, சில அனுமதி இல்லாமலும் ஏரிக்கரையை ஆக்ரமித்துக் கொண்டு - படிப்படியாக மாசடைந்து குடிநீருக்குப் பயனற்றதாகிவிட்டது. நான் பார்த்த வரையில் இந்த ஏரி மட்டுமல்ல பெங்களூர் ஏரிகள் பலவும் மாசடைந்து இருக்கின்றன. முன்னர் இருந்த பகுதிகளிலும் இப்படித்தான் ஏரிகளைச் சுற்றிலும் வீடுகள், குப்பைகளைப் போடுதல், கழிவு நீர் ஏரிகளில் விடப்படுதல் எல்லாம் புகைப்படங்களோடு முன்னர் எழுதியிருக்கிறேன்.
ATREE (Ashoka Trust for Research in Ecology and the Environment) நடத்திய ஆய்வின்படி, ஏரியின் சுற்றுச்சூழல், தொடர் மாசினாலும், கழிவுகளாலும் சீரழிந்து நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிப்பதாகவும், மேலும் கடந்த வருடங்களில் 60% க்கும் மேல் ஏரிகளின் தரம் குறைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இத்தனை பறவைகள் இருந்திருக்கின்றன முன்பு...இவற்றில் பல இப்போதும் வருகின்றன ஆனால் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்
மடிவாலா ஏரி ஒரு காலத்தில் மீன்கள், ஆமைகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட உள்ளூர்ப்பறவைகள், புலம்பெயர்ந்து வரும் பறவைகள் எல்லாவற்றின் குடியிருப்பாகவும், கூடு கட்டி தங்கள் தலைமுறையை வளர்க்கவும் தாயகமாக, சரணாலயமாக இருந்தது மட்டுமல்லாமல் சுற்றிலும் பலவித தாவரங்கள் அடர்ந்த மரங்களுமாக இருந்திருக்கிறது என்பதற்கான அடையாளங்களை இப்போதும் பார்க்கலாம். பார்க்கிறேன்.
Spot billed Pelicans
- புள்ளி மூக்கு கூழைக்கடாக்கள். இவை மரங்களின் உச்சியில் தான் கூடு கட்டும்.
புள்ளி மூக்குக் கூழைக்கடாக்களின் (Spot Billed Pelicans) வருகை மற்றும் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதை வைத்து ஏரியின் தரத்தைச் சொல்லிவிடலாம். சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனவாம்.
இப்போதும் சரணாலயம்தான் என்று பார்க்கும் போதே தெரிகிறது. அத்தனைப் பறவைகள் இருக்கின்றன. இப்படி மாசடைந்த ஏரியிலேயே, கூழைக்கடா, வர்ண நாரை, செந்நாரை, சாம்பல் நாரை, கருப்பு இந்திய அறிவாள்மூக்கன்/அன்றில் பறவை, கருப்புத் தலை வெள்ளை அறிவாள் மூக்கன், புள்ளி மூக்கு வாத்துகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான்கள், பெரிய கொக்கு, சின்ன கொக்கு, குளத்துக் கொக்கு, பாம்புத் தாரா, நீலநிற தாழைக் கோழிகள், நீர்க்காகங்கள், சிவப்பு மூக்கு தாழைக்கோழிகள் என்று இப்போதும் பார்க்க முடிகிறது என்றால் முன்பு எப்படி இருந்திருக்கும்! ஆனால் இப்போது எண்ணிக்கை குறைந்திருக்கிறதாம்.
பறவைகள்
குறைந்திருப்பது, சுருங்கி வரும் வாழ்விடத்தை, சுற்றுச்சூழலை எதிரொலித்துப் பறைசாற்றுகிறது
எனலாம். நீரின் இயற்கை வடிகட்டிகளாகச் செயல்படும் Typha - டைஃபா (சம்பு நாணல்/தாழைச்
செடிகள் - இது பற்றி பதிவு முன்பு எழுதியிருக்கிறேன்) மற்றும் Canna - மணிவாழை/கல்வாழை/கானாவாழை,
நீர் அல்லிகள் போன்ற ஈரநில தாவரங்களின் இழப்பும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மிகவும்
பாதித்திருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.
மட்டுமல்ல ஏரி நீர் மிகவும் மாசடைந்து உள்ளதால் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் கொசுக்கள் பெருகியிருக்கின்றன என்று, ஆய்வு செய்யும் ஒருவர் ஏரி நீரில் கொசுக்களை ஃபில்லர் வைத்து எடுத்து பாட்டில்களில் சேகரித்துக் கொண்டிருந்த போது அவரிடம் பேசியதில் தெரிந்தது. (நிற்பவர் தூரத்தில் தீவுக்கருகில் ஆகாயத்தாமரையை இயந்திரம் மூலம் அள்ளிப் போட்டுக் கொண்டு இருப்பவரோடு பேசி கரைக்கு வரச் சொல்கிறார். இயந்திரத்தின் காணொளி கீழே.)
