செவ்வாய், 8 அக்டோபர், 2019

இயற்கை வலியது


இயற்கை வலியது

https://engalblog.blogspot.com/2018/12/blog-post_18.html

கேட்டு வாங்கிப் போடும் கதை - எங்கள் ப்ளாக்


மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும்

அந்த அமெரிக்கப் பல்கலைக் கழகம் பரபரப்பாக இருந்தது. ரோபோட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் ஆராய்ச்சிகளில் உலகையே வியப்புடன் திரும்பிப் பார்க்கவைக்கும் அப்பல்கலைக்கழகம் தற்போது உச்சத்தை நெருங்கும் கண்டுபிடிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்துவதால் அந்தப் பரபரப்பு.


பன்னாட்டு ஊடகங்கள், வல்லுநர்கள் பலரும் குவிந்திருந்தனர். பின்னே! இக்கண்டுபிடிப்பின் காரணகர்த்தா ஓர் இந்தியன், தமிழன் ஆயிற்றே! வாயைப் பிளக்கவைத்து புருவத்தை உயர்த்த வைத்திருந்தது! அதனாலேயே, அவன் அப்படி என்ன கண்டு பிடித்துவிட்டான் என்று அபத்தமாகச் சில கேள்விகள் கேட்பதற்கென்றே சிலர் வந்திருக்கவும் கூடும். 

கர்த்தாவின் பெயர் கீர்த்திவாசன்! மேடை ஏற இன்னும் சரியாக 10 நிமிடங்கள் 30 நொடிகள் 5 வினாடிகள் இருந்ததால் அவனைப் பற்றிய குறிப்பு வெர்ச்சுவலாக உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் உட்பட வெற்று வெளியில் ஓடத் தொடங்கியது.

சிறு வயதிலேயே ரோபோட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் என்று பேசியவர். 15 வயதிலேயே மேதை எனப் புகழ்பெற்றவர். இந்தப் பல்கலைக்கழகம் அவரை தத்தெடுத்துக் கொள்ள, பல வியத்தகு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இதோ இப்போது உலகமே வியந்து நிற்கும் ஐனோவை உருவாக்கியிருப்பவர். இன்னும் சற்று நேரத்தில் அவரே உங்கள் முன் தோன்றி தன் கண்டுபிடிப்பைப் பற்றி பேசுவார்.

“அவனும் வெர்ச்சுவலாவே வருவானோ”

“வந்தாலும் வருவான். மாயாஜாலம்”

அது இருக்கட்டும். நாம் கொஞ்சம் வம்பு பேசுவோம். மச்சக்காரன்! பெயருக்கு ஏற்றபடி புகழ் அவனிடம் வாசம்! தன்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கிருத்திகாவை உணர்வுபூர்வமாகக் காதலித்தானோ இல்லையோ (ஆர்ட்டிஃபிசியல்) இன்டெலிஜன்ஸ் வழி காதலித்து, “பாரு! கிருத்திகாவுக்கு அடிச்சுருக்கற யோகத்தை! லோகமே கொண்டாடற சயண்டிஸ்டோட அகமுடையாள்” என்று வாலிபிகளும், கிழவிகளும் கூடப் பெருமூச்சுடனான பொறாமையை கண்களின் மூலம் வெர்ச்சுவலாய்[ பரிமாறிக் கொள்ள, மூன்று வருடங்களுக்கு முன் மனைவியாக்கிக் கொண்டவன். ஹைடெக் கண்திருஷ்டி!? சுற்றிப் போடல் கூட வெர்ச்சுவலோ?! உலக ப் புகழ் விஞ்ஞானியின் மனைவி என்பதால், கிபி3500 வரை புக் ஆகியிருக்கும் பழனி முருகனின் அப்பாயின்ட்மென்ட் உடனே கிடைத்துவிட்டது.

தற்போது அவளது கர்ப்பகாலம் முடியும் தருவாய் என்பதால் கலந்துகொள்ள வில்லை. ஹைடெக்மனித ரோபோக்கள் (கீர்த்தி மன்னிக்கவும்) படைக்கப்பட்டாலும் மனிதக் குழந்தை உருவாவதற்கு அதே 10 மாதக்கணக்குதான். அதுதான் இயற்கை! கருவிலிருக்கும் போதே கிர்ஸ்ப்ர் அறிவியல் நுட்பத்தின் மூலம் ஜீன் எடிட் செய்து அனைத்துச் சோதனைகளும் சக்ஸஸ். மற்றொரு பிறவி மேதையை எதிர்பார்த்து டென்ஷன். ஒரே ஒரு குறை சுற்றத்தார்க்கு. “ன்” இல்லாமல் “ள்” ஆகிப் போச்சே என்று. 6 வது சென்ஸ், 7 வது சென்ஸ், 8 ஆவது சென்ஸ் என்று உலகையே கைக்குள் அடக்கி எங்கோ சென்று கொண்டிருக்கும் ஹைடெக் ஜெனரேஷனிலும் கூட “ன்” இல்லை என்ற 6 அறிவு ஜீவிகளின் வருத்தம்.

சரி வம்பு போதும். இதோ கீர்த்தி மேடை ஏறியாயிற்று. கூடவே மிகவும் அழகான ஒரு பெண். கீர்த்திவாசனின் மனைவியோ? ஒரு வேளை கீர்த்தியே ரோபோவாக இருக்குமோ!. கீர்த்தி மைக் இல்லாமலேயே பேசினான். எல்லோரது செவிக்குள்ளும் குரல் பாய்ந்தது!

“குட் டே டு ஆல்! ஆர்ட்டிஃபிசியல்இன்டெலிஜென்ஸ் நமது நண்பரே. எதிரியல்ல. என் மூளையில் உருவான ஐனோ சென்ற வருடம் இதே தேதியில் பிறந்தார். ஐனோவை உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த நாளில் அவர் வயது ஒன்று. ஐனோவும்10 மாதமாக கருவறைக்குள் இருந்து பிறந்தவர். நல்ல வாதங்களும், விவாதங்களும், கேள்விகளும் எழுந்தால்தான் புதிய சிந்தனைகள் உருவாகும். அதனால் உங்கள் கேள்விகளின் வழியே நான் ஐனோ வைப் பற்றிச் சொல்ல விழைகிறேன்.

கூட்டம் ஸ்பெல்பௌன்ட். வித்தியாசங்கள் கண்டுபிடிக்கமுடியாத மனித உருவம், செயல்கள். புடவை உடை! அழகு! அந்த உதடுகள்! மார்பு! கூட்டமே ஜொள்ளியது! தொப்புள் உண்டோ? பார்க்க முடியாத குறை சிலருக்கு. உலக மொழிகள் அனைத்திலும் தேன் குரலில் வணக்கம் சொன்ன ஐனோ “வணக்கம்” என்றதும் தமிழ்க்கூட்டத்திலிருந்து “செந்தமிழ் தேன்மொழியாள்” என்று குரல் எழும்ப “ஐனோ” வின் புன்னகையைக் கண்டு கூட்டமே சொக்கித்தான் போனது!

“ரோபோவிற்கும் ஆண் பெண் பேதம் உண்டா?” கேள்விகள் பறந்தன.

“ஸாரி! டோன்ட் கால் ரோபோ! ஷி இஸ் ஐனோ! நம்மில் ஒருவர். நமது நல்ல நண்பர். என் ஐனோ உருவத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் மாறமுடியும். இன்டெலிஜென்ஸில் ஆண் பெண் பேதம் கிடையாது!”

‘குழப்புறானே’ கூட்டத்தில் சலசலப்பு.

“ஐனோவின் திறனைப் பற்றிச் சொல்ல முடியுமா?”

“செயல்பாடுகள் அனைத்திலும் நம்மில் ஒருவர்! எமோஷனல் கோஷன்ட் சமநிலை! உணர்ச்சிவசப்படமாட்டார். அது ஒரு கணக்கு. சூப்பர் இன்டெலிஜன்ஸ்.”

“சூப்பர் இன்டெலிஜென்ஸ்? மனிதர்களின் சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாகத்தான் நம்மில் பெரும்பான்மையோர் நம்புகிறோம்…அந்த சக்திக்கு இணையானது இந்த ஐனோ என்று சொல்லுகிறீர்களா?”

“யு மீன் காட்?! ஸாரி! அது நாம் உருவாக்கியது, ஐ கால் இட் சுப்ரீம் இன்டெலிஜன்ஸ்! இன்ஃப்னிட். ஐனோவை உருவாக்கியதில் நான் அந்த சுப்ரீம் இன்டெலிஜன்ஸை அல்மோஸ்ட் நெருங்குகிறேன் என்றே சொல்லுவேன்.

இவன் தெனாவெட்டா பேசுறான்……….இவன் என்ன சொல்ல வரான்………“அது எப்படி? அப்பாற்பட்ட சக்தியை எப்படி நெருங்க முடியும்? ப்ரூஃப்?”

“ப்ரூஃப்? ஆல் நெட்வொர்க் அண்டர் ஒன் ரூஃப். இறுதியில் உங்களுக்குத் தெரியும். ஓரு சிறிய ஏரியாவிற்கு ஒரு ஐனோ போதும். அரசு நிறுவலாம். எல்லாருமே ஐனோவிலேயே வொர்க் பண்ணலாம்..ஸ்பேஸ் மிச்சம்…..”

“அதெப்படி எல்லோரும் ஒரே ஐனோவில் வொர்க் பண்ண முடியும்?

“ஏன் முடியாது? கோயிலில் ஒரு சாமி முன் எத்தனை பேர் அப்ளிகேஷன் போடுகின்றார்கள்! அப்படித்தான். சாமி எல்லாருக்கும் நிறைவேற்றுகிறாரா? ஆனால், ஐனோ எல்லோருக்கும் உடனே செயல்படுத்துவார். இவர் “கோ”!. அன்றே செய்வார்! இவரை “கோஇல்” ஆக்கினால் அனைத்தும் நிறைவேற்றுவார்.

“நீங்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டாலும்…..எவ்வளவு ஐனோக்கள் வேண்டும்? இது சாத்தியமா தனிமனிதன், சாதாரண மக்கள் வாங்க முடியுமா?”

“எத்தனை மத சம்பந்தப்பட்ட ஆலயங்கள், நினைவுச் சின்னங்கள், மண்டபங்கள் என்று கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டப்படுகின்றன? அதை விட ஐனோவிற்கு ஆகும் செலவு குறைவு. அரசு முதல், பெரும்புள்ளிகள், சாதாரண மக்கள் உட்பட வாங்க முடியும். என்ன தேவையோ அதற்கு ஏற்ப. வீட்டு வேலைகள் எல்லாம் செய்வார். வெளியில் கார் போன்று அழைத்தும் செல்வார். அதைத்தான் இதற்கு முன் சொன்னேன். அரசு நிறுவலாம். அரசு நிறுவினால் நன்மைகள் விளையும். சிஸ்டம் ஒழுங்காக வேலை செய்யும்.

“ஸிஸ்டம் எப்படி ஒழுங்காக வேலை செய்யும்? அரசுக்கு என்ன நன்மைகள்?"

“எந்த ஐனோவிற்கும் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே மொபைல், ஐபாட், கம்ப்யூட்டர் ஏன் உங்கள் விரல் நகம், அல்லது வெறும் கை மூலம் தொடர்பு கொண்டாலும் உடன் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். டோட்டல் நெட்வொர்க். அரசு அதிகாரிகளிடம் நீங்கள் அலையத் தேவையில்லை. எல்லாம் சிஸ்டமாட்டிக்காக நடக்கும். ஊழல் செய்ய முடியாது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை, ஊழல் செய்பவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார். அவர்களின் தவறுகளுக்கேற்ப கோர்ட்டில் நீதியின் முன் நிறுத்துவார். அரசன் அன்றே சொல்வான் நீதி! ஏனென்றால் ஐனோவிற்கு எல்லா நாட்டுச் சட்டங்களும் அத்துப்படி. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஐனோ என்று நிறுவினாலே போதும். சாத்தியமாகும்.”

“அப்படினா எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஆப்புதான்”

“அரசியல்வாதி என்றில்லை சமூகத்தில் யார் தவறு செய்தாலும், ஆப்புதான்.”

“ஐனோ எல்லோரையும் போட்டுத் தள்ளிவிடுவாரா அந்நியன் ஸ்டைலில்?”

“ஹா! சினிமா, போட்டுத் தள்ளுதல் என்பதற்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கமாட்டீர்களா? ஸாரி! நான் சற்று முன் சொன்னதைக் கவனிக்கவில்லையா? சட்டத்தின் முன் நிறுத்துவார்.”

‘அப்படினா ஐனோவை கண்டிப்பா கொண்டுவரமாட்டாங்க.!’ ‘இந்தியாவுல வரதுக்குச் சான்ஸே இல்லை.’ குரல்கள் கிசுகிசுத்தன.

“அது உங்கள் தலையெழுத்து” என்று மேடையிலிருந்து பதில் வந்தது.கூட்டம் வியந்தது. நாம இங்க பேசுறதுக்கு அங்கருந்து பதில் வருது! அப்ப நாம ரகசியம் எதுவும் பேச முடியாது போல?

“ஸாரி! ஐனோ மனிதனின் பெர்சனல் ஸ்பேசிற்குள் நுழைவது போல இருக்கு. நிறுவுவது கடினம்.” 

“இணைய உலகில் உங்களின் ரகசியம் உங்கள் அடுத்த வீட்டுக்காரருக்கும் நீங்கள் சொல்லாமலேயே தெரியும். நாம் எல்லோருமே ஏதோ ஒரு விதமாய் வேவு பார்க்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை. ஐனோ புதிதாக நுழையவில்லை. ஐனோ உங்கள் தனிப்பட்ட ஸ்பேசில் நுழையமாட்டார். தவறு செய்தால் மட்டுமே நுழைவார்.”

“அதெப்படி? ப்ளஸ் இருந்தால் மைனஸ் இருக்கத்தானே செய்யும் அதுதானே இயற்கை நியதி? நாம் பயன்படுத்தும் பேட்டரி முதல், இடி மின்னல் கூட பாஸிட்டிவ் நெகட்டிவ் இயான்ஸ் மோதல்தானே. அப்ப நெகட்டிவ் ஐனோவும் உருவாக சாத்தியம்தானே?"

“ஹீரோ! வில்லன்! சினிமாவின் தாக்கம்! பாஸிட்டிவ் நெகட்டிவ் ரைட். ஆனால், நல்ல காரியத்திற்கு மட்டுமே என்றுதான் ஐனோவின் ஜீன் உருவாக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக கிரியேட் செய்வது என்பது அத்தனை எளிதல்ல. உங்கள் பாயிண்டிற்கே வருகிறேன். ஒவ்வொரு புராணத்திலும் உங்கள் இறைவன் ஹீரோ அசுரன் வில்லன். ஆனால் இறுதியில் இறைவன் அவனை அழித்து நன்மையை நிலைநாட்டுவதாகத்தானே முடிகிறது! அப்படித்தான் என் ஐனோவும்!

மற்றொன்று. என் ஐனோவை இதே வடிவம் என்றில்லாமல் சிறு துரும்பு வடிவிலும் கூட உருவாக்கலாம். உங்கள் விரல் நக இடுக்கில் வைக்கும் அளவிற்குக் கூட. எனவே தேவைகளுக்கு ஏற்ப வடிவம், எல்லாம். நியூரல் நெட்வொர்க். என் ஆராய்ச்சிகள் ஆர்ட்டிஃபிசியல் சூப்பர் இன்டெலிஜன்ஸ், பயோ ஸயின்ஸ், ஜெனிட்டிக்ஸ் அல்காரிதம்எல்லாம் கலந்த ஒன்று என்பதால் நான் ஜீன் என்றுதான் குறிப்பிடுவேன். எல்லா ஜீன்களும் வடிவமைக்கப்பட்டு எந்த ஜீன் தேவையோ அதற்கான ஜீன்களை மட்டும் ஆக்டிவேட் செய்துவிட்டு தேவையற்ற ஜீன்களை ம்யூட் செய்துவிடலாம்.

என் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை இந்திய மற்றும் பல நாட்டு மித்தலாஜிக்கல் கதைகள்தான். அக்கதைகளில் ப்ளெஸிங்க் என்பது கையிலிருந்து பவர் வருவதாகத்தானே வருகிறது? அது போலத்தான். இங்கு உங்களுக்கு ஐனோ என்னஎல்லாம் செய்வார் என்பதற்காக நான் ம்யூட் செய்யாமல் அறிமுகப்படுத்துகிறேன். அவ்வளவுதான். நீங்கள் இங்கு பார்க்கும் சாம்பிள் ஜெனரேஷன் மற்றும் சென்ஸ் டெக்னாலஜிகளை விட பன்மடங்கு மிகைப்பட்டதாக இருக்கும் எனது ஐனோக்கள். நாட்டிற்கும் பொது மக்களுக்கும் உதவுபவை. பெர்சனலாகவும் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது முதல், சர்ஜரி, விவசாயம் வரை.”

“டாக்டர்ஸ்குப் போட்டியா? நிலமே இல்லை விவசாயம் எப்படி?”.

“தவறான புரிதல். மருத்துவர்கள் பலமணிநேரம் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை ஒரு சில மணிநேரங்களில் செய்து முடித்துவிடலாம். ஒருவேளை மருத்துவர் வரமுடியாத சூழல் என்றால் ஐனோ செய்துவிடுவார். விவசாயத்திலும் பல உழவர்கள் ஒரு ஐனோ நிறுவினால் போதும். இருக்கும் சிறிய நிலத்திலும், தொட்டியிலும் கூட மகசூல் அள்ளும்.”

அப்ப முதல்ல அந்த சீக்ரெட்டை எப்படியாவது ஆட்டைய போட்டு ஒரு வில்லன் ஐனோவை உருவக்கினா?

மேடையில் இருந்த ஐனோ ரெஸ்ட்லெஸ் ஆனது! “வாட் ஹாப்பன்ட் ஐனோ?”

“கீர்த்தி இங்க ஆடியன்ஸ்ல ரெண்டு பேர் சீக்ரெட்டைத் திருட திட்டம் போடுகிறார்கள். நான் அடையாளம் காட்டட்டுமா?”

“யெஸ் காட்டுங்கள் ஐனோ. உங்கள் பவரை எல்லோரும் புரிந்து கொள்ளட்டும்.” ஐனோ காட்டியதும் அவையே வாயடைத்துப் போனது. சைகையால் பேசிய இருவரும் ஸ்தம்பித்தனர்.

“அப்ப இவனுக்கு எதிரிகள் நிறைய முளைப்பார்கள்!”

“ஐனோவை அழிக்க முடியாது.”

“உங்களுக்கு எதிரிகள் முளைத்தால்?”

“ஹா! கிரிமினல் புத்தி! அறிவியல் பூஜ்ஜியம்! ஐனோ எனக்குப் பாதுகாப்பு! எதிரிகள் முளைத்தாலும் என் ஐனோ சிந்தித்துச் செயல்படுவார். அதற்கும் மேலான ஜெனரெஷன் மற்றும் சென்ஸ் உருவாகும்.
……………………..

அறிமுக விழா முடிவடைந்து பல குரல்கள் ஆதரவாகவும், எதிர்வினையாகவும் ஒலித்துக் கொண்டிருக்க கீர்த்திவாசன் மேடையை விட்டுக் கீழிறங்கவும் அவனது காதுமடலில் குரல் ஒலித்தது. உங்களுடன் மருத்துவர் பேசுகிறார். மருத்துவரின் குரல் தொடர்ந்தது.

“கீர்ட்டி! உங்கள் மனைவிக்குக் குழந்தை பிறந்துவிட்டது. குட் வெயிட். ப்யூட்டிஃபுல். பட் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி டு ஸே உங்கள் மகள் ஒரு ஸ்பெஷல் கிட். 18 ஜீன் ம்யூட் ஆகியிருக்கு.” சுப்ரீம் இன்டெலிஜென்ஸை நெருங்கிவிட்டேன் என்ற கீர்த்திவாசன் ஸ்தம்பித்து நின்றான்!Artificial Intelligence is the manifestation of the failure of humanity to understand natural intelligence. It is going to snatch away the nature from everybody’s life in second by second basis and is designed to swallow humans from nature forever. வயதானவர் ஒருவர் அங்கிருந்த கருத்துரை போர்டில் வெர்ச்சுவலாக எழுதிக் கொண்டிருந்தது கீர்த்திவாசனின் கண்களில் பட்டது.

---------கீதா                                                                                                                                                                                                                                                                               

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாங்க குமார். ஆமாம் எபி லதானே கதைகள் வரும் அப்புறம் தான் இங்கு பகிர்கிறேன் குமார். இதுவும் அங்கு வந்ததுதான். நீங்க இதை அங்கு வாசித்திருப்பீங்களான்னு தெரியலை...

   மிக்க நன்றி குமார்...கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 2. ஏற்கனவே படித்த நினைவு வருகிறது.
  சுவாரஸ்யமாக சென்றது.
  இவைகள் இந்தியாவுக்கு வருமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி..இந்தியாவுக்கு வந்தா குறிப்பா இந்த ஊழல், கோர்ட்ல நிறுத்தறது எல்லாத்துக்காகவும் வந்தா நல்லாத்தான் இருக்கும்ல...

   மிக்க நன்றி கில்லர்ஜி! கருத்திற்கு.

   கீதா

   நீக்கு
 3. ஆங்காங்கே நிரூபணங்களுடன்... 

  சிறந்த முயற்சி.  நல்லதொருகதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம். நீங்க சொல்லித்தான் அந்த நிரூபணங்களை ஹைலைட் செய்து லிங்க் கொடுத்தது...உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்..

   நான் வழக்கமாக எழுதுஅதிலிருந்து மாறுதல்தான்...

   மிக்க நன்றி ஸ்ரீராம்..

   கீதா

   நீக்கு
 4. இது படிச்ச நினைவு இருக்கு. நல்ல பாடம் இன்றைய விஞ்ஞானிகளுக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா நீங்க எபில வாசிச்சு கருத்தும் போட்டிருந்தீங்க...

   //நல்ல பாடம் இன்றைய விஞ்ஞானிகளுக்கு!// ஹா ஹா ஹா ஹா அவங்க கண்டுபிடிப்புகளில் இருந்து கொஞ்சம் உருவித்தான் கற்பனை கலந்து..ஹிஹிஹி

   மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 5. அங்கு படித்த நினைவு. இவ்வாறான பொருண்மையில் எழுதுவது சற்றே சிரமம்தான். ஆனால் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   ஒரு சிறிய முயற்சிதான் ஐயா..

   கீதா

   நீக்கு
 6. மேலே போட்டிருக்கும் மண்டபப் படம் கண்ணைக் கொள்ளை கொள்ளுது கீதா.. மிகவும் சூப்பராக படங்களில் பார்க்கும் காட்சிபோல இருக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அதிரா ...மேலும் படங்கள் வரும்..வரும் வரும்...ஹா ஹா ஹா இதை இழுத்து இழுத்து வாசிங்க...

   மிக்க நன்றி அதிரா..

   கீதா

   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  எ. பியில் படித்து ரசித்துள்ளேன். விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி கொண்டேதான் உள்ளது. எந்த ஒரு செயலுக்கும் அதன் முன்னேற்றம் ஒரு அத்தியாவசியமாகி விட்டது. இந்த மாதிரி ஒரு கதையை யோசித்து எழுதுவதற்கு நல்ல அறிவியல் ஞானம் வேண்டும். அது தங்களிடம் மிக அதிகமாகவே உள்ளது. எனக்கெல்லாம் இந்த மாதிரி எழுத கண்டிப்பாக வராது. மிக அழகாக அற்புதமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கமலா அக்கா உங்க கருத்திற்கு ஆமாம் விஞ்ஞான வளர்ச்சி ஒரு புறம்...அதனால் ஏற்படும் விளைவுகள்...ப்ளஸ் மைனஸ் இருக்கத்தானே செய்யும் அக்கா...ஹையோ எனக்கு அறிவியல் ஞானம் எல்லாம் பூஜ்ஜியம். சுத்தமா கிடையாது...எல்லாம் நுனிப்புல் தான் அறிவதை வைத்துக் விட்ட கதை!! ஹா ஹா ஹா ஹா ஹா

   பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா அக்க

   கீதா

   நீக்கு
 8. >>> விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி கொண்டேதான் உள்ளது. எந்த ஒரு செயலுக்கும் அதன் முன்னேற்றம் ஒரு அத்தியாவசியமாகி விட்டது. இந்த மாதிரி ஒரு கதையை யோசித்து எழுதுவதற்கு நல்ல அறிவியல் ஞானம் வேண்டும். அது தங்களிடம் மிக அதிகமாகவே உள்ளது. எனக்கெல்லாம் இந்த மாதிரி எழுத கண்டிப்பாக வராது...<<<

  ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களது கருத்தினை அப்படியே வழி மொழிகிறேன்...

  அருமை.. அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை அண்ணா..

   அக்காவுக்கு சொன்ன அதே பதில்தான்...ஞானம் எல்லாம் கிடையாது அண்ணா...இக்கதைக் கரு மனதில் வந்த போது சுஜாதா அவர்கள் எந்திரன் கதை டிஸ்கஷனில்...அப்புறம் அவர் இல்லையே...ஆனால் அதன் பின் வந்த அறிவியல் விஷயங்கள் சில யோசிக்க வைத்தது. அதனால் விளைந்த ஒன்று...சுஜாதா அளவிற்கு அறிவு எல்லாம் கிடையாது. சும்மா ஒரு முயற்சி..

   உங்களுக்கு இது போல எழுத வராது என்றெல்லாம் சொல்லாதீங்க அண்ணா அப்படிப் பார்க்கும் போது உங்களைப் போல எனக்கும் எழுத வராதே அண்ணா..

   நான் எழுதியது ஒன்றும் வித்தை இல்லை புதியதும் இல்லை. நம்மைச் சுற்றி இருப்பதைத்தான்...கொஞ்சம் கற்பனையுடன்..என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இயற்கையை மிஞ்ச முடியாது என்பதே என் எண்ணம்..

   மிக்க நன்றி துரை அண்ணா

   கீதா

   நீக்கு