வெள்ளி, 9 நவம்பர், 2018

சொல்முகூர்த்தம்


Image result for bird saying thanks to god

என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று பற்றிக் கொண்டுவிட்டது. அவரது தலைப்பு - வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும் தாக்கம் ஏற்படுத்தியதால் உடனே சூட்டோடு சூடாக இதைப் போட்டுவிடலாம் என்று இப்பதிவு. ஏனென்றால், எனது அனுபவங்கள் அப்படியானவை. ஸ்ரீராமின் பதிவின் தொடர்ச்சி எனவும் கொள்ளலாம் அல்லது கோமதிக்காவின் கருத்திற்கு அதை ஆமோதித்து வந்த எனது கருத்திற்கு அங்கு ஸ்ரீராம் பறவைக் கதை என்ன என்று கேட்டிருந்தற்கு பதில் எனவும் கொள்ளலாம். இப்போதைய எனது அனுபவங்கள் பற்றிய பதிவுகள் காத்திருக்கட்டுமே.

குழந்தைகளிடம் பேசுவது எப்படி? இந்த சொல்முகூர்த்தம் எப்படிப் பயனளிக்கும் என்பதையும் சொல்வதாகச் சொல்லியிருந்தேன். ஸ்ரீராமும் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லிட இங்கு எங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகளிடம் இந்த சொல்முகூர்த்தம் எப்படி வேலை செய்தது என்பதையும் சொல்கிறேன். ஆனால் அது இனி வரும் பதிவுகளில். எச்சரிக்கை: எனவே ஸ்ரீராமிடம் இருந்து காவிக்கொண்டு வந்த சொல்முகூர்த்தம் மற்றும் வெல்லும் வார்த்தைகள் கொல்லும் வார்த்தைகள் கொஞ்சம் தொடரும்! 

என் இள வயதில் பள்ளியில் எனது காட்மதர் மேரிலீலா மற்றும் ஸ்டெல்லா டீச்சர்கள். (YSM-Young Students Movement) இதில் மேரி லீலா டீச்சர்தான் அதிகமாக என்னை வழிநடத்தியவர். அவர் அடிக்கடி சொல்லியது. பிரார்த்தனையிலும் கூட நல்லதே பேச வேண்டும். நேர்மறை எண்ணங்கள் மிக மிக அவசியம். கடுஞ்சொற்கள் கூடா என்பதுதான். 

எபியில் நேற்று நான் இட்ட ஒரு கருத்து. என் இள வயதில் நான் என் ஆசிரியை மேரிலீலாவிடம் கேட்ட கேள்வி. “இறைவனிடம் பிரார்த்தித்தால் நடக்கும் என்று சொன்னீர்களே ஆனால் எனக்கு நடக்கவில்லையே” என்று. அதற்கு அவர் அளித்த பதில்.

ஒன்று நீ அவசரகதியில், பிரார்த்தித்த நொடியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய். சில விஷயங்கள் நடக்கும் சில விஷயங்கள் நடக்காது. கடவுள், உனக்கு எப்போது அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதுதான் அது நடக்கும். ஆனால் அதற்காக மனம் சோர்ந்து பிரார்த்தனையைக் கைவிடக் கூடாது.

நான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை  உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும். பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும். நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு.  இறைவனை தூற்றக் கூடாது.

ஒரு பெரியவர் - நாங்கள் அவரை தாடி ஜோஸ்யர் என்போம். அவர் சொல்லுவார். இறைவனை தொழும் போது மனசு சிதறாம இருக்கணும். அம்மை அப்பனை நினைச்சு சந்தோஷப்பட்டு அழகை ரசிச்சு ஐக்கியமாகி தொழு மக்கா. அப்பத்தான் நம்ம தொழுதலுக்கு அர்த்தம் உண்டு. நல்லது நடக்கும் என்று. இதை அடிக்கடிச் சொல்லுவார்.

அதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதே பெரியவர் சொல்லுவார். இறைவன் முன்ன எதுக்கு கரையற. உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை. காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா. அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ. உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ. அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா. நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதேல்லை. கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம். நல்லத பாரும்மா என்பார்.

சிறு வயது என்பதால் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது இவை. அதாவது நம் பிரார்த்தனையில் மனம் சிதறாமல் அது ஒரு நிமிடமானாலும், இருக்க வேண்டும் என்பதும் மகிழ்ச்சியுடன் நன்றி உரைக்க வேண்டும் என்பதும். இதை ஒட்டியதுதான் அந்தப் பறவையைப் பற்றிய கதை. கதை வாட்சப்பில் வந்ததுதான். பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் அதை இங்கு தருகிறேன்.

Related image

பாலைவனத்தில் ஒரு பறவை மிகவும் நோய்வாய்ப்பட்டு, சிறகுகளை இழந்த நிலையில் சாப்பாடு, தண்ணீர், வாழுமிடம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் இரவு பகலாக தன் வாழ்வை நினைத்து தன்னைத் தானே சபித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் வானில் ஒரு புறா பறந்து இப்பறவையைக் கடக்க நேரிடுகையில் இப்பறவை புறாவை நிறுத்தி கேட்டது.

“எங்கு செல்கிறாய்?”

“நான் சொர்க்கத்துக்குச் செல்கிறேன்”

“சொர்கத்துக்கா செல்கிறாய்? அப்படி என்றால், என்னுடைய துன்பங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்டுச் சொல்கிறாயா, தயவாய்”

“கண்டிப்பாகக் கேட்டுச் சொல்கிறேன்.”

புறா சொர்கத்திற்குச் சென்றதும் சொர்கத்தின் வாசலில் இருந்த காவல் தேவதையிடம் அப்பறவையின் துன்பங்களை எடுத்துரைத்து அத்துன்பங்கள் எல்லாம் எப்போது தீர்வுக்கு வரும் என்று கேட்டது.

“அதன் வாழ்வில் அடுத்த 7 வருடங்கள்  துன்பங்கள்தான். அந்த 7 வருடங்கள் முடியும் வரை மகிழ்ச்சி என்பதே கிடையாது” என்றதும் புறாவுக்கு வருத்தம். (இதுதான் செவன் பாயின்ட் ஃபைவ்??!!!!)

“அப்பறவை இதைக் கேட்டால் மிகவும் மனம் உடைந்துவிடுவான். இதற்கு ஏதேனும் வழி சொல்ல  முடியுமா?”

“இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி! மிக்க நன்றி! - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்!!!!!)

புறா இதை அப்பறவையிடம் தெரிவித்தது.

ஏழு நாட்கள் கழித்து புறா அப்பறவை இருக்கும் இடத்தைக் கடந்து பறந்த போது அப்பாலைவனத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. சின்ன குளம் ஒன்று தோன்றியிருந்தது. பறவைக்கு இறக்கைகள் வளர்ந்திருந்தது. பறவை ஆடிப் பாடிக் களித்துக் கொண்டிருந்தது.

புறா மிகவும் வியந்து போனது. அடுத்த 7 வருடங்கள் இப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாது என்றல்லவா தேவதை சொன்னது! இது எப்படி இந்த 7 நாட்களில் சாத்தியமானது என்று தேவதையிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்றது. தேவதையிடம் கேட்கவும் செய்தது.

“உண்மைதான்! அடுத்த 7 வருடங்களுக்கு அப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாதுதான். ஆனால், அப்பறவை ஒவ்வொரு கடினமான நிலையிலும் “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே இருந்ததால் அதன் நிலைமை மாறத் தொடங்கியது.

அப்பறவை அனல் தெறிக்கும் மணலில் வீழ்ந்த போது “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொன்னது. தாகம் எடுத்த போது தண்ணீரில்லாத போது “இறைவா உனக்கு மிக்க நன்றி” என்று சொன்னது. எப்படியான கடுமையான சூழலிலும் அது திரும்ப திரும்ப “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால், 7 வருடங்கள் என்பது ஏழே நாட்களாகி அதன் துன்பங்கள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின” என்றது.

இக்கதை அறிவுறுத்துவது ஒன்றுதான். நமக்கு என்ன இல்லை என்பதையும், துன்பங்களையும் நினைத்து இறைவனிடம் மன்றாடுவதை விட அவர் நமக்கு அளித்திருக்கும் நல்லதை நினைத்து, நம்மிடம் இருப்பவற்றை நினைத்து மகிழ்ந்து நன்றி உரைப்போம் எனும் ஒரு நல்ல நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதையே.

இது சற்றுக் கடினமாகத் தோன்றினாலும் மனதில் பதிந்த ஒன்று. மேரிலீலா டீச்சர் சொன்னதும், அந்தப் பெரியவர் சொன்னதும் இதையேதானே என்றும் நினைவிற்கு வந்தது. எனக்கு பல கடின நிலைகளிலும் கடக்க உதவியது இந்த மந்திரம். முயற்சி செய்து பார்க்கலாமே!

நன்றி ஸ்ரீராம் உங்கள் வார்த்தைகளைக் காவிக்கொண்டேன்!