சட்டங்கள்
இருந்தாலும், BBMP - பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், BDA - பெங்களூரு மேம்பாட்டு ஆணையம்
மற்றும் KSPCB - கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு
வாரியம் இவற்றிற்கிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும், பொறுப்புணர்வும் இல்லாததால்
சட்டங்கள் வலுவாக அமலாக்கம் செய்யப்படவும் இல்லை என்றும், நடவடிக்கைகளும் தாமதமாகின்றனவாம்.
இதோ இது பழைய விஷயங்கள்...
வனத்துறையின் கீழ் இருந்தவரை படகுச் சவாரி, ஏரிப் பகுதிக்குள் நுழைய கட்டணம் என்று இருந்திருப்பதற்கான அடையாளங்கள்
பயனில்
இல்லாத படகுகளை இப்படி அழகுபடுத்தி...
இந்த
ஏரி 2023 வரை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவரை சுற்றுலாத்தலமாக, படகுச்சவாரி, பூங்கா என்று உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் நல்ல ஒரு பொழுது போக்கு
இடமாக இருந்திருக்கிறது. அப்போது ஒரு வேளை படகுகள், நடுவிலிருக்கும் தீவு வரைக் கூட்டிச்
சென்று சுற்றி வந்திருப்பார்களோ? ரங்கனத்திட்டு போன்று? அப்படி இருந்திருந்தால், பருவகாலங்களில்
தீவுப்பகுதிகளில் கூடு கட்டி வாழும் பறவைகளையும் பார்க்கும் வாய்ப்பு இருந்திருக்கலாம்!
ச்சே! இங்கே அருகில் இருந்தும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேனே!
தற்போது
அதன்
பின் BBMP Bruhat Bengaluru Mahanagara Palike அதாவது, பெங்களூரு மாநகராட்சியின் கீழ் மாறியிருப்பதால் படகுச் சவாரி தற்போது
இல்லை என்பதோடு ஏரிக்கரையோரம், சுற்றி இருக்கும் பாதை, மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஏரிக்கரை/வரப்பைச் செப்பனிட்டு வருவது முதல் படம், 2 - பாதைக்கான சிமென்ட் டைல்ஸ் கற்கள்
நடை பாதை - வலப்புறம் உட்புறம் அமர்ந்து பார்க்க Gallery - பார்வையாளர் மாடம்
புதிதாக ஏதோ அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் இருப்பது சிறிய குளம் போன்று வடிவமைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
ஏரி நிர்வாக அலுவலகம்
ஆகாயத்தாமரையை நீக்கும் பணி
https://www.youtube.com/watch?v=mkx2dX8b7nw
இயந்திரத்தில் களைகளை எடுத்து வந்து கொட்டி
வைத்திருக்கிறார்கள். இவற்றை உரமாக்கும் பணி மற்றொரு பகுதியில் நடக்கிறது. அதை பின்னர்
பகிர்கிறேன்.
தற்போது
இந்த மடிவாலா ஏரியில் பெருகியிருக்கும் ஆகாயத்தாமரையை நீக்கும் பணி, ஏரியைச் சுத்தப்படுத்தல், ஏரிக்கரையை/வரப்பைச் செப்பனிடுதல், ஏரிக்கரையை ஒட்டி இருக்கும்
மேடுபள்ளங்களோடு இருக்கும் மண் பாதையைச் சீரமைத்து கற்கள் பதித்து நல்ல சமமான நடைபாதை
போடுதல், மரங்கள் அடர்ந்த பகுதியில் சுத்தப்படுத்தல் அழகுபடுத்தல் என்று பணிகள்
ந ட ந் து வருகின்றன .
ஒரு தொழில்நுட்ப தனியார் நிறுவனம், நீரின் மாசுத்தன்மை, தரம், என்னென்ன இரசாயன நச்சுகள் கலந்திருக்கின்றன, ஆழம், ஏரிக்கரையை பராமரிப்பது போன்றவற்றை ஆராய்ந்து ஆவன செய்யும் திட்டம் ஒன்றை முன்னெடுத்திருக்கிறது. படமும் காணொளியும் இருக்கின்றன. ஆனால் அதைப் பற்றி நான் இப்போது சொல்ல அனுமதி இல்லை. முதலில் அவர்களின் திட்டம் வெற்றியடையட்டும்.
பெங்களூரில் பல ஏரிகளும் இப்போது சுத்தப்படுத்தப்படுவதாகச் செய்திகளில் சொன்னாலும், வீடுகளின் கழிவு நீர் கலக்காமல் வெளியேற மாற்று வழி செய்தல், குப்பைகளைக் கொட்டக் கூடாது என்ற சட்டத்தை வலுவாக அமல்படுத்தல், மழை நீர் குப்பைகள் இல்லாமல் ஏரிகளில் வடியுமாறுச் செய்தல் போன்றவற்றை மேற்கொண்டால் நலம். இப்படிச் செய்தால் மட்டுமே ஏரிகளின் ஆரோக்கியம் மேம்படும். பெங்களூரும் அழகுபெறும்.
