திங்கள், 14 மார்ச், 2016

ஹச்சிகோ

 எங்கள் முந்தைய பதிவான நட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்! ற்கு மதுரைத் தமிழன் கொடுத்திருந்தப் பின்னூட்டம் இது.

எனது கவலை எல்லாம் அந்த மனிதர் வயதானவராக இருக்கிறார் தீடிரென்று இறந்து போனால் இந்தே பெங்குவினுக்கு எப்படி தெரியும் அல்லது புரியும் இந்த பெங்குவினிற்காகவது இந்த மனிதர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

வாசித்ததும் எனக்கு ஆச்சரியம். பதிவை எழுதிக் கொண்டே நானும் எனது மகனும் பெங்க்வினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இதே எண்ணம் என் மனதில் ஓடிட நான் மகனிடம் வருந்தினேன். இவர்கள் நிறைய நாட்கள் இருக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டேன். பேசிவிட்டு, எனக்கு எழுந்த எண்ணத்தைப் பதிவின் இறுதியில் சேர்த்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டே, இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் வெளியிடும் முன் படங்களை இணைத்து வெளியிடும் போதும் சேர்க்காமல் விட்டு விட்டேன்.


பல வருடங்களுக்கு முன் ஜப்பானில் நடந்த உண்மையான நிகழ்வின் நாயகனான ஹச்சிகோ எனும் நாலுகால் செல்லத்தைப் போன்று உள்ளது இந்த பெங்க்வின் நிகழ்வும் என்று நானும் மகனும் பேசியதால், இந்த எண்ணத்தைப் பதிவாக எழுதிவிடலாமே என்றும் தோன்றியது.  இப்போது பெங்க்வின் மனதை நெகிழ்த்தியது போல் ஹச்சிகோ மனதை நெகிழ்த்தியது அவனைப் பற்றி அறிந்த போது, பல வருடங்களுக்கு முன்.

அக்கிடோ ப்ரீட்: வலது புறம் இருப்பவை ஜப்பானின் வடக்குப் பிரதேச வகை. இடது புறம் இருப்பவை அமெரிக்க அக்கிடோ சாதிவகை

ஹச்சிகோ. 1924 ஆம் வருடம் டோக்யோ பல்கலைக்கழகத்தின் விவசாயத் துறை பேராசிரியர் Hidesaburo Ueno, ஹச்சிகோ என்று பெயரிடப்பட்ட, அக்கிடோ எனும் பெரிய சாதிவகைச் (Akito breed) செல்லத்தை வளர்த்து வந்தார்.


ஒவ்வொரு நாளும் ஹச்சிகோ தன் எஜமானரை வழி அனுப்பி, அவர் திரும்பும் வேளையில் ஷிபுயா ரயில் நிலையத்தில், அந்த ரயில் வரும் சரியான நேரத்திற்குச் சென்றுக் காத்திருந்து அவரை வரவேற்று, தவறாது, 1925 ஆம் வருடம் பேராசிரியர் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுக் கல்லூரியிலேயே இறந்த முன் தினம் வரை அழைத்து வந்திருக்கிறான். இறந்த அன்று அவர் திரும்பவில்லை.


ஆனால், ஹச்சிகோ அவரை எதிர்பார்த்து ரயில் நிலையத்தில் காத்திருந்திருக்கிறான். இப்படி ஒரு நாள் அல்ல, 9 வருடங்கள், அவன் இறக்கும் வரை காத்திருந்திருக்கிறான்.

பேராசிரியரும், ஹச்சிகோவும் இப்படி இருப்பதை ஷிபுயா ரயில் நிலையத்தின் வழி பயணம் செய்யும் பல பிரயாணிகளும் பார்த்திருந்ததால், அவர்களை எல்லாம் இவன் தனது காத்திருப்பால் ஈர்த்திருந்திருக்கிறான். என்றாலும் அங்கிருந்த ரயில்நிலையத்தின் பணியாளர்கள் இவனைக் கண்டுகொள்ளவில்லை முதலில்.


அகிட்டோ வகைச்சாதியைப் பற்றி நன்றாக அறிந்திருந்த, பேராசிரியரின் மாணவர் ஒருவர், ஹச்சிகோ, ரயில் நிலையத்தில் இப்படிக் காத்திருப்பதைப் பார்த்து அவனைப் பின் தொடர, ஹச்சிகோ, பேராசிரியரின் தோட்டத்தை முன்பு பராமரித்தவரின் வீட்டிற்குச் செல்லுவதைப் பார்த்து அந்தப் பணியாளரிடம் ஹச்சிகோவின் கதையை அறிந்து, ஹச்சிகோவின் இந்த விசுவாசத்தைப் பற்றியும், அகிட்டோ வகை சாதிச் செல்லங்களின் இந்தக் கடமை உணர்ச்சி மற்றும் விசுவாச குணத்தைப் பற்றியும் 1932 ஆம் ஆண்டு கட்டுரை வெளியிட, ஹச்சிகோ பிரபலமடைய, மக்கள் ஹச்சிகோவுக்கு அவன் காத்திருந்த வேளையில் உணவு அளித்துக் காத்து வந்திருக்கின்றனர். 

அந்த மாணவர் ஹச்சிகோவை அடிக்கடிப் பார்த்துப் பல கட்டுரைகள் வெளியிட அவனது விசுவாசமும், பற்றுதலும் நாடு முழுவதும் பரவ, அவன் மிகவும் புகழ் பெற்று, விசுவாசத்திற்குத் தேசீய சின்னமாகக் கொண்டாடப்பட்டான். குடும்பத்தில் ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவனை எடுத்துக்காட்டாக, பெற்றோரும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தனர்.

ஹச்சிகோ இறப்பதற்கு ஒரு வருடம் முன்னர்



அவனது உருவம் போல ஒரு வெண்கலச் சிலை 1934 ஆம் வருடம் செய்து ஷிபுயா ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டு அவன் முன்னிலையிலேயே திறப்புவிழா நடத்தித் திறந்து வைத்தனர். அந்தச் சிலை இருக்கும் வழி ஹச்சிகோ எக்சிட் என்றும் பெயரிடப்பட்டது.

இதன் நடுவில் உள்ள செய்தியைப் படித்தால் மனம் கனத்துவிடுகிறது

ஹச்சிகோ 1935 ஆம் வருடம் மார்ச் 8 ஆம் நாள், சிபுயாவில் ஒரு தெருவில் இறந்துக் கிடந்திருக்கிறான். அவனது எஜமானரின் மனைவி மற்றும் ரயில் நிலையப் பணியாளர்கள் அவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.


அவனது மயிர்த்தோல் “டாக்சிடெர்மி” செய்யப்பட்டு, அதாவது உயிருடன் இருக்கும் நிஜ உருவம் போல் செய்யப்பட்டு தேசிய அரும்பொருட்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். 


அவன் உடல் எரிக்கப்பட்டச் சாம்பலை பேராசிரியரின் கல்லறைக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்து கல்லறை எழுப்பியுள்ளனர். ஹச்சிகோ இறந்த தினம், மார்ச் 8, ஒவ்வொரு வருடமும் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

Hachi A Dog's Tale - அமெரிக்கத் திரைப்படம்

ஹச்சிகோ பற்றிய திரைப்படம் ஜப்பானிய மொழியில் 1987 ல் எடுத்திருக்கிறார்கள். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2009ல் ஹச்சி-எ டாக்’ஸ் டேல் (Hachi  A Dog’s Tale) என்று எடுக்கப்பட்ட அமெரிக்கப் படமும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஹச்சிகோ பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். அந்த நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட மேற்சொன்ன படமும் கூட பார்த்திருப்பீர்கள். பார்த்ததும் நீங்கள் நாலுகால் செல்லங்களின் பிரியர் என்றால் நிச்சயமாக கண்ணில் கண்ணீர் வந்திருக்கும். இந்தப் படத்தைப் பார்த்ததும் மனம் என்னவோ செய்திட என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.

டிண்டிம் பெங்க்வின் நிகழ்வை வாசித்ததும், ஹச்சிகோ நினைவு வர, டிண்டிமும், டி சுசாவின் காலத்திற்குப் பிறகு இத்தனை தூரம் நீந்தி வருவானோ? தேடுவானோ? தவிப்பானோ? பாவம் குழந்தை. எப்படி உணர்வான் என்று தோன்றி மனம் மிகவும் வேதனை அடைந்தது. டிண்டினும், டி சுசாவும் இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டும் அந்த அன்பிற்காகவேனும்.

ஒரு வேளை ஹச்சிகோ போல் டிண்டினிற்கும் உருவச் சிலை அமைக்கப்படலாம். படம் எடுக்கப்படலாம். ஹச்சிகோ போல் பிரபலமாகலாம்.


கடந்த வருடம் 2015ல் ஹச்சிகோவிற்கு அவனது எஜமானர், பேராசிரியர் மீண்டும் அவனைச் சந்திப்பது போல உருவச் சிலையை பல்கலைக்கழக விவசாயத் துறையினர் உருவாக்கியிருக்கிறார்கள்.

விலங்குகள் மனிதர்களை விட மேலானவைதான். எனவே, நாயே, எருமை மாடு, கழுதை, குள்ளநரி என்று சொல்லித் திட்டி நாலுகால்செல்லங்களைக் கேவலப்படுத்தவதைத் தவிர்க்கலாமே.

-----கீதா  

படங்கள், தகவல்கள் - நன்றி: இணையம், விக்கி, யூட்யூப்
  





49 கருத்துகள்:


  1. நீங்கள் குறிப்பிட்ட அந்த படம் கண்ணில் கண்ணீரை அல்ல இரத்ததை வரவழைக்கும் படம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மதுரைத் தமிழா..அந்தப் படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது.எனக்கு வார்த்தைகளைச் சொல்லத் தெரியவில்லை...மனம் கனத்து பல மணி நேரங்கள், பல நாட்கள் நான் என் செல்லங்களைப் பார்த்துப் பார்த்து மனம் வேதனை அடைந்த தருணங்கள் நிறைய. ஹச்சிகோ வின் நினைவு வந்து கொண்டே இருக்கும்.

      நீக்கு
  2. ஈரம் இல்லாமல் வறண்டு கிடக்கும் இதயத்தை கொண்டவர் எவரும் ஒரு நாய்க்குட்டியை தங்கள் வீட்டில் வளர்த்து வந்தால் அந்த இதயங்களில் இரக்கம் எனும் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையோ உண்மை. இவை நல்ல மருத்துவர்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. வயதான முதியவர்களுக்கு நல்ல தோழமை, மனநிலை பிறழ்ந்தவர்களுக்கும், மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கும் இவை நல்ல நட்புகள் அவர்கள் மன நிலையில் மாற்றத்தை வரவழைக்கும் சக்தி நிறைந்தவை...

      மிக்க நன்றி தமிழா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. மனம் நெகிழ்ந்தது
    படங்களுடன் பகிர்வு
    " நாமெல்லாம் எந்த நிலையில் " இருக்கிறோம்
    என்பதை எண்ணச் செய்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  4. விவரமும் அறிந்திருக்கிறேன். காணொளியும் கண்டிருக்கிறேன். நெகிழ்ச்சியான விஷயம். நேற்று முக நூலில் ஒரு காணொளி கண்டேன். ஊரிலிருந்து திரும்பும் எஜமானனை வரவேற்கும் ஒரு நாலுகால் செல்லத்தின் அன்பைக் காட்டும் காணொளி. நெகிழ்த்தியது அதுவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள், மதுரைத் தமிழன் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்று தெரியும்..ஸ்ரீராம் அந்தக் காணொளி பகிரமுடியுமா?

      எங்கள் செல்லங்கள் எங்களை கொஞ்ச நேரம் காணவில்லை என்றதுமே வீட்டிற்கு வந்ததும் துள்ளித் துள்ளி அங்கு ஓடி இங்கு ஓடி, எங்கள் மேல் தாவி நக்கித் தள்ளிவிடுவார்கள். சில சமயம் ஊஊஊஒஓஓஓஓ ஊஊஉ என்று நம்மை மிஸ் செய்ததாகக் குரல் கூட எழுப்புவார்கள் தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில்....நாநும் மகனும் அப்படியே அவர்களைக் கட்டிக் கொண்டு விடுவோம்...குடைந்து தள்ளிவிடுவார்கள்...மல்லாந்து படுத்துச் சந்தோஷத்தை வெளிபப்டுத்துவார்கள்...கண்கொள்ளாக் காட்சிகள் அவை..மனதை அப்படியே ரிலாக்ஸாக்கிவிடும் அந்த அன்பு...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  5. ஹச்சிகோ மனதை ஏதோ செய்துவிட்டான்...பகிர்விற்கு நன்றி கீதா.
    //விலங்குகள் மனிதர்களை விட மேலானவைதான். // மிகவும் உண்மை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ் தங்களின் கருத்திற்கு. அந்தப் படம் லிங்க் கொடுத்திருக்கிறேனே முடிந்தால் பாருங்கள். அருமையான படம்..ஆனால் மனதைப் பிழிந்தெடுத்துவிடும்..

      நீக்கு
  6. ஆஹா இப்படியும் ஒரு ஜீவனா...!!
    நெஞ்சம் நெகிழ்ந்ததே நட்பே....
    இதற்கெல்லாம் ஐந்து அறிவென்று
    யார் சொன்னாங்க....
    நம்மை விட இரண்டு அறிவு
    அதிகமாகதான் இருக்கிறது....
    பேசும் திறன் மட்டும் இல்லை அவ்வளவுதான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5 அறிவு இல்லை நீங்கள் சொல்லுவது போல் கூட 2 கூட சேர்த்துக் கொள்ளலாம்தான்...உண்மை மிக்க நன்றி அஜய் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  7. ஏற்கனவே படித்திருக்கிறேன் சகோதரியாரே
    இருந்தும் கூடுதல் படங்களுடன் தங்களின் பதிவு
    நெகிழச் செய்கிறது
    மனிதர்களை விட விலங்குகள் மேலானவைதான்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  8. மற்ற வளர்ப்பு பிராணிகளை விட, நாய் மட்டும் ஏன் மனிதனுடன் அதிக விசுவாசத்துடன் இருக்கிறது என்பதை நிர்ணயிக்க பல உளவியல் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

    அதில் ஒன்று சொல்லுவது: நாய் மனிதனை , மனித சமூகத்தை, அன்னியமாகக் கருதுவது இல்லையாம். இந்த குணம் மற்றும் அதற்குண்டான டி. என். எ. நாயில் இருப்பது போல மற்ற பிராணிகள், உதாரணமாக, குதிரை, பறவைகள், ஆகியவற்றில் இல்லை என்கிறார்கள்.

    இன்னும் ஒரு அதிசயம் சொல்லப்போனால், இந்த ஒரு டி. என். எ. மனித வர்க்கத்திடையே கூட, சமூகத்திலிருந்து தம்மைத் தனிப்படுத்திக் கொள்ளும் மனிதரிடையே காணப்படுவது இல்லை என்கிறார்கள்.

    இத்தனை சொன்னாலும் இந்த கருத்தை பொதுவாகவும் ஆக்க இயலவில்லை. பாமநேரியன் நாய்கள் தம்மை வளர்ப்பவரையே கடிக்கின்றன. இதை செல்லக்கடி என்று வேண்டுமானால் நம்மை தேத்திக்கொள்ளலாம் .

    எது எப்படியோ, நாங்கள் இருக்கும் புற நகர்ப்பகுதியில் ஒரு வீதிக்கு 40 முதல் 60 நாய்கள் இருக்கின்றன. குறிப்பாக, நாங்கள் இருக்கும் வீதியில் உள்ள பெரியார் பூங்கா அருகில் காலை நேரத்தில், இந்த தெரு நாயகளுக்கு உணவு கொண்டுவந்து போடும் ஒருவருக்காக, சுமார் பத்து பதினைந்து நாய்கள் ஒன்றாக நின்று கொண்டு அவரை எதிர்பார்த்து இருப்பதையும் கண்டு இருக்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விரிவான தகவல் தாத்தா. ஆனால் நாலுகால் செல்லங்கள் அனைத்திற்குமே அன்பு செலுத்தினால் மனிதனைத்ட் தோழமையுடன் தான் பார்க்கும். அவை நம்மைக் கடிப்பதோ, தாக்குவதோ பயத்தினால் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு இன்செக்யூர்ட் ஃபீலிங்கினால்தான். பாமரேனியன் கடித்திருந்தால் அதன் ஓனர் அதனை எப்படி வளர்த்தார் என்பது தெரியாமல் அது கடித்தது என்று சொல்ல முடியாதே தாத்தா. எங்கள் உறவுகள் வீடுகளிலும் ப்யூர் ப்ரீட் பாமரேனியன் இருக்கின்றன. கடிக்காது. இந்தியன் ஸ்பிட்ஸ் வகையை பாமரேனியன் என்று இங்கு குழப்பிக் கொள்கின்றார்கள். அதுவும் பாமரேனியன் போல் தோற்றம் உடையதால். அதற்கும் பழக்கிவிட்டால் செல்லக் கடி கூட கடிக்காது. அது ஓனரின் கையில் தான் இருக்கிறது தாத்தா. ஆம் ஆர்வலர்கள் இப்போது ஆங்காங்கே உணவளைக்கிறார்கள். தெருவில் இந்தச் செல்லங்கள் பெருகுவதற்கும் காரணம் நம் மக்களுக்கும் அரசிற்கும் பங்குண்டு. மக்களும் தாங்கள் வளர்க்கும் செல்லங்களைப் பல சமயங்களில் தெருவில் அபாண்டன் பண்ணி விட்டு விடுகின்றார்கள் அவற்றிற்கு ஏதேனும் சிறு நோவு வந்தாலும்.

      நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் சுப்புத் தாத்தா. உங்களை முன்னர் ஒன்று முன்னர் கடித்துத் தாங்கள் ஊசி எல்லாம் போட்டுக் கொண்டது நினைவில் இருக்கிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்புத்தாத்தா

      நீக்கு
  9. >>> டிண்டினும், டி சுசாவும் இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டும் - அந்த அன்பிற்காகவேனும்!.. <<<

    நாமும் பிரார்த்திப்போம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  10. பென்குயின் பற்றிய உங்கள் போஸ்ட் படித்தேன், இன்று இந்த போஸ்ட் , இரண்டும் மனதை நெகிழ வைத்துவிட்டது. படங்களுடன் விவரித்த விதம் அருமை.

    எங்கள் வீட்டில் நாங்கள் வளர்க்கும் மூன்று நாய்கள், கோழிகள், வாத்துக்கள் மட்டுமல்லாமல் வெகு சுதந்திரமாக வீட்டிற்குள் வந்து உணவெடுத்து செல்லும் அணில் கூட்டம், மைனா , குருவிகள் போன்றவை தான் எங்களின் வாழ்வை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன தோழமை. நமது குழந்தைகளுக்கும் இவற்றின் மதிப்பை நாம் உணரச் செய்யவேண்டும்.

    அற்புதமான பதிவுகளை எழுதும் உங்களும் எனது பாராட்டுகள் தோழமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி கௌசல்யா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். அட நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் அதற்காகவேனும் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் நிச்சயமாக. மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கும் தோழி.

      நீக்கு
  11. நிச்சயம் அவை மனிதர்களை விட மேலானவைதான் ...ஒரு குறும்படம் பார்த்த நிறைவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே மிக்க நன்றி செல்வா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  12. மனதை வருடும் உணர்வுகள் ...அவர்களின் அன்பில் மனம் நெகிழ்கிறது ........!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  13. பாசம் காட்டி நேசம் வைத்தால் மிருகம்கூட நண்பனே! என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. நாய் வளர்ப்பவரையும், பூனை வீட்டையையும் நம்பி இருக்கும் என்பார்கள்.ஆனால் எப்போது பூனை வளர்ப்பவர்களிடம் கேட்டால் பூனையும் மனிதனை விரும்புவதை அழகாய் சொல்வார்கள். அருமையான அன்பான பதிவு.
    பாடகச்சேரி ராமலிங்கள் சுவாமிகள் நாய்களுக்கு இலை போட்டு உணவு அளிப்பாராம். இத்தனை நாய்கள் வரும் என்று அவர் இலை போட்டால் அத்தனை நாய்கள் வந்து இலைமுன் அமர்ந்து சத்தமில்லாமல் உணவுருந்தி செல்லுமாம். ராமலிங்க சுவாமிகளை பார்க்கவேண்டும் என்று எந்த நாயிடமாவது சொன்னால் நாய் அவரை
    அழைத்து வந்து விடுமாம். பாடகச்சேரி சுவாமிகள் வாழ்க்கை வரலாறில் போட்டு இருக்கிறது அவர் அதிஷ்டானம் போன போது நாய்கள் நிறைய இருந்தது மிகவும் அமைதியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்குக்கும். இதுவரை அறியாத புதிய தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. வியப்பாக இருக்கிறது இந்த நிகழ்வு. மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  14. உள்ளத்தைத் தொடும் பதிவிது
    அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  15. ஹச்சிகோ பற்றி ஏற்கனவே படித்ட்க்ஹிருக்கிறேன் இப்போது மறுபடியும் ஒரு ரிவைண்ட் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. ஆற்றிவு மனிதனைவிட உயர்வானதாகவே எனக்கு படுகின்றது வேதனையான பகிர்வுதான்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  17. சினிமா பிறகு பார்க்கிறேன் 1½ மணி நேரமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி 1 1/2 மணி நேரம். மனம் கனத்துவிடும் இறுதியில்...

      நீக்கு
  18. ஹச்சிகோ பற்றி கேள்விபட்டிருக்கேன் ..படம் பார்கல்லை ..பொதுவாக விலங்குகள் பற்றிய படங்கள் வெளிநாட்டினர் எடுப்பதில் சில வன்முறை காட்சிகளை புகுத்தி விடுவர் அதனாலேயே நான் பார்க்க மாட்டேன் ...எல்லா உயிரும் சந்தோஷமா இருக்கணும் சின்ன துயர சம்பவம் கூட எனக்கு தாங்காது ..
    ஒரு மாதம் கழித்து கிட்டு நேற்று மீண்டும் வந்தான் என்னை பார்க்க ..எல்லா மனிதரும் இந்த உயிர்களை அன்போடு கருணையோடும் கவனிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதல் .மனிதனை விட விலங்குகள் மிக அன்பானவை நன்றியுனர்வுல்லவை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சலின் தங்களின் கருத்திற்கு..

      இந்தப் படத்தில் வன்முறைக்காட்சிகள் எதுவும் கிடையாது. இறுதியில் மனம் என்னவோ செய்துவிடும்...நம்மை அறியாமல் அழுதுவிடுவோம்...அதைத் தாங்கும் சக்தி இருந்தால் பார்க்கலாம்...அதாவது வன்முறை அல்ல...

      ஓ கிட்டு வந்துவிட்டானா? எப்படி இருக்கிறான்? என்ன சொன்னான்? இவர்களின் அன்பே அலாதிதான்..தனிதான். இவை ஒரே இடத்தில் இருக்கமாட்டார்களோ. அங்கு பூனைகள் எல்லாம் வெளியில் செல்லலாமா? ரோட்டில்...

      ஆம் விலங்குகள் மிக மிக அன்பானவை...

      நீக்கு
  19. கானொளியில், பாசப் போராட்டம் கண்டு நெகிழ்ந்தேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  20. வாயில்லா பிராணிகள் எப்படி ஆறறிவுடன் செயல்படுகின்றன என்பது வியப்பான விஷயம் தான். தன்னுடைய எஜமானனின் குரலை கேட்டுக் கொண்டிருக்கும் நாய் தானே His Master's Voice என்னும் HMV இசைக் கம்பனியின் சின்னம்!
    இதே போல எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இரண்டு யானை மந்தைகள் தங்களைக் காப்பாற்றிய லாரன்ஸ் ஆண்டனி என்னும் சுற்றுச் சூழல் பாதுகாப்பாளரின் மறைவிற்கு பின் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றனவாம். போகும் வழியிலும், வரும் வழியிலும் எந்த வித சேதத்தையும் ஏற்படுத்தாமல் சென்று விட்டு வந்தனவாம் என்ற செய்தி வந்திருந்தது. இதோ இணைப்பு:
    http://www.beliefnet.com/Inspiration/Home-Page-News-and-Views/Wild-Elephants-Mourn-Death-of-famed-Elephant-Whisperer.aspx

    நான் கூட சமீபத்தில் டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் 'Right in the Middle' இராணுவத்திற்கு சேவை செய்யும் ம்யூல் என்ற கோவேறு கழுதை பற்றிப் படித்தேன். உங்கள் பதிவைத் தொடர்ந்து என் பதிவில் அதைப் போடுகிறேன். யாரும் யாரையும் அழைக்காமல் ஒரு தொடர் பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரஞ்சனி சகோ. ஆமாம். அந்த யானைகளைப் பற்றிய செய்தி பார்த்தோம் மனதை நெகிழ்த்தியது. அவர்களின் நன்றியைப் பாருங்கள். ம்யூல் பற்றியும் வாசித்துவிட்டோம் உங்கள் தளத்தில் . மிக்க நன்றி நீங்கள் தொடர்ந்தமைக்கு. இப்படிச் செய்வதால் பல தகவல்கள் அறிய முடிகின்றது இல்லையா. மிக்க நன்றி மீண்டும்

      நீக்கு
  21. ஆமாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நன்றியணர்ச்சி கொண்டவை அவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சிவகுமாரன் தங்களின் கருத்திற்கும் முதல் வருகைக்கும்..

      நீக்கு
  22. ஹச்சிகோ பற்றி தெரிந்து கொண்டென்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  23. நெகிழ்வான ஆச்சர்யம்...சுவாரஸ்யம்... அருமை அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  24. ஹச்சிகோ பத்தி ஏற்கெனவே படிச்சிருக்கேன். நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி!

    பதிலளிநீக்கு