படங்கள் : நன்றி கூகுள்

--------கீதா


திங்கள், 29 அக்டோபர், 2018

ஆவின் டு நந்தினி


பல மாதங்களாகப் பல முக்கியமான பணிகள் என்று மனமும், உடலும் தொடரி ஓட்டமாய் ஓடியதால் அதுவும் ஹர்டிலிங்க் ஓட்டம், வலைப்பக்கம் வர இயலாத நிலை இருந்து வந்தது. அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நலம் தானே! தற்போது ஆவினிலிருந்து நந்தினிக்கு மாறியாகிவிட்டது. நம்ம எபி ஆசிரியர்களில் பெரும்பாலானோர்(??!!) மற்றும் பிரபல வலைப்பதிவர்கள் வசிக்கும் ஊருக்கு மாற்றம். நிறைய பதிவுகள் வாசிக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். என் பதிவுகளும் பல வெட்டல், ஒட்டல் வேலைகளுக்குக் கிடப்பில் காத்திருக்கின்றன. அப்படியான ஒன்றில்தான் நம்ம ஏரியாவில் சு டு கு கதை கூட வெட்டல் செய்து தட்டிக் கொட்டாமல் ஸ்ரீராமுக்கு அனுப்பி வெளிவந்தும் விட்டது.

எத்தனையோ ஊர்கள், சிறிய ஊர்கள், அந்த ஊர்களிலும் பல வீடுகள் என்று மாறி, உரல், அம்மி முதல் இண்டக்ஷன் என்று பல அனுபவங்கள் என்றாலும், கடந்த 15 வருடங்கள் சென்னையிலும் வீடுகள் மாறியிருந்தாலும் சமீப வருடங்களில் வீடு மாற்றாமல் இருந்துவிட்டு மீண்டும் ஊர் மாற்றம். மாற்றம் பழகிப் போன ஒன்றானதால் பெரிதாகத் தெரியவில்லை. பொருட்களை எல்லாம் அட்டைப்பெட்டிகளிலும், பைகளிலும் கட்டியதுதான் கொஞ்சம் உளைச்சல் எடுத்தது. ஏனென்றால் சில பொருட்களை சென்னை வீட்டில் ஓர் அறையில் போட்டு விட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் எதை எடுத்துக் கொள்ள எதை விட என்ற ஒரு குழப்பம். எப்படியோ மூட்டை கட்டி வந்து சேர்ந்து இந்த வீட்டில் பொருட்களை ஒரளவு அடுக்கியாகிவிட்டது. இன்னும் சில பல வேலைகள் இருக்கின்றன. (ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றி கீதாக்காவிடம் நிறையவே அனுபவக் கதைகள் இருக்கும்!!!)

சில நாட்களாக பொருட்கள் எல்லாம் கட்டி வைக்கப்படுவதைப் பார்த்து, சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்த கண்ணழகிக்கு நன்றாகவே புரிந்துவிட்டது போலும். இவர்கள் எங்கேயோ போகப் போகின்றார்கள் என்று. ஒன்றரை வயதில் பாண்டிச்சேரியிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் சென்னைக்கு வந்தவளுக்கு இப்போது (ஒன்பதரை வயது) இதுவே முதலான மிக நீண்ட தூரப் பயணம். என்றாலும் எந்தவித பயமும் இன்றி மிக மிக நல்ல பெண்ணாக வந்தாள். நன்றாகவே பக்குவப்பட்டுவிட்டாள்.

ஊர் பிடித்திருக்கிறது. ஓ! ஊர் என்று சொல்லக் கூடாதோ! சரி ஊரு. இருப்பது முக்கிய நகரத்திலிருந்து அதாவது ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தள்ளி இருக்கும் சிறு நகரம் (டவுன்) அருகில் ஒரு கிராமம் என்று சொன்னாலும் வளர்ந்திருக்கும் ஊரில். பசுமை அழிந்துதான் வருகிறது. அருகில் சில ஏரிகள் இருப்பதாக கூகுள் சொல்கிறது. ஆனால் படங்கள் சொல்லுவது “எப்படி இருந்த நான் இப்படியானேன்” என்ற வசனத்தைதான். இன்னும் சில வருடங்களில் இந்த ஏரிகள் கூகுள் வரைபடத்தில் காணாமல் போய்விடும் அபாயம் வெட்ட வெளிச்சம். வளர்ச்சி என்ற பாசாங்குப் பெயரில் நாம் கொடுக்கும் மிகப் பெரிய விலை என்றே தோன்றுகிறது. கிராமங்களே இல்லாமல் ஆகிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது. நான் முன்பு கண்ட பெங்களூர் அல்ல தற்போதைய பெ(ப)ங்களூரு!

கடைகளில் மக்களுக்குத் தமிழ் புரிகிறது. கொஞ்சம் பேசவும் செய்கிறார்கள். ஹிந்தி நன்றாகவே பேசுகிறார்கள் என்பதால் தமிழ் மற்றும் ஹிந்தி பேசி சமாளிக்க முடிகிறது. என்றாலும் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிட நடையில் ஹைவே. இந்த ஐந்து நிமிட நடைக்குள் அன்றாடத் தேவைகளுக்கான கடைகள், மாவு மில், மிக்சி, க்ரைண்டர், கேஸ் அடுப்பு, மொபைல் சரி செய்யும் கடைகள், ரீ சார்ஜ் செய்யும் கடைகள், சாப்பாடு கடைகள் அத்தனையும் இருக்கின்றன.

நந்தினியும் பரவாயில்லை நன்றாகவே இருக்கிறாள். சற்றுக் கொழுப்புடன். சென்னையில் ஆவின் அவ்வப்போது வாங்கினாலும், வீட்டிற்கு அடுத்தாற் போல் கறவைகள் இருந்ததால் பால்  புதியதாகக் கிடைத்தது. இங்கு கறவைகள் அருகில் இருக்கிறார்களா என்று இனிதான் பார்க்க வேண்டும்.

இங்கு காவிரி தண்ணீர் கொஞ்சமேனும் வரும் என்று நினைத்து வந்தால் இங்கும் தண்ணீர்க் கஷ்டம் எங்கள் பகுதியில். பிற பகுதிகள் பற்றி தெரியவில்லை. ஒரு வாரத்தில் இரு நாட்கள்தான் – செவ்வாய் மற்றும் சனி – தண்ணீர் சம்பில் வருமாம். ஆனால் சென்ற வாரத்தில் வரவே இல்லை. ஏற்கனவே டாங்கில் இருந்த தண்ணீரை வைத்துச் சமாளித்துக் கொண்டிருந்த போது வியாழன் மாலையிலிருந்து பிரச்சனை தொடங்கியது. எனவே சனிக்கிழமை தண்ணீர் வருகிறதா என்று மாலை வரை பார்த்துவிட்டு வராததால் அக்கம்பக்கம் விசாரித்து தண்ணீர் லாரிக்குச் சொல்லிட 10 நிமிடத்தில் வரும் என்றார்கள் வந்தும்விட்டது. 4500 லி 300 ரூ. அது போல பவர் ஷட் டவுன். தினமும் ஒரு மணி நேரம் கட் ஆகிறது. அது தவிர அவ்வப்போதும் போய் வருகிறது. 

குப்பைத் தொட்டிகளே இல்லை. பல தெருக்கள் சுற்றிப் பார்த்தாயிற்று. வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வண்டி வரும் என்றார்கள் ஆனால் இந்த ஒருவாரத்தில் வரவே இல்லை. எங்கு கொண்டுக் கொட்டுவது என்று தெரியவில்லை. அருகில் இருப்பவர்கள் ஆங்காங்கே காலியாக இருக்கும் மனைகளில் கொட்டிவிடுகிறார்கள். அந்த மனைகளுக்கு அடுத்தாற் போல் இருக்கும் வீடுகளில் கொசுக்கள் வருமே! துர்நாற்றமும் வருமே. நல்லதில்லையே. நமக்கு அப்படிக் கொட்டும் பழக்கம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் பல பைகள் குப்பையுடன் முழித்துக் கொண்டிருக்கின்றன. 

இத்தனை நாள் பி எஸ் என் எல் மட்டுமே பழகியிருந்த என் கணினிக்கு ஏனோ ஏர் டெல் மற்றும் மொபைல் ஜியோ ஹாட்ஸ்பாட்டை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை போலும். மறுத்தது. அப்புறம் எப்படியோ சமாதானப்படுத்தி ஒரு வழியாய் ஏற்றுக் கொள்ள வைத்தாகிவிட்டது. இதோ மீண்டும் வலைப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டேன்.

கூகுள் தேவதைதான் கன்னட ஆசிரியை. இப்பத்தான் சிறிய சிறிய வார்த்தைகள் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். எனவே கில்லர்ஜி கன்னடத்தில் பின்னூட்டம் கொடுத்து பயமுறுத்தாமல் இருக்க புலியூர் பூஸானந்தாவையும், தேவதையையும் வேண்டிக் கொண்டு காவல் தெய்வங்களாகப் போட்டுவிட்டேன்!!!!!!!

அடுத்த பதிவுக்கு மேட்டர் வேண்டுமே! அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அடுத்த பதிவில் மாட்டனாடறேன்!

-----கீதா

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

மனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி!......அரவிந்தனின் பார்வை - கா செ கோ


முதலில் ஒரு சிறு அறிமுகம்.

எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக் கொண்டார். வாசித்து என்னை அலைபேசியில் அழைத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றி விரிவாகக் கூறி, கதையையும் விமர்சித்து நன்றாக இருந்ததாகச் சொன்னார். இதை எதிர்பாராத எனக்கு அவர் விவரித்திட விவரித்திட மகிழ்ச்சி மேலிட்டது ஆனால் பதில் அளிக்க வார்த்தைகள் வரவில்லை. அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சியாக நினைத்திருந்த வேளை, மகேஷ் 4 புத்தகங்கள் வாங்கி தன் நண்பர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். அவரது நண்பர்களில் ஒருவரான, திரு அரவிந்தன் புத்தக விமர்சனத்தை ஆடியோ ஃபைலாக அனுப்பியிருந்தார். சற்றும் எதிர்பார்க்கவில்லை. திக்குமுக்காடிப் போனேன். என் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அரவிந்தன் அவர்களுக்கும் பார்வைத் திறன் இல்லை என்பதை அறிய நேர்ந்ததும் வியப்பு இன்னும் கூடியது. நிறைய புத்தகங்கள் வாசிப்பதாகத் தெரிகிறது. என் மகிழ்ச்சியை இங்கு விவரித்திட வார்த்தைகள் இல்லை. கதையில் நல்ல அம்சங்களையும், குறைகளையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதோ அவரது விமர்சனத்தை எழுத்து வடிவமாக்கி இங்கு எல்லோரது பார்வைக்கும் கொடுக்கிறேன். மகேஷிற்கும் அரவிந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். என் மகிழ்ச்சியைச் சொல்லிட முடியாமல் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

------துளசிதரன்

வணக்கம் துளசிதரன் சார்,

நான் அரவிந்தன். சென்னையிலிருந்து பேசுகிறேன். மகேஷின் நண்பர். மகேஷ் தான் எனக்கு உங்களின் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். இந்தப் புத்தகத்தை படித்து அதனால் ஏற்பட்ட உணர்வுகளைப் பகிரலாம் என்று நினைத்து இந்த ஆடியோவை அனுப்புகிறேன். முதலில் என்னை மன்னிக்கணும் துளசிதரன் சார். உங்கள் ப்ளாகை நான் ரெகுலராக ஃபாலோ செய்வதில்லை. இரண்டு, மூன்று பதிவுகள் தான் படித்திருக்கிறேன். ஆனால் ஸ்ட்ரெயிட்டா உங்கள் நாவலான காலம் செய்த கோலமடி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரொம்ப சிம்பிளான நாவல். 32 வருடங்கள் காத்திருந்து அந்தந்தக் கதாபாத்திரங்கள் வயதாகும் போது கதாபாத்திரங்களின் உணர்வுகளை, உணர்வு பூர்வமாகப் புரிந்து எழுதியிருக்கீங்க. அருமையான ஒரு நாவலை கொடுத்திருக்கீங்க சார். இந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு எந்த மாதிரி உணர்வுகள் ஏற்பட்டது என்றால், தி.ஜா அவர்களின் மோகமுள் மற்றும் ஜெயமோகன் அவர்களின் அனல்காற்று. விஷ்ணுபுரம் இதெல்லாம் வாசித்த போது, மிகப் பெரிய நாவலின் அடையாளம்னு சொல்லுவாங்க அதாவது மனிதர்களின்  மனங்களைக் கிழித்து-உள் சென்று பார்க்கிற யுத்தி.

எல்லார் மனசுலயும் இந்த சமூகக்கட்டுப்பாடுகளை மீறலாமா என்ற ஆசை இருக்கத்தான் செய்யும்அதையும் நீங்க ஓரளவு நல்லா காட்டியிருக்கீங்கஅப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னோட நிலையை அப்படியே சொல்றா மாதிரியே இருந்துச்சுஅப்படியே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பக்கத்துலயே நான் இருக்கேன்ற ஒரு எண்ணம் தோணிச்சுஅது ஒரு புத்தகத்தோட மிகப் பெரிய சக்ஸஸ்ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசிக்கிறவரின் மனநிலைக்குள்ள போய் நம்மளும் இந்த நிலையில் இருந்திருந்தா நம்மளும் இப்படித்தான் செயல்பட்டிருப்போம் அப்படினு தோண வைக்குதுஅது ரொம்ப மிகப் பெரிய சக்ஸஸ்இந்த நாவலின் எழுத்து பிடிச்சதுக்கும்வாசித்ததுக்கும் காரணம் இதுதான்.

மனிதன் வெளில ஒரு வேஷம் போடுவான், சமுதாயத்துல எல்லார் முன்னாடியும் ஒரு ப்ரெஸண்டபிளா, நல்லவிதமா தன்னை காட்டிக்க. அப்படி அனைத்து நாவல்களிலும் உள்ள கதாபாத்திரங்களின் ஆழ்மனதைக் கிழித்துப் பார்ப்பார்கள் அவர்கள். மனிதன் ஆயிரம்தான் மாடெர்னைஸ்டா ஆகியிருந்தாலும், என்னதான் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றில் முன்னேறியிருந்தாலும் அடிப்படையில விலங்குனுதான் சொல்லுவாங்க. சமுதாய விலங்கு. அவனுக்கு எல்லா விலங்குகளுக்கும் இருக்கிற அடிப்படை ஆசைகள், பசிஉணவுப் பசியிலிருந்து எல்லாப் புலன்களுக்கும் இருக்கற பசிஇருக்கிறது. சமுதாய முன்னேற்றம் கருதி, விதிக்கப்பட்டிருக்கும்  சமூகக்கட்டுபாடுகள், விதிகள் எல்லாவற்றையும் மனிதன் பின்பற்ற வேண்டும் என்பதற்காகக் கஷ்டப்பட்டு, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந்தே அவ்விதிகளைப் போதித்து, ஆசிரியர்களும் கற்பித்து வளர்க்கிறார்கள். ஆனால், என்னதான் இருந்தாலும் அந்தச் சமூகக் கட்டுப்பாடுகளை மீறத் துடிக்கும், அந்த ஆதிகால மனித உணர்வு, விலங்கியல் உணர்வு எப்படிச் செயல்படுகிறது என்பதை மிகவும் தத்ரூபமாகக் காட்டியிருந்தீங்க. அதுவும் அந்த கோபால் என்கிற கேரக்டர் மூலமா.

இயல்பா அவன் மனசு எப்படிச் செயல்படுது, அவன் சின்ன வயசுலருந்து வளர்ந்த முறை, அவன் எதனால அந்த உணர்வுகளுக்கு ஆளாகிறான் எல்லாம் வருது. எனக்கு இந்தக் கதையைப் படிக்கும் போது யாரும் கெட்டவங்கனு ஒரு முடிவுக்கு வரவே முடியலை. எல்லா சைடுலயும் அவங்க சைட எடுத்து சொல்லியிருக்கீங்க. முப்பரிமாணம்/த்ரீ டைமென்ஷனல் ஸ்டோரினு உங்க உரையிலேயே சொல்லியிருந்தது சம்பவங்களை அந்த மூன்று ஆட்கள் அவங்களுடைய கோணத்தில சொல்லியிருப்பது ரொம்ப அருமையா இருந்தது.

கோபாலின் மனநிலைஅவன் எவ்வளவு தூரம் விலகிப் போக விலகிப் போக முயற்சி பண்றான்பட் அவனுடைய இயற்கையான ஆசை ப்ளஸ் அவன் நண்பர்கள்ல அவனை அட்ராக்ட் பண்ணின போஸ் கதாபாத்திரம் அவனை போக விடலைஇருந்தாலும் அவன் கடைசிவரைக்கும் அந்த எம் ஏ படிப்பைநாம வந்ததன் நோக்கம் அதுதான் என்று அவன் மனது திரும்ப திரும்பச் சொன்னாலும்அவனால் அவனை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை என்பதை சொன்ன விதங்கள் அதெல்லாம் ரொம்ப இயல்பா இருந்துச்சுநான் அந்த இடத்துல இருந்திருந்தாலும் நானும் அப்படித்தான் செயல்பட்டிருப்பேன்னு தோணிச்சுஅதனால அவனை என்னால கெட்டவனா நினைக்கவே முடியலை.

ஒரு காலத்துல நாம ஒரு சிலரை எதிரியா நினைச்சுருப்போம்ஆனா அதுவே கொஞ்ச நாள் பிரிஞ்சு வாழ்ந்து அப்புறம் யாரை எதிரியா நினைச்சோமோ அவங்க மேலேயே ஒரு அன்புபாசம்நாம செஞ்சது ஏதோ தப்போனு தோணும்எனக்கே கூட அப்படியான அனுபவம் ஏற்பட்டிருக்குநான் ஆபீஸ்ல சில பேரோடு சண்டை போட்டுருக்கேன்அவங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகி போனப்புறம்ஏண்டா சண்டை போட்டோம் என்று தோன்றும்அதுக்கு முன்னாடி அவங்க செஞ்ச நல்லதெல்லாம் அவங்க இல்லாதப்பதான் தோணும்அதெல்லாம் அப்படியே வாழ்க்கைல நடக்கற யதார்த்தத்தை அப்படியே காட்டியிருக்கீங்க


படம் : ஓவியர் தமிழ்ச்செல்வன் – மிக்க நன்றி தமிழ்.

அதே போல லதா கதாபாத்திரம். அவங்களுக்குச் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதும், ஹஸ்பண்டோட இயல்பா வாழ முயற்சி பண்ணுவது,  ஒரு சாதாரண, சராசரி குடும்பப் பெண்ணுக்கு என்னென்ன உணர்வுகள் எல்லாம் இருக்குமோ வெளியாட்களைப் பார்த்தா, சொந்த கணவனை பார்த்தா எல்லாம் கம்பேரிஸன் பண்ணி பண்ணி எப்படி எப்படி அவங்க உணர்வுகள் எல்லாம் மாறுமோ, “எனக்குக் கிடைச்சது பாக்கியம், இந்த வாழ்க்கையை விட்டுவிடக் கூடாது என்றெல்லாம் அவங்க உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் மனசுக்குள்ள ஒரு போராட்டம்நிறைய வெளி ஆட்கள் செய்யும் தந்திரங்களைக் கவனித்ததின் விளைவு, அவங்க வீட்டுல பிச்சையம்மாவே வாழ்க்கைல ஒரு கட்டத்தில தப்பு செஞ்சது அவங்களுக்குத் தெரிய வந்தது தவறான நடத்தை கொண்ட பக்கத்து வீட்டுக்காரி அவள் தவறை மறைக்க லதாவிடம் பிச்சையம்மாவை கோள் சொல்லியதின் மூலமா……..எல்லாம் இயல்பா இருக்குது. சாதாரண மனிதன் என்னதான் வெளிப்படையா நல்லவன் மாதிரி காட்டிக்கிட்டாலும் அவன் மனசுக்குள்ள நினைக்கறதெல்லாம் ஓரளவு நீங்க வெளிப்படுத்தியிருக்கீங்க.

லதாவுடைய கதாபாத்திரம். அவங்க சின்ன வயசுலருந்தே ஆரம்பத்திலிருந்தே துணிச்சல். அந்த தியேட்டர்ல அவன் கை பட்டப்ப நான் ஏன் அந்த அளவு ரியாக்ட் பண்ணினேன்? நான் பதினொண்ணாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பையன் என்னை தொடலையா?’ அப்படி எல்லாம் நினைப்பது இயல்பாவே நடக்கும் விஷயங்களை சர்வசாதாரணமா எடுத்துக் காட்டியிருந்தீங்க. கொஞ்சம் கொஞ்சமா அந்த நாவல்ல ரொம்பச் சிக்கலான சப்ஜெக்டை எடுத்து அருமையா கையாண்டிருக்கீங்க. படிக்கறவங்க யாருக்கும் முகம் சுளிக்காதபடி எல்லாரும் உணர்ந்து படிக்கறபடி வெற்றிகரமா ப்ரெசன்ட் பண்ணியிருக்கீங்க.

துரைராஜ் கதாபாத்திரம். துரைராஜ் பத்தி வாசிக்கும் போது அவர் எப்படி காலேஜ்ல பேராசிரியராக, காலேஜில் நடக்கும் தினசரி சம்பவங்களை அவர் விவரிப்பது எல்லாமே ரொம்பவே இயல்பா தத்ரூபமா இருந்துச்சு. கதையில் 83ல் நடந்திருந்தாலும், நான் 2005-2008 வரை லயோலா காலேஜில் படிச்சேன். அந்த அனுபவத்துக்கும், 83ல் நடந்ததற்கும் ரொம்ப வித்தியாசம் எதுவும் இல்லை. நான் படிச்சப்பவும் போர்ட்லதான் எழுதி பாடம் நடத்தினாங்க. பவர் பாயின்ட் எல்லாம் அப்பதான் ஆரம்பக்கட்டத்துல இருந்தது. மிஞ்சினா பெரிய “OMR” ஷீட்டை தொங்கப் போட்டு பாடம் எடுப்பாங்க. ஸிஸ்டம்ல ப்ரின்ட் எடுத்துட்டு வந்து நோட்ஸ் போட்டு பாடம் எடுப்பாங்க. பெரிய இன்ட்ரெஸ்ட் எல்லாம் இருக்காது. லயோலா காலேஜ்ல படிச்சப்ப எனக்குத் தோணும் ஏண்டா இவ்வளவு கேவலமா இருக்கு சொல்லித்தர விதம் எல்லாம். இதெல்லாம் வைச்சுப் படிச்சு என்ன யூஸ் அப்படினு எல்லாம் தோணும்.

அதெல்லாம் பேராசிரியர் மனசுல இருக்காதானு தோணிச்சு. அதே விஷயங்கள் எல்லாம் துரைராஜ் மனசுலயும் இருக்கு. என்ன பாடம் எடுத்து சாதிக்கறோம். என்ன எஜுகேஷன் சிஸ்டம் இது. சும்மா கடமைக்காகப் பாடம் எடுத்துட்டுப் போறோம். குருகுலம் மாதிரி அனுபவப் பூர்வமா யாருமே பாடம் எடுக்க மாட்டேன்றோம். விடைத்தாளும் கடமைக்குத் திருத்தறோம். அங்கங்க ரெண்டு மூணு பாயின்ட்ஸ் மட்டும் இருக்கானு பார்த்து மார்க் போடறோம். அந்த மார்க்கிங்க் மெத்தட்லயும்….டார்கெட்இத்தனை மார்க் போட்டு இத்தனை ஸ்டூடன்ஸை பாஸ் பண்ணனும். இப்படிப் பாடம் எடுத்து என்ன யூஸ். மாணவர்களுக்கு என் மேல என்ன மதிப்பு வரும். எனக்கு மாணவர்கள் மேல என்ன மதிப்பு வரும் அப்படின்ற எண்ணங்கள் எல்லாம் இருக்கு. இருந்தாலும் அவங்களாலயும் மாத்த முடியாதுன்ற அளவுக்கு சிஸ்டம் இருக்கு. எல்லாருக்குமே மாத்தணும்ன்ற ஆசை இருக்கு ஆனால் மாத்த முடியாத அளவுக்குதான் ஸிஸ்டம் இருக்கு. என்ன சேஞ்சஸ் வரணும்ன்றதையும் அருமையா சொல்லிருக்கீங்க.

படம் : ஓவியர் தமிழ்ச்செல்வன் – மிக்க நன்றி தமிழ்.

இங்க்லிஷ் லிட்ரேச்சர் ஆசிரியரா அந்த எடிபஸ் கதையை நடத்தும் போது இருந்த மன நிலை… ‘அதை சாதரணமா மாத்தவே முடியாது, விதி என்ற பேராசிரியர், அதைப் பாடமா நடத்தும் போது சர்வசாதாரணமாகக் கடந்து போக முடிந்த அவரால் நிஜவாழ்க்கையில் நடப்பதைக் கடந்து போக முடியலை. அப்போது நிகழும் நிகழ்வுகள் எல்லாமே சீர்ணடையாந   கதையாகக் கையான்டுருக்கீங்க. இயல்பா இருந்துச்சு.

எனக்கு இன்னும் சில விஷயங்களை விவரிச்சு எழுதியிருக்கலாம்னு தோணிச்சு. என்னன்னு சொல்லனும்னா துரைராஜ், லதா, கோபால் கேரக்டர்கள் இவர்களுக்கிடையில் நடக்கும் சம்பவங்கள் முதலில் விரிவாகச் சொல்லப்பட்ட அளவு, அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் பின் நடப்பவை விளக்கமாகச் சொல்லப்படவில்லை என்று தோன்றியது.  அதே போல ஜெயலட்சுமி கதாபாத்திரம். அவர் துரைராஜுவின் வாழ்வில் மாணவி நிலையிலிருந்து எப்படி மாறுகிறார் என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும் தெளிவாகவும்  சொல்லியிருக்கலாமோனு தோணிச்சு.

இன்னொன்னு கோபால் அப்புறம் அவன் எம் ஏ படிப்பைத் தொடர்ந்தானா? இல்லை வேற என்ன ஆகிறான் என்ற குழப்பங்கள் எல்லாம் இருக்கும் போது அதைப்பத்தி எதுவுமே சொல்லாம, திடீர்னு அவன் டிஎஸ்பியா வந்து நிக்கறான், போஸ் காட்டுலாகா அதிகாரியாக வரான். போஸுக்கு ஒரு சின்ன லாஜிக் சொல்லிருக்கீங்க. கோபால் அப்புறம் என்ன பண்ணினான்? எப்படி போலீஸானான்எப்படி அவன் வாழ்க்கை மாறிச்சு? அதுக்கு அப்புறம் அவன் வாழ்க்கைல நடந்த மாற்றங்கள் என்னனு தெளிவா சொல்லாத மாதிரி இருந்துச்சு. இந்த இரண்டு விஷயங்கள் மட்டும் கொஞ்சம் நெருடலா இருந்துச்சு.

நிறைய காரணங்கள், ஒருவேளை நாவல் ஏற்கனவே ரொம்ப லெங்க்தா போயிடுச்சுனு போட வேண்டாம்னு நினைச்சீங்களா. இல்லைனா துரைராஜ்ன்றவர் புத்தகத்தை எழுதினவரின் பிரதிபலிப்பு மாதிரி இருக்கு. ஏன்னா அவரும் ஒர் ஆங்கில ஆசிரியர் துரைராஜும் ஆங்கிலப் பேராசிரியர். அதனால இந்த ரிலேஷன்ஷிப்பை கொஞ்சம் விலாவாரியா எழுதியிருந்தா இது இவர் வாழ்க்கைல நடந்த சம்பவத்தை எழுதறாரோனு தோணிடுமோனு நினைச்சு எழுதாம விட்டுட்டாறானு…..சும்மா விளையாட்டுக்குத்தான் சொல்லறேன்….அப்படி எல்லாம் தோணிச்சு.

மத்தபடி புத்தகம் சூப்பர். என் மனதை பாதித்த புத்தகம். இப்படி ஒரு அருமையான புத்தகத்தை 32 வருஷம் கஷ்டப்பட்டு எழுதிருக்கீங்க….இது போன்ற புத்தகங்களை இனியும் நீங்க கொடுக்கணும். வாழ்த்துகள், நன்றி ஸார்.

------அரவிந்த் (பதிவர், நண்பர் திருப்பதி மகேஷின் நண்பர்)

(அசிஸ்டென்ட் மேனேஜர், டிப்பார்ட்மென்ட் ஆஃப் சேல்ஸ், பேங்க் ஆஃப் பரோடா ஸ்பெஷலைஸ்ட் மார்ட்கேஜ் ஸ்டோர், சென்னை)

ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26


புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303

contact number and email id to get the book : 9940094630 
thulasithillaiakathu@gmail.com

புதன், 11 ஜூலை, 2018

மாயத்திரையுலகின் மறுபுறம்


திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ்ந்து கைதட்ட ஆளில்லாத நாட்களில் தனிமையில், வறுமையில் வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மரணத்தின் பிடியில் அகப்பட்டுப் போவார்கள். ஆனால், இறந்த பின்னும் அவர்களில் பெரும்பான்மையோர் மக்கள் மனதில் வாழ்வார்கள். அறிஞர்கள், மேதைகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் போல் ஓரிடம் மக்கள் மனதில் ஏற்படும் என்பது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான். எல்லோரையும் பாதிக்கும் மண், பெண், பொன் ஆசைகள் அவர்களையும் பாதிப்பதுண்டு.தியாகராஜ பாகவதர் காலம் முதல் பல பல பிரச்சனைகளில் திரையுலகப் பிரமுகங்கள் சிக்கித் திக்குமுக்காடி இருக்கிறார்கள். எம் ஆர் ராதா, எம்ஜிஆரை சுட்டே இருக்கிறார். அவர்களில் தானுண்டு தன் வேலையுண்டு என்று நம்பியார், சிவகுமார் போல் வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் உண்டுதான். தமிழகத்திலும், ஆந்திராவிலும் அரசியலில் இறங்கி வெற்றி பெற்று நாடாண்ட எம்ஜிஆரும், என்டிஆரும் திரையுலகில் உள்ளவர்கள் எதுவரை போகலாம் என்று உணரச் செய்தவர்கள். அவர்களை போல் அரசியலில் இறங்கி, வேண்டாம் இந்த வம்பு என்று திரும்பிய சிவாஜியும், நஸீரும்(கேரளா) அரசியல் எல்லோருக்கும் ஏற்றதல்ல என்பதை உணரச் செய்தவர்கள். இப்படி திரையுலகு ஒரு கனவுலகு மட்டுமல்ல ஒரு அற்புத உலகும் கூடத்தான். அதில் தொட்டதெல்லாம் பொன்னாக்கி வாழ்வாங்கு வாழ்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையினர் குறிப்பாகப் பெண்களின் நிலை சிறிது பரிதாபகரமே. திரையுலகும், வெளியுலகும் ஒரு சேர அவர்களை எப்போதும் வேட்டையாடிச் சித்திரவதை செய்து கொண்டே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் கொச்சியில் விமானத்திலிருந்து இறங்கிய ஒரு நடிகை கடத்தப்பட்டு, ஆபாச புகைப்படங்களும், வீடியோவும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வழக்கில் மலையாளத் திரையுலகில் மூன்றாமிடம் எனக்குத்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு நடிகரின் பங்கு இப்போதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் 85 நாட்கள் அவர் சிறைச்சாலையில் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த நடிகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மலையாள திரையுலகில் நடத்திவரும் திரையுலக ரவுடி ராஜ்யம் சாதாரண மக்களுக்கு முழுமையாகத் தெரியவந்தது.

கார் விபத்துக்குள்ளான நடிகர் ஜகதி ஸ்ரீகுமார் சில வருடங்களுக்கு முன் மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் நடிப்பாற்றல் மிக்க ஜகதியை அந்த விலக்கல் பாதிக்கவே இல்லை. மட்டுமல்ல எப்படியோ ஒருவழியாக அவருக்கும் சூப்பர்ஸ்டார்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் தீர்ந்தும் விட்டது.
மலயாளத் திரையுலகில் எண்பது காலகட்டங்கள் வரை இது போன்ற பிரச்சனைகள் இல்லை. 500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் ரெக்கார்ட் சாதனை படைத்த பிரேம் நசீரும், கல்லூரி பேராசிரியரான மதுவும், சப் இன்ஸ்பெக்டரான சத்யனும், அதன் பின் வந்த சோமன், சுகுமாரன் போன்றவர்களும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்துவந்தவர்கள். மட்டுமல்ல பரதன், பத்மராஜன், ஸ்ரீகுமாரன்தம்பி போன்ற இயக்குனர்கள் புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தவர்கள். பரதனும், பத்மராஜனும் மறைந்த பின், நாயகர்களின் ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று மலையாளத் திரையுலகையே விழுங்கிவிட்டது.

மம்முட்டி, மோகன்லால் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஏற்றபடி கதைகள் உருவானது. காட்சிகளும், வசனங்களும் மாற்றப்பட்டன. தங்களுடன் நடிக்க வேண்டிய நடிகைகள், நடிகர்கள், ஏன்? பாடகர்கள் வரை சில நேரங்களில் அவர்களே தீர்மானிக்கும் நிலை வந்தது. இயக்குநர்கள் உள்ளிட்ட எல்லோரும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை. இதனிடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்களை விட நான்தான் மூன்றாம் சூப்பர் ஸ்டார் என்று வந்த நடிகரைப் பற்றித்தான் ஏராளமான குற்றட்சாட்டு. நினைத்ததை முடிக்கும் அந்த நடிகர் வளர்ந்து கேரளத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் எனும் நிலை வந்ததோடு, அவர் வைத்தது சட்டமாகிவிட்டது. நடிகர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், டிஸ்ட்ரிப்யூட்டர்கள் சங்கத்திலும், ஏன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திலும் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிட்டது. அவரை எதிர்த்தவர்களை எல்லாம் வேறோடு சாய்க்கும் அளவுக்கு வளர்ந்த அவரைக் கண்டு சூப்பர் ஸ்டார்களே பயந்து அவருக்கு எதிராக ஒன்றும் செய்யவோ, பேசவோ முடியாத நிலைதான் இன்று.

Malayalam film producers' body plans TV channel
இயக்குநர்/தயாரிப்பாளர் வினையன்

2007 ல் இயக்குநர்கள் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களுக்கான “மாக்டா” எனும் இயக்கம் இயக்குநர் வினையன் தலைமையில் உருவானது. அதற்கு முன்பே நடிகர் நடிகைகளுக்கான “அம்மா” எனும் இயக்கம் உருவாகி இருந்தது. 2008 ல் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும், இயக்குநர் துளசிதாசுக்கும் இடையில் ஒரு பிரச்சனை. அது “மாக்டா”வுக்கு வந்தது. அவர் தீர்மானிக்கும் ஆட்களை உட்படுத்தாத இயக்குனரையே மாற்ற வேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் பிடிவாதத்திற்கு துணை போகாமல் இயக்குநருக்குச் சாதகமாகப் பேசினாராம் வினையன். விளைவோ, அந்த சூப்பர் ஸ்டாரின் தலையீட்டால் “மாக்டா” பிளந்தது. ஃபெஃப்கா (Fefka) எனும் புதிய சங்கம் உருவானது. அச்சங்கம், இயக்குநர் துளசிதாசுடன் வினையனையும் திரையுலகிலிருந்தே விலக்கிவிட்டது. இதனிடையே திலகன், வினையன் விலக்கப்பட்டதை பொருட்படுத்தாமல் அவரது படத்தில் நடித்தார். உடனே திலகனுக்கும் “அம்மா” விலிருந்து விலக்கு வந்துவிட்டது. மிகச் சிறந்த நடிகரான திலகனை எல்லோரும் ஒதுக்கிவிட்டார்கள். இதற்கிடையில் 16 படங்கள் இயக்கிய, 1988ல் தன் முதல் படத்திற்கு மாநில விருது வாங்கிய அலி அக்பர், 2009 ல் திலகனை நாயகனாக்கி “அச்சன்” (அப்பா) எனும் படம் எடுத்தார். விளைவோ அந்தப்படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல், அரசு திரையரங்கான கோழிக்கோடு ஸ்ரீ யில் மூன்றே நாட்கள் மட்டும்தான்  அப்படம் ஓடியது. அலிஅக்பர் விடவில்லை. மீண்டும் 2011 ல் திலகனை வைத்து “ஐடியல் கப்பில்” எனும் படம் எடுத்தார். ஃபெஃப்கா, திலகனை வைத்து படம் எடுத்த குற்றத்திற்காக அலிஅக்பரையும் விலக்கிவிட்டது.

Image result for actor thilakan
நடிகர் திலகன்

ஆனால் இப்படி “அம்மாவும்” “ஃபெஃப்காவும்” திலகனை வைத்து படமெடுத்த ரஞ்சித்தை மட்டும் ஏனோ விலக்கவில்லை. “இண்டியன் ருப்பி” எனும் அவரது படத்தில் திலகன் நடித்திருந்தார். ரஞ்சித் போல் சிறந்த ஒரு இயக்குனரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்திருக்காலாம் அல்லது இதன் வாயிலாக திலகனுக்கு விலக்கு ஒன்றுமில்லை அவர் தன் வாய்க்கு வந்தபடி பேசி வாய்க்கொழுப்பால் வாய்ப்பிழந்தவர் என்று ரஞ்சித்தை சொல்லவைத்து தங்களை வெள்ளை பூசிக் கொள்ள “அம்மா:வும் “ஃபெஃப்கா”வும் நினைத்திருக்கலாம். மட்டுமல்ல திலகன் கடைசியாக நடித்த மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் “உஸ்தாத் ஹோட்டல்” படத்திற்கும் பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. அப்படி ஆளறிந்து, முகமறிந்துதான் மலையாளத் திரையுலகில் விலக்குகள் ஏற்படுத்தப்படுகின்றன. நகைச்சுவை நடிகர் மாள அரவிந்தனும் வினையன் படத்தில் நடித்தற்காக வாய்ப்பிழந்து  மரணம் வரை வருந்தியவர்தான். நவ்யா நாயர் மூன்றாம் சூப்பர் ஸ்டாருடன் நடித்துக் கொண்டிருந்த போது பிருத்விராஜின் நாயகியானதால் வாய்ப்பிழந்து இப்போது வீட்டிலிருப்பவர். பிருத்விராஜுக்கும் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும் முன்விரோதமுண்டு. பிருத்விராஜ் தாக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக  அன்றும் இன்றும் அறிக்கை விடுபவர். சமீப காலத்தில் மிமிக்ரி நடிகர்களைப் பற்றி பொது மேடையில் பேசிய அனூப்சந்திரன் எனும் நடிகரையும் மூன்றாம் சூப்பர் ஸ்டார் மிரட்டியதாக அனூப் அறிவித்திருக்கிறார்.

இப்படி விஸ்வரூபமெடுத்து மலையாளத் திரையுலகை ஆட்டிப்படைப்பதாகச் சொல்லப்படும் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும் அவரது இப்போதையை மனைவியான பிரபல நடிகைக்கும் உள்ள தொடர்பு கிசுகிசுப்பாக இருந்த போது ஒரு நாள் தாக்கப்பட்ட நடிகை நேரடியாக ஒரு ஹோட்டலில் அவர்கள் இருவரையும் பார்க்க நேர்ந்ததாகவும், உடனே அவர் தன் உயிர்த் தோழியான, மூன்றாம் சூப்பர் ஸ்டாரின் அப்போதைய மனைவியை அழைத்துச் சொல்லிவிட்டாராம். அது பெருமளவு பிரச்சனையாகி அவரது அப்போதைய மனைவி விவாகரத்து வாங்கி மூன்றாம் சூப்பர் ஸ்டாரிடமிருந்து நிரந்தரமாக விலகவே வைத்துவிட்டது.

மூன்றாம் சூப்பர் ஸ்டார் அதன் பின் தன் மகளின் சம்மதத்துடன் தன்னுடன் தொடர்பிலிருந்த நடிகையை இரண்டாம் கல்யாணம் செய்தும் கொண்டார். முதல் மனைவி தன் சொத்துக்களில் நல்ல ஒரு பங்கை மகளுக்காக விட்டுக் கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதனிடையே மூன்றாம் சூப்பர் ஸ்டார் மற்றும் முதல் மனைவியின் பினாமியாக தாக்குதலுக்கு உள்ளான நடிகையின் பேரில் உள்ள சொத்தை அவர் மூன்றாம் சூபர்ஸ்டாருக்குக் கொடுக்க மாட்டேன் என் தோழிக்குத்தான் கொடுப்பேன் என்று சொன்னதுதான் அவர் தாக்குதலுக்குள்ளாக நேர்ந்ததற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது.

எப்படியோ தாக்குதலுக்கு உட்பட்ட போது, மூன்றாம் சூப்பர் ஸ்டார்தான் அதன் பின்னணியில் என்று தாக்கியவர்கள் சொல்லிட, நடிகை துணிச்சலாக எல்லாவற்றையும் போலீசாரிடமும், மறைமுகமாக மீடியாவிலும் சொல்லிவிட்டார். அவருக்கும் மலையாளத் திரையுலகில் வாய்ப்பில்லாமல் செய்ததோடு மட்டுமின்றி இப்படி வேட்டையாடி அவரது மண வாழ்க்கையையே கெடுத்திட முயலும் ஒருவரிடம் இப்படிச் செய்வதில் தவறில்லை என்று அவரது கணவரான கன்னட திரையுலத்தைச் சேர்ந்தவரும் சொல்லி அந்த நடிகைக்குத் உறுதுணையாய் நின்றிருக்கிறார். வழக்கு நடக்கிறது.

சௌம்யா கொலைவழக்கில் கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய காஸ்ட்லி வக்கீல் ஆலூர்தான் மூன்றாம் சூப்பர்ஸ்டாருக்காக வாதிக்க இருப்பவர். பிரதிபலனாக மூன்றாம் சூப்பர்ஸ்டார் ஆலூர் எடுக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆலூருக்கு இது போன்ற வழக்குகள் அல்வா சாப்பிடுவது போல்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த தினம், “அம்மா” இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட மூன்றாம் சூப்பர் ஸ்டாரை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. அதை எதிர்த்து ரம்யா நம்பீசனும், ரீமா கல்லிங்கலும் “அம்மா” இயக்கத்திலிருந்து ராஜினாமாவே செய்துவிட்டார்கள். “அம்மா” உறுப்பினர்களான ரேவதி, பார்வதி மேனோன், பத்மபிரியா போன்றவர்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

திரையுலகப் பெண்களின் இயக்கமான “W.C.C” யும் நடிகைக்காக வாதிட்டு வருகிறது. அத்துடன் “W.C.C.” (விமன் இன் சினிமா கலெக்டிவ்) இயக்கத்தினர் திரையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல பிரச்சனைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். வாய்ப்பிற்காகப் பெண்கள் அவர்களையே திரையுலக பிரமுகர்களுக்குக் காணிக்கையாக்கும் நிலை புதிதல்ல, முன்பும் உண்டுதான். முன்பெல்லாம் ஒரு சிலர்தான் அப்படிச் செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போதோ ஒரு சிலர்தான் அப்படிச் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களையும், அப்படிச் செய்பவர்கள் இல்லாமல் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் இந்நிலையில் அரசும் நீதிமன்றமும் சமூகமும் இதை வெறும் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது. அவற்றை முகம் பாராமல், அரசியல் பாராமல், வலுப்பெறச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அத்துடன் பெண்களும் ஒன்று கூடிப் போராட வேண்டும்.

செவிலியர்களின் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறதே. எல்லா கடைகளிலும் பெண்கள் நின்றே வேலை செய்ய வேண்டும் என்பது தற்போது ஆடையகம் போன்ற கடைகளில் பெண்களுக்கு இப்போது உட்கார ஓர் இருப்பிடம் கிடைத்திருக்கிறதே. இது போல பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மற்றவர்கள் மனமுவந்து நம் தேவைகளை நிறைவேற்றட்டும் என்று நினையாமல், பிரச்சனைகளைத் தயங்காமல் சொல்லி வாதிட்டு அதற்கான தீர்வு காண முயல வேண்டும். ஆண்கள் உள்ளிட்ட எல்லோரும், பெண்களைத் “தாய்” “தெய்வம்” என்றெல்லாம் வாயளவில் சொல்லித் தப்பாமல் தங்களால் இயன்ற மட்டும் வாக்காலும் செயலாலும் தங்களது ஒத்துழைப்பை உறுதிப்படுத்தி ஆவன செய்ய வேண்டும்.

படங்களுக்கு நன்றி கூகுள்/இணையம்

----------துளசிதரன்

புதன், 27 ஜூன், 2018

காலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு கோவைஆவி - திரு கார்த்திக் சரவணன்


எனது புதினம் காலம் செய்த கோலமடி பற்றி கோவை ஆவியின் கருத்துமுதல்ல நான் துளசிதரன் சாருடன் ஆன அறிமுகம் குடந்தை ஆர் வி சரவணன் சார் மூலம் ஏற்பட்டது. குடந்தை சார் தான் ஒரு ஷார்ட் ஃபில்ம்ல நடிக்க போறேன் என்று சொல்லி என்னையும் அழைக்க நான் செல்ல அந்த ஷார்ட் ஃபில்மான பரோட்டா கார்த்திக்கில் துளசி ஸார் என்னையும் ஒரு சின்ன ரோலில் நடிக்கச் சொல்ல நானும் நடித்தேன். அப்படி இன்ட்ரோ ஆனேன். அதில் ஒரு சிறிய காட்சி, சிறிய வசனம். அதன் பின் குடந்தை சாரின் ஷார்ட் ஃபில்மில் துளசிசார் நடிக்க அதில் நானும் நடிக்க சந்திப்பு. அப்புறம் எனது படமான காதல் போயின் காதல் படத்தில் துளசி சார் நடிக்க அப்புறம் ஒவ்வொரு வருடமும் துளசி சார் ஒரு ஷார்ட் ஃபில்ம் எடுக்க நான் பாலக்காடு செல்ல, செல்ல கைரளி ஹோட்டலில் தங்க, இரு நாட்கள் மாத்தூர் சுற்றி படப்பிடிப்பில் கலந்துகொள்வது என்று ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் அஜென்டா என்று ஆனது.

என்னைப் பொருத்தவரைக்கும் எனது நடிப்பு கிராஃபை பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய இன்க்ளைன்டா இருந்தது. முதல்ல மிகச் சிறிய ரோல் அப்புறம் வில்லன் கேரக்டர் அதாவது வில்லனின் தம்பி கதாபாத்திரம். அப்புறம் ஹீரோ ரோல். அதுவும் விவேகானந்தர் ரோல். என்னையும் எனது தொப்பையுடன் என்னை விவேகானந்தராரக உருவகப்படுத்தி எனக்குக் கொடுத்ததற்கு துளசி சாருக்கு ரொம்ப தாங்க்ஸ்.

அவர் படம் எடுக்கும் போது விஷ்வுஅலா பார்த்திருக்கேன். கமாண்டிங்கா மத்தவங்களுக்குச் சொல்லுவது அப்புறம் டப்பிங்கில் டயலாக் டெலிவரி மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறது, எல்லாம் பார்த்திருக்கேன். அப்பதான் சேச்சிதான் ஃபர்ஸ்ட் சொன்னாங்க அவர் ஒரு கதை எழுதியிருக்காரு. அதை ரிவைவ் பண்ணப் போறாரு அப்படினு. இன்னும் முடிக்கலைனும் சொன்னாங்க. அவர் ஸ்க்ரிப்ட் நல்லா எழுதுவாரு. ஆனா இவர் கதை எப்படி எழுதிருப்பாரு? ஏன்னா இவரது ஒவ்வொரு ஷார்ட் ஃபில்மும் எபிக் ரிலேட்டேட், ஸ்கூல் பிள்ளைங்களுக்காக என்று இன்னும் சொல்லப் போனா ஒவ்வொரு கதையும் கொஞ்சம் சமுதாய முரண் கருத்து கொண்டதாக….உதாரணமாக சிம்பிளா சொல்லணும்னா இன்னும் வெளிவராத ஸ்ராவன் த க்ரேட் ல ராவணன் தான் முக்கிய கதாபாத்திரமாக..….கிட்டத்தட்ட காலா  கதைதான் அதை துளசி சார் காலாக்கு முன்னாடியே எடுத்துட்டார்.

அப்படியான கதைகள் எனும் போது இவர் கதை எப்படி இருக்கும் என்று யோசித்த போது சேச்சி சொன்னாங்க இது கொஞ்சம் ரொமாண்டிக் கதைதானு சொன்னாங்க. பரவாயில்லையே அப்ப கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் போலனு நினைச்சேன். அப்புறம் சேச்சி புக் கொடுத்தாங்க. அட்டைல சிவக்குமார், சுமலதா எல்லாம் பார்த்தப்ப ஐயையோ............பத்தாக் குறைக்கு அவர் காலேஜ் முடித்த சமயத்துல எழுதினதுனு சொன்னதும் ஆஹா பழைய கதையா இருக்குமோனு தோணிச்சு. ஏன்னா எனக்கு விறு விறுனு இருக்கணும் கதை.

ஸோ எப்படி இருக்குமோனு நினைச்சு வாசிச்சப்ப ஃபர்ஸ்ட் சாப்டர்லருந்தே எனக்கு ரொம்பப் பிடிச்சுச்சு. கதை சொல்ற விதமும், நேரட்டிவ் ஸ்டைல் வேகமும், அப்படியே ஸ்க்ரீன் ப்ளே போல அப்படியே காட்சிகள் விரிவது போல அப்படியே வாக் த்ரூ பண்ண முடியுது. அந்த ஃபீல் வந்துச்சு உண்மையிலேயே. பழைய கதைனு ஃபீல் பண்ண வைக்கலை. விறு விறுனுதான் போகுது. இப்ப முதல்ல 3 சாப்டர்தான் வாசிச்சுருக்கேன். ஒவ்வொருவருடைய பாயின்ட் ஆஃப் வியூவிலயும் சம்பவம் விவரிப்பது அப்படியே பார்க்க முடியுது. இப்ப இவங்க முழுசும் வாசிச்சதுனால இவங்க சொன்ன குறைகளைப் பார்க்க முடியலை. முழுவதும் வாசித்தால்தான் தெரியும். இப்ப வரைக்கும் எனக்கு எதுவும் தெரியலை. எனக்கும் ஒன்னு தோணிச்சு. ஏன் சிவக்குமார், ஏன் அஜித் அப்படினு. ஆனா எனக்கு கதையை முழுசும் வாசிச்சாத்தான் அவர் ஏன் கொண்டுவந்தார்னு சொல்ல முடியும்னு தோணுது. துளசி சாரோட இந்த முயற்சிக்கு ஹேட்ஸ் ஆஃப். இவ்வளவு பெரிய புக் எழுதறது என்பது ரொம்பப் பெரிய விஷயம். ஒரு கதை ஒரு பக்கம் எழுதவே எவ்வளவு மூச்சுத் திணறுது எனும் போது இப்படியான ஒரு புத்தகம் கொண்டு வந்ததுக்கு துளசி சாருக்கு வாழ்த்துகள்.

திரு கார்த்திக் சரவணனின் கருத்துவணக்கம். எனக்கும் துளசி சாருடைய அறிமுகம் கிட்டத்தட்ட ஆவியைப் போலத்தான். ஆனா, நான் பாலக்காடு போனதில்லை. இங்கு ஆவியின் குறும்படம் காதல் போயின் காதல் எடுத்த போது முதல் அறிமுகம். அப்புறம் குடந்தை சாரின் அகம் புறம் குறும்படம் எடுத்த போது துளசி சாருடன் நெருக்கமான பழக்கம். நிறைய தெரிந்து கொண்டேன். கற்றும் கொண்டேன். இந்த புக்கைப் பொருத்தவரை மன்னிக்கணும். எனக்கு புக் நீங்க ஆவியிடம் கொடுத்ததுமே கிடைத்துவிட்டது. வாசிக்கவும் தொடங்கினேன். மூன்று சாப்டர் படித்தும் விட்டேன். ஆதுக்கு அப்புறம் உடல்நலம் சரியில்லாமல் போனதால் தொடர்ந்து வாசிக்க முடியலை. வாசித்த வரை எனக்குப் பிடித்தது. கதா பாத்திரங்கள் தாங்களே பேசுவது போல வருவது நல்லாருக்கு. முதல் அத்தியாயத்துல, துரைராஜ் சாப்டர் கொஞ்சம் சின்னதாகவும் அடுத்த இரு சாப்டர்களும் கொஞ்சம் ரொம்பப் பெரிசாவும் இருக்குது போல இருக்கு நான் வாசித்தது கம்மிதான். கண்டிப்பா முழுவதும் வாசித்துவிட்டு என் ப்ளாகில் கருத்து எழுதுகிறேன். துளசி சாருக்கு வாழ்த்துகள்.

புத்தகத்தைப் பெற விரும்புபவர்கள் தோழி கீதாவை இந்த நம்பரில் தொடர்பு கொள்ளலாம். (Those who wish to buy a copy of this book may contact Ms Geetha) 9940094630 அல்லது எனது மின் அஞ்சல் thulasithillaiakathu@gmail.com ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26

புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303


--------துளசிதரன்


செவ்வாய், 26 ஜூன், 2018

காலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு பாரத் - திரு பாலகணேஷ்


முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் மகன் திரு ஜ பாரத் அவர்களின் உரை.வணக்கம். நான் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் மகன் பாரத். ரெண்டு நாட்களுக்கு முன்னர் அப்பா என்னை அழைத்து சென்னையில் நண்பர் ஒருவரது புத்தக வெளியீடு இருக்கிறது என்னால் வர இயலவில்லை. போய் கலந்து கொண்டு வந்துவிடு என்று சொல்லி அப்பா எழுதியிருந்த அணிந்துரையையும், கதையின் சுருக்கத்தையும் அனுப்பியிருந்தார். அதை நான் நேற்று இரவு வாசித்தேன். வாசித்ததும் கல்கியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. அவர் ஒரு கதையின் க்ளைமேக்ஸை எழுதியதும்தான் பன்னிரண்டு வருட பாரத்தை இறக்கி வைத்த உணர்வு வந்ததுனு சொல்லியிருந்த அந்த வரிகள் துளசி ஐயாவின் கதை 85 ல் எழுதத் தொடங்கப்பட்டு இதோ இப்போது 2018ல் வெளிவருவதைப் பார்த்ததும் தோன்றியது.
இத்தனை வருடங்கள் கழித்து வெளிவரும் போது துளசி ஐயாவின் முகத்தில் தோன்றும் அந்த உணர்வுகளைப் பார்க்க ஆவலுடன் வந்தேன் ஆனால் அவர் ஊரிலிருந்து வர இயலவில்லை என்பதை அறிந்தேன். என்னால் அதைப் புரிந்து கொள்ள  முடிகிறது. க்ளைமேக்ஸ் எழுதி 12 வருட பாரத்தை இறக்கிய போது கல்கிக்குத் தோன்றிய உணர்வுகள், துளசி ஐயாவுக்கும் இந்த நாவலை முடிக்கும் போது எந்தவிதத்தில் தோன்றியிருக்கும் என்பதை நாவலை வாசித்தால்தான் அறிய முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் கதை வெளிவந்த கதையை அறிந்த போது கல்கியின் வரிகள் தான் டக்கென்று தோன்றியது. இப்படி இந்த வயதிலும் முடிக்கப்படாமல் பரணில் இருந்த நாவலை எடுத்து முடித்து வெளியிடும் முயற்சிகே அவருக்கு ஹேட்ஸ் ஆஃப். என்னைப் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த ஊக்கம் என்றே நினைக்கிறேன். ஐயாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! கூடிய சீக்கிரம் நாவலை வாசித்துவிட்டுக் கருத்து பதிகிறேன். மிக்க நன்றி.

புதினத்தைப் பற்றி நண்பர் பாலகணேஷின் கருத்து.ஒரு வடிவமைப்பாளன் தன்னிடம் வடிவமைக்க வரும் எல்லா புத்தகங்களையும் ஆழ்ந்து படிக்க வாய்ப்பில்லை. வடிவமைப்புடன் பிழை நீக்கமும் கவனிக்கும் பட்சத்தில் மிகவும் ஆழ்ந்து பொறுமையாகப் படித்தாக வேண்டும். அதனாலேயே ஆழ்ந்து படித்தேன். இல்லை என்றாலும் துளசியின் புத்தகம் என்பதால் படித்திருப்பேன் என்பது வேறு விஷயம். இதில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய சில விஷயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். இவங்க சொன்னது போல் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்பது ஒரு சிக்கலான ஆட்டிட்யூட் உள்ள விஷயம். நாவல்கள் இதைப் பற்றி 87, 90 களில் அப்புறம் வந்திருக்கிறது. அதுக்கு முந்தின பீரியட்லேயே ஆரம்பிச்சுருக்கான்றது க்ரேட். பெரிய விஷயம். பட் கொஞ்சம் மிஸ் பண்ணினாலும் விரசம் என்று சொல்லக்கூடிய ஒரு கருவை கூடியமட்டிலும் விரசம் இல்லாம அழகா சொல்லிருக்கிறார் என்ற வகைல பெரிய சவாலை எதிர்கொண்டு இதில் துளசி ஜெயிச்சிருக்கிறார். அதை ரசிக்கும் விதமா சொல்லிருக்கிறார். மூன்று பேர் முக்கியக் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு ஆங்கிளிலும் கதை சொல்லுவது என்பது.. சில வருஷங்கள் முன்னால், 70-80- களில் நாகன் அப்படின்ற எழுத்தாளர் ராணியிலும், தினத்தந்தியிலும் தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருந்தார். அவரது ஃபேவரைட் இது. மூன்று கேரக்டர் இருந்தா மூன்று கேரக்டரும் அவரே கதை சொல்லுவார்.. அந்த பாணியை அதுக்கப்புறம் யாருமே கையிலெடுக்கலை. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இப்ப துளசி கையிலெடுத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை துளசி அப்ப ஆரம்பித்து இப்ப முடிச்சதால அந்த ஸ்டைல் அப்ப இருந்து இப்ப வந்துருக்கிறதோ என்று தெரியலை. பட் ரொம்ப ரெஃப்ரெஷிங்காக இருந்தது. அழகாகவும் இருந்தது.

புத்தகத்துல சில குறிப்பிட வேண்டிய விஷயங்கள்னு நான் நினைப்பது என்னவென்றால் 27 அத்தியாயம் வரைக்கும் ஒவ்வொருத்தரும் மாறி மாறி ஒவ்வொருவர் கோணத்திலும் தெளிவா கதை சொல்லப்படுகிறது. அவன் வந்து சேருவது. ப்ரொஃபசரின் வைஃப் மேல் சபலப்படுவது, ப்ரொஃபஸருக்கு உண்மை தெரியவருவது, அவளைப் ப்ரிவது இந்த சமாச்சாரங்கள் எல்லாம் விரிவாககச் சொல்லிட்டு, அதற்கு அப்புறம் முப்பது வருஷம் கழித்து சந்திச்சு சேருகிறார்கள் என்பதை ஒரே சாப்டரில் வந்தாங்க, சந்திச்சாங்க, பார்த்தாங்க சேருறாங்கனு அவசர கோலமா முடிச்சது போல இருக்கிறது. சேட்டைக்கார அண்ணா சொன்னது போல முன் சம்பவங்களைக் கொஞ்சம் ஷார்ட் பண்ணிட்டு பின் சம்பவங்களைக் கொஞ்சம் விரிவாக்கியிருந்தா ரொம்ப அளவானதாக இருந்திருக்கும். இதுல கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கணும் என்று தோன்றியது. இது ஒரு குறையா எனக்குத் தோன்றியது.

மற்றொரு உறுத்தல். எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை. ஆனால் துளசியின் விருப்பத்திற்காகச் செஞ்சது. திரைப்பட நடிகர்களின் முதத்தை கேரக்டர்களில் கொண்டு வந்தது. அது மிகப் மோசமான உதாரணம். படிக்கறவங்களோட ஈடுபாட்டைக் குறைச்சுடும். அது எனக்குப் பிடிக்கலை. அந்தக் கதாப்பத்திரத்தை ஓவியமாக வரைஞ்சு படிக்கும் போது திங்க் பண்ணுவது என்பது வேற. இந்த நடிகர் மாதிரி இருப்பார் என்று சொன்னால் நாம திங்க் பன்றது எல்லாம் அந்த நடிகருக்குத்தான் போகும் அப்ப நாம கதையை ஆழ்ந்து படிக்க முடியாது என்பது ஒரு மைனஸ் பாயின்ட். இந்தச் சமாச்சாரத்தை அவர் ஏன் செஞ்சார்னு தெரியலை. அவரைப் பார்க்கும் போது கேட்டுக்கலாம்.

மொத்தத்துல படிக்கும் போது ஆரம்பத்துலருந்து கடைசி வரை ஒரு அழகான ஃப்ளோவும், விறு விறுப்பும் இருந்தது. அந்த வகையில செய்ததுல மிக மனதிருப்தி கொடுத்த புத்தகம். அனைவரும் படிக்கக் கூடிய புத்தகம். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26

புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303


---துளசிதரன்