திங்கள், 16 ஜனவரி, 2017

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் செடி சிறந்ததா?!!

இன்சுலின் செடியைப் பற்றி முன்பே நான் எழுத நினைத்து வழக்கம் போல் முடிக்காமல், முடித்து வெளியிடலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் பரணில் போட்டு வைத்துவிட்டேன். அதாங்க ட்ராஃப்ட். காரணம் மருத்துவர் நம்பள்கி அவர்களின் பின்னூட்டம் ஒன்று சிந்திக்க வைத்ததால், ஆதாரம் இல்லாத மருத்துவக் கட்டுரைகளை மருத்துவர் அல்லாத நான் எழுதுவது சரியா என்ற  தயக்கத்தில் அப்படியே வைத்துவிட்டேன். பின்னர் நம் சகோ கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் தன் தளத்தில் http://senthilmsp.blogspot.com/2016/10/blog-post_3.html இச்செடியைப் பற்றி தேவேஷ் ஹார் என்ற மருத்துவரின் பரிந்துரையும் சொல்லி எழுதியிருக்க அப்போதும் நான் அங்கு கருத்துரை இட்டு, எழுதி முடித்து வெளியிடலாம் என்று நினைத்து…..னைத்து…..த்து…..

இதோ இப்போது சகோ இளங்கோ மற்றும் டிடி, தோழி நிஷா அவர்கள் கேட்டிட நான் எழுதிய கட்டுரைக்கு வருகிறேன். (நீங்கள் சகோ செந்திலின் கட்டுரையை வாசித்திருப்பீர்களே!)

இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லப்படுவது நாம் எல்லோரும் அறிந்ததே. முன்பைவிட நீரிழிவு நோய் தற்போது அதிகமாகப் பேசப்படுவதால் இதைப் பற்றி பெட்டிக் கடைகளிலும், தெருவோர டீக்கடைகளிலும் கூட நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சேர்க்கப்பட்ட காப்பி, டீ அருந்திக் கொண்டே பேசுவதைப் பார்க்கும் போது விழிப்புணர்வு கொஞ்சம் அதிகமாகியிருப்பது போல் தெரிகிறது!!! விளம்பரங்களும் அதிகமாகிவிட்டன. நீரிழிவு நோய் நோயல்ல, குறைபாடே!

இது நாள்வரை அதிகம் பேசப்படாத ஆயுர்வேத, சித்த மருந்துகள் இப்போது ஆங்கில மருந்துகள் விற்கப்படும் கடைகளில் கூட விற்கப்படுகின்றன. அதுவும் விளம்பரப் பலகைகள் மற்றும் கண்ணாடிகளில் ஒட்டப்பட்ட விளம்பரங்களுடன், அம்மருந்தைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. நகரத்து மக்கள் இதுவரை அறிந்திராத சிறு தானியங்கள், மூலிகைகள் குறித்து தற்போது பிரபல பத்திரிகைகளில் வரும் சித்த/ஆயுர்வேத மருத்துவ கட்டுரைகளின் விளைவினால் கடைகளில் தேடத் தொடங்கியிருப்பதால் ஆங்கில மருந்துக் கடைகளும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள இப்போது இப்படி விற்கத் தொடங்கிவிட்டார்கள் போலும். சித்தா/இயற்கை மருந்துகளுக்கு இப்போது விளம்பரம் தேவைப்படும் காலமாகிவிட்டதை நினைக்கும் போது கிராமங்கள் குறுகி நம் வாழ்வியல் மாறி வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது.

அது ஒருபுறம் இருக்க, எனது 32 வது வயதில் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் செய்த போது, 400+. நீ ஏற்கனவே இனியவள் ஹிஹி, எனவே உனக்கு மேலும் இனியவளாக இருப்பது நல்லதல்ல என்று சொல்லிவிட அன்றிலிருந்து இதோ இன்றுவரை ஊசிக்குச் செல்லாமல், ஒரே ஒரு மாத்திரையுடன், கட்டுப்பாடுகளுடன், இனிமையாக இருந்துவருகிறேன்.

இரண்டு வருடத்திற்கு முன் எனது  உறவினர் ஒருவர், நீ என்னதான் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் 20 வருடங்களுக்கு மேல் கண்டிப்பாக நீ இன்சுலின் சார்ந்து, ஊசிக்குச் செல்ல வேண்டியிருக்கும் ஏனென்றால் வயதாகும் போது உன் உடல் உழைப்பு குறைந்துவிடும் என்பது பற்றி ஏற்கனவே சிந்தித்து வைத்திருந்தாலும், அச்சமயம் இந்த இன்சுலின் செடியைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடன் ஆராயத் தொடங்கினேன். 

Costus igneus காக்டஸ் இக்னியஸ் படம் இணையத்திலிருந்து
Costus Pictus - காஸ்டஸ் பிக்டஸ் இந்த வகைதான் எங்கள் வீட்டில் உள்ளது. பூ தான் வித்தியாசப்படுத்துவதால்  படம் இணையத்திலிருந்து

ஆராயும் போது சிறு குழப்பம் ஏற்பட்டது. கூகுள் தேவன், காஸ்டஸ் பிக்டஸ், காஸ்டஸ் இக்னியஸ் என்று இரண்டையுமே இன்சுலின் செடி என்று காட்டினார். இரண்டுமே ஒன்றுதான் என்று சொல்லப்பட்டாலும் இரு செடிகளின் படங்களும் சற்று வித்தியாசமாக இருந்தது, இரண்டுமே காஸ்டேசியெ (Costaceae) எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. காஸ்டஸ் எனும் ஜீனஸ் மற்றும் வேறு வேறு ஸ்பீசிஸைச் - Specific epithet சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறு இந்த ஸ்பீசிஸ் பெயரில் மாற்றம் வரும் போலும். 

இரண்டுமே வெளிநாட்டிலிருந்து வந்து இப்போது இந்தியாவில் இன்சுலின் செடி என்று வழங்கப்படுகிறது. இச்செடியைக் (காஸ்டஸ் இக்னியஸ்) குறித்து ஆராய்ச்சிகள் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரிலுள்ள கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருந்தியல் துறை மேற்கொண்டது. இலைகள் அக்டோபர், நவம்பர் மாதத்தில் சேகரிக்கப்பட்டு, நிழலில் காயவைக்கப்பட்டுப் பொடிக்கப்பட்டு, தண்ணீரில் கலந்து அரைக்கப்பட்டு, முறையான அனுமதி பெற்றபின், பந்தர்கர் எனும் ஆயுர்வேத மருத்துவர் இவ்விலைகள் இன்சுலின் செடி இலைகள் தான் என்று வழங்கிய ஆதாரத்துடன், சோதனை எலிகளுக்குக் கொடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஆங்கில மருந்தான Glibenclamide மாத்திரைகளும் கொடுக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டதில் அதற்கு நிகரான அளவில் இன்சுலின் இலைகள் ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் அளவினை, சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்குப் பின் குறைத்திருப்பதாக ஆய்வின் முடிவுகள் சொல்லியிருப்பதாகப் பதிந்திருக்கின்றனர். இதனை இந்திய மருத்துவக் கழகமும் ஆதரித்துள்ளது. இதோ அதன் முழு விவரங்கள் அடங்கிய சுட்டி. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2924971

இந்தச் செடி ஈரப்பதம் இருக்கும் இடங்களில் நன்றாக வளருமாம். தொடக்கத்தில் அதிகம் தண்ணீர் வேண்டியிருக்கும் என்றும் வளர்ந்ததும் ஈரப்பதம் மட்டும் இருந்தால் போதும் என்றும் சொல்லப்பட்டது. நன்றாக உயரமாக வளரும் என்றும் சொல்லப்பட்டது. என் உறவினர் ஒருவர் எங்கள் குடும்ப வீட்டில், சென்னையில் உள்ள மாமியார் வீட்டில் நட்டிட இப்போது நன்றாக நிறைய வளர்ந்துள்ளது. நான் அதன் இலையின் நுனியைக் கிள்ளி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகிறேன். புளிப்புச் சுவையுடன் இருக்கிறது. இது இனிப்பு சாப்பிடும் ஆவலைக் கூடத் தணித்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. நீரிழிவு நோயின் தொடக்க நிலையில் உள்ளவர்கள் தவிர அடுத்த நிலையில் இருப்பவர்கள் இதை எடுத்துக் கொண்டால் நன்றாகக் கட்டுப்பட்டு ஊசி போடும் நிலைக்கு வராமல் தடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இன்னும் மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இதை மட்டும் சாப்பிட்டுச் சோதித்துப் பார்க்கவில்லை. செய்ய வேண்டும்.

இந்த இன்சுலின் செடியைக் குறித்து சர்க்கரை நோயுள்ளவர்கள் தங்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளலாம். இப்போது வரும் இன்சுலின்/மாத்திரைகள் விலங்கு சார்ந்து சிவப்புப் புள்ளி தாங்கியே வருகின்றன என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். 2014 ஆம் வருடம், WHO, இனி வரும் மருந்துகள் விலங்குகள் சார்ந்தில்லாமல் தாவரங்கள் சார்ந்தவையாகவே வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தது. எனவே இந்த இன்சுலின் செடியும் அப்படி உருமாறி வரலாம். கொச்சியிலும், கன்னியாகுமரியிலும்ம் மங்களூரிலும் மட்டுமின்றி பல இடங்களிலும் வியாபார ரீதியாக நர்சரிகள் வரத் தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில் மருந்துகளும் வருவதாகச் சொல்லபடுகிறது.

என்ன மருந்து உட்கொண்டாலும், இன்சுலின் செடி மருந்தாகவே இருந்தாலும், உணவுக் கட்டுப்படு, உடற்பயிற்தி, மனதை மகிழ்வாக வைத்திருத்தல் மிக மிக இன்றியமையாதது.

இதனைக் குறித்து எழுதிய தகவல்களை சகோ செந்தில் அவர்கள் மேலும் விவரங்களுடன் தனது தளத்தில் கொடுத்திருப்பதால் அப்பகுதியை இங்கு எடுத்துவிட்டேன்.

இதைப் போன்ற ஆனால் நம்மூர் செடிகளான சிறியா நங்கை, பெரியா நங்கை பற்றி அடுத்து ஒரு பதிவில் சொல்லுகிறேன்.

---கீதா


48 கருத்துகள்:

 1. மிகநல்ல பதிவு..
  இந்த செடிகள் மட்டுமல்ல...நம் நாட்டின் எல்லாத்தாவரங்களும் பயனுள்ளவையாகவே இருக்கிறது...
  குப்பை மேனி என்னும் செடியின் மருத்துவப்பயன்கள் அத்தனை அற்புதமாம்.

  புளிச்சக்கீரை என்னும் நம் கொல்லைக்காட்டுக்கீரை..
  மருத்துவக்கீரையாக இருக்கிறது..
  கீழாநெல்லி,முருங்கை,என இருக்கும் அத்தனை வகைகளையும் வகைப்படுத்துவதோடு மருந்தாக அல்லாமல் உண்வாகவும் எடுக்கவேண்டிய ஒரு சமுதாயப்பணியை நாம் எல்லாரும் செய்யவேண்டி இருக்கிறது...நீங்கள் இன்னும் பல இயற்கை மகத்துவத்தை எழுதுங்கள்...
  வாழ்த்துகளும்..வணக்கமும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க செல்வா! ஆமாம் குப்பை மேனி காயங்கள், புண் ஆற்றும் சக்தி படைத்தது. அகத்திக் கீரை புண் ஆற்றும் வல்லமை கொண்டது. முருங்கை உடல் சக்தி. என்று ஒவ்வொன்றும் இருக்கிறது சகோ. ஒவ்வொன்றாக எழுத நினைத்துள்ளேன். எழுத நினைக்கும் தொடர் எல்லாம் பாதியிலேயே நிற்கின்றன. இயற்கை விலங்குகள் எல்லாம் தொடங்கி நிற்கின்றன...நேரம் இடிக்கிறது...எழுத முயற்சி செய்கிறேன்..

   மிக்க நன்றி செல்வா வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 2. என் கணவரும் இன்சுலின் செடி என்று எங்கிருந்தோ ஒரு குச்சி மாதிரி ஒரு செடியைக் கொண்டுவந்து நட்டு வைத்தார் . ஆனால் வளரவில்லை .
  ஆனால் நீங்கள் கொடுத்த விவரங்கள் பலருக்கு உதவலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருணா நல்ல முத்திய குச்சியாக இருந்தால் நிச்சயமாகத் துளிர் விடும். அதில் பச்சையம் இருந்தால் நிச்சயம் துளிர்விடும். வேண்டுமென்றால் சொல்லுங்கள் எங்கள் வீட்டில் நிறைய இருக்கிறது. கொண்டுவந்து தருகிறேன்.

   மிக்க நன்றி கருத்திற்கு

   நீக்கு
 3. பலன் அடைந்தவர்கள் பலர் இருக்கக்கூடும் ,அவர்களும் தங்களின் அனுபவத்தைச் சொல்லலாமே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பகவான் ஜி! இருந்தால் சொல்லலாம் தான்.மிக்க நன்றி கருத்திற்கு

   நீக்கு
 4. என் வீட்டில் என்னென்னவோ செடிகள் பெயர் தெரியாதவை இருக்கின்றன. அவற்றில் இந்த இன்சுலின் செடியும் அடக்கமா தெரியவில்லை. மனைவிக்கு இந்தப்பதிவைக் காட்ட வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாவிடம் காட்டுங்கள் சார். அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்..மிக்க நன்றி சார் கருத்திற்கு

   நீக்கு
 5. சிறந்த சிந்திக்க வைக்கும் பதிவு

  இந்தியாவில் இன்சுலின் செடி
  இலங்கையில் சிறுகுறிஞ்சான் செடி
  ஆங்கிலத்தில் Metformin 500mg
  இவற்றையும் கடந்து

  உணவுக்கட்டுப்பாடு (சமச்சீர் உணவு, மாப்பொருள் சேர்க்காது தானியவகை)
  உடற்கட்டுப்பாடு (2km வேகநடை, 5km மிதிவண்டி மிதித்தல், 30min - 45min உடற்பயிற்சி)
  நாள்தோறும் இவற்றைக் கடைப்பிடித்தால் எந்த நோயும் நெருங்காதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ இலங்கையிலும் அந்தப் பெயர்தானா. இங்கும் அதே பெயர்தான். அதனைக் குறித்தும் எழுத இருக்கிறேன் யாழ்பாவாணன் சகோ. அதுவும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைதான்...

   மிக்க நன்றி சகோ..

   நீக்கு
 6. மண்ணின் மகத்துவம் பெரியதே. மருந்து எது உட்கொண்டாலும் மனதைப் பக்குவமாக வைத்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா மனதைப் பக்குவமாக வைத்துக் கொண்டால்தான் எந்த மருந்துமே வேலை செய்யும் உடலுக்கும் அதுதான் நல்லது. மிக்க நன்றி கருத்திற்கு

   நீக்கு
 7. இதை தான் மிகவும் எதிர்பார்த்தேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி எழுதி பல மாதங்கள் ஆயிற்று முடிக்காமல் வைத்திருந்து இப்போது சிலவற்றை எடுத்துவிட்டுப் பகிர்ந்துள்ளேன்.

   நீக்கு
 8. ஆவாரம்பூக் கூட சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. இந்தச் செடியை ஊட்டியில் நிறையப்பார்த்திருக்கேன். சிறியாநங்கை, பெரியாநங்கை இரண்டுமே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் என்பார்கள். மஞ்சள் காமாலைக்குக் கூடக் கீழாநெல்லியைப் போல் சிறியாநங்கையையும் பயன்படுத்துவார்கள். பெரியாநங்கையைத் தான் நிலவேம்பு என்று அழைப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா, ஆவாரம் பூ, சிறியாநங்கை யும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.அதனால்தான் அதைப் பற்றி அடுத்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். சிறியா நங்கைதான் நிலவேம்பு என்றும் பெரியா நங்கையும் நிலவேம்பு என்றும் சொல்லப்படுகிறது. எனக்குத் தெரிந்து சிறியா நங்கைதான் நிலவேம்பு என்ற பெயரிலும் இருக்கிறது. பயங்கமாகக் கசக்கும். பாண்டிச்சேரியில் இருந்த போது அந்த வீட்டில் நிறைய காடு போல் வளர்ந்திருக்கும். கீழா நெல்லி மஞ்சள் காமாலைக்கு...நிறைய இருக்கிறது. முசுமுசுக்குக் கீரை சளி, இருமலுக்கு நல்ல நிவாரணம். நான் இவை எல்லாமே எடுத்துக்கொள்கிறேன் வேண்டியய் சமயம். அதே போன்று வாதநாராயாணக் கீரை, முடக்கத்தான் கீரை எல்லாமும் சாப்பிட்டதுண்டு. பாண்டிச்செரியில் இருந்தபோது இவையனைத்தும் கிடைக்கும்.

   மிக்க நன்றி கீதாக்க்கா கருத்திற்கு..

   நீக்கு
 9. வாவ் !அருமையான தகவல்கள் கீதா ..நான் இன்சுலின் செடியை பார்த்ததில்லை ..பூ அழகா இருக்கு ..
  சில நேரம் நானும் மருத்துவ சம்பந்தமான பதிவுகளை தவிர்த்து விடுகிறேன் ..ஆனால் தொடர்புடைய லிங்க்ஸ் கொடுத்து எழுதுவதில் தவறில்லை ..

  சிறு வயதில் இருந்தே நான் இனிப்பை விரும்பாததால் அதுவும் இன்னுமென்னை விரும்பவில்லை :)
  அடுத்தது நான் ஹை கார்ப் சப்பாத்தி கோதுமை உணவுகளை தவிர்த்து விட்டேன் அவை தான் சர்க்கரை கூட முக்கிய காரணமாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல் சப்பாத்தியும் இப்போது அரிசிக்கு நிகராகப் பேசப்படுகிறது. எனவே நானும் எல்லாமே அளவாக....சிறுதானியங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்கிறேன். இங்கு வரும்போது, சென்னையில் ஹால்ட் என்றால் சொல்லுங்கள் இன்சுலின் செடி கொண்டுவந்து தருகிறேன் அங்கு எளிதில் வளரும்.

   மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு..

   நீக்கு
 10. சிரியா நங்கை பெரியா நங்கை பதிவுக்காக காத்திருக்கேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரு நங்கைகளும் அலங்கரிக்க வருவார்கள் விரைவில்.

   மிக்க நன்றி ஏஞ்சல்

   நீக்கு
 11. சர்க்கரை வியாதியைக்கட்டுப்படுத்தும் கீரைகளாக இலங்கைப்பக்கம் குறிஞ்சாக்கீரையை சொல்வார்கல். அத்துடன் காய்களில் பாவற்காய் அதன் கசப்புடன் சமைத்து சாப்பிடுவது நல்லதென்பர். அகத்திக்கீரை, முருங்கைக்கீரை,முல்லை, கானாந்தி, லெட்சகட்டை என வகைவகையாக மூலிகைத்தாவரங்கள் என அறியாமலே தினம் ஒரு கீரையை சாப்பிட்டிருக்கின்றோம். சின்ன வயதில் வீட்டின் எல்லைகளே இந்த மாதிரி கீரைகளும் முருங்கை மரங்களும்தான் அல்லவா?

  இன்சுலின் இலை குறித்து தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கும் குறிஞ்சான் கீரை தான் நிஷா அது பற்றியும் எழுதுகிறேன். அக்கீரை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகைறது. இப்போதும் நீங்கள் சொல்லும் கீரைவகைகள் இங்கு கிடைப்பவற்றைச் சாப்பிடுகின்றோம் நிஷா....உங்கள் ஊரில் இவை எல்லாம் கிடைப்பது அரிதுதான்...மிக்க ந்னறி நிஷா கருத்திற்கு

   நீக்கு
 12. பலருக்கும் பயன்படக்கூடிய இனிய செய்திகளாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான பதிவு சகோ..!
  எனது பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 14. பயனுள்ள பதிவு


  நானும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இனியவனாகவே இருந்து வருகிறேன் எடை கூடுவதோ குறைவதோ இல்லை கடந்த ஆண்டு சிறிது அலட்ட்சியமாக மாத்திரைகளை ஒழுங்காக எடுக்காமல் விட்டுவிட்டேன் அதனால் சிறித்து அதிகரித்துவிட்டது ஆனால் பயப்படும்படியாக இல்லை.....இப்போது தவறாமல் எடுத்து வருகிறேன் எனது சுகர் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு காரணம் எனது வேலை நின்று நடந்து பேசிக்கொ ண்டே இருப்பதால்தான். அது போல வீட்டிற்கு வந்தும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்வதும்தான் நான் உடகார்ந்து இருப்பது என்பது சாப்பிடும் நேரம் மட்டும்தான் அதன் பிற்கு படுத்தபடி பதிவு எழுதுவது....


  நான் வீட்டில் சாப்பிடும் போது ஞாபகம் இருக்கும் போது சாப்பாட்டிற்கு முன்பு ஒரு ஸ்பூன் அளவு வினிகர் குடித்து விட்டு சாப்பிடுவேன் அப்படி செய்வதால் சுகரின் அளவு குறையும் என்பது மருத்துவதகவல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் இனியவர் என்பது தெரியுமே!! சகோ....இந்த இனிப்பையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்...ஆம் மருந்து + நல்ல சுறுசுறுப்பாக இருத்தல் என்று இருந்துவிடடால் கட்டுப்பாட்ட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம். ஓ வினிகர் ...ஐடியா நல்ல விஷ்யம் குறித்துக் கொண்டுவிட்டேன் ஆனால் எப்படி அதைக் சாப்பிடுகிறீர்கள் ஐயோ ஒரு முறை அதைத் தெரியாமல் தண்ணீர் என்று சிறிது குடித்துவிட்டேன் கொஞ்ச நேரம் என்னவோ போல் இருந்தது...ஒரு ஸ்பூர் என்றால் தெரியாதாய் இருக்கலாம் முயற்சி செய்து பார்க்கிறேம்.

   எல்லாம் சரி மதுர அதெப்படி படுத்தபடி பதிவு எழுதுகிறீர்கள்...கவிழ்ந்து படுத்து க் கொண்டு என்றாலும் டைப்புவது கஷ்டமாக இல்லையா...நல்ல திறமைதான்!!

   மிக்க நன்றி மதுரைத் தமிழன் தங்களின் கருத்திற்கு

   நீக்கு
  2. Vinegar. ..I assume it's ACV ...oraganic raw unfiltered acv is good but you need to mix it with water and use a straw

   நீக்கு
  3. ஆம் ஏஞ்சலின்! தண்ணீர் சேர்க்க வேண்டும் தான்..ஓ ஸ்ட்ரா பயன்படுத்த வேண்டுமா...

   மிக்க நன்றி

   நீக்கு
 15. மிக மிக பயனுள்ள தகவல்கள் ....

  அம்மாவிற்கு 45 வயதில் சர்க்கரை வந்தது...கடந்த 7 வருடங்களாக ஊசி எடுத்து கொள்கிறார்கள் (இப்பொழுது 65 )...உணவு கட்டுப்பாடு, நடைப் பயற்சி எல்லாம் பெர்பெக்ட்..


  இத்தகைய செய்திகளால் அதை பற்றி அறியாத எங்களுக்கும் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும்...எனவே தொடர்ந்து பதிவிடுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அனு! கருத்திற்கு. அம்மா இதைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு பயன் படுத்தவும்.

   மிக்க நன்றி அனு

   நீக்கு
 16. சுவாரசியமான தகவல்கள்! மிகவும் பயனுள்ள தகவல்களும்கூட! இங்கு சில கேரள உணவகங்களில் பதிமுகம் என்ற மருத்துவப்பயன்கள் கொண்ட மரப்பட்டைத்துண்டுகள் போட்ட தண்ணீரைத்தான் குடிக்கக் கொண்டு வந்து வைப்பார்கள். அது நீரிழவிற்கும் நுரையீரல் தொற்று, மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் படிப்படியாக குணவாக்க வல்லது என்று உணவகத்தில் விசாரித்தபோது சொன்னார்கள். அதிலிருந்து நானும் இந்த மரப்பட்டையை நீரில் போட்டு அவ்வப்போது குடிக்கிறேன்.

  பதிமுகம் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை பார்மஸிகளில் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மனோ அக்கா! ஆமாம் அக்கா நானும் அந்தக் கேரளத்தில் பயன்படுத்தும் பட்டையை பயன்படுத்துகிறேன். கரிங்ஞாலி எனும் பட்டைப் பொடியும் உண்டு. அதைக் கொதிக்கும் தண்ணீரில் ஒரு பிஞ்ச் போட்டு காய்ச்சினால் ஒரு விதமாகப் பிங்க் கலரில் தண்ணீர் வரும். அதையும் நான் பயன்ப்டுத்துகிறேன். மிக்க நன்றி அக்கா கருத்திற்கு

   நீக்கு
 17. பயனுள்ள பதிவு.இன்றைய சூழலில் அறிய வேண்டிய செய்தியை வழங்கியமைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 18. சகோ துளசி & கீதா,

  இச்செடி பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன் கீதா. சிறு குறிஞ்சா, நாவல் கூட நீரிழிவுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற செடிகளைப் பற்றியும் எழுதுங்க, அறிந்துகொள்ள ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சித்ரா. ஆம் சிறுகுறிஞ்சான் நாவல் எல்லாமும் நல்லதே. எல்லாமே மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக் கொள்வதுதான் நல்லது. எழுத நினைத்துள்ளேன். எவ்வளவு தூரம் முடிகிறது என்று பார்ப்போம். அவ்வப்போது அப்படியே மூளை செர்வீசுக்குப் போக வேண்டி வரும் சூழலில் விட்டுவிடும் மனப் போக்கினால்...ஹிஹிஹி

   நீக்கு
 19. இதுவரை அறியாத புதிய தகவல்! ஒரு சில மாற்றுக் கருத்துக்களும் உண்டு. நாம் பேசும்பொழுது சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி இபுஞா சகோ. கருத்திற்கு. சரி பேசும் போது இதைப் பற்றிப் பேசுவோம்...

   நீக்கு
 20. நல்ல குறிப்புகள். பலருக்கும் பயன்படும். பாராட்டுகள்.....

  பதிலளிநீக்கு