புதன், 2 அக்டோபர், 2019

அப்புவாகிய நான் / கோயில் பிரசாதம்


அப்புவாகிய நான் / கோயில் பிரசாதம்

எங்கள் ப்ளாகில் கேவாபோக பகுதியில் வெளியான கதை. மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும். இங்கு சேமிப்பிற்காக.

நான் அப்பு! வயது 5. என் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா முதல் ஊரார் அனைவருக்கும் நான் செல்லம். என் அக்கா, அண்ணாவுடன் நான் அடிக்கும் லூட்டி இருக்கிறதே! சில சமயம் எல்லோரும் எங்களை கோபித்துக் கொள்ளும் அளவிற்குச் செல்லும். செல்லமாகத்தான்!




என் ஊரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே! எனக்கு என் ஊரை ரொம்பப் பிடிக்கும். ஊர் மிகவும் சிறியதுதான் ஆனால் மிகவும் அழகாக இருக்கும் தெரியுமா? ஊரைச் சுற்றி ஆறு, வாய்க்கால், தோப்புகள், வயல்கள் என்று பச்சைப் பசேலென்று இருக்கும். அருகில் மலைகள் வேறு. மழை நன்றாகப் பெய்யும். ஊரின் நடுவில் அழகான, பெரிய, ரொம்பப் பழமையான கோயில். தெப்பக் குளமும் அத்தனை அழகு! நான் நன்றாக நீந்துவேனாக்கும்! நீங்கள் சின்னியை பார்த்தால் அவளிடம் மட்டும் சொல்லி வையுங்கள். சின்னி யாரென்று உங்களூக்குத் தெரியாதே! பின்னர் சொல்கிறேன்.




எங்கள் ஊர்க் கோயிலுக்கு எங்கிருந்தெல்லாமோ மக்கள் வருவார்கள். வெள்ளைக்காரர்கள் கூட வருகிறார்கள். அவர்களுடன் நானும் நடந்து எல்லா இடங்களுக்கும் செல்வேன். அதனால் வருகிறவர்கள் எல்லோருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். கோயிலை ஃபோட்டோ எல்லாம் எடுப்பார்கள். என்னையும் கூட எடுத்து ஏதோ ஃபேஸ்புக்காமே அதில் கூடப் போட்டார்களாமே! நீங்கள் என்னைப் பார்த்தீர்களோ? ஓ! உங்களுக்கு என்னைத் தெரியாதே! இப்போது என்னைப் பற்றிச் சொல்லிவிட்டேன் இல்லையா? அடுத்த முறை அவர்கள் என் ஃபோட்டோவைப் போடும் போது என்னைப் பாருங்கள்! அவர்கள் மீண்டும் வரும் போது “அப்பு எங்கே” என்று என்னைக் கேட்டு வரவழைப்பார்கள். இப்போதெல்லாம் எனக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் கூட நன்றாகப் புரிகிறது.


எனக்கு எங்கள் கோயில் ரொம்பப் பிடிக்கும். ஏன் சொல்லுங்கள்? எல்லாம் தினமும் மூன்று வேளையும் கிடைக்கும் பிரசாதம்தான் காரணம். அத்தனைச் சுவையாக இருக்கும். என் அம்மா, அப்பா கூட என்னைக் கலாய்ப்பார்கள். “வீட்டுல திங்கறது போதாதுனு கோயில்ல போயும் கொட்டிக்குது பாரு! சரியான அலவலாதி” என்று! அதென்னவோ தெரியவில்லை. எனக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டாலும் கோயில் பிரசாதம் சாப்பிடவில்லை என்றால் என்னவோ போலிருக்கும். சில சமயம் பிரசாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவேன். பிரசாதம் கொடுக்கும் நேரம் எல்லாம் எனக்கு அத்துப்படியாக்கும்!


நீங்களும் எங்கள் ஊர்க் கோயிலுக்கு வாங்க. கோயிலில் இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு நல்ல நண்பர்கள். என்னுடன் வந்தால் பிரசாதம் நிறைய கிடைக்கிறதாம், கூட வருபவர்கள் சொல்லிக் கொள்வார்கள். நான் உங்களுக்குத் துணையாக வந்து ஊரெல்லாம் சுற்றிக் காட்டுவேன். நீங்கள் அப்புறம் உங்கள் ஊருக்குப் போகவே மாட்டீங்க. அதுவும் என்னை விட்டுப் போக மாட்டீங்க! கண்டிப்பாக போட்டோ எடுப்பீங்க!