எப்படியோ தனியாரோ, மாநகராட்சியோ, வனத்துறையோ, அல்லது எல்லாரும் இணைந்தோ, பொறுப்புடன் இந்த ஏரியைக் காப்பாற்றினால் (இந்த ஏரி மட்டுமல்ல எல்லா ஏரிகளையும் மீட்டெடுக்க வேண்டும்) இது பறவைகள் சரணாலயமாக இன்னும் விரிவடைந்து, பொலிவு பெற்று, பறவைகள் சந்தோஷமாக வந்து தங்கள் தலைமுறையை வளர்க்க உதவிடும். மக்களும் இயற்கையோடு ஒன்றி வாழ வழிவகுக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் ஏரியின் பராமரிப்பு பணிகள் எவ்வளவு துரிதமாக நடை பெற்று ஏரி/ஏரிகள் பொலிவு பெறுகிறது/கின்றன என்று.
ஏரிக் காட்சி - ஒரு முனையிலிருந்து மறுமுனை
வரை - என் favourite/விருப்பமான இடத்திலிருந்து (இது பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்)
எடுத்த காணொளி. முடிந்தால் பாருங்கள்.
----கீதா
.jpeg)

.jpeg)




.jpeg)

.jpeg)

.jpeg)
// பதிவு கொஞ்சம் பெரியதுதான். தயவாய் பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு தொடங்குகிறேன். //
பதிலளிநீக்குஎன்னதான் நீளமாய் இருந்தாலும் என்னை பீட் அடிக்க முடியாது என்கிற எண்ணத்துடனேயே படிக்கத் தொடங்குகிறேன்!!
சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். நீங்க ஒவ்வொரு பகுதியாக நிறைய சொல்வீங்க. இங்கு ஒரே தலைப்பின் கீழான ஒரே பதிவு இல்லையா? அப்ப கொஞ்சம் பெரிசுதானே...
நீக்குசபாஷ் சரியான போட்டி!
கீதா
முதல் விளக்கக் குறிப்பைப் படித்துக் கொண்டேன். மிஞ்சி நிற்கும் அந்த பழைய கட்டுமானத்தின் மிச்சம் பல்வேறு கற்பனைகளைத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குஅதைப் பார்த்ததும் எனக்கும் தோன்றியது ஸ்ரீராம். இது என்னவாக இருக்கும்? என்றும் இன்னும் பல தோன்றின. சுற்றியிருக்கும் ஆகாயத்தாமரையை எடுத்து சுத்தம் செய்தால் உள்ளே எப்படி இருக்கும்? மண்டபம் போல இருக்குமோ? மேலே சின்ன கோபுரம் போன்று இருந்திருக்கும் அது இப்ப இடைந்த நிலையில்? ஏதேனும் எழுத்துகள் தெரிகிறதான்னும் கூடப் பார்த்தேன் ஹிஹிஹி!!
நீக்குஆனா ஒரு டிசைன் தான் தெரிந்தது.
நன்றி ஸ்ரீராம்
கீதா
மடிவாலா என்றால் வண்ணான் என்று பொருளா.. ஓ...
பதிலளிநீக்குயெஸ்ஸு. மடிவாலான்னு ஒரு பகுதி இருக்கிறதே அப்படினா முன்னொரு காலத்தில் அங்கு வண்ணான் சமூகம் குடியிருந்திருக்குமாக இருக்கலாம்.
நீக்குஹிந்தியில் வாலா என்று சேர்த்துச் சொல்வது போல மடிவாலா - 'மடி' யாகத் துணியைத் தோய்ச்சு தருவாங்களோ!!? (இதைப் பதிவில் குறிப்பிட்டு எடுத்துப் போடும் போது போயிருச்சுன்னு இப்பதான் பார்த்தேன்!)
கீதா
ஆக்சிஜன் அளவு குறைவாக... அதுசரி, இந்த நீரில் மீன் போன்ற உயிரினங்கள் வசிக்கிறதோ?
பதிலளிநீக்குஇப்போது மீன்கள் இருக்கு கொஞ்சம். இல்லைனா பாம்புத்தாரா மீனைப் பிடித்துத் தூக்கிப் போட்டுக் catch பிடிக்கும் அழகைப் பார்த்திருக்க முடியாதுதான். இந்த வீடியோ வரும் பின்னர். நீங்க ரசிப்பீங்க.
நீக்குஒரு வேளை அழிந்த மீன்கள் தவிர survival of the fittest என்ற கோட்பாட்டின் படி மிச்ச சொச்சம் இருக்குமாக இருக்கலாம் கொசு கரப்பு, எறும்புகள் மற்றும் வயல்களில் பூச்சிகளை என்னதான் அதற்கான மருந்துகள் தெளித்தாலும் தலைமுறை வளர்ப்பது போல்.
இன்னும் பூச்சிகளும் இருக்கின்றன என்று தெரிகிறது. ஏனென்றால் அத்தனை பறவைகளும் எதையோ நோண்டிக் கொண்டே இருக்கின்றனவே!!! இல்லைனா இப்பவும் வந்து கூடு கட்டி தலைமுறை வளர்ப்பதால் கொஞ்சமேனும் இருக்கும் என்றே தோன்றுகிறது ஸ்ரீராம். ஏனென்றால் நான் முன்பு இருந்த பகுதியிலிருக்கும் ஏரிகள் பறவைகள் அவ்வளவாக இல்லாமல் வெறிச்!.
கீதா
தொழிற்சாலையிலிருந்து வெளியான கழிவு நீரால்... மனிதன் மிகவும் பொறுப்பற்றவன் என்று மீண்டும் நிரூபணமாகிறது.
பதிலளிநீக்குரொம்பவே. அதுவும் குப்பைக் கழிவுகள் இங்கு குமிந்திருப்பதைப் பார்க்கறப்ப, வீட்டருகில் ஏரிக்குச் செல்லும் வழியில் நடைபாதையில் இரு இடங்களில் குப்பைகள் நடக்க முடியாமல் குவிந்து இருக்கும். அந்தப் பகுதியில் சாலையில் இறங்கி போக்குவரத்தைச் சமாளித்துக் கடப்பதற்குள்.....
நீக்குநன்றி ஸ்ரீராம்.
கீதா
நிறைய படங்கள்.. அங்கிருக்கும் நிலையை விவரிக்கின்றன. எத்தனை நாளாய் எடுத்த படங்கள்?
பதிலளிநீக்குஇங்கு வந்ததிலிருந்து பெரும்பாலும் வாரநாட்களில் நான் மட்டும் மாலையில் சென்று வந்துவிடுவேன். விடுமுறை நாட்களில் காலையில். கிழக்கு என்பதால் காலையில் சூரியோதயத்தை எடுக்க முடியும். பறவைகளை எடுப்பது சிரமம் ஒளியில். ஆனால் நிறைய நீந்திக் கொண்டிருக்கும். மாலை என்றால் பறவைகளை எடுக்கலாம். நிறைய இருக்கும். இதுவரை நிறைய எடுத்திருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கு அவ்வப்போது வரும்.
நீக்குஉங்களை எல்லாம் அப்படி விட்டுவிடுவேனா!!!!!
கீதா
முன்னர் இதுபோல குப்பைகளால் சூழப்பட்ட ஏரி ஒன்றை மக்கள் தாமாக முன்வந்து சுத்தப்படுத்தியதாக ராமலக்ஷ்மி தளத்திலும் படித்த நினைவு.
பதிலளிநீக்குஆமாம், ஹெப்பால் ஏரியும் ஆனால் நாகாவரா ஏரி நன்றாகச் சுத்தபப்டுத்தப்பட்டுள்ளது. இங்கு நான் பல ஏரிகளுக்குச் சென்றிருக்கிறேன், ஸ்ரீராம். ஆனால் பறவைகள் குறைந்துவிட்டன.
நீக்குஅதைப் பற்றி பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நீளமாகியதால் அதை எடுத்துவிட்டேன். இன்னும் சில எழுதியதை எடுத்துவிட்டேன்.
கீதா
// சுற்றிலும் பலவித தாவரங்கள் அடர்ந்த மரங்களுமாக இருந்திருக்கிறது என்பதற்கான அடையாளங்களை இப்போதும் பார்க்கலாம். பார்க்கிறேன். //
பதிலளிநீக்குஆக.. அந்தக் கழிவுகள் இவற்றை சேதப்படுத்தி நாசப்படுத்தி இருக்கின்றன என்று தெரிகிறது.
ஆம் நிச்சயமாகச் சொல்லலாம் ஸ்ரீராம், இடையில் நாணல், சம்பு, கல்வாழை போன்றவற்றை ஒரு படகு போன்று அமைத்து அதில் இவற்றை வைத்து அடியில் வேர்கள் தண்ணீரோடு இருப்பது போல் மிதக்கும் தீவுகள் போன்று விட்டு தண்ணீரில் உள்ள நச்சை இவை அகற்றும் என்று விட்டாங்களாம். அதனால் கொஞ்சம் இப்போது பரவாயில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்பவும் கரையோரம் ப்ளாஸ்டிக், அழுக்கு நுரை மிதப்பதைக் காணலாம். நாம ஊழலுக்கு நடுவில் குப்பைகளுக்கு நடுவில் கழிவு நீருக்கு நடுவில் வாழப் பழக்கிக் கொண்டது போல் பறவைகளும் உயிரினங்களும், மரம் செடி கொடிகளும் வாழப் பழகிக் கொண்டுவிட்டன போலும்!
நீக்குகீதா
இந்த சுற்றுச் சூழல் பாதிப்பை எல்லாம் எடுத்துக் போராட அங்கபி முன்னர் ஒரு போராளி இருந்தானே.. அவன் என்ன ஆனான்? பின்னாளில் வேஸ்ட் பீஸாக மாறிப்போனானோ...
பதிலளிநீக்குஆனந்த் மல்லிகாவத்? ஐ டி வேலையைத் துறந்து 35 ஏரிகளை மீட்டெடுத்ததாகச் சொல்லப்படுபவர். இன்னும் சில இருக்கிறார்கள். ஆனால் தற்போது பெரிய அளவில் எதுவும் பேசப்பட்டு செய்திகளில் வரவில்லையே நகருக்குள்.
நீக்குஎனவே சொல்லத் தெரியவில்லையே ஸ்ரீராம்
கீதா
இல்லை. பியூஸ் என்றோ ஏதோ பெயர் வரும்.
நீக்குஓஹோ....பார்க்கிறேன், ஸ்ரீராம். என்ன செய்தார் என்று
நீக்குகீதா
அழிந்து வரும் ஒரு நீர் நிலை பற்றிய உங்கள் பதிவு மனத்தைக் கரைக்கிறது. உங்கள் கவலை புரிகிறது.
பதிலளிநீக்குபல ஏரிகளை நீர்னிலைகளிய, இயற்கையை அவை சீரழிவதைப் பார்க்கும் போது பறவைகள் தவிக்கும் போது மனம் கஷ்டபப்டுகிறதுதான். ஆனால் நம்மால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாத போது, இப்படிச் சொல்லிக் கொள்ளலாம்.
நீக்குபெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் குப்பைகளை வெளியில் சாலையில் போடக் கூடாது. பிற உயிரினங்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடாது, அவற்றையும் நேசிக்க வேண்டும், நம் சூற்றுச் சூழலை இயற்கையை நேசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாலே நல்ல முன்னேற்றம் வரும்.
நன்றி ஸ்ரீராம்.
கீதா
ஆகாயத்தாமரைகளை நீக்கும் காணொளி கண்டேன். கொசுக்களோ மீன்களோ அவற்றை சேகரித்துக் கொண்டுபோய் அவர் என்ன செய்வாராம்?
பதிலளிநீக்குஸ்ரீராம் அவற்றை அவர் எடுத்துக் கொண்டு போவதில்லை அவற்றை ஓரமாகக் கொட்டியிருப்பதைப் பார்த்தீர்களா? படத்தில்/. பின்னர் அவற்றை ஓரிடத்தில் வைத்து உரமாக்குவது போன்று இருக்கு அதைப் பற்றி தெரிந்து கொண்டு படங்கள் எடுத்துப் போடுகிறேன். அங்கு அப்படிப் பார்த்தேன்.
நீக்குஎனக்கு ஒரு கேள்வி வரும் இப்படியான நீர்னிலைகளில் கிடைக்கும் மீன்களில் இரசாயனம் இருக்கும்தானே?
நன்றி ஸ்ரீராம்.
கீதா
இப்போது இந்த சுத்தப்படுத்தும் வேலையைச் செய்வது யார்? தனியார்? நகராட்சியா? தானாகவா? அல்லது பொதுமக்கள் கோரிக்கை வைத்தா? எப்படியோ நல்லது நடந்தால் சரி.
பதிலளிநீக்குமாநகராட்சி.
நீக்குஒருசில இடங்களில் தனியார் செய்வதாக அறிகிறேன். இங்கும் ஒரு தனியார் நிறுவனம் சில தரவுகளை எடுக்கிறது ஒரு வேளை மாநகராட்சியுடன் கை கோர்த்து ஈடுபடுமா என்பதை அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
அதேதான் எப்படியோ நலல்து நடந்தால் சரி,
என் மாமி ஒரு வர் சமீபத்தில் ரொம்பக் கவலைப்பட்டார். எதிர்காலத் தலைமுறையினர் ரொம்பக் கஷ்டப்படுவார்கள் என்று!
கீதா
காலை வணக்கம்....
பதிலளிநீக்குஇயற்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மாசுபடுத்திக் கொண்டு இருக்கும் மனித இனம்...... என்ன சொல்ல...... வேதனை தான் மிஞ்சுகிறது. ஒவ்வொரு ஊரிலும் நீர் நிலைகளை பாழ்படுத்தி பின்னர் புலம்புகிறோம்......
படங்கள் மற்றும் காணொளிகள் நன்று.
தொடர்கிறேன்.
ஆமாம் ஜி. ரொம்பவே. கட்டுமானங்கள் வேறு நிறைய வந்துவிட்டன. எல்லா ஊர்களிலும் இதே நிலைதான்.
நீக்குஅதைச் சொல்லுங்க, பாழ்படுத்திவிட்டு பின்னர் புலம்புகிறோம்.
படங்கள் மற்றும் காணொளிகள் நன்று.//
மிக்க நன்றி வெங்கட்ஜி!
கீதா
மடிவாலா புராணம் நன்று. பெங்களூரு என்றில்லை எல்லா பெரிய நகரங்களிலேயும் நீர் நிலைகள் பாழ் பட்டுப் போய் விட்டன. மழை சீசனில் ஆற்றல் வரும் மழை நீர் மட்டும் தான் தற்போதைக்கு கொஞ்சம் சுத்தமான நீர்.
