ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

என் கண்ணில் பாவையன்றோ.......

https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html  இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழுத வைத்து ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்தும் எபி மற்றும் ஸ்ரீராமிற்கு மனமார்ந்த மிக்க நன்றிகள் பல.

“நான் உன் மடில சித்த படுத்துக்கட்டுமாடி கோமளா? நேக்கு ஆசையா இருக்கு!”

“எங்கிட்ட என்ன கேள்வி இது? படுத்துக்கலாமே. ஒங்க மடிதானே இது”

கல்யாணமான புதுசுல பதினஞ்சே வயசான கோமளா எம்புட்டு வெக்கத்தோட பதில் சொல்லிண்டே நான் படுத்துக்கறதுக்கு வாகா மடிய வச்சுண்டு என்னை படுக்க வைச்சுண்டா.

நான் இப்படி எத்தனையோ நாள் மனசு சோர்ந்து போறச்சேயும், களைப்பா இருந்தப்பவும் அவ மடில ஸ்வாதீனமா படுத்துண்டுருக்கேன். அவளும் எத்தனை ஆதுரத்தோட என் தலையை வருடிக் கொடுத்துருக்கா. தாய்க்குப் பின் தாரம் னு சொல்லறது சரிதான் போல. அம்மாவோட மடி எத்தனை சுகமோ அதே போலத்தான் இவளோட மடி. அந்த நாளெல்லாம் நினைச்சுண்டா எம்புட்டு சந்தோஷம் வரது. அப்போ படாத கஷ்டமா? எம்புட்டு கஷ்டம் வந்தாலும் கோமளா இருக்கான்னு ஒரு தைரியம் அந்தத் தைரியத்துல ஒரு மனக்களிப்பு. அதுல எல்லாத்தையும் கடந்து வர முடிஞ்சுதே.
  
அப்படிப்பட்டவள் தனக்குனு ஏதாவது கேட்டுருக்காளோனு நினைச்சுப் பாக்கறேன். ம்ஹூம் என் நினைவுக்குத் தெரிஞ்சு ஒண்ணுமே இல்லை. நானோ, குழந்தைகளோ வாங்கிக் கொடுக்கறதுதான். ஆனா அதை எம்புட்டு சந்தோஷமா வாங்கிப்பள். அந்த முகத்துல நிஸ்சலனமான சந்தோஷத்தப் பாக்கணுமே. ஒரு குத்தம் குறை? சொன்னதே இல்லையே.

பாவம். எத்தனைக் கஷ்டப்பட்டிருக்கா. அந்த நாள்ல பெரிசா இருந்த என் குடும்பத்துல வாக்கப்பட்டு அந்தச் சின்ன வயசுலயும் என் அம்மா, அப்பா, அவா அம்மா அப்பா, என் தங்கை, தமக்கைகள் அவா பிரசவம், ஆதரவு இல்லாத சித்தினு எல்லாரையும் கவனிச்சுண்டு, அரவணைச்சுண்டு, அம்புட்டு வேலையும் பாத்துண்டு, இதுக்கு நடுல நா “நேக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்டி” “டி எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை” அப்படி இப்படினு சொல்லிண்டு, அவளை சுகிச்சதுல பொறந்த குழந்தைகளையும் கவனிச்சுண்டு எல்லாரோட ஆசைக்கும் ஏத்தபடி சமைச்சுப் போட்டுண்டு, குழந்தைகள், பெரியவா எல்லாருக்கும் இசைஞ்சுண்டு, மனுஷா இருந்தா பிரச்சனைகள் வருமில்லையோ அதையும் சமாளிச்சுண்டு இருந்தாளே தவிர தனக்குனு ஆசை எதுவும் இருந்ததா கூடக் காட்டிண்டதேயில்லையே..

குழந்தைகள் கூடக் கேட்டா, “ஏம்மா எங்களுக்கெல்லாம் விழுந்து விழுந்து உழைக்கிற. எங்க ஆசை அது இதுனு செஞ்சு கொடுக்கற. உனக்குனு ஏதாவது ஆசை இருக்கா இல்லையா? சொல்லுமா நாங்க அதை நிறைவேத்தறோம்”

“நேக்கு எதுக்கு? நீங்க எல்லாம் இருக்கும் போது நேக்கு என்ன வேணும் சொல்லுங்கோ? இதுவே பரம சொர்க்கம். பகவானுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டவளாக்கும்.

ஆர் கண் பட்டுதோ. அப்படி இருந்த எங்க குடும்பத்துல இப்படி ஒரு வேதனை வரணுமா? முதல்ல பெரிய பொண் போய்ச் சேர்ந்தா. அப்புறம் மாப்பிள்ளை. அந்தக் குழந்தைகள் எங்ககிட்ட வளர ஆரம்பிச்சுது. அப்புறம் ரெண்டாவது மாப்பிள்ளை. அப்போ அவா குழந்தைகள் வளர்ந்துட்டா. அப்புறம் ரெண்டாவது பொண்ணும் போய்ச் சேந்ததும் குழந்தைகள் எங்களோட வந்துட்டா. அடுத்தாப்புல மாட்டுப் பொண்ணும் போய்ச் சேர்ந்தா. எல்லாரும் 50 வயசுக்குள்ள போய்ச் சேந்துட்டா. பேரன் பேத்திகளை வளத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. பிள்ளை, பிள்ளை வயித்துப் பேரன், மாட்டுப் பொண், குழந்தைகளோட நாங்க இருக்கோம். மத்த பேரன் பேத்தி எல்லாம் அடுத்தாப்புலதான் இருக்குகள்.  

பாட்டிக்கு 80 வயசாம். கொண்டாடணும்னு குழந்தைகள் எல்லாம் வந்துருத்து. அதுகளே கேக் எல்லாம் பண்ணி கோமளவல்லி ஸ்ரீநிவாஸன்னு பேர் எல்லாம் எழுதி வைச்சுதுகள். எங்க ரெண்டு பேரையும் மாலை மாத்திக்கச் சொல்லிக் கொண்டாடி, பாட்டிய எனக்குக் கேக் ஊட்டச் சொல்லி, என்னை பாட்டிக்கு ஊட்டச் சொல்லினு… அப்போ இவ வெக்கத்தைப் பார்க்கணுமே. என் மனசும் அந்தக் காலத்துக்குப் போயிடுத்து. வடை பாயாசத்தோட சாப்பாடு. அமளி துமளி. குழந்தைகள் எல்லாம் ஆர்ப்பரிச்சா. குதூகலிச்சா. அடுத்த தலைமுறை குழந்தைகள்! பாட்டி கிட்ட கேட்டா.

“பாட்டி! நீ உனக்குனு எதுவுமே கேட்டதில்லையாமே. எங்ககிட்டயும் எதுவுமே கேட்டதில்லையே பாட்டி. எங்களுக்கெல்லாம் பாத்து பாத்து செஞ்சுருக்கியே. இன்னிக்கு உனக்கு பர்த்டே. சொல்லு உனக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்? என்ன ஆசை சொல்லு பாட்டி.”

“உங்க தாத்தாகிட்ட கேளுங்கோ”

“ஓ! பாட்டி நீ தாத்தாக்கு என்னவோ அதுதான் நேக்கும்னு சொல்லுவ! ஒத்துக்கறோம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு பாட்டினு கேட்டா… இப்பவும் தாத்தாதானா?.”

“நேக்கு ஒண்ணுமே வேண்டாம் கோந்தே. எல்லாம் பகவான் கொடுத்துட்டாரே. உங்களை எல்லாம் விட வேற என்ன வேணும் சொல்லுங்கோ? எங்கிட்ட இத்தனை பாசமான உங்க எல்லாரையும் விட விலை ஒசந்தது என்ன இருக்கு சொல்லுங்கோ இந்த லோகத்துல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

“இல்ல பாட்டி இப்பவாவது உன் ஆசை என்னனு சொல்லு ப்ளீஸ்” 

குழந்தைகளுக்கு நன்னா தெரிஞ்சு போச்சு. பாட்டி எல்லார் முன்னாடியும் சொல்லமாட்டானு. குழந்தைகள் எங்கிட்ட தனியா கேட்டதுகள். அவகிட்ட தனியா கேட்டதுகள்.

நேக்கு சொல்றதுக்கு என்ன வெக்கம்? நான் அதுகள் கிட்ட சொன்னேன். “பாவம் உங்க பாட்டி. அவளை என் மடில படுத்துக்க வைச்சு ஆதுரத்தோட தடவிக் கொடுக்கணும். அவ கைய பிடிச்சுக்கணும். இத்தனை நாள் எம்புட்டு சமாளிச்சுருக்கனு.

இவ என்ன சொல்லப் போறாளோனு நான் பார்த்துண்டே இருந்தேன். இவள் சின்ன வயச நினைச்சுண்டாளாம். “நீங்க எல்லாம் சிரிக்கப்படாது. உங்க தாத்தா மடில நா ஆசையா படுத்துக்கணும்” என்று சொன்னாளாம். நான் பாக்கறேன்னு தெரிஞ்சதும் மொகத்தை வேற மூடிண்டுட்டா. முகத்தைப் பார்க்கணுமே. வெக்கத்துல சேப்பா ஆயிடுத்து.

எல்லாம் சேந்து ஒரே கத்தல். ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொன்னோமாம். ஹனிமூன் கப்பிள் அட் 80னு வேற பட்டம் சூட்டிடுத்துகள். அவாளுக்கு நன்னா தெரியும் அவா பாட்டி அவா முன்னாடி என் மடில படுத்துக்க மாட்டானு.

பாட்டிக்குத் தாத்தாவோட தனியா போணும்னு ஆசை இருக்கும்னு எல்லாம் சேந்து திருநெல்வேலிக்கு ரயில்ல டிக்கெட் புக் பண்ணி போற இடத்துல எல்லாம் எங்களைக் கூட்டிண்டு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி, கையில கொடுத்ததுகள்.

“பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்ச ஊர்கள். நீ அடிக்கடி சொல்லுவியே, உனக்கும் தாத்தாவுக்கும் கல்யாணம் ஆன ஊர் திருநாங்கோயில் அதான் மேல திருவேங்கடநாதபுரம்னு……  அந்த ஊருக்கும், தாத்தா ஊரான திருக்குறுங்குடிக்கும்…  உன் ஊரும் தான். ரெண்டு பேரும் கஸின்ஸ் தானே. ரெண்டு பேரும் போயி திருநாங்கோயில்ல தரிசனம் முடிச்சு உன் கல்யாண நாளை நினைச்சுண்டு…  அங்க தாமிரபரணி ஆத்தங்கரை உண்டே  அங்க தாத்தா மடில படுத்துக்கோ. அட! இங்க பாரு பாட்டிக்கு வெக்கத்த…ஹை என்ன சந்தோஷமா?”  

கையில் கேமரா வேற கொடுத்து நாங்க தனியா இருக்கற ஃபோட்டோ வேணும்னு கண்டிஷன் எல்லாம் போட்டு, கட்டிப் பிடிச்சுண்டு, முத்தம் கொடுத்து, “எஞ்சாய் தாத்தா பாட்டி” னு சொல்லி ரயில் ஏத்தி விட்டதுகள். இவள் வெக்கப்பட்டுண்டே என் கையை பிடிச்சுண்டு ரயில்ல ஏறினா.

ஒரு வாரம் ஊர்ல இருந்துண்டு, பகவான் தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிச்சுண்டு, பழசெல்லாம் நினைச்சுண்டு பேசிண்டு, இதோ திரும்பவும் குழந்தைகள்ட்ட போயிண்டுருக்கோம். இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது என் மடில அவளா படுத்துண்டுருப்பளோ? இல்லியே. சரி அவதான் படுத்துக்கலை. நானாவது அவளை படுத்துக்கோனு இழுத்துப் படுத்துக்க வைச்சதுண்டோ? வைச்சாலும், அவள் எங்க படுத்துண்டா? என்னைதான் படுத்துக்க வைச்சுப்பள். என்னமோ தெரியலை. எத்தனை உரிமை கொண்டாடியிருக்கேன் நான். ஆனா அவள்? பாவம்!

என்னதான் அவள் சந்தோஷமா இருந்தாலும் குழந்தைகள் எல்லாம் சின்ன வயசுலயே போய்ட்டாளேனு வலியும், வேதனையும் அவ மனசுல வாட்டிண்டுதான் இருக்குன்னு எனக்கு நன்னாவே தெரியுமே. ஆனா, என் மடில படுத்துக்கணும்ன்ற ஆசைய இத்தனை வருஷமா அவ மனசுல பூட்டி வைச்சுருந்துருக்காளே. அவளுக்கு இல்லாத உரிமையா? அதான் இத்தனை வருஷமா என் மடில படுத்துக்காதவள் இன்னிக்கு “உங்க மடில சித்த படுத்துக்கட்டுமா”னு கூடக் கேக்காம அப்படியே படுத்துண்டு அவ ஆசையை நிறைவேத்திண்டுட்டா! எதுக்குக் கேக்கணும்? அத்தனை ஆசை எம்மேல! நீ எழுந்ததும் நிறைய பேசணும்டி கோமு என்று நினைத்தபடியே அவள் மேல் ஆதுரத்துடன் கையை வைத்துத் தடவிவிட்டார், பாட்டியின் உயிர் அவர் மடியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவதை அறியாமல்.
------கீதா

ஞாயிறு, 28 ஜூலை, 2019

காசு வரை பிள்ளை


https://engalblog.blogspot.com/2018/07/blog-post_10.html அருமையான தலைப்பிற்கும், கேவாபோக பகுதியில் அங்கு வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எபிக்கு. 

இங்கு எங்கள் தளத்திலும் இது ஒரு சேமிப்பாக......


“அப்பா! அம்மாவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. எல்லாமே நார்மல். பெரிசா ஒன்னுமில்லை. ஹார்ட்தான் கொஞ்சம் வீக்கா இருக்கு. ட்யூ டு ஏஜ் னு டாக்டர் சொல்லிட்டார்”

“இறைவா!” என்று கண்ணை மூடிக் கொண்டு கையை நெஞ்சில் வைத்துக் கொண்டார் வேதமூர்த்தி. “கணேசன், ராஜா, லலிதா எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டியா சுந்தர்!? அம்மா மூணு நாளா சரியா பேசமுடிலைல. அதனால எல்லாரையும் பாத்து பேச ஆசைப்படுவா”

“சொல்லியாச்சுப்பா. எல்லாரும் ஈவ்னிங்க் வீட்டுக்கு வந்துருவோம்னிருக்காங்க”

மாலை அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்ததும் எல்லோரையும் பார்த்து சந்தோஷப்பட்டார். உள் ரூமில் படுக்க வைத்து மீனாட்சி உறங்கியதும், தான் வருவதாக வேதமூர்த்தி சொல்லவும் கதவை மூடி வைத்துவிட்டு எல்லாரும் ஹாலில் கூடினர். எல்லோரும் என்றால் வேதமூர்த்தியின் மூன்று பிள்ளைகள், மருமகள்கள், மகள், மாப்பிள்ளை. அங்கு ஒரு மயான அமைதி நிலவியது. எப்படித் தொடங்குவது? யார் தொடங்குவது என்று இருக்கலாம்.

முதலில் மூத்தவன் சுந்தர்தான் தொடங்கினான். “இந்த 3 நாள் அம்மா ஆஸ்பத்திரியில இருந்ததுக்கு 2 லட்சம் செலவாகியிருக்கு. இதோ மெடிக்கல் பில் எல்லாம்.”

மீண்டும் அமைதி. “சரி இப்ப என்ன சொல்ல வர? நாங்க மூணு பேரும் ஷேர் பண்ணிக்கணும்னு சொல்ல வரியா?” பெண் லலிதா அமைதியைக் கலைத்தாள்.

“எங்களால இப்ப முடியாது. குழந்தைங்க படிப்பு அது இதுனு. நிறைய செலவு இருக்கு” – மூன்றாவது மருமகள்

“எங்களாலயும் இப்ப முடியாது.” இது இரண்டாவது மருமகள், மகன்.

“அப்ப நாங்க இப்ப 2 லட்சம் செலவு செஞ்சுருக்கோமே அதுக்கு என்ன சொல்லறீங்க? எங்களுக்கு மட்டும் செலவு இல்லையாக்கும்? பெரிய பையன் இன்னும் செட்டில் ஆகலை. அவன் படிப்பு செலவே ஒரு தொகை ஆகிருச்சு. அடுத்து ரெண்டு பேரு. ஏங்க சும்மா வாய மூடிட்டுருக்கீங்க. சொல்ல வேண்டியதுதானே." – இது மூத்த மருமகள் சுந்தரின் மனைவி.

“அண்ணி. அப்பாகிட்டயே சொல்லிடலாம். இத்தனை செலவாச்சுனு”

மீனாட்சியின் தேவைகளைக் கவனித்துவிட்டு எழுந்து வந்தவரின் காதில் இந்த உரையாடல்கள் விழவும், மீண்டும் உள்ளே சென்றார்.  பண விஷயம் பற்றிப் பேசப்பட்டது மீனாட்சியின் காதில் விழவில்லை என்பதை அறிந்து அவர் மனதில் ஒரு சமாதானம். நல்லகாலம் மருந்துகள் அவளை அசத்தியிருக்கிறது.

“சரி..பணத்தைப் பத்தி அவர்கிட்ட சொல்லிடலாம்.….அப்புறம்? இப்ப ரெகுலர் செக்கப்னு சொல்லிருக்காங்கல்ல. யாரு இவங்களை இங்க வைச்சுக்கறதாம்?”

மீண்டும் அமைதி.

“இப்படி இருந்தா எப்படி? ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆகணும்.” என்று லலிதா சொல்லவும் பெரிய மருமகள் முந்திக் கொண்டாள். 

“நான் வேலைக்குப் போயிட்டிருக்கேன். அதனால…..” என்று இழுத்தாள்.

இரண்டாவது மருமகளும், மூன்றாவது மருமகளும் அதே காரணத்தையும் இன்னும் ஏதோ பல காரணங்களையும் எல்லோரும் சொன்னார்கள்.

“அண்ணா, அப்ப யாரு பாத்துக்குவாங்க? பாவமில்லை?” - இது லலிதா.

“ஏன் நீ தான் கொண்டு வைச்சுக்கயேன்”

“என்ன அண்ணா இப்படிச் சொல்லற. நீங்க மூணு பேரும் இருக்கறப்ப பொண்ணு நான் கொண்டு வைச்சுக்கிட்டா நல்லாருக்காது. என் அத்தையும், மாமாவும் எங்கூடத்தானே இருக்காங்க”

“பொண்ணுனா அம்மா அப்பாவை பாத்துக்கக் கூடாதாக்கும்? மாப்பிள்ளை நீங்க இதுக்குப் பதில் சொல்லுங்க. நாங்க இப்ப எங்க பொண்டாட்டிங்களோட அம்மா அப்பாவை பார்த்துக்கலை?”

பதிலில்லை.

“அண்ணா ஊர்ல இருக்கற வீட்டை வித்துட்டு, இங்க நல்லதா நம்ம வீட்டுப் பக்கத்துலயே ஒரு வீடு பார்த்து வைச்சா?”

“இங்க வீட்டு விலையும் சரி, வீட்டு வாடகையும் சரி…உள்ள ரூபாய் அத்தனையும் போகும். கைவிட்டுப் போட வேண்டி வரும். அப்புறம் ஹாஸ்பிட்டல் செலவு யாரு பாப்பாங்க.? நீ கொடுப்பியா? உங்களுக்குத்தான் இன்னொரு வீடு இருக்குதே அதைக் கொடேன்”

உள்ளே சென்றிருந்த சுந்தரின் மனைவி, “ஏங்க கொஞ்சம் இங்க வரீங்களா? காப்பி கலந்திருக்கேன் எல்லாருக்கும்…” என்று கூப்பிட்டாள். கூப்பிட்டது காபி எடுத்துக் போக அல்ல என்பதும் சுந்தருக்குத் தெரியாதா என்ன?

“அத்தையையும் மாமாவையும் நாம பாத்துக்கிட்டா நாளைக்கு நாமதான் பாத்துக்கிட்டோம்னு ஊர்ல உள்ள வீட்டை நம்ம பேருக்கு மாத்திக்கலாம்ல. அதையும் இப்ப சொல்லிடுங்க …அப்படி இல்லைனா உயில் எழுதச் சொல்லுங்க”

“ம்”

சுந்தர் ஸ்னாக்ஸுடன் ஹாலுக்கு வந்தான். “நாங்க அம்மா அப்பாவை பாத்துக்கிட்டா அவங்க காலத்துக்குப் பிறகு அவங்க வீட்டை நாங்க எடுத்துக்குவோம்.”

மற்ற இரு மருமகள்களும், “அதெப்படி? எங்களுக்கும் அதுல பங்கு உண்டுல்ல?”

சுந்தரின் மனைவி காபியுடன் வந்தாள், “அத்தைக்குத்தான் ஒன்னுமில்லைல. அவங்க ஊர்லயே இருக்கட்டும்”

இப்படிப் பணம்தான் பேசப்பட்டதே ஒழிய அங்கு அம்மா அப்பா என்ற நேயம் எதுவும் பேசப்படவில்லை.

இன்று இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் வேதமூர்த்தியும், மீனாட்சியும்தான். பிள்ளைகள் எது கேட்டாலும் பணத்தினால் மட்டுமின்றி உடல் உழைப்பாலும் செய்து கொடுத்துவந்தனர்.

இப்போதும் கூட மீனாட்சிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது ஊரில் உள்ள மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் பெரிய மகனுடன் பேசி இங்கு வந்தனர். பில் பற்றி பேசியது மட்டுமே அவர் கேட்டது. அவர் உள்ளே சென்றுவிட்டதால் நல்லகாலம் இவர்களை வைத்துக் கொள்வதைப் பற்றி பேசியது வேதமூர்த்தியின் காதில் விழுந்திருக்கவில்லை.

பில் பற்றி பேசப்பட்டது கேட்காதது போல் ஹாலுக்கு வந்தார் வேதமூர்த்தி. 

“சுந்தர்! நான் கேக்கணும்னு நினைச்சேன். டென்ஷன்ல கேக்க விட்டுப் போச்சு. மெடிக்கல் பில் எவ்வளவு ஆச்சு?” வேதமூர்த்தி கேட்டதும் அனைவரும் ஸ்தம்பித்தனர்.

“எங்கிட்ட அமௌன்ட் பத்தி சொல்ல உங்களுக்கு மனசு ரொம்பக் கஷ்டப்படும்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் எவ்வளவோ செலவு இருக்கும். இந்தக்காலத்துல ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவாகுது. அதனால எவ்வளவு ஆச்சுனு சொல்லுப்பா”

சுந்தருக்கு கொஞ்சம் குற்ற உணர்வு வந்ததுதான். ஆனால் தனது மனைவியை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது. மெடிக்கல் பில்லை நீட்டியதும் வேதமூர்த்தி அதற்குச் செக் எழுதிக் கொடுத்தார்.

“அடுத்த செக்கப் தேதி டாக்டர் எழுதிக் கொடுத்துருக்காரா?”

“ஆமாப்பா. இதே தேதி அடுத்த மாசம்.”

“ஆனா, நான் பிள்ளைங்க எல்லாரும் ஊருக்குப் போறோம்.” இது சுந்தரின் மனைவி. முந்திக் கொண்டாள்.

“அதனாலென்னம்மா. நீங்க போய்ட்டு வாங்க”

“அப்பா நாங்களும் வெக்கேஷனுக்கு பிள்ளைங்கள கூட்டிட்டு ஊருக்குப் போறோம்பா.”

“இந்தச் சின்ன வயசுலதான் ஊருக்கு எல்லாம் போய்ட்டு வரமுடியும் போய்ட்டு வாங்கப்பா சந்தோஷமா”

இதென்ன இவர் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டாரா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி பேசுகிறாரா? என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அம்மாக்குத்தான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்களேப்பா. ஊர்லயே பாத்துக்கலாம். அப்புறம்….அப்பா அந்த வீடு அம்மா பேர்லதான் இருக்குல்ல? அம்மாக்கு ஒன்னுமில்லைதான்….இருந்தாலும்… உயில் எழுதிரலாமாப்பா?”

“……………………………………………………………..   எழுதிடலாம்.. நாளைக்கு ஊருக்குப் போக டிக்கெட் புக் பண்ணனுமே கிடைக்குமா”

“டிக்கெட் புக் பண்ணியாச்சுப்பா தத்கல்ல. நாளைக்குக் காலைல ட்ரெயின்…”

“…………………………………………………………………..”
ரயிலில் வேதமூர்த்தியின் மடியில் மீனாட்சி படுத்திருக்க, வேதமூர்த்தி முந்தைய நாள் நடந்த இத்தனையையும் வேதனையுடன் நினைத்தார். ‘நல்ல காலம் மீனாட்சிக்கு நேத்து பிள்ளைங்க பேசினது எதுவுமே தெரியாது. பாவம். மருந்து சாப்பிட்டதுல நல்ல தூக்கம்” மீனாட்சியின் தலையை வருடிக் கொடுத்தார்.

“எதுக்கு இப்பவே ஊருக்குப் போகணும். இங்க எல்லாரும் இருக்காங்கல்ல…மனசு தெம்பாயிடும்” என்று சொன்னவளை, “ஊர்ல வேலை இருக்குதுனு” சொல்லி எப்படியோ சமாளிச்சுக் கூட்டி வந்தாச்சு. இதோ இப்பவும் நல்ல தூக்கம் தான். எப்படி ஒரு நிம்மதியான தூக்கம்! தெரியாமலே போகட்டும். வேதனை என்னோடயே போகட்டும். இறைவா! எங்க குழந்தைங்கள தண்டிச்சுராதப்பா! அவங்க எல்லாருக்கும் நல்ல மனசைக் கொடு.. எனக்கு முன்னாடி மீனாட்சிய கூப்பிட்டுரு. அவளால இந்த வேதனை எல்லாம் தாங்கிட்டு தனியா இருக்க முடியாது. இல்லைனா எங்க ரெண்டு பேரையும் ஒரே சமயத்துல அழைச்சிடு.” வேதமூர்த்தி கண்ணை மூடிக் கொண்டு மீனாட்சியின் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.

வேதமூர்த்தியின் மொபைல் அடிக்கவும் பார்த்தால் பெரிய பேரன். 

“ஹை! தாத்தா! எப்படி இருக்கீங்க? பாட்டி எப்படி இருக்காங்க?”

“பரவால்லடா என் பேராண்டி... செல்லம். நீ எப்படி இருக்கடா?”

“நான் நல்லாருக்கேன் தாத்தா. நீங்க ஊருக்குப் போயிட்டுருக்கீங்கனு தம்பியும் தங்கச்சியும் அங்க நடந்ததெல்லாம் சொல்லிட்டாங்க. கவலைப்படாதீங்க. என் படிப்பு ஓவர். அடுத்த வாரம் லேண்டிங்க். நான் உங்க கூடத்தான் இருக்கப் போறேன். எனக்கு வேலை கிடைச்சதும் எங்கூடத்தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கப் போறீங்க. ஓகே? மற்றவை நேரில்! டேக் கேர் தாத்தா…”

வேதமூர்த்திக்கு மனமும் உடலும் பரவசமாகி பல வருடங்கள் குறைந்து இளமையானது போல் துள்ளியது. "இறைவா!" என்றவரின் கண்களில் நீர் பனித்தது.. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள மீனாட்சி எழுவதற்குக் காத்திருந்தார்.

----------கீதா

புதன், 3 ஜூலை, 2019

விவேகானந்தம் - குறும்படம்

அனைவருக்கும் வணக்கம்.

எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந்த நினைவு. ஆனால் தாமதமாகிவிட்டது. முகநூலில் பகிர்ந்திருந்தேன்.  பல பணிகள், பிரயாணங்கள், மகனின் மருத்துவக் கல்லூரி அட்மிஷன் மனதில் குழப்பங்கள் என்று நேரம் டைட்டாகச் செல்கிறது.

இதோ யுட்யூப் சுட்டி. மலையாள வசனங்கள் ஆங்கில சப்டைட்டிலுடன். விவேகானந்த கேந்த்ர படனம் என்ற கல்வி நிறுவனத்தை வளர்த்த ஒரு சிறந்த மனிதரைப் பற்றியது. நேரம் இருக்கும் போது பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளைப் பதியலாம்.

படத்தில் போதை மருந்து பற்றிய ஒரு உரை வரும் அதைப் பேசுபவர் தான் அம்மனிதர்  பாஸ்கர பிள்ளை சார்.  அவர் தான் இக்கல்வி நிறுவனத்தை நிறுவுபவர்.


மிக்க நன்றி

அன்புடன் துளசிதரன்

செவ்வாய், 4 ஜூன், 2019

விவேகானந்தம்


விவேகானந்தம்தயாராகிவிட்டது. அடுத்த வாரத்தில் முன்னோட்டக் காட்சி திரையிடப்படும் என்று நம்புகிறோம். அதன் பின் யுட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும். எல்லா நட்புகளும், நலன் விரும்பிகளும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படத்தைப் பார்த்து உங்கள் விலைமதிப்பற்ற கருத்துகளைப் பதிய வேண்டுகிறோம்.

இந்தப் படத்தில் நடுவில் தன் மனைவியுடன் இருப்பவர்தான் திரு கே ஆர் பாஸ்கர பிள்ளை. இப்படத்தின் ஹீரோ. கல்வி நிறுவனத்தை நிறுவுபவர். நிஜத்தில் உண்மையான கேரக்டரான அவரேதான் படத்திலும் தற்போதைய பகுதிக்கு வருகிறார்.

நான் இதுவரை எடுத்த எட்டு படங்களில், ஐந்து வரலாறு சார்ந்த படங்கள் மற்றும் இரண்டு தற்போதைய சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்தவை. ஆனால்விவேகானந்தம்”, வரலாற்றையும், தற்போதைய சமூகப் பிரச்சனையையும் உள்ளடக்கிய ஒன்று.

இக்கதை, அரசு உதவி பெற்று நடத்தப்பட்ட பள்ளி ஒன்றில் 1964 ஆம் வருடம் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த,  கே ஆர் பாஸ்கர பிள்ளை என்ற ஆசிரியரைப் பற்றியது. அவர், என்னைப் போன்ற இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் போன்றவர் அல்லர். சுவாமி விவேகானந்தாவைப் பின்பற்றுபவர் என்பதால் அவரது பொன்மொழியானஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை உழைமின்!” என்பதற்கு ஏற்ப தன் குறிக்கோளை அடையும் வரை அயராது உழைத்தவர். அவர் உருவாக்கிய கல்வி நிலைய வளாகத்துள் ஒரு மாணவன்/மாணவி தனது இருபது வருட கல்வியையும் தொடர்ந்து பெறமுடியும். அதாவது, எல்கேஜி யிலிருந்து மேல்நிலை பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி வரை பெற்று விடலாம். ஏறத்தாழ 7000 மாணவ மாணவிகள் இந்தப் படன கேந்தரத்தில் கல்வி பயிலுகின்றனர்.

ஆம்! மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வையுடனான அண்ணாமலை கல்வி நிறுவனங்கள், அழகப்பா கல்வி நிறுவனங்கள், விஐடி கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை ஸ்தாபித்தவர்களுக்கு நிகராகப் போற்றப்பட்டு என்றென்றும் நினைவில் வைத்திருக்கப்பட வேண்டியவர்.

தொடக்கப் பள்ளியைத் சொந்தமாக்கிய பின், 50 வருடங்களுக்குள், பல கல்வி நிறுவனங்கள் அடங்கிய ஸ்ரீ விவேகானந்தா படன கேந்த்ரா என்று தற்போது அறியப்படும் கல்வி நிறுவனத்தை தனது அயராத உழைப்பால் நிறுவி நிலை நிறுத்தியவர்.

இப்படம், அப்படி வளர்ந்த ஸ்ரீ விவேகானந்தா படன கேந்த்ரா வைப் பற்றிப் பேசுகிறது. கூடவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நிலவும் மிகப் பெரிய ஆபத்தான போதைப் பொருள் பற்றியும், அதிலிருந்து மாணவர்களை மீட்க சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது

அப்படியாக, இப்படம்விவேகானந்தம்”, அதன் வரலாறு மற்றும் தற்போதைய சமூகப் பிரச்சனையையும் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறது. நான் காணும் இவ்விரண்டைப் பற்றியும் கண்டபின் இது போல் உங்களிடம் பகிராமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் இப்படம். படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவிக்க மறந்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் யூட்யூப் சானல் Thulasidharan thillaiakathu https://www.youtube.com/channel/UCQ6LZoqGiZ_chztaUkuexlQமிக்க நன்றி அனைவருக்கும்!

அன்புடன்
துளசிதரன்

புதன், 22 மே, 2019

காலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்


கதையைக் குறித்து, எதிர்பாராத அன்பர்களிடம் இருந்து வரும் விமர்சனங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்வியப்பையும் ஏற்படுத்துகிறதுஅப்படியான ஓர் அழைப்பு ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ முநிரத்தினம் அவர்களிடமிருந்து வந்தது. 

பேராசிரியருக்கு எப்படி இப்புத்தகம் கிடைத்தது என்பதை அறிந்த போது மீண்டும் வியப்பும் மகிழ்ச்சியும். நம் பதிவர் நண்பர் திருப்பதி மகேஷ்தான் அவருக்கும் கொடுத்திருக்கிறார்.

திரு முனிரத்தினம் அவர்கள், (எஸ் வி) ஸ்ரீ வெங்கரேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வயது 73. தெலுங்கு அவரது தாய்மொழி என்றாலும்  தமிழும் நன்கு அறிந்தவர். தமிழிலும் அவர் எழுதுகிறார் என்பது மேலும் வியப்பைக் கூட்டியது. வியப்பிற்கும் மேல் வியப்புகள்.

தன் 13வது வயதிலேயே தான் எழுதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதுவரை 30 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 12, ஆய்வு மாணவர்கள், 8 எம்ஃபில் மாணவர்களுக்கு இவர் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.

இவர் தமிழில் எழுதியபேனா மரம்என்ற நூலை, மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தன் எம்ஃபில் ஆய்வுக் கட்டுரைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது இரு தெலுங்கு நூல்களை இரு மாணவர்கள் தங்களின் பிஹெச்டி ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இப்படிப் பல தகுதிகள் பெற்ற பேராசிரியர் ஒருவர் நான் எழுதிய புதினத்தை வாசித்து விமர்சனமும் செய்துள்ளார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க மிக்க நன்றி திரு முனிரத்தினம் சார்.

இதோ, எந்தத் திருத்தமும் செய்யப்படாத அவரது விமர்சனம் அவரது வரிகளில்.

நாவல் எனும் ஆங்கிலச் சொல்லிற்கு மாற்றாகப் புதினம் எனும் தமிழ்ச் சொல் வழங்கப்படுகிறது. இவ்விரு சொற்களுக்கும் புதுமை கொண்ட இலக்கிய வடிவம் எனும் பொருள் கொள்ளலாம். தமிழ் இலக்கிய உலகிற்கு புதினம் புதிதில்லை என்றாலும் அவ்வப்போது அதில் இடம் பெறும் புதுமைகள் மட்டும் புதியன. இத்தகையவற்றுள் காலம் செய்த கோலமடி புதினம் பல புதுமைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இதனை இயற்றியவர் திருவாளர் துளசிதரன்.

அவர் படைத்த புதினத்தில் மட்டுமின்றி, அன்பர் துளசிதரனிலும் சில தனிச் சிறப்புகள் காணலாம். அவரது தாய்மொழி மலையாளம் என்றாலும் அதன் தாக்கம் புதினத்தில் எங்குமே இல்லை. இந்தப் புதினத்தை1982 ல் ஆரம்பித்திருந்தாலும் 2015ல் முடித்திருக்கிறார். இவ்வளவு ஆண்டுகளும் கதைக்கருவைச் சிதையாமல் தாங்கி இருக்கிறார். புதினம் வாசிக்கும் போது பட்டிக்காட்டு வாழ்க்கையோடும் பட்டின வாழ்க்கையோடும் இவருக்கு இருக்கும் தொடர்பு புலனாகிறது. இவரில் இருக்கும் ஆசிரியர் அவ்வப்போது தலை தூக்கிக் காட்டும் பாங்கு ஆங்காங்கே வெளிப்படுகிறது. மொத்த்த்தில் துளசிதரன் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை மறுப்பிற்கிடமின்றி நிரூபித்துவிட்டார் என்று அழுத்தம் திருத்தமாக அறுதியிட்டுக் கூறலாம்.

காலம் செய்த கோலமடி எனும் தலைப்பு இப்புதினத்திற்கு பொருத்தமாகவே அமைந்துவிட்ட்து. புதினத்தில் வரும் பாத்திரங்கள் மட்டுமின்றி வாசகர்கள் கூட சற்றும் எதிர்பார்க்க முடியாத வண்ணம் பல சம்பவங்கள் புதினத்தில் இடம் பெற்றிருக்கின்றன. கதைத் திருப்பங்களும் அப்படித்தான். யாருடைய முயற்சியுமின்றி இவ்வாறு நிகழ்ந்தால் இது காலத்தின் விளையாடல் என்றே கருத்த் தோன்றுகிறது. மேலும், “என்னைச் சொல்லிக் குற்றமில்லை உன்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடிஎன்ற திரைப்படப் பாடலில் வரும் சிறந்த வரிகளை ஆசிரியர் புதினத்தில் தலைப்பாக வைத்துள்ளார். இந்தப் பாடலை கோபால் மதுரைக்குச் செல்லும் வழியில் ஆசிரியர் ஒலிக்க்ச் செய்திருக்கிறார். இது சிறப்பாக உரியவாறு அமைந்துவிட்டது.

புதினம் முழுவதும் தன்னிலையில் பின்னப்பட்டிருக்கிறது. துரைராஜ், லதா, கோபால் ஆகிய பாத்திரங்களைக் கொண்டே ஆசிரியர் புதினத்தைச் செவ்வனே முடித்துவிட்டார். இது கு. ராஜவேலு எழுதியகாதல் தூங்குகிறதுஎன்ற புதினத்தை நினைவுபடுத்துகிறது. அதில் கூட ஆசிரியர் பாத்திரங்களைக் கொண்டே கதை ஓடச் செய்திருப்பார்.

தற்காலச் சூழலை புறம் தள்ளிவிட்டு எந்த எழுத்தாளராலும் எழுத முடியாதென்றால் அது மிகையாகாது. ஆனால், அந்தச் சூழலைச் சரியாகப் படம்பிடித்துக் காட்டுவதில்தான் எழுத்தாளரின் திறமை அடங்கி இருக்கிறது. காலம் செய்த கோலமடி புதினத்தில், காலம் மிக நன்றாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. காமத்தின் வெறியாட்டம் பட்டிக்காடு பட்டணம் என்ற பாகுபாடில்லாமல், படித்தவன், பாமரன் என்ற வேற்றுமைக்கிடமின்றி எங்குமே நிலவுகிறது. இதை ஆசிரியர் கோபாலின் சொந்த ஊரிலும் மதுரைக் கோவில் உட்பட வர்ணித்திருக்கிறார். கல்லூரி நிகழ்ச்சிகள் இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய விசயத்தைக் கூட ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. புதினம் படிக்கும் போது அந்தந்த நிகழ்ச்சிகள் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன. நாமே அந்த இடத்தில் இருப்பதாக பிரமை தட்டுகிறது. இதைவிட எழுத்தாளர் திறமைக்கு வேறு என்ன அத்தாட்சி தேவைப்படுகிறது?

துரைராஜ், கோபால் ஆகியோரைக் காட்டிலும் கற்பு விசயத்தில் லதா மேன்மையாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். கணவன் மறுமணம் செய்து கொண்டாலும் பொறுத்துக் கொண்டு தன் தவறை மட்டும் கருத்தில் கொண்டு காலம் தள்ளும் பாங்கு நன்கு அமைகிறது. ஜெயலட்சுமியும் தன் கடமையை செவ்வனே செய்து தன் ஆசிரியரின் முதல் மனைவியிடமும் சபாஷ் வாங்கும் பாங்கு பாராட்டிற்குரியது. காலத்தில் வரும் திருப்பங்கள், தீர்ப்புகள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை சோலையாக்கிக் கொள்ளப் பார்க்க வேண்டுமே ஒழிய பாலையாக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான் ஆசிரியர் வாசகர்களுக்கு வழங்கும் செய்தி.

புதினத்தின் இறுதி கூட முதுமையாகவே அமைந்திருக்கிறது. துரைராஜ் லதாவை தனது தங்கையாக கண்டுபிடித்த பிறகு அவரை விட்டுவிட்டு ஜெயலட்சுமியை மறுமணம் செய்து கொள்கிறார். தனியாக விடப்பட்ட லதா கூட, கோபாலை மணந்து கொண்டு புதிய இல்லற வாழ்க்கையைத் தொடங்குகிறாள். ஒரு பிரச்சனை வரும் போது வருத்தத்துடன் இருந்துவிடாமல் ஏற்றத் தீர்வைக் கண்டுபிடித்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

இந்தப் புதினத்தைப் படைத்த திரு துளசிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இத்தகைய பல புதினங்கள் சுருக்கமாகவும், உருக்கமாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் அவரது பேனாவிலிருந்து வெளிவர வேண்டுமென்று தமிழ் இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது.

திரு முனிரத்தினம் ஐயா அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - துளசிதரன்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

விவேகானந்தம்


ராகுல் ரஞ்சித்தின் புத்தகமாகிய “Confession of a drug Addict”  01-05-2019 அன்று, பாலேமாடு, ஸ்ரீ விவேகானந்தா அரங்கத்தில் வெளியிடப்படும் நிகழ்விற்கு எல்லோரையும் மகிழ்ச்சியுடன் வர வேற்கிறோம்.


ராகுல் ரஞ்சித், “விவேகானந்தம்” எனும் எங்கள் எட்டாவது குறும்படத்தில் ஒரு கதாபாத்திரம். இப்புத்தகம், கல்வி நிலையங்களை, போதைப் பொருள் மாஃபியாவிடமிருந்து விரைவில் விடுவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பேசும் புத்தகமாகும்..

மிகப் பெரிய தொலைநோக்கு பார்வை கொண்டவரும், ஸ்ரீ விவேகானந்தா படன கேந்திரத்தின் ஸ்தாபகரான திரு கே. ஆர். பாஸ்கர பிள்ளை அவர்களைப் பற்றிய கதையே இக் குறும்படம் “விவேகானந்தம்”

அவர் எவ்வளவு வெற்றிகரமாக விவேகானந்த படன கேந்திரத்தின் கல்வி நிலையங்களான எஸ்விஎல்பிஎஸ் (SVLPS), எஸ்விஹெச்எஸ் (SVHS), எஸ்விஹெச்எஸ்எஸ் (SVHSS), எஸ்விவிஹெச்எஸ்எஸ் (ESVVHS), எஸ்விபிகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்வி ஆசிரியர் கல்விக் கல்லூரி, எஸ்விபிகே ஆசிரியர் பயிற்சி கல்வி நிலையம், எஸ்வி சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்வி நிலையம் மற்றும் எஸ்வி ஆங்கிலப் பள்ளி எல்லாவற்றையும் ஸ்தாபித்து நிறுவுகிறார் என்பதைப் பற்றிச் சொல்லும் படம்.

1964 ஆம் வருடத்திலிருந்து இத் தனித்தன்மை வாய்ந்த கல்வி நிறுவனத்தின் ஆசி பெற்ற மற்றும் இப்போதும் ஆசி பெற்று வரும் அனைவரும் தவறாது  வந்து இந்த அரிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை வாழ்த்தும் உங்களின் வருகை கண்டிப்பாகப் படம் பிடிக்கப்பட்டு “விவேகானந்தத்தின்” நினைவுகளில் பதியப்படும்.

முதல் நாளான புத்தக வெளியீட்டோடு உங்கள் பங்கும், வாய்ப்பும் முடிந்துவிடும் என்று எண்ணிவிட வேண்டாம். வானமே எல்லை. அதன் பின்னும் கூட உங்களது பொன்னான வாய்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். “விவேகானந்தத்துடன் தொடர்புடைய உங்கள் அனுபவங்களை உங்கள் உறவுடகளுடன், நட்புகளுடன், வாழ்த்தும் நல் உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 1964 ஆம் ஆண்டிலிருந்து “விவேகானந்தா” வின் கீழ் ஆசி பெற்ற அனைவரையும் இந்த “விவேகானந்தம்” இணைக்கட்டும். சாதி, மதம், இனம் என்ற எல்லா சுவர்களையும் தகர்த்தெறியும் “நாம்” என்ற உணர்வு எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்திருக்கட்டும்.

குறும்படத்தின் படப்பிடிப்பு 2019, மே 1, 2, 3 ஆம் தேதி வரை பாலேமாடு, எடக்கரா மற்றும் பூக்கோட்டும்பாடம் பகுதிகளிலும் சுற்றியும் நடைபெறும். படம் பிடிக்கப்பட்டு அதன் படத்தொகுப்பு வேலைகள் எல்லாம் முடிந்ததும், முன்னோட்டக் காட்சியாகத் திரையிடப்படும். பின்னர், 2019, ஜூன் இறுதியில் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும்.  

ஆகவே, “விவேகானந்தம்” வெற்றிபெற உங்கள் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் வேண்டுகிறோம். இவ்வளாகத்தில் வாழ்ந்து அதை நேசித்த எல்லோருக்கும் உரித்தானது. இதற்கு பண உதவி எதுவும் தேவையில்லை. இதற்கு அரசியல் ஆதாயமும் கிடையாது. உங்களின் ஆளுமைத் திறனையும் அறிவையும் வளர்த்த “விவேகானந்தா” எனும் இக்கல்வி நிறுவனத்தை நினைவு கூர்ந்து அதன் தொடர்பான உங்களது பசுமையான நினைவுகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் விருப்பம்.


-------துளசிதரன்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019


எபியில் வெளியான கதை இங்கு வலைத்தளத்தில் சேமிப்பிற்காக. தலைப்பு சுட்டிக்குச் செல்லும் அது போல எபியில் என்பதும் சுட்டி லிங்க்.

மின்சாரம் வந்த அந்த நேரத்தில் எல்லோரும் டிவியின் முன்னால். 

“அம்மா வா! ஜெய்சலுக்கு மந்திரி பொன்னாடை அணிவிக்கறத பாக்கலாம்” என்று மகள் வீணா சொன்னதும் தரையைத் துடைத்துக் கொண்டிருந்த நான் ஓடினேன். டிவியில் சிரித்த முகத்துடன் ஜெய்சல். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற ராணுவ வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், வீர இளைஞர்கள் இவர்களுடன் மீனவ சேனையினரும் இறங்கி இரவு பகல் பாராது தொண்டாற்றிய போது, மீட்க வந்த படகில் ஏற முடியாது தவித்த பெண்களுக்குத் தன் உடலைப் படியாக்கிய கோர்மேன் கடற்கரைக்காரைவாசியான ஜெய்சல். சாதி, மதம், இனம், மொழி, பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் 3314 கேம்ப்களில் தங்கியிருக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 லட்சம் மக்கள்-----ஹெலிகாப்டர்லிருந்து இடப்படும் உணவு, உடை மற்றும் நீருக்கு மொட்டை மாடிகளில் காத்திருக்கும் மனிதர்கள்-----படகுகளில் செல்வோர் எறியும் ரொட்டிக்கும், தண்ணீர் பாட்டிலுக்கும் பாதி முங்கிய வீடுகளில் கூரைகளிலும், மாடிகளிலும் காத்திருக்கும் மனிதர்கள்.

டிவியில் காண்பிக்கப்படும் இக்காட்சிகளுக்கு இடையே ஒரு முகம்! கழுத்தில் லைஃபாய் இட்டு, கயிற்றைப் பிடித்தபடி போலீசார் உதவியுடன் கழுத்தளவு தண்ணீரில் நடந்து படகில் ஏறுவது யார்?! சுனில்?!......ஆம் சுனிலேதான்!......ஐம்பதை தாண்டினாலும் கடந்த 30 ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்ததாலும் முப்பதாண்டுகளில் உடலில் வந்த மாற்றங்கள் சுனிலை மொத்தமாக மாற்றியிருந்தது. என்றாலும் சுனிலுடனான 8 மாதக் கால உறவு அவ்வளவு வலுவானது. சுனிலை மரணம் வரை மறக்கவே முடியாது. கண்மட்டுமல்ல மனதும் இதயமும், ஆத்மாவும். திடீரெனத் தோன்றி மறைந்த அந்த ஒரு நொடியில் சுனிலை அடையாளம் கண்டு கொண்டன. சிலையாய் நின்ற எனக்கு டிவியில் தோன்றுவது மட்டுமல்ல கணவரும், மகளும், மருமகனும், மகனும், மருமகளும், பேரனும் பேத்தியும் பேசியது கூடக் கேட்கவில்லை.

30 ஆண்டுகளுக்கு முன்னால் எர்ணாகுளம் கச்சேரிப்படி சார்ட்டார்ட் அக்கவுண்டண்ட் வர்கீஸ் சார் ஆஃபீசில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாள் தனியே ஆஃபீஸில் அமர்ந்திருந்த போது உள்ளே வந்த சுனில் “என்ன? யார்” என்கின்ற தொனியில் தலையை மேலும் கீழும் ஆட்டியதும், எழுந்து

“என் பேர் சுமதி. நேத்துத்தான் ஜாய்ன் பண்ணினேன்” என்றேன்.

“ஓ! ஓகே ஓகே” என்றபடி சிரித்துக் கொண்டு எனக்கு எதிரே இருந்த, முன்னால் இரண்டு செயர்களைக் கொண்ட கொஞ்சம் பெரிய டேபிளைக் கொண்ட செயரில் அமர்ந்த அந்த சுனிலை பார்த்ததுமே ஏதோ உள்ளுக்குள் எனக்கு நீண்டகால உறவு உள்ளது போல் தோன்றியது. இடையிடையே பார்த்த போதெல்லாம் சுனிலும் என்னைப் பார்த்ததால் நான் தடுமாறுவதைக் கண்ட சுனிலின் சிரிப்பு இப்போதும் மனதில் பசுமையாய் நிற்கிறது.

மதியம் சாப்பிட்ட பின் வருட வாரியாக டெபிட் மற்றும் க்ரெடிட் கௌண்டர் ஃபாய்ல் அடங்கிய புக்கை அடுக்கிக் கொண்டிருந்த போது திடீரென சுனில் என்னருகே வந்ததும் பதறிப் போனேன். ஒரு கேஷ் புக்கையும் ஒரு பண்டில் ரெசிப்ட்டுகளையும் தந்து கௌண்டர் செக் செய்யச் சொன்னார். ஒரு பென்சிலால் கேஷ் புக்கில் ‘டிக்’ இடவும் சொன்னார். வேலையைத் தொடங்கினேன். ரசீதுகளில் இனி மூன்று மட்டும் பாக்கி. அதில் மூன்றாவது ரசீதைக் கண்ட நான் திடுக்கிட்டேன். அதில் “அழகே உன் பெயர் என்ன” என்று எழுதியிருந்தது. பதற்றத்துடனும் பயத்துடனும் சுனிலை பார்த்தேன். சுனில் சிரித்தபடி தலையை ஆட்டி “கம் ஆன்” என்றார். நான் சிறிதாக சுமதி என்று எழுதி வெட்டினேன். பதற்றத்தில் ரொம்ப நேரம் குழம்பி செய்வதறியாது திணறினேன்.

“என்ன கம்ப்ளீட் பண்ணலையா”

“இல்ல முடிஞ்சுச்சு” என்று இரண்டையும் கொடுத்தேன்.

ஐந்து மணிக்குக் கிளம்பிய சுனில் என்னருகே வந்து,

“சுமதி, அஞ்சு மணி வரைதான் ஆஃபீஸ். இனி நாளைக்கு. ஓகே?” என்று சிரித்தபடி சென்றார். என் கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சிரித்தபடி பேசிய அந்த நொடியில், எப்படியோ ஏனோ அந்தக் கண்களும் முகமும் மனதில் பதிந்துவிட்டது. வீடு செல்லும் வழியிலும், சென்ற பின்பும் மனம் அவரையே நினைத்துக் கொண்டிருந்தது. அடுத்த நாள், நான் கண்ணாடி முன் நின்று உடையை சரி செய்த போது என் தம்பி சுரேஷ்,

“என்ன இன்னிக்கு எப்பபாரு கண்ணாடி முன்னாடியே நின்னு அழகு பாத்திட்டிருக்க?” என்றதும்தான், என் செயல்கள் அன்று மற்றவர்களுக்கு வித்தியாசமாகப் படுவதைப் பற்றி உணர்ந்தேன். பார்த்ததும் ஏன் அப்படி அவர் என் மனதில் புகுந்தார்? அந்த வயதில் என் மனதில் அப்படித் தோன்ற என்ன காரணம் என்று தெரியவில்லை. சுனிலின் கவர்ச்சிப் புன்னகையா? காந்தக் கண்களா? நெற்றியில் விழுந்து கிடக்கும் ஒற்றைக் கற்றைத் தலை முடியா? அல்லது இவை எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமான கவர்ச்சியா? தெரியவில்லை. என் மனதிடம் மீண்டும் மீண்டும் பல முறை கேட்டேன். ஏன் என் மனம் இப்படி அலைகிறது? சுனிலைப் பற்றி நினைக்கிறது? இதுதான் இதுவரை என்னுள் தோன்றாதிருந்த காதலா? சுனிலை பற்றி ஒன்றும் அறியாததால் இப்படி எண்ணங்களைத் தான்தோன்றித்தனமாய் அலைய விடுவது சரியல்ல என்று என் அறிவு அவ்வப்போது எச்சரித்தாலும் மனம் சுனிலையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஆஃபீஸுக்குச் செல்லும் வழியிலெல்லாம் கண்களும் மனதும் சுனிலைத் தேடியது. சுனிலின் சீட் காலியாக இருந்தால் மனது பதறியது. இன்று லீவாக இருக்குமோ? கொஞ்சம் லேட்டாக வந்த சுனிலைக் கண்டதும் ஹப்பாடா என்றிருந்தது. அடுத்த ஐந்தே நிமிடத்தில் சுனில் என் முன் முந்தைய நாள் செய்தது போல் ஒரு கேஷ் புக்கையும், ஒரு கட்டு ரசீதுகளையும் தந்து

“நேத்து செய்ததோட கண்டினியுவேஷன். ஒகே?” என்று சிரித்துச் சென்றதும் மனதுக்கு இதமாய் இருந்தது. சந்தேகித்தது போல் ரசீதுகளுக்கிடையில் எட்டாய் மடித்து வைக்கப்பட்ட பேப்பர். நடுங்கும் கைகளுடன் அதை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்த பின், குனிந்து இடது கால் பாதத்திற்கும், செருப்பிற்கும் இடையில் திணித்தேன். மனது வேலையில் ஈடுபட முடியாமல் தவித்தது. இடையே சுனிலை பார்த்தேன். சிரித்து தலையை ஆட்டி.

“கம் ஆன்” என்றார். பதினைந்து நிமிடத்திற்குப் பின் மெதுவாக பாத்ரூம் சென்று கடிதத்தை எடுத்து வாசித்தேன். என் மனதில் என்னென்ன சிந்தனைகளோ அது சுனிலின் மனதிலும் இருக்கிறது என்பது கடிதத்தை வாசித்ததும் விளங்கியது. நான் காந்தம் போல் இழுக்கிறேனாம்.. சுனிலுக்கும் தூக்கமில்லையாம். நிறைய பேச வேண்டுமாம். மாலை ஆஃபீஸ் முடிந்ததும் எம் ஜி ரோடு வழியாக மெதுவாக நடந்து போகவேண்டும் என்பதை வாசித்ததும் பதற்றத்துடன் வெளியே வந்ததும் பாத்ரூமுக்கு வெளியே சுனில். உள்ளே நுழையும் முன் மெதுவாக “ஈவ்னிங்க். ஓகே?” என்று சொன்னதும் உடல் நடுங்கியது.

அன்று நான்கைந்து முறை கேஷ் புக்கும், ரசீது கட்டுகளும் சுனில் தந்தார். ஒவ்வொரு முறையும் எங்கள் விரல்கள் தாராளமாக உரசிக் கொண்டதால் பரவசப்பட்டுக் கொண்டிருந்தோம். மாலை பத்மா தியேட்டர் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். ஒரு ஆட்டோ அருகில் வந்து நின்றது. உள்ளே சுனில்.

“வா! சுமதி. ஏறிக்கோ” என்றதும் ஏறினேன். சௌத் ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோ நின்றது. எனக்கு மனசு படபடத்தது. சுனில் ஏன் என்னை ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்? குழம்பினேன். ஸ்டேஷன் நோக்கி நடந்த போது,

“ஆறு மணிக்குள்ள வீட்டுக்குப் போகணும்” என்றேன்.

“ஒரு ஹாஃப் அன் ஹவர் ஃப்ரீயா ப்ளாட்ஃபார்ம்ல உக்காந்து பேசுவோம்” என்று சொல்லி இரண்டு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் எடுத்த பின் ஆளில்லாத ஒரு ப்ளாட்ஃபார்ம் பெஞ்சில் அமர்ந்து பேசினோம்………………..

மகன் வினோத் என்னிடம், “அம்மா! என்ன நான் சொன்னது காதில் விழலையா? சுரேந்திரன் சார் வீட்டில் வாலண்டியர்ஸ் க்ளீனிங்க் முடிச்சுட்டு, நம்ம வீட்டுக்குத்தான் வருவாங்க. கிச்சன்ல இருந்து எல்லாத்தையும் மாத்தியாச்சா?”

“…ம்ம் எல்லாம் ஆச்சுடா” என்றபடி சமையலறையை நோக்கி நடந்தேன்.

களமசேரி பெரிங்கழாவில் 17 ஆம் தேதி இரவு வயல்களுக்கு அருகிலிருந்த வீடுகளில் மழை நீர் ஏறத் தொடங்கி சிறிது சிறிதாக நீர்மட்டம் உயரத் தொடங்கியது. சரிவான சிறு குன்றில் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தாழ்வாக இருந்த சுரேந்திரன் சாரது வீட்டிற்குள் 18 ஆம்தேதி இரவு வெள்ளம் ஏறியதும் வீணாவின் காக்கநாடு விட்டுக்கு எல்லா பொருட்களையும் கட்டில் மேலும், மேசை மேலும் மாடியிலும் வைத்த பின் போய்விட்டோம். இன்று காலைதான் வீட்டை அடைந்தோம். நாளை, 24.08.2018 ஆம் தேதி ஓணம் என்பதால் இன்று வீட்டைக் கழுவி சுத்தமாக்கும் வேலையில் இருந்தோம். ஓரளவு முடியும் தருவாயில் மின்சாம் வர கேபிளும் வந்தது. எல்லோரும் டிவியின் முன். நான் மீண்டும் சமையலறை தரையைத் துடைக்கும் வேலையைத் தொடங்கினேன்.

மனம் மீண்டும் சுனிலைப் பற்றிய எண்ணங்களில் உழன்றது. அன்றைய முதல் சந்திப்பிற்குப் பின் எத்தனையோ சந்திப்புகள், எட்டுமாதக்காலங்களில். ஐந்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன சுனிலுக்கு என்னை மணமுடிக்க உண்மையிலேயே ஆசை இருக்கத்தான் செய்தது. அப்பாவையும் அம்மாவையும் பார்த்துப் பேச நான் அழைத்த போது வீட்டுக்கு வந்த சுனிலிடம் பேசிய போது வேறு சாதி என்பது தெரிந்தும் இருவரும் அப்போது பிரச்சனைகளேதும் பண்ணவில்லை. அம்மா சுனிலிடம்,

“இவ அக்காக்கள் ரெண்டு பேருக்கும் 15 பவுன் நகைதான் போட்டோம். இவளுக்கும் எங்களால அவ்வளவுதான் செய்ய முடியும்” என்று கூடச் சொன்னார். ஆனால் என் மூத்த அக்கா சுனிதா மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்தாள். “வேறு சாதி பையன் வேண்டாம்”. அந்த எதிர்ப்பு சிறிது சிறிதாகப் படர்ந்து எல்லோரையும் பற்றிக் கொண்டது. இதனிடையே நானும் சுனிலும், கொச்சின் யுனிவர்சிட்டி, ஹெச் எம் டி என்று பல இடங்களில் சுனிலின் ஸ்கூட்டரில் சுற்றினோம். சுபாஷ் பார்க்கில் சந்தித்தோம். “வரவேற்பு”, “ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்க்” படங்களுக்குக் காலைக்காட்சி சென்று காதல் காட்சிகளின் போது கைகளில் முத்தமிட்டுக் கொண்டோம்.

என் மூத்த அக்கா சுனிதா அவளது கணவரின் தூரத்து உறவான ஒரு மிலிட்டரிக்காரனை என் கணவராக்க எடுத்த முயற்சி வெற்றி காணும் தருவாயில் இருந்ததால், என் பெற்றோர் டிசம்பர் மாதம் முதல் வேலைக்குப் போக வேண்டாம் என முடிவு செய்துவிட்டனர். என்னைக் காணாமல் சுனில் வீட்டிற்கு ஃபோன் செய்த போது அக்கா சுனிதா,

“இந்தக் கல்யாணம் நடக்காது. எங்க சாதிப்பையனுக்குத்தான் சுமதியைக் கொடுப்போம்” என்று சொல்லிவிட்டாள். மீண்டும் பல முறை சுனில் ஃபோன் செய்த போதெல்லாம் “சுமதி இல்லை” என்ற பதில்தான். இடையே விரிவாக நான் ஒரு கடிதம் சுனிலுக்கு எழுதினேன். ஏதாவது சாக்கு சொல்லி இடையே சுனிலை ஓரிரு முறை சந்திக்கவும் செய்தேன்.

ஒரு முறை சுனிலை சந்தித்து பிரியும் போது சுனில் என் பீரியட்ஸ் பற்றி கேட்டதும். “போன மாதம் 27…ஏன்?” என்றதும்

“வர்ற 21 ஆம் தேதி வியாழன் ஆலுவா மணப்புறம் கோவிலுக்குப் போவோம்” என்றதும் “சரி” என்றேன்.

“அன்னிக்கு சாரி போதும். வேற ட்ரெஸ் வேண்டாம்” என்று சுனில் சொல்ல சரி என்றேன்.

21.9.1989, காலை 9 மணி. தோழியைக் காணப் போகிறேன் என்று பொய் சொல்லி வீட்டிலிருந்து வெளியேறினேன். சுனிலுக்காக நார்த் பஸ்டாண்டில் காத்திருந்த போது சுனில் ஸ்கூட்டரில் ஒரு சூட்கேஸோடு வந்தார். ஆலுவா ரயில்வே ஸ்டேஷனில் பார்க் செய்தபின் அருகிலிருந்த கடையிலிருந்து 75 ரூபாய்க்கு ஒரு லேடிஸ் பேக் வாங்கித் தந்தார். உன்னோட ஏதாவது ஒரு ஃப்ரென்ட் கொடுத்த கிஃப்ட்நு வீட்டில சொல்லிக்க என்றபடி கேஎஸ்ஆர்டிசி ஸ்டாண்ட் அருகே உள்ள ஆரியபவனுக்குள் நுழைய நானும் பின் தொடர்ந்தேன். கேபினுள் அமர்ந்து உளுந்து வடை வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது,

“சுமதி! இதுக்கு மேல அரோமா லாட்ஜ் இருக்கு. ஒரு ரூம் எடுத்து ஃப்ரீயா பேசுவோம். ஒரே வெயில்” என்றார்.

“ஐயோ லாட்ஜுக்கா?!... அப்ப கோயில்?....ஐயோ முடியாது. இல்ல…. வேண்டாம்”

உடனே, சுனில், என் கைகளைப் பிடித்து, “ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சத் தொடங்கினார்.

“ரிசப்ஷன்ல டென்ஷன் இல்லாம கூலா நிக்கணும். ஹஸ்பண்ட் வைஃப் மாதிரி. ஓகே?” என்றபடி நடந்த சுனிலை நான் பின் தொடர்ந்தேன். பயப்பட ஒன்றுமில்லை. சுனிலுடன் தானே’ என்று நினைத்துக் கொண்டேன்.

“மெட்ராஸ் மெயிலுக்குப் போனும். எய்ட் ஹவர்ஸ் மேல இருக்கு அதான். ரூம் ரொம்ப மேல வேண்டாம்” என்று சுனில் நடிக்க, நானும் யாரையும் கவனிக்காமல் சுவற்றில் மாட்டியிருந்த ஈஃபில் டவர் படத்தைப் பார்த்தபடி நின்றேன். ரூம்பாய் அறையைத் திறந்து விட்டுப் போனதும், சுனில் சூட்கேஸிலிருந்து கைலி மற்றும் துண்டை எடுத்து ஆடை மாற்றி பாத்ரூமுக்குள் நுழைந்தார்.

கதவு தட்டும் சப்தம்! பயந்தபடி கதவைத் திறந்தேன். ரூம்பாய். ஜக்கில் தண்ணீருடன்.

“ஜூஸ், ட்ரிங்க்ஸ் ஏதாவது வேணுமா?”

“அவர் பாத்ரூமில இருக்கார். வந்ததும் சொல்றேன்” என்றேன் பதற்றமில்லாமல்.. வெளியே வந்த சுனில்,

“நீ ரிஃப்ரெஷ் பண்ணனுமா?”

“இல்ல வேண்டாம். அப்புறம்….. அந்த ரூம் பாய் ஜூஸ் வேணுமானு கேட்டாரு”

“உனக்கு வேணுமா?”

“வேண்டாம்”

சுனில் சட்டையை அவிழ்த்து கதவின் ஹாண்டிலில் தொங்கவிட்டார். நான் ஏன் என்பது போல் பார்த்ததும்,

“அதில் ஒரு துவாரம் இருக்கு. நம்ப முடியாது. ஒளிஞ்சு பார்ப்பானுங்க” என்றபடி அருகே வந்து கைகளைப் பிடித்து கட்டியணைத்தார். முகமெங்கும் முத்தமழை. திடீரென கதவு தட்டப்படும் சத்தம். கதவைத் திறந்ததும்

“சார் ஏதாவது குடிக்க ட்ரிங்க்ஸ்?” மீண்டும் ரூம்பாய்.

“வேண்டாம்” என்றபடி கதவைச் சாத்திய பின் சுனில்,

“சுமதி காட்டன் சாரி கசங்கிடும். அவிழ்த்து அந்தச் செயர்ல வை” என்றதும் தயங்கிய என்னிடம் கெஞ்சி அவிழ்க்க வைத்துவிட்டார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என் பயமும் விலக, இவருடன் தானே வாழப் போகிறோம் என்ற எண்ணமும் வர, எதிர்ப்பேதும் சொல்லாமல் அடுத்த இரண்டு மணி நேரம் எதிர்காலத்தைப் பற்றி பேசியபடி இரு முறை இணைந்தோம். 12 மணிக்கு இருவரும் ஷவரில் ஒன்றாய் குளித்தோம். ஆரியபவனில் சாப்பிட்டபின் கேஎஸ்ஆர்டிசி ஸ்டாண்டிலிருந்து எர்ணாகுளம் ஃபாஸ்ட் பாசஞ்சரில் என்னை ஏற்றிவிட்டார்.

சுனில் அதன் பின் என்னை கூப்பிடவே இல்லை. அடுத்து வந்த நாட்களில் ஆஃபீஸுக்குக் கூப்பிட்ட போதெல்லாம் சுனில் இல்லை என்ற பதில். புழுவாய்த் துடித்தேன். சுனில் என்னை ஏமாற்றிவிடுவாரோ? வீட்டு முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரமாக இருந்ததால் நான் எடுத்தேன்.

“நான் பயந்தே போனேன். ரெண்டு நாள் டிலே! நான் வேண்டாத கோயில்கள் இல்ல. உறக்கமும் இல்ல. இன்னிக்குத்தான் ஆச்சு. இப்பத்தான் உயிர் வந்துச்சு. எங்க போயிட்டீங்க? ஏன் என்ன கூப்பிடலை. சொல்லிருந்தேனே பகல் 11-12 மணிக்கு இடையில கூப்பிடுங்கனு…இப்ப கூப்பிட்ட மாதிரி…”

“எனக்கு உன்னைப் போல பயமெல்லாம் இல்லவே இல்லை சுமதி. 21 ஆம் தேதி எல்லாம் சேஃப் பீரியட்தான்…”

என் முகத்தில் பளார் என்று அறை விழுந்தது போல் இருந்தது. சுனில் திடீரென என் முன் ஒரு வில்லன் ஆவது போல் தோன்றியது. சுனில் ஏதேதோ சொல்ல, நான் பதிலேதும் சொல்லாமல் ரிசீவரைப் பிடித்துக் கொண்டு நின்றேன். சுனில் நான் நினைத்தது போல் அல்ல. கண்ணிங்க் அண்ட் ஹிப்போக்ரைட்.

அம்மா எப்போதும் சொல்லும் வார்த்தைகள் என் காதில் முழங்கியது. “நீ நினைக்கற மாதிரி இல்ல சுனில் எல்லாம். உன்ன கல்யாணம் பண்ண மாட்டான். நம்பாதே! உன்ன ஏமாத்திருவான். அவன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இரு. பெண்கள் இலை போல. ஆண்கள் முள்ளு மாதிரி. இலை முள்ளு மேல் பட்டாலும் முள்ளு இலை மேல் விழுந்தாலும் இலைக்குத்தான் சேதம்.”

“சுமதி! என்ன மௌனம்? அடுத்த மாசம் 18 ஆம் தேதி வியாழக் கிழமை சோட்டாணிக்கரை போவோம் ஓகே? எனக்கு எப்பவும் உன் நினைவுதான். சரி நான் நாளைக்குக் கூப்பிடறேன் இதே டைம் ஓகே?”

ஆண்கள் ஆண்கள்தான் பெண்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு போக வஸ்துதான். மனைவியாகும் முன் பெண்கள் ஆண்களுக்கு அடி பணியவே கூடாது. அதன் பின் ஓரிருமுறை சுனில் கூப்பிட்ட போது, சுனிலின் மனதை அறிய நான் கல்யாணப் பேச்சை எடுத்த போதெல்லாம், “நான் ரெடி ஆனா உங்க அக்கா சம்மதிக்கணுமே!” என்று சொல்லி உடனே அடுத்த சந்திப்புக்குத் தாவிடுவது வழக்கமாகியது.

நான் ஜாக்கிரதையானேன். சுனிலிடம் மட்டுமல்ல. எல்லோரிடமும். சுனிலின் ஃபோன் வந்த போது வேண்டுமென்றே எடுக்காமல், அம்மா, தம்பி, அக்கா இப்படி யாரையாவது எடுக்கச் சொன்னேன். ஒரு முறை அக்காவிடம் சுனில் சிக்கியதும்,

“யார் பேசுறீங்கனு தெரியும். இனி கூப்பிட்டா போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவோம். அவளுக்கு வேற கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணப் போறோம். புரியுதா?” என்ற பின் சுனிலின் ஃபோன் வரவே இல்லை.

அதன் பின் நான் எதிர்ப்பு சொல்லாததால் எல்லோரது விருப்பப்படி மிலிட்டரிக்காரரான தினேஷ் என் கணவரானார். என் வாழ்வில் நிகழ்ந்த அந்தத் தவறு ஒரு பெரிய விபத்துதான். அதற்கு நானும் பொறுப்பாளியே! என்பதற்காக, சுனிலின் வாழ்வை அத்தவறு ஒரு விதத்திலும் பாதிக்காமலிருக்கும் போது, ஏன் நான் எல்லோரிடமும் சொல்லி என் தலையில் நானே மண்ணை வாரி இட்டுக் கொள்வது போல் என் வாழ்வை இருட்டாக்கிக் கொள்ள வேண்டும்?

என் கணவருக்கு எப்படியோ சுனில் விஷயம் தெரிந்து நான் வீணாவை வயிற்றில் சுமந்திருந்த போது,

“உனக்கும் அவனுக்கும் அத்து மீறிய தொடர்பு இல்லேனு உன் வயித்துல வளர்ற குழந்தை மேல சத்தியம் பண்ணிக் கொடு என்றதும் சத்தியமும் செய்தேன். எனக்குத் தெரியும். இறைவன் இந்தப் பொய் சத்தியத்திற்காக என்னைத் தண்டிக்க மாட்டார் என்று. அப்போது நான் சத்தியம் செய்யத் தயங்கியிருந்தால் என் இல்லறக் கதை இல்லாமற் போயிருக்கும். நான் நடத்தை கெட்டவளாக முத்திரை குத்தப்பட்டிருப்பேன். என் குழந்தை நடத்தை கெட்டவளின் குழந்தையாக வளர வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டிருக்கும். எத்தனையோ பெரிய பெரிய பாவங்களை செய்தவர்களூம், செய்பவர்களும் ஒன்றுமே செய்யாதது போல வாழும் போது, இப்படி நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளான ஒரு பெண்ணான நான் மட்டும் ஏன் என் வாழ்வை நாசம் செய்து கொள்ள வேண்டும்? முடியாது. கூடாது என்று முடிவு எடுத்தேன்.

க்ளீனிங்க் வாலண்டியர்ஸ் இருபது பேர் வந்து வீடு, கிணறு மற்றும் வீட்டைச் சுற்றிய இடங்களை எல்லாம் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அதைப் பார்த்துக் கொண்டும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டும் நின்ற நான்,

“இந்த வெள்ளப் பெருக்கும் ஒரு விபத்து. இயற்கையின் சீற்றத்தால் விளைந்தது. வீட்டில் சேறு படிந்ததால் வீட்டை வேண்டாம் என்று சொல்லி வேறிடம் செல்லாமல் இதை இயன்ற மட்டும் சுத்தம் செய்து மீண்டும் இந்த வீட்டில் வாழவேண்டும். அதைத்தானே எல்லோரும் அவரவர் வீடுகளில் இப்போது செய்கிறார்கள். இது போல் தான் முப்பது வருடங்களுக்கு முன் சுனில் எனும் சேறு என்னுள் படிந்தது. நல்ல காலம் அதனால் வேறு விளைவுகள் இல்லை. இறையருளால் அதிலிருந்து மீண்டு நான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினேன். நாம் கவனமாக வாழாவிட்டால் இப்படிப்பட்ட மாசுகள் நம் வாழ்வில் படிந்துவிட வாய்ப்புண்டு. அப்படி மாசு படியும் நிலை வந்தால் அவற்றைத் தள்ளிவிட்டு நம் வாழ்வை மரணம் வரை தொடரத்தான் வேண்டும். நமக்கு அதற்கான மனமிருந்தால் போதும். நம் தவறை உணர்ந்து மீண்டும் தொடராமல் இறைவனிடம் மன்னிப்பு கோரினால் இறைவன் அதற்கான மார்கங்களை நமக்குக் காட்டுவார்” என்று சிந்தித்துக் கொண்டே வேலையில் இறங்கிய போது,

“பாட்டி எங்கருக்க” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடி வந்த என் பிஞ்சுப் பேரனின் குரலில் மயங்கி மகிழ்வில் திளைத்து அவனை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டேன்.

------துளசிதரன்