எங்க ஊர்ல சத்தமே அவ்வளவா இல்லாம அமைதியா இருக்கும். வண்டி எல்லாம் உள்ளே வராது. எல்லாம் ஊருக்கு வெளியே நடக்கும் தூரத்தில நின்று விடும். அங்குதான் போய் எல்லோரும் ஏறிக்கொள்வார்கள். எங்க ஊர் வண்டிகளும் அங்க ஒரு பெரிய ஷெட் இருக்கும் அங்கதான் நிறுத்தனும். எங்க ஊர்ல புகையே இருக்காது.  சைக்கிள்தான் நிறைய. என் அப்பா என்னை சைக்கிள்ல பின்னால உட்கார வைச்சு ஓட்டிட்டு போவார். எனக்கு ரொம்பப் பிடிக்கும். முக்கியமா ஒன்னு சொல்லனும். எங்க ஊர்த் தலைவர் என்னை தட்டிக் கொடுத்து சொல்லுவார். “இவென் ரொம்ப வித்தியாசமா இருக்கான்லா. வெளிய ஒரு எடத்துலயும் ஒன்னுக்கு அடிக்கறதே இல்லைல்லா”ன்னு.


தெருவுல குப்பையே இருக்காது. எல்லாம் அவரவர் வீட்டுக்குப் பின்னாடி உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டிடனுமாம். அன்னிக்கு நான் ஒரு கவரை எடுத்துப் பார்த்தேன். என் அண்ணன் வந்து அதைப் பிடுங்கி அந்த தொட்டில போட்டான். ப்ளாஸ்டிக் எல்லாம் தெருவுல உள்ள பெரிய  சிமென்ட் தொட்டிக்குள்ள போடனுமாம். எங்க வீட்டுல பேசிக்கொள்வார்கள் “மத்த ஊர்ல எல்லாம் மாடு ப்ளாஸ்டிக்கை திங்காமே. பாவம்” னு. எனக்கு எங்க ஊர் மாடுகளைப் பார்த்தா பயமா இருக்கும். பெரிசா இருக்கும். ப்ளாஸ்டிக்னா என்ன? எனக்குத் தெரியலையே. விஷமா? ஒன்று சொல்ல மறந்துட்டேனே. எங்க ஊர்ல பட்டாசு வெடிக்கும் பழக்கமே கிடையாதாக்கும்! எல்லாமே எங்க ஊர்த் தலைவர் போட்டிருக்கும் எழுதப்படாத சட்டம்னு எங்க வீட்டுல பேசிக்கொள்வார்கள். சட்டம்னா என்ன? உங்க ஊர் எல்லாம் இப்படி இருக்குமா? 


இடையில் அத்தையின் வீட்டில் விசேஷம் என்று நாங்கள் அத்தை இருக்கும் ஊருக்குப் போனோம். சென்னையாம் அதன் பெயர். ஆனால், எனக்கு அது பிடிக்கவே இல்லை. ஒரே சத்தம், வண்டிகள், புகை, அழுக்கு, வெயில், தண்ணீரே இல்லை. இரண்டு ஆறுகள் பார்த்தேன். ஐயே! அதுவா ஆறு!? எங்கள் ஊர் ஆற்றை வந்து பாருங்கள். அதை விடுங்கள், அத்தையின் வீட்டருகில் கோயில் இருந்தும் கோயிலில் பிரசாதமே தரலை. எனக்குப் பிடிக்கலை. எனக்கு நண்பர்களும் இல்லை. எங்கள் யாருக்குமே நகரம் பிடிக்கவில்லை. அண்ண்னும், அக்காவும் நரகம்னு சொன்னாங்க. எங்கள் ஊருக்கு எப்போது வரப் போறோம் என்று ஆகிவிட்டது. விசேஷம் முடிந்து ஊருக்கு வந்ததும்தான் நிம்மதியாக இருக்கிறது.


