சனி, 3 டிசம்பர், 2016

மாவோவாதிகள் தீவிரவாதிகளா?!!

கடந்த வியாழன் அன்று (24-11-2016) தண்டர் போல்ட்ஸ் கமாண்டோக்களுக்கும், நிலம்பூர் வனத்தில் தங்கியிருந்த மாவோவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தில் இரண்டு மாவோவாதிகள் உயிரிழந்த செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மார்க்ஸிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவிலுள்ள காடுகள் தங்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று மாவோவாதிகள் நினைத்திருக்கலாம். போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குப்பு தேவராஜ் என்றழைக்கப்படும் குப்புசாமியும்(60) தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜிதா என்றழைக்கப்படும் காவேரியும்(40). இதில் குப்புதேவராஜிற்கு எதிராக முன்பு மதுரை வங்கிக் கொள்ளை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால், அஜிதாவிற்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லையாம்.
Image result for maoist shot dead in nilambur
படம் இணையத்திலிருந்து

சமூகத்தில் நிகழும் அநீதிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்ற தத்துவத்தை மேற்கொண்டு போராட்டத்தில் இறங்கிய மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் போராளிகள் இப்போது மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 1976ல் மறைந்த சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவரான மாவோ சேதுங்கின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இப்பெயர் அவர்களுக்கு இடப்பட்டதாகவும் அல்ல இப்பெயரை அவர்களே தேந்தெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போதைய சிபி(P)ஐ (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் கணபதி என்றழைக்கப்படும் முப்பளா லக்ஷமணராவ்(67) என்பவர். இவர் கொண்டப்பள்ளி சீதாரமய்யா போன்ற நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

 எப்படியோ மாவோவாதிகள் இந்தியாவில் அங்கிங்காய் தங்களது இயக்கத்தை நலிய விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதென்னவோ உண்மைதான். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வேரூன்றியிருக்கும் மாவோவிஸ்டுகளுடன் இந்திய அரசு நீண்டகாலமாகவே போராடி வருகிறது. சத்தீஸ்கர் மாவோவாதிகளிடம் 7000 கோடி ரூபாய் இருப்பதாகவும், ஜார்க்கண்டிலுள்ள மாவோவாதிகள் வருடா வருடம் 200 கோடிக்கும் மேல் பல வழிகளில் சேகரிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. சட்டத்தைக் கையிலெடுத்து பல நிரபாராதிகளையும் கொன்று குவித்து நாட்டில் அராஜகத்துவம் நிகழ்த்தும் மாவோவிஸ்டுகளை அழிக்க மத்திய அரசு சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உதவியுடன் ட்ரான் டெக்னாலாஜி போன்றவற்றைப் பயன்படுத்தி மாவோவாதிகளுடன் போராடி வருகிறார்கள். மத்திய அரசின் “க்ரீன் ஹன்ட்” தனது மூன்றாம் கட்டத்தில் பல மாவோயிஸ்டுகளையும் சுட்டுக் கொல்வதில் வெற்றிக் கண்டிருக்கிறது. அதில் இறுதியாகக் கொல்லப்பட்டவர்கள்தான் குப்பு தேவராஜும், அஜிதாவும்.

இருவரும் படித்தவர்கள். பொறியியலாளராகவும், வழக்குரைஞராகவும், ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் குடும்பமும் குழந்தைகளுமாக வாழ வேண்டியவர்கள் இவர்கள். நிலம்பூர் காடுகளில், நீரழிவு நோயாலும், மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்ட அவர்கள், “தண்டர் போல்ட்” சேனையால் சுற்றி வளைக்கப்பட்ட போது, உடனிருந்த மற்ற மாவோவாதிகளைப் போல் தப்பி ஓட முடியாமல் ஒன்பது முதல் பதினெட்டு வெடிகுண்டுகள் வரை உடலைத் துளைத்துச் செல்ல அனுமதித்து உயிரிழந்தவர்கள். அவர்களது உடல்களை போஸ்ட்மார்ட்டம் நடத்த கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதுதான், ஓர் உண்மை எல்லோருக்கும் தெரிய வந்தது. இருவரும் அவர்களது உற்றார் உறவினர்களை முறையே 30, 25 வருடங்களுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்ந்து வந்தவர்களாம்.

பணமும், சுகமான வாழ்வும்தான் அவர்களது இலட்சியம் எனில் அவர்கள் இப்படி இத்தனை காலம் மறைந்து வாழ்ந்து உயிர்நீக்க வேண்டிய தேவையே இல்லையே. சமூகச் சேவைதான் அவர்கள் இலட்சியம் என்றால் இப்படி ஆயுதமேந்திப் போராடாமல், அமைதி வழியிலும், அரசியல் வழியிலும் போராடலாமே!

அஹிம்சையிலும், அரசியலிலும் நம்பிக்கை இல்லாததால்தானே  நாங்கள் இப்படி ஆயுதமேந்த வேண்டியதானது?!

குடியரசு நாடான இந்தியாவில் ஆயுந்தமேந்திப் போராட வேண்டிய அவசியமே இல்லையே!

காடுகளையும், தாதுவளத்தையும் கொள்ளையடிப்பவர்களையும், தொழிலாளர்களைச் சுரண்டி வாழும் தொழிலதிபர்களையும், பதுக்கல்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்களையும் தண்டிக்காத இக்குடியரசு நாட்டில் எங்களைப் போன்றவர்கள் ஆயுதமேந்திப் போராடத்தான் வேண்டும்!

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது எனும் கொள்கையைப் பின்பற்றும் இக்குடியரசு நாட்டில், சரிவர விசாரணை செய்யாமல் சிலரைக் கொல்வதும், சிலரைக் கொள்ளையடிப்பதும் தண்டனைக்குரிய குற்றமே.

மூக நன்மை கருதி போராடும் எங்களுக்கு இடையூராக வருபவர்கள் எவராயினும் அவர்களை நாங்கள் எதிரிகளாகத்தான் காண்போம்!

இப்படி, மாவோவாதிகள் அவர்களுக்குத் தவறல்ல என்று தோன்றியதைச் செய்கிறார்கள். அரசின் பார்வையில் அது தவறானதால், அரசு அவர்களுடன் போராடி அவர்களை ஒடுக்கப் பல வழிகளில் முயற்சி செய்கிறது. முன்பெல்லாம் இது போன்ற போராட்டக்காரர்களை ஆதரித்துவந்த ஏழைகளும், வனவாழ் மக்களும் இப்போதெல்லாம் மாவோவாதிகளைவிட, காவல்துறை மற்றும் வனஇலாகா துறையினருக்குத்தான் ஆதரவு தருவது போல் தோன்றுகிறது. ஒருவேளை, அரசு அவர்களுக்காகச் செய்யும் பல நல்ல திட்டங்களும், உதவிகளும் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டி இருக்கலாம். எப்படியோ மாவோவாதிகள் யாருக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்களோ, அவர்களது முழுமையான ஆதரவும், ஒத்துழைப்பும் இப்போதெல்லாம் அவர்களுக்குக் கிடைப்பதே இல்லை என்பதுதான் உண்மை.

உலகிலுள்ள மொத்த நிலப்பரப்பில் இரண்டு சதவிகிதம் மட்டுமுள்ள இந்தியாவில் உலக மக்கள் தொகையில் 18% மக்கள் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட இந்தியாவிலுள்ள காடுகளில் வாழும் வன விலங்குகளுக்கே வாழத் தேவையான இடமில்லாத சூழலில், ஆயுதமேந்திய மாவோவாதிகள் அக்காடுகளில் அதிகக் காலம் மறைந்து வாழ இனியும் முடியுமா என்பது சந்தேகமே. போதாதற்கு அவர்கள் கையில் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வழியின்றி ஜார்க்கண்டிலும், சட்டீஸ்கரிலுமுள்ள ஏழைகளின் ஜனதன் வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்வதாகவும் செய்தி வருகிறது.

இப்படி மாவோவாதிகள் இயக்கத்திற்கு எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிரச்சனைகள் முளைப்பதால் இதையெல்லாம் முறியடித்து இனி எத்தனை காலம் மாவோவாதிகள் எதிர்நீச்சல் போடுவார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Image result for kanam rajendran
படம் இணையத்திலிருந்து - கானம் ராஜேந்திரன்


கேரளாவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் மாவோவாதிகள் நிலம்பூர் காடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டதை ஆதரித்துப் பேசினாலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) செயலாளரான கானம் ராஜேந்தின், “மாவோவாதிகளைச் சுட்டுக் கொல்வது சரியான செயலல்ல. இதையும் சமூக மற்றும் அரசியல் பிரச்சனையாக மட்டுமே பார்த்து கையாள வேண்டும். உச்சநீதி மன்றம் இது பற்றி வெளியிட்ட அறிக்கையைப் பின்பற்றித்தான் மாவோவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று சொன்ன வார்த்தைகளைத்தான் இங்கு எனக்கும் சொல்லத் தோன்றுகிறது. மாவோவாதிகளின் பலரது தலைக்கும் இலட்சக்கணக்கான தொகை பரிசாக வழங்கப்படும் என அறிக்கைகள் பல வெளியிடப்பட்டிருந்தாலும், வங்கிக் கொள்ளை, ஆக்கிரமிப்பு, மிரட்டல், கொலைக்குற்றம் போன்றவற்றைச் செய்திருந்தாலும், அவர்களைத் தீவிரவாதிகளைப் போல் கண்ட இடத்திலேயே சுட்டுக் கொல்லாமல் சரணடைய விரும்பினால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பும், அதன்பின் அவர்களுக்குரிய தண்டனையை அனுபவித்தபின் அவர்களையும் வாழ அனுமதிக்கத்தானே வேண்டும், குடியரசு நாடான நம் இந்தியாவில்? 



14 கருத்துகள்:

  1. எனக்கு இந்த விஷயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால் நோ கமெண்ட்ஸ்!

    பதிலளிநீக்கு
  2. நாட்டின் சூழ்நிலைகளே எவரையும் உருவாக்குகின்றன

    பதிலளிநீக்கு
  3. போராட்டங்கள்.... உயிரிழப்பு.... என்ன சொல்வது.

    துப்பாக்கி ஏந்துவதும், ஆயுதத்தைத் தரிப்பதும் சரியான தீர்வல்ல என்று தான் எனக்குத் தோன்றுகிறது. கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான் என்று ஒரு சொலவடை உண்டு. அது தான் நினைவுக்கு வருகிறது.

    என்ன தான் இருந்தாலும் மனித உயிர் இப்படிப் போவதில் அர்த்தமில்லை.

    பதிலளிநீக்கு
  4. கருத்துள்ள சிந்திக்க வேண்டிய கேள்விகள்...

    பதிலளிநீக்கு
  5. முன்பு மக்களிடம் அவர்கள் மேல் இருந்த
    அனுதாபம் இப்போது இல்லை
    அதற்கான காரணம் அவர்களும்தான்..
    என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
  6. கடினமான டாபிக்தான்.

    உலகத்தில் யாரும் தீவிரவாதிகள் இல்லைதான். ஆனால் அவர்களின் வழி, மற்ற பெரும்பாலானவர்களை உரசும்போது, தீவிரவாதமாகத்தான் பார்க்கப்படுகிறது. நம்ம ஊர்ல, நேரம் செலவழித்து, குற்றப் பின்னணியும் காரணமும் அதைத் தீர்ப்பதற்கான முயற்சியும் எடுப்பதற்கு அதிகாரிகள் யாருக்கும் நேரமில்லை. அதனால், 'தீவிரவாதி', 'கரண்ட் கம்பியைக் கடித்தான்' அப்படி இப்படின்னு தீர்த்துவிட்டுக் கணக்கெழுதிவிடுகிறார்கள். எல்லோருக்கும் அவர்களுக்கு என்று நியாயம் இருக்கிறது. அது பொது நியாயத்திற்குக் குறுக்கே வரும்போது, அவர்கள் நீக்கப்படுகிறார்கள். மனித உயிர் அத்தனை மலிவாகப் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  7. இதைக் குறித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு அரசியல் தெரியாது.

    பதிலளிநீக்கு
  8. அவர்களது கொள்கைகளில் சரியோ தவறோ ஈடுபாடு உள்ளவர்கள் செய்யும் செயல்தான் மேலும் அரசு வன்முறைக்கே அதிகம் பயப்படுகிறது காஷ்மீரில் திருப்தி இல்லாமல்தானே அவர்கள் தீவிர வாதிகளுக்கு உதவுகிறார்கள் வன் முறையில் எனக்கு உடன் பாடு இல்லை. ஆனால் சிலர் அந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள் பல அறிவு ஜீவிகளின் ஆதரவும் இவர்களுக்கு உண்டு

    பதிலளிநீக்கு
  9. நாயைக் கொல்வதாய் இருந்தால் கூட சட்டப் படி விசாரித்தே கொல்வோம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஏன் பொருந்தவில்லை ?

    பதிலளிநீக்கு
  10. இடதுசாரி அதீத நிலை தோழர்கள் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு..

    இவர்களின் குண்டுவெடிப்புகளில் பாதிக்கப் படுவதென்னவோ அப்பாவிப் பொதுமக்கள்தான்.

    எலிமிநேசன் என்று பதம் வைத்துகொண்டு இவர்கள் குறிவைத்துத் தாக்குவது உயர்நிலை அதிகாரிகளை மட்டுமே.

    வெகு அரிதாகவே ஊழல் அரசியல் பிரமுகர்களை தாக்குகிறார்கள்.

    பொதுமக்களை பாதிக்கும் செயல்முறைகள் வெற்றிபெற இயலாது.

    மற்றபடி இவ்வளவு பணத்தைக் கொண்டு இவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்பதும் கேள்விக்குறிதான்.

    எனக்கு இவர்கள் ரகசியமாய் ஏன் இவர்களுக்கே தெரியாத வழியில் இந்திய உளவு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறார்களோ என்கிற சந்தேகமும் இருக்கிறது..

    ஒருவேளை கனவில் இயங்குகிறார்களோ என்னவோ..

    செயல்பாட்டில் மிகுந்த குழப்பம் இருப்பதை பார்கிறேன்

    வெகுஜன அரசியலில் இருக்கும் இடதுசாரி அரசுதான் இவர்களைக் கொன்றது என்பது கோரமான முரண்.

    பதிலளிநீக்கு
  11. வால்டர் தேவாரம் அவர்களின் நக்சல்லுக்கு எதிரான போராட்டம் குறித்து அறிவீரா தோழர்.

    கதைகள் இன்னும் காற்றில் அலைகின்றன.

    நடுங்கிப் போவீர்கள்

    பதிலளிநீக்கு
  12. மக்களுக்காகப் போராடுகின்றனர்..ஆனால் மக்கள் கொல்லப்படுகின்றனர்.. ஒரே குழப்பம் தான் எனக்கு...தெளிவாகக் கருத்து சொல்லத் தெரியவில்லை. Walking with comrades by Arundhathi Roy வாசித்திருக்கிறேன். சில எண்ணங்களை கேள்வி கேட்க வைத்தது..நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது போல..

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு...
    சிந்தக்க வேண்டிய கேள்விகள்.

    பதிலளிநீக்கு