திங்கள், 6 பிப்ரவரி, 2017

அகக்கண் வழியே!

“உலகம் ஜன்னல் வழியாகத்தான் எனக்கு அறிமுகமானது” இதுதான், எழுத்தாளர் எஸ் ரா – எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகமான “தேசாந்திரி” யில் முதல் வாக்கியம்.  நம் எல்லோருக்குமே அப்படித்தான் என்றாலும் அதன் வழி நாம் எதைப் பார்த்தோம் என்பது வேறு!! நமது பார்வையிலிருந்து எதைக் கற்றோம் என்பதும் வேறு!

சில மாதங்களுக்கு முன் இரு நபர்களிடம் பேச நேர்ந்தது. இருவரிடமும் ஒரே கேள்விதான் கேட்டேன்.

“தீபாவளி எல்லாம் நல்லாக் கொண்டாடினீங்களா? நல்லபடியாகப் போச்சா?”

ஒருவர், “அதை ஏன் கேக்கறீங்க மேடம், என்னத்த சொல்லறது? நான் எல்லாம் எங்கேங்க தீபாவளி கொண்டாடறது?” என்று மிகவும் சோகத்துடன் பதிலளித்தார்.

மற்றொருவர், “சூப்பரா போச்சு மேடம். நல்லா எஞ்சாய் பண்ணினேன் மேடம்” என்று நிகழ்வைப் பற்றி விவரித்தார். இருவரின் பதில்களிலும் எவ்வளவு வேறுபாடு!

இரண்டாமவர் மிக மிக நேர்மறை எண்ணம் கொண்டவர். எப்போதும் மகிழ்வாக இருப்பவர். தன்னை மகிழ்வாக வைத்துக் கொள்பவரும் கூட. தான் பார்த்த படங்கள், தொலைக்காட்சியில் பார்த்ததானாலும் சரி, திரையரங்கில் பார்த்ததானாலும் சரி அதைக் குறித்து விவரிப்பார். குறும்படம் பற்றி பேசுவார். நீங்கள் இந்தப் படம் பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்பார்.

நான் மேற்சொன்ன இருவருமே பார்வையற்றவர்கள். ஆனால், இரண்டாமவரின் பதிலைப் பார்த்தீர்கள் அல்லவா??!! அவர், தான் பார்வையற்றவர் என்பதை மறைக்க கண்ணாடி கூட அணிவதில்லை என்பது அவர் தானும் எல்லோரையும் போலத்தான் என்ற அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு!

இரண்டமவரை நாம் எல்லோரும் அறிவோம். வலைப்பதிவர். அவருக்கு. என் மகனின் வயதுதான் ஆகிறது.

அவர் என்னிடம், தான் படத்தில் ரசித்த காட்சிகள், பயணத்தில் ரசித்த இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள் என்று அனைத்தையும் விவரிப்பார். அவரது பயணக் குறிப்புகளை வாசித்தீர்கள் என்றால் ஏதோ அவர் நேரில் கண்டது போலவே இருக்கும். அவர் பார்வையற்றவர் என்பது எனக்கு முதலில் தெரியாது. எனவே எனக்குச் சிறிது கூட ஐயம் ஏற்படவேயில்லை.

அவர் பார்வையற்றவர் என்பதை அறிய நேர்ந்த போது நான் வியப்பின் எல்லைக்கே போய்விட்டேன். அலைபேசியில் பேசிக் கொண்டும், அவரது எழுத்துகளை வாசித்துக் கொண்டும் இருந்த நாங்கள் அவரை முதன் முதலாக விசு அவர்களின் புத்தக வெளியீட்டின் போது வேலூரில் நேரில் சந்திக்க நேர்ந்தது.
துளசிக்கு அடுத்து அமர்ந்திருப்பவர்தான் மகேஷ் அடுத்திருப்பவர் அவரது தம்பி, முத்துநிலவன் அண்ணா
அவர் வேறு யாருமல்ல திருப்பதி மகேஷ். அவர் தனது பெற்றோருடன் திருப்பதியில்தான் வசிக்கிறார். தாய்மொழி தெலுங்கு என்றாலும் பள்ளிப்படிப்பை அவர் சென்னையில், அடையாரில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்ததால் தமிழ் நன்றாகவே பேசுவார், எழுதுவார். தமிழில் ஆர்வம் உள்ளவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். அவரது வலைத்தளம் http://tirupatimahesh.blogspot.com

நேரில் சந்தித்த பின்னர் எங்களது நட்பு இன்னும் விரிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அலைபேசியில், ஸ்கைப்பில் அளவளாவது உண்டு. அப்படி ஒரு முறை அவரை அழைத்த போது,

“மேடம் ஒரு மணி நேரம் கழித்து பேசட்டுமா? வேற ஒன்னுமில்லை, டிவில ஒரு படம் பார்த்துட்டுருக்கேன், ரொம்ப நல்ல சீன் போய்ட்டுருக்கு என்பார் இல்லையென்றால் டிவியில் மகாபாரதம் பார்த்துட்டுருக்கேன். பார்த்துட்டு வரேன் மேடம்” என்பார். எனக்கு வியப்பு ஏற்பட்டதில்லை. அதுதான் மகேஷின் பார்வை!!!

வலைத்தளங்கள், புத்தகங்கள் வாசிப்பார். அதை விமர்சிப்பார். கணினி தொழில் நுட்பம் குறித்து அவரிடம் தெரிந்து கொள்ளலாம். அத்தனையும் விவரிப்பார். பயணம் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர். தான் கேரளாவைப் பார்க்க ஆசைப்படுவதாக என்னிடம் சொல்லி அதற்கான ரயில்கள் அவரது ஊரிலிருந்து என்னென்ன இருக்கின்றன, என்று அனைத்து விவரங்களையும் அட்டவணையைப் பார்க்கவே வேண்டாத அளவிற்கு விரல் நுனியில் வைத்திருந்தார்.

பயணம் மேற்கொண்டு அதனைப் பதிவாகவும் எழுதினார். என்னிடம் அவர் இயற்கைக் காட்சியை விவரித்த போது அசந்து போனேன். அவர் வலை எழுத்தை வாசித்தால் அவர் பார்வையற்றவர் என்பதை அவர் சொல்லவில்லை என்றால் அறியவே முடியாது!

புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்கு அவர் திருப்பதியிலிருந்து வேலூர் வந்து, வேலூரில் இருக்கும் நம் மற்றொரு வலைப்பதிவர், சிவசக்தி-அன்பேசிவத்தின் துணையுடன் வந்தார். அன்பேசிவம் அவரை அழைத்து வந்தார் என்பதைவிட அன்பேசிவத்தை மகேஷ்தான் அழைத்து வந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. திருச்சியில் இறங்கியதும் எந்த நடைமேடைக்குச் சென்று புதுக்கோட்டை ரயிலைப் பிடிக்க வேண்டும் என்ற விவரங்கள் முதல் நிகழ்வு நடக்கும் இடம், முகவரி என்று விவரித்து அழைத்து வந்தது மற்றும் ரயிலில் அவர் பேசிக் கொண்டே வந்த விசயங்களை நாம் கூட அறிந்திருக்க மாட்டோம் அந்த அளவிற்கு அவர் பல விசயங்களை மிகவும் யதார்த்த ரீதியில் பேசிக் கொண்டே வந்தார் என்றும் அன்பேசிவம் என்னிடம் சொல்லிச் சொல்லி வியந்து போனார். நானும் அதை வழிமொழிவேன்.

மகேஷிடம் என்ன துறை பற்றி வேண்டுமானாலும் உரையாடலாம். அவர் அறிந்தும் வைத்திருக்கிறார். அறிந்திராதவற்றை நம்மிடம் கேட்டும் தெரிந்து கொண்டு அடுத்த முறை பேசும் போது கூடுதல் தகவல்கள் தருவார். நமக்கு வியப்பு மேலிடும். புள்ளி விவரக் கில்லாடி அவர்!

