சனி, 21 ஜனவரி, 2017

இளைய தமிழகமே/இந்தியாவே வா வா வா!!!

Image result for youngsters protested at marina

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா

ஏறு போல் நடையினாய் வா வா வா


வந்தாய்! திரண்டாய்! கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் செய்தாய்! வென்றாய்! வாழ்த்துகிறோம்! சல்லிக்கட்டைப் பற்றிப் பேசப் போவதில்லை. அறப்போராட்டம் வெல்லும் என்பதை உறுதிசெய்துவிட்டீர்கள்! இனி நம் நாடு இளைஞர்கள் கையில் ஒளிர்ந்திடும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது! இளைஞர்கள் கையில் ஒப்படைக்கலாம்! ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகளையும், ஜிகினாக்களையும் புறம்தள்ளி வெற்றி கண்டுள்ளார்கள்!


இது முடிவல்ல! இதுதான் தொடக்கம்! நாம் இனி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஏறு தழுவுதல் போராட்டம் என்பதை விட அதன் திரைமறைவில் இருக்கும் நல்ல காரணங்கள், மற்றும் அரசியல் பற்றி முந்தைய பதிவில் கோடிட்டுச் சொன்னதாலும், பொதுவெளியில் பேசப்படுவதாலும் இங்கு நான் சொல்லப் போவதில்லை. அதற்குக் காண்செவிக் குழு இருக்கிறது!


இந்தியா விவசாய நாடு என்றும், கிராமங்கள் சார்ந்த நாடு என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததே. முன்பெல்லாம் வயல்களை வைத்திருந்தோர் வீட்டில் கண்டிப்பாக மாடுகள், காளைகள் இருந்துவந்தன. விவசாயம், கால்நடை வளம், மீன் வளம், நீர் வளம், மனித வளம் எல்லாம் பின்னிப் பிணைந்த ஒன்று என்பது நாம் எல்லோரும் அறிந்ததே!


போராடிய இளைஞர்கள் பலரும் விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அல்லாதவர்களும் போராடினார்கள், ஆதரவு அளித்தார்கள். சமூக வலைத்தளங்களும்,. பிற மாநிலத்தவர்களும், வெளிநாட்டுத் தமிழர்களும்,  ஆதரவு அளித்தார்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!


பால் உற்பத்தியில் நடக்கும் ஊழல்கள் அதனால் உடல்நலத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்பதெல்லாம் ஒரு சில வருடங்களுக்கு முன்னரே பொதுவெளியில் பேசப்பட்டாலும் தீவிரமாகப் பேசப்படாததற்குக் காரணம் அரசியல்! நம் நாட்டில் எதில்தான் அரசியல் இல்லை? இப்போதேனும் அந்த அரசியல் இல்லாமல் போராட்டம் முன்வைக்கப்பட்டதற்குப் பெருமைதான்!


1970களுக்குப் பிறகுதான் நம் நாட்டின் அரசே நம் நாட்டிற்குள் அந்நிய மாடுகளை உள்ளே இறக்கினார்கள். அதன் பின் தொடங்கியது கால்நடைத் துறையில் ஒரு பெரிய எதிர்மறை மாற்றம். அதை எல்லாம் நீங்கள் கூகுள் தேவனை கேட்டால் அள்ளித் தருவார்.


நம் நாட்டுக் காளைகளால் ஏற்படும் இனப்பெருக்க நன்மைகள், நாட்டுமாட்டின் பால் நன்மைகள் என்று எல்லாம் பேசி, காளைகளுக்காகவும், மாடுகளுக்காகவும், உழவர்களுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் போராடியது நன்மைக்கே என்றாலும் அதற்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டிய விசயங்கள் பல உள்ளன. இதோ நான் சொல்லப் போவதை, இப்போராட்டத்தினால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் காரணத்தினால், அதன் பாகமாக ஒரு வேண்டுகோளாக எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் முன்வைக்கிறேன்.


நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் நிலைமை இன்று நலிவடைந்ததற்குக் காரணங்களை நான் இங்குச் சொல்லத் தேவையில்லை. அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை எல்லோருமே அறிவோம். உலகமயமாக்கலும், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள பெருமுதலைகளுக்காக, சுயநலத்திற்காக, நம் நாட்டிற்குள் அடிப்படைத் தேவைகளான உணவு, விவசாயம், மருத்துவம் போன்றவற்றில் தேவையில்லாமல் பன்னாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதித்ததே முதற்காரணம்.


பல விவசாய நிலங்கள் விற்கப்பட்டு இன்று பல மாடிக் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. இப்போது கிராமங்களில் விவசாயம் செய்யும் தலைமுறையினருக்கு அப்புறம் விவசாயம், கால்நடையின் எதிர்காலம் என்ன? அடுத்த தலைமுறை எல்லாம் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும், வெளிநாட்டிலும் வயிற்றுப் பிழைப்புக்காக இருக்கிறீர்கள். நகரங்களும் நகரத் தொடங்கி கிராமங்களை எட்டும் நிலையில் இருக்கின்றன.


விவசாயக் குடும்பத்தில் உள்ளவர்களும் சரி, அல்லாதவர்களும் சரி உங்கள் வாழ்க்கைப் பாதையே மாறியிருக்கிறது இல்லையா? மீண்டும் கிராமம் சென்று விவசாயம் செய்து காளைகள் வளர்க்க முடியுமா? யோசிக்க வேண்டிய விசயம் இல்லையா? முடியாது என்ற நிலையில் இப்போது இருக்கும் விவசாயிகளுக்கு உதவலாம், எதிர்கால உழவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.


குரல் கொடுத்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு பெற்றதோடு நிறுத்திவிடாமல், அடுத்தக் கட்டமாக கிராமத்து வளம், கிராமத்து மனிதவளம் பெருகிடவும், குடிசைத் தொழில்கள் தழைத்திடவும் நாம் உதவலாம்தானே! மாணவ இளைஞர்கள் ஆற்றல் இப்போது இவ்வளவு திரண்டிருக்கும் போது, நீங்கள் நினைத்தால் அதையும் சாதிக்க முடியும்தானே? இப்போது எப்படி அரசியலையும், ஜிகினாக்களையும் உள்ளே வரவிடாமல் போராடினீர்களோ அப்படி நீங்கள் நினைத்தால் செய்ய முடியாதா என்ன! யோசியுங்கள் இளைய சமுதாயமே! உங்களால் முடியும்!


காந்தியப் பொருளாதாரம் பற்றி எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள் என்று தெரியவில்லை. பொருளாதாரம் கற்ற மாணவர்கள் கண்டிப்பாக காந்தியப் பொருளாதாரம் பற்றி அறிந்திருப்பார்கள். காந்தியப் பொருளாதாரம் என்பது சுயசார்புப் பொருளாதாரம். கிராமங்கள், குடிசைத் தொழில்கள், உழவுத் தொழிலுக்கும் மற்றும் தங்கள் பொருட்களைத் தாங்களே விளைவிக்கும், தொழிலாளியின் உழைப்பிற்கு மரியாதை செலுத்தும், முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரம். அப்பொருளாதாரம் இயந்திரத்திற்கு எதிரி அல்ல. இயந்திரம் மனிதனை ஆளத் தொடங்கிவிட்டால், தற்சார்பை இழந்து விடும் அபாயம், மற்றும் மனித நேயம் எல்லாம் மறைந்துவிடும் என்றுதான் எச்சரிக்கிறது.


அந்தப் பொருளாதாரத்தை நாம் கடைப்பிடித்திருந்தால், சிறிதளவேனும் கடைப்பிடித்திருந்தால், இன்று நாம் பால் அரசியல் பேச வேண்டி வந்திருக்காது என்பது உறுதி. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டி வந்திராது. நீங்கள் போராடியிருக்க வேண்டிய அவசியே இருந்திருக்காது. நமது முதல் பிரதமருக்குக் காந்தியப் பொருளாதாரத்தில் காந்தியுடன் கருத்து வேறுபாடு இருந்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது அடிப்படைத் துறையான விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தொழில்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தவறில்லை. ஆனால் அதன் பின் ஒவ்வொரு திட்டத்திலும் தொழில்துறைககன முக்கியத்துவம் அதிகரித்து, வேளாண்மை பேசப்பட்டாலும் நடைமுறையில் அதன் முக்கியத்துவம் செயலாக்கத்தில் இல்லாமல் போனது.


இன்று நாம் தொழில்நுட்பத்தில் பல எல்லைகளைத் தொட்டுவிட்டோம். தொழில் நுட்பத்தில் வல்லவர்களாகிய இளைய சமுதாயமே நீங்கள் தொழில்நுட்பத்தை அளவோடு காந்தியப் பொருளாதாரத்தில் உட்படுத்தி, மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை விவசாய நுட்பங்களை உட்படுத்தி, நீர்வள மேம்பாட்டை உட்படுத்தி, கால்நடை நிபுணர் திரு சிவசேனாபதி அவர்களின் வழிநடத்தலில்  கிராமங்களைத் தற்சார்பு உடையதாக மாற்ற முனையலாம். நீங்கள் நினைத்தால் செய்து காட்ட முடியும்.


காந்தியப் பொருளாதாரம் பற்றி நான் இங்கு ஆழமாகப் பேசவில்லை. ஏனென்றால் 60 வருடங்களுக்கும் மேலாகச் சீரழிக்கப்பட்ட நம் தமிழகத்தையும், நாட்டையும் ஒரே நாளில் சீரமைத்திட முடியாது! பல வருடங்கள் ஆகும்! இப்போது விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் அதையும் தொடங்கலாமே என்ற ஒரு ஆதங்கம். 


இப்போது நம் அரசியல்வாதிகளுக்கு இளைஞர்களின் மற்றும் மக்களின் ஆற்றல் நன்கு தெரிந்துவிட்டது. இனி அவர்கள் தவறு செய்தால் போராடிய மாபெரும் இயக்கமே இருக்கிறது என்று அறிந்துவிட்டார்கள். இந்த அறப்போராட்டம் அவர்களைச் சற்றுப் பயம் கொள்ள வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. 


எனவே, தமிழகம், சல்லிக்கட்டுடன் நின்றிடாமல் கிராமங்களும் இயற்கை உழவும், கால்நடையும், மீன்வளமும், இயற்கையும், மனித வளமும் தழைத்து, கிராமங்கள் தற்சார்பு உடையதாக மாறினால், தமிழகமே மாறிவிடும் என்பதால், மாற்றிடவும், தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக அமைந்து, நாட்டையும் மாற்றிடவும், அரசின் உதவியைக் கோரியோ, போராடியோ வாங்குங்கள், ஆனால் அரசியலை நுழைத்துவிடாமல், அடுத்தக் கட்டத்திற்குப் பயணிப்பீர்! புதியதோர் பாதை வகுத்திடுவீர்! இளைஞர்களே! நாங்களும் பயணிப்போம்!


(போராட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சங்கள் பல இருந்தும், “Most remarkable thing about the jallikattu protests is the young women staying at the beach with no fear of harassment. Delhi should learn” என்று என்டிடிவி எடிட்டோரியல் டைரக்டர் சோனியாசிங்க் ட்வீட்டியதாக வாட்சப்பில் வந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது! பாராட்டுகள் இளைஞர்களே!

 


-------கீதா

படம் இணையத்திலிருந்து.






36 கருத்துகள்:

  1. அழகான...ஆழ பதிவு..
    செறிவுமிக்க உங்கள் வரிகள் உங்களைப் போலவே எளிமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கு அதுவும் ஊக்கமளிக்கும் கருத்து..

      நீக்கு
  2. அரசியலில் இறங்காது
    தமிழனின் முதலீடான
    கல்வியை மேம்படுத்தியவாறு
    ஒழுக்கம், பண்பாடு பேணி
    எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
    எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
    மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
    எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் யாழ்பாவாணன் சகோ! மிகவும் சரியே! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு //தமிழனின் முதலீடான
      கல்வியை// இது காந்தியப் பொருளாதரத்தில் தற்சார்புப் பொருளாதாரத்தில் பேசப்பட்ட ஒன்றுதான். தொழில் சார்ந்த கல்வி. அதைப் பற்றி நான் ஆழமாக இங்கு சொலல்வில்லை பதிவு நீண்டு விடும் என்பதால் தனி பதிவாக எழுதலாம் என்றிருப்பதால்...

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  3. நல்லதொரு பதிவு பகிர்விற்கு பாராட்ட்டுகள் நம்ம துளசி சாரிடமும் பேசி கேரளாவில் இந்த போராட்டம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவரை சுற்றி உள்ளவர்களிடம் மற்றும் மாணக்கர்களிடமும் பேசி அதை ஒரு பதிவாக இடுங்களேன்


