வியாழன், 4 ஜனவரி, 2018

பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 1

புத்தாண்டுப் பதிவில் சொல்லியிருந்தது போல் பதிவு ஒன்று (2016ல் சென்றது) என்று சொல்லியிருந்ததைத்தான் முதலில் எழுத நினைத்தேன். ஆனால் கீதாக்காவின் பின்னூட்டக் கருத்தை மனதில் கொண்டு மூன்றாவது என்று சொல்லியிருந்ததை முதலில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

அதோ மலை உச்சி தெரிகிறதா அங்குதான் கோயில்...அதை நோக்கித்தான் இந்த மலையேற்றம்

சமீபத்தில் சென்ற இடங்களான. பர்வதமலை மற்றும் கள்ளக்குறிச்சியில் இருக்கும் அருவிகளில் ஒன்றான பெரியார் நீர்வீழ்ச்சி மற்றும் கோமுகி அணை பற்றிய பதிவு. எனக்கு மிகவும் பிடித்த, ஒரே அலைவரிசையில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கொண்ட குழுவுடனான பயணம். எனக்குப் பயணம் செய்யப் பிடிக்கும் என்பதால் என் மைத்துனர் என்னிடம் பயணம் பற்றிச் சொல்லி வருகிறீர்களா என்று கேட்டதும், எனக்கு ஆர்வம் மேலிட்டது என்றாலும், வீட்டில் அனுமதி கிடைக்குமா என்ற ஐயம் இருந்தது. எப்படியோ அனுமதி கிடைத்துவிட்டது. இரு நாள் பயணம். 

இருநாள் பயணத்தில் முதல் நாள் பர்வதமலை. இரண்டாம் நாள் கள்ளக்குறிச்சியிலுள்ள கோமுகி அணை மற்றும் பெரியார் நீர்வீழ்ச்சி. முதலில் பர்வதமலைக்குச் சென்றதைப் பற்றிய விவரணம். மலையின் உச்சியில் அமைந்திருக்கும் “ஆகாயத்தில் ஓர் ஆலயம்” என்றும் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படும் சிவன் கோயிலை நோக்கி கொஞ்சம் கடினமான மலையேற்றப் பயணத்தைக் குறித்துச் சொல்வதற்குள் பர்வதமலை மற்றும் கோயிலைப் பற்றிய தகவலையும் சொல்லிவிட்டுப் பயணம்  மற்றும் அனுபவத்தைப் பற்றி எழுதுகிறேன்.


எப்படிச் செல்லலாம்?

பர்வதமலை சென்னையிலிருந்து தோராயமாக 190 கிமீ தூரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி மற்றும் தென்மகாதேவமங்கலம் (தென்பாதிமங்கலம்) என்ற கிராமங்களைத் தன் அடிவாரத்தில் கொண்டு அமைந்துள்ளது. இம்மலை ஜவ்வாது மலையின் ஒரு பகுதி எனலாம்.

பர்வதமலைக்கு மலையேறும் வழிகள் மூன்று உள்ளன. மலையடிவார கிராமமான கடலாடி வழி, மற்றொரு மலையடிவார கிராமமான தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) வழி, மாம்பாக்கம் வழி. இதில் பொதுவாக தென்மகாதேவமங்கலம் வழியாகவும், கடலாடி வழியாகவும் தான் மலை ஏறுகின்றனர். மாம்பாக்கம் வழி ஏறுவது மிக மிகக் கடினம் என்பதால். முதல் இரண்டிலும் கூட தென்மகாதேவமங்கலம் வழிதான் பெரும்பான்மையான மக்கள் ஏறுகின்றனர். இரு வழிகளுமே பாதி தூரத்தில் இணைகின்றன.

தென்மகாதேவமங்கலத்திற்கும், மாம்பக்கத்திற்கும் அருகிலுள்ள போளூரில் தங்கிக் கொள்ளலாம். போளூரிலிருந்து மலையடிவாரக் கிராமமான தென்மகாதேவமங்கலம் ஏறத்தாழ 17 கிமீ தூரத்தில் உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து போளூர் கிட்டத்தட்ட 35 கிமீ.

மற்றொரு மலையேற்றப் பாதையான மலையடிவாரக் கிராமம் கடலாடி வழி செல்ல வேண்டும் என்றால் திருவண்ணாமலையில் தங்கிச் செல்லலாம். திருவண்ணாமலையிலிருந்து கடலாடி ஏறத்தாழ 25 கிமீ. கடலாடியில் மலையடிவாரத்தில் (இறைவனடி சேர்ந்த) மௌனசாமியார் விடோபாநந்தர் ஆஸ்ரமம் உள்ளது. அங்கிருந்து மலையேற்றப் பாதை தொடங்குகிறது. ஆஸ்ரமத்தின் மடம் மலையின் மேல் கோயிலிலும் உள்ளது என்றாலும் அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. தென்மாதிமங்கலத்திற்கும், கடலாடிக்கும் இடையே உள்ள தூரம் 10 கிமீ.

ஆஞ்சநேயர் சஞ்சீவினி மலையைத் தூக்கிச் செல்லும் போது அதிலிருந்து விழுந்த ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இம்மலையில் பலவகையான மூலிகைகளும் இருக்கின்றன என்பதால் இம்மலையிலிருது வீசும் காற்று மருத்துவ குணம் பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.

(விக்கி) இம்மலைக்கு நவிரமலை, திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, அகத்தியர் மலை, தேவ மலை, என்ற பெயர்களும் இருக்கின்றன. கோயில் நன்னன் சேய் நன்னன் எனும் குறுநில மன்னனால் கட்டப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் சொல்லுகின்றன. சங்க இலக்கியமான பத்துப்பாட்டின் இறுதிப்பகுதியான, மலைபடுகடாம் இக் குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. (நன்றி விக்கி)

கோயிலுக்குச் செல்லும் வழியில் கோயிலை அடைவதற்குச் சற்று கீழே சிதிலமடைந்த கோட்டையும் இருப்பது தெரிந்தது. ஆனால், மலையேற்றமே கடினமாக இருந்ததால் நாங்கள் சென்று பார்க்கவில்லை. அடுத்த முறை செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொண்டேன்.

மேலே உச்சியைப் பார்க்கும் போது நந்தி அமர்ந்திருப்பது போல் தெரிகிறதா? இது தென்மகாதேவமங்கலம் வழி மலையேறும் போது ஒரு குறிப்பிட்ட தூரம் கடந்ததும் அங்கு இருந்து பார்க்கும் போது தெளிவாகத் தெரியும் என்று, 6 முறை ஏறிய அனுபவம் உள்ள எங்கள் நண்பர் சொல்லிட எடுத்த படம்...

திரிசூலகிரி புராணத்தில் இம்மலையைப் பற்றி ஒரு கதை இருக்கிறதாம். சிவனிடம் பார்வதி, பூமியில் வாழும் மனிதர்கள் அறம், பொருள், இன்பம், வீடு இதை அடைய எந்தத் தலத்தை வணங்க வேண்டும் என்று ஒரு கேள்வியை எழுப்பிய போது சிவன் கைகாட்டும் இடம் இந்தப் பர்வதமலை என்று சொல்லப்படுகிறது. இம்மலைக் கோயிலைக் கண்டு வணங்கும் பக்தர்கள் எல்லாவித நன்மைகளையும் பெறுவார்கள் என்று சிவபெருமான் பார்வதியிடம் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. மற்றொரு கதை சிவன் கைலாயத்திலிருந்து தென்னகம் வரும் போது கால்தடம் பதிக்கப்பெற்ற புண்ணியமலை இப்பர்வதமலை என்றும் சொல்லப்படுகிறது.

இம்மலையில் பல முனிவர்கள், மகான்கள் தவம் செய்ததாகவும், ஏழு சடைப் பிரிவுகளாக இருக்கும் இம்மலையைச் சுற்றி இப்போதும் தேவர்களும், சித்தர்களும், மூர்த்திகளும் தவம் செய்து பூஜைசெய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. சித்தர்கள் நடமாடுவதாகவும் பல அற்புத அமானுஷ்யங்களை இரவு நேரம் மலையேரும் மக்களும் கண்டு அனுபவித்திருப்பதாகவும் செவி வழிச் செய்திகள் சொல்லுகின்றன.

நாங்கள் தென்மாதிமங்கலப் பாதை வழியே மலை ஏறினோம். எங்கள் மலையேற்ற அனுபவத்தைப் படங்களுடன் அடுத்த பதிவில் விவரிக்கிறேன். அதற்கு முன் எல்லோரும் நன்றாக வார்ம் அப் செய்து கடினமான மலைப்பாதையில் எங்களுடன் மலையேறத் தயாராக இருங்கள்.

------கீதா




64 கருத்துகள்:

  1. பதிவுக்கான ட்ரெயிலரே அசத்தல் தொடர்கிறேன்...... படங்கள் கொள்ளை அழகு.
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி!! வாங்க அடுத்த பதிவுக்கு ..படங்களை ரசித்தமைக்கும்..

      மிக்க நன்றி

      நீக்கு
    2. எனக்கு மாம்பாக்கம் பாதை செல்ல ஆசை. கடினம் என்பது முக்கியம் அல்ல. குற்ற செயல்கள் இல்லாத பாதுகாப்பானதா மாம்பாக்கம் பாதை?

      நீக்கு
    3. பாடுகாப்பு பற்றி தெரியவில்லை. எங்களுக்கு அது வழி சென்ற அனுபவம் இல்லாததால். அங்குள்ளவர்களிடம் அல்லது அது வழி சென்றவர்கள் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொண்டு செல்லலாம். அல்லது உங்களுக்குத் தக்க துணை இருந்தால் செல்லலாம். மற்றபடி பாதுகாப்பு பற்றிச் சொல்லத் தெரியவில்லை.

      மிக்க நன்றி Kothai's techsupport

      கீதா

      நீக்கு
  2. ஹையோ, பொறாமையா இருக்கு! நாங்களும் சில ஆண்டுகள் முன்னர் போக முயற்சி செய்தோம். ஓர் குறிப்பிட்ட இடத்தில் மலையின் மேல் ஏற சங்கிலியால் கட்டப்பட்ட இரும்பு ஏணி தான். அங்கிருந்து கீழே பார்த்தால் தலை சுற்றும். மனதில் பயம் வரும்.உங்களால் முடியாதுனு சொல்லிட்டாங்க! அதைப் படங்களிலும், வீடியோவாகவும் பார்த்திருக்கேன். ஆனால் போகவில்லை. அதே போல் சதுரகிரி மலைக்கும் போக ஆசை! அதுவும் நடக்கவில்லை. அகஸ்தியர் மலைக்கும் போக ஆசை! அதுவும் நடக்கலை! ஏங்கிப் பெருமூச்சு விடுவதோடு சரி! கடினமான ஏற்றத்தை எப்படிக் கடந்தீர்கள் என்று அறிய ஆவல்! பர்வத மலை பெயரைப் பார்த்ததுமே ஓடோடி வந்துட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் அருமை! மிக அழகாக வந்திருக்கின்றன.

      நீக்கு
    2. வாங்க கீதாக்கா ..ஹா ஹா ஹா ஹா....அக்கா அப்போ விட இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் வந்திருக்கு. குறிப்பா கடைசி ஸ்ட்ரெச் கடப்பாறை பகுதியும் கொஞ்சம் மாறியிருக்கு என்றாலும் இன்னும் கடினம் தான் ஆனால் அதன் பின் செங்குத்தாக இருந்தவை இப்போது சிமென்ட் படிகள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றன கொஞ்ச தூரம் தான்...புதிதாக வந்திருப்பவை நன்றாக இருக்கு ...
      ஆனால் இப்படி ஆகிவிட்டால் அந்த த்ரில் இருக்காது இயற்கையோடு இயைந்த அந்த ஏற்றம் என்னவோ போல் ஆகிவிடும்...

      தலை சுத்தல் என்பது ஒவ்வொருவரைப் பொறுத்தது அக்கா. ஒரு சிலருக்கு இன்னர் இயர் ஃப்ளூயிட் இம்பாலன்ஸ் இருந்தால் தலை சுற்றலாம்.....எனக்கும் உண்டு இன்னர் இயர் ஃப்ள்ய்யிட் இம்பாலன்ஸ் தலையில் அடிபட்டதால்....ஆனால் எனக்கு தலைச்சுற்றல் வரவில்லை...அடுத்த பதிவு ஒவ்வொரு பகுதி படங்களுடன் வரும் ...ஒரு சில கை பிடித்து ஏற வேண்டி வந்ததால் கேமரா கொண்டு எடுக்க முடியலை. நான் எடுக்க முடியாமல் போனதை.குழுவில் மத்தவங்க எடுத்ததையும் பகிர்வேன்...அழகான மலைஅக்கா...கண்டிப்பா யாரும்மிஸ் பண்ணக் கூடாது..திரில் அனுபவம். நான் மிகவும் எஞ்சாய் செய்தேன்.... படங்களை ரசித்தமைக்கும் நன்றி அக்கா

      நீக்கு
    3. ///ஓர் குறிப்பிட்ட இடத்தில் மலையின் மேல் ஏற சங்கிலியால் கட்டப்பட்ட இரும்பு ஏணி தான். அங்கிருந்து கீழே பார்த்தால் தலை சுற்றும். மனதில் பயம் வரும்.///

      அச்ச்சச்சோ என்ன கீதாக்கா இது? இப்பூடி அறிஞ்சால் நான் சத்தியமாப் போகவும் மாட்டேன்ன்.. ஆரையும் போக விடவும் மாட்டேன்ன்ன் ஹையோ நினைக்கவே நடுங்குதே..

      கீதா அடுத்த பதிவில விளக்கம் தாங்கோ.. இப்பவும் அப்படித்தான் இருக்குதோ என..

      நீக்கு
    4. இது மாதிரி இருந்தால் நானும் போக மாட்டேன்!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா பின்ன உசிருதானே முக்கியம்:)

      நீக்கு
  3. பர்வதமலை வரைக்கும் வந்திருக்கீங்க. எங்க வீட்டுக்கு வரலைல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ராஜி இப்படி சொல்லிப்புட்டீங்க!! நான் மலை மேல இருந்து ராஜி ராஜினு குரல் கொடுத்தேனே!! உங்களுக்குக் கேக்கலையோ!! ஒருவேளை சினிமால மட்டும் தான் கேக்கும் போல ஹிஹிஹிஹி..

      சரி சரி ராஜி நாங்கள் குழுவாக வந்தோம்..அப்புறம் நீங்க திருவண்ணாமலை பக்கம்னு எப்பவோ வாசித்த நினைவு ஆனால் எங்க இருக்கீங்கனு தெரியலை...இனி தெரிஞ்சு வைச்சுக்கறேன். கண்டிப்பா அடுத்த முறை அந்தப்பக்கம் வரும் வாய்ப்பு கிடைச்சா உங்கள்ட சொல்லிட்டுவ் வந்துருவேன். நன்றி ராஜி...

      நீக்கு
    2. என்னாது ராஜிவீட்டிற்கு போகலையா போயிருந்தீங்க என்றால் கிடாவெட்டி விருந்தே வைச்சிருப்பாங்களே

      நீக்கு
    3. ரொம்ப குசும்புதான் மதுரை அண்ணனுக்கு... கீதாக்காவும், துளசி சாரும் சைவம்ன்னு ஐ நோ. அதனால வடை பாயாசத்தோடு விருந்து போட்டிருப்பேன். திருவண்ணாமலைல இருந்து 80கிமீ தூரத்தில் இருக்கேன். வேலூரிலிருந்து 40கிமீ தூரம். ஆரணிதான் எங்க ஊரு. பட்டுச்சேலை, பட்டுவேட்டிக்கு பேமஸ். நினைவில் வச்சுக்கோங்க. அடுத்த முறை வரும்போது மூஞ்சி புக்ல சொல்லுங்க சந்திக்கலாம்

      நீக்கு
    4. ராஜி அத ஏன் கேக்கறீங்க இந்த மதுரைக்கு ரொம்பவே குசும்புதான்...பூரிக்கட்டை அடி வாங்கி ரொம்ப நாளாச்சு போல ஹா ஹா ஹா ஹா..அவவுக வீட்டம்மாவுக்கு ஒரு கால் போட்டுருவோம்..

      ஹே நீங்க ஆரணிலதான் இருக்கீங்களா. நாங்க ஆரணி வழியாதான் போனோம்...ஆமாம் பட்ருச் சேலை..பட்டு வேட்டி தெரியும் ஆனா ராஜி நான் பட்டு உடுத்தறது கிடையாது....ஒன்லி காட்டன்...

      அப்புறம் ராஜி துளசி என் நண்பர்னு தெரியும்ல...அவரு அசைவம் தான்....நான் தான் சைவம்..இது ஒரு தகவல். அவர் இருக்கறது கேரளத்துல நான் இருக்கறது சென்னைல...இரண்டாவது தகவல்..

      அப்புறம் நான் போனது என் புகுந்த வீட்டு மனுசங்க மற்றும் நண்பர்கள் குழுவோட....துளசி குடும்பம் இல்லை...நான் கேரளா போனாத்தான் நான் இல்லைனா நானும் என் மகனும் மட்டும் அவங்க குடும்பத்தோடு போய்வருவோம்...

      நீக்கு
  4. மலை உச்சி தெரிகிறது. ஆனால் செங்குத்தாகவும் சாய்வாகவும் இருக்கிறதே.. கஷ்டம்தான் (எனக்கு!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் கொஞ்சம் தூரம் செங்குத்தாகத்தான் ஏறனும்ட், ஏணிப்படிகள் போல எல்லாம் பாறையில் இருக்கு....வெர்டிகோ இருந்தாலும் கொஞ்சம் நீங்க அந்தப் பக்கம் எல்லாம் பார்க்காமல் வந்துட்டீங்கனா போயிட்டு வந்துரலாம்...ரொம்ப நல்ல இடம் ஸ்ரீராம் மிஸ் பண்ணக் கூடாது.
      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  5. //எனக்கு ஆர்வம் மேலிட்டது என்றாலும், வீட்டில் அனுமதி கிடைக்குமா என்ற ஐயம் இருந்தது.//

    பள்ளி செல்லும் பிள்ளை போல அனுமதிக்காகக் காத்திருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம்..அதெல்லாம் வெளில சொல்ல முடியாது ஹிஹிஹிஹி.....அனுமதி கிடைக்காமல் இக்குழுவுடனான நிறைய ட்ரிப்ஸ் மிஸ் பண்ணிருக்கேன்....பல வருடங்களுக்குப் பிறகு2016ல் அப்புறம் இப்ப...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  6. திரிசூலகிரி, மல்லிகார்ஜுனமலை இரண்டை மட்டும் இரண்டு முறை சொல்லி இருக்கிறீர்கள்... மற்றவை என்ன பாவம் செய்தன? அவற்றையும் இன்னொருமுறை சொல்லியிருக்கலாமில்லையா?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா அஹ்ஹாஹாஹ் ஆமாம் ஆமாம் கோச்சுக்கிடாம இருக்கணும்.....

      திருத்திட்டேன் ஸ்ரீராம்....மிக்க நன்றி சுட்டிக் காட்டியமைக்கு...

      நீக்கு
  7. இடம் பற்றிச் சொல்லும்போது பக்கம்தான் என்று தெரிகிறது. ஆனால் போகும் சந்தர்ப்பம்தான் எப்ப வருமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தர்பத்தை நாம்தான் உருவாக்க வேண்டும் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
    2. நேரம் அமையணும் கில்லர்ஜி!

      :)))

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம்...போகும் சந்தர்ப்பம் வரும்....

      மக்கள் எல்லாம் அஸால்டா போறாங்கப்பா...அடிகக்டி ஏறுவாங்க போல...எனக்கு இப்ப இன்னுரு முறை போனா நல்லாருக்கும்னு தோணுது ஆனா வெயில் காலம் வந்துருச்சுனா போறது கஷ்டம்...

      நீக்கு
  8. ஹையோ கீதா !எத்தனை அழகு அந்த மலையும் மலை சூழ்ந்த இடமும் .பச்சை பசேல்னு இருக்கு கண்கொள்ளா காட்சி .போட்டோ எடுத்த கைகளுக்கு அதிராவின் பச்சைக்கல் நெக்லஸை பேரன்புடன் பரிசளிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் ரொம்ப அழகு ஏஞ்சல் அதுவும் இப்ப மழை பெஞ்சு டிசம்பர் ந்றதுனால நல்லாவே இருக்கு..இதுவே சம்மர்னா ரொம்ப ட்ரையா இருக்கும் இந்த ஏரியா...வெயில் சுட்டுத் தள்ளும் போகறது கஷ்டமதான்...ஆனா நிறையப் பேர் ரெகுலரா பௌர்ணமி தோறும் போறாங்க..கஹ்ரி அது பத்தி எல்லாம் பதிவுல சொல்லறேன் ஓகெயா

      மிக்க நன்றி ஏஞ்சல்

      நீக்கு
    2. ஏஞ்சல்!!! ஹா ஹா ஹா மிக்க நன்றி பச்சைக்கல் நெக்லஸை...கைகளுக்கு?!! பரிசாக அளிப்பதற்கு...அது சரி பூஸார் இதைப் பார்க்கலையோ...ஹா ஹா ஹா

      நீக்கு
    3. ஹையோ ஹாஹாஹா :) இந்த திருட்டுவேலை செய்யும்போது என்ன எடுக்கறோம் பேசறோம்னே தெரியாதது அப்படி ஒரு ப்ளோவில் வந்திருச்சு :) உங்க கை மெலிசு அதனால் அந்த நெக்லஸை ப்ரேஸ்லெட்டாகிடுங்க

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா சிரிச்சுட்டேன் ஏஞ்சல்!!! அதுவும் அவசர அவசரமா செய்யும் போது இல்லையா ஹா ஹா ஹா...ஓகே ஓகே நெக்லஸை ப்ரேஸ்லெட்டாக்கிக்கறேன்...பூசார் காதுல புகை வரட்டும்...ரெண்டு கைக்கும் செய்யலாம் போல ஹா ஹா ஹா ஹா..

      நீக்கு
  9. மருதமலைமாதிரி அகலமான படிகள் இருந்தா தாராளமா ஏறுவேன் :) வலப்பக்கம் யாராவது கூட நடக்க நடுவில் நான் :) ..டபுள் டெக்கர் பஸ்லயே மேலே ஏறமாட்டேன் :) நீங்க சொல்றதைப்பார்த்தா நான் பாதிதூரம்கூட ஏறுவேனான்னு டவுட் :)..இவ்வளவு அழகை அவ்ளோ தூரத்தில் வச்சிருக்காங்களே :)
    ஆனா நீங்க நல்ல என்ஜாய் பண்ணியிருக்கிங்க பதிவில் உற்சாகம் கரைபுரண்டோடுத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிகள் கொஞ்சம் இருக்கு ஏஞ்சல் ஒரு பகுதி..அப்புறம் லாஸ்ட் பார்ட்ல கொஞ்சம் முன்பு லாஸ்ட் பார்ட்ல கிடையாது செங்குத்தாக ஏறித்தான் போகணும் இப்ப புதுசா கட்டிருக்காங்க...ஆனாலும் அதுவும் கவனமாகத்தான் ஏறணும்...எனக்கு இத்தனைக்கும் இன்னர் இயர் ஃப்ளூயிட் இம்பாலன்ஸ் ப்ராப்ளம் இருந்தும் நோ தலை சுத்தல்..ரொம்பவே எஞ்சாய் செய்தேன் ஏஞ்சல்..எனக்கு எப்பவுமே மலை ஏற்றம் ரொம்பப் பிடிக்கும்...இயற்கையோடு அத்தனை பிணைந்து..சூப்பர்ப் ட்ரிப்...முடியறவங்க போய் வரலாம் அதை அனுபவிக்கவாவது..

      நீக்கு
  10. ஆஹா முதலில் என் கண்ணுக்கு தெரிவது அந்த அழகிய நீல வானம்ம்ம்ம்ம்.. என்ன ஒரு தெளிவான வானம்.. இப்படி வானம் பார்த்துப் பல வருசமாச்சு... இங்கு இப்படித் தெளிவாக இருக்காது.. முகில்கள் அதிகம் இருக்கும்.. கொஞ்சம் வெளிர்நீல நிறமாகத்தான் இருக்கும்...

    ஹா ஹா ஹா பெர்மிசனுக்காகக் காத்திருந்து.. பின்பு கிடைத்ததும் போனது என்கிறீங்க... நீங்கதானே பெர்மிசன் குடுக்கோணும் இப்போ:).. நீங்க காத்திருப்பது.... ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அன்று வெரி க்ளியர் ஸ்கை அதிரா...செமையா இருந்துச்சு...அதே சமயம் முகில் இருக்கும் வானும் அழகுதான் அதுவும ஷேப் மாறிக் கொண்டே இருக்குமே அது அழகு...

      நான் பெர்மிஷனா?!!கொடுக்கறதா ஹா ஹா ஹா ஹா ஹா...எதுக்கு அதிரா...அதெல்லாம் இல்லை அதிரா...

      நீக்கு
  11. மலையைப் பார்க்க குத்துக்கல்லாகத் தெரியுதே... படியிலே ஏறிப் போகோணுமோ அல்லது கேபிள் கார் வசதி ஏதும் உண்டோ?...

    //சிதிலமடைந்த கோட்டையும்///
    இதில் எழுத்துப்பிழை ஏதும் இருக்கோ கீதா?.. அல்லது இதன் பொருள் என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிகள் கொஞ்சம் உண்டு...கேபிள் கார் எதுவும் கிடையாது...பதிவைப் பாருங்கள் தெரியும்..அதிரா...

      சிதிலமடைந்த என்றால் சிதைந்த....என்று அர்த்தம்...அதிரா

      நீக்கு
  12. அழகிய சுற்றுலாதான், உச்சியில் நிறு பார்க்க சூப்பராக இருக்கும் என்ன? ஏதோ வானத்தில் நிற்பதைப்போல... கோயில் பற்றிப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.. அங்கு ஐயர் எப்படிப் போவார்?.. இல்ல அங்கேயே அவர்களுக்கு வீடிருக்கோ? தனியே இருப்பதும் பயம்தானே.. இப்படிப் பல டவுட்ஸ் வருது எனக்கு.. அடுத்த பதிவில் தெளிவு படுத்துங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேம்ஸ் நதியில் குதிக்காதவரை அந்த மலை உச்சிக்கு கூட்டி போய் தள்ளிவிட வேண்டியதுதானே என்னது என் மைண்ட் வாய்ஸ் எப்படி இங்கே பதிவாகிறது

      நீக்கு
    2. மதுரை பாவம் பூஸார். தேம்ஸே போதும்...பூஸார் ஆனால் எங்கிருந்து குதித்தாலும் சரியாக லான்ட் ஆவார் தெரியுமா...

      நீக்கு
    3. அதிரா மலை உச்சியிலிருந்து பார்க்க அப்படி ஒரு அழகு...பக்கத்தில் ஜவாது மலைத்தொடர் என்று பாறைகளும் மலைகளும் அப்படி ஒரு அழகு. அது இப்போது என்பதால் சம்மரில் என்றால் ட்ரையாகத்தான் இருக்கும்...ஐயர் எப்படிப் போவார் ? வரும் பதிவில் பாருங்கள்...

      நீக்கு
  13. //ஸ்ரீராம்.4 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:56
    இடம் பற்றிச் சொல்லும்போது பக்கம்தான் என்று தெரிகிறது. !//

    என்ன கொடுமை ஜாமீஈஈஈஈஈ.. பக்கத்தில இருந்துகொண்டே தெரியாமல் இருந்தாரோ:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.. நான் உள்ளூரிலேயே நிறைய இடங்கள் பார்த்ததில்லை என்பதை வெட்கத்துடன் அல்லது கூச்சத்துடன் சொல்லிக் கொ(ல்)ள்கிறேன்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா முற்றத்து மல்லிகை வாசமில்லை என இதுக்குத்தான் சொல்லுவினம்:)... பெரும்பாலும் எல்லோரும் இப்படித்தான்:)..

      படிப்பு முடிஞ்ச உடனே வேலை... வேலை கிடைச்ச உடனேயே திருமணம் பண்ணாதீங்க:) கொஞ்சம் ஊரெல்லாம் சுத்திப் பார்த்திட்டுப் பண்ணுங்கோ எண்டால், என் பேச்சை ஆரு கேட்கினம் கர்ர்ர்ர்ர்:)...

      நீக்கு
  14. மலையேறத் தயாராக தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனிமரம்...ரொம்ப நாளாச்சு பார்த்து...வாங்க வாங்க மலை ஏற வாங்க...

      உங்க பக்கம் வந்தும் நாளாச்சு நீங்க இன்னும் போடலையோ இல்லை நாங்க மிஸ் பண்ணிருக்கோமா பார்க்கறோம்..

      நீக்கு
    2. வாழ்த்துக்கள் நேசன்... நலமே போய் வாங்கோ.

      நீக்கு
  15. உலா கிளம்பிவிட்டோம், உங்களுடன். புகைப்படங்களை ரசித்துக்கொண்டே வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா வாங்க எங்களோடு..ரசித்தமைக்கும் மிக்க நன்றி. ஐயா

      நீக்கு
  16. செங்குத்தான் தோன்றும் மலையும் மலைக் கோயிலும்
    வியப்பை ஏற்படுத்துகின்றன
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ கரந்தை ரொம்ப அழகு இடம் சகோ...மிக்க நன்றி

      நீக்கு
  17. என்னுடைய டூப் இருக்கும் இடத்திற்கு எப்ப பயணம் மேற்கொள்ளப் போறீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க டூப் இருக்கற இடத்துக்கு வரதுக்கு உங்க டூப்பு என்னை இன்வைட் பண்ணி டிக்கெட் போட்டுத் தரச் சொல்லுங்க..என்னவோ எங்கவீட்டுக்குப் பின்னாடி இருக்காப்ல சொல்லிட்டீங்க!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....என் பையன் இன்னும் செட்டில் ஆகலையே!

      ஜோக்ஸ் அபார்ட்...நான் அங்க வந்தா கண்டிப்பா உங்களைப் ஸாரி ஸாரி உங்க டூப்பைப் பார்க்க வருவேனு சொல்லுங்க..என் மகனுக்கு எல்லாம் நல்லபடியாக முடிஞ்சா...

      மிக்க நன்றி மதுரை சகோ..

      நீக்கு
  18. பர்வதமலை...

    அழகிய இடம்....பல தகவல்களும் ...படங்களும் வெகு அழகு கீதாக்கா..


    (பெரிய பதிவுகளை விட..எனக்கு இந்த சிறிய பதிவுகள் தான் படிக்க எளிதாக இருக்கு கா..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு...சரி சின்னதா கொடுக்க முயற்சி பண்ணறேன் அனு......சில பதிவுகள் சின்னதா எழுத நினைச்சாலும் அதன் உயிர் ஜீவன் போகாமல் இருக்கணும்னா கொஞ்சம் பெரிசா ஆயிடுது...இருந்தாலும் சின்னதா கொடுக்க முயற்சி பண்ணறேன் அனு...ஓகேயா...

      நீக்கு
  19. ஓரளவுக்குக் கேட்டிருந்த சேதிகளுடன் மேலும் அறிந்து கொள்ள ஆவலாகின்றது..

    இனி வரும் நாட்களில் பர்வத மலை சென்று தரிசிப்பதற்கு இறைவன் தான் அருளல் வேண்டும்..

    அங்கே கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலையும் இப்படித்தான் என்கின்றார்கள்..

    அழகிய படங்களுடன் மேலும் தகவல்களுக்குக் காத்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ. கருத்திற்கு. நல்லதொரு பயணம் மற்றும் கோயில் ..இறைவன் அருள்வார் தங்களுக்கு...ஆமாம் சகோ வெள்ளியங்கிரியும் அப்படித்தான். கம்பு ஊன்றித்தான் நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்...அதுவும் செல்ல வேண்டும்..

      மிக்க நன்றி சகோ

      நீக்கு
  20. வணக்கம் கீதா!

    சொன்னதுபோல பதிவிட்டுவிட்டீர்கள்...:) நன்றி!
    நான்தான் இங்குவரத் தாமதமாகிவிட்டேன்..

    மலையைப் பார்த்துப் பிரமித்து நிற்கின்றேன் கீதா! இதில் ஏறுவதென்றால்....
    நினைத்துப் பார்க்க என்னால் இயலவில்லை.
    மிகவும் சுவாரஸ்யமாக உங்கள் பயணப்பதிவு தொடரப்போகிறதென நினைக்கிறேன்.

    தாமதமாகாமல் அடுத்த முறை விரைவாக வந்து படித்திடுவேன்.
    நன்றியுடன் வாழ்த்துக்கள் கீதா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இளமதி. தாமதம் ஒன்றுமில்லை ..தாமதமானால் என்ன பரவாயில்லை இங்குதானே இருக்கப் போகிறது தங்களுக்கு நேரம் அமையும் போது வந்து படியுங்கள்....எங்களுக்கு நிறைய பதிவுகள் விட்டுப் போகிறதுதான்....

      மலை ரொம்ப அழகு இளமதி...நல்ல அனுபவம் ஸ்வாரஸ்யம் நிறைந்த அனுபவம்...

      மிக்க நன்றி இளமதி...

      நீக்கு
  21. இந்த மலையைக்,கோயிலை ஸ்ரீசைலம் கோயிலுடன் ஒப்பிட்டு,மஹாபெரியவர் கால் நடையாகப் போனதாக எவ்வளவோ வருஷங்களுக்கு முன்பாகக் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. சில வருஷங்களுக்கு முன்பாக சிவராத்திரி ஸமயம் எங்கள் மாப்பிள்ளையும் சிலபேர் கூட்டாகச் சேர்ந்து போய் வந்ததைப் பற்றி அவ்வளவு வியப்பாகச் சொன்னார். பிரமராம்பிகா,மல்லிகார்ஜுனர் என்று அதே ஸ்ரீசைல பெயர்களையே சொன்னார். கடினமான வழி. ஆர்வம் உள்ளவர்களுக்கு எதுவும் தோன்றவில்லை.மிகவும் பிரமிப்பாக இருந்தது. கனவுபோல இருந்தது என்றும் சொன்னார். ஓ. உங்களின் அனுபவம் படிக்க மிக்க ஆவல். இம்மாதிரி இடங்கள் பார்க்கக் கொடுத்து வைக்க வேண்டும். அன்புடனும்,ஆவலுடனும்

    பதிலளிநீக்கு
  22. இனிதாய் தொடங்கி இருக்கிறது பர்வத மலைப் பயணம். திருவண்ணாமலை வரை சென்றதுண்டு என்றாலும் பர்வத மலை சென்றதில்லை. உங்கள் முதல் பதிவே அங்கே செல்ல வேண்டும் எனும் ஆசையைக் கொடுத்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலையும் சென்றதில்லை. விரைவில் வாய்ப்பு அமைந்தால் நல்லது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. புண்ணியமலை இப்பர்வதமலை தரிசனம் செய்ய தொடர்கிறேன்.
    எவ்வளவு அழகான இடம். படங்கள், விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  24. நான் முத்துசாமி. http://agharam.wordpress.com நான் உங்கள் வலைத்தளத்திற்கு இன்று முதன்முறையாக வருகை தந்துள்ளேன்.
    சங்க இலக்கியத்து பதினெண்மேல்க் கணக்கு நூல் தொகுப்புகளுள் ஒன்றாகவும் பத்துப்பாட்டு நூல்களுள் பத்தாவதாகவும் இடம்பெறுவது மலைபடுகடாம் ஆகும். இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்த இலக்கியம் 583 அடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் தலைவன் "பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்" ஆவான். இந்த நன்னன் ஆண்ட நவிரமலையே தங்கள் பதிவில் விவரிக்கப்பட்டுள்ள பர்வதமலையாகும். தங்களுடைய இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள பதிவில் இம்மலை பற்றி விவரித்துள்ள தகவல் மற்றும் படங்கள் அருமை.

    இம்மலைப்பற்றி "Naviram Hills (Parvathamalai) and Chieftain Nannan as Portrayed in Sangam Poem Malaipadukadam" பதிவு ஒன்றை இந்த URL லில் http://know-your-heritage.blogspot.in/2017/02/naviram-hills-parvathamalai-and.html
    நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள். உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.

    பதிலளிநீக்கு
  25. நான் முத்துசாமி. http://agharam.wordpress.com நான் உங்கள் வலைத்தளத்திற்கு இன்று முதன்முறையாக வருகை தந்துள்ளேன்.
    சங்க இலக்கியத்து பதினெண்மேல்க் கணக்கு நூல் தொகுப்புகளுள் ஒன்றாகவும் பத்துப்பாட்டு நூல்களுள் பத்தாவதாகவும் இடம்பெறுவது மலைபடுகடாம் ஆகும். இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்த இலக்கியம் 583 அடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் தலைவன் "பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்" ஆவான். இந்த நன்னன் ஆண்ட நவிரமலையே தங்கள் பதிவில் விவரிக்கப்பட்டுள்ள பர்வதமலையாகும். தங்களுடைய இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள பதிவில் இம்மலை பற்றி விவரித்துள்ள தகவல் மற்றும் படங்கள் அருமை.

    இம்மலைப்பற்றி "Naviram Hills (Parvathamalai) and Chieftain Nannan as Portrayed in Sangam Poem Malaipadukadam" பதிவு ஒன்றை இந்த URL லில் http://know-your-heritage.blogspot.in/2017/02/naviram-hills-parvathamalai-and.html
    நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள். உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.

    பதிலளிநீக்கு