சிங்காரவேலன்
“டேய் சிங்காரவேலா, உனக்கு இப்ப 35 வயசு ஆகுது. இனியாவது ஒரு கல்யாணம் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆகப் பாரேன்!. இப்ப என்னை எடுத்துக்க 36 வயசாகுது. எனக்கு 6 ஆவதும், 4 ஆவதும் படிக்கிற இரண்டு பையன்கள். உனக்கும் இதே வயசுல குழந்தைகள் ஆகும்போது இப்போதைய நிலையில் 50 வயசாயிடும். இனியும் தள்ளிப் போடாம குடும்பம், குடித்தனம்னு ஆகப் பாரேன்!”
‘ பிரபாகரன் இதை சொல்லிக் கொண்டிருக்கும் போது ரோப்வேயில் நீங்கிக் கொண்டிருக்கும் நான் மற்றவர்களைப் போல் கீழே உள்ள அழகான மலம்புழா கார்டனையோ, ஸைடில் இருக்கும் அணைக்கட்டையோ கவனிக்கவில்லை. திரும்பப் போய்க் கொண்டிருக்கும் காப்ஸ்யூல்களில் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஏதாவது கலர்கள் தென்படுகிறதா என்றுத் தேடினேன்.
பிரபாகரன் என்னுடன் 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவன். 12 ஆம் வகுப்பு முடித்ததும், அவனது அப்பா நடத்தி வந்த புத்தகக் கடையில் உட்கார்ந்தவன். நான் முதல் வருடம் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது கல்யாணமும் செய்து கொண்டவன். பாவம், அவன் வாழ்க்கையே புதிய புத்தக மணமுள்ள இடுங்கிய கடையும் வீடும்தான். எப்போதாவது இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நான் வேலை செய்யும் இடங்களுக்கு வருவான். நான் மதுக்கரை கிளைக்கு மாற்றலாகி வந்து 8 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 8 மாதங்களுக்கு இடையே இந்த மலம்புழா கார்டனுக்கு நான் வருவது இது நான்காவது முறை. அதில் இரண்டு முறை வந்த போது எனக்கு இடையிடையே சூடு பகிர்ந்து தர சுதா இருந்தாள்.
இரண்டு முறையும் கிராண்ட் ஹோட்டலில் தங்கினோம். 11 மணிக்கு அறை எடுத்து 3 மணிக்கு காலி செய்வதுதான் வழக்கம். இனி அடுத்த முறை ஹோட்டல் மாற்ற வேண்டும். பாலக்காடில் தங்க வேண்டும். இந்த சுதா நான் கோவை மேட்டுப்பாளையம் ரோட் கிளையில் இருந்த போது என் தூண்டிலில் விழுந்த அழகான, ஐந்து வயதான குழந்தையின் தாயான ஒரு மீன். எல்.ஐ.சி மணி பேக், பாலிஸி, செக்கை மாற்றிப் பணமாக்க புதிதாய் அக்கவுன்ட் தொடங்க வந்த சுதாவுடன் வந்த அந்த கருத்த இடிஅமீன், அவள் கணவன் என்று தெரிந்ததும், கிடைத்த கொஞ்ச நேரத்தில், கணவன் கவனிக்காதபோது கண்களை சுதாவின் மேல் மேயவிட்டேன். என் கண்கள் கக்கிய காம ஏக்கத்தை புரிந்தும் புரியாதது போல ஒரு கன்ஃயூஸ்ட் லுக் அவளிடமிருந்து வந்தது. அதை அப்படியே கொஞ்சநேரம் தொடர்ந்து ஒரு சிறு புன்னகையாக மாற்றினேன். இடியமீனையும், அவர்கள் வீட்டு ஃபோன் நம்பரை எழுதச் செய்தேன். பிறகு, மூன்று மாதம் விடா முயற்சி. வெற்றி எனக்கே.
கோணியம்மன் கோவிலில் ஞாயிறு மாலைகளில் சந்திப்பு. ஃபோன் தொடர்பு. இப்படிப் போய்க் கொண்டிருந்த வேளையில் திடீரென எனக்கு மதுக்கரைக்கு மாற்றம். அதுவும் நன்மைக்குத்தான். கணவன் பெங்களூர் போகும்போது நான் லீவு போட்டுவிட்டு அவளுடன் மலம்புழா. இன்பக் கடலில் மிதந்தேன். சுரிதார் போட்டு, துப்பட்டாவை தலையில் முக்காடாகப் போட்டு ஒரு கூலிங்க்ளாஸை கண்களில் செருகி சுதாவை அழைத்துச் சென்று இதே மலம்புழாவில், இதன் முன் இரு முறை சொந்தமாக்கினேன்.
“டேய்! சிங்காரவேலா! என்னடா ஒண்ணும் சத்தத்தையே காணோம்?”
இது பிரபாகரனின் வார்த்தைகள். அவன் வார்த்தைகள் என் காதில் விழுந்தால் தானே!? பத்தடிக்கு அப்புறம் திரும்பப் போய்க் கொண்டிருக்கும் ‘காப்ஸ்யூல்’ களில் ஒன்றில் ஜலஜா!!. என்னை அவளும் கவனித்து விட்டாள். நான் அதிசயத்துடன் சிரித்தபடி கை காட்டினேன். அவளும் கை காட்டினாள். நான், அவளைக் காத்திருக்கும்படி சைகை காட்டினேன்.
பிரபாகரன் “அது யார்?” என்று கேட்டதும்,
நான், “பம்பாய்க்கு நான் கொண்டு போன ஒரு மலையாளத்து மாங்கனி அது. உனக்கு ஞாபகம் இருக்கா” என்றேன்.
அவனிடம் பெரும்பாலும் என் வெற்றிக் கதைகள் எல்லாம் சொல்வதுண்டு. வெற்றி நடை போடும் சுதாவின் கதையும் அவனுக்குத் தெரியும்.
என் வாழ்வில் வந்த 13 பெண்களில் சுதாவைத் தவிர மற்ற 12 பெண்களின் தொடர்பைத் துண்டித்த போதெல்லாம் இல்லாத ஒரு வேதனை, எனக்கு ஜலஜாவை பம்பாய் வி.டி. ஸ்டேஷனில் விட்டுப் பிரிந்த போது உண்டானது. எனக்கு வேறு வழியில்லை. “Miles to go before I sleep”. (மைல்ஸ் டு கோ பிஃப்போர் ஐ ஸ்லீப்). என்றாலும் கொச்சின் வரையுள்ள டிக்கெட்டுடன் ரூ1000 மும், நல்ல ஒரு புடவையும், ஒரு லேடீஸ் பேகும் வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் பிரிந்தேன். போகும் போது நாங்கள் பிரிகிறோம் என்று சொல்லவில்லை. என்னை வண்டி கிளம்பும் வரை எதிர்பார்த்திருப்பாள். பிறகு நான் சொன்னபடி வண்டி நகரத் தொடங்கியதும் என் கடிதத்தைப் படித்திருப்பாள். வருத்தத்துடன் கொச்சி வரை பிரயாணம் செய்திருப்பாள். வீட்டில் பிரச்சினை உண்டாகியிருக்கலாம். என்றாலும், அதையெல்லாவற்றையும் எப்படியும் அவள் சமாளித்திருக்க வேண்டும். இப்படி அவளைப் பற்றிய பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்து நான் திரும்பிப் பார்த்த போத,. “இப்போது யார் அது அவளுடன்? 25 வயது இளைஞன்? அது அவளது உறவினனாய் இருக்கலாம்.”
“அதற்குப் பிறகு எப்போதாவது அந்தப் பெண்ணை நேரிலோ, கடிதம் மூலமோ தொடர்பு கொண்டிருக்கிறாயா? என்று பிரபாகரன் கேட்டதற்கும் “இல்லை, இப்பதான் 7 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன்” என்றேன்.
7 வருடங்களுக்கு முன்பு நான் கொச்சியில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் அஸிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்த போது, அங்கு, வேலை பார்த்த டைப்பிஸ்ட் லிசி பிரசவத்திற்காக 3 மாத லீவெடுத்த போது, லீவ் வேகன்ஸியில் வந்தவள்தான் இந்த ஜலஜா. மேனேஜர் R.K.நாயர் ஜலஜாவை எப்போதும் எதையாவது சொல்லிக் குற்றப்படுத்திக் கொண்டிருந்தது என் மனதைப் பல நேரங்களில் என்னவோ செய்தது. எனக்குத் தெரிந்த ‘கொறச்சு (கொஞ்சம்)மலயாளத்தில்’ ஜலஜாவுடன் நேரம் கிடைத்த போதெல்லாம் ‘சம்சாரித்து’ (பேசி) அவள் மனதில் நுழைந்தேன். குடிகாரக் கணவனை உதறத் தயாராக இருந்த அவள், கல்யாணத்திற்கு முன்பு, நான் அவளை அத்து மீறி தொடக்கூட அனுமதித்ததில்லை. ஏக்க பெருமூச்சுகள். தூக்கமில்லாத இரவுகள். கனவுகள். ஆப்பிள் போன்ற ஜலஜாவை அனுபவிக்காமல் விட்டால் அது பேரிழப்பு என்று மனது நச்சரித்தது. வங்கியில் என் சேமிப்பில் இருந்த ரூ 12000 த்தை எடுத்துக் கொண்டு, அவளிடம் பம்பாய் போய் புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றேன்.
அவளது மூன்று வயதுப் பெண் குழந்தையைப் பேசிப், பேசி, ஒரு வழியாய் அவளது தாயிடம் ஏற்பித்து ஒரு வெள்ளிக்கிழமை ‘ஜெயந்தி ஜனதா எக்ஸ்ப்ரஸ்‘ ரயிலில் ஏறினோம். அந்த ரயில் பயணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவம். பி.எஸ்.ஆர்.பி யில் (Banking Service Recruitment Board) ஓரிரு மாதங்களுக்குள் போஸ்ட்டிங்க் எதிர்பார்த்திருந்த நான், ஒரு மாதம் மட்டும் தான் அவளுடன் வாழ முடிவு செய்திருந்தேன். அதன் பின் எப்படியாவது அவளைக் கொச்சியில் உள்ள அவளது வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். எனக்கு அவளுடன் வாழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவைதான். பாவம், அவள் என்னைக் கணவனாகவே கண்டாள். நானோ அவளை உதறித் தள்ள சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். இனிய இல்லற வாழ்க்கை இரண்டு மாதம் நீடித்தது. என் கழுத்தில் கிடந்த செயின், மோதிரம் எல்லாம் என் காமத்தீக்குத் தீனி போட்டது. எனக்கு பல்லடம் இந்தியன் வங்கி கிளையில் சேருவதற்கு ஆர்டர் வந்து, சேர்வதற்கு 5 நாட்கள் மட்டுமே இருந்த போது, அறையைக் காலி செய்து கொச்சி போகலாம் என்று கூறி ஜலஜாவுடன் ரெயில்வே ஸ்டேஷன் சென்றடைந்தேன். ஒரு டிக்கட் மட்டும் எடுத்து அவளைப் பெண்கள் கம்பார்ட்மென்டில் அமரச் செய்து,
“நான் டிக்கெட் பரிசோதகரைக் கண்டு ஏதேனும் அட்ஜஸ்ட் செய்து வேறு கம்பார்ட்மென்டில் நம் இருவருக்கும் பெர்த் கிடைக்க முயல்கிறேன். அப்படிக் கிடைக்கவில்லைன்னா நான் முன்புள்ள கம்பார்ட்மென்டில் இருக்கிறேன், இடையிடையே வருகிறேன்”
என்று சொல்லி நழுவினேன். வண்டியில் போரடிக்கும் போது வாசிக்க சில மலையாள வார இதழ்கள் வாங்கிக் கொடுத்தேன். அதில் ஒன்றில் 26-ம் பக்கத்தில் ஒரு கடிதம் வைத்துள்ளேன் என்றும், அதை வண்டி நகர்ந்த பின்னர்தான் வாசிக்க வேண்டும் என்றும் சொன்னேன். நான் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம். ‘குட்பை’ கடிதம். அவளது லக்கேஜை அவளிடம் ஏற்பித்த பின் நகர்ந்தேன். எல்லா வருடமும் புதுவருட வாழ்த்து அட்டை என் முகவரியை எழுதாமல் அவளுக்கு அனுப்பி வந்தேன். பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்து...
ரோப்வேயிலிருந்து இறங்கியதும் எனக்காகக் காத்திருக்கும் ஜலஜாவின் அருகே சென்றேன். எனக்குப் பேச முடியவில்லை. என் கண்கள் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சியது. அந்த இளைஞனிடம், என்னை முன்பு அவள் வேலை செய்த ‘ஓபீஸிலே ஸார்’ என்றாள். அவன் அவளது சித்தப்பா பையனாம். பாலக்காடு இஞ்சினீரிங்க் கல்லூரி இன்டெர்வ்யூவிற்கு வந்தார்களாம். சூர்யா ஹோட்டலில் தங்கியிருக்கிறார்களாம். ரூம் நம்பர் 405 ஆம். நான் கண்டிப்பாக அங்கு வர வேண்டும் என்றாள். நான் மகள் நலமா என்றேன். ஏதோ ஒரு போர்டிங்க் ஸ்கூல் பெயர் சொல்லி அங்கு படிப்பதாகச் சொன்னாள். ‘‘சேட்டன் நலமா”? என்றதும் போன வருடம் இறந்ததாகச் சொன்னாள். மாலை 6 மணிக்கு முன்பு ஹோட்டல் வரச் சொன்னாள். க்ரான்ட் ஹோட்டலில் நானும் பிரபாகரனும் அன்று தங்க முடிவு செய்தோம். மதியம் சாப்பிட்ட பின், பிரபாகரனுடன் மீண்டும் என் பழைய பம்பாய் நாட்களைப் பகிர்ந்தேன். 5 மணிக்கு நான் மட்டும் சென்றேன். ரிஸப்ஷனில் ரூம் நம்பர் 405 என்றதும் காத்திருக்கச் சொல்லி இன்டெர்காமில் கூப்பிட்டு என் பெயர் சொன்னதும் எனக்கு மேலே செல்ல அனுமதி கிடைத்தது. லிஃப்டில் 3 ஆவது மாடி சென்றேன்.
ஜலஜாவைத் தழுவத் தத்தளிக்கும் கரங்களும், சுவைக்கத் துடிக்கும் உதடுகளுமாய் கதவைத் தட்டினேன். நைட்டி மட்டும் அணிந்திருந்த ஜலஜா கதவைத் திறந்தாள்.
நான் உள்ளே சென்றதும் தாளிட்ட அவள் என்னைத் தழுவினாள் ஆவேசத்துடன். அவளது கைகளும், உதடுகளும் என் உடலில் எங்கெல்லாமோ கோலமிட்டன. இடையில் எப்படி, எப்போது என்று தெரியவில்லை என் ஆடைகளை அவள் அவிழ்த்து எறிந்தாள். பல நாட்கள் பட்டினி கிடந்தவள் ஆவேசத்துடன் உணவை அணுகுவது போல் அவள் நடந்து கொண்டாள். ஏழாண்டுகளுக்குப் பிறகு அவளை, எனக்குக் கிடைத்ததாக நினைத்தேன், ஆனால் நான் தான் அவளுக்குக் கிடைத்தேன் என்பதுதான் சரி. பத்து நிமிடத்திற்குப் பிறகு சூறாவளி ஓய்ந்தது. பாத்ரூம் சென்று வந்த அவள் சந்தோஷவதியாக இருந்தாள். நான் பாத்ரூமில், உடலில் பல பாகங்களில் எரிச்சலை உணர்ந்தேன். ‘காண்டம்’ உபயோகிக்காததால் அங்கும் எரிச்சல்.
பின் பலதும் பேசினோம். நான் பம்பாயில் அவளை விட்டுப் பிரிந்த போது பேகில் இருந்த பணம், ஸாரி, குழந்தைக்குக் கொடுத்த ஃப்ராக், என் கடிதம் எல்லாவற்றையும் பற்றிக் கேட்டேன். என்னைப் பற்றி நான் எல்லாம் சொல்லவில்லை. வங்கி ஃபோன் நம்பர் கொடுத்தேன். ஏனோ அவள் முகம் வாடி இருந்தது. இடையிடையே கண் கலங்கியது. பின்னர் விடை பெற்றேன். மீண்டும் சந்திக்க வேண்டும் என்றேன். பிரபாகரனிடம் நடந்ததைக் கூறியதும் அவனுக்கு அதிசயம் வழக்கம் போல் ‘நீ மச்சக்காரண்டா’ என்றான்.
மறுநாள் காலை வழக்கம் போல் வங்கிக்குச் சென்றேன். வினோத் இல்லாததால் காஷ் கவுண்டரில் இருந்த நான், ஃபோன் என்றதும், மேனேஜர் கேபினுக்குச் சென்றேன். ஃபோனில் பேசியது ஜலஜா.
“ஸாரி சிங்கேட்டா. ஐயாம் ஸாரி.. பெரிய தவறு நடந்து போச்சு. திருத்த முடியாத தவறு. அன்று, வி டி. ஸ்டேஷனில் உங்களைப் பிரிந்த நான் கடந்த 5 வருடங்களாக பம்பாயில் தான் இருந்தேன். அன்று நாம் பிரிந்த நாளில் வண்டி புறப்படும் சமயம் உங்களைக் காணாமல் கதவு பக்கம் வந்து நின்று விட்டுத் திரும்ப ஸீட்டுக்குப் போனதும் என் லக்கேஜைக் காணவில்லை. பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் எல்லா இடத்திலும் ஓடி உங்களைத் தேடிய நான் அந்த ரயிலில் ஏறவில்லை. ஏதோ ஒரு அம்மா என்னை சமாதானப்படுத்தித் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவளது வீட்டை அடைந்ததுமே நான் அதிர்ந்து போனேன். அவள் ஒரு விலை மாது. பலமுறை அங்கிருந்துத் தப்ப முயன்றேன். முடியவில்லை. மூன்றாம் நாள் என்னை ரூ.30,000 க்கு விற்று விட்டாள் பாவி. பின் பல கைகள் மாறி மாறி நரக வாழ்க்கைக்குத் தள்ளப் பட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன் போலீஸில் பிடிபட்டதால் எப்படியோ அவர்கள் உதவியால் கொச்சியை அடைந்தேன். எனக்கு எனது மகளது எதிர்காலத்தைக் கருதி வேறு வழியின்றி சம்பாதிப்பதற்காக மீண்டும் பம்பாய் வாழ்க்கையை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும் மனதில் சிங்கேட்டன் என்ற சதிகாரனை தினமும் சபித்துக் கொண்டுதான் இருந்தேன். உங்களை நேரில் மலம்புழயில் கண்டதும் இறைவனுக்கு நன்றி சொன்னேன். உங்களைப் பழிவாங்கத்தான் ஹோட்டலுக்கு வரவழைத்தேன். காண்டம் உபயோகிக்கச் சொல்லாமல் உங்களுடன் உடலுறாவு கொண்டதும் பழிவாங்கத்தான். ஆனால் எல்லாம் முடிந்த பின் நீங்கள் சொன்னதைக் கேட்டதும் நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ என்ற வருத்தம். அதனால் தான் இப்போது உங்களுக்கு ஃபோன் செய்கிறேன். எனக்கு HIV பாஸிட்டிவ்.
ஏதேனும் நல்ல ஆஸ்பத்திரிக்குப் போய் எப்படியாவது உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.” பிறகு அவள் சொன்னது ஒன்றும் என் காதில் விழவில்லை.
வங்கி மேனேஜர் “ஐயோ! சிங்காரவேலா! என்று கத்திக் கொண்டே என்னைத் தாங்கிப் பிடிக்க ஓடி வந்ததை ஏதோ ஒரு கனவு காண்பது போல் உணர்ந்தேன்.”
.
******************************************************
11 வருடங்களுக்கு முன் மதுக்கரை இந்தியன் வங்கியின் மேனேஜர் கேபினில் மயங்கி விழுந்தவன் என் நண்பன் சிங்கார வேலன். இதை வாசிக்கும் உங்களுக்கு “அவனுக்கு நல்லா வேணும்” என்று எளிதாகச் சொல்ல முடியும். ஆனால் என்னால் அப்படிச் சிந்திக்கக் கூட முடியாது. அவன் தன் வாழ்வில் 'எஞ்ஜாய்' செய்கிறேன் பேர்வழி என்று 13 பெண்களுடன் தகாத தொடர்புகள் கொண்டதை நான் ‘செய்யத் தகாதது’ என்ற பட்டியலில் தான் உட்படுத்தி இருக்கிறேன். அது தவறுதான். அவற்றில் ஜலஜாவுக்கு இழைத்தது கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். அவன் ஜலஜாவைக், கொஞ்சம் பொறுப்புடன் அவள் தனது வீட்டை அடைய உதவியிருக்க வேண்டும். அல்லது அவள் வீட்டை அடைந்து விட்டாளா என்று உறுதிப் படுத்தியிருக்கவாவது வேண்டும். அவனே பலமுறை அதைப் பற்றி என்னிடம் சொல்லி வருந்தியிருக்கிறான். ஜலஜாவைத் தவிர மற்ற 12 பெண்களும் அவரவர் குடும்பத்தில் சந்தோஷமாக, எப்போதாவது தனிமையில் சிங்காரவேலனை நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஜலஜாவின் வாழ்வில் மட்டும் விதி விபரீதமாக விளையாடி விட்டது. அதற்குக் காரணமான சிங்கார வேலனையும் விதி விடவில்லை.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிங்காரவேலனின் வாழ்க்கை சீரழிந்து போனது. மூன்று வருடங்கள் மட்டுமே அவனால் வேலையில் தொடர முடிந்தது. பின் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அவனது சொந்த ஊரான சின்னவீரன்பட்டிக்குப் போய்விட்டான். இரண்டு வருடங்கள் மட்டுமே அவனது நோய் விவரங்கள் யாருக்கும் தெரியாமல் ரகஸியமாக்கி அவனால் வைக்க முடிந்தது
எப்படியோ நோய் விவரங்கள் அறிந்த அவனது குடும்பத்தினர் அவனை கோயம்பத்தூரில் உள்ள ஒரு எய்ட்ஸ் Rehabilitation Centre -ல் (மறுவாழ்வு மையம்) கொண்டுவிட முடிவு செய்தனர் . 2002 ஆம் ஆண்டே டெஸ்ட் ரிஸல்ட் வந்து, அதில் HIV பாஸிட்டிவ் என அறிந்த அன்று இரவே அவன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறான்.
(அவனது தற்கொலை முற்சியை அப்படியே நான் எடுத்த ‘பரோல்’ என்னும் குறும் பட்ததில் படம் பிடித்திருந்தேன். அதைப் பார்த்த அவன், கண்களில் கண்ணீர் மல்க நன்றி சொன்னது இப்போதும் என் செவியில் ஒலிக்கிறது.) அவனைக் காப்பாற்றி அவனுக்கு வேண்டிய மருத்துவ உதவிகள் அனைத்தையும், வீட்டிலுள்ள அம்மா, அப்பா கூட அறியாமல் செய்து வந்தது அவன் அண்ணன் குமரேசன் தான்.
சிங்காரவேலன் தவறுகள் மட்டுமே செய்து வாழ்ந்த ஒரு வஞ்சகனோ, கொடியவனோ அல்ல. எப்போதோ அவன் வாழ்வில் அவன் வாசித்தவை, கண்டவை, அனுபவித்தவை எல்லாம் அவனை ஈர்த்து, பெண்ணாசையை அவன் மனதின் ஆழத்தில் வேரூன்ற வைத்திருக்கலாம். அதனால் அவன் பெண்ணாசை பிடித்துத் தன் வாழ்வையே அழித்துக் கொண்ட பித்தனாகத் தோன்றலாம்.
ஆனால், எனக்கு அவன் “உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைந்த” நண்பன். கல்லூரி தேர்தலில் போட்டியிட்ட என்னைத் தன் தோளிலேற்றி கல்லூரியை வலம் வந்தவன். கல்லூரி விடுதியில் நடந்த தகராரில் என் மேல் விழ வேண்டிய அடிகளைத் தன் உடலில் ஏற்றவன். வேலையின்றி ட்யூஷன் சென்டரில் பணியாற்றி வந்த என்னை, இப்போது நான் ஆசிரியனாக, பாலக்காடு அருகே இருக்கும் மேனேஜ்மென்ட் ஸ்கூலில் வேலையில் அமர கட்டாயப்படுத்தி அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நன்கொடை பணத்தில் பாதிப் பணம் கடன் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து என்னை ஆசிரியனாக்கியவன். குமுதத்திற்கும், ஆனந்த விகடனுக்கும், ஒரு போதும் பிரசுரிக்கப்படாத கதைகளை, வருடக் கணக்கில் அனுப்பிச் சோர்ந்த எனக்கு என் பெயரில் ஒரு வலைத்தளம் தொடங்கி, அதில் என்னை எழுத வைத்து, பாமரன், குடந்தையூர் சரவணன், ராமகிருஷ்ணன், ஞானி, ஜெயமோகன் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவியவன்.
சிலபஸில் உள்ளதால் திரைப்படம் எடுப்பது பற்றியும், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நான் கற்பிக்கிறேன் என்று அறிந்தவுடன் குறும்படம் எடுப்பது பற்றியும் சொல்லி, என்னை ஊக்குவித்து SIET (Kerala State Institute of Educational Technology) நடத்தும் குழந்தைகள் பட விழாவில் போட்டியிட திரைப்படங்கள் உருவாக்க வைத்தவன். அதற்கான செலவுகளில் பாதியைத் தானேற்று என்னை மூன்று திரைப்படங்களை எழுதி இயக்கச் செய்தவன். ஏப்ரல் மாதம் நான்காம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள குடந்தையூர் சரவணனின் சம்மதத்தைப் பெற்றுத் தந்தவன். அத் திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ பாலக்காடு அருகேயுள்ள கொழிஞ்சான்பாறையில் தமிழ் மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளியில் வரும் ஜூன் மாதம் நடத்த வேண்டுமென்றும், அவ்விழாவிற்குப் பாமரனை பங்கெடுக்கச் செய்வேன் (பாமரனின் நெருங்கிய நண்பர் இவனது நண்பராம்) என்றும், கூடவே தானும் பங்கெடுப்பேன் என்றும் உறுதி கூறியவன். ஜலஜா போனவருடம் இறக்கும் வரை எல்லா மாதமும் அவளுக்குப் பணம் அனுப்பியவன். அவளது மகளின் திருமணத்தின் போது 10 பவுன் நகை கொடுத்தவன்.
கடந்த ஆறு வருடங்களாக்க் கோவையிலுள்ள எய்ட்ஸ் Rehabilitation Centre-ல் (மறுவாழ்வு மையம்) வாழ்ந்த என் ஆருயிர் நண்பன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இவ்வுலகத்தை விட்டேப் போய்விட்டான். பள்ளியில் கொடியேற்றம் முடிந்ததும் ஃபோன் வந்தது. விவரமறிந்து நான் கோயம்பத்தூர் ஓடினேன். சலனமற்ற அவன் உடலைக் கண்டதும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. கூட அழ அவன் அண்ணன் குமரேசன் மட்டுமே. எலும்பும் தோலுமான அவன் உடலை கோவை அரசு க்ரிமடொரியம் கொண்டு சென்று எறித்தோம். கடந்த செப்டெம்பர் 1-ஆம் தேதி அவன் விருப்பப்படி அவனை எரித்தச் சாம்பலை அவன் கிராமத்திலுள்ள அவனுடைய தென்னந் தோப்பில் தூவி அதன் மேல் மண்ணை வெட்டியிட்டோம். 25 வருடங்களுக்கு முன்பு, ஒரு கல்லூரி விடுமுறை நாளில் அந்தத் தோப்பில் இளநீர் வெட்டிக் குடித்துக் கொண்டிருந்த்த போது அவன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
“நாம 10th ல படிச்சமேடா ஒரு ஸ்பீச். நம்ம முன்னாள் பிரதமர் நேரு, அவர் உடலை எரிச்ச சாம்பலை, இமய மலையில் தூவ வேண்டும்னு சொன்னாரே, அது மாதிரி என்னோட ஆசை, என் உடலும் மரணத்திற்கு பின் எரிக்கப்பட்டு சாம்பலின் ஒரு பகுதி இந்தத் தென்னந்தோப்பில் தூவப்படணும்", என் செவிகளில் இப்போதும் அவன் வார்த்தைகள் தெளிவாக ஒலிக்கிறது.