நான் அவரிடம் பேசும் போது, “மகேஷ், நீங்கள் இந்தப் படம் பாத்தீங்களா? அந்த இடத்துல இதைப் பாத்தீங்களா?” என்று எல்லோரிடமும் பேசுவதைப் போலத்தான் படங்கள், இடங்கள், புத்தகங்கள் பற்றி எல்லாம் பேசுவேன். மேலும் படியுங்கள் என்று உற்சாகப்படுத்தினால் அவர் அதற்கு மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது குறித்துப் பேசுவார். அவரிடமிருந்து இது வரை எந்த எதிர்மறையான எண்ணமும் வெளிப்பட்டதில்லை. தான் பார்வையற்றவர் என்பதை ஒரு போதும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அசாத்தியத் தன்னம்பிக்கையுடைய இளைஞர்.

தற்போது ஸ்டேட் பேங்கில் வேலை கிடைத்து, பயிற்சியும் முடிந்து, சென்னை வட்டம் என்பதால் திருத்தணி கிளையில் கிடைத்து வேலை செய்கிறார். திருப்பதியிலிருந்து தினமும் காலை 2 மணி நேரப் பயணம், மாலை 2 மணி நேரப்பயணம்.  தனது புது வேலை பற்றி அடுத்த முயற்சி எல்லாமும் அவர் பேசினார். என்னை வியக்க வைக்கும் ஓர் இளைஞர்.

சமீபத்தில் நம் கரந்தை சகோ தன் வலைத்தளத்தில் மகேஷ் போன்ற ஒருவரான வெற்றிவேல் முருகன் என்பவரைப் பற்றி அவரது தன்னம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் தொடராக எழுதியதை அறிந்து வியந்தோம். ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் அறிவோம். இன்னும் பல பார்வையற்ற ஆனால் நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் மற்றும் வாழ்ந்து வரும் அனைவருமே இவ்வுலகைத் தங்கள் அகக்கண் எனும் ஜன்னலின் வழியாக நோக்கியதால்/நோக்குவதால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுச் சாதித்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றனர்/பெறுகின்றனர். அப்பட்டியலில் நம் மகேஷும் இடம் பெறுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

எல்லாப் புலன்களும் இருந்தும் பல மனக்குறைகளுடன் வாழ்ந்து வரும் நாம், இவரையும், இவர் போன்று வாழ்பவர்களையும் பார்த்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. மகேஷ் போன்றோரைக் கண்டு உற்சாகமடைந்து, நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டு, நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன் நாமும் ஜன்னல் வழி இவ்வுலகைப் பார்த்தாலும், நம் அகக்கண் வழியாகப் பார்ப்போம்.

Kindness is the language which the deaf can hear and the blind can see - Mark Twain

The only thing worse than being blind is having sight but no vision - Helen Keller


----கீதா



40 கருத்துகள்:

  1. ஓ இம்முறை தம்பி மகேஷ் பற்றிய பதிவு. மிக அருமை. நீங்க சொன்னதுபோலவே ஆரம்பகாலம் அவர் என்பக்கம் வந்தபோது எனக்கு அவரின் நிலை தெரியாது, பின்பு அவர் சொல்லித்தான் தெரியும், அவர் சொல்லாமல் இருந்தால் யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது.
    நான் ஒருவருடம் எங்குமே வராமல் இருந்து பின்பு இப்போ வந்தபோது, கண்டுபிடித்து ஓடி வந்து நலம் விசாரித்தார், மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர், இது எப்பவும் அவருக்கு இருக்க ஆண்டவன் அருள் புரியோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா மகேஷ் வந்தது தெரியும். நாங்கள் நிறைய வலைப்பதிவர்கள் பற்றியும் பேசியதுண்டு. அவர் நாங்கள் வலைப்பூ தொடங்கும் முன்னரே வலைப்பூ தொடங்கி எழுதுவதால் அவருக்கு நாங்கள் அறியாத பல வலைத்தளங்கள் பற்றி சொல்லியிருக்கிறார். அவர்களில் பலர் இப்போது எழுதுவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார். இடையில் எனக்கு வேலைப்பளு என்று அதிகம் அளவளாவ முடியவில்லை அப்புறம் அவர் தேர்விற்குத் தயார் படுத்திக் கொண்டதாலும், இப்போது அவருக்கு வேலை கிடைத்துள்ளதால் பேச முடிவதில்லை அப்படியும் ஞாயிறு அன்று பேசுவதுண்டு. அவர் மேலும் நன்றாக வர வேண்டும் என்று வாழ்த்துவோம் அதிரா..மிக்க நன்றி அதிரா தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  2. கீதாவின் புண்ணியத்தால் மகேஷ் ஐ இன்று பார்த்தேன், நீங்க உங்க பாட்டுக்கு சொல்லிட்டீங்க துளசியின் அருகில் இருப்பவர் மகேஷ் என..... நான் இதில் துளசி அண்ணன் என த்ரெடிப்பிடிக்க எவ்ளோ கஸ்டப்பட்டேன் தெரிகுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஸாரி.... இங்கு வருபவர்களுக்கு துளசி யைத் தெரியும்....முத்துநிலவன் அண்ன்ணாவையும் தெரியும் என்பதால் விட்டுவிட்டேன். நீங்கள் பார்க்கும் போது உங்கள் இடதுபுறத்திலிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர். சாரிப்பா..இனி ஒழுங்கா எழுதிடறேன்...அதிராவைக் கஷ்டப்பட வைத்தேனே....

      நீக்கு
    2. அச்சச்சோ என்ன கீதா இப்பூடி சொறி எல்லாம் சொல்லிக்கொண்டு... அதெல்லாம் வாணாம்ம் ஒரு பெட்டி குலாப் ஜாமூனாக் குடுத்தீங்கன்னா.... ஹையோ இந்த விசயம் நமக்குள் இருக்கட்டும்.. அஞ்சுகு தெரிய வேணாம்ம்:) படிச்சதும் கிழிச்சிடுங்கோ பீஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
    3. ஓ அதிரா சாரி எல்லாம் சொல்லிக் கொண்டு இல்லை...அஞ்சுக்கு அவங்க பெர்சனல் பாக்ஸ்ல சொல்லாம இங்க சொல்லிட்டு உங்களுக்கு ஒரு பெட்டி குலாப்ஜாமூன் கொடுக்கறன். அப்படியே உங்களோடு போட்டிக்கு மதுரைத் தமிழன் வாராராம்...கொஞ்சம் கவனமாக இருங்கோ..ஹிஹிஹி

      நீக்கு
    4. அச்சச்சோ இப்போ கொஞ்சநாளாக சிவனே என தன்பாட்டில் இருக்கிறார் அவர்கள் றுத்:), இப்போ வம்புக்கிழுத்து தேன்கூட்டில கல் எறிஞ்ச கதையாகிடப் போகுதே எங்க கதை:)

      நீக்கு
  3. எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை, மகேஷ் எப்படி கொம்பியூட்டரில் நாம் போடும் படங்களை எல்லாம் பார்க்கிறார் என, அவரிடம் மேலோட்டமாகக் கேட்டேன் விளக்கம் சொன்னார் , இருப்பினும் எனக்குப் புரியவில்லை, துருவிக் கேட்பது விருப்பமில்லை எனக்கு... மகேஷ் நல்லா இருக்கோணும் அவரது வருங்காலம் சிறப்பாக அமையோணும் எனத்தான் நினைப்பேன். வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் அவரது பாசிட்டிவ்...வாசிக்கும் மென்பொருள் வைத்திருக்கிறார். ஜாஸ்..பிறர் சொல்வது விவரிப்பது....வசனங்கள்...இன்னும் நிறைய...எல்லாம் விட அவரது ஆர் வம், தன்னம்பிக்கை பாசிட்டிவ் எண்ணம்....உள் மனம்....இவைதான்

      நீக்கு
  4. நீங்கள் குறிப்பிடும் அதே வேலூர் நிகழ்வின்போது நண்பர் திருப்பதி மகேஷ் அவர்களையும் அவரது நண்பரையும் நானுன் சந்திக்க நேர்ந்தது. பழகுவதற்கு மிகவும் இனியவர் என்பதை ஓரிரு நிமிடங்களிலேயே கண்டேன். அவரது வலைப்பதிவுகளையும் படித்திருக்கிறேன். பாசிட்டிவ் மைன்ட் என்பதற்கு முழுமையான உதாரணம் மகேஷ் அவர்கள். வங்கிப்பணியில் அவருக்கு நிச்சயமான முன்னேற்றம் காத்திருக்கிறது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். அவரது வாழ்க்கை, உடல் குறைபாடுள்ளவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் என்பது தெளிவு. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் செல்லப்பா சார்! அவரது தன்னம்பிக்கை மற்றும் தன்னைப் பற்றி எதுவும் தெரியாமல் தானும் எல்லோரையும் போலத்தான் என்பது போன்ற அவரது பேச்சுத்தான் என்னை வியப்பிலாழ்த்தி ஈர்த்தது! நல்ல நண்பர் சார். நிச்சயமாக அவர் ஒரு முன்னோடியாக இருப்பார் சார்!

      மிக்க நன்றி செல்லப்பா சார் கருத்திற்கு

      நீக்கு
    2. மிக்க நன்றி செல்லப்பா சார். ஆம் மிகவும் தன்னம்பிக்கை உள்ள இளைஞர். அவருக்கு அவரது பதிவுகள் வெளியாகுவதற்கு காயத்ரி அவர்களும் உதவுவதுண்டு. மகேஷ் எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பார் என்பது உறுதிதான் சார். மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  5. உண்மையான விமர்சனம் ...நான் வியந்து போனேன்...வலைப்பதிவர் விழாவிற்காக திருப்பதியில் இருந்து வந்திருக்கேன்னு சொன்ன போது....தன்னம்பிக்கையின் மறுவடிவம்...அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் புதுக்கோட்டை கீதா! தன்னம்பிக்கையின் மறுவடிவம்...அவர் சென்னையில் அவருக்கு நெருங்கியவர்கள் புத்தக வெளியீடு என்றால் இங்கும் வந்துவிட்டுச் செல்வார். அப்படி அவர் வந்த போது அவரைச் சந்திக்க இயலாமல் போனது. சுயமரியாதை அதிகம் உள்ள இளைஞர்!! தன்னம்பிக்கையின் மறு வடிவம் உண்மை!! மிக்க நன்றி கீதா!

      நீக்கு
  6. மகேஷ் போற்றுதலுக்கு உரியவர்
    இவரைப் போன்றவர்களிடம்இருந்து நமது இளைய சமுதாயத்தினர்
    நம்பிக்கை
    என்றால் என்ன என்று கற்றுக் கொள்ள வேண்டும்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு. ஆமாம் இவரிடமிருந்து கற்க நிறைய உள்ளது...

      நீக்கு
  7. தம்பியிடம் மிகவும் பிடித்ததே அவரின் உற்சாக பேச்சும், நேர்மறை எண்ணங்களும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி செம உற்சாகமான பையன்! ஏனென்றால் நேர்மறை எண்ணங்கள்தான் எப்போதுமே. நல்ல எண்ணங்கள் கொண்டவரும் கூட. மிக்க நன்றி டிடி

      நீக்கு
  8. என்னுடையை டூப்புவிடம் இவர் அந்த புத்தக விழாவில் சந்தித்து பேசி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ வாங்க சகோ மதுரை! வாங்க...நினைச்சேன் உங்ககிட்டருந்து இப்படி ஒன்னு வரும்னு....முதல்ல நீங்களும் இருக்கும் படம் போடலாம்னு நினைச்சேன்...அப்புறம் நாம் புகைப்படம் எடுத்த போது நீங்க முன்னாடியே எங்களிடம் என் படம் போடக் கூடாது என்று சொல்லியிருந்ததால் அதைப் போடாமல் விட்டுவிட்டேன். சரி சரி நீங்களே இப்படி ஒரு கமென்ட் போட்டுச் சொல்லிவிட்டீகள் அது நீங்கள்தான் என்று ஹஹஹஹ்...

      நீக்கு
  9. பார்வை இழந்தவர்களுக்கு உள்ள வரப்பிரசாதமே அவர்கள் வேண்டியதை மற்றும் தங்கள் மனக் கண்ணால் பார்க்க முயற்சிப்பார்கள் ஆனால் நாமோ பார்க்க கூடதை எல்லாம் பார்த்து மனதை கெடுத்துக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மதுரைத் தமிழன்...அவர்களுக்கு அது ஒரு எக்ஸ்ட்ரா பவர் எனலாம்...நம்மைப் பற்றிச் சொல்லியதும் மகா பெரிய உண்மை!!! மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  10. மகேஷ் அவர்களின் எழுத்தை நான் வாசித்திருக்கிறேன்...
    வியந்திருக்கிறேன்.
    அவர் பற்றிய பகிர்வுக்கு நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார்! ஆமாம் முதலில் நானும் வியந்ததுண்டு. இப்போது அவரது பார்வை புரிந்து போனதால் கவிவிரக்கம் இன்றி அவருடன் எல்லோரைப் போலவும் உரையாடுகிறேன். அதுதானே அவருக்கும் நல்லது என்பதால்.

      நீக்கு
  11. அடப்பாவி.. எனக்கு இதுவரை தெரியாது. நல்லா எழுதறாரே. அடிக்கடி எழுதறதில்லையே என்று நினைப்பேன். பேங்க் வேலைக்குப் போகும் பதிவைச் சமீபத்தில் படித்தேன். கரந்தையார் எப்படி அறிமுகப்படுத்த (தன் தளம் வாயிலாக) மறந்துபோனார்? அவருக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு இருப்பவர்களை வெளிச்சம் போடுவது வழக்கம்தானே! இவர்களை எண்ணித்தான் வள்ளுவர், "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்" என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாரோ? மகேஷுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லைத் தமிழன்! நல்ல ஜாலியாகவும் எழுதுவார். இடையில் தேர்விற்குத் தயார் செய்து கொண்டிருந்தது இப்போது வேலை கிடைத்து என்று அடிக்கடி எழுதுவதில்லை. ஆமாம் ல ஐயன் செம எல்லா காலத்துக்கும் பொருந்தும்படி எழுதிவைத்துவிட்டார்!!மிக்க நன்றி நெல்லை தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  12. வாவ் !! மிக அருமையான மனதை சந்தோஷமாக்கிய பதிவு கீதா அண்ட் துளசி அண்ணா ..
    நேற்றே ஐ பாடில் படிச்சிட்டேன் ..இப்போதான் லாப்டாப் திறந்தேன் பின்னூட்டமிட

    இவரது தோழி கயல்விழி முன்பு நிறைய பதிவுகள் எழுதுவார் அப்போ அவர் பக்கம் பார்த்தது இப்போ சமீபத்தில்தான் மீண்டும் பதிவுகளில் அவரை நான் மீண்டும் வந்ததால் பார்க்கிறேன் ..
    வாழ்த்துக்கள் மகேஷ் நிறைய எழுதுங்க கயலையும் எழுத சொல்லுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல்!! ஆமாம் தற்போது அவரும் பிசியாகிவிட்டதால் அடிக்கடி எழுதுவதில்லை...ஓ கயல் !! அவரது தோழி...எப்போதோ சொன்ன நினைவு...

      மிக்க நன்றி ஏஞ்சல்..

      நீக்கு
  13. புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவுக்கு நானும்தான் வந்திருந்தேன் அவரை யாருமே அறிமுகப்படுத்தவில்லை எனக்கும் தெரியாது கரந்தையாரின் வெற்றி வேல் முருகன் போல் இருப்பவர் போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிஎம்பி சார் எனக்குத் தெரிந்து புதுக்கோட்டை விழாவில் அவர் உங்கள் அருகில்தான் அமர்ந்திருந்தார். அதாவது உங்களுக்கு ஜஸ்ட் பின்னால் என்று நினைவு. சிறிய பையன் தான் சார். அவரது வலைத்தளம் சென்று பாருங்கள் சார்.

      மிக்க நன்றி சார் கருத்திற்கு.

      நீக்கு
  14. புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவுக்கு .முதல் நாள் இரவு 'அன்பே சிவம்'சிவசக்தியும் மகேஷும் வந்த போது .அவர் தளங்களை படிக்கும் விதம் பற்றியும் ,எழுதும் விதம் பற்றியும் தெரிவித்தார் ,எனக்கும் அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது,அவருக்கு வங்கிப் பணி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி .அவர் இன்னும் சிறைய சாதிப்பார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி. வியப்புதான் அவர் எழுதுவதற்கோ இல்லை வாசிப்பிற்கோ அல்ல தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்டு தன் குறைபாடு இருப்பதாக அல்லாமல் நம்மைப் போலவே பேசுவது பழகுவது எல்லாம் வியப்பு!! மிக்க நன்றி தங்களது கருத்திற்கு.

      நீக்கு
  15. ஆச்சர்யமான விஷயம். அவர் பெயரைச் சில தளங்களில் பார்த்திருக்கிறேன். பாராட்டுதலுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம் அவர் மிகவும் துடிப்பான இளைஞர். மிக்க நன்றி

      நீக்கு
  16. மகேஷ் போன்றோரிடமிருந்து நாம் கற்கவேண்டியது ஏராளம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  17. நானும் நண்பருடன் பலமுறை செல்லில் பேசியிருக்கிறேன் இந்தியா வந்த பிறகுதான் இன்னும் பேசவில்லை அவருடன் பேசும் பொழுது இயல்பாகவே உணர முடிந்தது உண்மை
    த.ம.4

    பதிலளிநீக்கு
  18. திருப்பதி மகேஷ் அவர்களை உங்கள் தளம் வழியாக தெரிந்து கொண்டேன்....

    அவரின் தளம் அருமை...

    நேர்மறை எண்ணம் கொண்ட இத்தகைய அருமையான மனிதரை அறிமுக படுத்தியதற்கு மிகவும் நன்றி..

    பதிலளிநீக்கு
  19. அடடா! என்ன அற்புதமான மனிதர்! திருப்பதி மகேஷ் பற்றி எழுதியதற்கு நன்றி! அவருடைய தளம் சென்று படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. மகேஷ் குறித்து தாங்கள் எழுதி இருக்கும் இந்த பதிவை இப்போதுதான் வாசித்தேன்.

    நான் எப்போதும் மகேஷிடம் எழுத்துரையாடல் செய்யும்போதும் அவர் ஒரு அளப்பரிய ஆற்றல் மிக்கவர் என்ற சிந்தனையோடுதான் தொடருவேன்.

    மகேஷ் குறித்து நீங்கள் சொல்லி இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு எழுத்தும் மகேஷை பிம்பமிட்டு காட்டி பிரமிப்படைய செய்கிறது.

    சக பதிவரை , வயது வித்தியாசம் பாராமல்,உள்ளார்ந்த அன்புடன் பாராட்டி மகிழும் உங்கள் பெருந்தன்மைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    தாய் மொழி தமிழில்லை என்பதை அவர் வாயால் சொன்னால்கூட நம்ப முடியாத அளவிற்கு தமிழ் ஆளுமை மிகுமையாக பெற்றவர் நம் மகேஷ்.

    நீங்கள் சொல்வதுபோல் புதிய விஷயங்களை மேலோட்டமாக இல்லாமல் அதன் ஆழ அகல உயரங்களை நுணுக்கமாக தெரிந்துகொள்வதுடன் அதனை துல்லியமாக மற்றவர்களிடத்தில் தெளிவுபட பகிர்ந்துகொள்வதில் வல்லவர்.

    இத்தகு சிறப்புகளை கொண்ட மகேஷ் இன்னும் பல சிகரங்களை அடையவேண்டும் என வாழ்த்துகிறேன். அவருக்கு திருஷ்டி சுற்றிப்போடணும் ... ஊர் கண்ணு ரொம்ப பட்டுடுச்சி....

    தாமதமாக இந்த பதிவு பக்கம் வந்தமைக்கு வருந்துகிறேன்.

    நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு