செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தனியொருவன்

எங்கள் பேட்டையின் தலைவன் அவன். வயதானவன்தான். தனியொருவனாய் ஆள்கின்றவன். பல பேட்டைகளில் இரண்டு, மூன்று தலைவர்கள், தலைவிகள் தங்களுக்குள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருப்பதும் உண்டு. ஆனால், எங்கள் பேட்டையின் தலைவன் இவன் மட்டுமே! அதனால் தனியொருவன்.

அவன் உரக்கக் குரல் எழுப்பினால் கூடவே மற்ற அல்லக்கைகளும் கத்திக் கொண்டு வருவார்கள் அன்றி அவன் அமைதியாய் இருந்தால் அல்லக்கைகளும் அமைதி காப்பார்கள். அல்லக்கைகளில் ஏதேனும் ஒருவன், இவன் அனுமதியின்றிக் குரல் கொடுத்தால், இவன், அவனை முறைத்துப் பார்த்துத் தன் குரலால் அடக்கிவிடுவான். பெண்கள் பொதுவாகக் குரல் கொடுப்பதில்லை. பிரசவம் முடிந்தபின் 3 அல்லது 4 மாதங்களுக்குக் குரல் கொடுப்பார்கள். அப்புறம் எப்போதேனும்.

தலைவனுக்கு வலதுகையாய் ஒருவன் உண்டு. என்றாலும் அவனும் இவனது ஆட்சிக்குக் கீழ்தான். எங்கள் பேட்டைத் தலைவனும், அவன் கூட்டமும் எல்லா பேட்டைத் தலைவர்கள் அவர்களின் கூட்டம் போலத் தங்கள் எல்லையை நிர்ணயித்துள்ளார்கள். ஆனால், அதை மீறி இவர்களும் செல்வதில்லை மற்ற பேட்டைக்காரர்களையும் அனுமதிப்பதில்லை. தலைவன் சற்று நேர்மையானவன்!? எனலாம். ஏனென்றால் மற்ற பேட்டைக்காரர்கள் அடிக்கடி நுழைவார்கள், எங்கள் பேட்டையில் பெண்கள் அதிகம் என்பதால்.

சிலசமயங்களில் அடுத்த பேட்டையிலிருந்து அந்தப் பேட்டைத் தலைவனோ, அவனது அல்லகைகளில் ஏதேனும் ஒருவனோ எங்கள் பேட்டையில் பெண் பார்க்க வந்தால் சண்டை தீவிரமாகும். ஆனால், அடுத்த பேட்டைப் பெண்கள் குறிப்பிட்ட காலத்தில் எங்கள் பேட்டைக்குள் நுழையலாம், தலைவனின் அனுமதியுடன்! அந்தப் பேட்டைத் தலைவனுக்குத் தெரிந்தால் சண்டைதான். 

அவனோ, அவளோ கொஞ்சம் அப்பாவியாக இருந்துவிட்டால் அல்லது சிறியவர்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம், அவர்களைக் குரல் எழுப்பித் துரத்துவதிலும், அவர்கள் எழுப்பும் தீனக்குரலிலும் எங்கள் பேட்டையே அல்லோகலப்படும். அவர்களின் உலகமே தனிதான். சுவாரஸ்யமிக்க ஒன்று. பல சமயங்களில் அப்பாவியாகப் படுத்துக் கிடப்பார்கள்.

நான் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது எங்கள் பேட்டையின் தனியொருவன் குரல் எழுப்புவான். என்னுடன் கண்ணழகியும் வருவாளே! அவன் குரலெழுப்பியவுடன், எப்பொழுதேனும் அல்லக்கைகளும் இணைந்து கொள்வார்கள். சும்மாவேனும். என் பெண்ணை அவர்களின் கூட்டத்தில் பதிவு செய்யவில்லை என்பது ஒரு புறம், மறுபுறம் அவன் அருகில் விடவில்லை என்ற கோபம்.

இப்படிக் குரலெழுப்பினால் முன்பெல்லாம் தனியொருவனுக்கு லஞ்சம் கொடுத்து அடக்கிவிடுவேன்! போகப் போக, அவன் கத்தினால் அன்று லஞ்சம் கிடையாது. கத்தாமல் இருந்தால் பரிசு உண்டு! இதைத் தெரிந்து கொண்டுவிட்டான். பரிசு வேண்டும் என்றால் கத்தாமல் இருப்பான். இல்லை என்றால் பெருங்குரல்தான்.

அப்படித்தான் இன்றும் கண்ணழகியுடன் சென்ற போது குரல் எழுப்பவில்லை. ஒரு வேளை இன்னும் ஆழ்ந்த துயிலில் இருக்கின்றான் போலும் இல்லை அவனுக்கு இன்று லஞ்சம் வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டு, வரும் போது கொடுக்கலாம் என்று என் நடையைத் தொடர்ந்தேன். பேட்டையே மிகவும் அமைதியாக இருந்தது போல் தோன்றியது. கண்ணழகி மிகவும் பரபரப்பாக என்னைச் சாலை ஓரம் இழுத்துச் சென்றாள். அப்போதுதான் கவனித்தேன் சாலையின் ஓரத்தில் ஒருவன் அடிபட்டுக் கிடந்ததை.

தேநீர்க்கடைக்காரர், “உங்க ஆளுதான் அவன். இப்பத்தான் நீங்க வரதுக்கு ஒரு 15 நிமிஷம் முன்னாடிதான் நான் கடையத் திறக்கற சமயம், திறக்கறது கூடத் தெரியாம அவன் இங்க ஓரமாத்தான் நல்ல உறக்கம். ஒரு வண்டிக்காரன் வேகமா வந்தவன் அடிச்சுத் தள்ளிட்டுப் போய்ட்டான். நான்தான் அந்தண்டைத் தள்ளிப் போட்டேன். இன்னும் லேசா உசுரு இருக்கு போல. போயிருச்சுனா குப்பைத் தொட்டியில போடணும்” என்றார்.
தனியொருவனுக்கு இன்னும் சுவாசம் இருப்பது தெரிந்தது. ஆனால், நல்ல அடி வாங்கியிருந்தான். உடல் பாகங்கள் வெளியில். இருந்தாலும் மகனை அழைத்தேன்.

மகன் வருவதற்குள், கண்ணழகியைச் சற்று அருகில் கொண்டு சென்றேன். ஒன்றுமில்லை ஒரு நப்பாசைதான். நம் தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன் அடிபட்டுக் கிடக்க, கதாநாயகி அருகில் வரும் போது கதாநாயகனின் அனைத்துச் செல்களும் துடித்திட உயிர்த்தெழுந்துவிடுவானே! அது போல் கண்ணழகியைக் கண்டால் அவன் எழுந்துவிடமாட்டானா என்ற எண்ணத்தில்.

மகனும் வந்தான். பார்த்தான். திரைப்பட மருத்துவர்கள் போல மகன் கண்ணாடி அணிவதில்லையாதலால், தன் ஸ்டெதஸ்கோப்பைக் கழுத்திலிருந்து எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, “நோ யூஸ்” என்று சோகத்துடன் சொல்லிவிட்டு, நம்மூர் வண்டிக்காரர்களைத் திட்டி ஆதங்கத்தை வெளியிட, நானும் வேறு வழியின்றி நடையைத் தொடர்ந்தேன்.

மனதில் தனியொருவனின் சேட்டைகள் எல்லாம் நிழலாடி மனதை என்னவோ செய்தது. அவனை நினைத்துக் கொண்டே திரும்பி வருகையில், கண்ணழகி மீண்டும் பரபரத்தாள்.

திரும்பிப் பார்த்தால் பிறந்து ஓராண்டு நிறையும் தருவாயில் இருக்கும் ஒருவன் அடித்தொண்டையில் சப்தம் எழுப்பிக் கொண்டு ஓடி வந்தான். வயதிற்கு வந்தவனாயிற்றே! பெரியவர்கள் எல்லோரும் அமைதியாய் அவனைத் தொடர, கூடவே இளம் குரல்கள். பார்த்தால் மூன்று மாதமே நிறைந்த 6 நண்டு சிண்டுகள் குரல் கொடுத்துக் கொண்டே புதியவனின் அல்லக்கைகளாக நாலாபுறமும் இருந்து பாய்ந்து ஓடி வந்தன. கண்கொள்ளா காட்சி. பெரியவர்கள், இளம் ரத்தம் என்று இவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் போலும்!

கண்ணழகியும் பதிலுக்கு அடித் தொண்டையில் குரல் கொடுத்தாள். புதியவன் அருகிலேயே குரல் கொடுத்துக் கொண்டு வந்துவிட்டான். எங்கள் பேட்டையின் அடுத்த தனியொருவன், இளவரசன் தயாராகிவிட்டான்.

“அடுத்து உங்க ஆளு ரெடியாகிட்டான் போல. சரி அப்ப நாளைலருந்து ரஸ்க்/பிஸ்கட் ரெடியா வைச்சுடறேன்” என்றார் தேநீர் கடைக்காரர்.

-----கீதா


54 கருத்துகள்:

  1. தனியொருவனுக்கு நேர்ந்த கதி அறிந்து மனம் நெகிழ்ந்து விட்டது..

    இனியேனும் நல்ல பிறவி அமையட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  2. ஆஹா..! அருமை அருமை!
    மிகவும் ரசித்துப்படித்தேன். கடைசியில் தனியொருவன் இறப்பது என்னவோ சினிமா பார்த்ததுபோல் உணர்த்தியது. அழகான நடையழகு!
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் பாராட்டிற்கும் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. padikka aarampitha sirithu nerathil nan kandu pidichittenee kandu pidichittena:)
    athilum kannazaki vanthathum mmm.

    super madam!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ மகேஷ் மிக்க நன்றிப்பா...ம்ம்ம் கண்டுபிடிச்சுடலாம் இந்த முறை சஸ்பென்ஸ் எதுவும் வைக்கவில்லையே!! ஹிஹி

      நீக்கு
  4. முதல் பாராவிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. பேட்டை பிஸ்தாவின் சோக முடிவு வருத்தமளிக்கிறது.

    எங்கள் ஏரியா ஆண்,பெண் சண்டியர்களை வண்டி வைத்து அள்ளிச் சென்று அறுவை சிகிச்சை முடித்து மூன்று நாட்களில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள்.

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் புரிந்து கொண்டுவிடுவீர்கள் என்று தெரியும் ஸ்ரீராம். மேலும் சஸ்பென்ஸ் எதுவும் வைக்கவில்லை. இப்படி எழுதினேன் அவ்வளவே

      பாவம் அவர்கள்....பல இடங்களில் அப்படித்தான் செய்கின்றார்கள். என்னவோ நன்மை செய்கின்றோம் என்று நினைத்து. அறுவை சிகிச்சை முடித்து குறைந்தது 10 நாட்களேனும் வேண்டும் புண் ஆறுவதற்கு. இல்லை என்றால் தையல் பிரிக்க எல்லாம் வேண்டாம் அவர்களே சுய மருத்துவம் பார்த்துக் கொண்டுவிடுவார்கள். தையலைப் பிரித்தல்தான் அவர்களின் முதல் வேலை அப்புறம் திறந்த பாகத்துடன் அலைந்து கொண்டிருப்பார்கள். அதை நக்கிக் கொள்வார்கள் என்றாலும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்பட்டால் இறந்துவிட வாய்ப்புண்டு. பாவம் அவர்கள்..

      நீக்கு
  5. சண்டியர்கள் என்கிற வார்த்தையை வாபஸ் வாங்கி, நாலு கால் நண்பர்கள் என்று அந்த வார்த்தையை மாற்றிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் பரவாயில்லை ஸ்ரீராம்..சண்டியர்கள் என்பதெல்லாம் செல்லப்பெயராக வைத்துக் கொள்ளலாமே...

      நீக்கு
  6. தமிழ் மணம் வாக்குப் பட்டையையே காணோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவால்ல விடுங்க பாஸ்! அது ரொம்பத்தான் அலட்டிக் கொள்கின்றது. போனால் போகுது...

      நீக்கு
  7. வலிக்கும் சோகத்தையும் மெல்லிய நகைச்சுவையோடு கலந்து எழுதினாலும் உங்க மனசு எனக்கு நல்லா புரியுது கீதா :(
    அவன் ஆத்மா இளைப்பாறட்டும் ..ஊரில் இருந்தவரை நானும் இப்போ தங்கையும் இதே வேலைதான் பிஸ்கட் பொறை இப்படிப்பட்ட தனிதிருப்போருக்கு தந்துவிடுவோம்..இதைபார்த்ததும் எனக்கு மீனாட்சி நினைவு வருது எழுதுவேன் விரைவில் ,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்! ஆமாம் அவன் மிகவும் சுட்டி ஒருவிதமான சீன் போடும் பையன்! சேட்டைக்காரன். பாவம்...இயற்கை மரணம் என்றால் கூட பரவாயில்லை.. வேகமான வண்டியால் அடித்துப் போடப்பட்டு...

      மீனாட்சி பற்றி எழுதுங்கள் ஏஞ்சல். காத்திருக்கின்றோம் மீனாட்சியின் கதையறிய..மிக்க நன்றி ஏன்சல் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஓ! மிக்க நன்றி ஸ்ரீராம்..அடாது த ம படுத்தினாலும் விடாது வந்து வாக்களித்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  9. நான் நடைப் பயிலும் பூங்கா சுமார் 600மீட்டர் நீளமுண்டு. இதிலேயே இரண்டு மூன்று பேட்டைகள் உண்டு. அதில் ஒரு பேட்டைத்தலைவனுக்கு நடை பய்ற்சியில் வரும் ஒருவரிடம் சிநேகம் அதிகம் அவர் நடை பயில வந்து விட்டால் கூடவே இவனும் அப்போது வேறு பேட்டை தாதாக்கள் ஒருவராவது மூச் விட வேண்டுமே ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கிஎம்பி சார் ஆஹா அங்கும் தனியொருவன்! வாசிக்கும் போதே மனம் அந்தக் காட்சியை விவரித்தது. ரசித்தோம் சார் பின்னூட்டத்தை

      நீக்கு
  10. தொடக்கமே இது பைரவர்தான் என்பது அழகாக விளக்கியது அவனின் முடிவு வேதனையானததே...
    தமிழ் மணம் பலமுறை முயன்றும் தோல்வி பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
  11. மிகவும் இரசித்துப் படித்தேன்
    கால் பகுதி படிக்கையில் விஷயம் புரியத்
    துவங்க கூடுதல் சுவாரஸ்யம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். அவர்கள் உலகமே சுவாரஸ்யம்தான்

      நீக்கு
  12. பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. தங்கள் பதிவினை - எனது தளத்தினில் ஒரு பிரார்த்தனை எனும் தலைப்பில் சுட்டிக் காட்டியுள்ளேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தாங்கள் எங்கள் பதிவைச் சுட்டிக்காட்டியமைக்கு. வாசித்துவிட்டோம் ஐயா

      நீக்கு
  14. ரசித்தேன் சகோதரியாரே
    இப்படியும்எழுதலாம் என்பது புரிந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் ரசித்தமைக்கும் வருகைக்கும்

      நீக்கு
  15. வணக்கம்
    மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. தனி ஒருவனுக்கு நேர்ந்த கதி.... பாவம். ப்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அருணா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  17. தனி ஒருவன் ஆத்மா சாந்தியடையட்டும் அடுத்த தலைவனுக்கு இனி விழாக்கள் களைகட்டும்)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் நேசன். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  18. எங்கள் ஏரியா பைரவர்கள் மிக நல்லவர்கள் ,என்னைப் பார்த்தால் எப்பவுமே குரைப்பதில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான்ஜி...ஒருவேளை அவர்களையும் நீங்கள் கலாய்த்துவிடுவீர்களோ என்ற பயமோ!! ஹிஹிஹி

      நீக்கு
  19. பாவம் தனியொருவன் ..
    நீங்கள் சொல்லியிருக்கும் விதம் நன்றாக உள்ளது கீதா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ் தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  20. அவன் தனியிருவன் இல்லை...தொடர்ச்சி தான்,,,,
    உங்கள் வரிகளில் நல்ல துள்ளல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் வருகைக்கும். ஆம் இது தொடர்ச்சிதான்...

      நீக்கு
  21. பழையன கழிதலும் புதியன புகுதலும் மாதிரி இருக்கே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  22. தனியொருவன் எனும் தலைப்பில் உங்கள் இளகிடும் மனம் அறிந்தேன்!
    நன்று கீதாமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிஷா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  23. தெருவில் வாழும் அப்பாவி ஜீவன்களுக்குதான் எத்தனை விதமான போராட்டங்கள். தெருவில் பிறந்து தெருவில் வாழ்ந்து தெருவிலேயே மடிந்தும் போய்விடும் அவலம். தனியொருவனின் கதை மனத்தை மிகவும் நெகிழ்த்தியது. அது உங்களுடைய எழுத்தின் வன்மைக்கும் பங்கிருக்கிறது. வாழ்க்கை ஒருவரோடு நின்றுவிடுவதில்லை. அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பராட்டிற்கும்.

      நீக்கு
  24. தனி ஒருவனை ரசித்துப் படிக்க ஆரம்பித்தேன்... ஆரம்பத்திலேயே அவர் யாரெனத் தெரிந்தாலும்... தனி ஒருவன், கண்ணழகி என கலக்கலாய் எழுத்தில் கொண்டு வந்திருந்தீர்கள்... தனி ஒருவனை இனி காப்பாற்ற முடியாது என்று விலகிப் போய் திரும்பி வர சின்னத்தாதா ரெடியானது ரசிக்க வைத்தது... அருமையான எழுத்து கீதா மேடம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார். தாங்கள் ரசித்துப் படித்தமைக்கு...கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  25. அருமையான நடை சகோ
    தெருவில் கிடக்கும் நாய்க்கும் மருத்துவம் பார்க்க வந்த மருமானுக்கு ஒரு பூங்கொத்து
    முடிவில் சோகம் இருந்தாலும் அடுத்த தலைவன் வந்தது புகட்டிய அனுபவம்
    செமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கஸ்தூரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் பாராட்டிற்கும். உங்கள் மருமானாச்சே!!!! தெருவில் கிடக்கும் நாலுகாலிற்கும் மருத்துவம் பார்க்காமல் இருப்பானா..

      நீக்கு
  26. சகோ துளசி & கீதா,

    ஜாலியா ஆரம்பிச்ச‌ பதிவு பாதியில இப்படி சோகத்துல முடிஞ்சு போச்சே :( பரவால்ல அடுத்த இளவல்தான் ரெடியாயிட்டாரே என தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

    ஆனாலும், கீதா, நம்ம ஊர் சினிமாவைப் பார்த்த மாதிரியே இருந்துச்சு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சித்ரா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.ம்ம்ம் அந்த இளவல் செம துரு துரு....ஹஹ நம்ம ஊர் சினிமா...

      நீக்கு
  27. சூப்பர் . வாலண்டைன் டே அன்னிக்கு இப்படி ஒரு பதிவா !!
    காதல் என்பது அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உண்டு இல்லையா!
    காதல் இடையே காத்தலும் மோதலும் மோதலின் போதோ சாதலும்
    இவ்வுலக வழி தானே !!

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுப்புத்தாத்தா...தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு