செவ்வாய், 30 ஏப்ரல், 2019

விவேகானந்தம்


ராகுல் ரஞ்சித்தின் புத்தகமாகிய “Confession of a drug Addict”  01-05-2019 அன்று, பாலேமாடு, ஸ்ரீ விவேகானந்தா அரங்கத்தில் வெளியிடப்படும் நிகழ்விற்கு எல்லோரையும் மகிழ்ச்சியுடன் வர வேற்கிறோம்.


ராகுல் ரஞ்சித், “விவேகானந்தம்” எனும் எங்கள் எட்டாவது குறும்படத்தில் ஒரு கதாபாத்திரம். இப்புத்தகம், கல்வி நிலையங்களை, போதைப் பொருள் மாஃபியாவிடமிருந்து விரைவில் விடுவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பேசும் புத்தகமாகும்..

மிகப் பெரிய தொலைநோக்கு பார்வை கொண்டவரும், ஸ்ரீ விவேகானந்தா படன கேந்திரத்தின் ஸ்தாபகருமான திரு கே. ஆர். பாஸ்கர பிள்ளை அவர்களைப் பற்றிய கதையே இக் குறும்படம் “விவேகானந்தம்”

அவர் எவ்வளவு வெற்றிகரமாக விவேகானந்த படன கேந்திரத்தின் கல்வி நிலையங்களான எஸ்விஎல்பிஎஸ் (SVLPS), எஸ்விஹெச்எஸ் (SVHS), எஸ்விஹெச்எஸ்எஸ் (SVHSS), எஸ்விவிஹெச்எஸ்எஸ் (ESVVHS), எஸ்விபிகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்வி ஆசிரியர் கல்விக் கல்லூரி, எஸ்விபிகே ஆசிரியர் பயிற்சி கல்வி நிலையம், எஸ்வி சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்வி நிலையம் மற்றும் எஸ்வி ஆங்கிலப் பள்ளி எல்லாவற்றையும் ஸ்தாபித்து நிறுவுகிறார் என்பதைப் பற்றிச் சொல்லும் படம்.

1964 ஆம் வருடத்திலிருந்து இத் தனித்தன்மை வாய்ந்த கல்வி நிறுவனத்தின் ஆசி பெற்ற மற்றும் இப்போதும் ஆசி பெற்று வரும் அனைவரும் தவறாது  வந்து இந்த அரிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை வாழ்த்தும் உங்களின் வருகை கண்டிப்பாகப் படம் பிடிக்கப்பட்டு “விவேகானந்தத்தின்” நினைவுகளில் பதியப்படும்.

முதல் நாளான புத்தக வெளியீட்டோடு உங்கள் பங்கும், வாய்ப்பும் முடிந்துவிடும் என்று எண்ணிவிட வேண்டாம். வானமே எல்லை. அதன் பின்னும் கூட உங்களது பொன்னான வாய்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். “விவேகானந்தத்துடன் தொடர்புடைய உங்கள் அனுபவங்களை உங்கள் உறவுடகளுடன், நட்புகளுடன், வாழ்த்தும் நல் உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 1964 ஆம் ஆண்டிலிருந்து “விவேகானந்தா” வின் கீழ் ஆசி பெற்ற அனைவரையும் இந்த “விவேகானந்தம்” இணைக்கட்டும். சாதி, மதம், இனம் என்ற எல்லா சுவர்களையும் தகர்த்தெறியும் “நாம்” என்ற உணர்வு எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்திருக்கட்டும்.

குறும்படத்தின் படப்பிடிப்பு 2019, மே 1, 2, 3 ஆம் தேதி வரை பாலேமாடு, எடக்கரா மற்றும் பூக்கோட்டும்பாடம் பகுதிகளிலும் சுற்றியும் நடைபெறும். படம் பிடிக்கப்பட்டு அதன் படத்தொகுப்பு வேலைகள் எல்லாம் முடிந்ததும், முன்னோட்டக் காட்சியாகத் திரையிடப்படும். பின்னர், 2019, ஜூன் இறுதியில் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும்.  

ஆகவே, “விவேகானந்தம்” வெற்றிபெற உங்கள் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் வேண்டுகிறோம். இவ்வளாகத்தில் வாழ்ந்து அதை நேசித்த எல்லோருக்கும் உரித்தானது. இதற்கு பண உதவி எதுவும் தேவையில்லை. இதற்கு அரசியல் ஆதாயமும் கிடையாது. உங்களின் ஆளுமைத் திறனையும் அறிவையும் வளர்த்த “விவேகானந்தா” எனும் இக்கல்வி நிறுவனத்தை நினைவு கூர்ந்து அதன் தொடர்பான உங்களது பசுமையான நினைவுகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் விருப்பம்.


-------துளசிதரன்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019


எபியில் வெளியான கதை இங்கு வலைத்தளத்தில் சேமிப்பிற்காக. தலைப்பு சுட்டிக்குச் செல்லும் அது போல எபியில் என்பதும் சுட்டி லிங்க்.

மின்சாரம் வந்த அந்த நேரத்தில் எல்லோரும் டிவியின் முன்னால். 

“அம்மா வா! ஜெய்சலுக்கு மந்திரி பொன்னாடை அணிவிக்கறத பாக்கலாம்” என்று மகள் வீணா சொன்னதும் தரையைத் துடைத்துக் கொண்டிருந்த நான் ஓடினேன். டிவியில் சிரித்த முகத்துடன் ஜெய்சல். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற ராணுவ வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், வீர இளைஞர்கள் இவர்களுடன் மீனவ சேனையினரும் இறங்கி இரவு பகல் பாராது தொண்டாற்றிய போது, மீட்க வந்த படகில் ஏற முடியாது தவித்த பெண்களுக்குத் தன் உடலைப் படியாக்கிய கோர்மேன் கடற்கரைக்காரைவாசியான ஜெய்சல். சாதி, மதம், இனம், மொழி, பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் 3314 கேம்ப்களில் தங்கியிருக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 லட்சம் மக்கள்-----ஹெலிகாப்டர்லிருந்து இடப்படும் உணவு, உடை மற்றும் நீருக்கு மொட்டை மாடிகளில் காத்திருக்கும் மனிதர்கள்-----படகுகளில் செல்வோர் எறியும் ரொட்டிக்கும், தண்ணீர் பாட்டிலுக்கும் பாதி முங்கிய வீடுகளில் கூரைகளிலும், மாடிகளிலும் காத்திருக்கும் மனிதர்கள்.

டிவியில் காண்பிக்கப்படும் இக்காட்சிகளுக்கு இடையே ஒரு முகம்! கழுத்தில் லைஃபாய் இட்டு, கயிற்றைப் பிடித்தபடி போலீசார் உதவியுடன் கழுத்தளவு தண்ணீரில் நடந்து படகில் ஏறுவது யார்?! சுனில்?!......ஆம் சுனிலேதான்!......ஐம்பதை தாண்டினாலும் கடந்த 30 ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்ததாலும் முப்பதாண்டுகளில் உடலில் வந்த மாற்றங்கள் சுனிலை மொத்தமாக மாற்றியிருந்தது. என்றாலும் சுனிலுடனான 8 மாதக் கால உறவு அவ்வளவு வலுவானது. சுனிலை மரணம் வரை மறக்கவே முடியாது. கண்மட்டுமல்ல மனதும் இதயமும், ஆத்மாவும். திடீரெனத் தோன்றி மறைந்த அந்த ஒரு நொடியில் சுனிலை அடையாளம் கண்டு கொண்டன. சிலையாய் நின்ற எனக்கு டிவியில் தோன்றுவது மட்டுமல்ல கணவரும், மகளும், மருமகனும், மகனும், மருமகளும், பேரனும் பேத்தியும் பேசியது கூடக் கேட்கவில்லை.

30 ஆண்டுகளுக்கு முன்னால் எர்ணாகுளம் கச்சேரிப்படி சார்ட்டார்ட் அக்கவுண்டண்ட் வர்கீஸ் சார் ஆஃபீசில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாள் தனியே ஆஃபீஸில் அமர்ந்திருந்த போது உள்ளே வந்த சுனில் “என்ன? யார்” என்கின்ற தொனியில் தலையை மேலும் கீழும் ஆட்டியதும், எழுந்து

“என் பேர் சுமதி. நேத்துத்தான் ஜாய்ன் பண்ணினேன்” என்றேன்.

“ஓ! ஓகே ஓகே” என்றபடி சிரித்துக் கொண்டு எனக்கு எதிரே இருந்த, முன்னால் இரண்டு செயர்களைக் கொண்ட கொஞ்சம் பெரிய டேபிளைக் கொண்ட செயரில் அமர்ந்த அந்த சுனிலை பார்த்ததுமே ஏதோ உள்ளுக்குள் எனக்கு நீண்டகால உறவு உள்ளது போல் தோன்றியது. இடையிடையே பார்த்த போதெல்லாம் சுனிலும் என்னைப் பார்த்ததால் நான் தடுமாறுவதைக் கண்ட சுனிலின் சிரிப்பு இப்போதும் மனதில் பசுமையாய் நிற்கிறது.

மதியம் சாப்பிட்ட பின் வருட வாரியாக டெபிட் மற்றும் க்ரெடிட் கௌண்டர் ஃபாய்ல் அடங்கிய புக்கை அடுக்கிக் கொண்டிருந்த போது திடீரென சுனில் என்னருகே வந்ததும் பதறிப் போனேன். ஒரு கேஷ் புக்கையும் ஒரு பண்டில் ரெசிப்ட்டுகளையும் தந்து கௌண்டர் செக் செய்யச் சொன்னார். ஒரு பென்சிலால் கேஷ் புக்கில் ‘டிக்’ இடவும் சொன்னார். வேலையைத் தொடங்கினேன். ரசீதுகளில் இனி மூன்று மட்டும் பாக்கி. அதில் மூன்றாவது ரசீதைக் கண்ட நான் திடுக்கிட்டேன். அதில் “அழகே உன் பெயர் என்ன” என்று எழுதியிருந்தது. பதற்றத்துடனும் பயத்துடனும் சுனிலை பார்த்தேன். சுனில் சிரித்தபடி தலையை ஆட்டி “கம் ஆன்” என்றார். நான் சிறிதாக சுமதி என்று எழுதி வெட்டினேன். பதற்றத்தில் ரொம்ப நேரம் குழம்பி செய்வதறியாது திணறினேன்.

“என்ன கம்ப்ளீட் பண்ணலையா”

“இல்ல முடிஞ்சுச்சு” என்று இரண்டையும் கொடுத்தேன்.

ஐந்து மணிக்குக் கிளம்பிய சுனில் என்னருகே வந்து,

“சுமதி, அஞ்சு மணி வரைதான் ஆஃபீஸ். இனி நாளைக்கு. ஓகே?” என்று சிரித்தபடி சென்றார். என் கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சிரித்தபடி பேசிய அந்த நொடியில், எப்படியோ ஏனோ அந்தக் கண்களும் முகமும் மனதில் பதிந்துவிட்டது. வீடு செல்லும் வழியிலும், சென்ற பின்பும் மனம் அவரையே நினைத்துக் கொண்டிருந்தது. அடுத்த நாள், நான் கண்ணாடி முன் நின்று உடையை சரி செய்த போது என் தம்பி சுரேஷ்,

“என்ன இன்னிக்கு எப்பபாரு கண்ணாடி முன்னாடியே நின்னு அழகு பாத்திட்டிருக்க?” என்றதும்தான், என் செயல்கள் அன்று மற்றவர்களுக்கு வித்தியாசமாகப் படுவதைப் பற்றி உணர்ந்தேன். பார்த்ததும் ஏன் அப்படி அவர் என் மனதில் புகுந்தார்? அந்த வயதில் என் மனதில் அப்படித் தோன்ற என்ன காரணம் என்று தெரியவில்லை. சுனிலின் கவர்ச்சிப் புன்னகையா? காந்தக் கண்களா? நெற்றியில் விழுந்து கிடக்கும் ஒற்றைக் கற்றைத் தலை முடியா? அல்லது இவை எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமான கவர்ச்சியா? தெரியவில்லை. என் மனதிடம் மீண்டும் மீண்டும் பல முறை கேட்டேன். ஏன் என் மனம் இப்படி அலைகிறது? சுனிலைப் பற்றி நினைக்கிறது? இதுதான் இதுவரை என்னுள் தோன்றாதிருந்த காதலா? சுனிலை பற்றி ஒன்றும் அறியாததால் இப்படி எண்ணங்களைத் தான்தோன்றித்தனமாய் அலைய விடுவது சரியல்ல என்று என் அறிவு அவ்வப்போது எச்சரித்தாலும் மனம் சுனிலையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஆஃபீஸுக்குச் செல்லும் வழியிலெல்லாம் கண்களும் மனதும் சுனிலைத் தேடியது. சுனிலின் சீட் காலியாக இருந்தால் மனது பதறியது. இன்று லீவாக இருக்குமோ? கொஞ்சம் லேட்டாக வந்த சுனிலைக் கண்டதும் ஹப்பாடா என்றிருந்தது. அடுத்த ஐந்தே நிமிடத்தில் சுனில் என் முன் முந்தைய நாள் செய்தது போல் ஒரு கேஷ் புக்கையும், ஒரு கட்டு ரசீதுகளையும் தந்து

“நேத்து செய்ததோட கண்டினியுவேஷன். ஒகே?” என்று சிரித்துச் சென்றதும் மனதுக்கு இதமாய் இருந்தது. சந்தேகித்தது போல் ரசீதுகளுக்கிடையில் எட்டாய் மடித்து வைக்கப்பட்ட பேப்பர். நடுங்கும் கைகளுடன் அதை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்த பின், குனிந்து இடது கால் பாதத்திற்கும், செருப்பிற்கும் இடையில் திணித்தேன். மனது வேலையில் ஈடுபட முடியாமல் தவித்தது. இடையே சுனிலை பார்த்தேன். சிரித்து தலையை ஆட்டி.

“கம் ஆன்” என்றார். பதினைந்து நிமிடத்திற்குப் பின் மெதுவாக பாத்ரூம் சென்று கடிதத்தை எடுத்து வாசித்தேன். என் மனதில் என்னென்ன சிந்தனைகளோ அது சுனிலின் மனதிலும் இருக்கிறது என்பது கடிதத்தை வாசித்ததும் விளங்கியது. நான் காந்தம் போல் இழுக்கிறேனாம்.. சுனிலுக்கும் தூக்கமில்லையாம். நிறைய பேச வேண்டுமாம். மாலை ஆஃபீஸ் முடிந்ததும் எம் ஜி ரோடு வழியாக மெதுவாக நடந்து போகவேண்டும் என்பதை வாசித்ததும் பதற்றத்துடன் வெளியே வந்ததும் பாத்ரூமுக்கு வெளியே சுனில். உள்ளே நுழையும் முன் மெதுவாக “ஈவ்னிங்க். ஓகே?” என்று சொன்னதும் உடல் நடுங்கியது.

அன்று நான்கைந்து முறை கேஷ் புக்கும், ரசீது கட்டுகளும் சுனில் தந்தார். ஒவ்வொரு முறையும் எங்கள் விரல்கள் தாராளமாக உரசிக் கொண்டதால் பரவசப்பட்டுக் கொண்டிருந்தோம். மாலை பத்மா தியேட்டர் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். ஒரு ஆட்டோ அருகில் வந்து நின்றது. உள்ளே சுனில்.

“வா! சுமதி. ஏறிக்கோ” என்றதும் ஏறினேன். சௌத் ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோ நின்றது. எனக்கு மனசு படபடத்தது. சுனில் ஏன் என்னை ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்? குழம்பினேன். ஸ்டேஷன் நோக்கி நடந்த போது,

“ஆறு மணிக்குள்ள வீட்டுக்குப் போகணும்” என்றேன்.

“ஒரு ஹாஃப் அன் ஹவர் ஃப்ரீயா ப்ளாட்ஃபார்ம்ல உக்காந்து பேசுவோம்” என்று சொல்லி இரண்டு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் எடுத்த பின் ஆளில்லாத ஒரு ப்ளாட்ஃபார்ம் பெஞ்சில் அமர்ந்து பேசினோம்………………..

மகன் வினோத் என்னிடம், “அம்மா! என்ன நான் சொன்னது காதில் விழலையா? சுரேந்திரன் சார் வீட்டில் வாலண்டியர்ஸ் க்ளீனிங்க் முடிச்சுட்டு, நம்ம வீட்டுக்குத்தான் வருவாங்க. கிச்சன்ல இருந்து எல்லாத்தையும் மாத்தியாச்சா?”

“…ம்ம் எல்லாம் ஆச்சுடா” என்றபடி சமையலறையை நோக்கி நடந்தேன்.

களமசேரி பெரிங்கழாவில் 17 ஆம் தேதி இரவு வயல்களுக்கு அருகிலிருந்த வீடுகளில் மழை நீர் ஏறத் தொடங்கி சிறிது சிறிதாக நீர்மட்டம் உயரத் தொடங்கியது. சரிவான சிறு குன்றில் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தாழ்வாக இருந்த சுரேந்திரன் சாரது வீட்டிற்குள் 18 ஆம்தேதி இரவு வெள்ளம் ஏறியதும் வீணாவின் காக்கநாடு விட்டுக்கு எல்லா பொருட்களையும் கட்டில் மேலும், மேசை மேலும் மாடியிலும் வைத்த பின் போய்விட்டோம். இன்று காலைதான் வீட்டை அடைந்தோம். நாளை, 24.08.2018 ஆம் தேதி ஓணம் என்பதால் இன்று வீட்டைக் கழுவி சுத்தமாக்கும் வேலையில் இருந்தோம். ஓரளவு முடியும் தருவாயில் மின்சாம் வர கேபிளும் வந்தது. எல்லோரும் டிவியின் முன். நான் மீண்டும் சமையலறை தரையைத் துடைக்கும் வேலையைத் தொடங்கினேன்.

மனம் மீண்டும் சுனிலைப் பற்றிய எண்ணங்களில் உழன்றது. அன்றைய முதல் சந்திப்பிற்குப் பின் எத்தனையோ சந்திப்புகள், எட்டுமாதக்காலங்களில். ஐந்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன சுனிலுக்கு என்னை மணமுடிக்க உண்மையிலேயே ஆசை இருக்கத்தான் செய்தது. அப்பாவையும் அம்மாவையும் பார்த்துப் பேச நான் அழைத்த போது வீட்டுக்கு வந்த சுனிலிடம் பேசிய போது வேறு சாதி என்பது தெரிந்தும் இருவரும் அப்போது பிரச்சனைகளேதும் பண்ணவில்லை. அம்மா சுனிலிடம்,

“இவ அக்காக்கள் ரெண்டு பேருக்கும் 15 பவுன் நகைதான் போட்டோம். இவளுக்கும் எங்களால அவ்வளவுதான் செய்ய முடியும்” என்று கூடச் சொன்னார். ஆனால் என் மூத்த அக்கா சுனிதா மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்தாள். “வேறு சாதி பையன் வேண்டாம்”. அந்த எதிர்ப்பு சிறிது சிறிதாகப் படர்ந்து எல்லோரையும் பற்றிக் கொண்டது. இதனிடையே நானும் சுனிலும், கொச்சின் யுனிவர்சிட்டி, ஹெச் எம் டி என்று பல இடங்களில் சுனிலின் ஸ்கூட்டரில் சுற்றினோம். சுபாஷ் பார்க்கில் சந்தித்தோம். “வரவேற்பு”, “ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்க்” படங்களுக்குக் காலைக்காட்சி சென்று காதல் காட்சிகளின் போது கைகளில் முத்தமிட்டுக் கொண்டோம்.

என் மூத்த அக்கா சுனிதா அவளது கணவரின் தூரத்து உறவான ஒரு மிலிட்டரிக்காரனை என் கணவராக்க எடுத்த முயற்சி வெற்றி காணும் தருவாயில் இருந்ததால், என் பெற்றோர் டிசம்பர் மாதம் முதல் வேலைக்குப் போக வேண்டாம் என முடிவு செய்துவிட்டனர். என்னைக் காணாமல் சுனில் வீட்டிற்கு ஃபோன் செய்த போது அக்கா சுனிதா,

“இந்தக் கல்யாணம் நடக்காது. எங்க சாதிப்பையனுக்குத்தான் சுமதியைக் கொடுப்போம்” என்று சொல்லிவிட்டாள். மீண்டும் பல முறை சுனில் ஃபோன் செய்த போதெல்லாம் “சுமதி இல்லை” என்ற பதில்தான். இடையே விரிவாக நான் ஒரு கடிதம் சுனிலுக்கு எழுதினேன். ஏதாவது சாக்கு சொல்லி இடையே சுனிலை ஓரிரு முறை சந்திக்கவும் செய்தேன்.

ஒரு முறை சுனிலை சந்தித்து பிரியும் போது சுனில் என் பீரியட்ஸ் பற்றி கேட்டதும். “போன மாதம் 27…ஏன்?” என்றதும்

“வர்ற 21 ஆம் தேதி வியாழன் ஆலுவா மணப்புறம் கோவிலுக்குப் போவோம்” என்றதும் “சரி” என்றேன்.

“அன்னிக்கு சாரி போதும். வேற ட்ரெஸ் வேண்டாம்” என்று சுனில் சொல்ல சரி என்றேன்.

21.9.1989, காலை 9 மணி. தோழியைக் காணப் போகிறேன் என்று பொய் சொல்லி வீட்டிலிருந்து வெளியேறினேன். சுனிலுக்காக நார்த் பஸ்டாண்டில் காத்திருந்த போது சுனில் ஸ்கூட்டரில் ஒரு சூட்கேஸோடு வந்தார். ஆலுவா ரயில்வே ஸ்டேஷனில் பார்க் செய்தபின் அருகிலிருந்த கடையிலிருந்து 75 ரூபாய்க்கு ஒரு லேடிஸ் பேக் வாங்கித் தந்தார். உன்னோட ஏதாவது ஒரு ஃப்ரென்ட் கொடுத்த கிஃப்ட்நு வீட்டில சொல்லிக்க என்றபடி கேஎஸ்ஆர்டிசி ஸ்டாண்ட் அருகே உள்ள ஆரியபவனுக்குள் நுழைய நானும் பின் தொடர்ந்தேன். கேபினுள் அமர்ந்து உளுந்து வடை வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது,

“சுமதி! இதுக்கு மேல அரோமா லாட்ஜ் இருக்கு. ஒரு ரூம் எடுத்து ஃப்ரீயா பேசுவோம். ஒரே வெயில்” என்றார்.

“ஐயோ லாட்ஜுக்கா?!... அப்ப கோயில்?....ஐயோ முடியாது. இல்ல…. வேண்டாம்”

உடனே, சுனில், என் கைகளைப் பிடித்து, “ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சத் தொடங்கினார்.

“ரிசப்ஷன்ல டென்ஷன் இல்லாம கூலா நிக்கணும். ஹஸ்பண்ட் வைஃப் மாதிரி. ஓகே?” என்றபடி நடந்த சுனிலை நான் பின் தொடர்ந்தேன். பயப்பட ஒன்றுமில்லை. சுனிலுடன் தானே’ என்று நினைத்துக் கொண்டேன்.

“மெட்ராஸ் மெயிலுக்குப் போனும். எய்ட் ஹவர்ஸ் மேல இருக்கு அதான். ரூம் ரொம்ப மேல வேண்டாம்” என்று சுனில் நடிக்க, நானும் யாரையும் கவனிக்காமல் சுவற்றில் மாட்டியிருந்த ஈஃபில் டவர் படத்தைப் பார்த்தபடி நின்றேன். ரூம்பாய் அறையைத் திறந்து விட்டுப் போனதும், சுனில் சூட்கேஸிலிருந்து கைலி மற்றும் துண்டை எடுத்து ஆடை மாற்றி பாத்ரூமுக்குள் நுழைந்தார்.

கதவு தட்டும் சப்தம்! பயந்தபடி கதவைத் திறந்தேன். ரூம்பாய். ஜக்கில் தண்ணீருடன்.

“ஜூஸ், ட்ரிங்க்ஸ் ஏதாவது வேணுமா?”

“அவர் பாத்ரூமில இருக்கார். வந்ததும் சொல்றேன்” என்றேன் பதற்றமில்லாமல்.. வெளியே வந்த சுனில்,

“நீ ரிஃப்ரெஷ் பண்ணனுமா?”

“இல்ல வேண்டாம். அப்புறம்….. அந்த ரூம் பாய் ஜூஸ் வேணுமானு கேட்டாரு”

“உனக்கு வேணுமா?”

“வேண்டாம்”

சுனில் சட்டையை அவிழ்த்து கதவின் ஹாண்டிலில் தொங்கவிட்டார். நான் ஏன் என்பது போல் பார்த்ததும்,

“அதில் ஒரு துவாரம் இருக்கு. நம்ப முடியாது. ஒளிஞ்சு பார்ப்பானுங்க” என்றபடி அருகே வந்து கைகளைப் பிடித்து கட்டியணைத்தார். முகமெங்கும் முத்தமழை. திடீரென கதவு தட்டப்படும் சத்தம். கதவைத் திறந்ததும்

“சார் ஏதாவது குடிக்க ட்ரிங்க்ஸ்?” மீண்டும் ரூம்பாய்.

“வேண்டாம்” என்றபடி கதவைச் சாத்திய பின் சுனில்,

“சுமதி காட்டன் சாரி கசங்கிடும். அவிழ்த்து அந்தச் செயர்ல வை” என்றதும் தயங்கிய என்னிடம் கெஞ்சி அவிழ்க்க வைத்துவிட்டார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என் பயமும் விலக, இவருடன் தானே வாழப் போகிறோம் என்ற எண்ணமும் வர, எதிர்ப்பேதும் சொல்லாமல் அடுத்த இரண்டு மணி நேரம் எதிர்காலத்தைப் பற்றி பேசியபடி இரு முறை இணைந்தோம். 12 மணிக்கு இருவரும் ஷவரில் ஒன்றாய் குளித்தோம். ஆரியபவனில் சாப்பிட்டபின் கேஎஸ்ஆர்டிசி ஸ்டாண்டிலிருந்து எர்ணாகுளம் ஃபாஸ்ட் பாசஞ்சரில் என்னை ஏற்றிவிட்டார்.

சுனில் அதன் பின் என்னை கூப்பிடவே இல்லை. அடுத்து வந்த நாட்களில் ஆஃபீஸுக்குக் கூப்பிட்ட போதெல்லாம் சுனில் இல்லை என்ற பதில். புழுவாய்த் துடித்தேன். சுனில் என்னை ஏமாற்றிவிடுவாரோ? வீட்டு முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரமாக இருந்ததால் நான் எடுத்தேன்.

“நான் பயந்தே போனேன். ரெண்டு நாள் டிலே! நான் வேண்டாத கோயில்கள் இல்ல. உறக்கமும் இல்ல. இன்னிக்குத்தான் ஆச்சு. இப்பத்தான் உயிர் வந்துச்சு. எங்க போயிட்டீங்க? ஏன் என்ன கூப்பிடலை. சொல்லிருந்தேனே பகல் 11-12 மணிக்கு இடையில கூப்பிடுங்கனு…இப்ப கூப்பிட்ட மாதிரி…”

“எனக்கு உன்னைப் போல பயமெல்லாம் இல்லவே இல்லை சுமதி. 21 ஆம் தேதி எல்லாம் சேஃப் பீரியட்தான்…”

என் முகத்தில் பளார் என்று அறை விழுந்தது போல் இருந்தது. சுனில் திடீரென என் முன் ஒரு வில்லன் ஆவது போல் தோன்றியது. சுனில் ஏதேதோ சொல்ல, நான் பதிலேதும் சொல்லாமல் ரிசீவரைப் பிடித்துக் கொண்டு நின்றேன். சுனில் நான் நினைத்தது போல் அல்ல. கண்ணிங்க் அண்ட் ஹிப்போக்ரைட்.

அம்மா எப்போதும் சொல்லும் வார்த்தைகள் என் காதில் முழங்கியது. “நீ நினைக்கற மாதிரி இல்ல சுனில் எல்லாம். உன்ன கல்யாணம் பண்ண மாட்டான். நம்பாதே! உன்ன ஏமாத்திருவான். அவன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இரு. பெண்கள் இலை போல. ஆண்கள் முள்ளு மாதிரி. இலை முள்ளு மேல் பட்டாலும் முள்ளு இலை மேல் விழுந்தாலும் இலைக்குத்தான் சேதம்.”

“சுமதி! என்ன மௌனம்? அடுத்த மாசம் 18 ஆம் தேதி வியாழக் கிழமை சோட்டாணிக்கரை போவோம் ஓகே? எனக்கு எப்பவும் உன் நினைவுதான். சரி நான் நாளைக்குக் கூப்பிடறேன் இதே டைம் ஓகே?”

ஆண்கள் ஆண்கள்தான் பெண்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு போக வஸ்துதான். மனைவியாகும் முன் பெண்கள் ஆண்களுக்கு அடி பணியவே கூடாது. அதன் பின் ஓரிருமுறை சுனில் கூப்பிட்ட போது, சுனிலின் மனதை அறிய நான் கல்யாணப் பேச்சை எடுத்த போதெல்லாம், “நான் ரெடி ஆனா உங்க அக்கா சம்மதிக்கணுமே!” என்று சொல்லி உடனே அடுத்த சந்திப்புக்குத் தாவிடுவது வழக்கமாகியது.

நான் ஜாக்கிரதையானேன். சுனிலிடம் மட்டுமல்ல. எல்லோரிடமும். சுனிலின் ஃபோன் வந்த போது வேண்டுமென்றே எடுக்காமல், அம்மா, தம்பி, அக்கா இப்படி யாரையாவது எடுக்கச் சொன்னேன். ஒரு முறை அக்காவிடம் சுனில் சிக்கியதும்,

“யார் பேசுறீங்கனு தெரியும். இனி கூப்பிட்டா போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவோம். அவளுக்கு வேற கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணப் போறோம். புரியுதா?” என்ற பின் சுனிலின் ஃபோன் வரவே இல்லை.

அதன் பின் நான் எதிர்ப்பு சொல்லாததால் எல்லோரது விருப்பப்படி மிலிட்டரிக்காரரான தினேஷ் என் கணவரானார். என் வாழ்வில் நிகழ்ந்த அந்தத் தவறு ஒரு பெரிய விபத்துதான். அதற்கு நானும் பொறுப்பாளியே! என்பதற்காக, சுனிலின் வாழ்வை அத்தவறு ஒரு விதத்திலும் பாதிக்காமலிருக்கும் போது, ஏன் நான் எல்லோரிடமும் சொல்லி என் தலையில் நானே மண்ணை வாரி இட்டுக் கொள்வது போல் என் வாழ்வை இருட்டாக்கிக் கொள்ள வேண்டும்?

என் கணவருக்கு எப்படியோ சுனில் விஷயம் தெரிந்து நான் வீணாவை வயிற்றில் சுமந்திருந்த போது,

“உனக்கும் அவனுக்கும் அத்து மீறிய தொடர்பு இல்லேனு உன் வயித்துல வளர்ற குழந்தை மேல சத்தியம் பண்ணிக் கொடு என்றதும் சத்தியமும் செய்தேன். எனக்குத் தெரியும். இறைவன் இந்தப் பொய் சத்தியத்திற்காக என்னைத் தண்டிக்க மாட்டார் என்று. அப்போது நான் சத்தியம் செய்யத் தயங்கியிருந்தால் என் இல்லறக் கதை இல்லாமற் போயிருக்கும். நான் நடத்தை கெட்டவளாக முத்திரை குத்தப்பட்டிருப்பேன். என் குழந்தை நடத்தை கெட்டவளின் குழந்தையாக வளர வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டிருக்கும். எத்தனையோ பெரிய பெரிய பாவங்களை செய்தவர்களூம், செய்பவர்களும் ஒன்றுமே செய்யாதது போல வாழும் போது, இப்படி நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளான ஒரு பெண்ணான நான் மட்டும் ஏன் என் வாழ்வை நாசம் செய்து கொள்ள வேண்டும்? முடியாது. கூடாது என்று முடிவு எடுத்தேன்.

க்ளீனிங்க் வாலண்டியர்ஸ் இருபது பேர் வந்து வீடு, கிணறு மற்றும் வீட்டைச் சுற்றிய இடங்களை எல்லாம் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அதைப் பார்த்துக் கொண்டும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டும் நின்ற நான்,

“இந்த வெள்ளப் பெருக்கும் ஒரு விபத்து. இயற்கையின் சீற்றத்தால் விளைந்தது. வீட்டில் சேறு படிந்ததால் வீட்டை வேண்டாம் என்று சொல்லி வேறிடம் செல்லாமல் இதை இயன்ற மட்டும் சுத்தம் செய்து மீண்டும் இந்த வீட்டில் வாழவேண்டும். அதைத்தானே எல்லோரும் அவரவர் வீடுகளில் இப்போது செய்கிறார்கள். இது போல் தான் முப்பது வருடங்களுக்கு முன் சுனில் எனும் சேறு என்னுள் படிந்தது. நல்ல காலம் அதனால் வேறு விளைவுகள் இல்லை. இறையருளால் அதிலிருந்து மீண்டு நான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினேன். நாம் கவனமாக வாழாவிட்டால் இப்படிப்பட்ட மாசுகள் நம் வாழ்வில் படிந்துவிட வாய்ப்புண்டு. அப்படி மாசு படியும் நிலை வந்தால் அவற்றைத் தள்ளிவிட்டு நம் வாழ்வை மரணம் வரை தொடரத்தான் வேண்டும். நமக்கு அதற்கான மனமிருந்தால் போதும். நம் தவறை உணர்ந்து மீண்டும் தொடராமல் இறைவனிடம் மன்னிப்பு கோரினால் இறைவன் அதற்கான மார்கங்களை நமக்குக் காட்டுவார்” என்று சிந்தித்துக் கொண்டே வேலையில் இறங்கிய போது,

“பாட்டி எங்கருக்க” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடி வந்த என் பிஞ்சுப் பேரனின் குரலில் மயங்கி மகிழ்வில் திளைத்து அவனை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டேன்.

------துளசிதரன்