பதிலளிநீக்குJayakumar
நன்றி ஜெ கே அண்ணா.
நீக்குஎல்லா பெரிய நகரங்களிலும் சின்ன நகரங்களிலும் ஏன் எங்கள் கிராமத்திலும் கூட நீர் நிலைகள் பாழடைந்துவிட்டனதான். உண்மை மழை சீசனில் வரும் நீர் மட்டும் சுத்தம் அதிலும் குப்பைகள் கலக்காமல் இருக்க வேண்டுமே அண்ணா.
நன்றி ஜெ கே அண்ணா
கீதா
மடிவாலா ஏறியின் காணொளிகளும், படங்களும் செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குஆகாயதாமரைகளை அகற்றும் போது இயந்திரத்தின் முன் பறவைகள் பறந்து கொண்டு இருப்பது நன்றாக தெரிகிறது. அவை வேண்டாம் அதில் நடந்து நின்று பின் ஏரியில் விளையாடி களிப்போம் என்று சொல்கிறதா?
//ஒரு தொழில்நுட்ப தனியார் நிறுவனம், நீரின் மாசுத்தன்மை, தரம், என்னென்ன இரசாயன நச்சுகள் கலந்திருக்கின்றன, ஆழம், ஏரிக்கரையை பராமரிப்பது போன்றவற்றை ஆராய்ந்து ஆவன செய்யும் திட்டம் ஒன்றை முன்னெடுத்திருக்கிறது.//
நல்ல செயல் தான் வெற்றிபெறட்டும்.
மடிவாலா ஏறியின் காணொளிகளும், படங்களும் செய்திகளும் அருமை.//
நீக்குநன்றி கோமதிக்கா.
//ஆகாயதாமரைகளை அகற்றும் போது இயந்திரத்தின் முன் பறவைகள் பறந்து கொண்டு இருப்பது நன்றாக தெரிகிறது. //
ஹையோ அக்கா நிஜம்மா....நான் நேரில் பார்த்து பார்த்து ரசித்தேன் அக்கா. அழகா இயந்திரத்தின் மேலும் போய் உட்கார்ந்து கொள்ளும்....மீண்டும் பறக்கும். எல்லாம் சின்ன கொக்குகளும் பெரிய கொக்குகளும்.... அங்கு எனக்கு ஒரு பிடித்தமான இடம் உண்டு தண்ணீரை ஒட்டி. பின்னர் வரும் பதிவில் அவை எல்லாம் வரும் அக்கா.
ஆமாம் இப்ப பார்த்தால் துரிதமாக வேலைகள் நடக்கின்றன. பாதைகள் எல்லாம் சீரமைத்து. ஏரியும் சுத்தமாகும் என்று தோன்றுகிறது. ஆகாயத் தாமரையை நீக்கினால் தண்ணீருக்கு நல்லது ஆனால் பறவைகளுக்கு அவை தான் ஓய்வு எடுக்கவும் பூச்சிகள் மீன்களைப் பிடிக்கவும் ஆனந்தமாக அவற்றில் அமர்ந்து இருப்பதைப் பார்க்க கொள்ளை அழகு! நமக்கும் பார்க்க முடிகிறது. வற்றை முழுவதும் நீக்கிவிட்டால் நடுவில் திட்டுகள் கூட இல்லையே எனவே கொக்குகள் வருவது குறையலாம். அப்படித்தான் முந்தைய பகுதி ஏரிகளில்...கொக்குகளைப் பார்ப்பது அரிது.
நன்றி கோமதிக்கா
கீதா
//கூழைக்கடா, வர்ண நாரை, செந்நாரை, சாம்பல் நாரை, கருப்பு இந்திய அறிவாள்மூக்கன்/அன்றில் பறவை, கருப்புத் தலை வெள்ளை அறிவாள் மூக்கன், புள்ளி மூக்கு வாத்துகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான்கள், பெரிய கொக்கு, சின்ன கொக்கு, குளத்துக் கொக்கு, பாம்புத் தாரா, நீலநிற தாழைக் கோழிகள், நீர்க்காகங்கள், சிவப்பு மூக்கு தாழைக்கோழிகள்//
பதிலளிநீக்குஎத்தனை பறவைகள் அத்தனையும் பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
வீட்டுக்கு அருகில் நடைப்பயிற்சியின் போது இத்தனை பறவைகளை பார்க்கலாம் என்பதே நல்ல வாய்ப்பு.
ஆமாம் அக்கா இத்தனையும் பார்க்க முடிவது மனதுக்குச் சந்தோஷமாக இருக்கு. நல்ல வாய்ப்பு.நீங்கள் சொல்லியிருப்பது போல். சுற்றிலும் நீர் மரங்கள்....எனவே ரம்மியமாக இருக்கும் மாலைப் பொழுது.
நீக்குநன்றி கோமதிக்கா
கீதா
//ஏரி 2023 வரை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவரை சுற்றுலாத்தலமாக, படகுச்சவாரி, பூங்கா என்று உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் நல்ல ஒரு பொழுது போக்கு இடமாக இருந்திருக்கிறது. //
பதிலளிநீக்குஇப்போதும் ஏதோ செய்து கொண்டு இருக்கிறார்களே மக்களை வரவழைக்க ஏதாவது ஏற்பாடு நடக்கிறது போல இருக்கிறது. நடைப்பயிற்சி செய்ய இடம் அமர இருக்கைகள் என்று செய்வார்கள் போல.
இப்பவும் செய்கிறார்கள். மீண்டும் படகு விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இயற்கைப் படகாக இருந்தால் நல்லது. ரங்கனத்திட்டு அங்கு இருப்பது போல். மோட்டார் படகு அங்கு விட மாட்டாங்க. அது போல இங்கும் இருந்தால் நலல்து. கூடங்கள் இருக்கின்றன அமரவும் ஆங்காங்கே சிமென்ட் பெஞ்சுகள் இருக்கின்றன. அவை எல்லாம் அப்படியே இருக்கின்றன. இப்போது நடை பாதை முன்பு மண் பகுதியாக இருந்ததை சிமென்ட் கற்கள் போட்டு அமைக்கிறார்கள். எல்லாம் சீரமைக்கிறார்கள். இன்று காலை போயிருந்த போது எல்லாம் துரிதமாக நடபப்து போல் தெரிகிறது.
நீக்குதண்ணீரைச் சுத்தம் செய்திட வேண்டும் அதுவும் செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.
நன்றி கோமதிக்கா.
கீதா
பாழடைந்த, கோயிலின் ஒரு பகுதி போன்று//
பதிலளிநீக்குநாலுகால் மண்டபம் போலவும் இருக்கிறது, அதற்கு மேல் அடுக்கு உடைந்து விட்டது போல
ஓ நாலுகால் மண்டபம் சின்னதாக இருக்கு இல்லையா. மேல் அடுக்கு இருந்திருக்கும் இல்லையா?
நீக்குஅப்பகுதியிலும் நடக்க பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி கோமதிக்கா
கீதா
புள்ளி மூக்கு கூழைக்கடாக்கள். இவை மரங்களின் உச்சியில் தான் கூடு கட்டும். //
பதிலளிநீக்குஇந்த படம், நீலநிற தாழைக் கோழி ஆகாய தாமரை இலை மேலே அமர்ந்து இருக்கும் படமும் அருமை.
மிக்க நன்றி கோமதிக்கா. இன்னும் பறவைகள் படம் பின்னர் வரும்.
நீக்குகீதா
இந்தப் பதிவு நிறைய புதிய விஷயங்களைக் கொண்டுள்ளது.
பதிலளிநீக்குமடிவாலா ஏரி பற்றி நீங்க சொல்லியிருக்கும் பல விஷயங்கள் புதிது.
இருந்தாலும் பெங்களூரில் பல ஏரிகளை ஆக்கிரமித்துவிடக்கூடாது என்று வேலிகள் போட்டிருக்கிறார்கள். அங்கு நடைபாதைகளும் அமைத்திருக்கிறார்கள்.
வாங்க நெல்லை.
நீக்குவேலிகள் போட்டிருப்பது ஒரு சில ஏரிகளில் மட்டுமே நெல்லை. அதுவும் ஒரு சில ஏரிகளில் நடைபாதை உண்டு. ஹெப்பால் ஏரியில் உட்பக்கம் வலை கிடையாது. சாலை ஓரப் பகுதிகளில் வலை உண்டு. நடைபாதையும் உண்டு. ஏலஹங்கா ஏரியில் வலைத்தடுப்பு இல்லை பாதை இருக்குக்கும். ஆனால் கழிவு நீர் கலக்கும்., கோஹிலு ஏரிப்பகுதியில் வெளிப்பகுதியில் வலைத்தடுப்பு உண்டு நடைபாதையும் உண்டு மண் பகுதியாக... இங்கும் கழிவு நீர் கலக்கும். சோமசுந்தரபால்யா பகுதி ஏரியில் இப்பதான் தடுப்பு போட்டிருக்காங்க. நடைபாதையும் டைல்ஸ் கற்கள் இப்பதான் போட்டிருக்காங்க ஆனால் கழிவு நீர் கலக்கிறது. தண்ணீர் ரொம்ப மோசமாக இருக்கும். சின்ன ஏரி. இங்கு அட்லீஸ்ட் சம்பு தாழைகள் நிறைய உண்டு. ப்ளாஸ்டிக் குப்பைகள் நிறைய கிடக்கும்.
நன்றி நெல்லை
கீதா
கோயில் அல்லது மண்டபப் பகுதி அந்த இடம் எவ்வளவு புராதானமானது என்று சொல்கிறது.
பதிலளிநீக்குநான் ஒரு கோயிலுக்கு (பெங்களூரில்) சென்றிருந்தபோது அதைச் சுற்றி ஐந்து ஏரிகள் இருந்தன, தற்போது ஒரு குளம் மட்டும்தான் இருக்கிறது என்றார்கள்.
இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதில், அதன் மூலம் பணம் சுருட்டுவதில் கருணாநிதியிடம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது
ஆமாம்ல புராதானமாக இருக்கு.
நீக்குநீங்க சொல்லும் கோயில் பஞ்சலிங்கேஸ்வரா கோவிலா? அதைச் சுற்றி முன்பு 5 ஏரிகள் இருந்ததாகச் சொல்லபடுகிறது. இப்ப அதன் எதிரில் பேகூர் ஏரி மட்டும் இருக்கிறது.
உங்களுக்குத் தெரிந்திருக்கும், நெல்லை, தமிழ்நாட்டைப் போலதான் இங்கும் ஒரு காலத்தில் சம்பங்கி ஏரி என்று சொல்லப்பட்ட ஏரியின் மேல் தான் கண்டீரவ ஸ்டேடியம் கட்டியிருக்காங்க அது போல தர்மாம்புத்தி ஏரி தான் இப்ப மெஜஸ்டிக் பஸ் ஸ்டான்ட்!
கீதா
ஆகாயத்தாமரையை முழுவதும் நீக்கினால் (பாசிடிவ் செய்தில இதை உபயோகித்து பேப்பர் செய்யறாங்கன்னு வந்ததே... பேசாம ஸ்ரீராம்ட அந்தப் பொறுப்பைக் கொடுத்து ஆகாயத் தாமரைகளை அவருக்கு அனுப்பிடலாமா?) குளம் வளம் பெறும்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு. காணொளியும் அழகு
அந்த பாசிட்டிவ் செய்தி நினைவிருக்கு நெல்லை. இங்கு உரமாக்குகிறார்கள்.
நீக்குஆகாயத்தாமரை தண்ணீருக்கு நல்லதில்லை. ஆனால் பாருங்க பறவைகள் எலலம் அதன் மீது அமர்ந்து ஓய்வு எடுக்கின்றன, பூச்சி பிடிக்கின்றன. இல்லைனா இவற்றிற்கு நாணல் சம்பு தாவர்ங்கள் இருக்கணும் இல்லைனா இப்படியான பறவைகள் வருவது குறைந்துவிடும். ஆகாயத்தாமரையை நீக்கினால் வேறு செடிகளை வளர்க்க வேண்டும்.
படங்கள் அழகு. காணொளியும் அழகு//
நன்றி நெல்லை
கீதா
மக்கள் எல்லா நீர்நிலைகள் வடிகால்களைப் பாழ் படுத்திவிட்டு, மேலுலகத்திலிருந்து ஒரு தேவன் வந்து எல்லாவற்றையும் சரி செய்வான் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பதிலளிநீக்கு2015 மழை மாதிரி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வந்தால்தான் அவர்களுக்கும் புத்தி வரும்.
2015 மழை மாதிரி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வந்தால்தான் அவர்களுக்கும் புத்தி வரும்.//
நீக்குஅப்படின்றீங்க!! ம்ஹூம்....வராது நெல்லை. ஒவ்வொரு வருஷமும் வந்தாலும்....அதென்ன ஒரு 4 நாள் ல வடிஞ்சுரும். அவ்வளவுதான் எல்லாரும் அவங்கவங்க வேலைய பார்க்கப் போய்டுவாங்க. குறிப்பா அதில் எவ்வளவு அடிக்கலாம்னு!. ஏன்னா வரக்கூடிய மழை அவங்களையா பாதிக்குது? அப்பாவி மக்களைத்தானே பாதிக்குது?
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மடிவாலா ஏரி படங்கள், அதைக்குறித்த விபரங்கள் என அனைத்தையும் பார்த்து, படித்து தெரிந்து கொண்டேன். நல்ல விளக்கமாக பதிவை எழுதியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பறவைகளைப் பற்றிய தகவல்கள் அருமையாக உள்ளது. படிக்கையில், எத்தனை விதமான பறவைகளின் பெயர்கள் என வியப்பு வந்தது. நிறைய விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களது திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். காணொளிகளையும் பார்த்தேன்.நன்றாக இருக்கிறது. நல்ல பொறுமையாக படங்களையும், , காணொளிகளையும் எடுத்ததற்கும், உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. பதிவு நன்றாக இருந்தது சகோதரி. தாமதமானாலும், தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலாக்கா.
நீக்குபறவைகள் விதம் விதமாக நிறைய உண்டு.
அக்கா அப்படி ஒன்றும் நான் பெரிய உஸ்தாத் இல்லையாக்கும்!
படங்கள் காணொளிகள் எல்லாம் ரசித்துப் பார்த்ததற்கு மிக்க நன்றி அக்கா.
கமலாக்காவா இது என்று நான் வியந்தேன். ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்!!!!
தாமதமாக வந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன் சகோதரி. என்ற வரியைக் காணாமல்.......ஹாஹாஹா
கீதா
ஹப்பா சொல்லிச் சொல்லி இப்பதான் விட்டிருக்கீங்க!!! மகிழ்ச்சி கமலாக்கா..
நீக்குகீதா