ஹான்! சின்னியைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேனே. மேற்குத் தெரு எங்கள் தெருவிற்கு நேரெதிர்த் தெரு. அங்கு வெளியூர்க் குடும்பமாம். ஹிந்திக்காரர்களாம். எனக்குத்தான் ஹிந்தி புரியுமே. அவர்கள் வீட்டுப் பெண் தான் சின்னி! நல்ல சுருட்டை முடியோடு பார்க்க பொம்மை மாதிரி அழகாக இருக்கிறாள்னு அவள் பெயர் சின்னியாம்! எனக்கு நல்ல தோழிதான். நான் அவளை விளையாடக் கூப்பிடுவேன். ஆனால், அவளது அம்மா அப்பா அவளை விட மாட்டார்கள். அவள் திண்ணையில் இருக்கும் அழி வழியாக என்னை எட்டிப் பார்ப்பாள்.


அந்தத் தெருவில் இருக்கும் பாண்டியும் எனக்கு நல்ல தோழன்தான். ஆனால், ஏனோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் என்னைக் கண்டால் டூ விடுறான். நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன் தெரியலை. சின்னி அவனுடன் மட்டும் தான் விளையாடனுன்னு நினைக்கிறானோ? அவனுக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு ஊரார் பேசிக் கொள்வார்கள். அவனுக்குக் கோயில் பிரசாதம் கொடுக்கவே மாட்டார்கள். நான்தான் அவன் பாவம் என்று கோயில் பிரசாதம் அவனுக்கும் கொடுப்பேனே! அப்புறம் ஏன் என்னிடம் டூ என்று தெரியவில்லை! என் அம்மா அப்பா கூடக் கோபப்படுவார்கள். பாண்டியனோடு விளையாடாதே என்று. ஆனால் நான் அதற்கெல்லாம் கவலையேபடுவதில்லை. எனக்கு எல்லோரையும் பிடிக்கும்.


இப்போது மார்கழி இல்லையா? கோயிலில் பிரசாதம் களை கட்டும். அதுவும் கோயில் மடப்பள்ளி எங்கள் வீட்டிற்கு அருகில் என்பதால் அந்த மணம் அப்படியே கட்டி இழுக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும். நான் வீட்டில் கொஞ்சம்தான் சாப்பிடுவேன். எல்லோர் வீட்டு வாசலிலும் அழகாகக் கோலம் போடுவார்கள். விளையாட்டுப் பிள்ளை நான் மிதித்துவிடுவேனோ என்று என்னை “ஏய் தள்ளிப் போ” என்று சொல்லுவார்கள். நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும். இப்போது பழகிவிட்டது. புரிந்து கொண்டு மிதிக்காமல் போவேனாக்கும்.


சற்றுப் பொருங்கள். கோயிலில் மணிச் சத்தம் கேட்கிறதே. உங்களோடு பேசிக் கொண்டிருந்ததில் கவனிக்கவே இல்லை. அடடா! அதற்குள் உச்சிக்கால பூஜை ஆகிவிட்டதா? பிரசாதம் கிடைக்குமே! பிரசாதம் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.


ஓடுகிறேன்…………


“அப்புவை காங்கலை? என்னாச்சுடே? அவனுக்குப் பிரசாதம் கொண்டாந்தேன்”


ஆ! இது கோயில் அண்ணன் குரல். நான் எங்கிருக்கிறேன்? ஏன் என்னால் எழ முடியவில்லை?


“அப்பு அப்பு! பிரசாதம் திங்கப் போகாம இன்னும் படுத்துக் கிடக்க.” அம்மாவின் குரல்.


ஓ! நான் ஓடலையா? என்னாச்சு எனக்கு?


‘அப்பு……அப்பு… ஏண்டா அப்படிப் பாக்கே.” அம்மாவின் கவலைக் குரல். என்னைத் தடவிக் கொடுக்கிறாள். 


“ஐயோ இங்கன வாங்களேன்! நல்லாத்தானே இருந்தான். வாலை ஆட்டமாட்டேங்கான்…..காதும் ஆடலை….ஐயோ ஒன்னுக்கு வேற அடிக்கான்.....அப்பூஊஊ டேஅப்பு இந்தாப்பு” 


அம்மாவின் கையில்………கோயில் பிரசா…………


-----------கீதா


படங்கள் கர்ட்டசி இணையம்

15 கருத்துகள்:

  1. கீதா & துளசி சார் இங்கே பதிவே போடுறது இல்லை.. அப்ப யாரு இந்த தளத்தை ஹேக் பண்ணி அவங்களை மாதிரி ப்திவு போட்டிருப்பாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா மதுரை ...ஆமாம் பதிவே போடலை...தளம் பக்கம் வந்தும் ஒரு மாதம் மேல் ஆகிறது. இந்த வாரத்திலிருந்துதான் வரேன்....துளசியும் எழுதுவதில்லை. ரொம்பவே பிஸியாகிட்டிருக்கார் அவர்.

      ஹையோ அதை ஏன் கேக்கறீங்க நான் இதை ஷெட்யூல் செஞ்சதும் மறந்து போச்சு. இன்று இங்கு வேறு என்ன பதிவுகள் வந்திருக்குனு பார்க்க வந்தப்பதான் இந்தப் பதிவு....ஷெட்யூல் தெரிஞ்சுச்சு...இனி எழுத வேண்டும்னு நினைச்சிருக்கேன் பார்ப்போம் ..

      எங்க தளத்தை எல்லாம் யாருங்க ஹேக் பண்ண போறாங்க!!!

      மிக்க நன்றி மதுரை தமிழன்

      கீதா

      நீக்கு
  2. அப்புவை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  3. படிச்ச மாதிரியும் இருக்கு. படிக்காத மாதிரியும் இருக்கு. என்றாலும் மறுபடி படிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கீதாக்கா எனக்கு, ஸ்ரீராம்கு எல்லாம் தான் மறதி பிடிச்சிருக்குனா உங்களுக்குமா...

      இப்ப அதுவும் குஞ்சுலுவோடு இருக்கும் போது மத்ததெல்லாம் நினைவுக்கு வருவது கொஞ்சம் கஷ்டம்தான்...நீங்களே சின்ன பாப்பா....அந்தச் சின்ன பாப்பாவோடு குதூகலிக்கத்தான் நேரம் சரியா இருக்கும்...மனதும்...நீங்க குஞ்சுலுவையும் விட குட்டிதானே!!!!!!!!

      கீதா


      நீக்கு
  4. நீண்ட தினங்களுக்குப் பிறகு மீண்டும் படித்தேன் அப்பு மனதில் வாழ்கிறது.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    கதை அருமை. அப்புங்கிறது யார் என்பது தெரியாமலே கதையை நகர்த்தியிருக்கீங்க. சூப்பர். பாதிக்கு மேல்தான் கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பிக்கிறது. ஏற்கனவே எ. பியில் படித்த கதை எனினும் மீண்டும் படிக்கும் போது உற்சாகமாக இருந்தது. முடிவு மட்டும் முன்பு போலவே மனதை வருத்தியது. கதை முடிந்தாலும், அப்பு நம்முடன்தான் வாழ்ந்து வருகிறான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா அக்கா.

      நம் உறவுகள் அனைத்தும் நம் நினைவில்தானே இருப்பாங்க. இதில் அப்பு மறைந்தானா?!!! தெரியலையே...

      கீதா

      நீக்கு
  6. ஆஆஆஆஆ கீதா, மீள்பதிவாக இங்கு போட்டிருக்கிறீங்க, அதனாலதான் எனக்குப் புரியவில்லை, பழையது என நினைச்சேன்..

    எங்கள் புளொக்கில் அமுதசுரபியாக வந்து கொமெண்ட்ஸ் போட்டேன் தெரியுமோ?:)).. இப்போ கவரிமான்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா அதிரா அங்கு வந்த கதைகளை இங்கும் ஒரு சேமிப்பாக...

      ஆனால் பாருங்க இப்ப என்னென்னவோ சொல்றாங்க நாம் எழுதுபவை எல்லாமும் கொஞ்ச நாளில்/வருடங்களில் போய்விடுமாமே இணையத்திலிருந்து. எதுவும் இருக்காதாமே.

      //எங்கள் புளொக்கில் அமுதசுரபியாக வந்து கொமெண்ட்ஸ் போட்டேன் தெரியுமோ?:)).. இப்போ கவரிமான்:))//

      ஹா ஹா ஹா ஹா ஆமாம்....

      மிக்க நன்றி அதிரா..

      கீதா

      நீக்கு
  7. நல்லதொரு கதை.... இங்கே மீண்டும் படித்தேன். பாவம் அப்பு.

    பதிலளிநீக்கு