    அடுத்தாக இறுதி பாராவில் நீங்கள் சொல்ல்லி இருப்பதது பற்றி என் கருத்துக்கள் பாலியல் சீண்டல்கள் ஏதும் செய்யாமல் இருந்ததால் பெண்களும் கலந்து கொண்டார்கள் அது பெருமையக உள்ளது என்று சொல்லி இருக்கிறீர்கள் இப்படி பாலியல் சீண்டல்கள் இளைஞர்களிடம் வெளிப்படாதற்கு காரணம் அவர்கள் விவேகந்த்தர்களா மாறிவிட்ட்டார்கள் என்பதால் அல்ல ஒரு நல்ல நோக்கில் கூடி இருக்கும் கூட்டத்தி இப்படி பாலியல் சிண்டல்கள் நடந்தால் தம்மை தூக்கி போட்டு மிதி மிதியென்று மிதித்துவிடுவார்கள் என்ற பயத்தினால்தான் இளைஞர்கள் அமைதிகாத்தார்கள் எனலாம் அதுதான் உண்மை உதாரணமாக் பஸ் கூட்டத்தில் செல்லும் பெண் மீது யாரவது சீண்டும் போது அந்த பெண் தைரியமாக தீடும் போது பஸ்ஸில் உள்ள மற்ற "யோக்கியர்கள்: அந்த சீண்டும் இளைஞரை எப்படி போட்டு உதைப்பார்களோ அது போல இங்கும் நடக்கும் என்ற பயம் காரணமாகத்தான் இங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை
    போராட்டம் முடிந்து சில நாட்களுக்கு பின்னால் பாருங்கள் பாலியில் சிண்டல்கள் தொடரத்தான் போகும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் மிக்க நன்றி மதுரை சகோ! நேற்று திருச்சூரிலிருந்து எனது நண்பர் அழைத்திருந்தார். ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுவதற்கு. அவரிடம் அங்கு எப்படி உள்ளது என்று கேட்டேன். அங்கும் ஒரு சில இடங்களில் அமைதியாகப் போராட்டம் நடத்தினார்கள். திருவந்தபுரத்தில் டெக்னொபார்க்கில் ஆனால் அவர் சொன்னது, அதில் கேரளத்தவர் என்பதை விட அங்கு வந்து வேலைபார்க்கும் அல்லது செட்டிலான தமிழர்கள்தான் அதிகம் என்றார். திருச்சூரிலும் அமைதியாக சாலையில் பாரம்பரிய திருவிழாக்கள் காக்கப்பட வேண்டும் என்று நடந்தார்கள் என்று சொன்னார். ஆனால் இந்தக் கருத்தில் எனது கருத்து...திருச்சூரில் நடந்தது என்றால் அதில் ஒரு சின்ன சுயநலம் உண்டு.ஏனென்றால் எங்கேனும் ஜல்லிக்கட்டிற்குத் தடை வந்தால் அடுத்து யானைக்கும் தடை வந்துவிடுமோ என்று பயம். அங்குதானே திருச்சூர் பூரம் என்று சொல்லிக் கொண்டு பல யானைகளைக் கொட்டுச் சத்தத்திற்கு இடையில் நிறுத்தி வைக்கிறார்கள் அந்தச் சத்தம் அதற்கு எவ்வளவு கெடுதல் என்று தெரியுமா? மதம் பிடிக்கும் அபாயம் நிறைய உண்டு....மொத்தத்தில் மகனும் நானும் சொல்லுவது மனிதன் சுயநலவாதி. நமது என்டெர்டெய்ன்மென்டிற்காக விலங்குகளையும் நாம் பயன்படுத்துகிறோம் என்பான் அவன். டாக் ஷோ உட்பட.

      துளசியிடம் இனிதான் பேச வேண்டும் அவர் லீவில் இருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. திங்களன்றுதான் தொடர்பு கொள்ள முடியும். கேட்டு பதிவிடச் சொல்லுகிறேன்.

      நீங்கள் சொல்லியிருக்கும் இறுதி பாரா பற்றி நான் உங்கள் கருத்துடன் 100% ஒத்துக் கொள்வேன். ஆனால் இப்படியேனும் ஒரு நல்ல எண்ணம் வராதா, இது பொது வெளியில் பாராட்டிப் பேசினால் ஒரு இன்சென்டிவ் போல ஆகுமே கொஞ்சம் யோசிக்க மாட்டார்களா என்பதே! ஒரு நல்ல எண்ணம்தான் சகோ...

      நீக்கு
  4. மெரினாவில் பாலியல் சீண்டகள் இல்லை பெண்களை மதித்து நடக்கிறார்கள் இளைஞர்கள் ஆனால் அரியலூரில் சிறு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் அரியலூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு இருந்தால் இப்படி கொடுமை நடந்து இருக்காதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! இந்தச் செய்தி தெரியவில்லை தமிழா....//ஆனால் அரியலூரில் சிறு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் அரியலூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு இருந்தால் இப்படி கொடுமை நடந்து இருக்காதோ// ஹஹஹ செம நக்கல்....ஹும் நான் நல்லது நினைத்து நேர்மறையாகச் சொல்லலாமெ பாராட்டலாமே என்று நினைத்தால் அதிலும் செய்திகள் மண் அள்ளிப் போடுகின்றன..திருந்தவே திருந்தாத சமுதாயம்....பதிவின் நோக்கமே நல்ல தொடக்கமாயிற்றே இதை வைத்து நலல்து சொல்லாமே என்று நினைத்தால் நோக்கமே திசை திரும்புகிறது இப்போது....

      மட்டுமல்ல இப்போதுதான் புதுக்கோட்டைகணினிச் சங்கம் வாட்சப் குழுவில் அன்புமணி என்பவர் நேரடியாகக் கண்டதைப் பகிர்ந்ததை வாசித்தேன். அதை நேற்று இரவே முழுமையாக வாசித்திருந்தால் இந்தப் பதிவை நான் வெளியிட்டிருப்பேனா என்பது ஐயமே! ஏனென்றால் என் மகன் யூகித்துச் சொன்னது சரியாகிவிட்டது!!! எனக்கு செம பல்பு...

      நீக்கு

    2. ஹலோ கீதா நீங்கள் பதிவு நன்றாகத்தான் எழுதி இருக்கீங்க கடையில் நீங்க சொல்லி இருப்பதும் நாம் பெருமைபடக் கூடியவிஷயம்தான் நானும் அந்த செய்தியை படித்தபின் பெருமைதான் கொண்ட்டேன் ஆனால் அதை உற்று நோக்கி சிந்தித்தால் நான் சொன்னபடிதான் இருக்கிறது என்பது உண்மை

      நீக்கு
    3. இல்லை மதுரை சகோ இந்தக் கருத்திற்காகச் சொல்லவில்லை. அன்புமணி என்பவர் நேரில் கண்டு சொல்லியிருக்கும் கருத்துகள் வாட்சப்பில் வந்தது அதுவும் புதுக்கோட்டைக்கணினிச் சங்கம் குழுவில் ஆனால் அது பாலியல் பற்றி அல்ல...வேறு கருத்துகள் அவர் சொல்லியதையும் நாம் சிந்திக்க வேண்டும்..அது என் மனதைச் சற்று வேதனைப்படுத்தியதுதான் அதுவும் உங்கள் கருத்தை வாசித்ததும் அதை வாசித்தேன்... அதைத்தான் சொல்லியிருந்தேன் இந்தக் கருத்திற்காக அல்ல சகோ....நீங்கள் அதை வாசித்தீர்கள் என்றால் உங்களுக்கும் தோன்றும்....பதிவே எழுதிவிடுவீர்கள் நீங்கள்.....அந்தக் கருத்தை நான் பதிவில் சொல்ல வேண்டும் என்றால் .அதற்கு நம் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும்...பெற்றோர் வளர்ப்பிலிருந்து தொடங்கவேண்டும்...எனவேதான் சொல்லியிருந்தேன் இந்தப் பதிவின் நோக்கம் திசை மாறியிருக்கும்...என்று...அந்தக் குழுவில் பகிரப்பட்ட சற்று பெரிய பதிவு அது...எனக்கு அதில் உள்ள உண்மைகள் உறைத்தன...உங்களுக்கு அதை எப்படித் தெரியப்படுத்துவது என்று தெரியவில்லை..அந்த அன்பர் ஃபேஸ் புக்கில் இருக்கிறாரா, பதிந்திருக்கிறாரா என்றும் தெரியவில்லை....ஏனென்றால் நான் ஃபேஸ்புக்கில் இல்லையே

      மிக்க நன்றி சகோ...

      நீக்கு
  5. அவர்கள் உண்மைகள் பேசிய உண்மையை விட அதிகமாக என்ன சொல்ல முடியும்! உண்மை தான் சொல்லி இருக்கிறார். ஆனால் இன்னமும் போராட்டம் தொடரும் என்று சொல்வது தான் வேதனை அளிக்கிறது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா அவர் சொல்லியிருப்பது சரிதான்....மட்டுமல்ல இப்போது அவருக்குக் கொடுத்த பதிலே உங்களுக்கும்.

      நான் நல்லது நடக்கட்டுமே என்று நினைத்துத்தான் எப்போதும் எதிர்மறைதான் நடக்கிறது நாம் நேர்மறையையே சொல்லுவோமே அதுவும் தற்சார்பு எவ்வளவு முக்கியம் என்பதை இங்கு எடுத்துரைக்கத்தான் இந்தப் பதிவு. நம்ம பாஹே அப்பா (ஸ்ரீராமின் அப்பா) அவர்கள் தனது புத்தகத்தில் சொல்லியிருந்த ஒரு கருத்து என்னையும் தூண்டியது. அவர் சனி தோறும் வெளியிடும் பாசிட்டிவ் செய்திகளுக்கும் அதை ஒட்டியதுதான். அப்படியேனும் எங்கேனும் நல்லது நடக்காதா என்றுதான்...

      மிக்க நன்றி கீதாக்கா..

      நீக்கு
  6. சென்னை வாசிகளிடம் நீறு போத்த நெருப்பாக
    அவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டபோது
    தமிழகமே திரண்டு வந்து உதவியது
    வெளித் தெரியாத ஒரு காரணமாகவும் இருக்கலாம்
    எனபதுவும்

    இப்போது அண்ணாசாலையில் பிழைப்புக்காக
    இருக்கும் சூழல் இருப்பினும்
    அவ்ர்கள் அனைவரின் வேர்களும்
    கிராமத்தில் இருக்கின்றன என்பதுவும்

    இத்தனைப் பெரும் எழுச்சிக்கு
    ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்பது
    என் எண்ணம்

    (தாங்கள் யானை குறித்துச் சொன்னதைப் போலவே )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்! அதுவும் காரணம் தான்..நம்மால் முடிகிறாதோ இல்லையோ ஆதரவு கொடுக்கலாமே இல்லையா...அப்படித்தான்...ஆனால் எதிர்காலம் இவர்கள் கையில் வர வேண்டுமானால் நல்ல வழிகாட்டல் வேண்டும் என்றும் தோன்றுகின்றது. தற்சார்பு பொருளாதாரம் மிக மிக அவசியம்...

      மிக்க நன்றி சார்

      நீக்கு
  7. // எனவே, தமிழகம், சல்லிக்கட்டுடன் நின்றிடாமல் // என்று ஆரம்பித்து ஒரு பத்தி உள்ளதே, அதன் ஏக்கம் அனைவரும் மனதிலும் உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் டிடி!! நான் சொன்னால் என்ன அது நம் அனைவரின் வழி வருவது போலத்தான்!! மிக்க நன்றி டிடி கருத்திற்கு

      நீக்கு
  8. நிறைந்த பொருளாக இருக்கின்றது பதிவு..

    வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் - வீட்டுத் தோட்டம், கோழி வளர்ப்பு மூலமாக ஓரளவிற்காவது தமது தெவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்...

    பாக்கெட் பாலைப் புறக்கணித்து நல்ல பாலுக்கான தேடல் அதிகரிக்கும் போது நிச்சயம் சிறு விவசாயிகள் பயனடைவார்கள்..

    எளிய மாற்றங்கள் நம்மிடத்திருந்தே தொடங்கட்டும்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் - வீட்டுத் தோட்டம், கோழி வளர்ப்பு மூலமாக ஓரளவிற்காவது தமது தெவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்...

      பாக்கெட் பாலைப் புறக்கணித்து நல்ல பாலுக்கான தேடல் அதிகரிக்கும் போது நிச்சயம் சிறு விவசாயிகள் பயனடைவார்கள்.. // வெகு சிறப்பான வரிகள்! இதைத்தான் காந்தியப் பொருளாதாரம் அருகருகே உள்ள கிராமங்கள் இணைந்து அந்தப் பகுதியில் என்ன தொழில் சிறப்போ அதைக் குடிசைத் தொழிலாகவும், விவசாயத்தையும் சுய சார்புப் பொருளாதாரம் என்று பேசுகிறது. அதனை இப்போதையச் சூழலுக்கு ஏற்றபடி வடிவமைத்துத் திட்டமிட்டுக் கொண்டு வரலாம் அரசு கண்டிப்பாக இதைக் கையிலெடுத்து உதவ வேண்டும். மீதியை இளைய சக்தியும், மக்களும் பார்த்துக் கொள்வார்கள். ஒரு விழிப்புணர்வு தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது பார்ப்போம்...

      உங்களைப் போல் எனக்கு அவ்வளவு அழகு தமிழில் பல தகவல்களைப் பாங்குறச் சொல்லத் தெரியாது ஐயா...உங்கள் ஒவ்வொரு பதிவும் அழகு தமிழில் வருவதைக் கண்டு நாங்கள் ரசிப்போம்.

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  9. நன்கு சீர்தூக்கிப் பார்த்து எழுதப்பட்ட பதிவு . என் வாழ்த்துக்கள் .
    என் மகன் ( பம்பாயிலிருந்து வந்திருந்தான்) நேற்றுப் போய் வந்தான் .
    வட இந்தியர்களுக்கு A 1 பால் A2 பால் இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை என்றான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ அதானே பிரச்சனை அருணா...அவர்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை....விழிப்புணர்வு குறைவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது...மிக்க நன்றி அருணா கருத்திற்கு...

      நீக்கு
  10. சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைய நிலையில் முடிந்த பின்னும் தொடரும் போராட்டமாகவே தோன்றுகிறது. தலைமை இல்லாமல் சிற்ப்பாகச் செயல்பட்டார்கள் என்று தோன்றியது. அதே தலைமை இல்லாததால் தொடங்கியவர்களுக்கு எங்கு முடிக்கவேண்டும் என்று தெரியவில்லையோ என்று தோன்றுகிறது. ரயில் மறியல் போன்ற பொதுமக்கள் இடைஞ்சல்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். இரட்டை அர்த்த, ஆபாசப் பேச்சுகள், கொடும்பாவி எரிப்பு இல்லை என்று நினைத்திருந்தேன். இருந்தது என்று பின்னர் அறிந்தேன்.

    அடுத்தடுத்த பிரச்னைகளில் இந்த அழகான ஒருங்கிணைவு போராட்டமாகத்தான் வெளிப்படவேண்டும் என்றில்லை. இதே போல ஒன்று கூடி தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேரோடு அகற்றலாம். பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கலாம். தூர் வாரலாம். பெப்சி, கோக் தவிர்க்கப் பிரச்சாரம் செய்யலாம். டாஸ்மாக் அகற்றலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அதைத்தான் ரமணி சாரின் கருத்தில் சொல்லியிருக்கிறேன் வழி காட்டல் தேவை என்று. நேற்று வாட்சப்பில் வந்த நேரடி விஷயங்கள் மனதிற்குக் கஷ்டமாக இருந்தது...அதைப் பார்த்திருந்தால் என் பதிவின் திசை சற்று மாறியிருக்கும் அதைத்தான் மதுரைத் தமிழனுக்குக் கொடுத்த பதிலில் கொடுத்திருக்கிறேன்....அடுத்த பதிவு பெரும்பாலும் அதாகத்தான் இருக்கும்...

      இப்போது நீங்கள் சொன்ன பிரச்சனைகள் அனைத்தையும் கோரிக்கைகளாக வைத்திருக்கிறார்கள் என்று அறிய நேர்ந்தது. பார்ப்போம்...ஆனால் நல்ல வழிகாட்டல் மிக மிக அவசியம்.

      நான் சல்லிக்கட்டு என்று பார்ப்பதை விட அதற்கு அப்பாலுள்ள சில விசயங்களை எதிர்காலச் சந்ததியினர் கையில் வந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான்...இப்போது உள்ளவர்களைப் பற்றித்தான் நமக்குத் தெரியுமே!!

      மிக்க் நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  11. கருத்துள்ள பகிர்வு... பாராட்டுக்கள்....

    பதிலளிநீக்கு
  12. காந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை எல்லாம் காங்கிரசே தாராளமயமாக்கல் கொள்கை மூலம் குழிதோண்டி புதைத்து விட்டது.அரசின் கொள்கையை மக்களுக்கான கொள்கையாக மாற்றம் கொண்டு வர மக்களின் போராட்டம் தொடரவேண்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அங்கு தொடங்கியதுதான்! ஆனால் அதிலும் சில பொருளாதாரக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருந்தால் நாம் கொஞ்சமேனும் சுயசார்புடன் இருந்திருக்கலாம் குறிப்பாக் விவசாயத்தில் உணவில் ..நல்லது நடக்க வேண்டும் பகவான் ஜி. மிக்க நன்றி

      நீக்கு
  13. காந்தியப் பொருளாதாரக் கொள்கை பற்றிச் சொன்னது நன்று கீதா. அவர் கோட்டையும் சூட்டையும் களைந்து கதர் அணிந்தார். அவரைப் பாராட்டிக் கொண்டே நாம் கோட் சூட் அணிகிறோம்..அதுவே வழக்காகிப் போய்விட்டது. அதுபோலவே மற்ற பொருட்கள் எல்லாம். மாற்ற வேண்டும் என்றால் எவ்வளவு மாற்ற வேண்டும் இல்லையா?
    சரி, வேறு எங்கோ போகிறேன் நான் :)
    மாணவர்கள் இணைந்தது கண்டு மகிழ்ச்சி...ஆனால் ஒரே நாளில் இன்று ஒவ்வொருவரையும் சந்தேகப்பட்டுக் கொண்டு குழம்பி.. இத்தனை நாள் போராட்டம் வீண்போய்விடக் கூடாது என்பதே என் ஆதங்கம். நல்ல விசயங்களுக்கு மாணவச் சமுதாயம் ஒன்றுசேர்ந்து நிற்கும் என்ற செய்தி பரப்பிவிட்டோம்..அது நன்றாக நிலைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  14. கிரேஸ் மிக்க நன்றி கருத்திற்கு. காந்தியப் பொருளாதாரத்தை முழுமையாக நாம் இப்போது பல விதங்களில் சீரழிந்த நிலையில் பின்பற்றுவது என்பது மிகவும் கடினம். ஆனால், ஓரளவு தற்சார்பு பொருளாதரம் பற்றி நாம் சிந்திக்கலாம். அரசு சிந்திக்க வேண்டும். உலகமயமாக்கல் என்பதும் அவசியம்தான்..காந்தியின் பொருளாதாரத்தின் படி.நாம் க்ளோஸ்ட் எக்கானமியாக இருக்க முடியாதுதான்..அதில் உள்ள கருத்துக்களை இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நிறுவலாம்.... பன்னாட்டு நிறுவனங்களை எல்லாத் துறைகளிலும் அனுமதிக்காமல் குறிப்பாக உணவு, மருத்துவம், உழவு போன்ற துறைகளில் நாம் தற்சார்பு உடையதாக மாறும் சிந்தனை வர வேண்டும் என்பதே..

    நல்லது நடக்க வேண்டும் என்பதே ஆதங்கம். அங்கு குழுமி இருப்பவர்களில் பெரும்பாலோல் எதிர்காலச் சிற்பிகள். எனவே அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டல் அவசியம் என்று தோன்றத் தொடங்கியிருக்கிறது கிரேஸ்...மிக்க நன்றி தங்களின் விரிவான கருத்திற்கு

    பதிலளிநீக்கு
  15. மாணவர்கள் அரசியல்வாதிகளையும், ஜிகினாக்களையும் புறம்தள்ளி வெற்றி கண்டுள்ளார்கள்

    ஸூப்பர்... ஸூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ஸ்ரீராம் சொன்னதுபோல், எப்போ முடிக்கணும் என்பது தெளிவில்லாததுபோல் இருக்கிறது. இதைச் சாக்கிட்டு, தேவையில்லாத அன்னிய விஷயங்களை நாம் புறக்கணித்து, எது தமிழகத்தில் உள்ள எளியவர்களுக்கு வாழ்வாதாரங்களை அளிக்குமோ அதைக் கடைபிடிப்பது நம் எல்லோருக்கும் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத்தமிழன்..தங்களின் கருத்திற்கு. /தேவையில்லாத அன்னிய விஷயங்களை நாம் புறக்கணித்து, எது தமிழகத்தில் உள்ள எளியவர்களுக்கு வாழ்வாதாரங்களை அளிக்குமோ அதைக் கடைபிடிப்பது நம் எல்லோருக்கும் நல்லது/ ஆம்!! இதுதான் இப்போதையத் தேவை

      நீக்கு
  17. இத்தனை ஆதரவு இருக்கும் என்று தொடங்கியபோது யாருமே நினைத்திருக்க மாட்டார்களெதற்காகப் போராடுகிறோம் என்பது மறைந்து இப்போது ஒரு இனத்தின் பாரம்பரியத்துக்காகப்போராடுகிறோம் என்பதாயிருக்கிறது சென்றடைய வேண்டி ய இலக்கு பற்றி பலவிதமான யூகங்கள் ஆனால் இன்றைய பொழுது நடக்கும் செயல்கள் கை மீறிப் போக வைக்குமோ என்னும் அச்சத்தைதருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் சார்...இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் முடிந்தாயிற்றே...

      மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு