சனி, 24 பிப்ரவரி, 2018

2 கிலோ அரிசி + 100 கிராம் மல்லிப் பொடி = மரணம்

பிஎஃப் கணக்கை முடிப்பதில் ஏற்பட்ட சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய புதுநகரம் பள்ளிக்கு என் இருசக்கர வாகனத்தில் (பைக்கில்) சென்ற போது வழியில் தேநீர் அருந்த ஒரு தேநீர் கடையில் நிறுத்தினேன். அங்கிருந்த செய்தித் தாளில், கைகள் கட்டப்பட்டுக் கண் கலங்கி நிற்கும் மதுவின் புகைப்படத்தைக் கண்டதும் என் கண்களில் நீர் நிறைந்தது. அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளி செல்லும் வரை நிறைந்த கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

Image result for madhu, attapadi
People take selfies as mob lynches man on suspicion of theft
The police refused to reveal the identity of persons in custody and said interrogation was still in progress. It is learnt that persons in custody were identified from the pictures and videos shared via social media. (Picture and these lines - courtesy - Times Of India)

(The State celebrates itself as God’s Own Land and highly literate!!!!!!! )

பிறந்த நாள் முதல் போதுமான சத்துணவு கிடைக்காததால், ஆரோக்கியம் இழந்து மெலிந்த அந்த உருவம் இது போல் எத்தனை ஆயிரம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்குமோ தெரியவில்லை. “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின் வரிகள் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.  பாரதி அவ்வரிகள் எழுதும் போது பாரதிக்கு உண்டான மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று உண்மையிலேயே உணர்ந்த நேரம் அது.

ஒன்பதாயிரம் கோடியுடன் ஓடிப் போன மல்லையாவும், பதினோராயிரத்து நானூறு கோடியுடன் ஓடிப் போன நீரவ் மோடியும், ஐயாயிரம் கோடி அபகரித்த சோக்ஸியும், ரெண்டாயிரத்து தொள்ளாயிரத்து பத்தொம்பது கோடி அபகரித்த விக்ரம் கோத்தாரியும்  பிரச்சனையின்றி நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் சுகமாக வாழும் போது பசியைப் போக்க இரண்டு கிலோ அரிசியும், நூறு கிராம் மல்லிப் பொடியும் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு மனிதர்களுக்குப் பயந்து பாறை இடுக்கில் தனியே தங்கி வாழ்ந்து வந்த ஆதிவாசியான மதுவை கடந்த வியாழனன்று (22-02-2018) பதிமூன்று பேர் பிடித்து காவல்துறையினரிடம் ஏற்பித்தார்கள்.

அட்டப்பாடி அருகே, முக்காலியிலுள்ள கடைகளில் இடையிடையே அரிசி திருடு போகிறதாம். திருடியதும், திருடுவதும் மதுதானாம். பிற்பகல் 2.15க்கு முக்காலியில் ஒரு பேருந்து நிறுத்தத்திலிருந்து, உடுத்தியிருந்த கைலியால் கைகள் கட்டப்பட்ட, உடலெங்கும் கரியும் சேறும் பற்றியிருந்த 27 வயதுள்ள, ஆரோக்கியம் இல்லாத மதுவை வண்டியிலேற்றிய போலீஸார் அகளியிலுள்ள மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றார்கள். போகும் வழியில் தாவளம் எனும் இடத்தை அடைந்ததும் வாந்தி எடுத்த மது மயங்கிவிட்டார். மாலை 4.15க்கு அகளி மருத்துவமனையில் மயங்கிய நிலையில் கொண்டுசெல்லப்பட்ட மதுவை பரிசோதித்த மருத்துவர் மது மரணம் அடைந்ததாகக் கூறினார்.

மேச்சேரியில் ஹுசைன், மாத்தச்சன், மனு தாமோதரன், அப்துல் ரஹ்மான், அப்துல் லத்தீஃப், அப்துல் கரீம், உம்மர் என்பவர்கள்தான் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் இக் கொடும்பாதகத்தைச் செய்தவர்கள். அவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. முக்காலியில் பிறந்து வளர்ந்தவர்கள். மனநிலை சரியில்லாத மது எனும் ஆதிவாசி வாலிபரைப் பற்றித் தெரிந்தவர்கள். பசி என்ன என்று அறியாமல், எப்போதும் வறுத்ததையும், பொரித்ததையும் தேவைக்கு அதிகமாக உண்டு ஆரோக்கியமான உடல்வாகுள்ள அவர்களது அடி உதைகளை வாங்கும் ஆரோக்கியம் அந்த மதுவிற்கு இருக்கிறதா என்று கூடச் சிந்திக்க முடியாத அளவிற்கு முட்டாள்களாகிப் போனவர்கள்.

தட்டிக் கேட்கக் கூட்டம் கூடும் போது, மனிதர்கள் மானைக் கூட்டமாகத் தாக்கிக் கொல்லும் சிங்கக் கூட்டத்தைப் போல் மிருகமாகவே மாறிவிடுகிறார்கள். பள்ளியில் கற்றதும் மதம் போதித்ததும், சட்டம், ஒழுக்கம், ஈவு, இரக்கம், மனித நேயம் எல்லாவற்றையும் மறந்து மற்றவர்களின் வேதனையில் கெஞ்சல்களில், அழுகைகளில், கண்ணீரில் இன்பம் காணும் நீச ஜென்மங்கள் ஆகிவிடுகிறார்கள்.

பீஹார், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இடையிடையே 13 வயது மாணவியை 10 பேர் கற்பழித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொன்றார்கள் என்பது போன்ற செய்திகளை வாசிக்கும் போது அதிர்ந்து போகும் நாம், தென்பகுதியில் அப்படி எல்லாம் நடக்காது என்ற நம்பிக்கையுடனும் இருக்கிறோம். ஆனால், இது போன்ற மனநிலை ஒரு தொற்று நோய் போல் பலவீனமானவர்களைத் தொற்றி நாடெங்கும் காட்டுத்தீ போல் படர்ந்து கொண்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், பெரும்பாவூர் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்தார் என்று ரகு என்பவரை அடித்தே கொன்றுவிட்டார்கள். தங்கைக்குத் துணையாகச் சென்ற அண்ணனை “மாரல்”(moral) போலீஸார்கள் என்று சொல்லித் திரிபவர்கள் பேச விடாமலேயே அடித்தும், உதைத்தும், சித்திரவதை செய்துவிட்டார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் தென் மாநிலங்களிலும் நடக்கத்தான் செய்கிறது.

நான்கு பேர் கூடினால் எதுவும் செய்யலாம் எனும் நிலை. பணம், அரசியல், சாதி, மத செல்வாக்கைப் பயன்படுத்தி எந்தக் குற்றத்தைச் செய்தாலும் தப்பிவிடலாம் எனும் தைரியம். இவர்கள் செய்யும் அக்கிரமங்களை எல்லாம் வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் தங்களுக்கும் ஒரு நாள் இது போல் நிகழும் போது மற்றவர்கள் வேடிக்கைப் பார்ப்பார்களே ஒழிய உதவிக்கு வரமாட்டார்கள் என்பதை மறந்துவிடுகிறது.

ITDP, அட்டப்பாடி ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிடுகிறது. அலுவலகங்கள், அலுவலர்கள், சமூக சமையலறைகள் (ஆதிவாசிகளுக்கு உணவு ஒரு பிரச்சனையாகக் கூடாது என்பதற்காக) என்று ஒவ்வொரு ஆதிவாசிகளின் ஊரின் மேம்பாட்டிற்கு 10க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றியும் மதுவைக் காப்பாற்ற முடியவில்லை.

ஏழாண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டில் கட்டிட வேலைக்கு வந்த மது, உடன் வேலை செய்த ஒருவருடன் தகராறு நேர்ந்ததால் பயந்து வேலையை உதறி வீட்டிற்குச் சென்றாராம். அச்சம்பவத்திற்குப் பிறகு மனநிலை பிறழ்ந்ததால், தாய் மற்றும் சகோதரிகளுடன் தங்காமல் தனியே ஒரு பாறை இடுக்கில் தங்கிவந்திருக்கிறார். உயிருடன் இருந்த மதுவுக்கு ஒன்றும் செய்ய முடியாத சமூகம் இப்போது மதுவுக்காக அழுகிறது. மதுவின் குடும்பத்திற்கு கேரள அரசு 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவ தீர்மானித்திருக்கிறது. மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். இனியேனும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாதிருக்கட்டும். 

--------துளசிதரன்





43 கருத்துகள்:

  1. பொதுவா சமூகத்தில் எல்லோரிடமும் மன அழுத்தம் உண்டு. அதை அப்படியே வெளிப்படுத்தமுடியாது. அப்போ அதனைக் காண்பிப்பதற்கு இளிச்சவாயன் அல்லது அப்பாவிகள் அல்லது எதிர்க்கமுடியாத சிறு கூட்டம் அகப்பட்டால், அவர்களிடம் தங்கள் வீராப்பை சமூகம் காண்பிக்கும் (இப்படித்தான் இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்று மக்கள் சொன்னது, இன்னும் நிறைய கான்டிரவர்ஷியல் விஷயங்கள் இங்கு எழுதலாம்... வேண்டாம்).

    இங்கு, அந்த சிலருக்கு, மது அகப்பட்டார். இதே ஆட்கள், அரசு அலுவலகங்களில் நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு லஞ்சம் கொடுத்துவிட்டு காரியம் சாதித்துக்கொண்டு வருவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இல்லை காவலர்களின் தவறைக் கண்டுகொள்ளாமல் இளித்துப்பேசிவிட்டு வருவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. மீ த 1ஸ்ட் எனச் சொல்ல வந்தேன், ஆனா தலைப்பு என்னைச் சொல்ல விடவில்லை. மனம் கனத்து விட்டது... உலக்கை போற இடம் பார்க்க மாட்டார்கள்.. ஊசி போற இடமே கணக்குப் பார்ப்பார்கள்...

    களவோ எந்தத் தீய செயலோ.. அதைச் செய்வது பெரிய இடமெனில் தப்பித்து விடுவார்கள்.. இப்படி அநியாயமான அப்பாவிகளே பூனையிடம் அகப்பட்ட எலியாகி விடுகின்றனர்.

    சின்னனோ பெரிசோ தப்பு தப்புத்தான் ஆனா ... ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்..:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அதிரா தங்களின் கருத்திற்கும், வருகைக்கும்.

      நீக்கு
  3. எனக்கும் இந்தச் செய்தி மனதை மிகவும் பாதித்தது. பாஸிட்டிவ் செய்திகளைத் தேடும்போது அதுபோன்ற செய்திகள் ஒன்றிரண்டு மட்டுமே கிடைக்கிறது. இது போன்ற செய்திகளோ பக்கத்துக்குப் பக்கம் விரவிக் கிடக்கிறது. "உங்களில் பாவம் இல்லாதவர்கள் இவள் மேல் முதல் கல் எறியுங்கள்" என்றார் இயேசு. இவர்கள் தன்னையே நேசிக்காதவர்கள். பிறரையா நேசிக்கப் போகிறார்கள்... வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பலரையும் பாதித்துள்ளது ஸ்ரீராம். மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  4. ரொம்பவே வேதனைப்பட வைத்த செய்தி இது! இன்னமும் உணவுக்காகத் திருடுபவர்கள் இருப்பது மனதை அதிர வைக்கிறது. இதே சம்பவம் மற்ற மாநிலங்களில் நடந்திருந்தால் சானல்களும், பத்திரிகைகளும் மத்திய அரசையும் மோதியையும் மிதித்துத் துவைத்துக் கிழித்து அலசி உலர்த்தி இருக்கும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா சாம்பசிவம் சகோதரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  5. மதுவின் குடும்பத்திற்கு கேரள அரசு 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவ தீர்மானித்திருக்கிறது. மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். இனியேனும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாதிருக்கட்டும்.//

    மனது மிகவும் வருத்தம் அடைகிறது.

    இனியேனும் இப்படிப்பட்ட சம்பவங்கள் ந்டக்காமல் இருக்க இறைவனைதான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    பெரிய குற்றம் செய்தவனை விட்டு விட்டு , உணவுக்கு திருடியவனை அடித்து கொல்வது மனம் கனத்து போகிறது.

    "ஏழைபடும் பாடு" என்று நான் பிறப்பத்ற்கு முன் எடுத்த படம் குற்றவாளியின் த்னமையை, காவல்துறை அதிகாரியின் கடமை, கருணையையும் கூறும் படம். அதுதான் நினைவுக்கு வருது.

    ரொட்டிதிருடி கஷ்டபடுவார்.
    எல்லோருக்கும், உணவு, பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்க இறைவன் அருள வேண்டும்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கோமதை அரசு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  6. யாரென்றே தெரியாத ஒரு மனிதனுக்காக இன்னொரு மனிதர் கொடுத்திருக்கும் குரலை இப்போதுதான் முக நூலில் பார்த்துக் கண் கலங்கினேன். லிங்க் தருகிறேன். வேலை செய்யுமா, தெரியவில்லை. மலையாளம் புரியவில்லை. ஆனால் மனிதம் புரிகிறது. உணர்வுகள் புரிகிறது.

    https://www.facebook.com/ganesh.narayanan.144/videos/1355443117890032/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நேற்று துளசி இந்த இடுகையை டிக்டேட் செய்த போது மனம் என்னவோ செய்துவிட்டது நாம் இன்னும் பார்பேரியன் காலத்தில்தான் இருக்கோமா என்று தோன்றியது. அவர் வீடியோவும் இணைக்கச் சொல்லியிருந்தார். அர்த்த ராத்திரியில் தான் பதிவு போட முடிந்தது நெட் வருகை அப்போதுதான்...ஆனாலும் பல அப்லோட் ஆகலை. நெட் வந்தாலும் பதிவு சேவ் ஆகவே இல்லை. படங்களும் வீடியோவும் சேவ் ஆகலை....அப்புறம் படம் சேவ் ஆச்சு ஆனால் வீடியோ சேவ் ஆக மறுத்தது. சிவப்பு எழுத்துகள்..... அப்போது தேடிய போது நீங்கள் சொல்லியிருக்கும் இந்த லிங்க் கிடைத்தது. முதம் தெரியாத நபருக்காகக் குரல்கொடுத்து சாலையில் கத்தியது ஹையோ மனம் நொறுங்கிவிட்டது...அப்புறம் வீடியோ அப் லோட் ஆகவே இல்லையாதலால் பதிவை வெளியிட்டுவிட்டேன்...

      கீதா

      நீக்கு
    2. ஆம் ஸ்ரீராம் நானும் பார்த்தேன் அந்தக் காணொளியை நண்பரின் மொபைலில்.

      மிக்க நன்றி லிங்க் கொடுத்தமைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  7. முன்பின் அறியா மனிதருக்காகக் கலங்கம் தங்களின் மனது போற்றுதலுக்கு உரியது
    மனிதம் நிறைந்த தங்களுக்கு வாழ்த்துகள்
    மது போன்ற மனிதர்களின் நிலை மனதுள் மிகுந்த வேதனையினை ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் கரந்தையார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  8. நெல்லை உங்க கமென்ட் வந்துருக்கு...ஆனால் இங்கு வெளியாகவில்லை. கில்லர்ஜியின் கமென்ட் கீழே சேர்ந்து சோசியலில் வந்திருக்கு.....நான் அதை வெளியிடட்டுமா நெல்லை என்று போட்டு வெளியிட்டுவிடுகிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க கமென்ட் ப்ளாகரில் பப்ளிஷ்ட் கமென்டில் இல்லை ஆனால் மெயில் பாக்ஸில் சோசியலில் இருக்கு....எடுத்து போட்டுவிடுகிறேன்...

      கீதா

      நீக்கு
  9. நெ.த. உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"2 கிலோ அரிசி + 100 கிராம் மல்லிப் பொடி = மரணம்":

    பொதுவா சமூகத்தில் எல்லோரிடமும் மன அழுத்தம் உண்டு. அதை அப்படியே வெளிப்படுத்தமுடியாது. அப்போ அதனைக் காண்பிப்பதற்கு இளிச்சவாயன் அல்லது அப்பாவிகள் அல்லது எதிர்க்கமுடியாத சிறு கூட்டம் அகப்பட்டால், அவர்களிடம் தங்கள் வீராப்பை சமூகம் காண்பிக்கும் (இப்படித்தான் இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்று மக்கள் சொன்னது, இன்னும் நிறைய கான்டிரவர்ஷியல் விஷயங்கள் இங்கு எழுதலாம்... வேண்டாம்).

    இங்கு, அந்த சிலருக்கு, மது அகப்பட்டார். இதே ஆட்கள், அரசு அலுவலகங்களில் நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு லஞ்சம் கொடுத்துவிட்டு காரியம் சாதித்துக்கொண்டு வருவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இல்லை காவலர்களின் தவறைக் கண்டுகொள்ளாமல் இளித்துப்பேசிவிட்டு வருவார்கள்.

    நெல்லைத்தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  10. இந்தச் செய்தியை நேற்றைக்கு முன் தினம் படித்ததுமே மனம் பதறிப் போனது..

    அப்படியே மது திருடியிருந்தாலும் அடித்தே கொல்லும் அளவுக்கு வக்ரம் பிடித்த மனங்களில் துளி கூட ஈரம் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்..

    நல்லவேளை - பத்து பவுன் சங்கிலியை வைத்து அந்த அப்பாவியைத் திருடன் என நிரூபணம் செய்யாமல் போனார்களே...

    இனிமேல் அந்த முக்காலி கடைத் தெருவில் திருட்டு நடக்காமல் இருக்கிறதா.. பார்ப்போம்..

    எனக்கென்னவோ கடைத்தெருவில் தொடர் திருட்டை நடத்தியவன் அல்லது நடத்தியவர்கள் அந்த கும்பலுக்குள் ஒளிந்திருப்பதாகப் படுகின்றது...

    முழுதும் காலிகள்.. மூளையற்ற காலிகள்...

    இனியொரு நற்பிறப்பினை மது எய்தட்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  11. தனியோருவனுக்கு உணவில்லை என்ல் ஜகத்தினை அழித்திடுவோம் என்றோ சொல் போய்,தனி ஒருவனை அழித்திட்ட ஜகம்.
    எங்கு போய் நிற்குமோ இந்தக் கொடூரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  12. மனம் பிறழ்ந்த சமூக அராஜகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் விமலன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. மனதை கனக்க வைத்த செய்தி :( நாம் பூவுலகில் தான் வாழ்கிறோமா ? என்ற கேள்வி எழாமலில்லை :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  14. எனது பெரிய கருத்துரை என்னவாயிற்று ?
    சுழன்று கொண்டு இருந்தது கணினிக்கு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அவல நிலைகண்டு மனம் கனக்கின்றது

      எவ்வளவுதான் நாம் வாய்ச்சொல்ச்சொல் வீரராக இருந்தாலும் பல சந்தரப்ப சூழ்நிலைகளில் நாம் கோழைகளாகவே வாழ்கிறோம் என்பதே உண்மை

      அறிவை விரிவை செய் அகன்ற பார்வையால் உலகை நோக்கு என்பதெல்லாம் நமது ஏட்டுப் படிப்போடு நின்று விடுகின்றதே.....

      கோடிகள் கொள்ளையடிப்பவர்களுக்கு எவ்வளவு மரியாதை இந்த சமூகத்தில் ?

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  15. பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. மனம் கனக்கிறது....

    எங்கே போகிறது நம் சமூகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனுராதா சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  17. மனிதநேயம் என்கிற வார்த்தையைக் கேட்டுக்கேட்டு எனக்குப் புளித்துவிட்டது. ஏனெனில் நம்மில், அவை வெறும் வார்த்தைகள். இத்தகைய சம்பவங்கள், எங்கெல்லாமோ ஏதோ ஒரு விதத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றை நாம் வகைப்படுத்துவதிலும் (பெண்ணுக்கெதிரான வன்மம், ஆதிவாசிகளுக்கு எதிரான, தலித்துக்களுக்கெதிரான வன்முறை குழந்தைகளுக்கெதிரான வன்முறை என்றெல்லாம்), வர்ணிப்பதிலும் மகிழ்கிறோமே தவிர வேறொன்றும் செய்வதில்லை. பழகிப்போய்விட்டன எல்லாம். சிலருக்கு இவ்வகைச்செய்திகள் இன்னுமொருவகை எண்டர்டெய்ன்மெண்ட். வெளிமுகமாக ச்சூச்சூ..கொட்டிக்கொண்டு சுகமடையும் ஜென்மங்கள்.

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்றான் ஒரு கவிஞன். Possibility? சந்தோஷம். ஆனால், மனிதன் மனிதனாவது எப்போது? இது நிகழாமல் மேற்சொன்னதற்கு வாய்ப்பில்லை. வேறெது நிகழ்ந்தாலும் அர்த்தமில்லை.

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  19. மதுவுக்கு நேர்ந்த கொடுமை நாட்டையே திகைக்க வைத்திருக்கிறது.

    தனி ஒரு மனிதனைப் பசியால் வாட விடுவதே சமூகத்தின் குற்றம் என்ற பொருளில்தான் பாரதியார் தாங்கள் மேற்கோளிட்ட வரியை எழுதினார். ஆனால், மனிதனைப் பசியால் வாட விட்டது போதாதென, அவன் அதைப் போக்கிக் கொள்ளத் திருடினால், அதை ஒரு குற்றம் என்று கொன்றே போடுகிற காலக் கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நாகரிகம், வளர்ச்சி, முன்னேற்றம் என என்னென்னவோ பேசுகிறோம். ஆனால், ஆடை, மொழி, பேச்சு, பாவனை, அறிவு, ஆற்றல் என அத்தனையிலும் முன்னேறினாலும் பண்பளவில் மனிதன் இன்னும் அதே கற்காலக் காட்டுமிராண்டிதான்; தன் உணவைப் பிறர் பறித்துக் கொண்டு போனால், தாக்கி அடித்துக் கொன்று கூறு போடும் அதே கொடிய விலங்கினம்தான்; எந்த வகையிலும் அவன் முன்னேறி விடவில்லை என்பதையே இந்தக் கொடுமை உணர்த்துகிறது. அதிலும் நீங்கள் கட்டுரையில் பட்டியலிட்டிருந்தது போல இந்தியாவில் இத்தகைய கொடுமைகள் நிறையவே நடக்கின்றன. இந்த அழகில் காந்தி பிறந்த மண், புத்தர் பிறந்த மண் என நமக்குப் பெருமை வேறு. நாம் இப்பொழுது நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் காந்தியும் புத்தரும் இப்படிப்பட்ட மணணில் பிறந்ததற்காகத் தாங்கள் வருந்துவார்கள்.

    இடையில் நீங்கள் ஒன்று கூறியிருந்தீர்கள். "...போன்ற செய்திகளை வாசிக்கும் போது அதிர்ந்து போகும் நாம், தென்பகுதியில் அப்படி எல்லாம் நடக்காது என்ற நம்பிக்கையுடனும் இருக்கிறோம். ஆனால், இது போன்ற மனநிலை ஒரு தொற்று நோய் போல் பலவீனமானவர்களைத் தொற்றி நாடெங்கும் காட்டுத்தீ போல் படர்ந்து கொண்டிருக்கிறது" என்று. போகிற போக்கில் நீங்கள் சொல்லி விட்டீர்கள். ஆனால், இந்த வரியின் எச்சரிக்கை மிகவும் அபாயகரமானதைக் குறிப்பது புரிந்து பீதியுறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. படித்ததும் சங்கடம் சொல்லிமாளாது. மனநிலை ஸரியில்லாதவன் என்ற பச்சாதாபம் கூட இல்லையா? என்ன ஜனங்கள். மோசம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. மது போன்றவர்கள் ஊருக்கு ஊர் இருக்கிறார்கள். இருக்கும்போது அவர்களுக்கு யாரும் உதவ முன்வருவதில்லை."வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்றான் பாரதி. இதற்கான வழி வகைகளை எந்த அரசும் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  22. மனித நேயமற்ற செயல் இது. இப்போது எல்லாம் ஊடகங்கள் மிகவும் வன்முறையான செய்திகளுக்கே அதிகம் முன்னுரிமை கொடுப்பதும் இவ்வார செயல்கள் தொடர ஒரு உந்து சக்தி !

    பதிலளிநீக்கு
  23. வீட்டை திறந்து வைத்து இருப்பது மிகவும் அழகாய் இருக்கு புள்ளி வைத்து கோலம் போடுபவர்களையும் சாணி பூசி கந்தகம் வீசுவோரையும் இன காண இது எப்போதும் தேவை என்பதை பல வருடங்களாக கூறிய செய்தி இப்போது பயன் தருகின்றது!)))

    பதிலளிநீக்கு
  24. கேரளா ஆன்மீக அமைப்புக்கள் மனித நேயத்தொண்டு புரிய சிந்தித்தால் நிச்சயம் இப்படியான உணவுத்திருட்டு என்ற மாஜக்கோஷத்தை விரட்டலாம் ஆனால் எம்மதமும் முன்வராது என்பதே நிதர்சனம்!

    பதிலளிநீக்கு
  25. "ஒன்பதாயிரம் கோடியுடன் ஓடிப் போன மல்லையாவும், பதினோராயிரத்து நானூறு கோடியுடன் ஓடிப் போன நீரவ் மோடியும், ஐயாயிரம் கோடி அபகரித்த சோக்ஸியும், ரெண்டாயிரத்து தொள்ளாயிரத்து பத்தொம்பது கோடி அபகரித்த விக்ரம் கோத்தாரியும் பிரச்சனையின்றி நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் சுகமாக வாழும் போது பசியைப் போக்க இரண்டு கிலோ அரிசியும், நூறு கிராம் மல்லிப் பொடியும் திருடிய" ஆதிவாசியான மது செய்தது அவ்வளவு பெரிய குற்றமா? மதுவின் மரணத்திற்கு யார் என்ன பதில் சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு